ஈராக்கில் தொழில் தொடங்கலாமா!

Power_plant_in_Samawah,_Iraq2012 ஆம் ஆண்டின் மத்தியில் ஈராக்கிற்கு என்னை அனுப்ப எங்கள் கம்பெனி முடிவு செய்தது. உடனே, ஈராக் குறித்த தகவல்களை தேடித்தேடிப் படித்தேன். முக்கியமாய் ஈராக்கில் கம்பெனி ஆரம்பிப்பது எப்படி, அதன் சாதக, பாதகங்கள், வரிவிகிதம் இப்படியாக.
படித்தவரையில் கொஞ்சம் நம்பிக்கை அளிப்பதாக இருந்தாலும் வேலையை ஆரம்பித்த பின்னரே எத்தனை தடங்கல்களை நாம் தாண்டவேண்டும் என ஒரு ஐடியா கிடைத்தது. முதல் தடங்கல்: நீங்கள் முதல் போட்டு கம்பெனி ஆரம்பித்தாலும் வெளிநாட்டவர் அந்த கம்பெனியின் மேனேஜராய் இருக்க முடியாது; ஈராக்கியர்தான் மேனேஜர் பதவியில் இருக்க வேண்டும்.
ஈராக்கியர் மேனேஜராய் இருந்தாலும் உங்களின் முதலீடு 100% உங்களுடையதே.
இந்த வசதி இதர அரபு நாடுகளில், குறிப்பாய் கத்தார், குவைத் மற்றும் ஐக்கிய அரபு நாடுகள் போன்றவற்றில் நாம் நமது பணத்தை இட்டு 100% முதலீடு செய்தாலும் ஸ்பான்சர்கள் எனப்படும் உள்ளூர் நபர்களே  (எமிராத்தி, குவைத்தி அல்லது கத்தாரி) மொத்த முதலீட்டின்  51 சதவீதத்திற்கு சட்டப்படி உரிமையாளர்கள். இவர்களில் பெரும்பாலும் நல்லவர்களே. இருப்பினும், ஆண்டுக்கு இரண்டு அல்லது மூன்று கேஸ்களாவது கோர்ட்டில் என் முதலீட்டையெல்லாம் உள்ளூர் ஸ்பான்சர் அபகரித்துவிட்டார் என வழக்குகள் தாக்கல் செய்யப்படுவதையும் காணலாம். அதில் வெல்பவர்கள் எப்போதும் உள்ளூர் ஸ்பான்சராகவே இருப்பார்கள். ஏனெனில், ஒரு கம்பெனியின் மொத்த மதிப்பில் 51% ஸ்பான்சர்களுக்கே என சட்டம் சொல்வதால்.
சைட் அக்ரிமெண்ட் (Side Agreement) என்ற சட்டத்திற்கு உட்படாத ஓர் ஒப்பந்தம் மூலம் முழு முதலீடும் வெளிநாட்டு முதலீட்டாளருக்கே சொந்தம் என எழுதி வாங்கிக்கொண்டாலும், அது உள்ளூர் ஸ்பான்சரின் மனசாட்சியின் அளவைப் பொருத்ததே, ஏனெனில், இந்த சைட் அக்ரிமெண்ட் எந்த கோர்ட்டிலும் செல்லாது.
இது தவிர மொத்த முதலீட்டில் 51 சதவீத மதிப்பிற்கு உள்ளூர் ஸ்பான்சரிடமிருந்து ஒரு செக் எழுதி வாங்கிக் கொள்கின்றனர், வெளிநாட்டு முதலீட்டாளர்கள். ஏனெனில் செக் பவுன்ஸ் ஆவது சட்டப்படி இந்த நாடுகளில் கிரிமினல் குற்றம் என்பதால், இது ஒருவகையில் உத்தரவாதமாய் காக்கிறது.
ஈராக் தூதரகத்தில் அட்டெஸ்டேஷன் செய்யப்பட்ட பவர் ஆஃப் அட்டர்னி வைத்திருந்தாலும் ஈராக் வந்த பின்னர் அந்தக் காதிதத்துக்கு எந்த மதிப்பும் இல்லை.
இரண்டாவது, அரசாங்க அலுவலகங்களில் நாமே சென்று தகவல்களைச் சேகரித்து கம்பெனி ஆரம்பிக்க விரும்பினால், கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்கான ப்ராஜக்டாய் அது முடியும். அதற்குப் பின்னராவது நாம் முடிக்க முடியுமா என்றால், உறுதியாய் சொல்ல இயலாது. 
ஈராக்கி ஏஜெண்டோ, மேனேஜரோ நமக்காக வேலை செய்தாலும் இதுதான் நிலை. இதைத்தவிர்க்க ஒரே வழி, நம்பகமான ஏஜெண்டுகளிடம் ஒப்பந்தம் செய்துகொள்ள வேண்டும். அவர்களே நமக்காக கம்பெனி ஆரம்பித்து, கம்பெனி ரிஜிஸ்ட்ரெஷன் சர்டிஃபிகேட் வாங்கித்தரும் பேக்கேஜில் வேலையைக் கொடுத்துவிட வேண்டும். இதில் கம்பெனியின் அளவைப்பொருத்து பெரியதா, சிறியதா என்பதைப் பொருத்து ஏஜெண்ட் கமிஷன் மாறுபடும்..  இதற்குத் தோராயமாக ஆகும் செலவு 10,000 முதல் 20,000 அமெரிக்க டாலர்கள் வரை. அவர்கள் நம் கம்பெனியின் பதிவிற்காக அரசாங்கத்தில் கொடுக்கும் தொகை அதிகபட்சம் 100 டாலர்கள் மட்டுமே.
இதற்கு அடுத்த நிலை, நீங்கள்கொடுக்கும் சர்வீஸோ அல்லது பொருளோ ஈராக்கின் எந்த அரசுத்துறைக்குச் சம்பந்தப்பட்டதோ அந்தத் துறையின் அப்ரூவல் வாங்குதல். எடுத்துக்காட்டாக எண்ணெய் மற்றும் எரிவாயுத் துறையில் சேவை வழங்கும் கம்பெனியாக நீங்கள் இருப்பின் எண்ணெய் அமைச்சரகத்தில் உங்கள் கம்பெனி பதிவு செய்யப்பட்டு நீங்கள் சேவைகள் செய்யத்தகுதியானவர் என அது சான்றிதழ் அளிக்கும். அதைப்பெற உங்கள் கம்பெனியைப்பற்றிய முழுவிபரங்கள் அடங்கிய ஃபைலை அவர்களிடம் அளிக்க வேண்டும். அதில், உங்கள்கம்பெனியைப் பற்றிய அறிமுகம், தொடர்பு கொள்ள வெண்டிய ஆட்களின் விபரம், இதுவரை நீங்கள் இத்துறையில் எந்தெந்த நாடுகளில் என்னென்ன வேலைகள் செய்திருக்கிறீர்கள், உங்கள் கம்பெனியின் ஆண்டு வருமானம், ஆடிட்டெட் ரிப்போர்ட் கடந்த 3 ஆண்டுகளுக்கு, உபகரணங்களின் எண்ணிக்கை, வகை, எத்தனை பழையன, புதியன இப்படியாக எல்லாத் தகவல்களையும் அளிப்பீர்கள். அவற்றைச் சரிபார்த்தபின் சம்பந்தப்பட்ட துறை.உங்களுக்கு அப்ரூவல் அளிக்கும் இதையும் செய்துதர ஏஜெண்டுகள் உண்டு. பேக்கேஜ்கள் உண்டு.
மேற்சொன்ன இரு வேலைகளும் முடியாமல் அவசர அவசரமாய் ஈராக்கில் ஆபிஸை பாக்தாத்திலோ, பாஸ்ராவிலோ பிடித்து ஒரு மேனேஜர், ஒரு சமையல்காரர், உள்ளூர் வேலைகாரர், ஒரு ஈராக்கி என ஆரம்பித்துவிட்டு வேலை தேடுவதாக பாவ்லா செய்துகொண்டு அமர்ந்திருப்பாரும் உண்டு. இப்படிச் செய்வது ஒரு கம்பெனியை ஆரம்பித்திலேயே கொல்வது போலாகும். ஏனெனில், நீங்கள் ஈராக்கில் கம்பெனி ஆரம்பிக்கத் திட்டமிட்டதிலிருந்து முதல் வேலை கையில் கிடைத்து ஆரம்பிப்பதற்குள் குறைந்தபட்சம் ஓராண்டாவது ஆகியிருக்கும். அதுவரை உங்கள் ஈராக் கிளையை நடத்திய வகையில் சராசரியாக மாதத்திற்கு 20, 000 டாலர்கள் சம்பளமாகவும், வீட்டுவாடகையாகவும், விமான பயணச்சீட்டாகவும் செலவழித்திருப்பீர்கள். இதையெல்லாம் தவிர்க்கும் கம்பெனிகள் கிட்டத்தட்ட இரண்டு முதல் மூன்று லட்சம் டாலர்களை சேமிக்கலாம்.
கம்பெனியையும் பதிந்தாயிற்று, அப்ரூவலும் கிடைத்தாயிற்று. இனி கம்பெனிக்கு வேலை தேடவேண்டியதுதான் அடுத்த வேலை. கண்ட்ரி மேனேஜரோ, பிஸினஸ் டெவலப்மெண்ட் மேனேஜரோ இந்த வேலையைச் செய்யப் பணிக்கப்படுவார். இங்குதான் மற்ற நாடுகளுக்கும், ஈராக்குக்கும் வித்தியாசம். இதர நாடுகளில் இன்னின்ன கம்பெனிகள் இந்த ஊரில் இந்த தெருவில் இருக்கிறது, இந்த ஃபோன் நம்பர், ஈமெயில், ஃபேக்ஸ் எல்லாம் கொடுத்திருப்பார்கள். இண்டர்நெட்டிலும் இருக்கும். தேடிக்கொள்ளலாம். ஆனால், ஈராக்கில் எந்தக் கம்பெனியும் தங்கள் கம்பெனி போர்டுகளை வைத்துக்கொள்வதில்லை. ஆள்கடத்தல்காரர்கள் மீது பயத்தினால் எல்லா கம்பெனிகளும் எந்தவித அறிவிப்புப் பலகையுமின்றி மூடிய பங்களாக்களிலும், ஐந்து நட்சத்திர ஓட்டல்களிலும்தான் தங்கள் கம்பெனியை நடத்துவார்கள்; சைட்டில் வேலை செய்வோர் தவிர அனைவரும் அவ்வண்ணமே.
கம்பெனிகளைக் கண்டுபிடிப்பதே ஒரு சவால் எனில் அடுத்து அந்த கம்பெனிகளின் முடிவெடுக்கும் அதிகாரம் கொண்டோர் யார் என்று தேடிக் கண்டடைவது பெரிய சவால். அவர்கள் பெரும்பாலும் துபாயிலோ, அபுதாபியிலோ பஹ்ரெய்னிலோ அல்லது ஏதேனும் ஒரு மத்திய கிழக்கு நாட்டிலோ இருப்பார்கள். ஈராக்கில் இருப்பவர் பொதுவாய் எந்தவித முடிவெடுக்கும் அதிகாரம் இல்லாதவராக இருப்பார். எனவே உங்கள் கம்பெனியின் கிளை மத்திய கிழக்கில் வேறு ஏதேனும் ஒரு நாட்டில் இருந்தால் ஈராக்கிற்கான வேலையை அங்கு பெற முடியும். இல்லையெனில், ஈராக்கிலிருந்து போய் வந்துகொண்டிருக்க வேண்டும்.
ஈராக்கில் செயல்படும் வெளிநாட்டுக் கம்பெனிகளுக்கு இருக்க வேண்டிய அடிப்படை விஷயங்கள்.
ஈராக் தொழில்துறை அமைச்சகத்தில் பதிவு செய்து அதற்கான சான்றிதழ்
சம்பந்தப்பட்ட துறை உங்களை வேலை செய்ய அனுமதித்ததற்கான சான்றிதழ்
வெளிநாட்டு வேலையாட்கள் துறையில் பதிவு செய்துகொண்டமைக்கான சான்றிதழ்
உங்கள் கம்பெனிக்கான ஈராக்கியப் பிரதிநிதியை அரசாங்கத்தில் பதிவு செய்துகொண்டமைக்கான சான்றிதழ்
உங்கள் கம்பெனிக்கான உள்ளூர் வக்கீல்
உங்கள் கம்பெனியை வக்கீல் சங்கத்தில் பதிவு செய்தல், அவர்களிடம் இந்தக் குறிப்பிட்ட வக்கீலைத்தான் நாங்கள் பயன்படுத்துகிறோம் என்ற தகவலை அளித்து அதற்கான சான்றிதழ்.
உங்கள் கம்பெனிக்கான உள்ளூர் ஆடிட்டர்
மத்திய வரி அமைச்சகத்தில் கம்பெனியை பதிவு செய்துகொண்டமைக்கான சான்றிதழ் (Tax card )
மேற்சொன்ன அனைத்தும் இருப்பது மிக முக்கியம். எத்தனை ஆண்டுகள் கழித்து வரியை தாக்கல் செய்தாலும் கம்பெனி என்றைக்கு ஈராக்கில் பதிவு செய்யப்பட்டதோ அன்று முதல் இன்றுவரையான வியாபார பரிவர்த்தனைகளை சமர்ப்பிப்பதுடன் அதற்கான வரியையும் கட்ட வேண்டும்.
பி ஆர் ஓ க்கள் என்ற பப்ளிக் ரிலேஷன் ஆஃபிசர்
இவரது முக்கிய வேலையாக இருப்பது நமது கம்பெனி வேலைகளுக்காக நம் கம்பெனி சார்பாக அரசாங்க அலுவலகத்திற்கு செல்வது. அதற்கான ஒரு அனுமதி பத்திரம் நமது கம்பெனியின் ஈராக்கிய மேனேஜரால் வழங்கப்பட்டிருக்கும். சிறுமுதலீட்டுக் கம்பெனிகள் எனில் ஈராக்கிய மேனேஜரே இந்த பி.ஆர்.ஓ வேலைகளைச் செய்வார்.
ஏற்றுமதி, இறக்குமதி, போலிஸ் க்ளியரன்ஸ் சம்பந்தப்பட்ட வேலைகள், போலிஸ் பிடித்தால் நம்மை மீட்டுக்கொண்டு வருதல் இப்படி எல்லா அரசு சம்பந்தப்பட்ட வேலைகளுக்கும் இவர் அவசியம். அரசாங்க அலுவலகங்களும் இவர்களுடன் பேசுவதையே விரும்பும். ஏனெனில், இவர்களுடன் அரசாங்க அதிகாரிகள் உள்ளூர் மொழியான அரபியில் பேசுவார்கள். மேலும் இவர்களே கம்பெனியால் கம்பெனி சார்பாகப் பேச அனுமதிக்கப்பட்டவர் என்பதாலும்.
இன்ஷுரன்ஸ்
ஈராக்கை பொருத்தவரை இன்ஷுரன்ஸ் துறை ஆரம்பநிலைக்கும் கீழே இருக்கிறது. ஒர்க்மென் காம்பன்சேஷன், ப்ளாண்ட் அண்ட் மெஷினரி இன்ஷ்யூரன்ஸ், வெஹிகிள் இன்ஷூரன்ஸ் எனப்படும் வாகனக் காப்பீடு முதலிய அடிப்படை இன்ஷூரன்ஸ்கள்கூட இன்னும் ஆரம்பகட்டத்தில்தான் இருக்கின்றன. எனவே பெரும்பாலான டெண்டர்களில் இந்த இன்ஷூரன்ஸை வெளிநாட்டில் இருக்கும் வங்கிகளில் இருந்தும் பெறலாம் எனச் சொல்கின்றனர் ஈராக்கிய அரசு கம்பெனிகள்.
ஜிசிசி எனப்படும் குவைத், ஓமான், கத்தார் அமீரகம் போன்ற நாடுகளில் இந்த இன்ஷுரன்ஸ் துறை மிக முன்னேறிய நிலையில் உள்ளது. வாடிக்கையாளர்களுக்கு எந்தவிதச் சிரமமும் இன்றி போலிஸ் ரிப்போர்ட்டை வைத்தே நமக்கான இழப்பீடு எந்தவிதப் பிரச்சினையும் இன்றியும், விரைவாகவும் கிடைத்துவிடும்,
ஈராக்கில் போலிஸ் ரிப்போர்ட் பெறுதல் என்பது சாத்தியமே இல்லை. ஒரு சிறு எடுத்துக்காட்டாக இத்தாலியைச் சேர்ந்த ஒரு கம்பனி பாஸ்ராவை ஒட்டியுள்ள ஓரிடத்தில் எண்ணெய் கொண்டுசெல்லும் குழாய் அமைக்கும் பணிக்கு வந்தது. அவர்களின் கொடவுனில் இருந்து ஐந்து லட்சம் மதிப்புள்ள காப்பர் வயர்களும், புத்தம் புது ஏர்கண்டிஷனர்கள் பலவும் காணாமல் போயின. எடுத்தவர் யாரெனத் தெரியும். ஆனால், சொல்ல முடியாது. சொன்னால் மறுநாளே கொலை செய்யப்படுவீர்கள். போலிஸில் சென்று பொருட்கள் காணாமல் போய்விட்டதாக புகார் அளித்தால் யார் மீது சந்தேகம் என எழுதிக்கொடுக்கச் சொல்வார்கள். நீங்கள் கொஞ்சம் தைரியமான ஆளாய் இருந்து ஈராக்கியின் பெயரையோ அடையாளத்தையோ சொன்னால் அவர்களே திருடிச்சென்றவனிடம் நம்மை காட்டிக்கொடுப்பதுடன் நாம்தான் திருடி விற்றுவிட்டோம் என்ற திசையில் கேஸைக் கொண்டு செல்வார்கள். மேலும், போலிஸ் பேப்பர் என்ற ஒன்று கிடைக்கவே கிடைக்காது. போலிஸின் அறிக்கை இன்றி காப்பீடு நிறுவனங்களும் இழப்பீடுகளைத் தராது.
இதே நிலைதான் வாகன விபத்துகளுக்கும். முழுக்க முழுக்க கட்டைப்பஞ்சாயத்து முறையே ஏதேனும் விபத்து நேர்ந்துவிட்டால். இஸ்லாமிய முறைப்படி பழிக்குப்பழியாக பதில் கொலை, அல்லது ரத்தப்பணம் சம்பந்தப்பட்ட குடும்பத்தின் உறுப்பினரிடமிருந்து வசூலிக்கப்படும்.
மத்திய கிழக்கில் பிற நாடுகளில் இந்தப் பணத்தை இன்ஷூரன்ஸ் நிறுவனமே கொடுத்துவிடும்.
வங்கிகள்
பொதுவாய் ஈராக்கில் ஏகப்பட்ட வங்கிகள் இருந்தாலும் (அரசு மற்றும் தனியார்) அவர்களின் முக்கிய வேலையாக இருப்பது டாலர்களை ஈராக்கி தினார்களாக மாற்றிக்கொடுக்கும் நிறுவனமாகவும், மக்களின் மற்றும் கம்பெனிகளின் பணத்தை சேமித்து வைப்பதற்கான ஓர் இடமாகவுமே இருக்கின்றன.
தொழிற்கடன், விவசாயக்கடன், நகைக்கடன் போன்ற எந்தவித கடன் வசதிகளும் இன்னும் பிரபலமாகவில்லை; பல அறிமுகமே ஆகவில்லை.
சாதாரண ஈராக்கியனுக்கு வங்கி என்பது அணுக முடியாத ஒரு விஷயமாகத்தான் இருக்கிறது. வட்டி என ஏதுமில்லை ஆனால், நம் பணத்தை வைத்திருப்பதற்கு ஆண்டுக்கு 25 டாலர்கள் வரை வசூலிக்கின்றனர். பணம் இருக்கும் அளவைப்பொருத்து இந்த கட்டணத்தைக் குறைத்துக்கொள்கின்றனர் அல்லது தள்ளுபடி செய்கின்றனர்.
ஏ.டி.எம்.களின் அறிமுகமே 2014ல் இருந்துதான் ஆரம்பம். தற்போது பரவலாக ஏ.டி.எம்.களை வைக்க ஆரம்பித்துள்ளனர். வங்கிக்கணக்கு இல்லாதோருக்கு வெளிநாடு செல்லும்போது பயன்படுத்த வசதியாக தற்காலிக டெபிட் கார்டை கொடுத்து அனுப்புகின்றனர். ஏதேனும் ஒரு வங்கிக்கு சென்று எவ்வளவு பணத்தை எடுத்துச் செல்ல விரும்புகிறீர்களோ அந்த அளவு பணம் மற்றும் கார்டுக்கான கட்டணம் சேர்த்துக் கொடுத்தால் மாஸ்டர் அல்லது விசா பவருடன் ஓர் அட்டையைக் கொடுத்துவிடுவர். ஈரான் நாட்டுக்கு புனிதப்பயணம் செல்வோர் பணத்தை எடுத்துச் செல்லாமல் இந்த கார்டுகளை எடுத்துச் செல்வது எளிதாய் இருக்கிறது. இதர வெளிநாடுகளுக்குச் செல்லும்போதும் இந்த அட்டைகளை பெற்றுச் செல்லலாம்.
வரி விகிதங்கள்
ஈராக்கில் செயல்படும் பெரும்பாலான வெளிநாட்டுக் கம்பெனிகள் எண்ணெய் மற்றும் எரிவாயுத்துறையில் வேலை செய்கின்றன. அவர்களின் மொத்த வியாபாரத்தில் 7% வரியாக விதிக்கப்படுகிறது.
இதர நாடுகளைப்போல ஆடிட்டெட் பேலன்ஸ் ஷீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள லாப, நஷ்டத்தைப் பொருத்து அல்லாமல் நீங்கள் லாபமீட்டினாலும், நஷ்டமானாலும் ஈராக்கிய அரசாங்கத்திற்கு ஏழு சதவீத வரி கட்டியே ஆக வேண்டும்.
எண்ணெய் மற்றும் எரிவாயுத்துறை தவிர இதர துறைகளில் உள்ளோருக்கான வரியானது மொத்த வியாபாரத்தில் 3.3 சதவீதமாக உள்ளது..
சம்பள வரி
ஈராக்கில் வேலை செய்யும் வெளிநாட்டவரின் சம்பளத்திற்கு வரி உண்டு. அது மொத்த சம்பளத்தில் 10% வீதமாக இருக்கிறது. இதனால், பெரும்பாலான கம்பெனிகள் ஈராக்கில் வேலை செய்ய அனுப்புவோரை தற்காலிக ஊழியர் எனச் சொல்லியே அனுப்புகின்றன. வேலைக்கான ஒப்பந்தங்கள் எல்லாம் மத்திய கிழக்கின் ஏதோ ஒரு நாட்டில் போடப்பட்டு அவர்களின் சம்பளம் நேரடியாக அவர்களின் வங்கிக்கணக்கிற்கு அனுப்பப்பட்டு விடுகிறது. இதைக்கட்டுப்படுத்த ஈராக்கிய அரசாங்கம் ஒரு விநோதமான வரி விதிப்பு முறையைக் கையாள்கிறது.
மொத்த வியாபாரம் எவ்வளவு என கணக்கிட்டு, அதில் இரு சதவீதம் அளவுக்கு சம்பளமாகக் காண்பித்த கம்பெனிகளுக்கு அவர்கள் கொடுத்த கணக்கையே எடுத்துக்கொள்கின்றனர். எந்த கம்பெனிகளின் சம்பளச் செலவு மொத்த வியாபாரத்தில் 2%கூட வரவில்லையோ அவர்களுக்கு மொத்த வியாபாரத்தில்  ஈராக்கிய அரசாங்கம் 2% சம்பள வரியாக எடுத்துக்கொள்கிறது.
இது தவிர, ஈராக்கிய ஊழியர்களுக்கு சோஷியல் செக்யூரிட்டி என்ற பெயரில் கம்பெனி வரி கட்ட வேண்டும். அதற்கு ஈடான தொகையை அரசாங்கம் செலுத்தும். இதை நம்மூரின் ப்ராவிடன் ஃபண்டுடன் ஒப்பிடலாம்.
ஈராக்கியர்கள் மற்றும் வெளிநாட்டவரின் சம்பள விகிதங்கள்
ஈராக்கியர்களுக்கு என குறைந்தபட்ச சம்பள விகிதத்தை அரசாங்கம் அறிவித்திருந்தாலும், யாரும் அதைக் கண்டுகொள்வதில்லை. ஈராக்கியர்களுக்கு தெரிந்ததெல்லாம் வாகனம் ஓட்டுதல் மற்றும் செக்யூரிட்டி வேலை. பின்னதே பெரும்பான்மை. இவர்களின் சம்பளம் குறைந்தபட்சம் 600 டாலர்களாகவும் அதிகபட்சம் 1500 டாலர்களாகவும் உள்ளது. இது எந்த கம்பெனியில் வேலை செய்கிறார்கள் என்பதைப் பொருத்தது.
அலுவலகங்களில் க்ளார்க் வேலைகளுக்கும், மந்தூப் எனப்படும் பப்ளிக் ரிலேஷன்ஷிப் ஆஃபிசர் வேலைகளுக்கும் வருவோர் ஓரளவு படித்தவர்கள்.  இவர்களின் சம்பளம் குறைந்தபட்சம் 1000 டாலர்களாகவும், அதிக பட்சம் 2000 டாலர்களாகவும் உள்ளது.
வெளிநாட்டவர் 
வெளிநாட்டவர்கள் பெரும்பாலும் வேலைக்கு வருவது எண்ணெய் துரப்பண வேலைகளுக்கே. இதில் ஓராண்டு காண்ட்ராக்டில் வரும் செமி ஸ்கில்ட் அல்லது சூப்பர்வைசர், ஃபோர்மென், மற்றும் இஞ்சினியர்கள் உண்டு. எண்ணெய் துரப்பணப்பணியில் இருப்போருக்குப் பொதுவாகவே சம்பளம் அதிகம். மேலும், ஈராக்கில் வேலை என்பதால் ஈராக் ரிஸ்க் அலவன்ஸ் என்ற ஒன்றையும் பெறுவார்கள். இந்த ரிஸ்க் அலவன்ஸ் தனியாகவோ அல்லது சம்பள பேக்கேஜில் சேர்த்தோ வழங்கிவிடுகிறார்கள். வெளிநாட்டவர் என்பதால் உணவு, இருப்பிடம், விசா செலவுகள், விமானப் போக்குவரத்து செலவுகள், பாதுகாப்பு எல்லாம் அழைத்து வரும் கம்பெனியின் பொறுப்பு.
செமி ஸ்கில்ட் லேபர் எனப்படும் பணியாளர்க்கு  600 முதல் 1200 டாலர் வரை சம்பளம் கிடைக்கிறது. சூப்பர்வைசர், ஃபொர்மென் போன்றோருக்கு 1500 முதல் 2000 டாலர் வரை சம்பளம் கிடைக்கிறது.
இஞ்சினியர்களுக்கு அவரவர் தகுதிக்கேற்ப, படிப்பு மற்றும் அனுபவத்திற்கேற்பவும் மேலும் கூடுதல் தகுதிகளுக்கேற்பவும் சம்பளம் மாறுபடும். குறைந்தபட்சம் 2500 முதல் 10,000 டாலர்வரை சம்பளம் பெறுகின்றனர்.
மேலே சொன்னவைகள் எல்லாம் ஆசியக்கண்ட மக்களுக்கானவை.
மேலே குறிப்பிட்ட வேலைகளுக்கு வரும் ஐரோப்பியர்களுக்கு இரு மடங்கு கூடுதல் சம்பளமும், ஆண்டுக்கு மும்முறை சம்பளத்துடன் கூடிய விடுமுறையும் கிடைக்கும். ஆகவே, பெரும்பாலும் ஆசியர்களையே வேலைக்கு வைக்கின்றனர். தவிர்க்க இயலா காண்ட்ராக்சுவல் ஆப்ளிகேஷன்ஸ் என வரும்போதும், கம்பெனிகள் எந்த நாட்டைச் சேர்ந்தவை என்பதைப் பொருத்தும் சில தருணங்களில் ஐரோப்பியர்களை வேலைக்கு வைக்கின்றனர்.
வரி செலுத்தும் முறை
ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதத்திற்குள் ஆடிட்டர்களால் தணிக்கை செய்யப்பட்ட முந்தைய ஆண்டுக்கான கணக்கு வழக்குகளைத் தாக்கல் செய்வதுடன் வரியையும் கட்டிவிட வேண்டும். கணக்கு தாக்கல் செய்ததும் வரித்துறையினர் உங்கள் வருமானத்திற்கேற்ப, எந்தத் துறையோ அதற்கேற்ப வரிவிதித்து இந்த ஆண்டுக்கான வரித்தொகை இவ்வளவு எனச் சொல்லி விடுவார்கள். 
வரித்துறையினர் உங்களுக்கான வரி இவ்வளவு  எனச் சொல்லியதிலிருந்து 40 நாட்களுக்குள் வட்டியைக் கட்டிவிட வேண்டும், இல்லையெனில் வரியில் 10% கூடுதலாக வசூலிக்கப்படும். இது அடுத்த 30 நாட்களுக்கு. அப்போதும் கட்டத்தவறினால் வரி + தண்டத்தொகையான 10% இரண்டுக்கும் சேர்த்து 10 சதவீத வரி வசூலிக்கப்படும். இப்படியே அந்த ஆண்டு முடிவுவரை உங்கள் வரி வட்டிபோட்டுக்கொண்டே இருக்கும். அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் வரித்துறை தொழில்துறையிடம் சொல்லி உங்கள் கம்பெனிப் பெயரை கருப்புப்பட்டியலில் வைக்கும். அதன் பின்னர் நீங்கள் ஈராக்கில் எப்போதும் தொழில் செய்ய இயலாது.
வரித்துறைக்கான உங்கள் கம்பெனிக்கான வரியை உங்கள் வக்கீலே வந்து கட்ட வேண்டும் என்பது விதி. முதலில் சொன்ன கம்பெனிக்கான வக்கீலின் பயன் இப்போதுதான். இதுவரை பெயரளவுக்குச் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த வக்கீல் வருமான வரியை தாக்கல் செய்யவும், வரியைக்கட்டவும் தனிக்கட்டணம் வசூலிப்பார். அது 3000 டாலர்கள் முதல் 5000 டாலர்கள் வரை இருக்கும். இதர காலங்களில் அரசாங்கத்தால் ஏதேனும் பிரச்சினை வந்தால் வந்து நம் சார்பாகப் பேசுவார். அவருக்கு  மாதச்சம்பளம் 300 டாலர்களாக இருக்கும்
ஆடிட்டர்களின் பங்கு 
நம் கணக்கு வழக்குகளைச் சரிபார்த்து ஈராக்கிய அரசாங்கத்திற்கு தாக்கல் செய்ய வேண்டிய முறையில் தயாரித்து, அரபி மொழியில் மொழிபெயர்த்துக் கொடுப்பதுவரை அவரது வேலை. நாம் எங்கெல்லாம் தவறு செய்திருக்கிறோமோ அவற்றையெல்லாம் குறிப்பிட்டு அதை நேராக்கும் முறையைச் சொல்ல வேண்டியதும் அவர் வேலை. ஓராண்டு கணக்கு வழக்கை தயாரித்துக் கொடுக்க 3000 முதல் 5000 டாலர் வரை பெறுகிறார்கள்.
டாக்ஸ் கார்ட் எனப்படும் வரி அட்டையின் பயன்
ஒவ்வொரு கம்பெனியும் நாம் வேலை செய்த பின்னர் சமர்ப்பிக்கும் இன்வாய்ஸில் துறைக்கேற்றார்போல வித் ஹோல்டிங் டேக்ஸ் பிடித்துக்கொள்வார்கள். எடுத்துக்காட்டாக எண்ணெய் மற்றும் எரிவாயுத் துறையிலிருப்போருக்கு 7% வரி. இந்தப்பணத்தை நமக்கு வேலை கொடுத்த கம்பெனிகள் பிடித்தம் செய்வார்கள். நாம் வரி கட்டியபின்னர் அந்த ரசீதுடன் இந்த வரிக்கார்டையும் சேர்த்து வேலை செய்த கம்பெனிக்கு சமர்ப்பித்தால் அவர்கள் நம்மிடம் பிடித்த தொகையை மீளத்தருவார்கள். சில கம்பெனிகள் நேரடியாகவே பணத்தை வரித்துறைக்குச் செலுத்திவிட்டு நம்மிடம் வரி அடைத்ததற்கான ரசீதின் பிரதியைக் கொடுத்து விடுவார்கள். நாம் அந்தத் தொகையை கழித்துவிட்டு மீதி வரியை கட்டிக்கொள்ளலாம். இது எல்லாமே நம்மிடம் டேக்ஸ் கார்ட் இருந்தால் மட்டுமே நடக்கும்.


****

மேற்சொன்னவையெல்லாம் கண்ணுக்குத் தெரிந்து கடக்க வேண்டிய விஷயங்கள். இவை தவிர உண்மையில் வேலைக்கு செல்லும்போதுதான் எல்லா திசைகளிலிருந்தும் பலவிதப் பிரச்சினைகள் முளைத்தெழும். 
நாம் துபாயில் தூதரகத்தில் விசா வாங்கி இங்கு வந்திருப்போம். ஆனால், சைட்டுக்கு செல்ல கேட்பாஸ் கிடைக்காது. காரணம் ஏனென்றும் சம்பந்தப்பட்ட துறை மூலம் அறிந்துகொள்ள முடியாது. கீழே இருக்கும் அதிகாரிகளிடமே நாம் சமாளித்துக்கொண்டு செல்ல வேண்டியிருக்கும்.

சமாளிப்பைப் பெற்றுக்கொண்ட பின்னர் நமக்கு எல்லா வாசல்களும் அகலத் திறக்கும்.
-0O0O0-

One Reply to “ஈராக்கில் தொழில் தொடங்கலாமா!”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.