[stextbox id=”info” caption=”அல்சைமர்ஸுக்குத் தீர்வு?”]

அடிப்படையில் நல்ல செய்திதான். மேற்கிலாவது, படிப்படியாக முதுமையில் அல்ஸைமர்ஸ் அல்லது புத்தி நசிவு என்பது நேர்வது குறைந்து கொண்டு வருகிறதாம். என்ன காரணமென்று ஊகிக்கிறார்கள்? கல்வி அறிவு உயர உயரப் புத்தி நசிவு குறைகிறது என்று ஒரு கண்டு பிடிப்பு. 70களுக்குப் பிறகு உயர் கல்வி பெறுவோரின் தொகை அதிகரிக்கவும் இந்த விளைவு ஏற்பட்டிருக்கிறது. குறைந்தது உயர்நிலைப் பள்ளி வரை படித்தவர்களுக்கு இந்த புத்தி நசிவு வருவது குறைந்து விடுகிறதாம்.
இத்தனை காலமாக வளமையாக இருந்த நிலப்பகுதிகளில் இன்னும் உயர்நிலைப் பள்ளியை எட்டிப் பார்க்காதவர்கள் இருக்கிறார்கள் என்பதே நமக்குச் செய்தியாக இருக்கலாம். ஆனால் இப்படி அல்ஸைமர்ஸ் அல்லது புத்தி நசிப்பு என்பது சாதாரணமாக 60 வயதுக்கு அப்புறம்தான் வருகிறது. 1960களில் கூட பல யூரோப்பிய நாடுகள் இன்னும் அபார வளர்ச்சியை அடையவில்லை.
அமெரிக்காவிலும் நிறைய கிராமப்புறங்கள், சிற்றூர்களில் உயர்நிலைப்பள்ளியை எட்டியதும் படிப்பை நிறுத்தி விட்டு தொழில் செய்யப் போனவர்களோ, இல்லை போர்களில் – உலகப்போர், வியத்நாம் போர், கொரியப் போர், பிறகு மேற்காசியப் போர்கள் ஆகியவற்றில் கலந்து கொண்டவர்களும் உயர்நிலைப் பள்ளியில் கூடப் படித்து முடிக்காதவர்களாகவே இருப்பார்களோ என்னவோ. ஏன் முந்தைய காலகட்டங்களில் உயர் படிப்பை முடிக்காதவர்கள் தொகை அதிகமாக இருந்தது என்று கட்டுரையாளர் யோசிக்கவில்லை.
மேலும் உயர்கல்வி அதிகரித்த போது மக்கள் பார்க்கும் வேலைகளும் முன்பளவு உடலுக்குச் சேதம் விளைக்கும் தொழில்களாக இல்லையோ என்னவோ. இவற்றை எல்லாம் ஆராய்பவர்கள் யோசித்திருப்பார்கள் என்று நாம் நம்பிக்கை கொள்ள வேண்டியதுதான்.
[/stextbox]
—————————— ——–
[stextbox id=”info” caption=”மதங்களின் அடிப்படைவாதம்”]

மதங்களும், மத மாற்றங்களையெ நோக்கமாகக் கொண்ட அடப்பிடிவாத இயக்கங்களும் உலகைப் பெரும் சவக்குழியாக, சுடுகாடாக மாற்றி வெகு காலம் ஆயிற்று. இது ஏதோ சமீபத்துக் கொலைக்களமாக உலகம் ஆனதால் நடப்பதல்ல. ஓராயிரம் ஆண்டுகளாகவே இரண்டு செமிதிய மதங்கள் யூரோப்பிலும், மேற்காசியாவிலும், ஆஃப்ரிக்காவிலும் தமது ஆதிக்கமே அரசோச்ச வேண்டும் என்று கருதிப் பிற மதத்தவரைக் கடும் வன்முறைக்கு ஆட்படுத்த நடத்திய போர்கள் ஏராளம். இடையில் உலகப் போர்கள் வந்து மதப்போர்களை பொருளாதார/ இனப்போர்களாக உரு மாற்றி இருந்தன. ஆனால் பொருளாதார அமைப்பு குறித்த கருத்தியலுக்காக பெரும் எண்ணிக்கையில் மக்களைக் கொல்வது சோவியத் யூனியன் வீழ்ந்த பின், மதங்களிடையே போர்களாக மறுபடி மாறிவிட்டது. பல நூறாண்டுகளிடையே பொதுக் காரணி கொலைகளை நடத்தி நிலப்பரப்புகளைக் கைப்பற்றுவது என்பது. அது மறுபடி தலையெடுத்தாலும், இனிமேல் நிலப்பரப்புகளை ஆக்கிரமிப்பது அத்தனை பயனுள்ள நடவடிக்கையாகத் தெரியவில்லை.
சமீபகாலங்களில் செமிதிய மதங்களின் ஆரவாரமான இயக்கங்கள் உலகெங்கும் எல்லாச் சமூகங்களிலும் போரையும், வெறுப்பையும், கடும் மோதல்களையும் விதைத்து வருகின்றன. இது குறித்து யூதத்திலிருந்து மதம் மாறிய ஒரு குடும்ப வரலாறைக் கொண்ட சூஸன் ஜாகோபி ஏன் மதமற்ற நிலைதான் உண்மையில் ஒருவருக்கு இருக்கும் தேர்வு, மற்றெல்லாம் பித்து நிலை என்று எழுதுகிறார். சூழலின் அபாயங்களைக் கருதியோ என்னவோ, புத்தக மதிப்புரை கத்தி முனையில் ஜாக்கிரதையாக நடக்கிறது. புத்தகமே ஜாக்கிரதையுணர்வோடுதான் எழுதப்பட்டதா என்பது குறித்து நமக்குத் தகவல் இல்லை. படித்து விட்டு சொல்வனத்துக்கு மதிப்புரை எழுதித்தான் அனுப்புங்களேன், பார்ப்போம்.
[/stextbox]
—————————— ———–
[stextbox id=”info” caption=”சிக்கனமாக இருப்பது எப்படி?”]
சிக்கனமாக இருப்பது எப்படின்னு எழுதின ப்ளாகை வைத்துக் கொண்டு இவர் பணம் அள்ளுகிறாராம். வருடத்துக்கு 400,000 டாலர்கள் அந்த ப்ளாகில் வருமானமாம். எப்படி எல்லாம் காசு மிச்சம் பண்ணுவது என்று இவர் சொல்வது செய்வதை எல்லாம் பார்த்தால் நமக்குக் கொஞ்சமாவது வியப்பு வரும். இவர் முப்பது வயதிலேயே வேலையிலிருந்து ஓய்வு பெறுவதற்குத் திட்டமிட்டுப் போதுமான நிதி சேர்ந்ததும் ஓய்வு பெற்று விட்டாராம். அன்று அமெரிக்கர்களின் வருடத்துக்கான சராசரி வருமானம் என்று கருதப்பட்ட 24000 டாலர்கள் ஒருவருக்குப் போதும் என்பது இவர் கருத்து. அப்படி வாழத் தேவையான சிக்கனத்தை மட்டுமே கைக்கொள்ளும் இவர், கண்டபடி நுகர் பொருட்களை வாங்கி விட்டு, அதற்குக் கட்டணம் கட்டவென்று எந்நேரமும் வேலை வேலை என்று சுற்றுவது என்னவொரு மூடத்தனம் என்று ஏளனம் செய்கிறார். அதோடு ஒப்பிட்டால் தான் என்னவும் எந்நேரமும் செய்யலாம், நாள் பூராவும் சுதந்திரம் இருக்கிறது, அதுவும் உடல் வலுவும் புத்திக் கூர்மையும் இருக்கிற காலத்தே இத்தனை கால அவகாசம் தனக்கு இருப்பது குறித்து மிகவும் மகிழ்ச்சியும் கர்வமும் கொண்டிருக்கிறார். இவருடைய உத்திகளில் சிலவாவது நமக்கு உதவும் என்றுதான் தோன்றுகிறது.
[/stextbox]
—————————— ——————
[stextbox id=”info” caption=”அமெரிக்காவை கண்டுபிடித்தது யார்?”]

அல் பிரூனியின் பிரமிக்கத் தக்க கணித/ உலக வரைபடச் சாதனைகள் பற்றிய கட்டுரை. அது யாரது திருவாளர் பிரூனி என்று கேட்பீர்களே ஆயின்… கட்டுரையை நீங்களே படியுங்களேன். சுவாரசியமான கட்டுரை. கட்டுரை முழுவதும் அல் பிரூனி பற்றியது இல்லை.
அமெரிக்காவை யார் முதன் முதலில் கண்டு பிடித்தார்கள் என்ற கொக்கி போடும் கேள்விக்குப் பதிலாகக் கட்டுரை வந்து சேர்வது அல் பிரூனியிடம். அப்படி என்றால் அல் பிரூனி அமெரிக்காவைக் கண்டு பிடிக்கக் கடல் பயணமெல்லாம் மேற்கொண்டாரா என்றால், இல்லை.
ஒவ்வொரு புது நபர்களாக புற்றிலிருந்து ஈசல் கிளம்புவது போல வருகிறார்கள். கொலம்பஸுக்கு முன்னாடியே இவர்களெல்லாம் அமெரிக்காவைக் கண்டு பிடித்திருக்கிறார்கள் என்று தோன்றும்படியாகத் துண்டு துக்கடா தகவல்கள், சான்றுகள் கிட்டத் துவங்கி இருக்கின்றன. ஒரு நபர் வெனீஸில் இருந்த ஜியொவானி சபோட்டெ என்பவர். இவரை புது நிலத்துக்குப் பயணிக்கச் சொல்லி அனுப்பியவர்களுக்கு ஏற்கனவே அப்படி ஒரு நிலப்பரப்பு இருப்பது தெரிந்திருந்தது.. காபாட் என்கிற இவர் அதை ருஜூப்படுத்தத்தான் போனார் என்று தெரிகிறது.
ஸ்காண்டிநேவியாவைச் சேர்ந்த வைகிங்க் போராளிகள் அடிக்கடி பல நாடுகளுக்குப் போய் திடீரென்று தாக்கி, பெரும் கொள்ளையை அடித்துக் கொண்டு நாடு திரும்பி விடுவார்கள். அப்படி ஒரு சில தடவை அவர்கள் திட்டமிட்டோ, எதேச்சையாகவோ க்ரீன்லாண்ட்டிற்குப் போய் தங்கி அங்கு குடி இருந்திருக்கிறார்கள். அவர்களில் சிலர் வியாபாரத்துக்கும் போயிருக்கிறார்களாம். ஒரு ஆய்வாளர், இந்த மாலுமி/ போராளிகள் கனடாவின் கரை வரை போய்ப் பார்த்திருக்கிறதற்குச் சான்றுகள் கொடுக்கிறார்கள் என்கிறார்.
லெய்ஃப் எரிக்ஸன் என்பவர் (970-1020) வின்லாண்ட் எனப்பட்ட கனடிய நிலப்பகுதியைக் கண்டு பிடித்ததாக இப்போது ஒத்துக் கொள்ளப்படுகிறது. அவருக்கு முன்பே நியு ஃபௌண்ட்லாண்டின் வடகோடியில் வைகிங்குகள் வந்து போனதற்குச் சான்றுகள் கிட்டி இருக்கின்றனவாம்.
இதே காலகட்டத்தில் இன்றைய உஸ்பெகிஸ்தான், துர்க்மெனிஸ்தான் மேலும் ஆஃப்கனிஸ்தான் ஆகிய நிலப்பகுதிகளிலிருந்து நகரங்களில் வசித்தவர்கள் யூரோப்பிலிருந்து இந்தியாவுக்கும் சீனாவுக்கும் பொருட்களை அனுப்பிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் அடித்த அழகிய தங்க நாணயங்கள் ஆசியாவிலும் யூரோப்பிலும் செல்லுபடி ஆயின. வைகிங்குகள் அந்த நாணயங்களைச் சேமிப்பதில் நாட்டம் காட்டினார்கள். இந்த மத்திய ஆசியாப் பகுதி வியாபாரிகளின் கதைகள் சேகரிக்கப்பட்டு ஆவணமாகக் கிட்டுகின்றனவாம். அவற்றை ஆராய்ந்தவர்கள் பல அப்பிரதேசத்து படிப்பாளிகள். அவர்களில் முக்கியமானவர் அபு ரைஹான் அல்-பிரூனி என்கிறது இந்த அறிக்கை. உஸ்பெகிஸ்தானில் உள்ள ஆரல் கடல்பகுதியில் வாழ்ந்த அல்-பிருனி ஒரு பெரும் மேதை. கணிதம், வான சாஸ்திரம், தாதுப் பொருட்களியல், புவியியல், வரைபடவியல், ஜியாமிதி, ட்ரிக்னோமெட்ரி என்று பற்பல துறைகளில் வல்லுநர். இவர் பர்சிய மொழி, அரபி, கவாராஸ்மியன், மேலும் சம்ஸ்கிருதம் ஆகியவற்றைக் கற்றவர்.
தன் வரைபடவியல் அறிவால் அட்சயரேகைகள், தீர்க்க ரேகைகள் ஆகியனவற்றைக் கணக்கிட வல்லவராக இருந்தார். பல இடங்களின் குறுக்கு வெட்டுப் புள்ளியிடங்களை இப்படிக் கணக்கிட்டு உலக வரை படம் ஒன்றை வரைய முயன்றவருக்கு, பூமி உருண்டை என்பது தெரிந்திருந்தது. அப்போதே 16 அடி உயரமுள்ள உருண்டையாக பூமியைக் கட்டிப் பார்த்திருந்தாராம். தன் தாதுப்பொருள் ஆய்வறிவால் பொருட்களின் ஒப்படர்த்தியை அவரால் கணக்கிட முடிந்திருந்தது. இப்படிக் கருக்கான கணக்கிடுதல்களில் அவருக்கிருந்த தீவிர ஈடுபாட்டால், அவர் நன்கு தெரிய வந்த மேதையாக ஆனார். கஜினி முகம்மது அவரது நாட்டைக் கைப்பற்றி, இவர் போன்ற படிப்பாளிகளைத் தன் அரசவையில் கொணர்ந்து, இந்தியாவுக்கும் இவரை இழுத்துப் போனார். அங்கு இந்து மதம், இஸ்லாம் ஆகியவற்றை ஒப்பிட்டுப் புத்தகங்கள் எழுதினார். அப்போதுதான் இவர் பூமியின் சுற்றளவு போன்றனவற்றைக் கணக்கிட்டார், அப்போது கணக்கில் பொருந்தாதவற்றை வைத்துக் கணக்கிட்டு ஒரு பெரிய நிலப்பரப்பு யூரோப்புக்கும் ஆசியாவுக்குமிடையிலான கடற்பரப்பில் இருக்குமென கணக்கால் ஊகித்து இருந்தார். அவர் நேரில் எதையும் காணவில்லை. ஆனால் ஊகித்து இப்படி ஒரு நிலம் இருக்கும் எனக் கணக்கிட்டு வைத்திருந்தார் (பொதுவருடம் 1037 இல்).
[/stextbox]
—————————— ——–
[stextbox id=”info” caption=”மருந்து நிறுவனங்களின் அறம்”]

இதென்னய்யா அக்கிரமம் என்றுதான் அங்கலாய்ப்பீர்கள், இந்தக் கட்டுரையைப் படித்தால். இது அமெரிக்காவில் நடக்கும் அக்கிரமம் என்றாலுமே இப்படியுமா மருந்து நிறுவனங்களும், மருத்துவ மனைகளும் சாதாரண அமெரிக்கர்களிடம் கொள்ளை அடிப்பார்கள்? அமெரிக்கர்கள்தான் என்ன இத்தனை ஏமாளிகளா என்று கேட்பீர்கள். [டானல்ட் ட்ரம்ப் என்பாரை அதிபர் தேர்தலுக்கு வேட்பாளராக நிறுத்தவிருக்கும் நிலையில் அந்நாட்டின் முக்கியக் கட்சியான குடியரசுக் கட்சி மலை விளிம்பில் நின்று பரிதவிக்கிறது. இப்படி ஒரு சரிவா நமக்கு என்று அக்கட்சியினரே புலம்புகிறார்கள் என்றால் என்னவொரு வேட்பாளராக அவர் இருப்பாரென்று பாருங்கள். அதே நேரம் அக்கட்சியின் உறுப்பினர்கள் இவரைத் தேர்ந்தெடுக்கும் ‘புத்திசாலிகள்’ என்றால் அவர்களின் நிலையில் என்னவொரு சரிவு இருக்க வேண்டும். பிறகு அவர்கள் ஏமாளிகளா என்று கேட்டால் என்ன அர்த்தம்? இருங்க. அங்கு வாழும் பல குடியேறி இந்தியர்கள் ட்ரம்புக்கு ஆதரவாக நிதி திரட்ட முயற்சி செய்கிறார்களாம். ட்ரம்போ ஒரு பிலியனேர். அதாவது சில ஆயிரம் மிலியன் டாலர்கள் சொத்துள்ளவர். அவருக்கு எதற்கு இன்னும் நிதி? ]
அப்படி ஒரு நாட்டில் மருந்து நிறுவனங்கள் புற்று நோய் மருந்துகளை, இரண்டே அளவுகளில்தான் தயாரிக்கிறார்களாம். அவையோ ஆட்களின் உயரம், வயது, எடை ஆகியனவற்றுக்குத் தக்கபடி முழு அல்லது குறைந்த அளவுகளில்தான் கொடுக்கப்பட முடியும். இவை ஊசி மருந்துகள் என்பதால் ஒரு முறை ஒரு புட்டியை ஊசியால் துளைத்து மருந்தை வெளியே எடுத்து விட்டால் மறுபடி அந்த மருந்து பாட்டிலில் எஞ்சியதை எடுத்துப் பயன்படுத்த முடியாது, சட்டப்படியும் மருத்துவ விதிகளின்படியும் அது குற்றம். எனவே ஏராளமான புட்டிகளில் உள்ள மீதி மருந்து அப்படியே குப்பையில் வீசப்படுகிறது. அதனாலென்ன ஒரு சின்ன புட்டிதானே போச்சு என்பவர்களுக்கு அந்தப் புட்டிகளின் விலையைப் பார்த்தால் மயக்கம் வரும். ஒவ்வொரு சிறு ஊசி மருந்து புட்டியும் ஆயிரம் இரண்டாயிரம் டாலர்கள் விலை. சில நோயாளிகளுக்கு இந்த மருந்துகள் ஒவ்வொரு வாரமும் உள் செலுத்தப்பட வேண்டியவை. ஒரு சிகிச்சை மூன்று நான்கு மாதங்கள் எடுத்துக் கொள்ளப்பட வேண்டுமானால் ஒரு நோயாளியே பல ஆயிரம் டாலர்களைக் குப்பையில் வீசக் காரணமாக இருப்பார். புற்று நோயாளிகளின் எண்ணிக்கையோ மக்கள் தொகையில் கூடிக் கொண்டே வருகிறது.
அப்படி வீணாவதை ஏன் தடுக்க முடியவில்லை என்றால் அமெரிக்க அரசும், மருந்துகளைப் பயன்படுத்துவதைக் கண்காணிக்கும் ஒரு அரசு அமைப்பும் மருந்து நிறுவனங்களின் வசதிக்காக இப்படி உற்பத்தி செய்வதை அனுமதித்திருக்கின்றன என்று இக்கட்டுரை குற்றம் சாட்டுகிறது. மேலும் விவரங்களுக்குக் கட்டுரையைப் படியுங்கள்.
உத்தேசமாக வருடத்துக்கு 3000 மிலியன் டாலர்கள் போல புற்று நோய் சிகிச்சைக்கு மட்டுமே வீணாகிறது என்றால் பிற சிகிச்சைகளையும் கணக்கில் சேர்த்தால் எத்தனை ஆயிரம் மிலியன்கள் வீணாகும் என்று யோசித்து மலைத்து நிற்கிறார்கள் அமெரிக்க நோயாளிகளும், சாதாரண மக்களும். இப்படியுமா செய்வார்கள் ஒரு நாட்டில்?
[/stextbox]