மௌனியின் “அழியாச்சுடர்”

எவற்றின் நடமாடும் நிழல்கள் நாம்?”
14_mouni2_thumb
படம் நன்றி: அழியாச்சுடர் இணையத்தளம்
வழக்கமான சாரல் போன்ற மழை இல்லை; நிதானமாக, கனமாக, இந்தியப் பருவமழை (Indian Moonsoon) போல் வெளியே மழை பெய்துகொண்டிருக்கும் சத்தம் மெலிதாய்க் கேட்டுக்கொண்டிருக்கிறது.
பிரபு, சற்றே குரலைச் சரி செய்துகொண்டு, “நண்பர்களே, முன்னரே பேசி வைத்துக்கொண்டபடி, இன்றைக்கு நாம் எடுத்துக்கொண்டிருக்கும் சிறுகதை “அழியாச்சுடர்”. நானே ஆரம்பித்து வைக்கிறேன்.
நவீன தமிழிலக்கியத்துடன் பரிச்சயம் கொள்ளும் ஒருவர் தமிழின் சிறந்த சிறுகதை ஆசிரியர்களின் மிகச்சிறிய பட்டியலில் கூட மௌனியின் பெயரை எதிர்கொள்வார். அதை நம்பி ஓர் ஆரம்ப வாசகர் அவர் கதைகளைப் படிக்கத் தொடங்கினால் ஒருவித ஏமாற்றமும் சலிப்பும் அடைவதற்கே வாய்ப்புகள் அதிகம். நான் சில வருடங்கள் முன்பு அவற்றைப் படித்து அடைந்ததைப் போல. பெரும்பாலும் அது மௌனி கதைகளின் ‘புரிந்து’ கொள்ள முடியாத தன்மையாலும், அந்தக் கதைகளின் ‘கதைகளற்ற’ தன்மையினாலும் வரும் ஒருவித ஏமாற்றம் தான். சிறுகதைகளின் திருமூலர் என்று புதுமைப்பித்தனால் அழைக்கப்படும் அளவிற்கு இவர் கதைகளில் என்னதான் இருக்கிறது என்று ஒருவர் ஆச்சரியப்படுவது இயல்பானதே.
நம் லண்டன் சங்கத்தின் வாரந்திர இலக்கியக் கூடுகைக்காக அழியாச்சுடர் கதையைப் படித்த போது சில வருடங்கள் முன்பு உணர்ந்ததைப் போல் இல்லாமல் ஒரு வித ஈர்ப்புடன் படிக்க முடிந்ததை உணர்ந்தேன். கடந்த சில வருடங்களில் பல்வேறு கதைகளைப் படித்த அனுபவத்தினாலும், ஒரு கதையை எப்படிப் படிக்க வேண்டும் என்றெல்லாம் ஜெயமோகன் தளத்திலும் வெளியிலும் கண்டும் கேட்டுக் கொண்டே இருப்பதால் வந்திருக்கக் கூடிய ‘தெளிவினாலும்’ கூட இருக்கலாம்.
இருந்த போதும் கதையில் என்னை ஈர்த்த விஷயம் என்ன என்பதைச் சொல்வது அவ்வளவு எளிதாக இருக்காது என்றே உணர்கிறேன். இந்தக் கதையைப் படித்த பின் உடனே இவர் கதைகளின் இயல்பை புரிந்து கொள்வதற்கு வேறு இரண்டு கதைகளையும் தேர்ந்தெடுத்துப் படித்தேன். அவரது சிறந்த கதைகளின் பட்டியலில் வரக்கூடிய – ‘பிரபஞ்ச கானம்’ மற்றும் ‘எங்கிருந்தோ வந்தான்’. மூன்று கதைகளை வைத்து இவர் படைப்புகளின் பொதுப் போக்கை அறிந்து கொள்ள முடியுமா என்ற ஐயம் இருந்தாலும், அவர் எழுதியதே பன்னிரண்டு கதைகள்தான் எனும் போது , நான்கில் ஒரு பங்கு கதைகளை வாசித்து யூகிக்க முடிவது ஒரு சரியான முறைமையாகவே தோன்றுகிறது.
இந்த மூன்று கதைகளிலும் நான் கண்டு கொண்ட சில பொதுவான அம்சங்கள் –
இந்தக் கதைகளில் குறிப்பிட்டு சொல்லும்படியான நிகழ்வுகள் என்றே எதுவும் இல்லை. அழியாசுடர்கள் கதையில் தன் நண்பன் வீட்டிற்கு வரும் ஒருவன் அவன் நண்பன் பட்டுப் போன ஒரு மரத்தின் முன் அமர்ந்து ஒரு ஏக்கமும் நெகிழ்ச்சியும் கலந்த ஒரு மனநிலையை மீட்டிக் கொண்டிருப்பதைக் காண்கிறான். மௌனியின் வார்த்தைகளில் ‘ஒரு உன்னத மன எழுச்சி’ “
பிரபு சற்றே நிறுத்துகிறார். சிறில், மெதுவாக ஆரம்பிக்கிறார்:
“ ஒரு நவீன ஓவியக் கண்காட்சியகத்துக்குச் செல்கிறீர்கள். தொலைவில் சுவற்றில் தொங்கிக்கொண்டிருக்கும் வண்ண மயமான நவீன ஓவியம் உங்கள் கண்களைக் கவர்கிறது. தொலைவிலிருந்து பார்க்கையில் வெறும் வண்ணங்கள் மட்டுமே கண்ணில் படுகின்றன. அருகே செல்லச் செல்ல ஓவியக் காட்சிகள் துலங்குகின்றன.
சன்னல் அருகே ஒருவன் நின்று வெளியே பார்த்துக்கொண்டிருக்கிறான். சன்னலிலிருந்து வெம்மையான ஒளி அவன் மீது வீசுகிறது. அது உருவாக்கும் அவனது நிழல் அந்த அறையில் இருக்கும் நாற்காலியில் ஒரு மனிதனைப்போலவே, அவனைப்போன்ற தோற்றத்துடன் அமர்ந்துள்ளது. இருவரின் பார்வையும் வெளியே சன்னல் வழியே தெரியும் இலையுதிர்ந்த மரம் ஒன்றைக் காண்கின்றன. அந்த மரம் ’ஆகாயத்தில் இல்லாத பொருளைக் கண்மூடிக் கை விரித்துத் தேடத் துழாவுவதைப்’ போலத் தோற்றமளிக்கிறது. அதன் மீது மேகங்கள் இருப்பது போலவும் இல்லாதது போலவும் உள்ளது. பறவைகள் சில அதன் மீது உறைந்தமர்ந்துள்ளன. சில சிறகடித்துப் பறக்கின்றன.
அருகே இன்னொரு காட்சி தென்படுகிறது. அந்தச் சன்னலோர மனிதன் தன் இள வயதில் இருப்பதைப்போலொரு காட்சி. அவன் ஒரு கோவிலில் இருக்கிறான். தியானித்துச் சாமி கும்பிட்டுக்கொண்டிருக்கும் ஒரு இளம் பெண்ணைக் காதலுடன் பார்த்துக்கொண்டிருக்கிறான். அவனது நிழல் அருகிலிருக்கும் தூணில் விழுந்து அவன் அருகே நிற்கும் ஒரு நபரைப்போலேவே நின்றுகொண்டிருக்கிறது. ஒரு யாளி அவனை முறைப்பதைப்போல நிற்கிறது. அவர்களைச்சுற்றி யாரும் இருப்பதைப்போல இல்லை. அல்லது பலரும் இருக்கிறார்களோ?
இன்னொரு காட்சியில் முன்பு சன்னலோரத்தில் நின்றவன் அதே கோவிலில் ஒரு பெண்ணின் அருகே வெறித்தபடியே நிற்கிறான். அந்தப் பெண் முன்பு அவன் காதலுடன் கண்டவள்தான் என்றுணர்கிறீர்கள். இருவரின் முகத்திலும் முதிர்ச்சி. அவள் கண்களில் இருதுளிக்கண்ணீர். யாளி எக்களிப்பதைப்போலத் தோற்றமளித்து நிற்கிறது. நீங்கள் இரு யாளிகளையையும் ஒப்பிட்டு பார்க்கிறீர்கள். இரண்டுமே அச்சுபிசகாமல் ஒன்றேதான். ஆனால் முந்தைய காட்சியில் அது கோபத்துடனும் இப்போது எக்களிப்புடனும் உங்களுக்குத் தோன்றுகிறது.
இன்னொரு காட்சியில் அவனது நிழலில் தோன்றியதைப்போன்றதொரு மனிதன் வானின் நட்சத்திரங்களை நோக்கியபடி தெருவில் நடந்துகொண்டிருக்கிறான். அவனுக்கு நிழலில்லை.
மீண்டும் சற்று தள்ளி நின்று பார்க்கிறீர்கள். அந்தக் காட்சிகள் மறைந்து வெறும் வண்ணங்கள் மட்டுமே புலப்படுகின்றன.
அழியாச்சுடர் சிறுகதை ஒரு நவீன ஓவியத்தைப்போலவே எழுதப்பட்டுள்ளது. அதன் வடிவம் மட்டுமல்ல அதன் கதைமாந்தர்களும் துல்லியமற்ற சூழலிலேயே நிகழ்ந்துகொண்டிருக்கின்றனர். அவர்கள் பேசும்போது பேச்சு எழுகிறதா எனத் தெரியவில்லை. அவர்கள் அழுகைக்கான காரணங்கள் அவர்களுக்கே தெரிவதில்லை. அவர்கள் காணும் காட்சிகளும் உண்மையா அல்லது கற்பனையா என்பதும் அவர்களுக்குப் புலப்படுவதில்லை. அவர்கள் உண்மையில் காட்சிகளை அல்ல அர்த்தங்களை மட்டுமே கண்டுகொள்கிறார்கள். காட்சிகள் மீது அவர்களே ஏற்றிக்கொண்ட ஏதேதோ அர்த்தங்கள்.
மௌனியின் ’அழியாச்சுடர்’ சிறுகதை 1937ல் எழுதப்பட்டது என அறிகையில் மனம் ஒரு கணம் திடுக்கிடுகிறது. ஒரு நவீன ஓவியத்தை எவ்வளவு புரிந்துகொள்ள முடியுமோ அவ்வளவே ‘அழியாச்சுடர்’ நமக்குப் பிடிபடுகிறது. ஒரு நவீன ஓவியம் கற்பனைக்கு இடம் தருவதைப்போலவே ‘அழியாச்சுடர்’ வாசகனின் கற்பனையின் மூலமே நிறவுபெறும் படைப்பாக இருக்கிறது. அப்போதும் அது நிறைவுறாது ஏதேனும் எஞ்சி நிற்கிறது. அது சொல்லும் அனுபவம் வாசகனை எளிதில் வந்தடைகிறது. அதன் தனிமை. வெம்மை. ஏமாற்றம், ஏக்கம், காதலின் இதம், கர்வம், மனப்பிறழ்வுகளின் நிழல் நடமாட்டங்கள். கீற்றுகளாயும் வண்ணக்கலவைகளாயும் தென்படும் கதாபாத்திரங்களை நம்மால் துல்லியமாகக் கண்டுகொள்ள முடிகிறது. கவித்துவ விவரிப்புகள் வண்ணக்குழைவுகளாய் ஓவியத்தை மேம்படச் செய்கின்றன. காட்சிகளைக் கொண்டு அர்த்தங்களைப் புரிந்துகொள்ளவும் அர்த்தங்களைக்கொண்டு காட்சிகளை உருவாக்கவும் நாம் அழைக்கப்படுகிறோம்”
“….”
“ஆரம்பக் காலங்களில் ‘புரியாத’ இலக்கியப் படைப்புகள் குறித்து எனக்கு ஒரு ஒவ்வாமை இருந்தது. அவை ஏமாற்று வேலைகள், நேர விரையம் என்று நான் கருதியிருந்தேன். உண்மையில் இது எதையும் ஒரு உட்கொள்ளும் பொருளாக நினைத்துக்கொள்ளு மனப்பாங்கின் வெளிப்பாடாக இருக்கலாம். அல்லது நம் இயலாமையின் காரணம் ஏற்படும் விரக்தியாகவும் இருக்கலாம். ஆனால் இலக்கியம் வெறும் கன்ஸம்ப்ஷனுக்காக அல்ல பல நேரங்களில் அது காண்டெம்ப்ளேஷனுக்காகவும் என்று எடுத்துக்கொள்ள வேண்டும். எளிதாய், நேரடியாய் புரிய முடிகிற படைப்புகள்கூட வேறொரு தருணத்தில் முற்றிலும் வேறான பொருளை, புரிதலை தரக்கூடும். ஒரு படைப்பு நேரடியாகப் புரியவில்லை என்பது ஒரு பலமோ பலவீனமோ அல்ல. அது தரும் அனுபவம் உண்மையானதாக இருந்தால். அது உணர்வுகளைக் கடத்தி சிந்தனையைத் தூண்டும் விதத்தில் எழுதப்பட்டிருக்குமானால் போதுமானது. அழியாச்சுடர் அதற்கு ஒரு எடுத்துக்காட்டு. ஆசிரியன் என்ன சொல்கிறான் என்பதைத் துல்லியமாகச் சென்றடைய ஒரு வீட்டுப்பாடத்தை அணுகுவதைப்போலப் படைப்பை அணுக வேண்டியதில்லை. மாறாக அந்தப் படைப்பு நம்மில் நிகழ்த்தும் உணர்வு உண்மையானதாக இருந்தால் அதுவே போதுமானது. ஒரு இசைத்துண்டுக்கு என்ன அர்த்தம் இருக்கிறது?”
இப்போது பிரபு, “எல்லாக் கதைகளிலும் ஆண் பெண் உறவின் ஈர்ப்பை மையமாக வைத்து தான் இந்தக் கதைகளின் உணர்வு நிலைகள் பின்னப்படுகின்றன. எளிமையாகச் சாரமசப் படுத்தினால் இவை எல்லாமே ‘காதல்’ கதைகள் தான்.
ஆனால் சாதாரணக் காதல் கதைகளில் இருந்து இவை மேலெழும் காரணம் அந்தக் காதல் தருணத்தை வைத்து அவர் புனையும் ஒரு விதமான கனவு நிலை. அதில் அந்த மனம் கொள்ளும் ஒரு உணர்வெழுச்சி – அக நிலையின் பரு வடிவ வெளிப்பாடாக ஓவியம் போன்ற புற உலகக் காட்சிகள் . இதைக் கலந்து அவர் உருவாக்கும் ஒரு உணர்வு நிலை, மற்றும் இயல்பாக வெளிப்படும் ஒரு தத்துவப் பார்வை. இதை எல்லாவற்றையும் தொட்டு மீட்டு வெளிக்கொணரும், கனவில் தோய்வது போன்ற ஒரு மொழி.
இவர் கதைகளில் புற உலகக் காட்சிகள் குறைவாகவே உள்ளது. சொல்லப்படும் காட்சிகளும் அக உலகத்தின் வெளிப்புற பிரதிபலிப்பாகவே வருகின்றன. உதாரணமாக அழியாசுடர்கள் கதையில் அந்தப் பெண்ணைக் கோவிலில் காணும் காட்சி – ஈஸ்வர சந்நிதியில் நின்று தலைகுனிந்து அவள் தியானத்தில் இருந்தாள். சமீபத்தில் நான் நின்றிருந்தேன். இடை வழியாகக் கர்ப்பக்கிரகச் சாரா விளக்குகள் மங்கி வெகு தூரத்திற்கு அப்பால் பிரகாசிப்பதாகக் கண்டேன். அவன் கண்கள் விக்கிரகத்தின் பின் சென்று வாழ்க்கையின் ஆரம்ப இறுதி எல்லைகளைத் தாண்டி இன்பயமயத்தைக் கண்டு களித்தன போலும். எவ்வளவு நேரம் அப்படி இருந்தனவோ தெரியாது. இதைப் போன்றே இயற்கை வருணனையின் ஏராளமான இடங்கள். ஒரு உதாரணம் – யாரோ ஒருவன் தன்னுடைய உன்மத்த மிகுதியில் ஜ்வலிக்கும் விலை கொள்ளா வைரங்களைக் கை நிறைய வாரி வாரி உயர வானத்தில் வீசி இறைத்தான் போலும். ஆயிரக்கணக்காக அவை அங்கேயே பதிந்து இன்னும் அவள் காரியத்தை நினைத்து நகைக்கின்றன.
குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய மற்றொரு விஷயம் தத்துவம் போன்ற முத்தாய்ப்பான வரிகள் – எவற்றின் நடமாடும் நிழல்கள் நாம்..ஆழிக் கோடிட்டுப் பிரித்தது தான இந்தா வாழ்கை- அசைந்து அசைந்து மிதக்கும் தோணி (மனம்) எல்லைக் கடக்க அறியாது கடந்தது போலும்! “
சிறில், உற்சாகமாக, “ ஆமாம் பிரபு, “எவற்றின் நடமாடும் நிழல்கள் நாம்” இந்த வாக்கியத்தைச் சற்று நேரம் யோசித்துகொண்டிருந்தேன்.
தேவதேவனின் ‘பைத்தியம்’ கவிதையை ஒரு அரங்கில் வாசித்தபோது கல்பற்றா நாராயணன் சொன்னார். அந்தப் பைத்தியமும் அவனும் ஒரே ஆட்கள்தான். அது ஒரு வாசிப்புக் கோணம். ‘அழியாச்சுடர்’ போன்ற கதைகளில் அவ்வகை வாசிப்புக்க இடம் உண்டு. ’நான்-அவன்’ எனும் கோணத்தில் கதை சொல்லப்ப்ட்டாலும் இருவரும் துல்லியமாகத் தனித்த மனிதர்களாக விளக்கப்படாதிருக்கும் தோற்றமுடையவை இப்படைப்புகள். அப்படியே துல்லிய அடையாளங்கள் இருப்பினும் அவர்களை ஒன்றென்றே வாசிப்பது வேறொரு வாசிப்பனுபவத்தைத் தரும். கதை சொல்லியும் அவன் நண்பனும் ஒன்றே என்று வாசிக்கையில் ஒரு புதிய அனுபவம் கிடைக்கிறது. ஒருவன் இன்னொருவனின் நடமாடும் நிழலேதான்.”
சில விநாடிகள் அமைதி நீடிக்கிறது…
சிறில், தனக்குத்தானே கூறிக்கொள்வது போல்,
“எது அழியாச்சுடர்? காதல்தானா? விட்டிலென மாந்தர்களைக் கவர்ந்திழுத்து அவர்களின் சிறகுகளை மட்டும் எரித்தழித்து மண்ணில் மரம்போலக் காலூன்றி வானச் சுடர்களை நோக்கி ஏங்கி அழியச்செய்யும் அழியாச்சுடர் காதல்தானா?
அவ்வழியாச்சுடரின் மர்ம நிழல்தான் தனிமையா? சன்னலின் வெளியே கிளைவிரித்து வானைத்தேடித்துழாவும் ஒரு மரமென மனிதனை ஆக்கிய அந்தத் தனிமை நிழல்”
பிரபு மேடை விளக்கை இப்போது தன்ராஜ் மீது ஒளிக்க விடுகிறார். “ தன்ராஜ்?”
தன்ராஜ், இயல்பாக ஆரம்பிக்கிறார்.
“இக்கதையின் வசீகரிக்கும் அம்சம் அதன் வடிவமே என நான் கருதுகிறேன். மனதில் பல திரிகளாய் விரியும் எண்ணங்களைச் சொற்களாய் ஆக்க முயற்சித்து அதில் அபார வெற்றியும் பெற்றிருக்கிறார் மெளனி.
தற்கால ஹப்பர் லிங்க் திரைப்படங்கள் போல ஒரு சித்தரிப்பில் இருந்து மறு சித்தரிப்பிற்குத் தாவி தாவி செல்லும் இக்கதையின் வடிவம் எண்ண ஓட்டங்களை அதன் இயல்பில் (சிலது தெளிவாக, சிலது தெளிவற்றதாக) வாசகனிடம் கடத்துவதில் பெரிதும் துணை புரிந்திருக்கிறது.
கவித்துவமும், தறி கெட்டு ஓடும் எண்ணங்களை ஒரு நொடி நிறுத்தி வைத்து அவை அனைத்தையும் வார்த்தையாக்க முயற்சித்தது போன்ற பித்து நடையும் மாறி மாறி வருவது இக்கதைக்குக் கனவு ஒன்று கண் முன் நிகழ்வது போன்ற வாசிப்பனுபவத்தை அளிக்கின்றது.
அகவெளியில் நிகழும் இக்கதை தமிழ் சிறுகதை வரலாற்றில் என்றும் அழியாச்சுடர்களில் ஒன்று என்பதில் எனக்கு எந்த ஐயமும் இல்லை”
சுருக்கமாக அதே சமயம் தெளிவாகத் தனது கருத்துகளைச் சொன்னதின் திருப்தியை தன்ராஜ் உணர்கிறார்.
பிரபு, ‘வெல், சதீஷ்?”
சதீஷ், “எண்ணங்களின் ஊடாகக் கதை பயணிப்பதால், இதை நினவோடை( stream of consciousness) வகை என்று வகுத்துக் கொள்ளலாம் என்று படுகிறது. நினவோடை வகையில் சிறுகதை எழதுவதில் முன்னோடி இங்கிலாந்து எழுத்தாளர் விர்ஜினியா ஃவுல்ஃப் (Virginia Woolf). 1921ல் பதிப்பித்த Mark on the Wall, இவ்வகைக்கான சிறந்த உதாரணம். நாற்காலியில் உட்கார்ந்து பார்க்கும் பொழுது, சுவற்றில், ஒரு சிறு கறை தெரிகிறது. அந்தக் கறை என்னவாகும் இருக்கும் என்று எண்ணங்களின் ஊடாக மனசு அலசுகிறது. எண்ணங்களின் பின்னால் எண்ணங்கள் என்று ஒரு இரயில் வண்டி ஓடிகிறது. முடிவில் அந்தக் கறை என்ன என்பதோடு கதை முடிகிறது. ஃவுல்ஃபின் சமகாலத்திலேயே 1937ல் தமிழில் இவ்வகையான கதை எழுதபட்டுள்ளது, ஆச்சிரியத்தையும், பெருமையையும் அளிக்கிறது.”
இப்போது சிறில், இந்த உரையாடலை முடித்து வைக்கும் உத்தேசத்துடன் தொடர்கிறார். “ஆரம்பக் காலங்களில் ‘புரியாத’ இலக்கியப் படைப்புகள் குறித்து எனக்கு ஒரு ஒவ்வாமை இருந்தது. அவை ஏமாற்று வேலைகள், நேர விரையம் என்று நான் கருதியிருந்தேன். உண்மையில் இது எதையும் ஒரு உட்கொள்ளும் பொருளாக நினைத்துக்கொள்ளு மனப்பாங்கின் வெளிப்பாடாக இருக்கலாம். அல்லது நம் இயலாமையின் காரணம் ஏற்படும் விரக்தியாகவும் இருக்கலாம். ஆனால் இலக்கியம் வெறும் கன்ஸம்ப்ஷனுக்காக அல்ல பல நேரங்களில் அது காண்டெம்ப்ளேஷனுக்காகவும் என்று எடுத்துக்கொள்ள வேண்டும். எளிதாய், நேரடியாய் புரிய முடிகிற படைப்புகள்கூட வேறொரு தருணத்தில் முற்றிலும் வேறான பொருளை, புரிதலை தரக்கூடும். ஒரு படைப்பு நேரடியாகப் புரியவில்லை என்பது ஒரு பலமோ பலவீனமோ அல்ல. அது தரும் அனுபவம் உண்மையானதாக இருந்தால். அது உணர்வுகளைக் கடத்தி சிந்தனையைத் தூண்டும் விதத்தில் எழுதப்பட்டிருக்குமானால் போதுமானது. அழியாச்சுடர் அதற்கு ஒரு எடுத்துக்காட்டு. ஆசிரியன் என்ன சொல்கிறான் என்பதைத் துல்லியமாகச் சென்றடைய ஒரு வீட்டுப்பாடத்தை அணுகுவதைப்போலப் படைப்பை அணுக வேண்டியதில்லை. மாறாக அந்தப் படைப்பு நம்மில் நிகழ்த்தும் உணர்வு உண்மையானதாக இருந்தால் அதுவே போதுமானது. ஒரு இசைத்துண்டுக்கு என்ன அர்த்தம் இருக்கிறது?…”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.