கன்று மேய்க்க ஒரு கோல் கொண்டுவா!

krishna- Cowherd
பெரியாழ்வாரின் கிருஷ்ணன் எனும் குட்டன் ஒரு இடையன்; ஆயர்குலச் சிறுவன். தயிர், வெண்ணெய், பால் திருடி உண்ட குழந்தையான அவன் வளர்ந்து மாடுமேய்க்கச் செல்லும் விதத்தில் பெரியவனானதும், அண்ணன் பலராமன் மற்றும் ஆய்ப்பாடிச் சிறுவர்களுடன் பொறுப்பாக மாடுமேய்க்கச் செல்கிறான். அதற்கான உபகரணங்களுடன் அவன் பசுக்கூட்டங்களின்பின் செல்லும் அழகை ஆசைதீர வருணிக்கிறார் ஆழ்வார்.
பசுக்களைப் பசும்புல் உள்ள இடங்களில் விட்டுவிட்டால் போதும். அவை தானே மேயும்; அவை எங்காவது சென்றுவிடாமல் மட்டும் பார்த்துக்கொள்ள வேண்டும். மாடுகள் மேயும்போது ஆயர்கள்/ இடையர்கள் குழலூதியும், மற்ற விளையாட்டுகள் விளையாடியும் அந்தப் பொழுதுகளைக்கழிப்பார்கள். இதற்காக முன்னேற்பாடு செய்துகொள்கிறான் கிருஷ்ணன். ஆநிரைகள் அடைத்துவைத்துள்ள தொழுவத்தின் வேலிப்படலிலிருந்து ஒரு மூங்கில்கோலை வெட்டிஎடுக்கிறான்; அதனைச்சீவி வளைத்து வாகான ஒருவில்லாக ஆக்கிக்கொள்கிறான். நாண் ஏற்றி வைத்துக்கொள்கிறான். விளையாடமட்டுமின்றி பசுக்கூட்டங்களைக் காட்டில் அலையும் கொடியமிருகங்களிடமிருந்து காக்கவும் இது உதவுமே! ஆமைத்தாலியினை அணிந்துகொண்டுள்ளானாம். அக்காலத்து ஆயர்குல வழக்கப்படி அன்னை யசோதை இது தன் சிறுமகனுக்குக் காப்பு எனக்கழுத்தில் அணிவித்துள்ளாள் போலும்! கிருஷ்ணனுக்கு மயில்பீலி என்றால் கொள்ளைவிருப்பம். மாடுகள் மேய்ந்து கொண்டிருக்கும்போது காட்டில் உதிர்ந்து கிடக்கும் மயில்பீலிகளைச் சேர்த்துக்கட்டி ஒரு அலங்காரமாக முதுகில் தொங்கவிட்டுக் கொண்டிருக்கிறான் இந்தக்குட்டன். இவ்வாறெல்லாம் சொகுசாக அலங்காரம் செய்துகொண்டு ஆயர்குலச் சிறுவர்களுடன் அவன் பசுக்கூட்டங்களை ஓட்டிச்செல்லும் அழகினைக் காணக் கோடிக்கண்கள் வேண்டும்! அத்தனையும் அழகாகப்பொருந்திய இவனுக்கு மாடுமேய்க்க- அவை இங்கே அங்கே கூட்டத்திலிருந்து கலைந்துபோனால், ஓடிச்சென்று, கோலால் தட்டி அவற்றைக் கூட்டத்தோடு சேர்க்க- ஒரு அழகான கோல் வேண்டுமே, அதுதான் இல்லைபோலும்! ‘காக்கையே! இவனுக்கு, இந்தக் கடல்நிறக்கண்ணனுக்கு ஒருகோல் கொண்டுவா!’ என வேண்டுகிறார் பெரியாழ்வார்.

வேலிக்கோல் வெட்டி விளையாடு வில்ஏற்றி
தாலிக் கொழுந்தைத் தடங்கழுத்திற் பூண்டு
பீலித் தழையைப் பிணைத்துப் பிறகிட்டு
காலிப்பின் போவாற்கு ஓர்கோல் கொண்டுவா,
கடல்நிற வண்ணற்கு ஓர்கோல் கொண்டுவா.
(பெரியாழ்வார் திருமொழி- இரண்டாம் பத்து- 6)

இந்தப் பத்தில் ஒரேயொருபாடல் மட்டுமே, கிருஷ்ணன் எனும் ஆயனின் அணிகளை, அவன் மாடுமேய்க்கச் செல்லும் பாங்கினை விவரிக்கின்றது. ‘சின்னஞ்சிறுவன்- எல்லாவற்றையும் பொறுப்பாக எடுத்துக்கொண்டான். கோல் ஒன்றினைமட்டும் மறந்துவிட்டனோ? அதனால் இவனுக்காக ஒரு நல்ல கோலினை நீயே கொண்டுவா,’ எனக் காக்கையை ஏவுகிறார்.
இந்தக்குழந்தை எல்லா திவ்யதேசங்களிலும் -கொங்குநாடு, திருக்குடந்தை, திருக்கோட்டியூர், திருப்பேரை என எல்லா இடங்களிலும் திரிந்துவிளையாடிக் களிப்பதை- கண்குளிரக் காண்கிறார். அவனுடைய சங்கம் ஏந்தும் கைக்கென அழகாகச் செய்யப்பட்ட, அரக்கு பூசப்பட்ட, ஒரு சிவந்தகோலினைக் கொண்டுவா என்கிறார்.
கண்ணன் மாடுமேய்க்கும் அழகுதான் என்னே! இளங்கன்றுகளுக்கு முன்சென்று அவற்றினை ஒழுங்கு செய்தபடி அவன் ஓடுகின்ற வேகத்தினால் இரண்டுபக்கமும் கூந்தல் அலைபாய்கின்றதாம். மெய்மறந்து கண்டு ரசிக்கும் தாய், ‘இவனுக்கு நல்லதொரு கோல் கொண்டுவா,’ என வேண்டுவதாகக் காக்கையைப் பணிக்கிறார்.

நெறித்த குழல்களை நீங்க முன்ஓடிச்
சிறுக்கன்று மேய்ப்பார்க்கு ஓர்கோல் கொண்டுவா,
தேவபிரா னுக்கு ஓர்கோல் கொண்டுவா.
(பெரியாழ்வார் திருமொழி- இரண்டாம் பத்து- 6)

இவன் அடியார்களைக் கைவிடாத ஒருமனத்தன்; ஒருசொல் கூறி அடைக்கலம் தருபவன்; காக்காய்! இவனுக்கு மாடுமேய்க்க ஓர்கோல் கொண்டுவருவாயாக!
அந்தக் காக்கையாவது, கோல்கொண்டு வருவதாவது! சிறிது சினத்துடன் யசோதையின் கூற்றாக வரும் சொற்கள்: ‘ஏ காக்கையே! உனக்குப் பழையகதை மறந்து விட்டதோ? சித்திரகூட மலையில் சீதாதேவியின் திருமேனியின் அழகில் பதிந்த உனதிரு கண்களில் ஒன்றினை இராமன் (இராமாவதாரத்தில்) பறித்தான். கற்றைக்குழல் கொண்ட இவன், உடனே கடிந்து தண்டிப்பவன்; ஆகவே நீ விரைந்து கோல் கொண்டுவா! அல்லது உனது மற்றொரு கண்ணையும் பறித்துவிடுவான்,’ என்கிறாளாம்!

பொன்திகழ் சித்திரகூடப் பொருப்பினில்
உற்ற வடிவில் ஒருகண்ணும் கொண்டஅக்
கற்றைக் குழலன் கடியன் விரைந்து உன்னை
மற்றைக் கண்கொள் ளாமேகோல் கொண்டுவா,
மணிவண்ண நம்பிக்கு ஓர்கோல் கொண்டுவா.
(பெரியாழ்வார் திருமொழி- இரண்டாம் பத்து- 6)

இவ்வாறு அவனுடைய பெருமைகளையெல்லாம் பக்தன் என்ற நிலையிலும் தாய் எனும் பாசத்திலும் நெகிழ்ந்துருகி, ஆறா அடியவர் (பெரியாழ்வார்) ஆராவமுதனைப் பாடிய தீஞ்சுவைப் பாசுரங்கள் இவை!
****************
காக்கை கோல்கொண்டுவருவது இருக்கட்டும். ஆயன்கைக்கு அது என்ன பெரியகோலைக் கொண்டுவந்துவிடப் போகின்றதாம்? நம் அழகனின் கையில் விதம்விதமான கோல்கள்- செங்கோல் முதற்கொண்டு பலவிதமான கோல்கள் உள்ளனவே என ஒரு புலவரின் கற்பனை எழுகிறது; அழகான கவிதை ஒன்று விரிகிறது; படிப்போர் உள்ளம் பரவசத்தில் புள்ளெனச் சிறகடிக்கின்றது.
கடலாகிய ஆடையை உடுத்த உலகினைக் காவல்பூண்டு அரசிளங்கோமகன் இராமனாகிக் கையிலெடுத்த செங்கோல் ஒன்று!
இலங்கை மாநகரில் சூரியன் இராவணனுக்கு அஞ்சி வாழ்ந்தானாம்; அழகர் இராமாவதாரம் எடுத்தபோழ்தில், இராவணனை வதம்செய்து, சூரியனை அச்சமின்றி இயங்கச் செய்தார். ஆகவே அவனுடைய ஏழுபரிதிகள் (குரகதம்) பூட்டிய தேரை அஞ்சாது செலுத்தும்வகையில் அவன், குதிரைகளைத் தூண்டும் ஒரு முட்கோல் இரண்டாவது கோலாயிற்று.
ஐராவதம் எனும் யானையைச் செலுத்துபவனாகிய தேவேந்திரனை அவன் அடைபட்டிருந்த சிறையினின்று விடுதலை செய்வதற்காக அச்சிறையின் கபாடங்களை (கதவுகளை) திறக்கும் திறவுகோல் மூன்றாவது கோல்! இந்திரனைச் சிறைவீடு செய்தவர் அழகர்.
தேனொழுகும் (நறவொழுகு) செந்தாமரையில் வீற்றிருப்பவள் கமலமகளான திருமகள். அவள் தனது கண்களுக்குத் தீட்டி அழகு செய்துகொள்ளும் அஞ்சனத்தைத் தீட்டும் அஞ்சனக்கோல் அழகரின் நான்காம்கோல்.
பிலம் எனும் பாதாளத்தில் வீழ்ந்து வழக்கொழிந்துபோன வேதங்களை, நான்மறைகளைத் திரும்ப நடமாடவிடுத்த ஊன்றுகோல் இன்னொருகோல். மறைந்துகிடந்த நான்மறைகள் அழகர் அருளால் விளக்கம் பெற்றன என்பது உட்கருத்து. இது ஐந்தாம்கோல்.
கள்வனான இராவணன் சீதையைத் திருடிச்சென்றான். அவனுடைய பத்து தலைகளையும் தாக்கி வீழ்த்திய தண்டிக்கும்கோல் ஒப்பற்ற – நிகரற்ற, வலிமைபொருந்திய -ஆறாவதுகோல்.
இவ்வாறு பலவிதமான கோல்களைக் கைக்கொண்டு பூஞ்சோலைகள் நிரம்பிய இடபகிரியெனும் அழகர்மலையில் இருப்பவனே! செங்கீரையாடியருளுக! தேவருக்கும், தாமரைமலரில் வீற்றிருக்கும் இலக்குமிக்கும் நாயகனே! செங்கீரையாடியருளுக! எனப்பாடல் அமைகின்றது.

குரைக்குந் திரைத்தரைப் புரவுபூண் டரசிளங்
கோமக னெடுத்த செங்கோல்
கோநக ரிலங்கையிற் பரிதிதேர் பூண்டவேழ்
குரகதந் தூண்டுமுட்கோல்
கரைக்குங் கடாக்களிற் றமரேச னேகநாட
கடுஞ்சிறை கிடந்தகூடக்
கபாடந் திறக்கின்ற திறவுகோ னறவொழுகு
கமலமகள் விழியினுளவாய்
உரைக்குங் குழம்புபடு மஞ்சனக் கோல்பிலத்
துள்வீழ் நான்மறைக்கும்
ஊன்றுகோ லாகமுடி பத்துடைய கள்வன்மே
லொருகோ லெடுத்துமுகிலைத்
திரைக்குந் துணர்ச்சோலை யிடபகிரி நின்றமுகில்
செங்கீரை யாடியருளே
தேவர்க்கு மலர்வருந் தேவிக்கு நாயகன்
செங்கீரை யாடியருளே.
(அழகர் பிள்ளைத்தமிழ்- செங்கீரைப்பருவம்:- கவி காளருத்திரர் இயற்றியது)

இப்பாடலில் ‘கோல்’ எனும் சொல்லைப் பலபொருட்களில் எடுத்தாண்டு வியக்கத்தக்க முறையில் பலவித நயங்களையும் தொன்மங்களையும் இணைத்துப் பாடியுள்ளது ரசிக்கத்தக்கது. பிள்ளைத்தமிழ் நூல்களின் இனிமைக்கு இத்தகைய யாப்புகளும் ஒரு காரணமாகும்.
*******
கிருஷ்ணனின் பாலலீலைகளைப்பற்றிப் பாடிய பில்வமங்களர் எனும் மகான், இடைச்சிறுவனான கிருஷ்ணனைப் பற்றிய இன்னொரு அழகிய காட்சியைக் கண்முன் நிறுத்துகிறார்:
சூரியன் அஸ்தமிக்கும் பொன்மாலைப்பொழுது. இடையர்கள் எல்லாரும் மேய்ச்சலிலிருந்து திரும்புகின்றனர். மாடுகள் எல்லாம் வயிறு நிரம்பிய ஆனந்தத்தில் மடிகனத்து நிற்க, கன்றுகள் தாய்ப்பசுக்களின் மடியை அருந்தும் ஆசையில் துள்ள, அவர்கள் தம் வீடுகளை அடைகின்றனர். அவரவர்கள் வீட்டுத் தொழுவங்களில் மாடுகன்றுகளைக் கட்டுகின்றனர். தன்னைத் தொடர்ந்துவரும் நூற்றுக் கணக்கான இடைச்சிறுவர்களுக்கெல்லாம் (கோபால-பாலக-சதை) தலைவன் நமது கிருஷ்ணசந்திரன். அவனும் வீடுவீடாகப்போய் பசுக்களைக்கட்ட உதவுகிறான் (பசுபந்தனார்த்தம்). பின் என்ன? அவற்றின் பாலையும் அதனைத் தோய்த்த தயிரையும், அதிலிருந்து கடைந்தெடுத்த வெண்ணெயையும் வீடுவீடாகப்புகுந்து தின்றவனாயிற்றே! தானும் இந்தச் சிறு உதவிகளைச் செய்யலாமே எனச் செய்கிறான் குழந்தை! ஏழெட்டு வயது இளம்பிள்ளை! பசுக்கூட்டங்களினிடையே கன்றுகளுடன் விளையாடியபடி நடந்துவந்ததனால் அவற்றின் குளம்படிகள் எழுப்பிய அத்தனை புழுதியும் (கோதூலி)இவன்மேல் அப்பிக்கிடக்கின்றது. ஏற்கெனவே கருமைநிறம் கொண்ட கடல்வண்ணன். இப்போது புழுதியும் அப்பிப் பார்க்க எப்படி இருந்தானாம்? அழுக்காகவா? இல்லவே இல்லை! அதுவும் ஒரு அழகாக, அவனுக்கே அமைந்த சிறப்பாகப் பொலிகிறானம் இந்தக்குட்டன்!- இது அவன் பூண்டுள்ள மாடுமேய்க்கும் அலங்காரம்- கோபவேஷம்!

கோதூலி- தூஸரித- கோமல- கோபவேஷம்
கோபால-பாலகசதை-ரனுகம்யமானம்
ஸாயந்தனே ப்ரதிக்ருஹம் பசுபந்தனார்த்தம்
கச்சந்த- மச்யுதசிசும் ப்ரணதோஸ்மி நித்யம்
(ஸ்ரீ கிருஷ்ண லீலா தரங்கிணி-2.44)

அட! இந்த இளம்பிள்ளை மாட்டையெல்லாம் தொழுவில்கட்டி, இவ்வளவு பொறுப்பாக இருக்கிறானே எனவெல்லாம் எண்ணிக் கொண்டுவிட வேண்டாம்! இவன், இந்தக் கள்ளக்கிருஷ்ணன் தனது விளையாட்டுகளை இன்னும் விட்டொழித்தபாடில்லை எனத்தான் தென்படுகின்றது!
ஒரு இடைப்பெண்ணின் வீட்டில் நுழைந்து தனது வெண்ணெய்த்திருட்டினை நடத்திக் கொண்டிருக்கிறான் கிருஷ்ணன். அவளிடம் கையும் களவுமாகப் பிடிபட்டும் விட்டான். அவளிடம் குட்டனின் உரையாடலைக் கேட்போமா?
பெண்: குழந்தாய்! நீ யாரப்பா?
கிருஷ்ணன்: நான் பலராமனுடைய தம்பி.
பெண்: உனக்கு என்ன வேண்டும்? எதற்கு இங்கே வந்தாய்?
கிருஷ்ணன்: என்னுடைய வீடு என்று நினைத்துக்கொண்டு வந்துவிட்டேன்.
பெண்: அப்படியானால் வெண்ணெய் வைத்திருக்கும் பாத்திரத்திற்குள் எதற்காகக்
கையை விட்டாயாம்?
கிருஷ்ணன்: தாயே! எனது ஒரு கன்றுக்குட்டியைத் தேடுவதற்காகக் கையை
வைத்தேன். உடனே கோபித்துக் கொள்ளாதீர்கள்!

கஸ்த்வம் பாலா பலானுஜ: கிமிஹ தே
மன்மந்திராசங்கயா
யுக்தம் தந்நவநீத- பாத்ரவிவரே
ஹஸ்தம் கிமர்த்தம் ந்யஸே:
மாத: கஞ்சன வத்ஸகம் ம்ருகயிதும்
மாகா விஷாதம் க்ஷணா-
தித்யேவம் வரவல்லவீ-ப்ரதிவச:
க்ருஷ்ணஸ்ய புஷ்ணாது ந:
(ஸ்ரீ கிருஷ்ண லீலா தரங்கிணி-2.81)

சாமர்த்தியத்துக்கும் குறும்புக்கும் பெயர்போன இந்த இடைச்சிறுவன்மீது யாரால் கோபம்கொள்ளமுடியும்? அவனுடன் வாக்குவாதம்தான் செய்யமுடியுமா? எல்லாவற்றிற்கும் மறுமொழியைத் தயாராக வைத்திருக்கிறானல்லவோ இவன்.
‘தேடப்பா தேடு! உன்னால் எதையும் எங்கும் ஒளித்து வைத்து எடுத்துக்கொள்ள முடியும்,’ என்று நம்மையே அவனுடைய குறும்பில் இழந்து நிற்பதைத்தவிர வேறென்ன செய்யவியலும்?
கோல்கொண்டுவா என்றெல்லாம் காக்கையைக் கூவி அழைத்தவள், இப்போது தன் கண்மணி மாடு மேய்க்கச் செல்ல வேண்டாமே என எண்ணுகிறாள். தாய்மார்களுக்கே உரித்தான தந்திரமான சொற்களைக்கூறி அவனை அழைக்கிறாள். அவனுக்கு அழகழகான வாசனைமிகுந்த பூக்களைச் சூட்டுகிறேன் என்று ஆசைகாட்டுகிறாள்.
“என் கண்ணே! நீ தேனைவிட இனியவன்! உன்னிடம் பொறாமை கொண்டவர்கள் நீ காய்ச்சாத பச்சைப்பாலைக் குடிப்பதனைப் பார்த்து, ஏளனமாகச் சிரிக்கின்றனர். நீயோ கிடைத்தற்கரிய அமுதம் போன்றவன். அதை அவர்கள் அறியவில்லை. ஏன், நீயே அறியவில்லையடா கண்மணியே! உன் கரிய திருமேனி வெயிலில் வாடிவருந்த, நீ மாடுமேய்க்கச் செல்கிறாய். எதற்கு உனக்கு இந்த வேலை? பேசாமல், பசுக்கூட்டங்களின்பின் செல்லாமல் நீ இங்கேயே இருந்துவிடடா கண்ணே! நீ என் சொல்லைக்கேட்டு இங்கேயே இருந்தால் நான் உனக்கு என்னவெல்லாம் அலங்காரம் செய்வேன் தெரியுமா? வாசம் மிகுந்த செண்பகப்பூவை உனது அழகான கொண்டையில் சூட்டுவேன்பார்!” என்கிறாள்.

ஆநிரை மேய்க்க நீபோதி,
அருமருந்து ஆவது அறியாய்
கானகம் எல்லாம் திரிந்துஉன்
கரிய திருமேனி வாட;
பானையிற் பாலைப் பருகிப்
பற்றாதார் எல்லாம் சிரிப்ப
தேனில் இனிய பிரானே!
செண்பகப் பூச்சூட்ட வாராய்.
(பெரியாழ்வார் திருமொழி- இரண்டாம் பத்து- 7)

மலர்களில் மிக உயர்ந்தவை என மனிதர்கள் கொண்டாடும் சிலவகை மலர்களைக் குழந்தைக்குச் சூட்டி அழகுபார்க்க எண்ணுகிறாள் அன்னை. அவன் தன்னுடைய அழைப்புக்கும் ஆசைகாட்டுவதற்கும் மயங்கிவருவான் என எதிர்பார்ப்பது எதனால்? குழந்தை வளரும்பொழுதில், “இப்பொருள் உயர்ந்தது; இது அழகுமிக்கது; இது உனக்கு நல்லது,” என்பதெல்லாம் தாய் கூறித்தான் குழந்தை அறிந்துகொள்கின்றது. இல்லாவிடில், தெருவோரச் செடியில் பூத்துக்குலுங்கும் வண்ணமயமான அந்திமந்தாரையும், அரிதாகக் கிட்டும் செண்பகமலரும் அவனுக்கு ஒன்றுதான். தாய் கூறித்தான் இம்மலர்கள் உயர்ந்தவை, மணமிக்கவை, மிக அரியவை, விலைமதிப்பற்றவை என அறிந்துகொள்கிறான். அவளும் இவற்றையெல்லாம் கூறி அவனை ஆசையாக அழைத்துத் தன் உள்ளப்படி அவன் நடந்துகொள்ளுமாறு செய்கிறாள்!
‘மேகங்கள் போலக் கருத்தநிறம் கொண்டு, அவற்றின் குளிர்ந்த தன்மையையும் உடையவன் நீயல்லவோ குழந்தாய்! ஏழுலகும் உய்ய எங்கள் ஆய்ப்பாடியில் வந்து பிறந்தாய். உனக்கு மணம்மிக்க மல்லிகைப்பூவைச் சூட்டுவேன், வருவாயாக,” என அன்போடு விளிக்கிறாள்.

‘மருவி மணம்கமழ் கின்ற
மல்லிகைப் பூச்சூட்ட வாராய்!’ என்றும்
‘பச்சைத் தமனகத் தோடு
பாதிரிப் பூச்சூட்ட வாராய்!’ என்றும் வேண்டுகிறாள் யசோதை அன்னை.
(பெரியாழ்வார் திருமொழி- இரண்டாம் பத்து- 7)

இவன் தெருவில் நின்றுகொண்டு இளம் இடைச்சியர்களின் உடைகளில் புழுதிவாரி இறைத்தும், அவர்களின் நீர்க்குடங்களைக் கல்லெறிந்து உடைத்தும், வெண்ணெய்ப் பாத்திரங்களைத் தட்டிப் பறித்தும் வம்புசெய்து கொண்டிருக்கிறான். விரைவில் அவர்கள் யசோதையிடம் வந்து முறையிடுவார்கள் என அவளுக்குத் தெரியும். “அழகான எனது கண்ணா! இந்த வேலையையெல்லாம் விட்டுவிட்டு வா அப்பனே! பாதிரிப்பூவைச் சூட்டுகிறேன்,” எனக்கூறுகின்றாள்.
தெள்ளிய நீரில் மலர்ந்தெழுந்த செங்கழுநீர்ப்பூ, பொன்னிற மகரந்தம் உடைய புன்னைப்பூ எல்லாவற்றையும் சூட்டுகிறேன் என இந்த மலர்களை எல்லாம் அவனுக்காகவே சேகரித்து வைத்துக்கொண்டு அழைக்கிறாள். ‘எண்பகர் பூ’ எனப்படும் செண்பகம், மல்லிகை, பாதிரி, செங்கழுநீர், புன்னை, குருக்கத்தி, இருவாட்சி, கருமுகை எனும் உயர்ந்த எட்டுவிதமான மலர்களை அவனுக்குச் சூட்டி மகிழ விரும்பும் அன்னையின் கூற்றாகப் பெரியாழ்வார் பாடிவைத்த அழகிய பாசுரங்கள் இவை.

செண்பக மல்லிகை யோடு
செங்கழுநீர் இருவாட்சி
எண்பகர் பூவும் கொணர்ந்தேன்
இன்றுஇவை சூட்டவா என்று
மண்பகர் கொண்டானை ஆய்ச்சி
மகிழ்ந்து உரைசெய்த இம்மாலை
பண்பகர் வில்லி புத்தூர்க்கோன்
பட்டர் பிரான்சொன்ன பத்தே.
(பெரியாழ்வார் திருமொழி- இரண்டாம் பத்து- 7)

இதில் அன்னை- குழந்தை உளவியலாக நாம் உய்த்துணர வேண்டிய கருத்துக்கள் பல தொக்கி நிற்கின்றன. வளர்ந்துவரும் சிறுவர்களிடம் தின்பண்டங்கள், அழகிய மலர்கள், விளையாட்டுப் பொருட்கள் ஆகிய சிறிய பொருட்களைக் காட்டி, கொடுத்து அன்னையும் பிறரும் தமக்கு வேண்டியனவற்றை நிகழ்த்திக் கொண்டுவிடுகிறார்கள். கள்ளங்கபடமற்ற குழந்தைப்பருவம். எளிய பொருட்களிலும், செயல்களிலும் மகிழ்ச்சியடைந்து சொன்னதைச் செய்யும் பருவம். இங்குதான் நல்லவிதமாக மனதில் பதியும்வண்ணம் நயமாகக்கூறி, குழந்தைகளை வளர்க்கும் பொறுப்பு பெற்றோருக்கு, அதுவும் அவனுடன் பெரும் பொழுதைக்கழிக்கும் தாய்க்கு உண்டு.
பள்ளியில் நல்ல மதிப்பெண்கள் பெற்றால், மகிழ்ந்து சிறுபரிசுகள் அளிப்பதும், மற்ற குழந்தைகளை அடித்துத் துன்புறுத்தி வம்பிற்கிழுத்தால், நல்ல சொற்களைக்கூறி, அவனைத் திருத்தி, நன்னடத்தைக்காகச் சிறு பரிசுகளைத் தின்பண்டங்களாகவோ, விளையாட்டுப் பொருட்களாகவோ அளிப்பதும் இவ்வகையில் சேரும். இதனைத்தான் இப்பாசுரங்கள் குழந்தையிடம் அன்னை தான் சாதித்துக் கொள்ள விரும்பும் செயல்களைப்பற்றியும் அதற்காக அவள் கையாளும் வழிமுறைகளைப்பற்றியும் உட்பொருளாக விளக்குகின்றன எனத் தோன்றுகிறது. தெய்வத்தைக் குழந்தையாக்கிக் கொஞ்சும் பக்தி, அன்னையின் கூற்றாக அவனைக் கொஞ்சும் வழிமுறைகள் ஆகியனவற்றைக் கொண்ட இப்பாசுரங்கள், நல்ல குழந்தைகளை வளர்ப்பதன் வழிமுறைகளையும் விளக்குவதுபோல் அமைந்துள்ளது ஆச்சரியப்படத்தக்கது.
பில்வமங்களரின் ஒரு அழகிய ஸ்லோகம் இதுபோலவே ஒரு நிகழ்வை யசோதை-கிருஷ்ணனிடையே நிகழும் உரையாடலாக்கி, படிக்கும் நம்மைப் புன்னகைபுரிந்து சிலிர்க்க வைக்கிறது.
யசோதை சொல்கிறாள்: “கிருஷ்ணா! உன் அண்ணன் பலராமன் யமுனையாற்றின் மணல்குன்றுகளிடையே விளையாடப் போயிருக்கிறான்; உனக்கு நான் பொற்கிண்ணத்தில் பால் வைத்திருக்கிறேன் பார்! அவன் திரும்பிவருவதற்குள் நீ அதனை சமர்த்தாகக் குடித்து விடவேண்டும். தெரியுமா?”
கிருஷ்ணன், “ஏனம்மா?” எனக்கேட்க, யசோதை சொல்கிறாள்: “அப்போதுதான் உனக்கு குடுமி வளரும் (சிகா வர்த்திஷ்யதே).” குழந்தை கிருஷ்ணன் பாவம், நம்பி விடுகிறான். கிண்ணத்துப்பாலை ஒரே மூச்சில் பாதி குடித்துவிட்டு, தனது குட்டிக்குடுமியைத் தொட்டுப் பார்த்துக்கொண்டு , “அடடா, இத்தனை வளர்ந்துவிட்டதா?” என மகிழ்ச்சி கொள்ளுகிறானாம். நாமும் இந்த ஸ்லோகத்தைப் படித்து மகிழ்கிறோம்.

காளிந்தீ- புலினோதரேஷு முஸலீ
யாவத்கத: கேலிதும்
தாவத்கார்ப்பரிகம் பய: பிப ஹரே
வர்த்திஷ்யதே தே சிகா
இத்தம் பாலதயா ப்ரதாரணபரா:
ச்ருத்வா யசோதா-கிர:
பாயாந்ந: ஸ்வசிகாம் ஸ்ப்ருசன் ப்ரமுதித:
க்ஷீரேர்த்தபீதே ஹரி:
(ஸ்ரீ கிருஷ்ண கர்ணாம்ருதம்- 2.60)

இளம் குழந்தைகள் அன்னை சொல்வது அத்தனையையும் நம்பிவிடுகின்றனர். ஆகவே கதைகள் சொல்லி அவர்களை நல்வழிப்படுத்துவது மிகவும் எளிதாகிவிடுகின்றது!
(கிருஷ்ணலீலைகள் வளரும்)
****************
_

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.