மணி பத்மம் – ஆபிரகாம் எராலி

AB2

இந்தியாவின் நீண்ட வரலாறு பல சமயங்களில் சாபம் என்றே தோன்றச் செய்கிறது. ஆனாலும் இந்திய வரலாற்றின் மீதான ஆர்வம் வற்றுவதேயில்லை. இந்திய வரலாற்றைப் பேசும் புதிய ஒரு புத்தகம் குறித்துக் கேள்விப்படும்போது உடனே அதைப் படித்து விடத்தான் தோன்றுகிறது. கடந்த வருடம் தமிழகத்தில் அதிகம் அறியப்படாத “உப்பு வேலி” என்ற நூல் அறிமுகமாகியது. The Great Hedge of India என்ற நூலின் தமிழ் மொழியாக்கம் அது. தமிழாக்கம் செய்தவர் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தை சேர்ந்த நண்பர் திரு சிறில் அலெக்ஸ். நூல் வெளியீட்டு விழாவினை ஒட்டி இந்தியா வந்திருந்த அதன் ஆசிரியர் திரு.ராய் மாக்ஸம் அவர்களுடன் கோவையில் உரையாட சந்தர்ப்பம் அமைந்தது. அப்போது வில்லியம் டேல்ரிம்ப்ல் பற்றிய ஒரு கேள்விக்கு அவர் பதிலுரைக்கும்போது வில்லியம் டேல்ரிம்ப்ல்லைவிட தான் ஆபிரகாம் எராலியின் எழுத்தை அதிகம் மதிப்பதாகக் கூறினார். நான் எராலியின் பெயரை அப்போதுதான் முதல்முறை கேட்கிறேன். ஆனாலும் எங்கோ ஒரு மணி அடித்தது. அந்தச் சந்திப்பு நடந்து சரியாக ஒரு மாதத்தில் எராலி அவர்கள் மறைந்து செய்திகளில் குறிப்பிடப்பட்டார். அவர் 80களின் இறுதியிலும் 90களிலும் நான் விரும்பி வாசித்து வந்த, சென்னையிலிருந்து வெளிவந்து கொண்டிருந்த, Aside ஆங்கிலப் பத்திரிக்கையின் ஆசிரியர் என்று அப்போது தெரியவந்தது. அதுதான் அந்த பரிச்சய மணியோசைக்குக் காரணம் என்று புரிந்து கொண்டேன்.

அவர் மறைவையொட்டி பெங்குயின் நிறுவனம் அவர் எழுதிய இந்திய வரலாற்று நூல்வரிசையை சிறப்புப் பதிப்பாக வெளியிட்டுள்ளது. மொத்தம் ஆறு நூல்கள். சிந்துவெளி நாகரிகம் தொடங்கி, மொகலாய பேரரசின் அந்திமக் காலம் வரை. விலை ஐநூற்றுக்கும் குறைவுதான். வழக்கம் போல எங்கள் நண்பர், ‘தியாகு நூல் நிலையம்’ தியாகு வாங்கிவிட்டார். வெகு வேகமாக முதல் நான்கு பாகங்கள் படித்து விட்டேன். உண்மையில் இப்போது, இவ்வளவு நாட்கள் இவரது புத்தகங்கள் பற்றிக் கேள்விப்படாமல்கூட இருந்தது குறித்து வெட்கப்படுகிறேன்.

புத்தகங்களில் தலைப்பில் உள்ள கவித்துவத்தையே முதலில் சொல்ல வேண்டும் முதல் புத்தகம் மணி பத்மம். அதாவது Gem in the Lotus . இந்தத் தலைப்பே இது யாரை முதன்மைப்படுத்துகிறது என்பதைச் சொல்லாமல் சொல்கிறது. ஆம், புத்தர்தான். பொதுவாகவே இந்திய வரலாறு என்பது புத்தருடன்தான் துவங்குகிறது என்று சொல்லப்படுவதுண்டு. ஆனால் அது சிந்து சமவெளி நாகரிகம் குறித்துத் தெரிய வருவதற்கு முன்னர் சொல்லப்பட்டதாக இருக்க வேண்டும். சிந்து சமவெளி நாகரிகம் குறித்து அறியப்பட்டது முதல் இந்திய வரலாறு அங்கிருந்து தொடங்குவதே மரபாக இருக்கிறது. ஆனால் எராலியின் முதல் புத்தகம் மணிபத்மம் (Gem In the Lotus) அதற்கும் முன்னால் இந்தியா மேற்கொண்ட பயணத்தோடு துவங்குகிறது… கோண்ட்வானா நிலப்பரப்பிலிருந்து இந்திய நிலப்பகுதி பிரிந்து வந்து ஆசிய நிலப்பகுதியோடு மோதி இமயமலையும் இன்றைய இந்திய நிலப்பரப்பும் உருவாவதில் தொடங்கி வரலாற்றுக்கு முந்தைய காலகட்டத்தில் தொடர்ந்து சிந்துவெளி நாகரிகத்துக்கு வந்து சேர்கிறது.

சிந்து சமவெளி நாகரிகத்தின் ஒழுங்கையும், அமைப்பையும், வியக்கும் எராலி இந்திய கலாசாரத்தின் பல பிற்கால அடையாளங்கள் அங்கிருந்தே தொடங்குவதைச் சுட்டிக் காட்டுகிறார். இதில் முக்கியமான ஒரு பார்வையாக அவர் முன்வைப்பது சிந்து சமவெளி நாகரிகம் என்பது, முதன்மையாக ஒரு utilitarian நாகரிகம் என்பதுதான். மிக அவசியமான தேவைக்கு மிகையாக அலங்கார வேலைப்பாடுகள் செய்யப்பட எந்தப் பொருளும் இதுவரை அங்கு கிடைக்கப் பெறவில்லை என்பதை அவர் சுட்டிக் காட்டுகிறார். மிகத் திறமையாகவும், அக்காலத்தின் நோக்கில் உயர் தொழில்நுட்பத்துடனும், அமைக்கப்பட்ட வீதிகள், கப்பல் போக்குவரத்து பெரிதும் வளர்ந்திருப்பதைக் காட்டும் கருவிகள் போன்றவை எல்லாம் இருந்தும் அதன் சமகால எகிப்திய நாகரிகம் போல கலை அழகுடன் கூடியவை ஏதும் அங்கு இல்லை என்பதை வைத்துப் பார்க்கும்போதும், இன்னமும் பொருள் கொள்ள முடியாத அந்த மொழியாலும், அந்த மக்கள் எத்தகையவர்கள் என்பதில் நாம் அறிந்து கொள்வதில் ஓர் இடைவெளி இருந்து கொண்டே இருக்கிறது என்கிறார்.

எராலி வழமையான கி.மு. கி.பி. என்ற வகைமைக்குள் இந்திய வரலாற்றைப் பகுப்பதில்லை. இந்த முதல் புத்தகத்தில் மகதப் பேரரசின் துவக்கத்திலிருந்து- கி.மு ஆறாம் நூற்றாண்டிலிருந்து கிட்டத்தட்ட ஓர் ஆயிரம் வருடங்கள்- கி.பி 6ம் நூற்றாண்டு வரை, இந்திய வரலாற்றின் செவ்வியல் காலகட்டம் என்று வரையரைக்கிறார். பின்னர் 7ம் நூற்றாண்டு தொடங்கி இன்னுமொரு நான்கு நூற்றாண்டுகள், அதே செவ்வியல் காலகட்டத்தின் மங்கிய நீட்சி என்கிறார்.

இந்தச் செவ்வியல் காலகட்டத்தின் முதல் பகுதி புத்தரின் வரலாற்றில் தொடங்கி, குப்தர்களின் காலம் வரை நீள்கிறது. இந்தக் காலகட்டத்தில்தான் இந்திய நாகரீகம் அதன் உச்சத்தில் இருந்தது என்பதே எராலியின் துணிபு. குப்தர்களின் காலம் பொற்காலம் என்று கருதப்படுவதற்கு அவர் அளிக்கும் விளக்கங்கள் ஆர்வமூட்டுபவை. அந்தக் காலக்கட்டம் அதற்கு முன்னால் உருவாகியிருந்த ஒரு காலகட்டத்தின் விளைவு என்கிறார். சொல்லப்போனால் அது ஒரு after glow என்பதே அவரது முடிவு. இதற்கு அவர் சுட்டும் காரணங்கள் சுவாரசியமானவை.

இந்த முதல் மூன்று புத்தகங்களிலும், Gem in the Lotus, The First Spring -Part 1 , The First Spring Part II ஆகிய மூன்று புத்தகங்களில் எராலி இந்தியாவின் துவக்க கால வரலாற்றினைக் குறித்துச் சொல்வதை கீழ்க்காணுமாறு தொகுத்துச் சொல்லலாம்.

1. இந்தியா சுமார் கி.மு.600 முதல் – கிபி. இரண்டாம் நூற்றாண்டு வரை ஒரு திறந்த சமூகமாக இருந்தது. மேலைநாடுகளுடன் குறிப்பாக, கிரேக்க, ரோம, பாரசீக சமூகங்களுடன் அது கலந்துரையாடியதன் விளைவே இந்தியாவில் பல தத்துவங்களையும் வரவேற்கும் போக்கு இருந்ததற்கு முக்கிய காரணம்.

2. இதற்கு மிக முக்கிய காரணமாக அமைந்தது, இந்த மேற்கத்திய நாகரிகங்களுடன் இந்தியாவுக்கு இருந்த வணிக உறவுகள் இந்தியாவில் கொண்டு குவித்த செல்வ வளம். வர்த்தகம் உலகமயமாகும் போக்குக்கு இன்றும் இந்தியாவில் எதிர்ப்புகள் இருக்கின்றன. அந்தப் பின்னணியில் பார்க்கும்போது, அன்றைய அறியப்பட்ட உலகத்துடன் இந்தியா தொடர்ந்து வணிக உறவுகள் கொண்டிருந்ததால்தான் இந்தியாவில் எல்லா துறைகளிலும் ஒரு மலர்ச்சி ஏற்பட்டது என்றும், அது கிட்டத்தட்ட ஒரு ஆயிரம் ஆண்டுகள் நீடித்திருந்தது என்றும் ஒரு முடிவுக்கு எராலி வருவது வியப்புக்குரிய செயல். ஆனால் அதில் பிழை இல்லை என்றே தோன்றுமளவுக்கு அவர் அதை தர்க்க ரீதியாக நிறுவுகிறார்.

3 .வைதீக மதத்துக்கு எதிரான அவைதீக மதங்களான பௌத்த சமண, அஜீவக மதங்களின் தோற்றமும் அவை ஓங்கி வளர்ந்த காலகட்டமும் இதுதான். பொதுவாக நாம் இதுவரை அறிந்த வழமையான பாடப்புத்தக வரலாற்றுக்கு மாறாக, இம்மதங்கள் வைதீக மதத்துடன் பூசலிட்டதைவிட, தங்களுக்குள் பூசலிட்டுக் கொண்டதே அதிகம் என்று எராலி கண்டடைகிறார். முக்கியமாக புத்தரும், மகாவீரரும் கடுமையான சொற்களால் ஒருவரை ஒருவர் குறை கூறிக் கொண்டார்கள் என்பதும், அதைவிட அதிகமாக, ஆசிவக மதத்தின் நிறுவனரான, மாகாளி கோசலாவை கடுமையான வார்த்தைகளால் விமர்சித்தார்கள் என்றும் பல ஆதாரங்களை முன்வைத்து எராலி சொல்வது வியப்புக்குரிய ஒன்று. இத்தனைக்கும் கோசலாவும் மகாவீரரும், ஆறு வருடங்கள் வரை ஒன்றாகவே இருந்து பரப்புரை செய்தார்கள் என்றும் குறிப்பிடுகிறார்.

4. இந்தப் அறிவொளிக்காலத்தின் முடிவு, மகத சாம்ராஜயத்தின் முடிவின்போது மெல்லத் துவங்கிவிட்டாலும், இன்னுமொரு 500 ஆண்டுகள் , ஏறத்தாழ கி.பி 6ம் நூற்றாண்டு வரை நீடித்து பின்னரே மறைந்தது. என்பது அவரது வாதம். இந்த வீழ்ச்சிக்கான முக்கியமான காரணமாக அவர் சொல்வது ரோமப் பேரரசின் வீழ்ச்சியும் அதனைத் தொடர்ந்து அதனுடனான வணிகத்தின் வீழ்ச்சியும், இந்த வீழ்ச்சியே இந்தியாவுக்கு வந்துகொண்டிருந்த பெரும் செல்வத்தை வற்ற வைத்து, ஒரு சிறந்த நகர நாகரிகமாக உருவாகியிருந்த இந்திய சமூகத்தை மீண்டும் ஒரு குறுகிய விவசாயச் சமூகமாக மாற்றியது என்கிறார் எராலி. கூடவே வணிகர்களின் மதங்களான பௌத்தமும் சமணமும் தங்கள் செல்வாக்கை இழந்தன என்கிறார். மிக அரிதான பார்வை இது என்று நான் நினைக்கிறேன். உலக வர்த்தகம் (globalization ) ஒரு நாட்டுக்கு நல்லதா இல்லையா என்று இன்னமும் முடிவு செய்யப்படாத காலமாகவே நம் காலம் இருக்கிறது. இந்த நிலையில், எங்கோ இருந்த ரோமப்பேரரசின் வீழ்ச்சி, இந்திய நாகரிகத்தை பொலிவிழக்கச் செய்தது என்பதை மிகவும் நம்பகத்தன்மையோடு விவரிக்கிறார். எராலி.

5. இந்தியாவின் இந்த பொருளியல் வீழ்ச்சி, அதை ஒரு உள்நோக்கிய சமூகமாக மாற்றி, சாதிப்படிநிலைகள் இறுகி, ஒரு தேங்கிப்போன சமூகமாக ஆக்கியதுதான் அடுத்த ஒரு ஐந்து நூற்றாண்டுகளின் கதை. இந்தத் தேங்கி போன சமூகம், பத்தாம் நூற்றாண்டுக்கு மேல் வந்த துருக்கிய- ஆப்கன் படையெடுப்புகளை எதிர்கொள்ள முடியாமல் எவ்வாறு முழுவதுமாக அவர்களுக்கு அடிபணிந்தது என்பதே இந்த நூல் வரிசையின் அடுத்த புத்தகம், The Age of Wrath விவரிக்கும் வரலாறு. இந்த இடத்தில் இங்கே இந்த செவ்வியல் காலகட்டம் முடிவுக்கு வருவது வட இந்தியாவில்தான் என்பதையும், தென்னிந்தியாவைப் பொருத்தவரையில் அவை இன்னும் ஒரு மூன்று நூற்றாண்டுகள் 13ம் நூற்றாண்டு வரையிலும் தொடர்ந்தது என்பதையும் எராலி குறிப்பிடத் தவறுவதில்லை.

6. முதல் வசந்தம் என்ற தலைப்பின் கீழ் இரண்டு பாகங்கள் வருகின்றன. முதலாவது, அரசியல் மாற்றங்களைச் சொல்வது. இரண்டாவது அந்தக் காலகட்டத்தில், அதே அளவுக்கு முக்கியமான சமூக, அறிவியல், இலக்கிய, மற்றும் கட்டுமானக் கலைகளின் சாதனைகளை விளக்கும் ஒன்று. பாலி, பிராக்ருத மொழிகளைத் தாண்டி, சம்ஸ்க்ருதம் செவ்வியல் மொழியாக வளர்வதையும், மகத்தான இலக்கியங்கள் அதில் உருவாகியதையும் இந்தப் பாகம் விவரிக்கிறது. நாலந்தா, தட்சசீலம்,ஆகிய பல்கலைக்கழகங்களின் பணியையும் சொல்கிறது.

6. இவை எல்லாற்றையும் விட இன்றும் தொடரும் இந்தியாவின் மிக முக்கியமான இரண்டு பிரச்சினைகளான சாதிகள் மற்றும் பார்ப்பன ஆதிக்கம் ஆகியவற்றைக் குறித்து எராலியின் கருத்துக்களே மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவையும், பெரும் விவாதங்களை உருவாக்குபவையும் என்று நான் நினைக்கிறேன். வர்ணங்களிலிருந்து சாதிகள் உருவாகி வரும் ஒரு இயல்பான பரிணாம வளர்ச்சி மிகவும் நம்பகமான வகையில் விவரிக்கப்பட்டுள்ளது. வர்ணங்களில் இருந்து தொழிற்குழுக்கள் (guilds) உருவானது ஒரு காலகட்டத்தில். அவை அகமண முறைக்கு மாறி, பின் இறுக்கமடைந்து சாதிகள் ஆனது என்பதே அவரது வாதம். இதற்கு பல சமூகவியல் ஆய்வாளர்களையும் அவர் மேற்கோள் காட்டுகிறார். ஆனால் இதில், சாதிகளின் தோற்றம் வளர்ச்சி ஆகியவை குறித்து மிகத் தீவிரமாக எழுதிய அம்பேத்காரின் ஆய்வுகளை அவர் எந்த இடத்திலும், குறிப்பிடுவதில்லை என்பது மிகவும் வியப்புக்குரிய ஒன்று. In Ancient India, There were Brahmins and there were brahmins, என்ற ஒரு விந்தையான வாசகத்தோடு தொடங்கி, இந்தியாவில் பிராமணர்களின் செல்வாக்கையும், அதனால் விளைந்த நற்பயன்கள் மற்றும் தீவினைகள் அனைத்தையும், விருப்பு வெறுப்பின்றி விவாதிக்கிறார். வேறெந்த ஒரு சமூக ஆராய்ச்சியாளருக்கும் சற்றும் குறையாத விதத்தில் எழுதப்பட்டச் சிறந்த கருத்துக்கள் எராலியுடையவை.

முதல் வசந்தத்தின் இரண்டாம் பகுதியில், அக் காலகட்டத்தின் இலக்கியங்கள், கட்டிடக்கலை, ஆடைகள், உணவுகள், போன்றவற்றைக் குறித்த மிகச் சுவாரசியமான பதிவுகள் உண்டு. கௌடில்யரின் அர்த்தசாஸ்திரம் மிக விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது. இந்தியக் கட்டட கலைகளில் காந்தாரப் பகுதியின் கிரேக்க கட்டிட மற்றும் சிற்பக்கலைகளின் தாக்கத்தையும் விரிவாக சொல்கிறார் எராலி. மிக முக்கிய கவனம் பெறுபவை அசோகச் சக்கரவர்த்தியின் ஸ்தூபிகளும் பாறைகளில் செதுக்கப்பட்ட அவரது கட்டளைகளும். இலக்கியங்களைப் பற்றிய பதிவுகளில் ஒரு தமிழ் வாசகனாக எனக்கு மிகவும் மனநிறைவை அளித்தவை, எராலி இந்திய நாகரிகத்தைப் புரிந்து கொள்ள வேறெந்த வரலாற்றாசிரியரையும்விட மிக அதிகமாக, குறள், நாலடியார், மற்றும் சங்க இலக்கியங்களிலிருந்து மேற்கோள்கள் காட்டுவது.

இந்த மூன்று நூல்களின் தொடர்ச்சியாக அடுத்து வருவது இந்தியாவின் தற்காலத்தையும் மிக வலுவாகத் தீர்மானித்துக் கொண்டிருக்கும் காலகட்டமான 11ம் நூற்றாண்டிலிருந்து 16ம் நூற்றாண்டு வரைக்குமான ஒன்று. இந்தக் காலகட்டத்தில் நிகழ்ந்தவைகளின் தாக்கம் இன்றைய இந்தியாவிலும் அரசியல் விளைவுகளை உண்டாக்குவதை நாம் அறிந்திருக்கிறோம். அந்தப் புத்தகமான The Age of Wrath ஒரு தனிக் கட்டுரையைக் கோரி நிற்பது.

வரலாறு, வரலாற்றுவாதம், அவற்றின் பங்களிப்பு என்ன என்பதைக் குறித்து எராலி சொல்வது மிக முக்கியமானது. எந்த ஒரு வரலாற்றுச் சித்திரமும் ஓர் இடைக்கால அறிக்கையே என்கிறார் எராலி. இந்திய வரலாற்றில் நாம் பெருமை கொள்ள வேண்டிய விஷயங்கள் நிச்சயம் ஏராளம் உண்டு. அதே சமயம், வெட்கப்பட வேண்டிய நிகழ்வுகளும் உள்ளன. இரண்டையுமே திறந்த மனதுடன் நேர்மையாக பார்க்கவும் முன்வைக்கவும் வேண்டியுள்ளது. பல சமயங்களில் இந்தத் நேர்மையும், உண்மையை மட்டுமே முன்வைப்பதில் உள்ள நோக்கும் தற்காலத்தில் சில சமூக அரசியல் கொந்தளிப்புகளைக்கூட உருவாக்கலாம். ஆனாலும் ஒரு வரலாற்றாசிரியன் அந்தப் பொறுப்புகளைத் தட்டிக் கழிக்க முடியாது. ஒரு சீனப் பழமொழி சொல்வதைப்போல விரல் சுட்டும் நிலவைப் பாராமல் விரலைப் பார்ப்பதால் பலன் இல்லை என்கிறார், எராலி. A historian sees with an impersonal eyes. But speaks with a personal voice. A historian cannot be bothered with political correctness. இது இந்த இந்தியா வரலாற்றுத் தொடரின், அடுத்தடுத்து இருக்கக்கூடிய இரண்டு புத்தகங்களுக்கும் முக்கியமாகப் பொருந்துபவை. இந்தப் புரிதலோடு, இந்ததொடரின் அடுத்த நூல்களை பின்னர் விரிவாகப் பார்ப்போம்.

6 Replies to “மணி பத்மம் – ஆபிரகாம் எராலி”

  1. எராலியின் வரலாற்று ஆய்வுகளைப்பற்றிய அறிமுகக்கட்டுரை படிப்பதற்கு மிகவும் உற்சாகமாக இருந்தது. ஒரு புனைகதைக்குரிய வேகத்துடன் கச்சிதமான சொற்சித்திரங்களுடன் எழுதியிருக்கும் சுரேஷுக்கு வாழ்த்துகளும் நன்றியும் சொல்லவேண்டும். புத்தரில் தொடங்கி தென்னிந்தியச் சித்திரங்கள் வரையிலான வரலாற்றுத் திருப்பங்களையும் சாதனைகளையும் வீழ்ச்சிகளையும் சுட்டிக் காட்டியபடி நீண்டு செல்கிறது. வணிக உறவுகளாலும் சாதனைகளாலும் உச்சத்துக்குச் சென்று வளர்ச்சியைத் தொட்ட இந்தியாவின் எழுச்சி, ரோம் பேரரசின் வீழ்ச்சியை அடுத்து தேங்கிவிட்ட அம்சம் இதுவரை யாராலும் சொல்லப்படாத ஒன்று. மீண்டும் விவசாய சமூகமாக மாறி மெல்ல மெல்ல வளர்ச்சி பெறும் போக்கில் துரதிருஷ்டவசமாக அடுத்தடுத்து நேர்ந்த அந்நியப் படையெடுப்புகளால் உருவான சரிவு தெளிவான சித்திரங்களால் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. வரலாற்றைப் புரிந்துகொள்ள புதிய வெளிச்சத்தைப் பாய்ச்சியிருக்கும் எராலியின் பங்களிப்பை உணர்த்தியிருக்கும் சுரேஷின் கட்டுரையை மிகமுக்கியமான ஓர் ஆக்கமென்றே நினைக்கிறேன். அடுத்தடுத்த நூல்களைப்பற்றிய கட்டுரைகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். பாவண்ணன்

  2. புத்தருக்கு முன்பு தோன்றி, பௌத்தத்தை விடவும் பல மடங்கு அதிகமாக இந்தியப் பண்பாட்டின் உருவகத்திலும் வளர்ச்சியிலும் பங்களித்து, இன்றளவும் இந்தியாவின் ஒட்டுமொத்த கலாசாரத்தின் மீது அழுத்தமான தாக்கம் செலுத்தி வரும் இதிகாசங்கள் ராமாயணமும் மகாபாரதமும். அவற்றுக்கு முன்னோடியாக விளங்கியவை வேத, உபநிஷத காலங்கள். இவற்றை எல்லாம் குறித்து இந்தக் கட்டுரையில் ஒரு வாக்கியம் கூட இல்லை. எராலி இவற்றைக் குறித்து என்ன சொல்கிறார் என்பதும் இல்லை.
    புத்தரை முதன்மைப் படுத்துவது என்ற பெயரில் மேற்கண்டவை குறித்துப் பேசுவதையே தவிர்த்து அல்லது கணிசமாகக் குறைத்து இந்தியாவின் பண்டைய வரலாற்றை ஒருவர் எழுதுவார் என்றால் அதில் வாசிப்பதற்கும் சிலாகிப்பதற்கும் பெரிதாக ஒன்றுமில்லை.

  3. “மேலைநாடுகளுடன் குறிப்பாக, கிரேக்க, ரோம, பாரசீக சமூகங்களுடன் அது கலந்துரையாடியதன் விளைவே இந்தியாவில் பல தத்துவங்களையும் வரவேற்கும் போக்கு இருந்ததற்கு முக்கிய காரணம்…. ரோமப் பேரரசின் வீழ்ச்சியும் அதனைத் தொடர்ந்து அதனுடனான வணிகத்தின் வீழ்ச்சியும், இந்த வீழ்ச்சியே இந்தியாவுக்கு வந்துகொண்டிருந்த பெரும் செல்வத்தை வற்ற வைத்து, ஒரு சிறந்த நகர நாகரிகமாக உருவாகியிருந்த இந்திய சமூகத்தை மீண்டும் ஒரு குறுகிய விவசாயச் சமூகமாக மாற்றியது” போன்ற கருத்துக்கள் அபத்தமானவை. இந்தியப் பண்பாட்டின் மகத்துவங்களீல் எதுவும் அசலானவை அல்ல, அதற்கும் காரணம் மேற்கத்திய கலாசாரம் என்று “நிறுவ” முயன்ற பிரிட்டிஷ் காலனிய வரலாற்றாசிரியர்களின் காலாவதியான கருத்தையே வேறு விதமாக சொல்லும் முயற்சி இது.
    இந்த நூலை சுரேஷ் ஏன் புகழ்கிறார் என்றே புரியவில்லை.

  4. இன்னொன்று. 1990களில் தான் ஆரியப் படையெடுப்புக் கோட்பாடும், ஆரிய திராவிட இனவாதமும் தீவிரமாகக் கேள்விக்குள்ளாகப் பட்டன. ஆயினும், அந்தக் காலகட்டத்தில் வரலாற்று நூல்களை எழுதிய இவர், அவற்றை இறுதி உண்மைகள் என்று ஏற்றுக் கொண்டு எழுதுகிறார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.