யஸிதி இனப்பெண்: ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் உரை

[குர்திஸ்தானின் ஒரு பகுதியில் இந்த யஸிதி இன மக்கள் வாழ்கின்றனர். ஐ எஸ் பயங்கரவாதிகளின் முதல் இலக்காக பாதுகாப்பு ஏதுமற்ற, தற்காத்துக்கொள்ள முடியாத இந்த எளிய யஸிதி இன மக்கள் இருந்தனர். . ஐ எஸ் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டு சித்ரவதைக்கு உள்ளாகி கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்கு பின்னர் தப்பிப்பிழைத்த நாடியா முராத் எனும் யஸிதி இனப்பெண் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் ஆற்றிய உரை கீழே.]

***

நாடியா முராத் எனும் யஸிதி இனப்பெண் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் ஆற்றிய மனஉரம் மிக்க உரை.

நாடியா பங்குபெற்ற இந்த முக்கிய நிகழ்வை யஸ்தா (யஸிதீன மக்களின் அமைப்பு) ஒருங்கிணைத்தது.

Nadia_Murad_Basee_Taha_Yazidi_Woman_UN_Security_Council_IS_ISlamic_State_ISIS_Muslim

தலைவர், மற்றும் அவையில் கூடியுள்ள முக்கியஸ்தர்கள், பாதுகாப்பு கவுன்சிலின் உறுப்பினர்களுக்கும் வணக்கம்.

என்னை இங்கு பேச அழைத்ததற்கும், இந்த விவாதமேடையை அமைத்துக்கொடுத்ததற்கும் அமெரிக்க நாட்டிற்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். பேரச்சத்துடன் அழிவை எதிர்நோக்கியிருக்கும் உலகின் மிகப்பழமையான இனம் மற்றும் மதக்குழுவனரில் தப்பிப்பிழைத்த மிகச்சிலரில் ஒருத்தியாக, பெரும் சோகத்துடனும், நன்றியுடனும் மற்றும் எதிர்பார்ப்புடனும் உங்கள்முன் நிற்கிறேன்.

இஸ்லாமிக் ஸ்டேட் (ஐஎஸ்) என்றழைக்கப்படும் ஒரு கூட்டம் எப்படி யஸிதி இனத்துப் பெண்களான எங்களைக் கடத்தியது, வன்பாலுறவுக்கு ஆட்படுத்தப்படும் அடிமைகளாக மாற்றியது, தவிர எங்களின் இனக்குழுவினரை எப்படிக் கொடூரமாக் கொன்று குவித்து ஒரு இன அழிப்பைச் செய்தது என்பதைக் குறித்து பேசவிருக்கிறேன்.எல்லா நம்பிக்கையும் இழந்து, ஏதும் தெரியாத ஒரு எதிர்காலத்தை நோக்கியிருக்கும் யஸிதி இன மக்கள் குறித்தும், எனக்கும், என் இன மக்களுக்கும் என்ன நேர்ந்தது என்பது குறித்தும் சொல்ல இருக்கிறேன். (ஐ எஸ் ஸிடம்) சிறைப்பட்டு இருக்கும் யஸிதி இன மக்களின் சார்பாகவும் பேச இருக்கிறேன்.

எங்களின் இருப்பை, கலாச்சாரத்தை, சுதந்திரத்தை அழிக்க வந்த ஒரு உலகப் பயங்கரவாத இயக்கம் குறித்தும், எங்கள் இனத்தின் வாழ்க்கையையே ஒரே இரவில் அது எப்படி மாற்றியது என்பதையும் பற்றிப் பேச இருக்கிறேன்.

ஆகஸ்ட் 3, 2014 க்கு முன்புவரை கோச்சோ என்ற கிராமத்தில் நான் எனது தாயாருடனும், சகோதர சகோதரிகளுடனும் வசித்து வந்தேன். அழகான எங்கள் கிராமத்தில் அமைதியாக வசித்து வந்தோம். ஆனால், ஆகஸ்ட் மூன்றாம்தேதி இஸ்லாமிக் ஸ்டேட் என்ற பயங்கரவாத கூட்டம் எங்கள் கிராமத்தைத் தாக்கியபோது, நாங்கள் ஒரு கொடூர இன அழிப்புக்கு ஆட்பட்டதைப் புரிந்துகொண்டோம். ஆயுதம் தாங்கிய, சீருடையணிந்த பலநாடுகளைச் சேர்ந்த பயங்கரவாதிகள் யஸிதிகளை இஸ்லாமிய நம்பிக்கை அற்றவர்கள் எனத் தீர்மானித்து அப்படிப்பட்டவர்கள் அழிக்கப்படவேண்டும் என்ற நோக்கோடு வந்திருந்தனர். இந்த இஸ்லாமிக் ஸ்டேட் யஸிதி இனப் பெண்களையோ, சிறுமிகளையோ கொல்லவரவில்லை, மாறாக, எங்களைப் போரின் கொள்ளைப் பொருட்களாக, குறைந்த விலைக்கோ அல்லது அன்பளிப்பாகவோ கொடுக்கப்பட வேண்டிய வெறும் பொருட்களாய் எடுத்துச் செல்ல வந்திருந்தனர்.

ஐ எஸ் ஸின் கொடூரம் ஏதோ வாய்ப்பு கிட்டியதால் நடந்த ஒரு நிகழ்வல்ல. . ஐ எஸ் ஸை சேர்ந்தவர்கள் இவ்வாறான கொடூரங்களை அரங்கேற்ற முன் திட்டமிட்டே வந்திருந்தனர். கற்பழிப்புகள், கட்டாயமாகச் சிறுவர்களைத் தம் படையில் சேர்த்தல், அவர்கள் கைப்பற்றிய புனித்தலங்களை தரைமட்டமாக்கி அழித்தல், குறிப்பாக யாஸிதி பெண்களையும், சிறுமிகளையும் கற்பழிப்பு மூலம் சிதைத்து அழித்து அவர்கள் ஒருபோதும் சாதாரணமான, இயல்பான வாழ்வுக்குத் திரும்ப முடியாமல் ஆக்குவது ஆகிய வன்முறைச் செயல்கள் மூலம் யாஸிதி இனமக்களின் அடையாளத்தைச் சுத்தமாக ஒழிப்பதே அவர்கள் திட்டம்.

ஆகஸ்ட் 15 நாள் பயங்கரவாதிகள் எங்களை பள்ளிக்கூடத்திற்கு அழைத்து ஆண்களை எங்களிடமிருந்து பிரித்தனர். அந்த பள்ளியின் இரண்டாம் மாடியிலிருந்து நான் பார்த்தேன். அவர்கள் ஆண்களைத் தனியாக பிரித்துச் சென்று கொன்றனர். அதில் எனது உடன் பிறந்த மற்றும் மாற்றாந்தாய்க்குப் பிறந்த ஆறு சகோதரர்களும் அடங்குவர். மேலும் மூவர் கடவுளின் கிருபையால் அவர்களிடமிருந்து தப்பினர்.

பென்களும், குழந்தைகளுமாக எங்களை வேறொரு இடத்திற்கு எடுத்துச் சென்றனர். போகும் வழியெங்கும் எங்களை அவமதித்துக்கொண்டும், வலுக்கட்டாயமாக பெண்களையும், குழந்தைகளையும் தகாத முறையில் தொடுவதுமாக இருந்தனர்.

என்னுடன் நூற்றைம்பது பெண்கள் மொசுல் நகருக்கு அழைத்துச் செல்லப்பட்டோம். அங்கு ஏற்கனவே ஆயிரக்கணக்கான யஸிதி இனப்பெண்களும் குழந்தைகளும் ஏற்கனவே ஐஎஸ்ஸால் பிடிக்கப்பட்டு அங்கு பிற ஐ எஸ் படையினருக்கு அன்பளிப்பாக அளிப்பதற்காக அடைத்து வைக்கப்பட்டிருந்தனர்.

ஒரு ஐ எஸ் படையின் ஆள் என்னை நெருங்கி என்னை எடுத்துச் செல்ல போவதாக சொன்னான், நான் தலைகுனிந்து அமர்ந்திருந்தேன், நான் பயத்தால் நடுங்கிக்கொண்டிருந்தேன். நான் நிமிர்ந்து பார்த்தபோது ஒரு மிகப்பெரிய ஆள் நின்றுகொண்டிருந்தான். நான் அழுதேன், எனக்கு நீ வேண்டாம் எனச் சொன்னேன், என் உருவளவுக்கு நீ மிகப்பெரிய ஆள், நான் சிறுமி என்றேன். இன்னொருவன் என்னை நோக்கி நடந்து வந்தான். நான் இப்போதும் தரையை பார்த்துக்கொண்டிருந்தேன். நான் அவனது கால்களை பார்த்தேன். மிகச் சிறியதாக இருந்தது, நான் அவனிடம் என்னை அழைத்துச் செல்லும்படி கெஞ்சினேன். நான் மிகப்பெரிய உடலுடன் இருந்தவனைக் கண்டு அஞ்சினேன்.

என்னை அழைத்துச் சென்றவன் என்னை மதம் மாறச்சொன்னான். நான் மறுத்தேன். இன்னொரு நாள் அவனை ”திருமணம்” செய்துகொள்ளச் சொன்னான். நான் உடல்நிலை சரியில்லை எனச் சொன்னேன். அங்கிருந்த பெரும்பாலான பெண்களுக்கு பயத்தினால் மாதவிடாய் ஏற்கனவே ஏற்பட்டிருந்தது. பின்னர் ஒருநாள், அவனுக்காக என்னை அலங்காரம் செய்துகொள்ளச் சொன்னான். நானும் அலங்காரம் செய்துகொண்டேன். அந்த கருப்பு இரவில் அவன் “அதை” செய்தான்.

அவனது குழுவில் இருந்த இதர பயங்கரவாதிகளுக்கும் என்னை இணங்கும்படி செய்தான்… என்னை முறையற்ற முறையில் உடையணியச் செய்து தொடர்ந்து அவமதித்துக்கொண்டே இருந்தான், என்னால் தொடர்ந்த கொடுமைகளையும், கற்பழிப்புகளையும் தாங்க முடியவில்லை.நான் தப்பிச்செல்ல தீர்மானித்தேன், ஆனால், எனது முயற்சி தோல்வியடைந்தது.. பாதுகாப்புக்காக நின்ற ஒருவன் என்னை பிடித்துவிட்டான்.

அந்த இரவில் என்னை அடித்தான், கட்டாயப்படுத்தி நிர்வாணமாக்கினான், பின்னர் ஆறு பயங்கரவாதிகளுடன் என்னை ஒரு அறையில் அடைத்தான். நான் மூர்ச்சையாகி விழும்வரையில் என்னை கற்பழித்தனர்.

கடத்தப்பட்டு மூன்று மாதங்களுக்கு பிறகு இறுதியாக என்னால் தப்ப முடிந்தது. நான் இப்போது ஜெர்மனியில் இருக்கிறேன். மருத்துவம் செய்வதற்காக என்னை ஏற்றுக்கொண்ட ஜெர்மனிக்கு நன்றி.

ஆனால், நான் மட்டும் இந்தத்துயரத்தை அனுபவிக்கவில்லை. (எங்கள் இனத்தின்) கூட்டு துயரம் இது. இஸ்லாமிக் ஸ்டேட் எங்களுக்கு இரு வாய்ப்புகளை மட்டுமே வழங்கியது. மதம் மாறுங்கள் அல்லது சாவுங்கள் என்பதே அது. பயத்தினால் மதம் மாற ஒத்துக்கொண்ட பெண்களின் கணவர்கள் கொல்லப்பட்டனர். பெண்கள் அடிமைகளாக்கப்பட்டனர், அவர்களின் குழந்தைகள் படையில் கட்டாயமாகச் சேர்க்கப்பட்டனர்.

இன்றைய தேதிவரையில், கூட்டமாகப் பலரைப் புதைத்த 16 குழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதில் ஒரு குழியில் எண்பது பெண்கள் புதைக்கப்பட்டிருந்தனர்., அதில் ஐ எஸ்ஸால் விரும்பப்படாததால் கொல்லப்பட்ட எனது தாயாரும் அடக்கம். நான்குலட்சத்திற்கும் மேலானோர் இடம்பெயர்ந்துள்ளனர், நாற்பது சதவீதத்திற்கும் மேலான எங்களின் நிலப்பகுதி ஐஎஸ் கூட்டத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட எங்கள் இடங்கள் எல்லாம் வாழத்தகுதியற்ற இடங்களாக அழிவுகளுடன் காணப்படுகிறது. மேலும் யஸிதிகள் அந்த இடங்களுக்கு திரும்ப் பயப்படுவதுடன் அவர்களின் வீடுகளில் நிம்மதியாக வாழமுடியுமா என அஞ்சுகின்றனர்.

கடந்த வாரம் 70 யஸிதி இன பெண்களும், குழந்தைகளும் ஐரோப்பாவுக்கு செல்லும் பயங்கரமான பாதையில் செல்லும் வழியில் நீரில் மூழ்கி இறந்தனர். ஆயிரக்கணக்கானோர் இடப்பெயர்வுக்கு காத்திருக்கின்றனர், அதில் பெரும்பாலானோர் வேறு நாடுகளுக்கு குடி பெயர்வதே வழி என நினைக்கின்றனர்.
தலைவர் மற்றும் கூடி இருக்கும் முக்கியஸ்தர்களே,

ஐ எஸ் யஸிதி இனப்பெண்களை மனிதர்களைக் கடத்தி விற்கும் தொழிலின் வியாபாரப் பொருளாக்கியிருக்கிறது. உங்களிடம் என் மக்களின் கீழ்க்கண்ட வேண்டுகோளைச் சமர்ப்பிப்பதுடன் மனிதம் இன்னும் மரித்துவிடவில்லை என்பதையும் நம்புகிறேன்.

ஈவிரக்கம் இல்லாத பயங்கரக் கூட்டத்தின் பிடியில் சிக்கி இருக்கும் 3400 பெண்களையும், சிறுமிகளையும் மீட்க வழி செய்யுங்கள்.

ஒட்டு மொத்தமாக கொலை செய்தல், அடிமைப்படுத்தல், ஆள் கடத்தல்களை எல்லாம் இன அழிப்பாக கருதுங்கள். உலக கிரிமினல் கோர்ட்டிற்கு இதை ஒரு பெரும் குற்றச் செயலாக எடுத்து வழக்காட வழியைக் காணுமாறு கோரிக்கையை முன்வைக்கிறேன்.

எங்கள் நிலங்களை மீட்டுத்தாருங்கள், கோச்சோ கிராமத்தையும் மீட்டுத்தாருங்கள். இதன் மூலம் ஐ எஸ் எஸின் கொடூரத்தால் இறந்தவர்களை அவர்களின் பூமியில் கௌரவமாக அடக்கம் செய்ய இயலும். மிரட்டலுக்கு உள்ளாகியுள்ள பகுதிகளுக்கு பாதுகாப்பு கொடுப்பதன் மூலம் அவர்களின் பூர்வீக இடங்களில் மீளக்குடியேறவும், நிம்மதியாக வாழவும் முடியும். நான் மேலும் உங்களை உலக நிதியிலிருந்து பணத்தை ஒதுக்கி இழப்பீடும், இடிபாடுகளில் உள்ள வீடுகளை மீளக்கட்டவும் நிதி தாருங்கள் என வேண்டுகிறேன்.

உங்கள் நாடுகளின் கதவுகளை இன அழிப்பிற்கு ஆளான எங்கள் மக்களுக்குத் திறந்துவிடுங்கள். எங்களுக்குப் பாதுகாப்பான இடத்தைத் தேர்வு செய்து வாழவும் எங்களின்கௌரவத்தைக் காத்துக் கொள்ளவும் எங்களுக்கு உரிமையுள்ளது. யஸிதி இன மக்களுக்கும், எங்களைப்போல அச்சுறுத்தலுக்கு ஆளான இதர சிறுபான்மை இனமக்களுக்கும் தங்குவதற்கான வாய்ப்பைக்கொடுங்கள், இன்னும் குறிப்பாய் ஆட்கடத்தல் கூட்டங்களில் சிக்கி அவதியுறும் மக்களுக்குஅகதிகளாக நுழைய ஜெர்மனி ஏற்கனவே முன்னுரிமை கொடுத்தது போல இதர நாடுகளிலும் முன்னுரிமை கொடுங்கள். , .

ஐ எஸ் ஸுக்கு முடிவு கட்டுங்கள். நான் அவர்களை (கொடூரங்களை) பார்த்திருக்கிறேன். அவர்களால் நான் சொல்லொணாத்துயரத்தையும், வலியையும் அடைந்திருக்கிறேன். பயங்கரவாதிகளையும், மனிதர்களைக் கடத்துவோர்களையும், இன அழிப்பு செய்தோரையும் நீதிக்கு முன் கொண்டுவாருங்கள். இதனால், நைஜீரியா, சிரியா, சோமாலியாவில் வாழும் பெண்களும், உலகின் எல்லாப்பகுதியில் வாழும் மக்களும் அமைதியாய் வாழ இயலும். பெண்களுக்கு எதிரான இந்தக்குற்றங்கள், மற்றும் அவர்களின் சுதந்திரப்பறிப்பு உடனே நிறுத்தப்பட வேண்டும்.

2 Replies to “யஸிதி இனப்பெண்: ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் உரை”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.