சின்ன அண்ணாமலையின் இரு நூல்கள்- 'சொன்னால் நம்ப மாட்டீர்கள்', 'கண்டறியாதன கண்டேன்'

kandariyadhana-228x228 Sonnaal-Nambamaattirgal-228x228

இந்த இரண்டு நூல்கள் பற்றிய அறிமுகத்தை அவற்றிலுள்ள இரு சம்பவங்களோடு துவங்கலாம். இவை இன்றைய காலகட்டத்துடன் ஒப்பிட வேண்டியவை என்பதை முதலிலேயே சொல்லிவிடுகிறேன்.
சிவஷண்முகம் பிள்ளை என்ற காங்கிரஸ்காரர் ராஜாஜியிடம் வருகிறார்.
“நான் சென்னை சட்டமன்றத்தின் சபாநாயகர் பதவிக்கு போட்டியிடுகிறேன். உங்கள் ஆசிர்வாதமும், ஆதரவும் வேண்டும்” என்கிறார்.
ராஜாஜி அவரை ஏற இறங்கப் பார்த்துவிட்டு, “உங்களுக்கு எதிராக யார் போட்டியிடுகிறார்?” என்று கேட்கிறார்.
அவர் ஒரு பெயரைச் சொல்ல, ராஜாஜி, “அவரைவிட நீங்கள் எந்த விதத்தில் அந்தப் பதவிக்கு தகுதி படைத்தவர் என்று நினைக்கிறீர்கள்?” என்று மீண்டும் கேட்கிறார்.
வந்தவர், “நான் சென்னை நகரத்தின் துணை மேயராக இருந்திருக்கிறேன். அவையை நடத்திய நல்ல அனுபவம் உண்டு. என்னை எதிர்த்துப் போட்டியிடுபவருக்கு அது கிடையாது” என்று நிதானமாகச் சொல்கிறார்.
ராஜாஜி உடனடியாக, “நிச்சயம் என் ஆதரவு உங்களுக்குத்தான்.போய் வாருங்கள்” என்று சொல்லி விடுகிறார்.
அப்போது ராஜாஜியுடன் இருக்கிறார் ஒருவர். அவர் கேள்வி கொண்ட பார்வையுடன் ராஜாஜியைப் பார்க்க, ராஜாஜி அவரிடம், “வந்தவர், ஸ்ரீ சிவஷண்முகம் பிள்ளை. ஹரிஜன வகுப்பைச் சேர்ந்தவர். என் கேள்விக்கு அவர் தன் பிறந்த வகுப்பைக் காட்டி ஒரு பலவீனமான காரணத்தைச் சொல்வாரோ என நினைத்தேன். அவர் மிகுந்த தன்னம்பிக்கையுடன் தன் பலத்தைச் சொல்லி ஆதரவு கேட்டார். நிச்சயம் அந்தப் பதவிக்கு இவர்தான் தகுதி என்று உறுதி செய்து கொண்டேன்” என்கிறார்.
உடன் இருந்தவர்தான் இந்த நிகழ்வைப் பதிவு செய்தவர். “சொன்னால் நம்பமாட்டீர்கள்” மற்றும் ”கண்டறியாதன கண்டேன்” எனும் இந்த இரு நூல்களை எழுதியவர்.
இந்த நூலாசிரியர் பற்றிய சுவையான செய்தியும் இந்நூல்களில் உண்டு. 1942 ஆகஸ்டு புரட்சி நடக்கிறது. அப்போது திருவாடனை பகுதியில் கூட்டம் போட்டு மிகத் தீவிரமாகப் பேசியிருக்கிறார் நூலாசிரியர். அதற்காக, அவரை போலீசார் கைது செய்து திருவாடனை சிறையில் வைக்கிறார்கள்.
விஷயமறிந்த மக்கள், ஆயிரக்கணக்கில் திரண்டு சிறையை நோக்கி வருகிறார்கள். அதைக் கேள்விப்பட்டு மிரண்டு போயினர் போலீசார். காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் இல்லாத நிலை வேறு.
இச்சமயத்தில் நிலைமையை எப்படி சமாளிப்பது என்று கைது செய்யப்பட்ட அவரிடமே யோசனை கேட்கிறார்கள்.
“பக்கத்திலேயே இருக்கும் உங்கள் பணிக் குடியிருப்புக்குச் சென்று விடுங்கள். உங்கள் உடுப்புக்களை மட்டும் காவல் நிலையத்தின் முன்னே போட்டுவிடுங்கள். மீதியை நான் பார்த்துக் கொள்கிறேன்” என்கிறார் அவர்.
அவர்கள் அப்படியே செய்கிறார்கள். வந்திருக்கும் கூட்டத்தின் தலைவர்களிடம் இவர் பேசி அமைதி காக்கச் சொல்கிறார். அடங்காத கூட்டம் லாக்கப் சாவியை ஒரு காவலரிடமிருந்து பெற்று லாக்கப்பைத் திறந்து அவரை விடுவிக்கிறது. ஆத்திரம் தாங்க முடியாமல், காவல் நிலையத்தைக் கொளுத்துகிறது.
காவலர்களின் குடியிருப்புப் பகுதிக்கும் கலவரம் செய்யப் போக எத்தனிக்கிறது. அவர்களைத் தடுக்கிறார் இவர்.
போலீஸார் கழட்டிப் போட்டிருந்த உடுப்புகளை எரித்துவிட்டு இவரைத் தோளில் ஏற்றிக் கொண்டு கோஷமிட்டுக் கொண்டே திரும்புகின்றது கூட்டம். அந்தச் சமயம் பார்த்து காவல் நிலையத்தின் இன்ஸ்பெக்டர் ஒரு பெரும் போலிஸ் படையுடன் எதிரே வந்துவிடுகிறார். துப்பாக்கிச் சூடு நடக்கிறது.
சிலர் இறக்கிறார்கள்.
இவருக்குக் கையில் குண்டு பாய்ந்து காயம்.
எப்படியோ பிழைத்து, காவல் துறையிடம் இருந்து தப்பி, சென்னை சென்று விடுகிறார். பின் அங்கிருந்து கம்பன் அடிப்பொடி சா. கணேசன், கல்கி முதலானோர் உதவியுடன் காசிக்கு ரயிலேறுகிறார். இடையில் இட்டார்சி ரயில் நிலையத்தில் சாப்பிடப் போகிறார்.
ஹோட்டல் விலை பட்டியல் பற்றித் தமிழில் விவாதிக்க, அங்கிருந்த சர்வர் “தமிழா?” என்கிறார்.  இவரிடமே திருவாடானை சம்பவம் குறித்து ஆர்வத்துடன் கேட்கிறார். அந்தச் சம்பவத்தின் நாயகனே இவர்தான் என்று அறிந்து பிரமித்துப் போகிறார். சாப்பாட்டுச் செலவை அந்த சர்வரே ஏற்றுக் கொள்கிறார்.
பின் அங்கிருக்கும் ஒரு தமிழரிடம் அறிமுகம் செய்கிறார். அந்தத் தமிழர் பிரிட்டிஷ் அரசிடம் வேலை செய்யும் ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர்.
அந்த இன்ஸ்பெக்டர் (காவல் நிலைய எரிப்புக் குற்றவாளியான) இவரைத் தனது வீட்டுக்கே அழைத்துச் சென்று விருந்தளித்து மகிழ்கிறார்.
அப்போது அங்கே வரும் இன்ஸ்பெக்டரின் சிறு வயது மகனைக் கண்டு, அவன் பெயரை இவர் கேட்கிறார். அந்தச் சிறுவனின் பெயர் காந்தி.
அதற்குள் மெட்ராஸ் மாகாணத்தில் இவர் தலைக்கு ரூபாய் பத்தாயிரம் விலை நிர்ணயிக்கப்படுகிறது. இவரது தந்தையை போலீசார் பிடித்து வைத்து விடுகிறார்கள்.
அதைக் கேள்விப்பட்ட இவர் நேராக வந்து சரணடைகிறார். கோர்ட்டில் 41 வருடங்களுக்கு எனத் தண்டனை விதிக்கப்படுகிறது. பிறகு ராஜாஜி வழக்கு நடத்தி, 8 மாத காலமாக  குறைக்கப்படுகிறது.
வெளியே வந்து மீண்டும் தேசப்பணியைத் தொடர்கிறார்.
முதலில் சொன்ன சம்பவத்தில் ராஜாஜியுடன் இருந்தவரும், இந்தத் திருவாடானை ஜெயில் உடைப்பு சம்பவத்தின் நாயகரும் ஒருவரே. அவர்தான் ஸ்ரீமான் சின்ன அண்ணாமலை. இந்த நூல்களின் ஆசிரியரும் அவரே.
ராஜாஜி, காமராஜ், ம.பொ.சி, கல்கி, சிவாஜி கணேசன், கண்ணதாசன், ஆகியோருடன் நெருங்கிப் பழகியவர். தமிழ்ப் பண்ணை என்ற பதிப்பகத்தைக் கொண்டு பல அரியத் தமிழ் புத்தகங்களைக் கொண்டு வந்தவர் இந்தச் சின்ன அண்ணாமலை.
மேலே சொன்ன இரண்டு சம்பவங்களும், சின்ன அண்ணாமலை அவர்களின் “கண்டறியாதன கண்டேன்” மற்றும் “சொன்னால் நம்பமாட்டீர்கள்” எனும் இரு நூல்களில் விவரிக்கப்படுகின்றன.
சொல்லப்போனால், இந்த இரு நூல்களைப் பற்றி எழுதத் தொடங்கினால், அவற்றில் சொல்லப்படும் சம்பவங்களில் ஒன்றிரண்டை மட்டும் சொல்லிவிட்டு நிறுத்தவே முடியாதென்றே தோன்றுகிறது.
அவ்வளவு சம்பவங்கள். சாகசங்கள்.
chinna-annamalai
 
இவ்விரண்டில் “கண்டறியாதன கண்டேன்”  எனும் நூல் சின்ன அண்ணாமலை அதே பெயரில் முன்பு எழுதிய நூலையும், அவருடைய மற்றொரு நூலான “காணக் கண் கோடி வேண்டும்” என்கிற நூலையும் அடக்கிய தொகுப்பாகும்.
“கண்டறியாதன கண்டேன்” என்ற  நூல் முதன்மையாக, மேலே சொன்ன அந்த சிவஷண்முகம் பிள்ளை அவர்கள் சென்னை மாகாணத்தின் சபாநாயகராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபின், தென் தமிழ்நாட்டில் அவர் தலைமையில் நடந்த ஹரிஜன ஆலயப் பிரவேசம் பற்றியதாகும்.
1946லிருந்து 1955 வரை மெட்ராஸ் ராஜதானியின் சட்டசபையிலும், பின் சென்னை மாகாணத்தின் அவையிலும், அவை நாயகராக விளங்கிய சிவஷண்முகம் பிள்ளை தலைமையில்தான் சுதந்திர காங்கிரஸ் அரசு தனது ஹரிஜன ஆலயப் பிரவேச நிகழ்ச்சிகளைத் தீவிரமாக முன்னெடுத்தது.
அந்த நிகழ்ச்சிகள் அனைத்திலும், சின்ன அண்ணாமலையும் கல்கியும் சிவஷண்முகம் பிள்ளையின் கூடவே பயணம் செய்து ஒவ்வொரு ஆலயத்தையும் கண்டு வந்திருக்கின்றனர். ஹரிஜன ஆலய பிரவேச நிகழ்ச்சி என்பது வெறும் சடங்காக நிகழ்த்தப்பட்டதோ என்ற சந்தேகம் உள்ளவர்கள், நிச்சயம் இந்தப் புத்தகத்தைப் படிக்க வேண்டும்.
அக்காலத்தில் கோவில் நுழைவு சீர்திருத்தம் உருவாக்கிய பெரும் எழுச்சியையும், ஹிந்துக்களிடையே அதற்கு இருந்த ஆதரவையும் பற்றி படிப்பது உண்மையில் ஒரு மெய்சிலிர்க்க வைக்கும் அனுபவமாக உள்ளது.
சிவஷண்முகம் பிள்ளை அவர்களின் பேச்சுகள், ஒரே சமயத்தில், ஹரிஜனங்களின் சுயமரியாதையை தட்டி எழுப்பி அவர்கள் கடக்க வேண்டிய தூரத்தை நினைவுபடுத்தி, அவர்களை அதற்குத் தயார் செய்தன. அதே சமயத்தில், கேஸ்டிஸ்ட் இந்துக்களின் மனசாட்சியின் மீது தொடுக்கப்பட்ட கூரிய அம்புகளாகவும் அமைந்திருக்கின்றன.
கல்கி சிறந்த எழுத்தாளர் மட்டுமல்ல, மிகச் சிறந்த மேடைப்பேச்சாளரும் கூட என்பதை நாம் அறிந்திருக்கிறோம். அவருடன் ஒரே மேடையில் பேசுகையில், அவருக்கு முன் சற்றும் தரம் குறைந்துவிடாமல், தனக்கே உரிய பாணியில், பேசியும், பாடியும், மக்களைக் கவர்ந்தவர் சின்ன அண்ணாமலை என்பதையும் இந்த நூலில் காண முடிகிறது.
ஹரிஜன ஆலயப் பிரவேச நிகழ்ச்சியானது, ஹிந்துக்களை மட்டுமல்லாது, கிறுத்தவர்களையும் கவர்ந்து அவர்கள் ஆதரவையும் பெற்றிருந்திருக்கிறது. அதை மணப்பாடு கிராமத்தில் இந்தச் செயல் வீரர்கள் பெற்ற வரவேற்பில் நாம் காண முடிகிறது.
“கண்டறியாதன கண்டேன்” எனும் நூலின் நாயகர்கள் இருவர்.
ஒருவர் சிவஷண்முகம் பிள்ளை. 1946லிருந்து 55 வரை மெட்ராஸ் ராஜதானியின் சபாநாயகராக பதவி வகித்தவர், தாழ்த்தப்பட்ட சமூகத்தை சார்ந்தவர்.
இவர்தான் முதன் முதலில் சபாநாயகர் பதவி வகித்த ஹரிஜனர். ஆனால், சமீபத்தில், தமிழகச் சட்டமன்றத்தின் சபாநாயகராக திரு. தனபால் பதவியேற்றபோது, அவர்தான் தமிழகச் சட்டமன்ற வரலாற்றின் முதல் ஹரிஜன சபாநாயகர் என்று எல்லா பத்திரிக்கைகளும், அவர் சார்ந்த கட்சியும் கூறியது எப்படி என்பது தெரியவில்லை. ஒருவேளை தமிழ்நாடு என்று  பெயர் மாற்றம் செய்யப்பட்ட பிறகு என்ற அடிப்படையில் சொல்கிறார்கள் போல.
இன்னொரு நாயகர் ராஜாஜி. அவரை “குல்லுக பட்டர்” என்றும் ”குலக்கல்வியின் பிதாமகர்” என்றும், “சாதி அமைப்பை பாதுகாக்கவே முனைந்தவர்” என்றும் இன்று பிரச்சாரங்கள் நிலவுகின்றன. மாறாக, ஹரிஜன நலன் என்பது ராஜாஜிக்கு எந்த அளவுக்கு முக்கியமானது என்பது இந்த புத்தகங்களைப் படித்தால்தான் தெரியும்.
ஒருமுறை சிவஷண்முகம் பிள்ளையுடன் திருப்பதி செல்கிறார் ராஜாஜி. அங்கு மலை மீது ஏறக்கூட அன்று ஹரிஜனங்களுக்கு உரிமை இல்லை என்பதை அறிந்து வேதனையுடன் பிள்ளையிடம், “என் உயிர் போவதற்குள் இந்த பிரச்னைக்கு தீர்வு காணாமல் ஓயமாட்டேன்” என்று சூளுரைக்கிறார் ராஜாஜி.
அதே போல திருச்செந்தூர் கோவிலுக்கு ஒரு முறை செல்லும்போது அங்கேயும் ஹரிஜனங்களுக்கு அனுமதி இல்லை என்று கேள்விப்பட்டவுடன், தானும் அந்தக் கோவிலுக்குள் நுழையமாட்டேன் என்று திரும்பிவிடுகிறார் ராஜாஜி.
பின்னர் ராஜாஜி மீண்டும் முதல்வராக ஆனபிறகு, தமிழகப் போலீஸ் துறையில் உதவி சூப்பரிண்டண்ட் பதவி ஒன்று காலியாகிறது. அது ஹரிஜனங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட பதவி. அவ்விடத்துக்கு தகுதியுள்ள ஆள் கிடைக்கவில்லை என்றும் அதனால் இதர ஜாதியினருக்கு அப்பதவியைக் கொடுத்துவிடலாம் என்றும் ஆலோசனை சொல்லப்படுகிறது. ராஜாஜி அதை ஒப்புக்கொள்ளவில்லை.
கக்கன், பிள்ளை ஆகியவர்களிடம் கலந்தாலோசித்து காவல் துறையிலேயே இருக்கக் கூடிய அரிஜன இளைஞர் ஒருவரை கண்டுபிடிக்க வைக்கிறார். கமிஷனர் அலுவலகத்திலேயே அவரை நேரடித் தேர்வு எழுதச் செய்கிறார். அதில் தேர்ச்சியடைந்தாலும், அந்த இளைஞருக்கு அந்தப் பதவிக்கான உடல்வாகு இல்லை. பிரச்சினை ராஜாஜியிடம் வருகிறது.
“இதுவரை அவர் நல்ல சத்துள்ள உணவே உண்டிருக்க மாட்டார். அதனால் அப்படி இருக்கிறார். வேலையைக் கொடுத்து 6 மாதம் கழித்துப் பாருங்கள், வேலை தந்த தன்னம்பிக்கையும், நல்ல உணவும் அவர் உடலை தேற்றிவிடும்” என்கிறார் ராஜாஜி.
அது போலவே நடக்கிறது. அந்த ஹரிஜன இளைஞர்தான் பிற்காலத்தில் புகழோடு காவல்துறை  உயர் அதிகாரியாக பணியாற்றிய சிங்காரவேலு அவர்கள்.
“கண்டறியாதன கண்டேன்” எனும் நூலின் இரண்டாம் பகுதி ராஜாஜி வங்காள மாகாணத்தின் கவர்னராக பதவியேற்றதை ஒட்டியும், தாகூரின் சாந்தி நிகேதனில், ஒரு தமிழ் இருக்கை அமைப்பதற்கான விழாவை ஒட்டியும், சின்ன அண்ணாமலை, டி. கே. சிதம்பரநாத முதலியார், மற்றும் கல்கி ஆகியோர் கல்கத்தா சென்று அங்கே அடைந்த அனுபவங்களின்  தொகுப்பு.
அந்த சமயத்தில் எட்டையபுரத்தில் பாரதி மணி மண்டபம் அமைப்பதற்கான, நிதி திரட்டும் முயற்சியில், இம்மூவரும் ஈடுபட்டிருந்தனர் என்பதும், அதற்குக் கொல்கத்தா வாழ் தமிழர்கள் தந்த பெரும் ஆதரவையும், இவர்களது சாந்தி நிகேதன் அனுபவங்களையும், மிக மிக சுவாரஸியமாகச் சொல்லியிருக்கிறார் சின்ன அண்ணாமலை.
“கண்டறியாதன கண்டேன்” எனும் இந்த நூல் இரு பெரும் முயற்சிகளை ஒட்டிய அனுபவங்களின் தொகுப்பு என்பதால் ஓரளவு சுலபமாகச் சொல்லிவிட முடிகிறது. ஆனால், இரண்டாவது புத்தகமான “சொன்னால் நம்பமாட்டீர்கள்”  எனும் நூலில் சொல்லப்படும் அவர் வாழ்க்கை அனுபவங்களின் எண்ணிக்கையும் அவற்றின் வகைகளும், எப்படி விவரிப்பது என்ற பெரும் திகைப்பையே ஏற்படுத்துகின்றன.
நான் முதலில் சொன்ன அந்தத் திருவாடானை சம்பவம் ஒரு பதச் சோறுதான். அதைப் போல சாகசமும், சங்கடமும், சந்தோஷமும் தரும் நூறு அனுபவங்கள் அவரது வாழ்வில் நடந்துள்ளன. ஒரு தனி மனிதனின் வாழ்வில் இவ்வளவு சுவாரசியமான நிகழ்வுகள் இடம்பெற முடியுமா, இவ்வளவு வகையான மனிதர்களிடம் பழக்கம் வைத்துக் கொள்ள முடியுமா என்ற பிரமிப்பு ஏற்படுகிறது.
ராஜாஜியுடன் மட்டுமல்ல, காமராஜருடனும் நெருக்கமாக இருந்திருக்கிறார் சின்ன அண்ணாமலை. எதிர்முகாமில் இருந்தாலும் அண்ணாத்துரையும் அவர் மீது தனி அன்பு வைத்திருந்ததை அறிந்துகொள்ள முடிகிறது.
சிவாஜி கணேசன் ரசிகர் மன்றப் பேரவையைத் துவக்கி 7 வருடங்கள் அதன் தலைவராக இருந்தவர் சின்ன அண்ணாமலை. அதே சமயம், சிவாஜிக்கு எதிர்முகாமாகக் கருதப்பட்ட எம்ஜிஆரை அவரின் முதல் சமூகப் படமான திருடாதே படத்தில் நடிக்க ஒப்புக் கொள்ள வைத்திருக்கிறார்.
கண்ணதாசனுக்கு மிக நெருக்கமானவர். மபொசியின் தமிழரசுக் கழகத்தில் இணைந்து அவர் தோளோடு தோள் நின்று  போராட்டங்களில் பங்கு கொண்ட அனுபவங்கள் இந்நூலில் வருகின்றன.
கலைவாணர் என்.எஸ்.கேவுடன் ஒரு கூட்டத்தில் பேசுகிறார். அப்போது என்.எஸ்.கே பேசிய பின்பு கூட்டம் கலையாமல் தான் பேசுவதாக ஆயிரம் ரூபாய் சவால் வைக்கிறார். அதில் வென்று, அந்தக் கூட்டம் நடைபெற்ற சென்னை தக்கர் பாபா அமைப்புக்கே தான் வென்ற பணத்தை நன்கொடையாக வழங்குகிறார். (தக்கர் பாபா அமைப்பு ஹரிஜனங்களின் மேம்பாட்டுக்கான அமைப்பு.)
ஈவெராவுடன் ஒரே மேடையில் பேசிப் பெற்ற 10 ரூபாயை பின்னர் வேறு ஒரு நிகழ்வில் ஈவெராவிடமே திருப்பி அளித்திருக்கிறார்.
இவை எல்லாவற்றையும் விட, காந்திஜியின் ஹரிஜன் பத்திரிக்கையின் தமிழ்ப்பதிப்புக்கு பொறுப்பாளராக இருந்திருக்கிறார். ராஜாஜியின் பரிந்துரையின் பேரில் அந்தப் பொறுப்பை அவருக்குத் தரும்போது, “பொதுவாக ராஜாஜி யாருக்கும் சிபாரிசு செய்யவே மாட்டார். ஆனால், அவரே உங்களுக்கு சிபாரிசு செய்யும்போது, அதை  மதிக்கிறேன்” என்று சொல்லி இருக்கிறார் மஹாத்மா காந்திஜி.
தமிழகத்தில் 50களில் காங்கிரஸை பலவீனப்படுத்திய முக்கியமான ஒரு நிகழ்வு காங்கிரஸில் உண்டான பிளவு. காமராஜரும் ராஜாஜியும் அந்தப் பிளவுபட்ட பிரிவுகளின் தலைவர்கள். அந்தப் பிளவின் போது  ராஜாஜியின் சார்பாக, அவரது மந்திரிசபைக்கு ஆதரவு  தரச்சொல்லி துணிச்சலோடும், உரிமையோடும் காமராஜரிடமே வாதிட்டிருக்கிறார், சின்ன அண்ணாமலை!
அப்போது காமராஜர் ஒரு கட்டத்தில் மிகவும் பொறுமையிழந்து, “போ, போய்  அந்தக் கிழவரையே கட்டிக்கொண்டு அழு!” என்று சொன்னதாக எழுதியிருக்கிறார். சொன்னால் நம்பமாட்டீர்கள் ரக சம்பவங்களில் இதுவும் ஒன்று.
அதிகார மையங்களுக்கும், அதிகாரத்தில் இருந்தவர்களுக்கும் இவ்வளவு அருகில் இருந்தும், தனக்கென தனிப்பட்ட முறையில் எதுவும் பெறாதவராகவே இருந்திருக்கிறார் சின்ன அண்ணாமலை.  இதை அவர் குடும்பம் அடைந்த வறுமையில் இருந்து புரிந்து கொள்ள முடிகிறது. அதை உறுதிபடுத்தும் சம்பவம் ஒன்றைச் சொல்கிறேன்.
ராஜாஜி அமைச்சரவையில் இருந்த டாக்டர். டி.எஸ்.எஸ். ராஜன் ஒருமுறை இவரிடம், ”என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?” என்று கேட்கிறார்.
“புத்தகப் பதிப்புத் தொழிலில் இருக்கிறேன்” என்று பதில் சொல்கிறார் இவர்.
“அது சரி. சாப்பாட்டுக்கு என்ன செய்கிறீர்கள்?” என்கிறார் ராஜன்.
“மனைவியின் நகைகளை விற்றுச் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன்” என்கிறார் நம்மவர்.
விஷயம் ராஜாஜியின் காதுக்குப் போகிறது. சின்ன அண்ணாமலையின் மனைவியிடம், இனிமேல் தன் கணவரின் தொழிலுக்காக நகைகளை கொடுக்க மாட்டேன் என்று சத்தியம் வாங்கிக்கொள்கிறார் ராஜாஜி!
அப்படி தப்பித்தன சில நகைகள். அந்த நகைகளை “ராஜாஜி காப்பாற்றிய நகைகள்” என்று பயபக்தியோடு வைத்துக் காப்பாற்றுகிறார் சின்ன அண்ணாமலையின் மனைவி!
இந்த அரசியல், பத்திரிகை அனுபவங்களுக்கிடையே கிங்காங்- தாராசிங் இருவரது போட்டா போட்டி காட்டா குஸ்தி காட்சிகளின் அமைப்பாளராகவும் இருந்து,அதற்காக பம்பாய் வரை சென்று போட்டிகள் நடத்தி, வெற்றிகரமான வசூல் சக்ரவர்த்தியாகவும் சின்ன அண்ணாமலை இருந்திருக்கிறார்.
இந்த மாதிரியான புத்தகங்களைப் பற்றி எழுதுவதில் உள்ள பெரிய சிரமமே இவற்றில் கொட்டிக் குவிந்திருக்கும், பல அற்புதமான சம்பவங்களில் எதை விடுத்து எதைச் சொல்வது என்பதுதான்.
இந்தப் புத்தகத்தைப் பொறுத்தவரையில், அவரது தனிப்பட்ட வாழ்வின் சம்பவங்கள் அதிகம் இல்லை. அப்படி இடம் பெற்றிருக்கும் சம்பவங்களில் சுவாரசியமான இரண்டும், முக்கியமானது ஒன்றும்-
இது தற்காலத்துக்கும் பொருள்படக்கூடிய சம்பவம். சுதந்திரம் கிடைத்த சில மாதங்களில் பம்பாய் செல்கிறார் சி.அண்ணாமலை. ஒரு இடத்தில் நிகழும் நாடக விழாவுக்குச் சென்றுவிட்டு மாதுங்கா செல்ல வேண்டும் கலவர நேரம். எந்த டாக்சியும் நிறுத்த முடியவில்லை. ஒரே ஒரு டாக்சி கிடைக்கிறது. ஓட்டுனரிடம், “நானும் இந்து நீயும் இந்து இந்துவுக்கு இந்து உதவி செய்,” என்று கெஞ்சுகிறார். அந்த ஓட்டுனர் மாதுங்கா வரச் சம்மதித்து அங்கு அவரை இறக்கி விட்டுவிட்டுச் சொல்கிறார். “நீங்கள் சொன்னது மிகச் சரி. நான் ஒரு இந்துவுக்கு கண்டிப்பாக உதவியாக வேண்டும். அப்போதுதான் நான் குர்ஆனில் சொல்லியிருக்கும் முசல்மானாக இருப்பேன்,” என்று.
இன்னுமொரு சுவையான சம்பவம், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை மற்றும் சிவாஜிகணேசன் சம்பந்தப்பட்டது. ஒருமுறை நாகர்கோவிலில் உள்ள கவிமணியை சிவாஜியும் சி.அவும் சந்திக்கிறார்கள், “இவர் சிவாஜி கணேசன்,” என்று அறிமுகப்படுத்துகிறார் சி.அ. கவிமணி, “அப்படியா? சந்தோஷம், என்ன தொழில் பண்றீங்க?” என்று கேட்கிறார். ஒருவர் முகத்திலும் ஈயாடவில்லை. அவர் மிகச்சிறந்த நடிகர் என்று சி.அ விவரிக்கிறார். பின் சிவாஜி , “நாம் என்னவோ மிகப் பெரும் புகழ் பெற்றுள்ளோம் என்று நினைக்கிறோம். ஆனால் அறிஞர்களுக்கு நம்மைத் தெரியவில்லை. அதற்காக இன்னமும் சிறப்பாக பாடுபட வேண்டும்,” என்று சொல்கிறார். பின் நடப்பதுதான் சொன்னால் நம்பமாட்டீர்கள் மொமெண்ட். இது நடந்த ஒரு மாதத்திற்குள், கவிமணி கப்பலோட்டிய தமிழன் படம் பார்த்துவிட்டு, அதில் சிவாஜியின் நடிப்பை பாராட்டி ஒரு பெரிய கடிதம் சிவாஜிக்கு எழுதுகிறார்!
இந்த நூலில் உள்ள முக்கியமான, என் மனதைத் தொட்ட சம்பவம் இது-
இளவயதில், அவர் உள்ளூரில் தந்த தொந்தரவுகளைத் தாங்கமுடியாது (வேறு என்ன, காங்கிரஸ் ஆதரவு, கள்ளுக்கடை மறியல், காந்தியப் போராட்டங்கள்) அவரது தந்தை அவரை மலாயாவுக்கு அனுப்பிவிடுகிறார். அங்கு போயும் சின்ன அண்ணாமலை சும்மா இருக்கவில்லை.
அங்கு இருந்த தமிழ்த் தொழிலாளிகளிடையே குடிப்பழக்கம் இருந்தது. அந்தக்  குடிப்பழக்கத்தை நிறுத்த, இந்தியாவில் தான் செய்து கொண்டிருந்த கள்ளுக் கடை மறியல் போராட்டத்தை மலாயாவில் தொடங்கி, அங்கே இருந்த தமிழ்ப் பெண்களின் ஏகோபித்த ஆதரவைப் பெறுகிறார்.
ஒரு கட்டத்தில் அந்தப் பெண்கள் சில கள்ளுக் கடைகளுக்குத் தீவைத்துக் கொளுத்தி விடுகிறார்கள். அங்கிருந்த பிரிட்டிஷ் அதிகாரி,  இதற்குக் காரணமான நம்மவரை, ”Bring that man  here” என்று உத்தரவு போடுகிறார். அப்போது பதினேழே வயதான சின்ன அண்ணாமலையை அவர் முன் கொண்டு நிறுத்துகிறார்கள்.
வியப்பு தாள  முடியாமல், ”He is a boy !” என்று வியந்து கூவுகிறார் பிரிட்டிஷ் அதிகாரி.
அதற்குப் பதிலாக நம்மவர் சொல்கிறார், ”But, I am a father of a boy”.
ஆம். அப்போது சின்ன அண்ணாமலைக்குத் திருமணமாகி ஒரு குழந்தையும் இருந்தது. அந்த வெள்ளைக்கார அதிகாரியால் வியப்பைத் தாங்க முடியவில்லை. உடனே தனது மனைவியை அழைத்து இவர் சொன்னதைச் சொல்கிறார். பிறகு உரையாடல் இப்படிப் போகிறது:
“உனக்கு இப்போது என்ன வயது?”
”பதினேழு.”
“எப்போது திருமணம் ஆனது?”
”13 வயதில்.”
”13 வயதில் திருமணம் செய்துகொண்டு என்ன செய்வது?”
”பிள்ளை பெறுவது !” என்று பதில்.
வெடித்துச் சிரித்தனர் பிரிட்டிஷ் தம்பதிகள்.
அடுத்த கேள்வி, “உன் பிள்ளை உன் போல சிவப்பா?”
”நான் இன்னும் பார்க்கவில்லை.”
”பார்க்க ஆவலில்லையா?”
”பார்க்க ஆசையாய் இருக்கிறது.”
“அப்படியிருக்கும்போது ஏன் இந்த மாதிரி வன்முறையில் எல்லாம் ஈடுபடுகிறாய்?”
”நான் காந்தியவாதி. வன்முறையில் ஈடுபடவில்லை. கள்ளுக் கடையின் மேல் உள்ள வெறுப்பால் பெண்கள் அதற்குத் தீ வைத்துவிட்டனர். செய்யாத குற்றத்துக்காக என்னை தண்டிப்பது சரியா என்று மேன்மை தங்கிய சீமாட்டியிடம் கேட்கிறேன்.”
சீமாட்டி சீமானின் காதில் ஏதோ சொல்கிறார்.
உடனே தண்டனை தீர்ப்பாகிறது. ஒரு மாத காலத்திற்குள் பிள்ளையைப் பார்க்க ஊர் போய்ச் சேர வேண்டும் என்பதே அது. அங்கிருக்கும் மற்ற ஆண்கள் உடனடியாக அவரை ஊருக்கு அனுப்பிவிட்டுத்தான் மறுவேலை பார்க்கிறார்கள்.
மேலே சொன்ன சம்பவம் நகைச்சுவையுடன் கூடியது என்றால், சின்ன அண்ணாமலையும் அவரது மனைவியும் ராஜாஜி மீது வைத்திருந்த களங்கமற்ற மனமார்ந்த பக்தியோ நெகிழ்வூட்டக்கூடியது.
ராஜாஜி ஒருமுறை சின்ன அண்ணாமலையின் வீட்டுக்கு வந்திருக்கிறார். அப்போது, நம்மவர் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார். “நீங்களும் சாப்பிடுங்கள்” என்று சொன்னதும், “செட்டி நாட்டு இட்லி மிகவும் பிரபலமாயிற்றே. இரண்டு இட்லிகள் கொண்டு வாருங்கள்” என்கிறார் ராஜாஜி.
”பிராமணரான நீங்கள் எங்கள் வீட்டில் சாப்பிடுவது அபச்சாரமில்லையா?” என்று பயந்து கேட்கிறார் அண்ணாமலையின் மனைவி.
அங்கு ராஜாஜி, தனக்கான தர்மத்தைக் கடைபிடிப்பவர்களே பிராமணர்கள் என்று அவருக்கும் மற்றவர்களுக்கும் விளக்கிச் சொல்கிறார். உண்மையான பிராமணர்களுக்கு இது மாதிரியான தடைகள் எதுவும் இல்லை என்றும் விளக்கி அங்கே சாப்பிடுகிறார் ராஜாஜி.
அதிலிருந்து அவரது பரம பக்தையாகிவிடுகிறார் அண்ணாமலையின் மனைவி. அவரது மரணம் கூட ராஜாஜி ஆசீர்வதித்தது போல தீர்க்க சுமங்கலியாகவே நிகழ்கிறது. அதுவும் எப்படி?
ராஜாஜி தனது வாழ்வின் இறுதியில் மருத்துவமனையில் இருக்கும் அதே சமயத்தில் சின்ன அண்ணாமலையின் மனைவியும் உடல்நலம் மிகவும் குன்றி இருக்கிறார். ஒருமுறை நோயின் தாக்கத்தில் நினைவிழந்து இருந்து மீண்டும் விழிக்கையில், தனது கணவர் எங்கே, என்று கேட்கிறார்.
”ராஜாஜியின் மரணத்தை அறிந்து அங்கே செண்டிருக்கிறார் உங்கள் கணவர்” என்று ஒரு உறவினர் சொல்லிவிடுகிறார்.
“என்ன! ராஜாஜி இறந்துவிட்டாரா?” என்று கேட்டவர் அப்படியே நினைவிழந்து இறந்தும் விடுகிறார்.
அந்த உத்தம மனைவியின் அரும் மரண நிகழ்வுக்குச் சற்றும் குறையாதது, சின்ன அண்ணாமலை அவர்களின் மரணமும்.
1980ல் தனது பிறந்த நாள் மணிவிழாவின்போதே, அந்தச் சடங்குகள் நடந்துகொண்டு இருக்கையிலேயே மரணம் அடைகிறார் சின்ன அண்ணாமலை.
அவ்வமயத்தில் கவிஞர் கண்ணதாசன் அந்த மரணத்தின் விசேஷத் தன்மையை, 60 வயது பூர்த்தியாகி, தான் பிறந்த அதே நாளிலும் கோளிலும் ஒரு மனிதன்  இறந்து போவதின் சிறப்பினை எழுதியதைப் படித்தது இன்னும் என் நினைவில் உள்ளது. ஒரு அசாதாரண வாழ்க்கையின் அசாதாரண முடிவு.
உண்மையில், சுற்றிலும் சூழ்ந்திருக்கும் அவநம்பிக்கை இருளில் இது போன்ற ஒரு லட்சியவாத காலகட்டத்தின் வாழ்க்கை அனுபவங்களைப் படிப்பது முற்றிலும் ஒரு பரவச அனுபவம். மட்டுமல்ல. ஏதோ ஒரு வகையில் சூழ்ந்திருக்கும் இருள் நிரந்தரமல்ல என்ற நம்பிக்கை  ஊட்டும் ஒளிமிகுந்த உணர்வுகளையும் நமக்கு அளிக்கும் உன்னத அனுபவம் என்றும் சொல்லலாம்.
இன்று சின்ன அண்ணாமலை போன்ற எத்தனையோ தியாகிகளின், செயல் வீரர்களின் நினைவுகள்  மங்கலாகிக் கொண்டிருக்கும் வேளையில், உண்மையில் இந்தப் புத்தகங்களை இன்றைய சூழலில் மிக அழகாக மறுபிரசுரம் செய்திருக்கும் சந்தியா பதிப்பகத்தினரை எவ்வளவு பாராட்டினாலும் போதாது.
கூடவே இந்தக் கட்டுரைகள் முதன்முதலில் வெளிவந்த தேதி, மாதம், மற்றும் ஆண்டு விவரங்கள் கட்டுரைகளின் கீழே தரப்பட்டிருந்தால் சமகால வரலாற்றின் போக்கினை அறிந்து கொள்வதற்கு இன்றைய ஒரு இளம் வாசகனுக்கு மிகவும் உதவியாக இருந்திருக்கும் என்பதையும் சொல்ல வேண்டும்.
அடுத்து வரும் பதிப்புகளில் இதைச் சேர்க்கவேண்டும் என்று பதிப்பகத்தாரைக் கேட்டுக் கொள்ளும் அதே வேளையில், இதிலிருக்கும் ஆசிரியர் குறிப்பிலிருந்து அறிந்து கொள்ளக்கூடிய இதே ஆசிரியரின் மற்ற நூல்களையும், அவரது தமிழ்ப் பண்ணை பதிப்பித்த அந்த பழைய நூல்களையுமே கூட இந்தப் பதிப்பகத்தார் முனைந்து வெளியிட வேண்டும் என்று உரிமையோடு கேட்டுக்  கொள்ளத் தோன்றுகிறது.
——
சந்தியா பதிப்பகம் | Sandhya Publications
No. 77, 53rd Street,
Ashok Nagar,
Chennai – 600 083.
Mobile: +91 98411 91397
Telephone: +91 44 24896979
ஆன்லைனில் வாங்க:
கண்டறியாதன கண்டேன்: http://sandhyapublications.com/index.php?route=product/product&search=%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88&product_id=348
சொன்னால் நம்பமாட்டீர்கள்: http://sandhyapublications.com/index.php?route=product/product&search=%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88&product_id=346

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.