இந்திரா பார்த்தசாரதியின் "ஒரு கப் காப்பி"

“அடடே, அனைவரும் சரியான நேரத்திற்கு இணைந்துவிட்டார்கள் போலிருக்கிறதே?! நாளைக்கு மழை கிடையாது போங்க!” என்று சிரித்துக்கொண்டே ஆரம்பிக்கிறார் சதீஷ்

“நண்பர்களே, நாம் போன வாரம் முடிவு செய்து கொண்டபடி, இன்றைக்கு நாம் எடுத்துக்கொண்டிருக்கும் கதை, இந்திரா பார்த்தசாரதியின் “ஒரு கப் காப்பி”. தன்ராஜ்?”

தன்ராஜ்” நன்றி சதிஷ். வழக்கம் போல், கதைச் சுருக்கம் முதலில்.
ராஜப்பா ஒரு வாழ்ந்து கெட்ட குடும்பத்தின் மூத்த பிள்ளை. “சாப்பிடுவதற்கு சம்பாதிக்க வேண்டும் என்ற விவரமே தெரியாது” வளர்ந்த பிள்ளை. இப்போழுது திருமணமாகி மூன்று பெண் குழந்தகளுக்கு தகப்பன். அவன் தாய் உயிருடன் இருந்த வரை, படித்து உள்ளூரிலேயே எல் ஐ சியில் வேலையில் இருக்கும் அவன் தம்பியின் தயவில் காலத்தை ஓட்டுகிறான். தாயின் மரணத்திற்கு பிறகு ஒரே வீட்டில் இரண்டு குடித்தனம் ஆனது.

Indira_Parthasarathy_I_Paa_IPa_oru-cup-coffe

படிப்பும் இல்லை, பிராமணனாய் பிறந்துவிட்டாலும் வைதிக காரியங்களுக்கான மந்திரங்கள் எதுவும் கற்றுக் கொள்ளவில்லை. தாயின் இறப்பிற்குப்பின் சாப்பாட்டிற்கே வழியில்லை என்ற நிலை வந்த போது குப்பு வாத்தியார் (வைதீக காரியங்கள் நடத்தி வைப்பவர்) சொல் கேட்டு பிதுர்க்களின் பிரதிநிதியாய் நின்று அவர்கள் பசியை தீர்த்து வைக்கும் தொழிலை செய்ய ஆரம்பித்தான். தொழிலுக்காக கிராப்பு போய் குடுமி , பஞ்சகச்சம் என்று வேஷம் கட்ட வேண்டி வந்தது. வெளி வேஷம் இப்படி என்றாலும் உள்ளுக்குள் ராஜப்பா இன்னும் “நாலு வேலி மிராசு” ராஜகோபால் அய்யங்கார் பேரன்தான்.  ராஜப்பாவிற்கு தன்னுடைய பெண்களின் வாழ்க்கைக்கு வழி என்ன என்பதையெல்லாம் விட அன்றைய தினத்திற்கான ஒரு கப் காப்பிக்கான வழி என்ன என்பதுதான் பிரதான பிரச்சினையாக இருக்கிறது.

ராஜப்பா தம்பி, மனைவி, பெண் என்று எல்லோரிடமும் ஒரு கப் காப்பியை பெற முயற்சித்து
தோல்வியுற்று, யதேச்சையாக சந்திக்கும் பால்ய கால நண்பனிடம் அன்றைய காப்பிக்கு ஏற்பாடு செய்து கொள்வதில் முடிகிறது கதை.

பெரிதும் நுட்பங்கள் ஏதும் இன்றி நேரடியாய் சொல்லப்பட்ட கதை. கதையின் தொடக்கத்தில் ராஜப்பா காணும் துர்கனவு அவன் கைகளால் அன்றி வயிற்றால் பிழைக்கிறான் என்பதை குறிப்பதாக கதையிலேயே சொல்லப்பட்டு விடுகிறது.

பணம், பட்டம், பதவி என அடித்து பிடுங்கி வாழ்க்கையில் “முன்னேறிவிட்ட” மனிதர்களுக்கு தன் மனசாட்சியையும், பாவங்களையும்  கழுவிக்கொள்ள வேத வித்துக்கள் தேவைப்படுகின்றனர். அதன் மறுபக்கம் தன் மகனுக்கு வரன் தேடிக் கொண்டிருக்கும், தன்னை வேத விற்பன்னன் என்று நம்பிக் கொண்டிருக்கும் நண்பன் அனந்துவிடம் தன் பெண்ணும் திருமணத்திற்கு நிற்கிறாள் என்று கூட சொல்ல தோன்ற வில்லை ராஜப்பாவிற்கு. அவனுக்கு சுபாவமாகவே பொய்யும், புரட்டும் வருவதில்லை.
அடுத்த வேளை உணவுக்கே வழி இல்லை என்றாலும் ராஜப்பா போன்றவர்களுக்கு அடிப்படை அறம் என்று ஒன்று இருக்கிறது. அது, அவர்களை வெட்கம் மானம் அனைத்தும் விட்டு வாழும் வாழ்க்கை வாழ நேர்ந்தாலும் தவறு செய்யவோ, பிறரை ஏமாற்றவோ அனுமதிப்பதில்லை. பட்டும் பீதாம்பரமும் சுற்றிக்கொண்டு வாழ்க்கையின் வெற்றிகளில் திளைக்கும் அனந்து போன்றவர்கள் அனைத்திற்கும் பரிகாரம் வைத்துக் கொண்டு எந்த தவறையும் தயங்காமல் செய்கின்றனர்.

அனந்துவிற்கு வேதம் ஓதுதல், வைதிகமான வாழ்க்கை இவையே சிறந்த  வாழ்க்கை முறையாக படுகின்றது. அடிப்படை அறங்கள் வழுவாமல் வாழும் வாழ்க்கை எவ்வாழ்வையும் விட சிறந்தது என ராஜப்பாவின் வாழ்க்கை சித்தரிப்பைப் பார்க்கும் போது எனக்கு தோன்றியது”

இப்போது சதீஷ்” நன்றி தன்ராஜ். என் பார்வையில், இடைவெளி எதுவும் இல்லாத கதையாக படுகிறது. நாயகனுக்கு கப் காப்பி தேவை, முடிவில் அது கிடைக்கிறது.
காப்பி சாப்பிட்டு போ என்று நண்பன் சொல்கையில், இல்லை நான் வருகிறேன் என்று நாயகன் கிளம்ப, நண்பனும், மனைவியும் வேதவிற்பன்னரின்ஆச்சாரம் என்று அவர்களுக்குள் பேசிக்கொண்டது போல் கதை முடிந்திருந்தால், இடைவெளி உண்டாகிருக்கும்.
அல்லது
ஒரு கப் காப்பிக்காக தனது பால்ய நண்பனின் மன பிம்பத்தை போட்டு உடைக்க உந்துவது எது? வயிற்றிற்காக வாழ்ந்து காப்பியின் சுவைக்கு அடிமையானவன் பிம்பங்களை பேணுவதில் எல்லாம் அக்கறை காட்டமாட்டான் என்று எடுத்துக் கொள்வதா?
இக்கதையில் ஊரை ஏமாற்றிப் பிழைப்பவனுக்கும், சூழ்நிலை காரணமாக பித்ருகளின் ஸ்தானத்தை ஏற்பவனுக்கும் உள்ள அற வித்தியாசங்கள் என்று ஒரு கேள்வி வருகிறது, இல்லை?”

“நாயகனின் அற ஸ்தானம் உயர்ந்தது என்று அவனின் உள்மனம் வாதிடுகிறது. ஆனால் கதை படிப்பவர்கள் மனதில் ஒரு சோம்பேறி கட்டும் சப்பு கதையாகவே அது படுகிறது. கிட்டதட்ட ஐம்பது வயது வரை எதுவும் செய்யாமல், அம்மாவின் மறைவுக்கு பின் வேறு வழியில்லாமல் செய்யும் வேலை, எனவே ராஜப்பாவின் வாதம் எடுபடவில்லை.
சிறுகதையில் ஓர்மைக்கு முக்கிய பங்கு உண்டு. ஒரு வாழைப்பழ சோம்பேறி என்ன செய்வானோ அதைதான் கடைசியில் ராஜப்பா செய்கிறான். ஆனால் கதைக்களம், மற்றும் கதாப்பாத்திரத்தின் குணசித்திரத்தினால், வாசக இடைவெளி மற்றும் திருப்பம் இல்லாத கதையாக இது ஆகிவிடுகிறது. முதலில் கூறிய முடிவு ஓர்மையையும் குழைத்து, கதையை அபத்தமாக ஆக்கியிருக்கும், எனவே ராஜப்பா காப்பி கேட்டு வாங்கி சாப்பிடுவது சரிதான்”
“கதையில் நான் ரசித்த வரிகள்:

“காலத்தை அனுசரித்து கோயிலில் பெருமாளுக்கு காலையில் காப்பி நைவேத்தியம் பண்ணக்கூடாதா? ஸ்ரீரங்கத்தில் ரங்கநாதருக்கு ரொட்டி தருகிறார்கள். இந்த ஊர்ப் பெருமாளுக்கு காப்பி குடிக்கும் ஒரு நாச்சியார் இருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? கோயிலில் தினம் காப்பிப் பிரசாதம் கிடைத்திருக்கும்.”

இப்படி காப்பிக்கு பறப்பவனிடம் வேத விற்பன்னர் ஹோட்டல் காப்பி சாப்பிடுவாரா என்று டெல்லி நண்பன் கூறுகையில் படிப்பவர் கண்டிப்பாக புன்னகைப்பர், இல்லையா?”

நண்பர்கள் அனைவரும் புன்னகைக்கின்றனர்.

அனைவரும் என்பது தவறு. முத்து கேசவன் மெல்ல கனைக்கின்றார்.

“நண்பர்களே, எனக்கு ‘வேத வித்து வேணும்னா நீ வேத காலத்துக்குத் தான் போகணும்’ என்ற வரிதான் முக்கியமாகப் பட்டது. மற்ற கோணங்களை நண்பர்கள் பகிர்ந்து கொண்டு விட்டார்கள்.

இரு நண்பர்கள், ராஜப்பா & அனந்து. பின்புலம் ஒரே மாதிரியானவை. ஒருத்தருக்கு நாலு வேலின்னா, இன்னொருத்தருக்கு சவுக்குத் தோப்பு. ஆனால் அவர்களின் தகப்பனார்களு அவர்களும் கால மாற்றத்தில் என்ன செய்தார்கள் என்பதுதான் முக்கியம்.

இந்தக் காலமாற்றம் என்பது நிலத்தைக் குத்தகைக்கு விட்டு வேலை செய்யாமல் உட்கார்ந்து சாப்பிட்டு சொத்து அழிவது. முன்பு  பிராமணர் மீது உள்ள மரியாதையினால் குத்தகை சரியாகக் கொடுக்கப்பட்டு வரப்பட்டது. வேத வித்துகளாகப் பல பிராமணர்கள் இருக்க இது காரணம். பிராமண மரியாதை தொடரவு. ஆனால் இந்த ஒன்றுக்கொன்று இணைந்த  பிணைப்பு அறுபட்டது ஆங்கிலேயர் ஆட்சியில். பிராமணர்கள் படித்து அதிகார ருசி கண்ட பிறகு. இலட்சிய பிராமண வாழ்க்கை என்பது வேத வித்தாக இருக்கனுங்கறது அவசியமில்லை என்றாகி விட்டது. ஒரு ஐகோர்ட் ஜட்ஜ் ஆகவோ அல்லது ஐசிஸ் முடித்த கலக்டராகவோதான்.
இந்தக் காலமாற்றத்தை சரியாகப் புரிந்து பயன்படுத்திக் கொண்ட பிராமணர்கள், பொருளாதாரத்தில் மேலே சென்றார்கள். மற்றவர்களின் நிலைமை பரிதாபகரம்.  அனந்து முதலாவது ரகம். ராஜப்பா இரண்டாவது ரகம்.
என்னுடைய உறவுகளிலே இந்த இரு நிலைகளுக்கு பல எடுத்துக்காட்டுகள் கொடுக்க முடியும். என்னுடைய மாமா தாத்தா, ஊரில் பெரிய பண்ணையாராக இருந்தவர். 8 குழந்தைகள். ஒரு தடவை மல்லு வேட்டி கட்டினாரென்றால் மறுபடியும் கட்டமாட்டார். ஆனால் படிப்பில்லை. வேதமும், திராவிட வேதமும் இல்லை. மூணு சீட்டு விளையாட்டில் மோகம். வயலில் இறங்கி வேலை செய்யத் தெரியாது. கொஞ்சம் கொஞ்சமாக நிலபுலன்களை இழந்தார். ஊரை விட்டு மதுரைக்கு வர வேண்டிய நிலை. மூத்த மகன் பஸ் கண்டக்டர். அவரை ஆதாரமாக வைத்து கொஞ்ச காலம். பின்பு வேறு வழியில்லாமல் சமையல் வேலையில் இறங்கினார்.
அவரின் பிற நான்கு மகன்களும் இப்போழுது சமையல் வேலைதான். கடைசி வரை மிகக் கஷ்டத்துடன் இருந்தார். பெண்களுக்கும் நல்ல வரன்கள் இல்லை.  மொத்தத்தில் வாழ்க்கையில் தோல்வியடைந்த குடும்பம். ஒரு மகன் வேறு ஜாதியில் திருமணம் மற்றும் அசைவ ஹோட்டலில் வேலை. வேறு ஒருவர் தெலுங்கு பெண்ணை மணந்தார்.  ஒருவரின் மகன் கிறிஸ்தவப் பெண்ணை மணந்து இப்போது முழுக்குடும்பமே கிறிஸ்தவம். வேதமாவது திவ்வியப்பிரபந்தமாவது எதுவும் இல்லை.
அதே நேரத்தில் இருந்த நிலபுலன்களை விற்று விட்டு சென்னைக்கோ, மும்பைக்கோ, டெல்லிக்கோ படித்து வேலை தேடி சென்றவர்கள் நல்ல பொருளாதார் முன்னேற்றம் அடைந்தனர். அவர்களின் அடுத்த தலைமுறை அமெரிக்காவுக்குச் சென்றது. ஆனால் பலரால் ஆச்சாரங்களை கடைபிடிக்க முடியவில்லை. அனந்து போல. வேத பாராயணம் என்பது கனவு. காசு கொடுத்து வாங்கப்படுவது. அமெரிக்க டாக்டர் எங்கு சந்தியா வந்தனம் செய்யப் போகிறான்? வேதம் கற்றுக்கொள்ளப் போகிறான்?
இந்த யுக மாற்றத்தை பிரதிபலிக்கக்கூடியக் கதையாகவே பார்க்கிறேன். இந்த பொதுப்படுத்தப்பட்ட இரு வேறு வழிகளின் பிரதிநிதிகள் சந்தித்துக் கொள்கிறார்கள்.
தங்களின் பாரம்பரியத்தை இழந்தவர்களை ராஜப்பாவின் கனவில் முடவர்களாகவா இ. பா. சித்தரிக்கிறார்?

கேள்வி இப்போது எவ்வாறு தங்கள் குடும்பங்களை எடுத்துச் செல்லப் போகிறார்கள்? ராஜப்பா இன்னும் ஒரு கப் காப்பிக்காகவே அலைந்து தன் மகள்களுக்கு என்று வாழ்க்கை அமைத்துக் கொடுக்க சோம்பித் திரிவாரா? அதனால் அவர் பெண்கள் முதிர்கன்னிகளாகப் போகிறார்களா, இல்லை காதலித்து வீட்டை விட்டு ஓடப் போகிறார்களா?
அல்லது அனந்து போன்றவர்களின் உதவியுடன் நல்ல வரன்களை பெற்றுத் தரப்போகிறாரா?”

One Reply to “இந்திரா பார்த்தசாரதியின் "ஒரு கப் காப்பி"”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.