பூவரச மரங்கள் இல்லாத நகரம், பயணம்

பயணம்:
=========
நின்றபடி வந்தவருக்கு
இருக்கை கிடைத்திருந்தது,
அமர்ந்தே வந்திருந்தவருக்கு
அப்போது தான்
கைகால்களின் நிலைப்பாடு சுகமாகியிருந்தது,
சண்டை போட்டிருந்த ஒருவனுக்கு
ஜன்னல் ஓர வரம் அகப்பட்டிருந்தது,
அழுதிருந்த பிள்ளை ஒன்று
தானே அடங்கி அமைதியாகியிருந்தது,
எதிர்பாரா விடம், விதம்
அப்பயணம் நிற்கையில்..
பின் எல்லோரும் சமமென
தரையில் இறங்கி நிற்க நேர்ந்தது
இருந்த அடைந்த நிலையெல்லாம் மறந்து….
– ஆனந்த் பத்மநாபன்
பூவரச மரங்கள் இல்லாத நகரம்
poovarasamaramஉயிருள்ள இந்த நிமிடம்
எத்தனை அழகானது ?
இந்த நிமிடத்தில்
முளை வேரிட்ட வித்தொன்று
இரு வித்திலைகளுடன் முளைக்கலாம்
எங்காவது ஒரு மழைத் துளி
மண்ணில் வீழலாம்
ஒரு மொக்கு அவிழலாம்
உயிரணு  ஒன்று கரு முட்டையை துளைத்து
உள்ளே செல்லலாம்
பழம் ஒன்று காம்பிலிருந்து
கழன்று  விழலாம்
பனிக்குடப் பிசுபிசுப்புடன்
கன்றுக்குட்டியொன்று   தரையில்  விழலாம்
அணுக்களை இணைத்து
மனிதர்கள் சிலர்
எச் குண்டுகளை தயாரித்துக் கொண்டிருக்கும்
இதே நிமிடம் எத்தனை பயங்கரமானது ?
**
வகுப்பறை பெஞ்சில்
உங்கள் குட்டியம்மாவின்
அருகில் இருப்பது
சந்தோஷினி என்று
நீங்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும்
உங்கள் குட்டித் தம்பியின்
வகுப்பு ஆசிரியை பெயர்
மார்கரெட் செலின் மேரி என்று
நீங்கள் அறிந்து வைத்திருக்க வேண்டும்
நிக் தொலைக் காட்சியில்
புதிதாக அறிமுகமாகி இருப்பது
சிவா கார்ட்டூன் தொடர் என்பதை
அவர்கள் மூலமாக
நீங்கள் அறிந்திருக்க வேண்டும்
தாமஸ் டிரெயினில்
அவர்களுடன்
பயணம் செய்ய
தெரிந்திருக்க வேண்டும்
டாமும் ஜெர்ரியும்
முன் ஜென்ம பகைவர்கள் என்றும்
லட்டு சாப்பிட்டால்
சோட்டா பீமுக்கு
சக்தி கிடைக்கும் என்றும்
அவர்கள் கூறும் கதைகளை
நீங்கள் கேட்டிருக்க வேண்டும்
மோட்டு பட்லு
நிஞ்சா அட்டோரி
கிருஷ்
டோரா
மைட்டி ராஜு இன்னும் பிற
அவரகளது நண்பர்களைப் பற்றி
தெரிந்திருக்க வேண்டும்
அவர்கள் ரிங்கா ரிங்கா ரோசெஸ்
பாட்டுப் பாடி ஆடும் போது
நீங்களும் குழந்தையாக மாறி
உங்கள் இரு கரங்களை
அந்த சங்கிலியில்
பிணைத்துக் கொண்டு
விளையாடத் தெரிந்திருக்க வேண்டும்
வீட்டில் இருக்க
அவர்களுக்கு பிடிக்காது
ஆற்றிற்கு அழைத்துச் சென்று
முழங்கால் அளவு தண்ணீரில் இறக்கி
குளிக்க வைத்தாலோ
நீந்தும் மீன்களை காட்டினாலோ
மிகவும் மகிழ்வார்கள் என்பதை
உங்கள் அனுபவத்தில்
அறிந்திருக்க வேண்டும்
செடியில் வந்தமரும்
தட்டானைப் பிடித்து
அவர்கள் கையில் கொடுத்து
பறக்க விடச் சொன்னால்
அவர்களும்
தட்டானோடு சேர்ந்து பறப்பார்கள்
என்பதை அறிந்திருந்தால்
மிகவும் நல்லது
மாதக் கடைசியில்
வாங்கித் தரக் கோரி
அவர்கள் அடம் பிடிக்கும்
கிண்டர் ஜாய் ஒன்றின் விலை
ரூ .35 என்பதையாவது
குறைந்த பட்சம்
நீங்கள்
நிச்சயம் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்
**
கண்ணு வாழையில்
குருத்து அறுக்க மனமில்லாதவன்
நிலம் வெடித்து கிடப்பதை
காணச் சகியாதவன்
கிணறுகளில் நீர் உயர
மனம் மகிழ்பவன்
பிறந்த குழந்தையின் விரல்களாய்
கூம்பிய பூவிலிருந்து கசிந்து வரும்
வாழைக்கச்சல் கண்டு
உள்ளம் குளிர்பவன்
தென்னம் பிள்ளையில்
இளநீர் பறிக்க
மனம் ஒவ்வாதவன்
நெல்லில் குலை நோய் கண்டு
பெற்ற தகப்பனாய்
குலை நடுங்குபவன்
வயிற்றுப் பிள்ளைக் காரியாய் நிற்கும்
வெள்ளாமை கண்டு
கண் நிறைபவன்
அந்த உழவனுடைய
அடிவயிற்றில்தான்
எல்லோரும் கை வைக்கிறீர்கள்
**
நாற்பது மரக்கால் வெதப்பாட்டை
அடிமாட்டு விலைக்கு விற்ற போது
நதிக்கும் எங்களுக்கும் இருந்த
உறவு அறுந்து போனது
பிழைப்பு தேடி
பூவரச மரங்கள் இல்லாத
பெருநகரம் ஒன்றிற்கு நகர்ந்த போது
பூமித் தாய்க்கும் எங்களுக்கும் இருந்த
தொப்புள் கொடி அறுந்தது
அடுக்கு மாடி குடியிருப்பின்
ஒரு தளத்தில் குடியேறிய போது
நாங்கள் சூரியனை இழந்தோம்
நிலவை இழந்தோம்
நட்சத்திரங்களை இழந்தோம்
வானத்தையும் இழந்தோம்
எங்கள் கனவுகளில்
நதியின் சல சல ஓசை
நாரையின் அலகில் சிக்கிய
தேரையின் விசும்பல் போல
விட்டு விட்டு ஒலிக்கிறது
பெருநகரின் நெரிசல் மிகு சாலைகளில்
பணிமனை நோக்கி
எங்களின் இரு சக்கர வாகனம்
தவங்கி தவங்கி செல்கிறது
எங்கள் கவலையெல்லாம்
இச்சாலைகளின் குறுக்கே
ஒரு கீரிப் பிள்ளையாவது பாயாதா?
சாலையின் மருங்கில் இருந்து
ஒரு மயிலின் அகவலையாவது கேட்க முடியாதா ?
சாலையோரம்
ஒரு ஆல மரத்தின் நிழலிலாவது
இளைப்பாற முடியாதா என்பதுதான் .
-அன்பழகன் செந்தில்வேல்

One Reply to “பூவரச மரங்கள் இல்லாத நகரம், பயணம்”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.