பட்டாம்பூச்சிகள்

butterfly_images

 
Ian McEwan எழுதிய “First Love, Last Rites” எனும் தொகுப்பில் வந்த Butterflies எனும் கதையின் மொழியாக்கம்

வியாழன் அன்றுதான் என் முதல் பிணத்தைப் பார்த்தேன். இன்று ஞாயிற்றுக்கிழமை. ஆனால் செய்ய ஒன்றுமில்லை. மேலும் வெய்யிலோ கொளுத்தித் தள்ளியது. இங்கிலாந்தில் இவ்வளவு வெய்யிலடித்ததாக நான் கேள்விப்பட்டதே இல்லை. மதியவாக்கில் வெளியே நடந்துவிட்டு வரலாம் என்று தோன்றியது. வீட்டிற்கு வெளியே நின்றபடி போகலாமா வேண்டாமா என்று தயங்கிக் கொண்டிருந்தேன். சார்லி சாலைக்கு எதிர்புறமிருந்தான், காரின் கீழ். என் கால்களை பார்த்திருப்பான்; என்னை அழைத்தான்.
“என்ன தம்பி, எப்படி போயிட்டிருக்கு?”. இம்மாதிரியான கேள்விகளுக்கு உடனடியான வாடிக்கை பதில்களை என்னால் எப்போதுமே அளிக்க முடிந்ததில்லை.  என்ன பதிலளிக்கலாம் என்று சில கணங்கள் தடுமாறிவிட்டு “சார்லி, நல்லா இருக்கியா?” என்று சும்மா கேட்டுவைத்தேன்.
அவன் காருக்கு அடியிலிருந்து வெளியே வந்தான். என் வீடிருக்கும்   திசையில் காய்ந்து கொண்டிருந்த வெய்யில் அவன் கண்களை கூசச் செய்தது. அவன் தன் கைகளால் அதைத் தடை செய்தபடி “எங்க போயிட்டிருக்க” என்று கேட்டான். இந்த முறையும் எனக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை. ஞாயிற்றுக்கிழமை, ஒன்றுமே செயவதிற்கில்லை, வெய்யிலோ கொளுத்துகிறது…..
“சும்மா, வெளில ஒரு வாக் போயிட்டு வரலாம்னு….” என்று பதிலளித்தபடி சாலையைக் கடந்தேன். காரின் எஞ்சினை நோட்டம் விட்டேன் ஆனால் அதைப் பற்றியெல்லாம் எனக்கு பெரிய அக்கறையொன்றும் இல்லை. சார்லி கிழவனுக்குத்தான் எந்திரங்களைப் பற்றி அதிகம் தெரியும். எங்கள் தெருவிலிருந்தவர்கள் மற்றும் அவர்கள் நண்பர்களின் கார்களை அவன்தான் ரிப்பேர் செய்து தருவான். அவன் கனமான டூல் பாக்ஸ் ஒன்றை தூக்கிக் கொண்டு கார் கதவிருக்கும் பக்கமாக சுற்றி வந்தான்.
“அவ செத்துட்டா, இல்ல? “ ஸ்பானரை காட்டன் வேஸ்ட்டால் துடைத்துக் கொண்டு அங்கேயே நின்றுகொண்டிருந்தான், அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருப்பது போல். அக்கேள்விக்கான விடையை அவன் அறிந்திருந்தாலுங்கூட அதை நான் சொல்லிக் கேட்க வேண்டும் என்று விரும்பினான்.
“ஆமாம், அவள் இறந்து விட்டாள்”  என்று அவனிடம் கூறினேன். நான் மேலும் தொடரவேண்டும் என்பது போல் காத்திருந்தான். காரின் மீது சாய்ந்து கொண்டேன். அதன் கூரை மிகவுமே சூடாகி இருந்தது.
“ நீ அவள கடைசியா பார்த்தது… “ சார்லி என்னைத் தூண்டினான்.
“ நான் பாலத்தின் மீது நின்று கொண்டிருந்தேன். அவ கால்வாய்ப் பக்கமா ஓடிக்கொண்டிருந்தத பார்த்தேன். “
“ஓடி…”
“அவ உள்ள விழறத நான் பாக்கல”. சார்லி ஸ்பானரை பெட்டிக்குள்ளே திரும்பி வைத்தான். காரடியே மீண்டும் கிடக்கையாகச் செல்வதற்கு தயாராகிக் கொண்டிருந்தான். உரையாடல் முடிந்துவிட்டது என்பதை என்னிடம் ஜாடையாக சொல்லுவதற்கான அவனது வழி இது.
“வெட்கம், வெட்கக்கேடு” என்று சார்லி காரடியே மறைவதற்கு முன்னே கூறினான்.
இடப்பக்கமாக திரும்பி நின்று கொண்டிருந்ததால் அத்திசையிலேயே அவனை விட்டு நடக்கத் தொடங்கினேன். பல தெருக்கள் வழியாகவும், வேலிப் புதர்ச்செடிகளுக்கும், பார்க் செய்யப்பட்டிருந்த கார்களுக்கிடையேயும் நடந்து சென்றேன். ஒவ்வொரு தெருவிலும் அதே மதியச் சமையல் மணம். திறந்திருக்கும் சன்னல்கள் வழியே அதே ரேடியோ நிகழ்ச்சிகள். பூனைகள், நாய்கள் மற்றும் ஒருசில மனிதர்களை மட்டுமே என்னால் பார்க்க முடிந்தது, அதுவும் தொலைவிலிருந்துதான்… என் மேல்சட்டையைக் கழற்றி முன்கரத்தில் ஏந்திச் சென்றேன். மரங்களுக்கும் நீருக்கும் அருகே இருக்க விரும்பினேன். லண்டனின் இப்பகுதியில் பூங்காக்கள் கிடையாது வெறும் கார்ப் பார்க்குகள் மட்டுமே. கால்வாய் ஒன்று இருந்தது, தொழிற்சாலைகளுக்கு இடையே உலோக உடைசல் குவியல்களைக் கடந்து செல்லும் கபில நிறத்து கால்வாய், ஜேன் குட்டி மூழ்கி இறந்த கால்வாய்.
பொது நூலகத்தை நோக்கி நடந்தேன். அது மூடப்பட்டிருக்கும் என்பதை முன்கூட்டியே அறிந்திருந்தாலும் வெளியே அதன் படிக்கட்டுகளில் உட்காருவதற்காக. குறுகிச் சிறுக்கும் நிழற்திட்டொன்றில் உட்கார்ந்து கொண்டேன். தெருவில் வெப்பக் காற்று வீசிக் கொண்டிருந்தது. என் காலைச் சுற்றி குப்பையை அது சுழலச் செய்த்து. Daily Mirrorன் தாள் ஒன்று வீதியின் நடுவே அடித்துச் செல்லப்படுவதை பார்த்திருந்தேன். காற்று ஓய்ந்ததும் தலைப்புச் செய்தியின் ஒரு பகுதியை என்னால் படிக்க முடிந்தது, …’Man Who’…  அங்கு வேறெவருமே இல்லை. சாலை முடுக்கில் ஐஸ்-க்ரீம் வண்டி மணியடித்துக் கொண்டிருக்கும் ஓசை காதில் விழுந்தது. எனக்கு தாகமெடுத்தது. மோட்சார்டின் பியானோ சொனாடா ஒன்றின் ஏதோவொரு வரியை அது இசைத்துக் கொண்டிருந்தது. திடீரென்று, யாரோ உடைத்து விட்டது போல், ஒரு நோட்டை வாசித்து முடிப்பதற்குள் சட்டென நின்றது. தெருவில் இறங்கி நான் வேகமாக நடக்கத் தொடங்கினேன். ஆனால் நான் தெருமுனையை அடைவதற்கு முன்னதாகவே அது போய்விட்டது. ஒரு கணத்திற்குப்  பிறகு  என்னால் அதை மீண்டும் கேட்க  முடிந்தது. எங்கோ  தொலை தூரத்தில் ஒலித்துக் கொண்டிருந்தது.

வீடு திரும்புகையில் ஒருவரைக்கூட காண முடியவில்லை. சார்லி உள்ளே சென்று விட்டிருந்தான். அவன்  ரிப்பேர் செய்து கொண்டிருந்த காரையும் காணவில்லை.
சமையலறைக் குழாயிலிருந்து நீர் அருந்தினேன். லண்டன் குழாயிலிருந்து வரும் ஒவ்வொரு கிளாஸ் தண்ணியும்  ஐந்து முறையேனும் ஏற்கனவே குடிக்கப்பட்டிருக்கும் என்பதை எங்கேயோ படித்ததாக நினைவு. அது உலோகத்தனமாக இருந்தது. அவர்கள் அச்சிறுமியின் சடலத்தை  கிடத்தியிருந்த ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் டேபிளை நினைவுறுத்தியது. ஒருகால் குழாய்த் தண்ணியைக் கொண்டுதான் பிணவறையின் டேபிள்களை சுத்தம் செய்வார்களோ என்னவோ. அச்சிறுமியின் பெற்றோர்களை இரவு ஏழு மணிக்கு சந்திக்கவிருந்தேன். வலியச் சென்று அவர்களை சந்திக்க எனக்கொரு விருப்பமுமில்லை. என் வாக்குமூலத்தை பதிவு செய்த போலீஸ் ஸார்ஜென்ட்தான் அவர்களை சந்தித்துவரச் சொன்னான். நான் அப்போதே திடமாக மறுத்திருக்க வேண்டும். ஆனால் அவன் நாசூக்காக என்னைச் சம்மதிக்க வைத்துவிட்டான். மேலும் அவனைப் பார்த்தால் எனக்கு பயமாகவும் இருந்தது. என்னிடம் பேசுகையில் என் முழங்கை முட்டியை பற்றிக் கொள்வான். தங்களுக்கிருந்த அதிகார பலத்தை தங்களுக்கே நினைவுபடுத்திக் கொள்வதற்காக அவர்களுக்கு போலீஸ் கல்லூரியில் கற்றுத் தரப்பட்ட உத்தியாகவும் இருக்கலாம். நான் கட்டிடத்தை விட்டு வெளியே வரும்போது எதிர்கொண்டு என்னை ஒரு மூலைக்குத் தள்ளிச் சென்றான்.குஸ்திச் சண்டை செய்துதான் என்னால் அப்பிடியிலிருந்து தப்பித்திருக்க முடியும். மென்மையாகவும், அவசரத்துடனும் ஒரு உடைசலான முணுமுணுக்கும் குரலில் அவன் பேசினான்.
“அந்த பொண்ணு செத்து போறதுக்கு முன்னாடி, அவள பாத்த கடைசி ஆள் நீதான்…. “  ‘செத்து” என்ற வார்த்தையை மட்டும் சற்று அழுத்திக் கூறினான்.  “… அவ அப்பா அம்மா உன்ன பார்க்கனும்னு சொன்னாங்க.”  இன்னமும் புலப்படாத ஏதோ பின்விளைவுகளைக் கொண்டு அவன் என்னை அச்சுறுத்துவது போலிருந்தது. மேலும் அவன் என்னைத் தொட்டுக் கொண்டிருக்கையில் என் மீது அவனுக்கு அதிகாரமிருப்பது போலவும் இருந்தது. அவன் பிடியை சற்று இறுக்கியபடியே “அதனால நீ அவங்கள வந்து பார்ப்பன்னு சொல்லிட்டேன். கிட்டத்தட்ட நீ அவங்களுக்கு அடுத்த வீடு மாதிரி தான ?” என்று கூறினான். நான் வேறு பக்கம் பார்த்துக் கொண்டே தலையை ஆட்டினேன் என்று நினைக்கிறேன். அவன் சிரித்தான். மாற்றவே முடியாதபடி எல்லாம் உறுதி செய்யப்பட்டுவிட்டது போலிருந்தது.  இருந்தாலும் இதுவும், இந்த சந்திப்பும் கூட இந்த நாளை அர்த்தப்படுத்திக் கொள்வதற்கான ஒரு நிகழ்வு என்று எனக்குப் பட்டது. பிற்பகல் பின்னேரத்தில் குளித்துவிட்டு நேர்த்தியான உடையணிய முடிவு செய்தேன். விரயம் செய்வதற்கு இன்னமும் அதிக நேரமிருந்தது. அதுவரையிலும் திறக்கப்படாத கோலோன் பாட்டிலையும் நன்றாக சலவை செய்யப்பட்ட சட்டையொன்றையும் தேடியெடுத்தேன். குளியலறையில் தண்ணீரைத் திறந்துவிட்டுக் கொண்டு ஆடைகளைக் களைந்தேன். கண்ணாடியில் என் உடம்பையே வெறித்திருந்தேன். பார்ப்பதற்கு நான் ஒரு அசுகைக்காரன் மாதிரி தான் இருக்கிறேன் என்பது எனக்கும் தெரியும்; என் தாடையற்ற முகமே அதற்குக் காரணம்.அவர்களால் ஏன் என்று சொல்ல முடியாதென்றாலும், போலீஸ் ஸ்டேஷனில் நான் வாயைத் திற்ப்பதற்கு முன்னதாகவே அவர்கள் என்னை சந்தேகப்பட்டார்கள். ப்ரிட்ஜில் நின்று கொண்டிருந்ததையும் அங்கிருந்து கால்வாய் அருகே அவள் ஓடிக்கொண்டிருந்ததைப் பார்த்ததையும் கூறினேன்.
“பயங்கர கோ-இன்சிடென்ஸ் இல்ல ? அதான்பா உன் வீடும் அவ வீடும் ஒரே தெருவுல இருக்குதுல்ல, அத சொன்னேன்” போலீஸ் ஸார்ஜெண்ட் கிண்டலாகக் கேட்டான். என் தாடைக்கும் கழுத்திற்கும் வித்தியாசமே கிடையாது; அது சந்தேகத்தை வரவழைப்பதாக இருப்பது. என் அம்மாவிற்கும் அப்படித்தான் இருந்தது. வீட்டை விட்டு வெளியே வந்த பிறகுதான் அவள் கோரமாக இருக்கிறாள் என்பதை உணர்ந்தேன். போன வருடம்தான் அவள் இறந்தாள். பெண்களுக்கு என் தாடையைப் பார்த்தாலே அலர்ஜி, என் அருகே வரக்கூட மாட்டார்கள். என் அம்மாவிற்கும் அதே கதிதான், அவளுக்கும் நண்பர்கள் எப்போதுமே கிடையாது. அனைத்து இடங்குகளுக்கும் தனியாகத்தான் போய்வருவாள், விடுமுறை நாட்களில் கூட. ஒவ்வொரு ஆண்டும் லிட்டில் ஹாம்ப்டனிற்குச் சென்று மடக்கு நாற்காலியொன்றில் தனியே உடகார்ந்திருப்பாள், கடலைப் பார்த்தபடியே. அந்திம காலத்தில் மிகவும் மெலிந்து ஒரு வேட்டை நாயைப் போலக் கொடூரமாக காட்சியளித்தாள். கடந்த வியாழன் ஜேனின் சடலத்தைப் பார்க்கும் வரையில் சாவைப் பற்றி நான் பெரிதாக சிந்தித்ததே இல்லை. வாகனமொன்று நாயின் மீது ஏறிச் சென்றதை ஒரு முறை பார்த்திருக்கிறேன். சக்கரம் அதன் கழுத்தின் மீது ஏறுகையில் அதன் விழிக்கோளங்கள் தெறித்தன. அப்போது அது என்னிடம் எந்த ஒரு பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.  அம்மா இறந்த போதும்கூட நான் போய்ப் பார்க்கவில்லை. அனேகமாக என் அக்கறையின்மையும் உறவினர்கள் மீது எனக்கிருந்த வெறுப்புமே இதற்கு காரணமாக இருக்கலாம். மேலும் பூக்களிடையே ஒரு மெலிந்த சாம்பல் நிறத்த பிணமாக அவளைப் பார்க்க எனக்கு எந்தவொரு ஆவலுமில்லை. ஆனால் அப்போதும் கூட நான் ஒரு பிணத்தை பார்த்திருக்கவில்லை. பிணம் வாழ்ந்து கொண்டிருப்பவர்களை இறந்தவர்களுடன் ஒப்பிடச் செய்கிறது. அவர்கள் என்னை படிக்கட்டுகள்  மற்றும் ஒரு நடைகூடம் வழியாக இட்டுச் சென்றார்கள். பிணவறை தனித்து நின்றுகொண்டிருக்கும்  என்று கற்பனை செய்திருந்தேன். ஆனால் அது ஏழு அடுக்குகள் கொண்ட ஒரு அலுவலகத்தில் இருந்தது. நாங்கள் அடித்தளத்தில் இருந்தோம். படிக்கட்டின் கீழ் தட்டச்சுப் பொறிகள் ஒலித்துக் கொண்டிருந்தன. ஸார்ஜெண்டும் அங்கிருந்தான் சூட்டணிந்த இன்னும் சில ஆசாமிகளுடன். இருபக்கமும் திறக்கக்கூடிய கதவை ஸார்ஜேன்ட் எனக்காக திறந்து கொடுத்தான். உண்மையில், அவள் அங்கிருப்பாள் என்று நான் நினைக்கவே இல்லை. எதை எதிர்பார்த்தேன் என்பது இப்போது மறந்துவிட்டது. அனேகமாக புகைப்படம் அல்லது கையொப்பம் இடுவதற்கான சில ஆவணங்களாக இருக்கலாம். நான் இதை முன்கூட்டியே சரியாக யோசித்துப் பார்த்திருக்கவில்லை.  ஆனால் அவள் அங்கிருந்தாள். ஒரே வரிசையில் ஐந்து ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் மேஜைகள் நின்று கொண்டிருந்தன. ஒளிர் விளக்குகளை ஏந்தியபடி பச்சை நிற ஈயக் கவிகைகள் விட்டத்திலிருந்து நீளமான சங்கிலிகளில் தொங்கிக் கொண்டிருந்தன. அவள் கதவருகேயிருந்த மேஜை மீதிருந்தாள். உள்ளங்கை மேல்நோக்கி திரும்பியிருக்க, கால்கள் பிணைந்து, பிளந்த வாயுடனும், அகல விரிந்த கண்களுடனும், மிக வெளிர்ந்து, மிக அமைதியாக அவள் மேஜைமீது கிடந்தாள். அவள் கேசம் இன்னமும் சிறிது ஈரமாகத்தான் இருந்தது. அவள் அணிந்திருந்த சிகப்பு அங்கி அப்போதுதான் சலவை செய்யப்பட்டது போலிருந்தது. கால்வாயை நினைவுபடுத்தும் ஒரு மெல்லிய வாடை அவளிடமிருந்து எழும்பியது. நானும் போலீஸ் சார்ஜெண்டைப் போல் போதுமான அளவிற்கு பிணங்களைப் பார்த்திருந்தால் இவையெல்லாம் எனக்கும் அதீதமாகத் தோன்றியிருக்காது. அவள் வலது கண் மீது சிறு கன்றலொன்று இருந்தது. எனக்கு அவளைத் தொடவேண்டும் போலிருந்தது. ஆனால் அவர்களெல்லோரும் என்னை உற்று கவனித்துக் கொண்டிருப்பதை உண
ர்ந்தேன். வெள்ளை கோட் அணிந்த ஆளொருவர் , பழைய கார் விற்பனையாளரைப் போல் “ஒன்பது வயசுதான் இருக்கும்” என்று விறுவிறுப்பாக கூறினார். எவரும் அவருக்கு பதிலளிக்கவில்லை. நாங்களெல்லோரும் அவள் முகத்தையே பார்த்திருந்தோம். சார்ஜெண்ட் மேஜையைச் சுற்றி நானிருந்த பக்கத்திற்கு கையில் சில தாள்களுடன் வந்தான்.
“சரி, பார்த்தாச்சுல்ல ?” என்று கேட்டான். அதே நீண்ட நடைகூடம் வழியாக நாங்கள் திரும்பிச் சென்றோம். மேல்கூடத்தில் நான் வாக்குமூல ஆவணங்களில் கையொப்பமிட்டேன். இரயில் பாதைக்கருகே இருந்த நடைபாலத்தின் மீது சென்றுகொண்டிருந்தபோது நான் அடையாளங்காட்டிய அச்சிறுமி கீழே கால்வாயை ஒட்டியிருந்த இழு-பாதையில் ஓடிக்கொண்டிருந்ததை நான் பார்த்ததாக அத்தாள்களில் எழுதியிருந்தது. பார்வையை விலக்கி மீண்டும் பார்த்தபோது சிகப்பாக ஏதொவொன்று ஒரு கணம் மிளிர்ந்து தண்ணிரில் அமிழ்ந்து மறைந்தது. எனக்கு நீச்சல் தெரியாததால் ஒரு போலீஸ்காரனை அழைத்து வந்தேன். அவன் தண்ணிரை உற்றுப் பார்த்துவிட்டு தனக்கு ஒன்றும் தென்படவில்லை என்று கூறினான். அவனிடம் பெயரையும் விலாசத்தையும் தந்துவிட்டு வீடு திரும்பினேன். ஒன்றரை மணி நேரத்திற்குப் பிறகு அவளை கால்வாய் அடியிலிருந்து ஒரு இழுவைக்கயிற்றால் மேலே தூக்கினார்கள். வாக்குமூலத்தின் மூன்று பிரதிகளில் கையொப்பமிட்டேன். அதன் பிறகு நெடுநேரம் வரையிலும் அக்கட்டிடத்தை  விட்டு நான் வெளியே செல்லவில்லை. கூடாரத்திற்குச் சென்று, அச்சில் வார்த்த பிளாஸ்டிக் நாறகாலியொன்றில் உட்கார்ந்துகொண்டேன். எதிரே, திறந்திருந்த வாசல் வழியே. பெண்களிருவர் அலுவலகத்தில் தட்டச்சு செய்துகொண்டிருந்ததை என்னால் பார்க்க முடிந்தது. நான் பார்த்துக்கொண்டிருந்ததை அவர்கள் கவனித்தார்கள். பின்னர் தங்களுக்குள்ளேயே ஏதோ பேசிக்கொண்டு சிரித்தார்கள். அதிலொருவள் முறுவலித்தபடியே வெளியே வந்து எனக்கு உதவியேதும் தேவைப்பட்டதா என்று கேட்டாள். சும்மா எதையோ யோசித்துக் கொண்டு உட்கார்ந்திருப்பதாக அவளிடம் கூறினேன். அவள் அலுவகத்திற்குள் திரும்பிச் சென்று, மேஜைக்குக் குறுக்கே எம்பி தன் நண்பியிடம் பேசினாள். ஒரு விதமான உளைச்சலுடன் அவர்கள் என்னை ஓரப்பார்வை பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஏதோ ஒரு காரணத்திற்காக என்னை சந்தேகித்தார்கள், எப்போதும் போல. கீழ்த்தளத்தில் கிடந்த அந்த பெண்ணின் சடலத்தை நான் நினைக்கவேயில்லை உயிரோடு இருப்பது போலவும், இறந்துவிட்டதைப் போலவும் அவள் பிம்பங்கள் என் மனதில் குழம்பியிருந்தன. அவற்றை ஒப்பிட்டு சரிசெய்து கொள்ள நான் முயலவில்லை. வெளியே போக பிடிக்காததால் மதியம் முழுவதும் அங்கேயே உட்கார்ந்திருந்தேன். அந்தப் பெண்கள் அலுவலகக் கதவை மூடிக்கொண்டார்கள். அனைவருமே வீட்டிற்குச் சென்றுவிட்டதால் அவர்களும் கதவடைக்க தயாரானார்கள். நானும் கிளம்பினேன். அக்கட்டிடத்தை விட்டு கடைசியாக நான் தான் வெளியேறினேன்.
உடையணிந்து தயாராவதற்கு எனக்கு அதிக நேரம் ஆயிற்று. கருப்பு சூட்டை இஸ்திரி செய்தேன். கருப்பணிவதே பொருத்தமாக இருக்கும் என்று தோன்றியது. ஒரேயடியாக எல்லாம் கருப்பாக இருந்துவிடக் கூடாதென்பதற்காக நீல நிற டையொன்றை தேர்ந்தெடுத்தேன். பின்னர் வீட்டை விட்டு கிளம்புவதற்கு முன் மனம்மாறி மீண்டும் மாடிக்குச் சென்று சூட், சட்டை டை அனைத்தையும் களைந்தேன். என் முஸ்தீபுகளை நினைத்து என்மேலேயே எனக்கு கோபம் வந்தது. அவர்களின் அங்கீகாரத்தைப் பெற நான் ஏன் இவ்வளவு கவலைப்பட வேண்டும்? முன்பு அணிந்திருந்த கால்சராயையும் ஸ்வெட்டரையும் மீண்டும் அணிந்து கொண்டேன். குளித்ததற்காக என்னையே நொந்து கொண்டு பின்கழுத்தில் தெளித்துக் கொண்ட கொலோனின் வாசத்தை தண்ணீரால் கழுவி அப்புறப்படுத்த முயன்றேன். அதைத் தவிர மற்றொரு வாசனையும் உடனிருந்தது, குளித்த போது பயன்படுத்திய நறுமணமூட்டப்பட்ட சோப்பின் வாசம். வியாழனன்றும்  அதே சோப்பைத் தான் தேய்த்துக் கொண்டேன். அந்தச் சிறுமி அதைத்தான் முதலில் கவனித்தாள்
“நீ பூக்களைப் போல் மணக்கிறாய்” என்று என்னிடம் கூறினாள். அவள் முன்முற்றத் தோட்டத்தைக் கடந்து, வாக்கிங் போக அப்போதுதான் நான் கிளம்பிக் கொண்டிருந்தேன். நான் அவளை சட்டையே செய்யவில்லை. பொதுவாகவே நான் குழந்தைகளை தவிர்த்தேன், அவர்களுடன் பேசுவதற்கு ஏற்ற தொனி எனக்கு எப்போதுமே கிட்டியதில்லை.  அவர்களின் நேரடித்தன்மை என்னைத் தொந்தரவு செய்து முடக்கியது. இந்தச் சிறுமி தெருவில் தன்னந்தனியே விளையாடுவதையும்  சார்லி செய்வதை எல்லாம் கவனித்துக் கொண்டிருப்பதையும் ஏற்கனவே பல முறை பார்த்திருந்தேன். தோட்டத்தை விட்டு வெளியே வந்து அவள் என்னைப் பின்தொடர்ந்தாள்.
“ நீ எங்க போற? “ என்று கேட்டாள். ஒருவழியாக ஆர்வம் குறைந்து திரும்பிச் சென்றுவிடுவாள் என்ற நம்பிக்கையில் மீண்டும் அவளைக் கண்டுகொள்ளாததைப் போல் நடந்து சென்றேன். மேலும் நான் எங்கு போய்க்கொண்டிருந்தேன் என்று எனக்கே இன்னமும் தெளிவாக புலப்படவில்லை.
“நீ எங்க போற? “ அவள் மீண்டும் கேட்டாள்.
ஒரு சிறு இடைவெளிக்குப் பிறகு “ உன்கிட்ட எதுக்குச் சொல்லணும்”  என்று கூறினேன். நான் அவளைப் பார்க்க முடியாத வகையில் என் பின்னே நெருக்கமாக நடந்து வந்தாள். என் நடையை அவள் நையாண்டி செய்துகொண்டிருப்பதைப் போல் எனக்குத் தோன்றினாலும் நான் திரும்பிப் பார்க்கவில்லை.
“மிஸ்டர் வாட்சனோட கடைக்குப் போறயா?”
“ஆமாம். மிஸ்டர் வாட்சனோட கடைக்குத்தான் போறேன்.”
இப்போது அவள் என் பக்கவாட்டில் நடந்தபடியே “எதுக்கு கேட்டேன்னா அது இன்னிக்கு மூடியிருக்கும். இன்னிக்கு புதன்கிழமை” என்று கூறினாள். இதற்கு என்ன பதிலளிப்பதென்று எனக்குத் தெரியவில்லை. தெருமுனையை அடைந்தபோது
“நீ நிஜமா எங்க போற” என்று கேட்டாள். முதன்முறையாக அவளை உற்று கவனித்தேன். சோகம் பீறிடும் பெரிய கண்களுடன் நீண்டிருந்தது அவளது மெல்லிய முகம். அவள் அணிந்திருந்த சிகப்பு காட்டன் அங்கிக்கு ஏற்றாற்போல் சிகப்பு ரிப்பனைக் கொண்டு  பிரவுன் கேசத்தை கொத்தாக முடிந்திருந்தாள். மோடிக்லியானியின் ஓவியத்தில் வரும் பெண்னைப் போல் ஒரு வினோதமான கொடூரத்துடன் அழகாகவே இருந்தாள்.
“தெரியாது. சும்மா கொஞ்ச தூரம் வாக் போயிட்டிருக்கேன்.” என்று பதிலளித்தேன்.
“நானும் கூட வரேன்.” நான் பதிலேதும் கூறவில்லை. நாங்களிருவரும் ஷாப்பிங் செண்டரை நோக்கிப் போய்க் கொண்டிருந்தோம். அவளை நான் திரும்பிப் போகச் சொல்வேன் என்பதை எதிர்பார்த்திருப்பது போல் ஒன்றுமே கூறாமல் எனக்கு சற்று பின்னே நடந்து வந்தாள். இங்குள்ள குழந்தைகள் எல்லோரிடமும் இருக்கும் அந்த விளையாட்டுப் பொருளை வெளியே எடுத்தாள். நூலில் தொங்கிக் கொண்டிருக்கும் இரு கடினமான பந்துகளை கைகளைக் கொண்டு வேகமாக ஓங்கி மோதச் செய்ய வேண்டும். அது புட்பால் பந்தயங்களில் ஒலிக்கும் ராட்டில்களைப் போல் கிலுகிலுவென்று ஒலித்தது. என்னை மகிழ்விப்பதற்காகத்தான் அதைச் செய்தாள் என்று நினைக்கிறேன். இதற்கு பிறகும் அவளைத் திரும்பிப் போகச் சொல்வது கஷ்டம்தான். மேலும் நான் மற்றவர்களுடன் பேசியே பல நாட்கள் ஆகிவிட்டிருந்தன.
உடை மாற்றிக் கொண்டு மீண்டும் கீழே வருவதற்குள்  மணி ஆறேகால் ஆகிவிட்டது.  என் வீடிருந்த வரிசையிலேயே பன்னிரெண்டு வீடுகள் தள்ளி ஜேனின் வீடிருந்தது. நாற்பத்தைந்து நிமிடம் முன்னதாகவே தயாராகிவிட்டதால் நேரத்தைப் போக்க சிறிது நடந்துவிட்டு வரலாம் என்று தோன்றியது. தெருவில் நிழல் கவிந்திருந்தது. எந்த வழியாக போகலாம் என்று யோசித்தபடியே சிறிது நேரம் வீட்டு வாசலில் தாமதித்தேன். எதிரே சார்லி வேறொரு காரை ரிப்பேர் செய்து கொண்டிருந்தான். அவன் என்னைப் பார்த்துவிட்டதால் வேண்டா வெறுப்பாக சாலையைக் கடந்து அவனருகே சென்றேன்.
“இப்ப எங்க கிளம்பிட்ட?”. ஒரு குழந்தையிடம் பேசுவதைப் போல் என்னிடம் கேட்டான்.
“சும்மா காத்தாட நடந்துட்டு வரலாம்னு… “
தெருவில் நடப்பதனைத்தைப் பற்றியும் தெரிந்து கொள்ள சார்லிக்கு ஆசை. குழந்தைகள் உட்பட இங்குள்ளோர். அனைவரையும் அவனுக்குத் தெரியும். அந்தச் சிறுமியைக் கூட பலமுறை அவனுடன் பார்த்திருக்கிறேன். போன முறை பார்த்தபோது அவன் கேட்டால் கொடுப்பதற்காக ஒரு ஸ்பானரை வைத்துக் கொண்டிருந்தாள். என்னால்தான் அச்சிறுமி இறந்தாள் என்று ஏனோ சார்லி என் மீது கோபமாக இருந்தான். ஞாயிற்றுக்கிழமை முழுதும் இதை அசைபோட அவனுக்கு நேரமிருந்திருக்கும். இப்போது அவனுக்கு என் தரப்பிலிருந்து அக்கதையைக் கேட்டாக வேண்டும், ஆனால் நேரடியாக கேள்விகளைக் கேட்கத் தயங்கினான்.
“அவ அப்பா அம்மாவ பாக்கப் போறியா ? எப்போ, ஏழு மணிக்கா? “
“ஆமாம், ஏழு மணிக்குத்தான்.” நான் மேலும் தொடர்வதற்காக காத்திருந்தான். நான் காரைச் சுற்றி வந்தேன். அது ஒரு பழைய துருப்பிடித்த பெரிய ஃபோர்டு சோடியாக். இந்தத் தெருவில் அதைப் போன்ற கார்கள்தான் அதிகம். அது தெருக்கோடியில் சிறு கடையொன்றை நடத்தும் பாகிஸ்தானியர்களுக்குச் சொந்தமானது. அவர்கள் அக்கடையை “வாட்சன்ஸ்” என்றழைத்தார்கள், ஏன் என்பது அவர்களுக்கு மட்டும்தான் வெளிச்சம். இந்தப் பகுதிகளில் உழலும் ஸ்கின்-ஹெட்கள் அவர்களின்  இரண்டு பிள்ளைகளையும் அடித்து உதைத்தார்கள். அதனால் அவர்கள் இப்போது பேஷாவருக்குத் திரும்பிப் போவதற்காக பணம் சேமித்துக் கொண்டிருந்தார்கள். நான் கடைக்குப் போகும்போது  லண்டனின் மோசமான வானிலை மற்றும் இங்கு இழைக்கப்படும் வன்முறை பொருட்டு தன் குடும்பத்தை சொந்த நாட்டிற்கு அழைத்துச் செல்வதைப் பற்றி அந்தக் கிழவன் என்னிடம் சொல்லுவான். மிஸ்டர் வாட்சனின் காரின் அந்தப் பக்கத்திலிருந்து சார்லி
“அவர்களுக்கு அவ ஒரே..” என்று என் மீது குற்றம் சாட்டினான்.
“ஆமாம், தெரியும். ரொம்ப அநியாயம்” என்று பதிலளித்தேன். நாங்கள் இருவரும் காரைச் சுற்றி வந்தோம். அதன்பின் சார்லி “பேப்பர்ல வந்திருந்துது. நீ பாத்தியா? அவ கீழ முழுகறத நீ பாத்தேன்னு அதுல போட்டிருந்தது.”
“ஆமாம்..”
“அப்போ உன்னால அவள பிடிக்க முடியல, இல்ல?”
“இல்ல, முடியல. அவ முங்கிட்டா”.  நான் காரைச் சுற்றி சற்று அகலமான வட்டங்களில் சுற்றி வருவதைப் போல் சுற்றி நாசூக்காக நழுவிச் சென்றேன். தெருமுனையை எட்டும் வரையில் சார்லியின் கண்கள் என் மீது பதிந்திருப்பதை உணர்ந்தேன். ஆனால் அவன் என்னைச் சந்தேகப்படுவதை நான் அறிந்திருந்தேன் என்பதை காட்டிக் கொள்ளக் கூடாது என்பதற்காகவே திரும்பிப் பார்ககாமல் நடந்து சென்றேன். தெருமுனையில், ஏரோப்பிளேன் ஒன்றை அண்ணாந்து பார்ப்பதைப் போல் ஓரக்கண்ணால் திரும்பிப் பார்த்தேன். கைகளை இடுப்பில் வைத்துக்கொண்டு கார் அருகே சார்லி நின்றுகொண்டிருந்தான், இன்னமும் என்னைப் பார்த்துக் கொண்டே. அவன் கால்களுக்கருகே பெரிய கருப்பு-வெள்ளை பூனையொன்று அமர்ந்திருந்தது. இது அனைத்தையும் ஒரே பார்வையில் உள்வாங்கிக் கொண்டு தெருமுனையைத் திரும்பிக் கடந்தேன். ஆறரை மணி நேரம் ஆகிவிட்டிருந்தது. நூலகம் வரை சென்று எஞ்சியிருந்த நேரத்தை கழிக்க முடிவு செய்தேன். முன்பு சென்ற அதே வழிதான். ஆனால் இப்போது ஜன நடமாட்டம் அதிகமாகிவிட்டிருந்தது. தெருவில் கால்பந்து ஆடிக்கொண்டிருந்த வெஸ்ட் இந்தியன் சிறுவர்களைக் கடந்தேன். அவர்களின் பந்து என்னை நோக்கி உருண்டு வந்தது. நான் அதைத் தாண்டிக் குதித்துச் சென்றேன். குழுவிலிருந்த சிறுவர்களில் ஒருவன் பந்தை எடுத்து வரும்வரையில் அவர்கள் காத்திருந்தார்கள். நான் அவர்களைக் கடந்து செல்கையில் மௌனமாக என்னையே உற்று கவனித்துக் கொண்டிருந்தார்கள். நான் அவர்களை கடந்து சென்ற அடுத்த கணமே அவர்களுள் ஒருவன் ஒரு சிறு கல்லை என் கால்களை நோக்கி உருட்டிவிட்டான். திரும்பிக் கூடப் பார்க்காதது போல் மிகச் சாமர்த்தியமாக என் காலடியில் அதைத் தடுத்து இடுக்கினேன். அதை இவ்வளவு நேர்த்தியாகச் செய்ய முடிந்தது தற்செயல்தான். கைதட்டிச் சிரித்து அவர்கள் அதைப் பாராட்டி உற்சாகப்படுத்தினார்கள். பெருமிதமான அந்தக் கணத்தில் நான் கூட திரும்பிச் சென்று அவர்களுடன் விளையாடலாமா என்று யோசித்தேன். பந்து திரும்பக் கிடைத்துவிட்டதால் அவர்கள் மீண்டும் விளையாடத் தொடங்கியிருந்தார்கள். அந்தக் கணமும் கழிந்தது. நானும் நடந்து சென்றேன். அதன் உற்சாகத்தால் என் நெஞ்சு இன்னமும் படபடத்துக் கொண்டிருந்தது. நூலகத்தை அடைந்து அதன் படிக்கட்டுகளில் அமர்ந்த பிறகும் கூட நெற்றிப்பொட்டுகளில் ரத்தக்குழாய்கள் அதிர்வதை என்னால் உணரமுடிந்தது. இம்மாதிரியான சந்தர்ப்பங்கள் மிக அரிதாகத்தான்  எனக்கு அமையும். நான் மற்றவர்களுடன் அதிகமாகப் பழகுவதில்லை. சொல்லப்போனால் சார்லியுடனும் மிஸ்டர் வாட்சனுடனும் மட்டும் தான் பேச்சு வைத்துக் கொண்டிருந்தேன். வீட்டை விட்டு வெளியே வரும்போதெல்லாம் அவன் அங்கு இருக்கிறான் என்ற காரணத்திற்காக மட்டுமே சார்லியுடன் பேசினேன்; மேலும் அவன்தான் முதலில் பேசத் தொடங்குவான். மிஸ்டர் வாட்சனுடன் பேச்சு என்பதை விட அவர் பேசுவதை கேட்டுக் கொண்டிருந்தேன் என்று சொல்வது தான் சரி. அதுவுமே அவர் கடையில் பொருட்கள் வாங்க வேண்டியிருந்த நிர்ப்பந்தம் எனக்கு இருந்ததால்….புதன்கிழமையும் அதுவுமாக என்னுடன் ஒரு நபர் நடந்து வருவதே ஒரு நற்சந்தர்ப்பம் தான், அது வேலையில்லாமல் சுற்றித் திரியும் ஒரு சிறுமிதான் என்றாலும் கூட. அப்போது அதை ஒத்துக் கொண்டிருக்க மாட்டேன், ஆனால் அவள் என்னைப்பற்றி அறிந்து கொள்ள ஆவலாக இருந்தது என்னை மகிழ்வித்து அவள் மீது ஒரு ஈர்ப்பை ஏற்படுத்தியது. அவள் என் நண்பியாக இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன்.
ஆனால் முதலில் எனக்கு ஒரு மாதிரியாகத்தான் இருந்தது. தன் பொம்மையுடன் விளையாடிக்கொண்டே எனக்கு சற்று பின்னே நடந்து வந்துகொண்டிருந்தாள். யாருக்குத் தெரியும் குழந்தைகள் எப்போதும் செய்வதைப் போல் இவளும் என் பின்னே வேடிக்கைச் செய்கைகளை செய்துகொண்டிருக்கலாம். நாங்கள் பிரதான கடைவீதியை அடைந்தபோது எனக்கு இணையாக  நடந்து வந்து கொண்டிருந்தாள்.
“ நீ ஏன் வேலைக்கு போக மாட்டேங்கற? ஞாயிற்றுக்கிழமையத் தவிர மிச்ச எல்லா நாளும் எங்கப்பா வேலைக்கு போயிடுவார்” அவள் கேட்டாள்.
“எனக்கு வேலைக்குப் போகவேண்டிய அவசியமில்ல”
“ஏற்கனவே உங்கிட்ட அவ்வளவு பணமிருக்கா?”. நான் தலையாட்டினேன்.
“ நிஜம்மாவே நிறையவா?”
“ஆமாம்”
“அப்போ நீ நினைச்சா எனக்கு ஏதாவது வாங்கித் தர முடியும் இல்லயா?”
“ஆமாம் எனக்கு தோணிச்சுன்னா..”
அவள் ஒரு பொம்மைக் கடைக் கண்ணாடியை சுட்டிக் காட்டினாள்.
“அத மாதிரி ஒன்னு, ப்ளீஸ், ஒன்னே ஒன்னு, உள்ள போலாம், வா”. என் கையைப் பற்றியபடி பேராசை ததும்பும் நடனமொன்றை ஆடிக்கொண்டே என்னை கடையை நோக்கி தள்ள முயன்றாள். குழந்தைப் பருவத்தைத் தவிர அத்துனை உள்நோக்கத்துடன் என்னை ஒருவர் தொட்டு பல காலமாகிவிட்டது. சில்லிட்ட கிளர்ச்சியலை ஒன்று வயிற்றிலிருந்து எழும்பியது. என கால்கள் தளர்ந்தன. என் பாக்கெட்டில் கொஞ்சம் பணமிருந்தது. அவளுக்கு நான் ஏதாவதொன்றை வாங்கித் தரக்கூடாது என்பதற்கான காரணங்களேதும் எனக்குப் புலப்படவில்லை. அவளை கடைக்கு வெளியே நிற்கச் சொல்லிவிட்டு நான் உள்ளே சென்று பிளாஸ்டிக் துண்டத்திலிருந்து அச்சில் வார்க்கப்பட்ட அவள் கேட்ட ஆடைகள் அணியா சிறிய இளஞ்சிவப்பு பொம்மையை வாங்கிக் கொடுத்தேன்.
கிடைத்தவுடனேயே அவளுக்கு அதன் மீதிருந்த ஆர்வம் குன்றிவிட்டது. சிறிது தூரம் சென்றபின் ஐஸ்க்ரீம் வாங்கித் தரும்படி கேட்டாள். கடையின் வாசலில் நின்றுகொண்டு நான் அவளைப் பின்தொடர்ந்து உள்ளே வருவதற்காகக் காத்திருந்தாள். இம்முறை அவள் என்னைத் தொடவில்லை. நான் தயங்கினேன், என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பது எனக்கு சரியாக புலப்படவில்லை. ஆனால் அவளைப் பற்றியும் என்னை அவள் பாதித்த விதத்தைப் பற்றியும் மேலும் தெரிந்துகொள்ள எனக்கு இப்போது ஆர்வமாக இருந்தது. எங்களிருவருக்கும் ஐஸ்க்ரீம் வாங்கத் தேவையான பணத்தைக் அவளிடம் கொடுத்துவிட்டு, உள்ளே சென்று அவள் அவற்றை வாங்கிவருவதற்காக வெளியே காத்திருந்தேன். பொருட்களை பரிசாக பெறுவதற்கு அவள் பழகியிருந்தாள். இன்னம் சிறிது தூரம் சென்றபின்
“உனக்கு யாராவது ஏதாவது கொடுத்தா திருப்பி நன்றி சொல்லற பழக்கமில்லையா?” என்று மிகவும்  நட்பார்ந்த முறையில் அவளைக் கேட்டேன். வெளிறிய உதடுகளைச் சுற்றி ஐஸ்க்ரீம் பூசியிருக்க, என்னை ஏளனத்துடன் பார்த்தாள் :
“இல்ல”
அவள் பெயரைக் கேட்டேன். எங்களிருவருக்குமிடையே நடந்துகொண்டிருக்கும் உரையாடல் இணக்கமாக இருக்க வேண்டும் என்று விரும்பினேன்.
“ஜேன்”
“ நான் வாங்கித் தந்த பொம்மை எங்க, ஜேன்?” அவள் கீழே, தன் கைகளை நோக்கினாள்.
“அந்த ஸ்வீட் கடைல விட்டுட்டேன்”
“உனக்கு அது வேண்டாமா?”
“தெரியாம மறந்து விட்டுட்டேன்.” நான் அவளை திரும்பி ஓடிச் சென்று அதை எடுத்துவரச் சொல்வதற்குள் அவள் என்னுடன் இருப்பதை எவ்வளவு விரும்பினேன் என்பதையும் நாங்கள் கால்வாய்க்கு மிக அருகே வந்துவிட்டதையும் உணர்ந்தேன்.
இந்தப் பகுதிகளில் கால்வாயில் மட்டும் தான் நீர்ப்பரப்பை பார்க்க முடியும். நீரருகே நடப்பதென்பது பிரத்தியேகமான ஒன்று, அது தொழிற்சாலைகளின் பின்புறமாக ஓடும் துர்நாற்றமடிக்கும் கலங்கிய கபில நிற நீர் என்றாலும் கூட. கால்வாயை ஒட்டியிருக்கும் ஜன்னல்களற்ற  தொழிற்சாலைகள் பெரும்பாலும் புறக்கணிக்கபட்டவைதான். இழு-பாதையில் ஒருவரைக்கூட பார்க்காமலேயே ஒன்றரை மைல் வரையிலும் நடந்து செல்லலாம். அந்த பாதை ஒரு உலோக உடைசல் குவியலையொட்டிச் சென்றது. இரண்டு வருடத்திற்கு முன்னே, அதனருகே இருந்த தகர டப்பா குடிசையொன்றிலிருந்து அதிகம் பேசாத கிழவனொருவன் அதை கண்காணித்துக் கொண்டிருந்தான். பெரிய அல்சேஷன் நாயொன்றை குடிசைக்கு வெளியேயிருந்த கம்பத்தில் கட்டியிருந்தான். வயசாகிவிட்ட அந்த நாயால் குரைக்கக் கூட முடியாது.  குடிசை, கிழவன், நாய் எல்லாம் காணாமல் போய்விட்ட பிறகு கேட்டை ஒரு கொண்டிப்பூட்டு போட்டு அடைத்து விட்டார்கள். சுற்றியிருந்த வேலியை நாளடைவில்  அந்தப்பக்கத்துச் சிறுவர்கள் ஏறிச்சவட்டி நாசம் செய்துவிட்டதால் இப்போது கேட் மட்டும்தான் நின்று கொண்டிருக்கிறது. அந்த ஒன்றரை மைல் சுற்றளவில் காயலான் கூடம் மட்டும்தான் சிறிதளவேனும் ஆர்வமூட்டக் கூடியதாக இருந்தது. மற்றபடி அந்தப் பாதை தொழிற்சாலைகளின் சுவர்களை ஒட்டியே சென்றது. ஆனால் எனக்கு இந்த கால்வாயைப் பிடிக்கும், இந்த நகரத்தில் வேறெங்கேயும் விட இங்கு மட்டும்தான் அந்த அடைக்கப்பட்டிருக்கும் உணர்விலிருந்து சிறிது ஆசுவாசம் கிடைத்தது. ஒன்றும் கூறாமல் சிறிது நேரம் என்னுடன் நடந்துவிட்டு  ஜேன் என்னிடம்
“எங்க போற? நடந்துகிட்டே எங்க போற?” என்று மீண்டும் கேட்டாள்.
“கால்வாயோரமா நடக்கப் போறேன்.”
ஒரு நிமிடம் யோசித்துவிட்டு “கால்வாய் கிட்ட போறதுக்கு எனக்கு அனுமதியில்ல” என்று கூறினாள்.
“ஏன் போகக் கூடாது?”
“ஏன்னா.. அது அப்படித்தான்..” இப்போது சற்று முன்னே நடந்து கொண்டிருந்தாள். வாயைச் சுற்றியிருந்த வெள்ளை வளையம் உலர்ந்து விட்டிருந்தது. என் கால்கள் தளர்ந்தன. நடைபாதையிலிருந்து எழும்பிய வெப்பம் என்னை மூச்சுத் திணர வைத்தது. என்னுடன் கால்வாயருகே நடப்பத்ற்கு அவளை சம்மதிக்க வைப்பது இப்போது அவசியமான ஒன்றாக ஆகிவிட்டிருந்தது. அந்த சிந்தனை அருவெறுப்பை அளித்தது.  எஞ்சியிருந்த ஐஸ்க்ரீமைத் தூக்கியெறிந்து விட்டு
“கிட்டத்தட்ட தினமும் நான் இந்த கால்வாய் பக்கமா நடப்பேன்” என்று கூறினேன்.
“ஏன்?”
“இங்க ரொம்ப அமைதியா இருக்கு….. பாக்கறதுக்கு நிறைய விஷயம் இருக்கு.”
“என்ன விஷயம்”
“பட்டாம்பூச்சிங்க.” நான் அதைத் திரும்ப பெற்றுக்கொள்வதற்குள் அந்த வார்த்தை வெளியே வந்துவிட்டது. திடீரென்று ஆர்வமுற்றதைப் போல் அவள் என் பக்கம் திரும்பினாள். கால்வாயைச் சூழ்ந்திருந்த அந்த துர்நாற்றத்தை பட்டாம்பூச்சிகள் ஒருக்காலும் தாக்கு பிடித்திருக்க முடியாது. அது அவைகளை கரைத்திருக்கும். அதை அறிந்துகொள்ள அவளுக்கு அதிக நேரம் பிடிக்காது.
“என்ன கலர் பட்டாம்பூச்சி?”
“சிவப்பு… மஞ்சள்..”
“வேறென்ன இருக்கு?”
நான் சற்று தயங்கினேன்.  “காயலான் கூடம் ஒன்னு இருக்கு” . அவள் முகம் சுளித்ததால் நான் மேலும் தொடர்ந்தேன் “ கப்பல்கள் கூட இருக்கு, கால்வாய்ல போற கப்பல்கள்.”
“ நிஜக் கப்பல்களா?”
“ஆமாம், நிச்சயமா, நிஜக் கப்பல்கள்தான்.”  இது இப்படி நிகழவேண்டும் என்று முன்யோசனை ஏதும் நான் செய்திருக்கவில்லை. அவள் நடப்பதை நிறுத்தினாள். நானும் நின்று விட்டேன்.
“உன்கூட வந்தா, நீ யார் கிட்டயும் சொல்லமாட்டல?” என்று கேட்டாள்.
“மாட்டேன்.யார்கிட்டயும் சொல்லமாட்டேன், ஆனா கால்வாய்கிட்ட நடக்கறச்சே நீ என் கூடவே நடந்துவரனும், சரியா? “ தலையை ஆட்டினாள்.
“வாய்ல இருக்கற ஐஸ்க்ரீம துடச்சுக்கோ.” அவள் புறங்கையால் முகத்தை தோராயமாக துடைத்துக் கொண்டாள். “இங்க வா, நான் துடச்சு விடறேன்.” அவளை என்பக்கம் இழுத்து இடது கையால் அவள் புறங்கழுத்தைப் பற்றினேன். பெற்றோர்கள் செய்வதை பல முறைப் பார்த்திருந்ததால் அவர்களைப் போலவே வலதுகைச் சுட்டுவிரலை எச்சில்படுத்தி அவள் உதடுகளைச் சுற்றி துடைத்து விட்டேன். இதற்கு முன்னால் மற்றொருவரின் உதடுகளை நான் தொட்டதேயில்லை. இது போன்ற சுகத்தையும் நான் அதுவரையில் அனுபவித்ததுமில்லை. என்னுள்ளிலிருந்து முஷ்டியைக் கொண்டு விலாயெலும்பை அழுத்துவது போல், அது என் இடைக்கோணத்திலிருந்து எழும்பி என் மார்பில் உறைவிடம் கொண்டது .நான் அதே விரலை மீண்டும் எச்சில்படுத்தி அதன் நுனியிலிருந்த பிசுபிசுத்த இனிப்பை சுவைத்தேன். அதைக் கொண்டு மீண்டும் அவள் உடடுகளைச் சுற்றித் தடவினேன். ஆனால் இம்முறை அவள் பின்னே விலகிச் சென்றாள்.
“வலிக்குது. நீ ரொம்ப அழுத்தி அமுக்கிட்ட.”  நாங்கள் மேலும் நடந்தோம். அவள் இப்போது என்னையொட்டியே நடந்துவந்தாள்.
இழு-பாதைக்குச் செல்வதற்கு முன் முதலில் உயர்வான தடுப்புச்சுவர்கள் கொண்ட குறுகிய கருப்பு நிற பாலத்தில் நடந்து கால்வாயைக் கடக்க வேண்டும். அதில் பாதிதூரம் சென்ற பின் கால் நுனியில் படங்குத்தி நின்று சுவற்றிற்கு மேல் எட்டிப் பார்த்தாள்.
“என்ன தூக்கிவிடு. எனக்கு கப்பல்களப் பார்க்கனும்.”
“அத நீ இங்கேந்து பார்க்க முடியாது.” ஆனாலும் அவள் இடுப்பைச் பற்றி அவளை மேலே தூக்கிவிட்டேன். அவள் அணிந்திருந்த சிவப்பு நிறக் குட்டை அங்கி அவள் பின்புறத்தில் உயர்ந்தது. மார்புக்கூட்டில் அந்த முஷ்டியை மீண்டும் உணர்ந்தேன்.  அவள் தோள்பக்கமாகத் திரும்பி என்னிடம்
“தண்ணி ரொம்ப அழுக்கா இருக்கு” என்று கூறினாள்.
“அது எப்பவுமே அழுக்காத்தான் இருந்திருக்கு, இது கால்வாய் “ என்று பதிலளித்தேன். கற்படிகளில் இறங்கி இழு-பாதைக்குச் செல்கையில் ஜேன் என்னுடன் நெருங்கி நடந்தாள். அவள் மூச்சைப்பிடித்துக் கொண்டிருப்பது போல் எனக்கு பட்டது. எப்போதும் வடக்கு நோக்கி ஓடும் கால்வாய் இன்று அசைவற்று அமைதியாக இருந்தது. அதன் மேற்பரப்பில் மஞ்சள் நிறக் கழிவுநுரை திட்டுத்திட்டாகத் தெரிந்தது. முன்தள்ளிச் செல்லும் காற்றே இல்லாததால் அவை அசையாமல் கிடந்தன. எங்களுக்கு மேலே ஓடிய பாலத்தில் அவ்வப்போது ஏதோவொரு கார் கடந்து சென்றது. அதற்கும் பின்னால் லண்டன் போக்குவரத்தின் தொலைவிறைச்சல். அதைத் தவிர கால்வாய் சத்தமின்றி மிக அமைதியாகவே இருந்தது. வெப்பம் அதிகமாக இருந்ததால் கால்வாயின் முடைநாற்றத்தை இன்னமும் கூர்மையாக உணர முடிந்தது. இரசாயன வாடையை விட ஒரு விலங்கிலிருந்து வரும் வாடையைப் போல் கழிவுநுரையிலிருந்து அது எழும்பி வந்தது.
“பட்டாம்பூச்சி எங்க?” ஜேன் முணுமுணுத்தாள்.
“ரொம்ப தூரம் இல்ல.. இதோ அந்த ரெண்டு பாலத்துக்கு கீழ போகனும் முதல்ல.”
“எனக்கு திரும்பிப் போனும். திரும்பிப் போனும். “  படிக்கட்டிலிருந்து நூறடி தள்ளி வந்திருப்போம். அவளுக்கு மேலும் செல்வதற்கு விருப்பமில்லை. ஆனால் நான் அவளை முன்னே செல்லும்படி வற்புறுத்திக் கொண்டிருந்தேன். என்னை விட்டு படிக்கட்டுகள் வழியே தனியே திரும்பிச் செல்வதற்கு அவள் பயப்பட்டாள்.
“இதோ இன்னும் கொஞ்சம் தூரம்தான், பட்டாம்பூச்சிகள பார்க்கலாம். சிவப்பு, மஞ்சள், சிலசமயம் பச்சை கூட”. அவளிடம் இப்போது என்ன கூறுகிறேன் என்பதைப் பற்றிக் கவலைப்படாமல் அந்தப் பொய்யில் என்னை முழுமூச்சுடன் இணைத்துக் கொண்டேன். என் கையை அவள் பிடித்துக் கொண்டாள்.
“கப்பல்கள் என்னாச்சு”
“ இதோ இப்ப பார்த்துடலாம். கொஞ்சம் தள்ளி..” நாங்கள் மேலும் நடந்தோம். அவளை எப்படியாவது என்னுடனே வைத்திருப்பதற்கான யுத்திகளைத் தவிர என்னால் வேறெதையுமே சிந்திக்க முடியவில்லை. கால்வாயை ஒட்டிச் சென்ற அந்த பாதையில் சில குறிப்பிட்ட இடைவெளிகளில், தொழிற்சாலைகள், ரோடுகள் மற்றும் ரயில் பாதைகளுக்குக் கீழே சுரங்க வழிகளிருந்தன. அவற்றுள் முதல் சுரங்கமானது கால்வாயின் இருபுறமிருக்கும் தொழிற்சாலைகளை இணைக்கும் ஒரு மூன்றடுக்குக் கட்டிடத்தில் அமைக்கப் பட்டிருந்தது. அங்கிருந்த எல்லா தொழிற்சாலைகளைப் போல் அதுவும்  இப்போது காலியாக இருந்தது. அதன் முன்ஜன்னல்கள் அனைத்தும் உடைந்திருந்தன. இந்தச் சுரங்கத்தின் வாயிலில் ஜேன் பின்வாங்க முயற்சித்தாள்.
“அது என்ன சத்தம்? நம்ம அதுக்கு உள்ள போக வேண்டாம்.” சுரங்கத்தின் கூரையிலிருந்து கால்வாய்க்குள் தண்ணீர் சொட்டிக் கொண்டிருப்பதை அவளால் கேட்க முடிந்தது. அதன் எதிரொலி முழுதாகத் தொனிக்காமல் ஒரு திடமற்ற வகையில் விசித்திரமாக ஒலித்தது.
“ஓன்னுமில்ல, வெறும் தண்ணி தான். அதோ,அந்த பக்கம் கூட இங்கேந்து  தெரியுது பாரு,” என்று தைரியப்படுத்தினேன். சுரங்கத்திற்குள் பாதை மிகவும் குறுகிச் சென்றதால் அவளை என் முன்னே நடக்கவிட்டு அவள் தோள்பட்டையை பிடித்தபடி பின்தொடர்ந்தேன். அவள் நடுங்கிக் கொண்டிருந்தாள். சுரங்கத்தின் இறுதியில் சட்டென நின்று எதையோ சுட்டிக் காட்டினாள். வெயில் சுரங்கத்துள் மெலிதாக ஊடுருவும் இடத்தில் மலரொன்று செங்கல்களுக்கு இடையே பூத்திருந்தது. சிறு புற்கற்றையொன்றில் வளரும் டான்டெலியான் வகையைப் போலிருந்தது.
“இது கோல்ட்ஸ்ஃபுட்” என்று கூறிவிட்டு அதையெடுத்து காதுக்குப் பின்னே தலையில் சூட்டிக்கொண்டாள்.
“இதுக்கு முன்னாடி நான் இங்க பூக்கள பாத்ததே இல்ல.”
“பூக்கள் இருந்தே ஆகவேண்டும். இல்லனா பட்டாம்பூச்சிகள் எப்படி இருக்க முடியுமாம்… “ என்று விளக்கினாள்.
அடுத்த கால்மணி நேரத்திற்கு பேசாமல் நடந்து சென்றோம். ஜேன் மட்டும் ஒருமுறை பேசினாள், பட்டாம்பூச்சிகளைப் பற்றி என்னிடம் மீண்டும் கேட்பதற்காக. கால்வாயைப் பற்றிய அவளது பயம் குறைந்துவிட்டதைப் போலிருந்தது. இப்போது என் கையை விட்டுவிட்டாள். எனக்கு அவளைத் தொடவேண்டும் போலிருந்தது. ஆனால் அதை அவள் பயந்துவிடாதபடி எப்படி செய்வதென்று எனக்குப் புலப்படவில்லை. என்ன பேச்சுக் கொடுக்கலாம் என்று யோசிக்க முயன்றேன். ஆனால் என் சிந்தனை வெறுமையாக இருந்தது.  வலது பக்கம் பாதை அகலமாகத் தொடங்கியது. கால்வாயின் அடுத்த திருப்பத்தில், தொழிற்சாலைக்கும் பண்டகசாலைக்கும் இடையே இருந்த ஒரு அகண்ட பரப்பில்தான் காயலான் கூடம் இருந்தது.  எங்கள் முன் விரிந்த வானத்தில் கருப்பு புகை எழுந்தது. கால்வாய் வளைவில் திரும்பிய உடன் அது காயலான் கூடத்திலிருந்து எழும்புவதை எங்களால் பார்க்க முடிந்தது. சிறுவர்கள் தாங்கள் மூட்டிய தீயைச் சுற்றி கூட்டமாக நின்று கொண்டிருந்தார்கள். ஒட்ட வெட்டப்பட்ட தலைமயிருடன் அவர்கள் அனைவரும் ஒரே மாதிரியான நீல நிற மேல்சட்டைகளை அணிந்திருந்ததால் ஏதோ ஒரு “காங்க்” உறுப்பினர் போல் காட்சியளித்தார்கள். எனக்குத் தெரிந்த வரையில் அவர்கள் ஒரு பூனையை உயிருடன் வறுக்கத் தயாராகிக் கொண்டிருந்தார்கள். அசைவற்ற வெளியில் அவர்களுக்கு மேலே ஒரு புகைமண்டலம் மிதந்து கொண்டிருந்தது. அவர்களுக்குப் பின்னால் உலோகக் குவியல் ஒரு மலை போல் உயர்ந்தது. பூனையின் கழுத்தை முன்னர் அல்சேஷன் நாய் கட்டப்பட்டிருந்த அதே கம்பத்தில் கட்டியிருந்தார்கள். அதன் முன்னங்கால்களும் பின்னங்கால்களும் பிணைக்கபட்டிருந்தன. நெருப்புக்கு மேல் வேலிக்கம்பித் துண்டங்களைக் கொண்டு ஒரு கூண்டை தயார் செய்து கொண்டிருந்தார்கள். நாங்கள் அந்த இடத்தைக் கடக்கையில் அவர்களில் ஒருவன் பூனையின் கழுத்தில் சுறுக்கிடப்பட்ட கயிற்றை கொண்டு அதை நெருப்பிருக்கும் பக்கமாக  இழுத்தான். நான் ஜேனின் கையை பற்றிக்கொண்டு வேகமாக நடந்தேன். அவர்கள் ஒன்றுமே பேசாமல் மும்முரமாக வேலை செய்துகொண்டிருந்தார்கள். எங்களை நிமிர்ந்து பார்ப்பதற்குக்கூட அவர்களுக்கு நேரமில்லை. ஜேனின் கண்கள் கீழே தரையை நோக்கியிருந்தன. அவள் கையின் வழியே அவள் உடல் முழுதும் நடுக்கிக் கொண்டிருந்ததை என்னால் உணர முடிந்தது.
“அவங்க பூனைய என்ன செய்யறாங்க?”
“தெரியாது”. பின்னால் திரும்பிப் பார்த்தேன். இருண்ட புகைமூட்டத்தால் அவர்கள் செய்து கொண்டிருந்ததை பார்ப்பதற்கு கடினமாக இருந்தது.
உடைசல் குவியலைக் கடந்து செல்லும் பாதையில் மீண்டும் நடந்துகொண்டிருந்தோம் சுரங்கத்தை நோக்கி. நாங்கள் பாதையின் முடிவை எட்டும் போது என்ன நடக்கும் என்பதை என்னால் யூகிக்கக் கூட முடியவில்லை. அவள் வீட்டுக்கு ஓடிச் செல்ல விரும்புவாள். நான் அவளைப் போக விடமாட்டேன் என்பது மட்டும் எனக்குத் தெரிந்திருந்தது. இரண்டாவது சுரங்கத்தின் வாயிலில் ஜேன் நின்றுவிட்டாள்.
“பட்டாம்பூச்சில்லாம் இல்ல தானே?” அழும் தருவாயில் இருந்ததால் வாக்கியத்தின் இறுதியில் அவள் குரல் உயர்ந்தது.
பட்டாம்பூச்சிகளுக்கு இந்த வெப்பம் அதிகப்படியாக இருக்கலாம் என்று அவளிடம் கூற முயன்றேன். அனால் இப்போது அவள் நான் சொல்வதைக் கேட்கும் நிலையில் இல்லை; ஓலமிட்டு அழுதுகொண்டிருந்தாள்.
“நீ சொன்னது பொய்.  இங்க பட்டாம்பூச்சியே இல்ல. நீ பொய் சொல்லற.” அரைமனசோடு அழுவது போல் ஒரு துயரார்ந்த வகயில் அழத்தொடங்கி தன் கையை என் கையிலிருந்து விடுவிக்க முயன்றாள். காரணங்களை அவளுக்கு விளக்க முயன்றேன் ஆனால் எதையுமே காதில் வாங்கிக் கொள்ளவில்லை. என் பிடியை இறுக்கியபடி அவளைச் சுரங்கத்திற்குள் இழுத்தேன். அவள் கதறிக் கொண்டிருந்தாள்; சுரங்கத்தின் சுவற்றிலும் விட்டத்திலும் அவள் கதறல்கள் மோதி தொடர்ந்தொலிக்கும், காதைத் துளைக்கும் ஒரு கூர்சத்தமாக, எதிரொலித்து என் தலையை நிரப்பியது. தூக்கியும் பிடித்திழுத்தும் கிட்டத்தட்ட சுரங்கத்தின் பாதிதூரம் வரையில் அவளைக் கொண்டு வந்துவிட்டேன். அங்கே, எங்கள் தலைகளுக்கு மேலே இடியைப் போல் உறுமிச் சென்ற ரயிலின் சத்தத்தில் அவள் கதறல்கள் மூழ்கின. சுற்றுப்புறமும் தரையும் ஒன்றாக அதிர்ந்தன.  ரயில்வண்டி கடந்து செல்ல அதிக நேரம் பிடித்தது. அவள் கைகளை பக்கவாட்டாக பிடித்துக் கொண்டேன். ஆனால் சத்தம் அவளைத் திக்குமுக்காடச் செய்தததால் என்னுடன் போராடுவதை நிறுத்திக் கொண்டாள்..ரயில் சத்தத்தின் கடைசி எதிரொலிகள் மங்கி மறைகையில் அவள்
“எனக்கு எங்கம்மாக்கிட்ட போகனும்”  என்று சுரத்தின்றி கூறினாள். நான் என் காற்சட்டை “ஜிப்பை” அவிழ்த்தேன். இருளில் அவளை நோக்கி நீண்டிருப்பதை அவளால் பார்க்க முடிந்ததா  என்று என்னால் அறிந்து கொள்ள முடியவில்லை.
“அதைத் தொடு.” என்று கூறிவிட்டு அவளது தோள்களைப் பற்றி அவளை மெதுவாக உலுக்கினேன். அவள் அசையாமல இருந்தாள். அவளை மீண்டும் உலுக்கினேன்.
“என்னத் தொடு, ம்ம் சீக்கிரம்.. நான் சொல்றது உனக்கு புரியுது இல்ல?” உண்மையில் சாதாரண ஒன்றைத்தான் எதிர்பார்த்தேன். இம்முறை இருகரங்களாலும் பற்றி அவளை பலமாக உலுக்கி
“தொடு, தொடு” என்று கத்தினேன். கைகள் எட்ட முனைகையில் அவள் விரல்கள் என் குறியின் நுனியை ஒரு கணப்பொழுது உரசியது. ஆனால் அதுவே போதுமானதாக் இருந்தது. என் குடல் இறுகி நான் உச்சத்தை அடைந்தேன், குழித்த என் உள்ளங்கைகளில் விந்தை வெளியேற்றினேன். மேலே சென்ற ரயிலைப் போல் அதிக நேரம் பிடித்தது, கைகளில் எல்லாவற்றையும் வெளியேற்ற. அதுவரையிலும் நான் தனிமையில் கழித்திருந்த காலம் அனைத்தும் இறைந்து வெளியேறியது, எத்தனை மணி நேரம் தனியாக நடந்திருப்பேன், அவற்றுள் எத்தனை சிந்தனைகள், அவை அனைத்தும் என் கையில் வெளியேறின. எல்லாம் முடிந்த போதும் பல நிமிடங்கள் அதே நிலையிலேயே இருந்தேன், குனிந்தபடி, குழித்த என் கைகளை என் முன்னே வைத்துக் கொண்டு. என் மனது தெளிவாக இருந்தது, என் உடல் இளைப்பாறி விட்டிருந்தது. நான் எதைப் பற்றியும் சிந்திக்கவில்லை. தரையில் குப்புற படுத்தபடி கால்வாயை எட்டி கைகளை கழுவிக் கொண்டேன். குளிர்ந்த நீரில் அதைக் கழுவுவது கடினமாக இருந்தது. கழிவுநுரையைப் போல் அது என் விரல்களில் ஒட்டிக் கொண்டிருந்தது. சிறிது சிறிதாக அதை புறந்தள்ளினேன். பிறகு தான் அந்தப் பெண்ணை நினைவு கூர்ந்தேன், அவள் என்னுடன் இல்லை என்பதை உணர்ந்தேன். இதற்கு பிறகு நிச்சயமாக அவளை அப்படியே வீட்டிற்கு ஓடிச் செல்ல என்னால் அனுமதிக்க முடியாது.  அவளைப் பிடிக்க நானும் அவள் பின்னே செல்ல வேண்டும்.  நின்றபடியே சுரங்கத்தின் முடிவில் தெரிந்த அவளது நிழலுருவத்தை பார்த்திருந்தேன்.
கால்வாயின் விளிம்பையொட்டி ஒரு வித பிரமிப்புடன் அவள் மெதுவாக் நடந்து சென்று கொண்டிருந்தாள். என் முன்னே நீண்ட தரையை சரியாக பார்க்க முடியாததால் என்னால் வேகமாக ஓட முடியவில்லை. சுரங்கத்தின் இறுதியில் ஒளிர்ந்த வெளிச்சத்தை நெருங்க நெருங்க பார்ப்பதற்கு மேலும் கடினமாகியது. என் காலடிகள் பின்னே ஒலிப்பதை கேட்டவுடன்  திரும்பிப் பார்த்து  அவள் ஊளையிட்டாள். ஓடவும் தொடங்கினாள். ஆனால் உடனேயே கால் இடறிக் கீழே விழுந்தாள். நான் இருந்த இடத்திலிருந்து  அவளுக்கு என்ன ஆயிற்று என்பதை என்னால் சரியாக பார்க்க முடியவில்லை, வானத்தை எதிர்த்திருந்த அவள் நிழலுருவம் திடீரென்று இருட்டில் மறைந்தது. நான் அவளிருந்த இடத்தை எட்டிய போது முகம் தரையில் அழுந்தியிருக்க, குப்புறக் கிடந்தாள். அவள் இடது கால் பாதையிருந்து தொங்கி தண்ணீரை தொட்டுக்கொண்டிருப்பது போல் கிடந்தது. கீழே விழுகையில் தலையில் பலமான அடிபட்டிருந்தது, வலது கண் வீங்கியிருந்தது. வலது கரம் கிட்டத்தட்ட சூரிய ஒளியை எட்டி அள்ள முனைவது போல் அவள் முன்னே நீண்டிருந்தது. அவள் முகம் வரையிலும் குனிந்து அவள் மூச்சொலியை கூர்ந்து கேட்டேன். அது கனமாகவும் சீராகவும் ஒலித்துக் கொண்டிருந்தது.  அவள் கண்கள் இறுக மூடியிருந்தன. அழுகையினால் இமைகள் நனைந்திருந்தன. அவளைத் தொடுவதற்கான இச்சை முற்றிலும் மறைந்திருந்தது , அனைத்தும் என்னிலிருந்து வெளியேற்றப்பட்டு கால்வாய்க்குள் சென்றுவிட்டது. அவள் முகத்திலும், சிகப்பு அங்கியின் பின்பக்கத்திலும் இருந்த அழுக்கை சிறிது துடைத்து விட்டேன்.
“கிறுக்குப் பெண்ணே, பட்டாம்பூச்சிகள் கிடையாது” என்று கூறினேன். அவளைத் மென்மையாக தூக்கினேன், அவளை எழுப்பக் கூடாது என்பதற்காக என்னால் முடிந்த வரையிலும் மென்மையாக தூக்கினேன். பின்னர் அவளைச் சத்தமின்றி மெதுவாக கால்வாய்க்குள் நழுவ விட்டேன்.
நான் பொதுவாகவே நூலகப் படிக்கட்டில்தான் உட்கார்ந்திருப்பேன். உள்ளே சென்று புத்தகங்களைப் படிப்பதை விட இப்படி உடகார்ந்திருப்பதைத்தான் அதிகம் விரும்பினேன். கற்றுக் கொள்ள வெளியேதான் அதிக விஷயங்களிருக்கின்றன. ஞாயிறு மாலை, இதோ அங்குதான் உட்கார்ந்திருக்கிறேன், என் நாடித்துடிப்பு மெதுவாகக் குறைந்து அந்த இடத்தின் தினசரி தாள லயத்துடன் இசைகிறது. மீண்டும் மீண்டும் நடந்ததனைத்தையும் மனத்திரையில் ஓட்டிப் பார்த்து நான் என்ன செய்திருக்க வேண்டும் என்பதை சிந்தித்துப் பார்க்கிறேன். அந்த கல் சாலையில் உருண்டு வருவதைப் பார்த்தேன், கிட்டத்த்ட்ட திரும்பிப் பார்க்காமலே அதை என் கால்களால் நாசூக்காக தடுத்து இடுக்கியதையும் பார்த்தேன். அப்போதுதான் நான் திரும்பியிருக்க வேண்டும், மெதுவாக, அவர்களின் கைத்தட்டல்களை ஒரு அசட்டுச் சிரிப்பால் ஆமோதித்தபடியே. அதன் பிறகு அந்தக் கல்லை அவர்களிடமே திருப்பி உதைத்திருக்க வேண்டும். அதற்கும் மேலாக, அந்த கல்லைத் தாண்டிவிட்டு அவர்களிடம் இறுக்கமின்றி சாதாரணமாகச் சென்றிருக்க வேண்டும்… அதன் பிற்கு….. பந்து திரும்ப வரும் போது, நான் அவர்களுடன் இருந்திருப்பேன், அவர்களுள் ஒருவனாக, அணியின் உறுப்பினனாக. அங்கே, வீதியின் வெளியில், அனேகமாக எல்லா மாலைகளிலும் அவர்களுடன் விளையாடிக் கொண்டிருப்பேன். அவர்கள் பெயர்களையெல்லாம் அறிந்து கொள்வேன். அவர்களுக்கும் என் பெயர் தெரிந்திருக்கும். ஊருக்குள்ளே ஒவ்வொரு நாளும் அவர்களை நான் பார்ப்பேன். வீதியின் எதிர்பக்கத்திலிருந்து அவர்கள் என்னை விளிப்பார்கள். தெருவைக் கடந்து வந்து என்னுடன் உரையாடுவார்கள். ஆட்டம் முடிந்தபின் என்னருகே வந்து என் கரத்தை ஒருவன் பற்றுவான்…
“சரி, அப்போ நாளைக்குப் பார்க்கலாம்… “ என்று கூறுவான்.
“சரி, நாளைக்கு…” என்று நானும் பதிலளிப்பேன். அவர்கள் வயதுக்கு வந்த பிறகு, நாங்கள் குடிப்பதற்காகச் சேர்ந்து செல்வோம். பீரை ருசித்துக் குடிப்பதற்கு நான் பழகிக் கொள்வேன். நான் எழுந்து நின்று வந்த வழியே திரும்பிச் செல்ல மெதுவாக நடக்கத் தொடங்கினேன். பட்டாம்பூச்சிகளைப் போல் சந்தர்ப்பங்களும் அரிதானவை. கையை நீட்டுவதற்குள் அவை மறைந்துவிடுகின்றன. அவர்கள் விளையாடிக் கொண்டிருந்த தெரு வழியாகவே திரும்பிச் சென்றேன். இப்போது காலியாக வெறிச்சோடியிருந்தது. நான் முன்பு காலால் தடுத்து நிறுத்திய கல் இன்னமும் நடுத் தெருவில்தான் கிடந்தது. அதை எடுத்து என் பாக்கெட்டில் போட்டுக் கொண்டேன். அதன் பிறகு நடக்கத்தொடங்கினேன் என் சந்திப்பு நியமனத்தை நேரத்தில் பூர்த்தி  செய்வதற்காக.
மொழியாக்கம்: நம்பி கிருஷ்ணன்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.