உலக நிலப்பரப்பில், 30 சதவீதம் காடுகளில் பங்களிப்பு உள்ளது. ஆனால் இது கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருகிறது. அதாவது வருடத்திற்கு 18 மில்லியன் ஏக்கர் காடுகள் மனிதனால் அழிக்கப்படுகிறது என ஒரு புள்ளி விவரம் தெரிவிக்கிறது. இந்த அளவு என்பது, உலக வரைபடத்தில் பனாமா நாடு அளவுக்கான காடுகள் வருடாவருடம் அழிக்கப்படுகிறது. காடு அழிப்பில் இதுவரையில் முதல் இடத்தில் இருந்த பிரேசில் நாட்டை தற்போது இந்தோனிஷியா நாடு முந்தியுள்ளது. உலகின் மூன்றில் ஒரு பங்கு உயிரினங்கள் அமேசான் காடுகளில் இருந்தது தற்போது வெகுவாக குறைந்துள்ளது. பூமிக்கு தேவையான 20 சதவீத ஆக்ஸிஜன் அமேசான் காடுகளிருந்து உற்பத்தியாகுகிறது. இதேபோல் உலகில் உள்ள பத்து சதவீத மரங்களையும், 17 சதவீத பறவை இனங்களை தன்னகத்தில் கொண்டுள்ள இந்தோனிஷியா காடுகளூம் வேகமாக அழிந்து வருகிறது. கடந்த பத்து ஆண்டுகளில் ஏறத்தாழ 50,000 முதல் 60,000 வரை சதுர கிலோ மீட்டர் காடுகளை இந்தோனேஷியா அழித்துள்ளது. ஒப்புமைக்காக, இப்படி அழிக்கப்பட்ட நிலபரப்பு பஞ்சாப் மாநில அளவுக்கு ஈடானது. சமீபத்தில் உலக சுற்றுச்சூழல் துறை இவ்விரு நாடுகளையும் கடுமையாக எச்சரித்துள்ளது.
பருவ காலநிலை மாற்றம் குறித்த ஐக்கிய நாடுகள் கூட்டமைப்பு செயலகத்தின் படி, காடு அழிவதற்கு பிரதான காரணங்கள் மக்கள் தொகை வளர்ச்சி, நகரமயமாக்கல், மற்றும் அதிகளவில் மரப் பயன்பாடுகள். 2014ல் எடுக்கப்பட்ட சென்சஸ் படி, உலக மக்கட் தொகையில் 23 சதவீதம் கொண்டுள்ள ஐரோப்பா, வட மற்றும் தென் அமெரிக்க கண்டத்தில் தொழில் துறையில் மற்றும் அன்றாடும் பயன்படுத்தும் பொருட்களில் மரத்தின் தேவை அதிகமாக இருப்பதும் ஒரு முக்கிய காரணம். காடு அழிப்பினால் புவி வெப்பமயமாதல், மண் அரிப்பு, மற்றும் பல்லுயிர் இன அழிப்பு என பல சீர்கேடுகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. காடழிப்பினால் ஏற்படும் கரியமில வாயு வெளியேற்றம் மொத்த மனித கரியமில வாயு வெளியேற்றத்தில் இருபது சதவீதம் ஆகும், வருங்காலங்களில் இது இன்னும் அதிகரிக்கவே வாய்ப்புகள் இருப்பதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரிக்கிறார்கள்.
வெளியேறும் அதிக கரியமில வாயு காற்றின் வளிமண்டலத்தில் தங்குகிறது. இது படலம் போல் படர்ந்து சூரியக்கதிர்களை தக்கவைத்துக்கொள்வதால் உலக வெப்பமயமாதலுக்கு காரணமாகிறது. காடுகள் வனவிலங்கினங்களுக்கும், அரிய உயிரினங்களூக்கும் மற்றும் அரிய மூலிகை தாவரங்களூக்கும் உறைவிடமாக இருக்கின்றதன. உலகளவில் ஆண்டொன்றுக்கு 50,000 உயிரினங்கள், காடழிப்பினால் அழிந்து கொண்டு வருகின்றன. இப்போது நம் நாட்டிற்கு வருவோம். 1950 முதல் 2000 ஆண்டு வரைக்கும் நகரமயமாக்கல் மற்றும் அணைகள் கட்டுவதற்காக ஏறத்தாழ 5 லட்சம் ஏக்கர் காடுகள் இந்தியாவில் அழிக்கப்பட்டுள்ளன.
உலகின் மிகப்பழமையான வனப்பிரதேசம் நமது மேற்கு தொடர்ச்சி மலைக் காடுகள். மஹாராஷ்டிரம், குஜராத் எல்லையில் தொடங்கும் மேற்கு தொடச்சி மலை கோவா, கர்நாடகம், தமிழ்நாடு, கேரளம் என 1600 கிலோ மீட்டருக்கு நீண்டு கன்னியாகுமரியில் முடிகிறது. 14 தேசியப்பூங்காக்கள், 44 வன உயிரின சரணாலயங்கள், 11 புலிகள் காப்பகங்கள் மற்றும் 139 வகை பாலூட்டி உயிரினங்கள், 508வகை பறவை இனங்களும், 179 இருவாழ் உயிரினங்களும், 290 வகையான அரியமீன்களும் இந்த மலைக்காடுகளில் வாழ்கின்றன. பலவகையான நீர்வளம், வனவளம், கனிம வளம் 35 சிகரங்கள், கொண்ட இந்த மலைத்தொடர் 150மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் ஆப்ரிக்க – மடகாஸ்கர் நிலப்பரப்போடு இணைந்த மலைத்தொடராக இருந்து பிரிந்தது என்று ஆய்வுகள் சொல்கின்றன.
80 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட எரிமலை சீற்றத்தினால், மேற்குத்தொடர்ச்சி மலை உருவாகியுள்ளது என்பது புவியியல் நிபுணர்களின் கருத்து.
இப்படி அடர்ந்த வனப்பகுதிகள், அரிய உயிரினங்கள் மற்றும் தாவரங்களை தன்னகத்தில் கொண்டுள்ள மேற்கு தொடச்சி மலைக்காடுகள்தாம் பல நதிகளை உற்பத்தி செய்து தென்னிந்தியாவின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்கின்றன. உலகில் அரிய தாவரங்களூம் உயிரினங்களூம் உள்ள வளமான எட்டு இடங்களில் மேற்குத் தொடர்ச்சி மலைப் பிரதேசமும் ஒன்றாகும். இப்படி அரிய இயற்கைப் பிரதேசமான மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதி, கடந்த 2012ம் ஆண்டு, உலகின் மிகச் சிறந்த பாரம்பரிய இடமாக ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி, விஞ்ஞான கலாசார அமைப்பால் (யுனெஸ்கோ) அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
ஆனால் தற்போது மேற்குத் தொடர்ச்சி மலையின் காடுகள் அழிக்கப்படுவதால், சமீப ஆண்டுகளாக வனவிலங்குகள் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தற்போது மேற்குத் தொடர்ச்சி மலையில் முக்கிய உயிர்ச்சூழல் மண்டலமான நீலகிரியில் நீர் ஆதாரமாக விளங்கும் சோலை வனங்கள் பெருமளவில் அழிக்கப்பட்டுள்ளன. இனச் சேர்க்கையில் ஈடுபடும்போதும், ஆபத்தான நேரத்திலும் விசில் அடிக்கும் அரிய உயிரினமான வரையாடுகள் தற்போது மேற்குத் தொடர்ச்சி மலையில் அழிந்து வருகின்றன. தமிழகத்தின் மாநில விலங்கான, நீலகிரி தார் என அழைக்கப்படும் பயந்த சுபாவம் கொண்ட வரையாடுகள் காடுகள் அழிக்கப்படுவதனாலும் மற்றும் இறைச்சிக்காக வேட்டையாடுவதாலும் மெல்ல அழிந்து வருவதாகக் கூறப்படுகிறது.
காடுகள் அழிக்கப்பட்டு, பருவ நிலை மாற்றத்தால் பல உயிரினங்கள் மேற்குத் தொடர்ச்சி மலையில் பல சவால்களை எதிர்கொண்டு அழிவின் விளிம்பிற்கு தள்ளப்பட்டுள்ளன. குறிப்பாக யானைகள், சோலைமந்தி, சருகுமான், மலை அணில். புலி, சிறுத்தை போன்ற உயிரினங்கள் குடிபெயர்வதில் சிக்கல் இருப்பதாக பல சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தங்கள் கவலையை பகிர்ந்துகொள்கிறார்கள். கடந்த சில வருடங்களாக, மனிதன் ஏற்படுத்திய தாக்கத்தால், இந்த வனப் பிரதேசம் தன்னை பாதுகாத்துக்கொள்ள போராடிக் கொண்டிருக்கிறது. மேற்குத் தொடர்ச்சி மலை காடழிப்பினால் பருவ நிலை மாற்றத்தை ஆய்வு செய்யவும், சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், மத்திய அரசு பேராசிரியர் மாதவ் காட்கில் தலைமையில் 14 பேர் கொண்ட குழுவை அமைத்தது. இந்தக்குழு தனது அறிக்கையை 2011ல் மத்திய அரசிடம் சமர்ப்பித்தது. இந்த அறிக்கையைச் செழுமைப்படுத்தி அமுல்படுத்தும் வகையில் உருவாக்க டாக்டர் கஸ்தூரி ரங்கன் தலைமையில் 9 பேர் கொண்ட மற்றொரு குழுவை மத்திய அரசு நியமித்தது. 2013ல் மத்திய அரசிடம் சமர்பித்த கஸ்தூரி ரங்கன் அறிக்கையில், மலையில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றவேண்டும், மணல் குவாரிகள், சுரங்க வேலைகள் தடை செய்யவேண்டும், 20,000 சதுர மீட்டர்களூக்கு மேல் கட்டுமானம் கூடாது, 50,000 ஹெக்டருக்கு மேல் வீடு கட்டக்கூடாது போன்ற கறாரான நிபந்தனைகளை மத்திய அரசு இன்றளவிலும் அமுல்படுத்தவில்லை.
பல்வேறு அரசியல் பிரச்சினையால் கஸ்தூரி ரங்கன் அறிக்கையை முழுமையாக அமல் படுத்தாமல் மத்திய அரசு கிடப்பில் போட்டுள்ளது. குறிப்பாக வன வளத்தை பெரிதும் சார்ந்திருக்கும் கேரள அரசு இந்த அறிக்கையை எதிர்ப்பதால், இதை உடனடியாக அமல்படுத்தமுடியவில்லை. மேலும் இந்த அறிக்கையை அமல் படுத்தினால் முல்லை பெரியாரில் கேரள அரசு புதிய அணை கட்ட முடியாது. அதேபோன்று காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடகா அரசு தடுப்பு அணையும் கட்ட முடியாது.
வன அழிப்பு ஒருபுறம் மறுபுறத்தில் நீர்நிலை ஆதாரங்கள் குறிப்பாக காவேரி,பவானி ஆறுகள் தொழிற்சாலை ரசாயன கழிவுகளால் மாசுப்பட்டுள்ளது. இதனால் கரூர்,ஈரோடு,திருப்பூர் மாவட்டங்களில் நிலத்தடி நீர் நச்சுத்தன்மையாக இருக்கிறது. மனிதனின் பேராசையால் தமிழ்நாட்டில் ஓடும் அனைத்து ஆறுகளிலும் வரைமுறையற்ற மணற் கொள்ளை தங்குதடையின்றி நடக்கிறது. விவசாயம்,ஆற்றுநீர் பாசனம், நிலத்தடி நீர் வளம் என்பதெல்லாம் எதிர்காலத்தில் கேள்விக்குறியாக இருக்கிறது. ஏறத்தாழ 20 மாவட்டங்களில் மலையை வெட்டி கிரானைட் கொள்ளையால் பல நுண்ணுயிர்களின் அழிப்பு மற்றும் பண்டைய புராதன சின்னங்களூம் அழிக்கப்படுகிறது. தமிழ்நாட்டின் கடல் சார்ந்த நிலப்பரப்பு 1100 கிலோ மீட்டர் நீளமுடையது. இது, இந்தியாவில் உள்ள மொத்த கடற்கரை நீளத்தில், 15 சதவீதம்.
தமிழ்நாட்டின், 40 சதவித தொழிற்சாலைகள், 13 கடற்கரை மாவட்டங்களில் நிறுவப்பட்டுள்ளது. 1990 களில் அரங்கேறிய புவிமயமாதலுக்குப் பிறகு, வளர்ச்சி என்ற பெயரில் எண்ணற்ற ஆபத்தான தொழிற்சாலைகள் நிறுவப்பட்டு, ஆலைகளுக்கு வேண்டிய மூலப்பொருட்களை தோண்டி எடுப்பது போன்ற இயற்கை சூறையாடல்கள் கடற்கரை பிரதேசங்களில் பரவலாக நடக்கிறது. தொழிற்சாலை கழிவுகள் நல்ல நீர், மற்றும் நிலத்தில் கலக்கப்படுவது, விஷ வாயு கசிவு, நெகிழி, இரும்பு, எண்ணெய் கடலில் கொட்டப்படுவது, தாது மணல் அள்ளுதல், கப்பல் கழிவுகள் கடலில் கலக்கப்படுவது, கதிர் வீச்சு உடைய திட, திரவ பொருட்கள் கொட்டப்படுவது, விஷ ரசாயானங்கள் கடலில் கலப்பது போன்ற காரணங்களால், இந்தப் பிரதேசங்களின் இயற்கை மாசுபடுகிறது.
தென் தமிழ்நாட்டில் உள்ள மன்னார் வளைகுடா பகுதி என்பது 21 தீவுகளை உள்ளடக்கியது. பல அரிய உயிரினங்கள் வாழும் கடற் பிரதேசம். தென் கிழக்கு ஆசியாவில் பாதுகாக்கப்படவேண்டிய முக்கிய பகுதி என யுனெஸ்கோ வரையறுத்துள்ளது. இத்தகைய அரிய நிலப்பரப்பு மேற்சொன்ன பல காரணங்களால், பாழ்பட்டு, மக்கள் வாழ்வதற்க்கும் பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது.
சமீபத்தில் தூத்துக்குடி கடற்கரையோரத்தில் ஏறத்தாழ 80 திமிலங்கள் இறந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளன என்ற செய்தி பலத்த அதிர்ச்சி அலையை உண்டாக்கியுள்ளது. இம்மாதிரி ஏற்கனவே 1972ல் இதே பகுதியில் இதே ஜனவரி மாதம் 14ம் தேதி நடந்துள்ளது. உலகம் முழுவதும் பல இடங்களில் திமிலங்கள் / டால்ஃபின்கள் இப்படி இறந்த நிலையில் கரை ஒதுங்கும் நிகழ்வுகள் நடந்து கொண்டுதான் இருக்கிறது.
இதுவரைக்கும் இது எதனால் என்பது விஞ்ஞானிகளுக்கு புரியாத புதிர்தான். ஏகப்பட்ட காரணங்களை அடுக்குகிறார்கள். கடற்படை ராணுவத்தினர்களின் ( குறிப்பாக நீர்மூழ்கி கப்பல்களில் ) ரோந்து கப்பல்களில் பயன்படுத்தப்படும் ஒலி அடிப்படையில் இயங்கும் சோனார் எதிரொலிக்கருவிகளின் அதிர்வெண் அலைவரிசை திமிலங்களின் மூளையில் பல குழப்பங்களையும், தடுமாற்றத்தையும் ஏற்படுத்துகிறது என்பது ஒரு முக்கிய காரணம். தொழிற்சாலை கழிவுகளால் கடல் நீர் மாசுபாடு, சுற்றுச்சூழல் கேடால் புவி வெப்பமயமாதலின் விளைவாக கடல்நீரின் தன்மை மாறுபடுவதால் திமிலங்கள் இறந்து கரை ஒதுங்கியிருக்கலாம். சில சுறாமீன்கள், திமிலங்களை வேட்டையாடும். அதிலிருந்து தப்பிக்க தலைதெறிக்க ஓடி, வழிதவறி கரை ஒதுங்கி இறக்கலாம். மனிதர்களுக்கு வருவதுபோல் திமிலங்களுக்கு நிமோனியா காய்ச்சல் வரும். இதனால் களைப்படைந்து கரை ஒதுங்கி இறக்கலாம்.
திமிலங்கள் கூட்டமாகத்தான் நீந்தும். தங்களுக்குள் பரஸ்பரம் ஒற்றுமையாக ஒருவருக்கொருவர் உதவி புரியும். எந்த ஒரு திமிலங்களும் தனியாக பயணிக்காது. அப்படி ஏதெனும் ஒரு திமிங்கலம், வழிதவறி கரை ஒதுங்குவதை பார்த்து மற்ற திமிலங்களூம் பின் தொடர்ந்து கரை ஓரத்தில் உள்ள ஆழமற்ற பகுதியில் நீந்த முடியாமல் இறப்பதற்கும் வாய்ப்புண்டு என ஆய்வாளர்களின் கருத்து. கடல் நீரில் கலக்கும் ஆபத்தான கதிர்வீச்சு தனிமங்களாலும் கரை ஒதுங்கி இறக்க வாய்ப்புகள் உண்டு. இந்த காரணத்தை இப்போது ஏற்கமுடியவில்லை. ஏனெனில் இதேபோல் இதே பகுதியில் 1972ம் வருடம் கூடங்குளம் இல்லாதபோதும் நடந்துள்ளது. இருப்பினும் கடல்நீரை சோதனை செய்தால்தான் இறுதி முடிவுக்கு வரமுடியும்.
எல்லாவற்றும் மேலாக, மனிதர்களைப்போல் விலங்குகளூக்கும் குறிப்பாக கடல்வாழ் உயிரினங்களூக்கும் தற்கொலை எண்ணம் வருவதுண்டு. கூட்டுத்தற்கொலையாகவும் இருக்கலாம். தற்கொலைக்கான காரணங்கள் தெரியவில்லை. ஆனால் ஒன்று சொல்லமுடியும், கடல்வாழ் உயிரினங்களின் இருப்பிடத்தை மாசுப்படுத்தி, நாசம் பண்ணினால், உயிரினங்களும் வேறு வழியின்றி கவுரமாக தன் முடிவை தேர்ந்தெடுத்துக்கொள்கிறது எனப் புரிந்து கொள்ளலாம்.
வளர்ச்சி, பேராசை, சுயநலத்தால் மனிதன் உயிர் வாழ்வதற்கு ஆதாரமாக இருக்கும் இயற்கை வளங்கள் உலகம் முழுவதும் அழிந்து வருகிறது. இயற்கையை காப்பாற்றினால் மட்டுமே மானுட குலம் எதிர்காலத்தை பார்க்கமுடியும் என உலகம் முழுவதும் உள்ள சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்துகிறார்கள்.
தாவரங்கள், வனங்கள், சமுத்திரங்கள், ஆறுகள், உயிரினங்கள், விலங்குகள் மற்றும் மனிதர்கள் உட்பட பல கொலைகளுக்கும், தற்கொலைகளுக்கும் அதே மனிதன்தான் காரணமாக இருக்கிறான். புவியில் மிக ஆபத்தானவன் மனிதன்தான்! ஆக மனிதமுதல்வாத கருத்தாக்கமும்,இயற்கை X செயற்கை முரணியக்க சிந்தனையும் இத்தகைய இயற்கை சீரழிவுகளுக்கு காரணமாக இருக்கிறது.