மறைந்த மேலாண் சிந்தனையாளர் கோயமுத்தூர் கிருஷ்ண ப்ரஹலாத், சென்னை 2020 என்னும் தலைப்பில் பேசும் போது இவ்வாறு குறிப்பிட்டார் – “சென்னைக்கென ஒரு கனவை உருவாக்கும் போது, அது ஷாங்காயைப் போலவோ, ஹாங்காங்கைப் போலவோ இருக்கவேண்டும் என்று முயலாதீர்கள். சென்னைக்கென ஒரு கனவை உருவாக்குங்கள். அது உலகின் முன் மாதிரியான நகரமாக இருக்க வேண்டும் என யோசியுங்கள். மிக முக்கியமாக, அக்கனவு, தற்போதைய ஆதாரங்களைத் (நிதி மற்றும் செயல்திறன்) தாண்டியதாக இருக்க வேண்டும். அப்போது தான், புதிய வழிகள் (innovation) சாத்தியமாகும். அப்புதிய வழிகளின்றி, சென்னை ஒரு உலகப் பெரும் நகரமாக உருவாகாது” என.
டாக்டர் வி என அழைக்கப் பட்ட அரவிந்த கண் மருத்துவக் குழுமத்தின் தந்தை இப்படி ஒரு கனவை யோசித்தார். மக்களிடையே, பார்வையின்மையை ஒழிப்பது என. அந்த மருத்துவ முறையை எவ்வாறு சமூகத்தின் அடித்தட்டு மக்களுக்கு மிகக் குறைந்த செலவில் அல்லது இலவசமாகத் தருவது என யோசித்தார். மருத்துவத் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற காலத்தில். அப்போது அவரிடத்தில் இருந்த ஓய்வுக் கால நிதி அம்முயற்சிக்குப் போதியதாக இருக்க வில்லை. அப்போது உருவான புதிய வழிதான், 40% மக்களுக்கு ( சிகிச்சைக்குப் பணம் செலுத்தும் வசதி உள்ளவர்களுக்கு), பணம் பெற்றுக் கொண்டு சிகிச்சை, 60% மக்களுக்கு இலவசம் என்னும் தொழில் மாதிரி. 40% மக்கள் செலுத்தும் பணத்தில், 60% மக்களுக்கு சிகிச்சை செய்யும் வசதிகள் ஏற்படுத்தப் பட்டன.
ஆனால், 40% நோயாளிகள் தரும் பணத்தில், மீதி 60% மக்களுக்கு சிகிச்சை தருவது பெரும் சவாலாக இருந்தது. அந்தச் சவாலைச் சமாளிக்க, செலவைக் குறைப்பதே ஒரே வழி. எப்படி செலவைக் குறைக்கலாம்?
- மருத்துவமனைக்குத் தேவைப் படும் உதவியாளர்கள் – செவிலியர் முதலியோரை, நகரத்துக்கு அருகில் உள்ள கிராமங்களில் இருந்து தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு பயிற்சியளித்து, குறைவான ஊதியத்தில் பணியில் அமர்த்துதல்.
- அவர்களைத் தனித்துவமான பணிகளில் அமர்த்தி, அவர்களின் செயல் திறனை மேம்படுத்துதல். அதாவது, ஒரு பரிசோதனையைச் செய்யும் ஊழியர், அதை மட்டுமே நாள் முழுதும் செய்வார். இதை டாக்டர் வி, மெக்டொனால்ட்ஸ் மாடல் என்கிறார். இந்த மாடலின் துவக்கம், ஹென்றி ஃபோர்ட் புதிதாய்ச் சமைத்த அஸெம்பிளி லைன் மாடல். இந்த மேலாண் வழியில், கார் உற்பத்தி செயல் திறன், துவக்க காலத்தில், ஒரு காருக்கு 12 மணி நேரம் என்றிருந்த நிலையில் இருந்து, இன்று ஒரு காருக்கு 2-3 நிமிடங்கள் என உயர்ந்திருக்கிறது.
- மருத்துவர்களின் ஊதியத்தை ஒரு அளவுக்கு மேல் குறைக்க முடியாது. எனவே இங்கே, அவரது செயல் திறனை மேம்படுத்த முடிவு செய்தார்கள். பழைய முறையில், ஒரு நோயாளி, அறுவை சிகிச்சைக்குத் தயாரிக்கப் படுவார். பின்பு, மருத்துவர் அவருக்கு அறுவை சிகிச்சை செய்வார். அதன் பின்னர், அந்த நோயாளி அப்புறப்படுத்தப் பட்டு, அடுத்த நோயாளி உள்ளே கொண்டு வரப் பட்டு, அவர் அறுவைச் சிகிச்சைக்குத் தயார் செய்யப் படுவார். முதலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு அப்புறப்படுத்தப்படும் விநாடியில் இருந்து, அடுத்து ஒரு நோயாளி உள்ளே கொண்டுவரப் பட்டு, அறுவை சிகிச்சைக்குத் தயாரிக்கப் படும் விநாடி வரை, சும்மா இருப்பார். இங்கே தான் அரவிந்த் ஒரு புதிய முறையைச் சமைத்தது.
ஒரே சமயத்தில் அருகருகே இரண்டு அறுவை சிகிச்சை மேசைகள் அமைக்கப் பட்டன. இரண்டுக்கும் இடையே, அறுவை சிகிச்சை செய்ய உபயோகிக்கப் படும் இயந்திரம் பொருத்தப் படுகிறது. முதலில் ஒரு நோயாளி அறுவைச் சிகிச்சைக்குத் தயாரிக்கப் பட்டு, மருத்துவர் அறுவைச் சிகிச்சை செய்கிறார். அவர் அறுவைச் சிகிச்சை செய்யும் அதே நேரத்தில், அடுத்த மேசையில், இன்னொரு நோயாளி அறுவை சிகிச்சைக்குத் தயாரிக்கப் படுகிறார். முதல் அறுவைச் சிகிச்சை முடிந்தவுடனே, அடுத்த அறுவைச் சிகிச்சையை உடனே துவக்குகிறார். முந்தைய முறையில், அறுவைச் சிகிச்சை முடிந்து, பின்னர் செய்ய வேண்டிய முறைகள் முடிந்து, அடுத்த நோயாளி வரவழைக்கப் பட்டு, தயாரிக்கப் படும்வரை, மருத்துவர் வேலை எதுவும் இன்றி இருப்பார். ஆனால், இந்தப் புதிய முறையில், ஒரு அறுவைச் சிகிச்சை முடிந்தவுடன், அடுத்த அறுவைச் சிகிச்சையை உடனே தொடங்கிவிடுவதால், இந்தத் தொழிலின், மிக முக்கியமான, விலையுயர்ந்த காரணியான மருத்துவரின் நேரம் வீணடிக்கப் படாமல், அவர் செய்யும் அறுவை சிகிச்சைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப் படுகிறது. எனவே, அவருக்கான ஊதியம் அதிகம் இருந்தாலும், அவர் செய்யும் அறுவை சிகிச்சைகளின் எண்ணிக்கை 4-5 மடங்கு அதிகரிப்பதால், ஒரு அறுவை சிகிச்சைக்கான செலவு அந்த அளவுக்கு குறைகிறது.
- அடுத்த, மிக முக்கிய செலவு காடராக்ட் அறுவை சிகிச்சைக்குப் பின் கண்களில் பொருத்தப் படும் லென்ஸ். இதைக் குறைந்த விலையில் வாங்க முயன்று தோல்வியுற்ற அரவிந்த குழுமம், அதைத் தானே தயாரிக்க முடிவெடுத்து, ஒரு தொழிற்சாலையை நிறுவியது. இதனால், காடராக்ட் லென்ஸ், 90 டாலர் அளவில் இருந்து, 2-3 டாலர் எனக் குறைந்தது. இன்று, தனது தேவைக்குப் போக, உலகெங்கும் ஏற்றுமதியும் செய்கிறது. உலகின் மொத்த சந்தையில் 7% அரவிந்தின் காடராக்ட் லென்ஸ்கள்.
- அடுத்த மிக முக்கிய விஷயம் –இந்த குறைந்த விலை அறுவை சிகிச்சை மாதிரிச் செயல்பாடு (low cost surgery model), தேவையான அளவு நோயாளிகள் இல்லையெனில், வெற்றிகரமாக இயங்காது. ஏனெனில், குறைந்த ஊதியம் பெறும் செவிலியர், குறைந்த விலை காடராக்ட் லென்ஸ் இருந்தாலும், அதிக் ஊதியம் பெறும் மருத்துவரின் செயல் திறன் சரியான முறையில் பயன்படுத்தப் பட்டு, அவர் ஒரு நாளில் மிக அதிக அறுவை சிகிச்சைகள் (ஒரு நாளுக்கு 65 எனச் சொல்லப்டுகிறது) செய்யவில்லையெனில், அறுவைச் சிகிச்சையின் செலவு குறையாது. எனவே, இந்த இடத்திலும் அரவிந்த் ஒரு புது தொழில் வழியைச் சமைத்தது.
கிராமங்கள் தோறும், கண் சிகிச்சை முகாம்கள் அமைத்து, இந்த தொழில் மாதிரியின் நுகர்வோரான ஏழை மற்றும் கீழ் நடுத்தர மக்களின் கண் திறன் பரிசோதிக்கப் பட்டு, அறுவை சிகிச்சை தேவைப் படும் நோயாளிகள் பிரிக்கப் பட்டு, இலவசமாக, அரவிந்த மருத்துமனைக்கு, ஒப்பந்தப் பேருந்துகளில் அழைத்து வரப்படுகிறார்கள். இப்படி, நோயாளிகள் சேகரிக்கப் பட்டு, மருத்துவமனையின் கொள்திறனை முழுதும் பயன்படுத்தும் அளவுக்கு நோயாளிகள் அரவிந்த் மருத்துவமனைக்கு அழைத்து வரப் படுகிறார்கள். கிட்டத் தட்ட ஒரு நாளைக்கு 900-1000 அறுவைச் சிகிச்சைகள் நடத்தப் படுகின்றன.
இவ்வளவு நோயாளிகள், மருத்து மனைக்கு வரும் வரை காத்திருக்காமல், அவர்களை அடையாளம் கண்டு, அழைத்து வருகிறார்கள். ஒரு வருடத்துக்கு கிட்டத் தட்ட 3 லட்சம் அறுவைச் சிகிச்சை செய்கிறார்கள். அதன் பின்னும், இந்த சிகிச்சை முறை, தேவைப் படும் மக்களில் 7 சதத்தை மட்டுமே பூர்த்தி செய்கிறது. எனில், தமிழகத்தில் மட்டுமே இன்னும் 15 அரவிந்த்கள் தேசவைப்படுகிறது.
சரி. இந்தத் தொழில் மாதிரியின் பயன்கள் என்ன?
இதன் மிக முக்கிய பயன் – மிகக் குறைந்த செலவு. அமெரிக்காவில் 1700 டாலர் செலவு பிடிக்கும் இந்த அறுவை சிகிச்சைக்கு (1.15 லட்சம் ரூபாய்), இந்தியாவில் தனியார் மருத்துவமனையில் 25000 ஆயிரம் ரூபாய் செலவு பிடிக்கும் இந்த சிகிச்சைக்கு, அரவிந்த் செலவழிக்கும் தொகை 30 டாலர்கள் (2000 ரூபாய்) மட்டுமே. அதுவும், பணம் செலுத்தும் நுகர்வோரிடம் இருந்து வசூலிக்கப் பட்டு, ஏழை மற்றும் கீழ் நடுத்தர மக்களுக்கு இலவசமாக அளிக்கப்படுகிறது.
இவ்வளவு குறைவான செலவிலும், இலவசத்திலும் சிகிச்சை அளித்த பின்பும் அரவிந்த குழுமம் லாபகரமாக இயங்குகிறது என்பது உலக அதிசயங்களுள் ஒன்றுதான். தொழில் லாபகரத்தைக் குறிக்கும் ஒரு அளவுகோள் – EBITDA (earnings before interest, taxes, depreciation and amortization) – இந்த அளவுகோளில், அரவிந்த் அடைந்திருக்கும் அலகு 39% சதவீதம். மிக வெற்றிகரமாகச் செயல்படும் அப்பல்லோ குழுமங்களின் EBITDA, 2015 ல் 15%.
இவ்வளவு குறைந்த செலவு எனில், தரம் குறைந்த சிகிச்சையோ?
பொதுவாக, அறுவை சிகிச்சையின் தரம், சிகிச்சையில் வரும் பிரச்சினைகளை வைத்து ஒப்பிடப்படுகிறது. இதில் வரும் பிரச்சினைகள், இங்கிலாந்து நாட்டில் நடைபெறும் கண் சிகிச்சை முறையில் வரும் பிரச்சினைகளில் பாதி தான் என்கிறது புள்ளி விவரம்.
ஆக, காடராக்ட் சிகிச்சை தேவைப் படும் ஏழை நுகர்வோருக்கான சேவை, உலகின் மிகச் சிறந்த தரத்தில், இலவசமாகக் கொடுக்கப்படுகிறது.
பாரதத்தில் முதுமையில் ஏழ்மை, மிகச் சோகமானது. காடராக்ட் வந்து பார்வை போனால், முதியோர்கள் பெரும் பாரமாகிப் போகிறார்கள். எந்த வேலையும் செய்ய இயலாமல், சுயமரியாதையை இழந்து, சொந்த வீட்டில் பிச்சைக் காரர்களாக வாழ்கிறார்கள். இந்தத் தொழில் மாதிரி, அவர்களை மீண்டும் தன் குடும்பத்துக்கு உதவும் வகையில் மாற்றி அவர்களின் சுயமரியாதையை மீட்டுக் கொடுத்திருக்கிறது.
மிக முக்கியமாக நாம் அவதானிக்க வேண்டியது, அரவிந்தின் இந்த வெற்றி கரமான தொழில்மாதிரி, பல்வேறு காரணிகளை ஒருங்கிணைத்து, ஒரு இலக்கை நோக்கிச் செயல்படுத்தப் பட்ட ஒரு முழுமையான சூழல் (eco system), வெறும் சிகிச்சை முறையல்ல. இதில், பல்வேறு தொழில்நுட்பங்கள், புதிய கண்டுபிடிப்புகள், மேலாண் நுணுக்கங்கள் அனைத்தும் ஊடுபாவாக இணைக்கப்பட்டு உள்ளன.
சரி. நம் கண் முன்னே நெடிதுயர்ந்து நிற்கும், இந்தத் தொழில் மாதிரி நமக்குச் சொல்வதென்ன?
90 களில் சரிந்தது எனச் சொல்லப் படும் சோஷலிஸ / கம்யூனிச கொள்கைகளும், 2008 ல் ஆட்டம் கண்ட முதலாளித்துவ கொள்கைளும், மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதில் தோல்வியுற்றிருக்கின்றன. வல்லரசான அமெரிக்காவிலும், ஏழைகள் குறிப்பாக கருப்பின மக்கள், அடிப்படைத் தேவைகளைக் கூட பெற முடியாதவர்களாக உள்ளனர். அமெரிக்க அதிபர் கொண்டு வர முயன்ற, ஓபாமா கேர் என்னும் ஏழை மற்றும் மத்திய வர்க்கத்துக்கான குறைந்த செலவிலான மருத்துவ காப்பீட்டு வசதித் திட்டம் எதிர்கொண்ட எதிர்ப்புகள், மிகத் தெளிவாக, ஏழை மக்களுக்கான குறைந்த செலவில் தேவைப்படும் மருத்துவ வசதியைத் தர தனியார் துறை மேலோங்கியிருக்கும் அமெரிக்காவும் விரும்புவதில்லை என்பதைக் காட்டுகின்றன.
இன்று, பொருளாதார சீஸா பலகையில் மேலெழும்பி நிற்கும் சுதந்திரச் சந்தை மாதிரிகளின் அடிப்படை assumption என்ன? சுதந்திரச் சந்தை, ஆரோக்கியமான போட்டியை உருவாக்கும். அந்தப் போட்டி, புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கும். தனியார் துறையில், லாப நோக்கம் இக்கண்டு பிடிப்புகளைத் தூண்டும் என்பதும் ஒரு துணை assumption. நுகர்வோர் அதனால் பயனடைவர் என்றும் சொல்லப் படுகிறது.
மேற்சொன்ன assumption உண்மையெனில், ஏன் ஒரு காடராக்ட் அறுவை சிகிச்சை அமெரிக்காவில் 1.15 லட்சமாக இருக்க வேண்டும்? உண்மையில் 2000 ரூபாய் செலவு பிடிக்கும் அறுவை சிகிச்சைக்கு, இந்திய நுகர்வோர், தனியார் மருத்துவமனையில் 25000 ரூபாய் செலவு செய்ய வேண்டிய அவசியம் என்ன? லாப நோக்கம், புதிய கண்டுபிடிப்புகளைத் தூண்டி, நுகர்வோருக்குப் பயனளிக்கும் எனில், ஏன் இங்கே பயனளிக்க வில்லை. லாப நோக்கமில்லாமல் செயல் படும் அர்விந்த் குழுமத்தால், பல்வேறு புதிய தொழில் நுட்பங்களை, தொழில் முறைகளைச் சமைப்பது எவ்வாறு சாத்தியமாயிற்று?
அரசு / பொதுத்துறை நிறுவனங்களில் அவற்றின் குறிக்கோள்களை அடைய வேண்டும் என்னும் ஒரு நிர்ப்பந்தம் அதை நிர்வகிப்போரிடம் பெரும்பாலும் இருப்பதில்லை. (விதி விலக்குகள் தவிர்த்து). இது பொதுவாக அரசு நிறுவனங்களைப் பீடித்திருக்கும் ஒரு வியாதி. பேராசை அதே போல், தனியார் நிறுவனங்களைப் பீடித்திருக்கும் ஒரு வியாதி. அதனால் தான், பல உத்திகளைக் கையாண்டு, 2000 ரூபாயில் நுகர்வோருக்கு அளிக்க வேண்டிய சேவையை, 25000 ரூபாயாக ஆக்குகிறார்கள்.
இங்கே தான், அரசுக்கும், தனியார் துறைக்கும் இடையே இன்னுமொரு பாதை இருக்கிறது. அர்விந்த குழுமம், தருண் பாரத் சங்கம், வெறுங்காலணிக் கல்லூரி போன்றவை இங்கே வருகின்றன. இவ்வழி, அரசு நிறுவனங்களில் இருப்பது போல் நுகர்வோர் சேவையை முழுதும் முன்னிறுத்தாத, தனியார் துறை போல் பேராசை நுகர்வோரின் உண்மையான தேவையைப் பூர்த்தி செய்யாத இந்த இரண்டு வழிகளுக்கும் ஒரு இடைப்பட்ட வழி.
ஒரு நிறுவனத்தின் உண்மையான குறிக்கோள், அது தனது நுகர்வோரின் தேவையைக் கண்டடைந்து, அத்தேவையை மிகச் சிறப்பாக, மிகக் குறைவான காலம் / விலையில் அதைப் பூர்த்தி செய்வதே என்கிறார் பழம் பெரும் மேலாண் சிந்தனையாளர் பீட்டர் ட்ரக்கர். லாபம் என்பது அந்நிறுவனம் நல்லபடியாக நடந்து கொண்டிருக்கிறது என்பதைக் காட்ட மட்டுமே என்கிறார்.
ட்ரக்கரின் கூற்றுக்கு, அரசு, தனியார், தன்னார்வ நிறுவனங்கள், இம்மூன்றில், தன்னார்வ நிறுவனங்களே அருகில் வருகின்றன. இந்நிறுவனங்களால் மட்டுமே மனித இனத்தின் எல்லாத் தேவையையும் நிறைவேற்றி வைத்திட முடியாது. ஆனால், அரசு மற்றும் தனியார் துறைகளின் எதிர்மறை அம்சங்களை இவை நிரப்பி, சமூகத்தின் மிக முக்கியமான அங்கமாக விளங்க முடியும்.
கசப்பான உண்மை என்னவெனில், எந்த இஸம் வந்தும், பொருளாதாரத்தின் / சமூகத்தின் அடித்தட்டில் உள்ள மக்களின் நிலை மாறப் போவதில்லை. உலகின் 600 கோடி சொச்சம் மக்களும் செல்வந்தர்களாவது சாத்தியமில்லை. இந்த சமூக / பொருளாதாரக் கட்டமைப்பு ஒரு ப்ரமிட் போலத் தான் என்று இருக்கும். குறைந்த பட்சம், கடந்த ஆயிரம் வருடங்களாக அப்படித்தான் இருந்திருக்கிறது. இன்னும் 100 வருடங்களில் இந்த நிலை மாறுவது சாத்தியமில்லை. பிரமிடின் உச்சியில் சமூக / பொருளாதார உயர்குடிகளும், அடியில் ஏழைகளும் / சமூகத்தால் கீழ் நோக்கி அழுத்தப்பட்டிருக்கும் மக்களும் இருப்பார்கள். எனது இந்தக் கட்டுரை, இந்த assumption ஐ முன் வைத்து எழுதப் படுகிறது.
இந்த ப்ரமிட் கட்டமைப்பு சரி எனச் சொல்லவில்லை. ஆனால், இது தான் நிதர்சனம். எனில், செய்ய வேண்டியது என்ன?
இன்றைய சுதந்திரச் சந்தை சமூகப் பொருளாதார நோக்கில், நாட்டின் தலைவர், பெரும் தொழில் நிறுவனங்களின் பாஷையில், நாட்டின் முக்கிய மேலாண் அதிகாரி எனப் பார்க்கப்படுகிறார். அமெரிக்கா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில், அவர்களின் ஊதியமும் கிட்டத் தட்ட அவ்வாறே உள்ளது.
இந்தப் பார்வையில், அனைத்து மக்களும், நாட்டின் பங்குதாரர்கள். அனைவருக்கும் ஒரு சம பங்கு. 31% வாக்குகள் வாங்கி இன்று அரியணையில் அமர்ந்திருக்கும் அரசு என்ன செய்ய வேண்டும்?
இந்த 31% சதத்தில், குறைந்த பட்சம் 25% (31 ல் 25) ஏழை மற்றும் கீழ் மத்திய வர்க்க மக்கள் எனத் தைரியமாகக் கருதலாம் – நமது நாட்டின் பொதுவான பொருளாதார சதவீதங்களை வைத்து. இது சரியெனில், அவர்களின் (பெரும்பான்மை பங்குதாரர்களின்) நலனை நோக்கிச் செயல்படுவது தானே ஒரு முக்கிய மேலாண் அதிகாரியின் நோக்கமாக இருக்க முடியும்? வேண்டும்??
அது மட்டுமே ஒரு நாட்டின் தலைவரின் கடமையல்ல. உலகில், நமது நாட்டின் பங்கை முன்னெடுப்பதும், தொழில் மற்றும் நுட்பச் சந்தைகளில் பாரதத்தை ஒரு முன்னேறிய நாடாக மாற்றுவதும் கூட அவரின் கடமைதான்.
ஆனால், இன்றைய அரசின் மற்றும் இதற்கு முந்தைய அரசின் செயல்பாடுகள் எப்படி இருந்தன? அவை பொதுவாக, தொழில் துறையை, சந்தையை ஊக்குவிக்கும் ஒரு அணுகுமுறையைக் கொண்டிருந்தன..இருக்கின்றன. இதைத் தவறெனச் சொல்லவில்லை. லைசென்ஸ் ராஜ் என்னும் கெடுபிடிகளும், உலகோடு பொருளாதார / தொழில்நுட்ப உறவுகளைத் துண்டித்துக் கொண்ட உள்நோக்கிய பார்வையும், பாரதத்தை பொருளாதார ரீதியில் பலவீனமான நாடாக்கியிருந்தது. 80களில் சிறுதுளிகளாய்த் துவங்கி, 90 களில் வெள்ளமென வந்து இன்றும் தொடரப்படும் பொருளாதாரச் சீர்திருத்தங்கள், இந்தியாவின் பொருளாதாரத்தை உயர்த்தி, வறுமையைப் பெருமளவில் குறைத்திருக்கிறது. ஆனால், வறுமை முற்றிலுமாக ஒழிந்திருக்கிறதா எனில் இல்லை. இதன் பக்க விளைவாக, சுற்றுச் சூழல் மாற்ற முடியாத அளவில் மாசடைந்திருக்கிறது.
இந்தியாவின் தொழில்துறையை ஊக்குவித்து, தொழில்நுட்பத் திறனை மேம்படுத்துதல் இந்தியா ஒரு உலக அளவில் முக்கியமான நாடாக அவசியம். அதற்குத் தேவையெல்லாம், அதிகம் குறுக்கீடுகள் இல்லாத கொள்கைகளும், சரியான வரிகளும், நேர்மையான நிர்வாகமும். இம்மூன்றும் இருந்தாலே, அத்துறை வளரும். இந்திய மென்பொருள் துறை அதற்குச் சிறந்த உதாரணம்.
ஆனால், நாட்டின் கட்டமைப்பும், பொருளாதாரத்தின் அடித்தட்டில் இருக்கும் மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளான கல்வி, மருத்துவம் போக்குவரத்து போன்றவை அப்படியல்ல. தில்லியில் இயங்கும் மெட்ரோ ரயில் ஒரு பெரும் உதாரணம். மிகக் குறைந்த செலவில் நகரப் பயணத்தை அது எளிதாக்குகிறது. மாசில்லாத சூழலில் பயணிக்கும் பயணி, மெட்ரோ இல்லாத காலத்தில், பைக் அல்லது காரில் செல்ல வேண்டியிருக்கும். அது சூழலை மாசு படுத்தும் விஷயம் என்பது ஒரு புறம் இருந்தாலும், அது ஒரு செயல் திறன் குறைவான செயல். ஒரு கிலோ மீட்டருக்குத் தேவைப் படும் எரிபொருளின் ஒரு பகுதியில் மெட்ரோவில் பயணிக்கும் பயணி தன் பயணத்தை முடித்துக் கொள்ள முடியும். போக்குவரத்து நெரிசலால், ஏற்படும் கால விரயமும் தவிர்க்கப் படுகிறது. மொத்தத்தில், தன் சுய போக்குவரத்து வழியை விட்டு, ஒரு பொதுக் கட்டமைப்பை உபயோகிக்கும் நுகர்வோர், தன் நாட்டை ஒரு செயல் திறன் மிக்க நாடாக மாற்றும் வழியில், இரு சிறு தப்படி எடுத்து வைக்கிறார். எனவே, நாடு, மெட்ரோ போன்ற கட்டமைப்புக்கு மானியங்கள் அளித்து, அதை ஒரு செலவு குறைந்த சேவையாக முன் வைக்கிறது.
இதை, பெரும் பொருளாதார அறிஞரான அமர்த்தியா சென், ஒரு கொள்கையாக முன் வைக்கிறார்.
Welfare state and Free market என. அத்தியாவசிய சேவைகளான உணவு, கல்வி, மருத்துவம், போக்குவரத்து போன்றவற்றில், சாதாரண மனிதனுக்கும் பயன்படும் வகையிலான சேவை; மற்றவற்றில் சுதந்திரச் சந்தை என. வழக்கமாக, இவ்விரண்டும் ஒன்றுக்கொன்று முரணானது எனப் பார்க்கப் பட்டு வந்திருக்கிறது. ஆனால், இவை ஒன்றுக்கொன்று உதவியாக இருப்பவை என்பது இந்நோக்கு. இதிலும், கல்வி, மருத்துவம், உணவு, போக்குவரத்து போன்றவற்றில் தனியார் பங்களிப்பு இருப்பதில் தவறில்லை. ஆனால், அதில் முழுதும் தனியார் நுழையும் போது, சந்தைச் சூழலின் ஏற்ற இறக்கங்களில், பொருளாதாரத்தின் அடித்தட்டில் இருப்பவர்கள் பாதிக்கப் படுவார்கள், எனவே welfare state.
25000 ரூபாய் ஒரு காடராக்ட் சிகிச்சைக்குச் செலவு செய்ய முடியாத எழைப் பெண்மணி, அதை மிகச் சிறந்த முறையில் இலவசமாகப் பெறும் போது – அவரின் பார்வை மீட்கப் பட்டு, மீண்டும் சமூகத்துக்குப் பயன்படும் மனிதராகிறார். அவரின் குடும்பமும், தன் சொற்ப வருமானத்தில் வறுமையின்றி வாழ வழி ஏற்படுகிறது. இந்தத் தொழிலில் ஈடுபட்ட அந்தக் குழுமம் தனது முனைப்பால், உலகின் மிகக் குறைந்த விலையில் காடராக்ட் லென்ஸ்கள் தயாரித்து, உலகெங்கும் விற்பனை செய்யவும் முடிகிறது. இதன் பயன்கள் GDP என்னும் அலகில் முழுவதாக அளக்க முடியாதெனினும், ஒரு நாட்டை மிகச் செயல் திறன் மிக்கதாக மாற்றுகிறதென்பதே உண்மை.
அரவிந்த மருத்துவக் குழுமம், வருடத்துக்கு 3 லட்சம் காடராக்ட் சிகிச்சை செய்கிறது.இதில் 1.8 லட்சம் அறுவை சிகிச்சைகள் இலவசம். இது வருடத்துக்கு 450 கோடி ஏழை மக்களின் செலவைக் குறைக்கிறது. அந்த அளவு பணம், ஏழை மக்களின் மற்ற தேவைகளுக்கு உபயோகமாகிறது. வருடத்துக்கு 1.8 லட்சம் முதியவர்கள் சமூகத்துக்கு பங்களிப்பவர்களாக அல்லது குறைந்த பட்சம் சுமையில்லாதவர்களாக மாறுகிறார்கள். உள்ளூரில் காடராக்ட் லென்ஸ்கள் செய்யப் படுவதால், வருடம் 170 கோடி மதிப்புள்ள அந்நியச் செலாவணி மிஞ்சி, ஏற்றுமதியில் அந்நியச் செலாவணி ஈட்டப் படுகிறது. இது ஒவ்வொரு வருடமும் நடக்கிறது. தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியாவிலேயே அரசு தவிர்த்த மிகப் பெரும் மக்கள் மருத்துவ நலப் பணி இதுதான்.
இதில் அரசு நிர்வாகத்துக்கு ஒரு பெரும் பாடம் இருக்கிறது. அரசு தனது நிர்வாகத்தைக் கூர்ந்து நோக்குமனால், அதன் வருவாயில், பெரும்பகுதியை பணியாளர்களுக்கான சம்பளம் மற்றும் ஓய்வூதியத்துக்குச் செலவிடுகிறது. அரசின் மிகப் பெரும் செலவினம் அதுதான். அதன் இரண்டாவது பெரும் செலவினம் – தான் வாங்கிய கடனுக்குச் செலுத்தும் வட்டி.
அரவிந்த் சொல்லும் பாடங்கள் சில.
- தனது ஏழை மக்களுக்கான சேவையை, மிக குறைந்த செலவில் எப்படிச் செயல்படுத்துவது என்பதை ஒரு முக்கியமான இலக்காக மாற்றி, தொடர்ந்து அதை அடையும் புதிய வழிகளைச் சமைப்பது.
- அரவிந்த் போன்ற அரசுக்குச் செலவில்லாத, வெற்றிகரமான மாதிரிகளை ஊக்குவித்து, அவற்றை நாடெங்கும் எடுத்துச் செல்லத் தூண்டுவது. நேருவின் தூண்டுதலால், துவங்கப் பட்ட இந்திய செயற்கைக் கோள் நிறுவனமும், சாஸ்திரியின் தூண்டுதலால் நாடெங்கும் எடுத்துச் செல்லப் பட்ட பால் உற்பத்தி கூட்டுறவு சங்கங்களும், ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டியால் ஊக்குவிக்கப் பட்ட நெருக்கடி ஆம்புலன்ஸ் சேவையும் நம் கண் முன் இருக்கும் சில உதாரணங்கள். இவற்றில் சிலவற்றுக்கு, அரசு ஒரு பைசா கூட செலவு செய்ய வில்லை. சிலவற்றுக்கு, தனது அரசு வழிமுறையில் செய்யும் செலவை விடப் பலமடங்கு குறைவான செலவே பிடிக்கும்.
- எல்லா இசத்தையும் விட்டு விட்டு, ப்ராக்டிக்கலிஸத்தைப் பிடித்துக் கொண்டு, இந்தியாவில் எது வெற்றிகரமாகச் செயல்படுகிறதோ, எது சாத்தியமோ அதை முன்னிறுத்திச் செயல்படுவது.
- புதிய கண்டுபிடிப்புகளும், தொழில் முறைகளும், லாபத்தை முன்வைத்து இயங்காத, அரசு மற்றும் தொண்டு நிறுவனங்களிலும் வரும். அதை முன்னெடுக்கும் தலைமைகளை ஊக்குவித்தல். அரவிந்த், மெட்ரோ ஸ்ரீதரன் போன்றவை உதாரணங்கள்.
சந்தை வழிப் பொருளாதாரத்தில், உழைப்பின் சந்தை மதிப்பே, அதற்கான ஊதியத்தை நிர்ணையிக்கிறது. உணவு இல்லையெனில், உயிர் வாழாதென்றாலும், உணவைப் படைப்பவனுக்கு மிகக் குறைந்த ஊதியமும், மென் பொருளாளனுக்கு, மேலாளனுக்கு பல மடங்கு ஊதியமும் கிடைக்கிறது. மொழிக்கும், சிந்தனைக்கும் பெரும்பங்களித்த இலக்கிய வாதிகள் மற்றும் சிந்தனையாளர்கள் பலரும், வறுமையில் வாடியது இதனால் தான். இந்த முரணைச் சமன் செய்யும் ஒரு பெரும் தார்மீகப் பொறுப்பு அரசிடம் உள்ளது. அதை நேரடி மானியமாகச் செய்வதை விட, தன்னார்வ நிறுவனங்கள் போன்ற இடைநிலை நிறுவனங்களை ஊக்குவிப்பது, அதிகச் செயல் திறன் மிக்க வழி.
இந்தியாவில் அனைவருக்கும் பார்வைக் குறைபாட்டை நீக்க இலவச மருத்துவமனைகளையோ, அன்றி தனியார் கார்ப்பரேட் மருத்துவமனைகளையோ ஊக்குவிப்பதையோ விட, இந்தக் கட்டுரையில் சொல்லப்பட்டிருக்கும் அரவிந்த குழும மாதிரியை நாடெங்கும் எடுத்துச் செல்லுமாறு பணித்தால், மிகக் குறைந்த செலவில் அல்லது இலவசமாக, உலகின் மிகச் சிறந்த சிகிச்சை, இந்திய ஏழைகளுக்குக் கிடைக்கும். இதை நிர்வகிக்க அரசுக்கு ஒரு துறையும், அதற்கான செலவும் மிச்சம். தேவையெல்லாம், திறந்த மனது மட்டுமே. இது ஒரு உதாரணம் மட்டுமே.
Instead of strengthening the health care and providing medicines at lower cost government is trying to weaken the patent laws due to the pressure from Pharma companies in western countries and US Trade practice . This will lead to costlier medicine which wont be affordable to poor people and govt is also going to lose revenue from patients coming from abroad
Evidently , objectively speaking article in Tamil.
Excellent article in the subjects of Business Management, public administration, economic model and business models
Aravind eye hospitals is a successful profit making institution. It provides world’s cheapest treatment in global standards.
Clearly tells How do they do it ?
A very interesting and must read.
நண்பர்களிடத்தில் இப்படிச் சொல்லிதான் இந்த கட்டுரையை அறிமுகபடுத்திணேன். சொல்வனம் தமிழுக்கு பொக்கிஷம்.