அசோதை நங்காய்! உன் மகனைக் கூவாய்!

ஒவ்வொரு தாய்க்கும் தனது குழந்தைக்குக் கண்ணேறு பட்டுவிடப் போகின்றதே எனும் பயம் அவன் வளர்ந்து பெரியவன் ஆகுந்தோறும் இருந்துகொண்டே இருக்கும். குழந்தையாக இருக்கும்போது அவன் ‘கொழுகொழு’ பாப்பாவாக இருக்கிறானே, கண்பட்டுவிடுமே எனவும், சுட்டிக்குழந்தையாக, ‘வெடுக், வெடுக்,’ எனும் பேச்சைக் கேட்கும்போதும், வளர்ந்து பள்ளிச்சிறுவனாகி படிப்பில் நல்லபெயர் எடுக்கும்போதும், அழகான இளம் கட்டிளம்காளையாக வளர்ந்து ஒரு நல்லபதவியில் அமரும்போதும், திருமணமேடையில் மணமகனாகி நிற்கும்போதும் என வாழ்க்கையின் ஒவ்வொருகட்டத்திலும் தாயுள்ளம் அவனைப்பற்றிக் கவலைகொண்டு அது ஒரு காக்கும் உணர்வாக உருவெடுக்கிறது.
தனது கையில் அகப்படும், அணைத்துக்கொள்ள இயலும் சிறுகுழந்தையாக இருக்கும்போது, தனது அணைப்பே அவனுக்குக் காப்பு எனும் உணர்வு அவளிடம் எழுகிறது. இதனை முன்கூறிய அத்தியாயங்களில் பார்த்தோம். வளர்ந்து அவன் அங்குமிங்கும் ஓடியாடித் திரியும்போது, என்ன செய்வாள் பாவம்? தினமும் அல்லது வாரத்தில் ஓரிரு நாட்களாவது அந்திநேரத்தில் வீட்டில் விளக்கேற்றியபின்பு அவனை உட்கார்த்திவைத்து கண்ணேறு கழிப்பாள் (திருஷ்டி சுற்றுவது என்பர்). இது பலதலைமுறைகளாக நமது குடும்பங்களில் கடைப்பிடிக்கப்படும் வழக்கம். பலவிதங்களில் கண்ணேறு கழிப்பர். உப்பு, மிளகாயைத் தலையைச்சுற்றிப் போட்டு நெருப்பிலிடுவது, சுண்ணாம்பையும் மஞ்சளையும் கரைத்து ஆரத்திநீர் சுழற்றுவது, எலுமிச்சம்பழத்தைத் தலையைச் சுற்றிப்போடுவது, என இன்னும் பலவிதங்களில் திருஷ்டி அல்லது கண்ணேறு கழிக்கப்படும்.
இவையனைத்துமே தாயன்பின் பலவிதமான வெளிப்பாடுகள்தாம்.
யசோதைமட்டும் இதற்கு விதிவிலக்கில்லையே? தனது அழகிய குட்டனைக் அந்திக்காப்பிட அழைக்கிறாள்: (திருவெள்ளறை எனும் ஊரில் உறையும் பெருமானைப் போற்றி யசோதை காப்பிட அழைப்பதாகப் பெரியாழ்வார் பாடுகிறார்).
“இந்திரன், பிரம்மா, சிவன், தேவர்கள் எல்லாரும் உன்னைவழிபட சிறந்தமலர்களைக் கொண்டுவந்து பிறர்கண்களுக்குத் தெரியாதபடி மறைவாக நிற்கிறார்கள். உன் அழகைக்கண்டு அவர்கள் கண்பட்டுவிடாமல் நான் உனக்கு அந்திக்காப்புச் செய்ய நீ வந்தருள்வாய்,” என்கிறாள்.
இந்திரனோடு பிரமன் ஈசன் இமையவர் எல்லாம்
    மந்திர மாமலர் கொண்டு மறைந்து உவராய் வந்து நின்றார்;
    சந்திரன் மாளிகை சேரும் சதுரர்கள் வெள்ளறை நின்றாய்!
    அந்தியம் போது இது ஆகும் அழகனே! காப்பிட வாராய்.
(பெரியாழ்வார் திருமொழி- இரண்டாம் பத்து-8)
இவள் இங்கு உப்பையும் மிளகாயையும் வைத்துக்கொண்டு , தீபத்தையும் ஏற்றிவைத்துக் கொண்டு தன் குழந்தைக்குக் காப்பிடக் காத்துக் \கொண்டிருக்கிறாள். அவன் வந்தவழியாக இல்லை! எங்கே இன்னும் சுற்றியலைந்து விஷமங்கள் செய்கின்றானோ? இங்கு கொட்டிலில் நிற்கும் பசுக்களைக்கறப்பதற்கு யசோதையால் போகமுடியவில்லை; அவை கதறிஅழைக்கின்றன; கிருஷ்ணனோ நாற்சந்தியில் நின்றுகொண்டிருக்கிறான்.
சிறுமிகள் சிற்றிலிழைத்து, அதில் சிறுசோறு சமைத்து விளையாடிக் கொண்டிருக்கின்றனர். இவன் அங்கே ஓடிச்சென்று அந்த மணல்வீடுகளை அழித்துவிட்டு அவர்களை அழச்செய்துவிட்டுச் சிரிக்கிறான். “ஏனடா கிருஷ்ணா! ஏன் உனக்கு இந்த வம்பு? நீ வேறுபக்கம் போய்விளையாடு. இவர்களைத் தொந்தரவு செய்யதே,’ என யசோதை அவனைச் சினந்துகொள்கிறாள். அதனால் அவன் பயந்து ஓடிவிட்டான்; மதியம் சோறுண்ணவும் வரவில்லை. “நான் உன்னை ஒன்றும் செய்யமாட்டேனடா கண்ணா! அந்திக்காப்பிட வா,” என்று திரும்பவும் ஆசையாக அழைக்கிறாள் அன்னை.
கன்றுகள் இல்லம் புகுந்து கதறுகின்ற பசுவெல்லாம்
    நின்றொழிந் தேன்உன்னைக் கூவி நேசமேல் ஒன்றும் இலாதாய்!
    மன்றில் நில்லேல் அந்திப் போது; மதிள்திரு வெள்ளறை நின்றாய்!
    நன்று கண்டாய் எந்தன் சொல்லு; நான் உன்னைக் காப்பிட வாராய்!
(பெரியாழ்வார் திருமொழி- இரண்டாம் பத்து-8)
யசோதையின் கூற்றாகத் திருவெள்ளறையில் உறையும் பிரானைப்பாடுகிறார் பெரியாழ்வார். ‘சந்திரன் மாளிகைசேரும் சதுரர்கள் வெள்ளறை,’ என்றும், ‘மதிள்திரு வெள்ளறை’ என்றும், ‘முப்போதும் வானவர் ஏத்தும் முனிவர்கள் வெள்ளறை,’ என்றும் அவ்வூரைப் புகழ்கிறார்.
கண்ணன் ஒருபோதும் அன்னை சொல்பேச்சு கேட்பதில்லை! ஊரெங்கும் அலைந்து திரிந்து குறும்புகள் செய்கிறான். சிறுமியரின் மணல்வீடுகளைச் சிதைப்பதோடு நிற்கவில்லை: அவர்கள் இவனிடம் அதற்காகச் சண்டைபிடித்தால் அவர்கள் கண்ணில் மண்ணைத் தூவுகிறான்; காலால் எட்டி உதைக்கிறான். அவர்கள் அழுதுகொண்டே யசோதையிடம் வந்து முறையிடுகின்றனர். யசோதையின் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டல்லவா?
” கிருஷ்ணா! நீ இனி அவர்களிடமெல்லாம் செல்லாதே! இந்த இடைச்சேரியில் பெரும்குறும்பு புரியும் பலசிறுவர்கள் இருக்கிறார்கள்; நீ அவர்களுடன் சேர்ந்தால்  அவர்கள் செய்யும் குறும்புகளுக்கான பழி எல்லாம் உன்னையே வந்துசேரும் ( எல்லாத் தாய்மார்களையும் போல் யசோதையும் தன்மகன் மிக நல்லவன் என எண்ணிக்கொள்ள முயல்கிறாள்!) அங்கே செல்லாது இங்கே வந்துவிடு! உனக்கு நான் காப்பிட வேண்டும் என விளிக்கிறாள்.
பல்லா யிரவர் இவ்வூரில் பிள்ளைகள் தீமை செய்வார்,
    எல்லாம் உன்மேல் அன்றிப் போகாது; எம்பிரான் நீஇங்கே வாராய்!
(பெரியாழ்வார் திருமொழி- இரண்டாம் பத்து-8)

இந்தக் கிருஷ்ணன் பிறந்தபோதே கம்சன் அவனைக் கொல்லப் பலவிதமான முயற்சிகளைச்செய்தான். ஆகவே யசோதையின் உள்ளம் தனது மகனுக்குக்காப்பிட்டு அவனைக் காக்கவேண்டும் என எண்ணுவதில் வியப்பில்லையே! வஞ்சனைமிக்க சகடாசுரனையும், மருதமரங்களில் மறைந்த அசுரர்களையும், பூதனையையும் கிருஷ்ணன் கொன்றதனை அவளறிவாள். குவலயாபீடம் எனும் யானையைக் கூட அவன் கொன்றொழித்தான். இருப்பினும் தாயுள்ளம் அவனது தெய்வத்தன்மையைப் புறம்தள்ளி, அவனத்தன் சிறுமகனாகவே கொண்டு அவன் பாதுகாப்பினை விழைகிறது! “செல்வச்செருக்குடன் வளர்பவன்  நீ கண்ணா. எல்லாருக்கும் கண்ணின் கருமணியானவன். நீ ஓடியாடும் இடத்தில் மாலைப்பொழுதில் அச்சத்தை விளைவிக்கும் காபாலினி முதலியோர் நடமாடுவார்கள். ஆகவே நான் உனக்குக் காப்பிட வேண்டும், வா!” என்கிறாள். அக்காலத்தில் கழுத்தில் எலும்புமாலையணிந்து, மண்டையோட்டக் கையிலேந்தி, பார்க்கவே அச்சம் தரும் வண்ணம் இரப்பவர்களின் நடமாட்டமிருக்கும். குழந்தை இவர்களைப் பார்த்து பயந்துவிடப் போகிறானே என்றே அவனுக்கு திருஷ்டிகழிப்பார்களாம். அதைத்தான் இங்கு யசோதையும் கூறுகிறாள்.
கம்பக் கபாலிகாண் அங்கு கடிது ஓடிக் காப்பிட வாராய்!” என்கிறாள் அன்னை.
“உனக்கு திருக்காப்பு இட, அந்திவிளக்கை ஏற்றுவேன். ஏற்றித் திரிகளைப் பொருத்தி உனக்கு திருஷ்டிகழிப்பேன்; நாற்சந்தியிலும் கண்ட இடங்களிலும் நின்றுகொண்டு இல்லாமல் நான் காப்பிட விரைந்துவா!’
காப்பிடுவது முக்கியம்தான். ஏனெனில் இவன் அழகு எல்லையற்றது. யாருக்குக் குழந்தைபிறந்தாலும் கிருஷ்ணனே வந்து பிறந்துவிட்டான் என்கிறோம். கிருஷ்ணனே கண்ணெதிரே நின்றால் என்ன செய்யத்தோன்றும்? அந்த அழகனுக்கு, கண்களை நிறைத்துப்பெருகும் திவ்ய மங்களவடிவுக்கு ஆரத்திசுற்றி, திருஷ்டிகழித்து, அள்ளியணைத்துப் பரவசப்பட மாட்டோமா? அவன் வடிவம் எப்படி உள்ளதென்று லீலாசுகர் ( பில்வமங்களர்) ஸ்ரீ கிருஷ்ண கர்ணாம்ருதத்தில் விவரிக்கிறார்.
அவன் இனிமையே உருவெடுத்தவன்; அவனை வர்ணிக்கச் சொற்களின்றித் தடுமாறுகிறது உள்ளம். அவனுடைய திருமேனி இனியவை அனைத்தினும் இனியது; அவனுடைய முகமலரோ தேன் மணப்பதாய், புன்முறுவலுடன் பிரகாசித்துக்கொண்டு எனக்கு அனைத்தினும் இனியதாய் விளங்குகிறது. ஆச்சரியம்! இனிமை, இனிமை, இனிமை என்று சொல்வதைத் தவிர, இந்த இனிய கிருஷ்ணதத்துவத்தை விளக்க வார்த்தைகளே இல்லை.
மதுரம் மதுரம் வபுரஸ்ய விபோர்-
        மதுரம் மதுரம் வதனம் மதுரம்
    மதுகந்தி-ம்ருதுஸ்மித-மேத-தஹோ
        மதுரம் மதுரம் மதுரம் மதுரம்.
(ஸ்ரீ கிருஷ்ண கர்ணாம்ருதம்-1.91)
மதுரம் எனும் சொல்லின் இனிமையே நாவில்கரைந்து கிருஷ்ணானுபவமாக மாறும்போது அந்த மாயனை வர்ணிப்பதற்கு வேறு வார்த்தைகள் எங்கேகிட்டும்? அவனை வேறுவிதமாய் வர்ணிக்கத் தெரியவில்லை எனத்தன் இயலாமையை லீலாசுகர் விளக்கும் இந்த ஸ்லோகம் அருமையிலும் அருமையானது. இவ்வளவு அழகான எம்பிரானுக்குக் காப்பிட வருந்திவருந்தி யசோதை அழைத்ததன் காரணம் இப்போது புரிந்திருக்குமே!
நம் இந்தியப்பண்பாட்டில், குடும்பங்களில் நடக்கும் எல்லா மங்கள நிகழ்ச்சிகளிலும் ஆரத்தி எடுப்பது, ஆரத்தி சுற்றிக்கொட்டுவது என ஒருநிகழ்ச்சி முக்கியமாக இடம்பெறும். இதுவும், காப்பிடுவது, கண்ணேறுகழிப்பது சம்பந்தப்பட்டதே.
எனது பாட்டியார் பாடும் அழகான பாடல் ஒன்றுண்டு. நீண்ட நாட்களுக்குப் பின்தான் அது நாராயண தீர்த்தரால் இயற்றப்பட்டது என அறிந்தேன். அழகான பாடல்- மிக அழகான பொருள் கொண்டது; ஒவ்வொருமுறை பாடும்போதும் புல்லரிக்க வைத்து, கண்களில் ஆனந்தமழை பெருகச் செய்யும் சக்தி கொண்டது!!
காளியன் எனும்பாம்பின் ரத்தினங்கள் பொருந்திய தலைமேல் பாதங்களை வைத்தவனும், நீலமேகம் போன்ற உடல்கொண்டவனுமாகி, கருணைபொழியும் விழிகளையும் அத்துணை அற்புதமான நற்குணங்களின் இருப்பிடமானவனும் ஆனவனுக்கு என்றும் மங்களமுண்டாகட்டும்.
வெண்ணெய் திருடி உண்டவனும், பசுக்கூட்டங்களைக் காப்பவனும், கோபிகைகளின் நாயகனும், நாரதமுனி போற்றுபவனும், நாராயண தீர்த்தரின் குருவும் ஆனவனுக்கு என்றும் மங்களமுண்டாகட்டும்.

    காளீய மௌலிமணி ரஞ்சித பதாப்ஜாயா
    காளாம்புத ச்யாம திவ்ய தனவே
    காருண்ய ரஸ வர்ஷி நயனாரவிந்தாய
    கல்யாண குணரத்ன வாரிநிதயே
        ஜயமங்களம் நித்ய சுபமங்களம்
    நவனீத சோராய நந்தாதி கோப கோ
    ரக்ஷிணே கோபிகா வல்லபாயா
    நாரத முனீந்த்ரனுத நாமதேவாய தே
    நாராயணானந்த தீர்த்த குரவே
        ஜயமங்களம் நித்ய சுபமங்களம்

            (நாராயண தீர்த்தர்)
அந்திக்காப்பிடுவதுடன் அவள்பாடு முடியவில்லை. தினமும் ஒரு வாக்குவாதம்; அனுதினமும்  யாருக்காவது தனது தனயன்பொருட்டு சமாதானம், மறுமொழி- ‘என்னதவம் செய்தனை யசோதா?’ எனக் கிண்டலாகவே கேட்கத்தோன்றுகிறதா எனில்- இல்லை என்று அழுத்தமாகக் கூறிவிடலாம். ஏனெனில், கிருஷ்ணாவதாரத்தின் பெருமை அப்படிப்பட்டது.
அடுத்து அவன் செய்வது என்ன எனப்பார்க்கலாமா? இவனுடைய விஷமத்தனத்தில் ஆயர்பாடியே அல்லோலகல்லோலப்படுகிறது.
ஒரு கோபிகை வந்து யசோதையிடம், “உன்மகன் என்வீட்டில் புகுந்து பானையிலிருந்த வெண்ணெயை விழுங்கிவிட்டுக் கல்லால் பானையைத் தட்டி உடைத்துவிட்டும் செல்கிறான். அது அவனுக்கு மகிழ்ச்சியைத்தருகிறது என்கிறான். என்னால் இவன் குறும்பினைப் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. புண்ணில் புளிச்சாற்றை சொரிந்ததுபோல இருக்கிறது இவன்செய்கை. இவனுடைய இந்தத் திருட்டுக் குணத்தை என்னவென்று சொல்வதம்மா யசோதையே!  நீயேவந்து உன்மகனை அழைத்துக்கொண்டுசெல்,” என ஆற்றாமையுடன் முறையிடுகிறாள்.

    வெண்ணெய் விழுங்கி வெறுங்கலத்தை
        வெற்பிடை இட்டு அதனோசை கேட்கும்;
    கண்ணபிரான் கற்ற கல்வி தன்னைக்
        காக்ககில்லோம், உன்மகனைக் காவாய்;
    புண்ணிற் புளிபெய்தால் ஒக்கும் தீமை
        புரைபுகையால் இவைசெய்ய வல்ல
    அண்ணற் கண்ணான் ஓர்மகனைப் பெற்ற
        அசோதை நங்காய்! உன்மகனைக் கூவாய்!

        (பெரியாழ்வார் திருமொழி- இரண்டாம் பத்து-9)
யசோதைக்கு இதனைப் பொறுத்துக்கொள்ளவே முடியவில்லை. அவளுடைய மகன் எதற்காக இப்படி அண்டை அயலாரிடம் ஏச்சும் பேச்சும் வாங்குகிறான்? “கரிய தலைமயிரும், சிவந்தவாயையும், அழகான முகமும் கொண்ட என் கண்ணே, இங்கேவா,” எனத் தன்மகனை அழைக்கிறாள் யசோதை.
“ஏனடி யசோதை! இப்படியெல்லாம் கொஞ்சிக் கொண்டிருந்தால் அவனுக்கு இன்னும் குறும்பும்  விஷமமும்  அதிகமாகி விடுமடி. பயமுறுத்தி, அடித்து வைக்க வேண்டாமோ?” என்கிறாள் அடுத்தவீட்டுக்காரி.
அதற்கு இவள், “ஆமாமம்மா, இவன் எனக்கு செல்லப்பிள்ளை தெரியுமா? எதற்கு அடிப்பதாம்? நான்கு நல்லவார்த்தை கூறினால் ஆயிற்று,” என்றபடி கண்ணனைப் பார்த்து, “கண்ணா! உன்னை இவர்கள் பழித்துக் கூறினால் என்னால் பொறுத்துக் கொண்டிருக்க முடியாதப்பா. ஆகவே, அவர்கள் குற்றம் கூற இடமில்லாதபடி சமர்த்தாக இங்கே என்னருகே விரைவாக வந்துவிடடா,” என வேண்டுகிறாளாம். எப்படி இருக்கிறது கதை!
ஆகா! கதை தொடரவல்லவா செய்கிறது.
அடுத்ததெரு இடைப்பெண் அப்போதுதான் அரக்கப்பரக்க அங்கு வந்துசேர்கிறாள். அரைகுறையாகக் காதில் மேற்கூறிய பேச்சை வாங்கிக் கொண்டவள் தன்பங்கிற்குச் சொல்கிறாள்: “என்னவோ இல்லாதவர் வீட்டுப்பிள்ளையானாலும் சரி; தான் செல்வந்தர் வீட்டுப்பிள்ளை என்ற செருக்கினாலல்லவோ இதனைச்செய்கிறான் இவன்! உங்கள் குடியென்ன குலமென்ன? ஒன்றையும் கருத்தில் கொள்ளாமல் எங்களுக்கு இழைக்கும் இந்தத்தீம்பு எல்லாம் தனக்குப்புகழ் என்று எண்ணிக்கொள்கிறான் போலும்! என்வீட்டிலும் வெண்ணெயை எடுத்துண்டு சட்டியையும் போட்டு உடைத்தாயிற்று!  அருகிருந்தார் தம்மை அநியாயம் செய்வதுதான் வழக்கோ அசோதாய்! உன்பிள்ளையை உன்வீட்டிலேயே உன்பக்கத்திலேயே வைத்துக்கொள்,” என முறையிடுகிறாள்.
கேட்ட தாய் என்ன செய்தாளம்? இழுத்து முதுகில் நான்குமொத்தி, கட்டிவைக்க வேண்டாமோ இக்கள்ளனை?  அவனை,” கொண்டல்வண்ணா! கோயிற்பிள்ளாய்! தெண்திரைசூழ் திருப்பேர்க்கிடந்த திருநாரணா!” என்றெல்லாம் அருமையாக அழைத்தாளாம். அவனும் தான் மிகவும் சாதுவானபிள்ளைபோல, “அம்மா, நான் அம்மம் உண்டுவிட்டேனே,” எனக்கொஞ்சியவாறு வீட்டினுள் ஓடிவருகிறானாம். “அடடா! என் குழந்தை எவ்வளவு சமர்த்து,” என எண்ணிக்கொண்டு அவனை எடுத்து இடையில் வைத்துக்கொள்கிறாளாம் அன்னை; இவ்வாறு அவளை மயக்க என்னகல்வி கற்றிருக்கிறானோ இவன் என ஆழ்வார் மயங்குகிறார்.
இப்படிக்கு ஒவ்வொரு பெண்ணும் வந்து எதையாவது கூறிமுறையிட, யசோதை அவையனைத்தையும் மறுதளிக்கிறாள். அவள்மனம் தன்குழந்தை குறும்புக்காரன் என ஒப்புக்கொள்வதேயில்லை!
இவையனைத்துக்கும் சிகரமாக ஒன்று செய்கிறான் இவன்.
ஆத்திரமாக ஒருத்திவந்து முறையிடுகிறாள்: “சொன்னால் கோபித்துக்கொள்கிறாய் யசோதாய்! என் மகனா இப்படிச் செய்தான் என நம்பாமல் கேட்கிறாய்! உன் மகன் என்வீட்டிற்குள் புகுந்து, என்மகளைப் பெயர்சொல்லிக் கூப்பிட்டு நைச்சியமாகப்பேசி அவள் தன் கையிலணிந்திருந்த வளைகளைக்கழற்றி வாங்கிக்கொண்டான்; அப்புறம் என்னசெய்தான் தெரியுமா?
“காடுகளிலிருந்து நாவல்பழங்களைக் கொண்டுவந்து விற்ற ஒருபெண்ணிடம் அவ்வளைகளைக் கொடுத்து அவற்றிற்குப் பதிலாக நாவல்பழங்களை வாங்கித்தின்கிறான். நான் அந்தப்பெண் கையில் என் மகளின் வளைகளைப் பார்த்து, ஏனடா கிருஷ்ணா என் மகளின் வளையைக்கொடுத்தாய் எனக்கேட்டால், ‘நீ பார்த்தாயோ? அப்படியானால் அதை அனுமதித்தது எப்படி,’ எனக் குதர்க்கமாகக் கேட்டுச்சிரிக்கிறானடி உன்பிள்ளை!” என்கிறாள்.

    சொல்லில் அரசிப்படுதி, நங்காய்!
        சுழல் உடையன் உன்பிள்ளை தானே;
    இல்லம் புகுந்து என்மகளைக் கூவிக்
        கையில் வளையைக் கழற்றிக் கொண்டு
    கொல்லையில் நின்றும் கொணர்ந்து விற்ற
        அங்கொருத்திக்கு அவ்வளை கொடுத்து
    நல்லன நாவற்பழங்கள் கொண்டு
        நானல்லேன் என்று சிரிக்கின்றானே!

    (பெரியாழ்வார் திருமொழி- இரண்டாம் பத்து-9)
யசோதை என்ன மறுமொழி கூறினாளோ நமக்குத்தெரியாது. ஆயினும் இந்த ஆயர்பாடிப்பெண்கள் கிருஷ்ணன் செய்யும் இத்தனை அட்டூழியங்களையும் பொறுத்துக்கொண்டு அவன் மாயவலையில் சிக்கிச் சுழல்வதேன்? நம்பாதவர்களுக்கு இது ஒரு அழகானகதை மட்டுமே. நம்புவோருக்கு இது பரமாத்மா ஜீவாத்மாவைத் தன்னுடன் ஐக்கியப்படுத்திக்கொள்ளச் செய்யும் பிரபஞ்ச விளையாட்டு.
இத்தனை அட்டூழியங்களையும் பொறுத்துக்கொண்டு ஒரு ஆய்ப்பெண் தன்னிடம் மிச்சம்மீதியிருந்த தயிரை விற்கச்செல்கிறாள். தயிர்விற்பவள் என்ன செய்யவேண்டும்? “தயிரோ தயிர்; வெண்ணெய்; பால்வாங்கலையோ?” எனக் கூவி விற்கவேண்டும். இவளுக்கு மனமெல்லாம் அந்தக்கிருஷ்ணனின் லீலைகளிலேயே சுழன்றுகொண்டிருக்கிறதாம்; அதனால், “கிருஷ்ணா, முகுந்தா, தாமோதரா, ” எனக்கூவிக்கொண்டு செல்கிறாளாம். பில்வமங்களரின் அழகான கற்பனை இது!
விக்ரேது-காமா கில கோபகன்யா
        முராரி-பாதார்ப்பித-சித்தவ்ருத்தி:
    தத்யாதிகம் மோஹவசா-தவோசத்-
        கோவிந்த தாமோதர மாதவேதி  
    (ஸ்ரீ கிருஷ்ண கர்ணாம்ருதம்-2.55)

    கண்ணன் திருவடியில்தன் கருத்தினைத் தானிருத்தி
    வெண்ணெய் பாலெனவே  விற்கநினைப் பின்றியிடைப்
    பெண்ணொருத்தி மாதவாதா மோதராகோ விந்தாவெனக்கூவி
    கண்ணனையே விலைபேசி விற்பாள்போல் அலைகின்றாள்.

பாரதியாரின் ‘தீராத விளையாட்டுப் பிள்ளை’யும் பாபநாசம் சிவனின் ‘என்ன தவம் செய்தனை யசோதா?’வும் கிருஷ்ணனின் குறும்பு விளையாட்டுக்களின் எதிரொலிகள்தான் எனில் மிகையேயல்ல.

    பின்னலைப் பின்னின்று இழுப்பான்- தலை   
    பின்னே திரும்புமுன்னே சென்று மறைவான்
    வன்னப் புதுச்சேலை தனிலே-புழுதி
    வாரிச் சொரிந்தே வருத்திக் குலைப்பான்’

எனும் வரிகள் புன்னகையை வரவழைத்து அக்குறும்பனிடம் நமது வாத்சல்யத்தை மிகுதிப்படுத்துகின்றன.

    பிரமனும் இந்திரனும் மனதில் பொறாமைகொள்ள
    உரலில்கட்டி வாய்பொத்தி கெஞ்சவைத்தாய் தாயே
    என்னதவம் செய்தனை யசோதா
    எங்கும்நிறை பரப்பிரம்மம் அம்மா என்றழைக்க’

எனும் வரிகள் நம்மையும் அந்த யசோதையிடம் பொறாமை கொள்ளவைக்கின்றன!
 

                (கிருஷ்ணலீலைகள் வளரும்)

 
 
_

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.