மேகக் கணிமை (Cloud Computing) – 4

இதுவரை…
மேகக்கணிமையின் பயனர்கள், தொழில்நுட்பங்கள், பண்புகள், பிரச்னைகள் என்று சில விஷயங்களைப் பார்த்திருக்கிறோம்.
இனி…

மேகக்கணிமை நிறுவனங்களின் சேவை அமைப்புகள் குறித்து விளக்குவதாகச் சொல்லி சென்ற பகுதியை முடித்திருந்தேன். அது என்ன சேவை அமைப்பு?
எல்லா மேகக்கணிமை நிறுவனங்களும் ஒரே மாதிரியான சேவையைத் தருவதில்லை. இதைப் புரிந்துகொள்ள கொஞ்சம் தொழில்நுட்பத்தில் இறங்க வேண்டும். “சகதி”யில் இறங்காமல் சங்கதி கிடைப்பதெப்படி!

compute stack

மேலுள்ள படத்தைப் பாருங்கள். ஒரு வலைச்செயலிக்குத் தேவையான அனைத்து கணிமைப் பகுதிகளும் இங்கே அடுக்கப்பட்டுள்ளன.

  1. அடித்தளத்தில் வன்பொருட்கள்: கணினி செயலி, நினைவகம், வன்தட்டுகள் இத்யாதி.
  2. அதன்மேலே இருப்பது அடிப்படை மென்பொருளாகிய இயங்குதளம். இது விண்டோஸ், லைனக்ஸ் என்று நம் தேவைக்கேற்ப.
  3. அதன்மேல் நிறுவப்படுவது வலைச்செயலிக்குத் தேவையான:

அ. சர்வர் – அபாச்சே, ஐ.ஐ.எஸ் என்று தேவைக்கேற்ப
ஆ. தரவுத்தளம் – மைக்ரோசாஃப்ட் எஸ்.க்யூ.எல். சர்வர், ஆரக்கிள், மைசீக்வல், மாங்கோடீபி என்று தேவைக்கேற்ப
இ. இதர செயலிகள் – டாட்.நெட், ஜாவா, பைத்தான், பி.ஹெச்.பி. என உங்கள் வலைச்செயலியின் தேவைக்கேற்ப மென்பொருட்களாகவோ, அல்லது வலைச்சேவைகளாகவோ இருக்கலாம்.

  1. இவற்றின் மேலே, இவற்றின் துணையோடு கட்டப்படுவதே உங்கள் வலைச்செயலி.

இவை எல்லாவற்றையும் உங்கள் சொந்த சர்வரில் உங்கள் விருப்பப்படி நிறுவி, இயக்கி, பொறுப்பெடுத்துக்கொள்வது அந்தக் காலம். இதில் ஒன்றுக்கு மேற்பட்ட விஷயங்களை உங்கள் பொறுப்பிலிருந்து நீக்கி மேகத்தில் ஏற்றி அம்மேகக் கணிமை நிறுவனத்தின் பொறுப்பில் விடுவதே இந்தக்காலம்.
இதில் எந்தெந்த விஷயங்களுக்கு மேகக்கணிமை நிறுவனங்கள் பொறுப்பெடுத்துக்கொள்கின்றன என்பதே அந்நிறுவனங்களின் சேவை அமைப்பு எனப்படுகிறது.
இதையொட்டி மூன்று வகையான சேவை அமைப்புகள் புழக்கத்தில் உள்ளன:

  1. அடிப்படை உள்கட்டமைப்பைச் சேவையாகத் தருவது:

இவ்வகையில் பொதுவாக வன்பொருள் கட்டமைப்பு (படத்தில் ’1’ எனக் குறித்த அடுக்கு), மற்றும் இயங்குதளம் (படத்தில் ‘2’) மட்டும் சேவையாக வழங்கப்படும். அதற்குமட்டும் அவர்கள் பொறுப்பு. EC2 எனப்படும் அமேசானின் மேகக்கணிமைச் சேவையும், மைக்ரோசாஃப்டின் அசூர் மெய்நிகர் கணினிச் சேவையும் இவ்வகையைச் சார்ந்தவை. அவர்களது கட்டமைப்பில் ஒரு துணுக்கில் விண்டோஸ் அல்லது லைனக்ஸ் மெய்நிகராக நிறுவி உங்களுக்கு அளித்து விடுவார்கள். அதன்மேல் நீங்கள் என்ன சர்வர் நிறுவுகிறீர்கள், என்ன செயலியை ஓட்டுகிறீர்கள் என்பதெல்லாம் உங்கள் கையில்.

  1. மென்பொருள் அடித்தளத்தை (ப்ளாட்ஃபார்ம்) சேவையாகத் தருவது:

இவ்வகையில் பொதுவாக உள்கட்டமைப்புடன் சேர்த்து உங்கள் செயலிக்குத் தேவையான மென்பொருள் அடித்தளத்தையும் (படத்தில் ‘3’) சேவையாக வழங்கிவிடுவார்கள். அவர்கள் தரும் மென்பொருள் உபகரணங்களைப் பயன்படுத்தி உங்கள் செயலியை நிறுவி இயக்குவது மட்டுமே உங்கள் பொறுப்பு. சமீபத்தில் சேல்ஸ்ஃபோர்ஸ் நிறுவனம் வாங்கிய ஹிரோகு சேவை, மற்றும் கூகிளின் ஆப் எஞ்சின் சேவை இவ்வகையைச் சார்ந்த சேவைகள்.

  1. மென்பொருட்களை/வலைச்செயலிகளைச் சேவையாகத் தருவது:

இவ்வகையில் நீங்கள் உங்கள் செயலிக்குக் கூடப் பொறுப்பில்லை. குழப்பமாக இருக்கிறதல்லவா? இதைப் புரிந்துகொள்ள இன்றைய சூழலின் செயலித் தேவைகளை நாம் புரிந்துகொள்ளவேண்டும். நீங்கள் ஒரு மின்வணிக நிறுவனத்தைத் தொடங்கப்போகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். உங்களுக்கான உடனடித் தேவை என்ன? பொருட்களை இணையத்தில் கூவி விற்கத் தேவையான ஒரு வலைதளம், உங்கள் வாடிக்கையாளர்கள் குறித்த விவரங்களைப் பராமரிக்க ஒரு பயனர் தொடர்பு நிர்வாகச் செயலி, உங்கள் நிறுவனத்தின் கணக்கு வழக்குகளைப் பராமரிக்க ஒரு செயலி என்று சொல்லிக்கொண்டு போகலாம். இவற்றில் எந்தச் செயலியாவது புதிதாக எதாவது செய்கிறதா? இவை அனைத்துமே உலகத்தில் உள்ள பெரும்பான்மையான மின்வணிக நிறுவனங்களும் அன்றாடம் பயன்படுத்தும் செயலிகள்தானே? எனவே, மெனக்கெட்டு முதலிலிருந்து இச்செயலிகளை நீங்கள் உருவாக்குவீர்களா, அல்லது இத்துறை விற்பன்னர்கள் ஏற்கனவே உருவாக்கி வைத்திருக்கும் செயலிகளைப் பயன்படுத்துவீர்களா?
ஏற்கனவே இருக்கும் செயலியைத்தான் பயன்படுத்தப்போகிறீர்கள் என்றால் அதை நிறுவி, பராமரிக்கும் தலைவலி மட்டும் உங்களுக்கு ஏன்? இதுதான் இச்சேவை அமைப்பின் அடிப்படை. சிறந்த உதாரணங்கள் சேல்ஸ்ஃபோர்ஸ் நிறுவனத்தின் விற்பனை மேகம், சேவை மேகம், கூகிளின் ஜீமெயில், டாக்ஸ், டிரைவ் போன்ற வணிகச்சேவைகள்.
மேலோட்டமாக இச்சேவை அமைப்புகளைப் பற்றிப் பார்த்தோம். இனி எவ்வகை அமைப்பு யாருக்கு உகந்தது, இவ்வமைப்புகளின் நல்லதுகெட்டது என்ன என்பதைப் பார்ப்போம்.
உங்கள் வலைச்செயலி புதியதோர் சிறப்பியல்பை முன்வைக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அப்போது நீங்கள் உங்கள் செயலியை முழுவதுமாக முதலிலிருந்து உருவாக்கியாகவேண்டும். அதனால் நீங்கள் நேரடியாக ஒரு மென்பொருள் சேவையைப் பயன்படுத்த இயலாது. அதேபோல், உங்கள் செயலி இயங்குதளத்தோடும், தரவுத்தளத்தோடும், இன்னபிற செயலிகளோடும் புதிய புதிய வகைகளில் வினையாற்றவேண்டும், அல்லது புதிய செயலிகளை நீங்கள் நிறுவிப் பயன்படுத்தவேண்டும் என்று வைத்துக்கொள்வோம். இக்காரணத்தால் நீங்கள் ஒரு ப்ளாட்ஃபார்ம் சேவையையும் பயன்படுத்த முடியாது. ஏனெனில் ப்ளாட்ஃபார்ம் சேவையில் உங்களுக்கு வழங்கப்படும் செயலிகளும் உபகரணங்களும் ஏற்கனவே வரையறுக்கப்பட்டவை. இவ்வகை வினையாற்றங்களும் புதிய செயலிகள் நிறுவுதலும் இதில் சாத்தியமில்லை. இத்தருணத்தில் உள்கட்டமைப்புச் சேவை உங்களுக்குத் தேவைப்படும். மேலும், உள்கட்டமைப்புச் சேவைதான் இம்மூன்றில் மலிவானது. எனவே, பெரும் சிறப்பியல்புகள் இல்லாவிட்டாலும், உங்களிடம் நல்ல கட்டமைப்பு நிர்வாகிகளும் நிரலாளர்களும் இருந்தால் இவ்வமைப்பின் மூலம் நீங்கள் குறைந்த செலவில் மேகமேறலாம்.
மேற்சொன்ன தனிப்பயனாக்கங்கள் இல்லாமல், ஆனால் ஒரு புதிய செயலியை நீங்களே உருவாக்கவேண்டிய தேவை இருந்தால் அப்போது ப்ளாட்ஃபார்ம் சேவை உங்கள் நண்பன்.
மென்பொருள் சேவை யாருக்குப் பயன்படும் என்பதை ஏற்கனவே பார்த்துவிட்டோம். மேலதிகமாகச் சொல்லவேண்டுமானால், மென்பொருள் சேவைதான் இம்மூன்றில் அதிகச் செலவு பிடிக்கும் அமைப்பு. எனவே, உங்களிடம் பெரிய அளவில் ஐடி துறை வல்லுனர்கள் இல்லாவிடில், அல்லது உங்களுக்குத் தேவைப்படும் செயலி சேல்ஸ்ஃபோர்ஸின் விற்பனை மேகத்தைப் போல சிக்கலான பல்கூட்டமைப்பாக இருக்குமானால் பேசாமல் பல்லைக்கடித்துக்கொண்டு பணத்தை எடுத்து வைத்தால் மென்பொருள் சேவை மேகம் உங்கள் நண்பனே!
இம்மூன்று அமைப்புகளிலும் மேகக்கணிமையின் பண்புகள் வேலை செய்யும். உங்களுக்குத் தேவைப்படும் அளவு வளங்களை உடனுக்குடன் கூட்டவோ குறைக்கவோ இவை மூன்றிலுமே முடியும். எவ்வகை வளங்கள் என்பதே வித்தியாசம். உள்கட்டமைப்புச் சேவையில் வளங்கள் என்றால் வன்பொருள் வளங்கள், மெய்நிகர் துணுக்குகள். ப்ளாட்ஃபார்ம் சேவையில் வளங்கள் என்றால் மெய்நிகர் துணுக்குகள், தரவுத்தளங்கள், பைத்தான், மைசீக்வல் போன்ற செயலிகள். மென்பொருள் சேவையில் வளங்கள் என்றால் பொதுவாகப் பயனர் எண்ணிக்கை, ஒரு குறிப்பிட்ட செயலியின் வளங்கள் – உதாரணமாக, ஒரு மின்வணிக வலைதளம் என்றால், அதில் எவ்வளவு பொருட்களை விற்கமுடியும், ஒரு மாதத்தில் எவ்வளவு விற்பனைக்கு எவ்வளவு கமிஷன் போன்ற வரையறைகள்.
உள்கட்டமைப்புச் சேவையில் உங்களது கணிமை வளங்கள்மேல் உங்களுக்கு முழுச் சுதந்தரம் உண்டு. உங்களுக்குத் தேவையான மென்பொருட்கள், செயலிகளை உங்கள் விருப்பத்திற்கேற்ப நிறுவிக்கொள்ளலாம். இச்சுதந்தரத்தின் விலை, பொறுப்பு. இச்செயலிகள் ஏதேனும் மக்கர் செய்தால் நீங்கள்தான் களத்தில் இறங்கவேண்டும். அதேபோல், மென்பொருட்களின் புதிய பதிப்பு வரும்போதோ அல்லது ஏதேனும் பாதுகாப்புப் பிரச்னைகள் வரும்போதோ அதை நீங்கள்தான் பார்த்துக்கொள்ளவேண்டும். நல்ல ஐடி ஆட்கள் உங்களிடம் இருப்பது மிகவும் அவசியம்.
மேற்சொன்ன இடையூறுகளெல்லாம் இல்லாமல் இருப்பதற்காகத்தான் ப்ளாட்ஃபார்ம் சேவைக்கு மேலதிகக் கட்டணம் செலுத்துகிறீர்கள். ப்ளாட்ஃபார்ம் சேவையில் மென்பொருள் பதிப்புகளெல்லாம் அவர்களே பார்த்துக்கொள்வார்கள். ஒரு தரவுத்தளம் வேலை செய்யவில்லை என்றால் அந்நிறுவனத்திற்குப் போன் போட்டு எகிறலாம். ஆனால் மேற்சொன்ன சுதந்திரமும் உங்களுக்கு இல்லை. திடீரென்று உங்களுக்கு பைத்தான் பிடித்தால், உங்கள் ப்ளாட்ஃபார்ம் சேவையில் பைத்தான் இருந்தால்தான் உண்டு. இல்லையென்றால் இல்லைதான். மேலும், கூகிள் ஆப் எஞ்சின் போன்ற சில சேவைகளின்மூலம் உருவாக்கிய ஒரு செயலியை நாளை நீங்கள் வேறொரு ப்ளாட்ஃபார்ம் சேவை நிறுவனத்தில் நிறுவினால் அங்கே அது வேலை செய்யும் என்று நிச்சயமில்லை.
மென்பொருள் சேவையில் இவ்வளவு இறங்கியெல்லாம் ஆடமுடியாது. கொடுக்கும் மென்பொருளைப் பயன்படுத்துவதோடு சரி. அம்மென்பொருளை உங்களுக்குத் தேவையான வடிவத்தில் திருத்தியமைத்துக்கொள்ளப் பொதுவாக வழிவகைகள் இருக்கும். அந்த அளவில்தான் உங்கள் சுதந்திரமும் இருக்கும். மென்பொருள் வேலை செய்யவில்லையென்றால் அந்நிறுவனத்திற்குப் ஃபோன் போட்டுவிட்டுப் பிரார்த்தனைகளில் ஈடுபடலாம். இதுவே, உள்கட்டமைப்புச் சேவையாக இருந்தால், உங்கள் தீரபராக்கிரம நிரலாளர் களத்தில் இறங்கி, நோண்டிப்பார்த்து, “அடடா! இந்தத் தரவுத்தளத்திற்கு மெமரி போதவில்லை. அதுதான் பிரச்னை” என்று அறிந்து சில பல பட்டன்களைத்தட்டி உங்கள் செயலிக்கு உயிர்தந்துவிட வாய்ப்பிருக்கிறது.
இதுவரை, மேகக்கணிமையின் பல்வேறு சேவை அமைப்புகளைப் பார்த்தோம். அடுத்த பகுதியில், தனிமேகம், பொதுமேகம், நீலமேகம் என்றெல்லாம் சில சமாசாரங்களைப் பார்க்கலாம்!

இப்பகுதியில் வரும் கலைச்சொற்கள்
சேவை அமைப்பு: Service model
வன்பொருள்: Hardware
கணினி செயலி: Computer processor
நினைவகம்: Memory
வன்தட்டு: Hard disk
மென்பொருள்: Software
இயங்குதளம்: Operating system
வலைச்செயலி: Web Application
தரவுத்தளம்: Database
வலைச்சேவை: Web Service
உள்கட்டமைப்புச் சேவை: Infrastructure as a service (Iaas)
ப்ளாட்ஃபார்ம் சேவை: Platform as a service (Paas)
மென்பொருள் சேவை: Software as a service (Saas)
மெய்நிகர்: Virtual
துணுக்கு: Computing Instance / Droplet
செயலி: Application
மென்பொருள் உபகரணங்கள்: Software tools
மின்வணிகம்: E-commerce
வலைதளம்: Web Site
பயனர் தொடர்பு நிர்வாகம்: Customer relationship management (CRM)
விற்பனை மேகம், சேவை மேகம்: Sales cloud, Service cloud (Salesforce.com offerings)
கட்டமைப்பு நிர்வாகி: System/Infrastructure administrator
நிரலாளர்: Programmer
தனிப்பயனாக்கங்கள்: Customizations
வளங்கள்: Resources
நெகிழ்வு: Elasticity, flexibility, adjustment
தன்னியக்கையாக: automated
(மென்பொருட்களின்) புதிய பதிப்பு: New version
 

One Reply to “மேகக் கணிமை (Cloud Computing) – 4”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.