மகரந்தம்: கோஹினூர் வைரம்; சீனப் பொருளாதாரம்

நான் உங்கள் வீட்டு அடிமை

Minions-film-Queen_Crown_Kohinoor_Diamond_Steal_Wealth_Movies

சமீபத்தில் ஒரு செய்தி அறிக்கை பாகிஸ்தானிய உயர்நீதி மன்றத்தில் ஒரு வழக்குத் தொடரப்பட்டிருந்ததாகத் தெரிவித்தது. வழக்கின் நோக்கம், இங்கிலாந்தின் அரசை கோஹினூர் வைரத்தை பாகிஸ்தானுக்குத் திருப்பிக் கொடுக்கச் செய்வதுதான். கோஹினூர் வைரத்துக்கும் பாகிஸ்தானுக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்டால், அந்த வாதங்கள் பொருட்படுத்தத் தக்கனவாக இராது- நம் பார்வையில். ஏனெனில், அதை சீக்கிய அரசர் ரஞ்சித் சிங்கிடமிருந்துதான் பிரிட்டிஷார் எடுத்துச் சென்றனர். ஆனால் இதே வைரத்துக்கு ஆஃப்கானிஸ்தானும் உரிமை கொண்டாடுகிறது. அது எப்படிஎன்றால், நாதிர்ஷா என்னும் ஈரானிய ஆக்கிரமிப்பாளன் அதை இந்தியாவிலிருந்து பறித்துச் சென்றான், பிறகு நாதிர் ஷாவின் ஆட்சி வீழ்ந்த பின்னர், ஆஃப்கன் அரசர் ஒருவர் அதை பர்சியர்களிடமிருந்து பறித்தார். அவர் ஆட்சி வீழ்ந்த போது, ரஞ்சித் சிங்கிடம் புகலிடம் கேட்டு வந்தவரிடம், ரஞ்சித் சிங் அதைக் கேட்டுப் பெறுகிறார். பின்னர் ரஞ்சித் சிங்கை பிரிட்டிஷார் தோற்கடித்த போது அதைப் போரில் பறிமுதல் செய்த சொத்தாகப் பிரிட்டிஷார் எடுத்துப் போனார்கள். டல்ஹௌஸி இந்தியாவிலிருந்து அடித்த பெருங்கொள்ளையில் இதுவும் ஒன்று.
இதுவோ வெட்டி எடுக்கப்பட்டது இந்தியாவில், தெலங்கானா மாநிலத்தில். அப்போது காகத்தியர்கள் அந்தப் பகுதியை ஆண்டு கொண்டிருந்தனர். அதற்குப் பின்னரும் பெரும் பகுதி நேரமும் இந்தியாவில்தான் இது இருந்திருக்கிறது. எனவே இந்தியாவும் இதற்கு உரிமை கொண்டாடுகிறது.
இதற்கு, இந்தியா, பாகிஸ்தான், ஈரான், மேலும் ஆஃப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் உரிமை கொண்டாடுகையில் பிரிட்டன் இதைத் திருப்பிக் கொடுப்பதாகச் சிறிதும் அறிகுறி காட்டவில்லை. போரில் வெல்லப்பட்ட சொத்து என்பது பிரிட்டிஷ் முடிமன்னர் குழாத்தின் கட்சி. அதுதான் அன்றைய நியதியாம். அன்னியர் நாட்டுப் பழம் பெருமை வாய்ந்த பொருட்களைத் திருப்பிக் கொடுக்க விரும்பாத பிரிட்டிஷ் அரசு, தன் நாட்டின் வரலாற்றில் புகழ் பெற்ற சிறு பொருட்களையும் அன்னியர் விலை கொடுத்து வாங்கிச் செல்வதைக் கூட விரும்புவதில்லை.
பிற நாட்டு உடைமைகளைத் திருடிக் கொள்வதில் மிகத் திறமை காட்டிய பிரிட்டிஷாரின் நாட்டிலும் சூரியன் இப்போது அஸ்தமனம் ஆகி வருகிறது. பிரிட்டிஷ் பொருளாதாரம், நாட்டின் அதிகாரம், மக்களின் வாழ்வு ஆகியன எல்லாமே மெதுவாக க்ஷீணித்து வருகின்றன. இந்த நிலையில் பிரிட்டனின் அரபிய ஏகாதிபத்திய வருடங்களிலிருந்து பிரிட்டன் பறித்துச் சென்ற பல அதிசயப் பொருட்கள் இன்று பிரிட்டனிலிருந்து ஒவ்வொன்றாக பல நாட்டு பழம்பொருள்/ அதிசயப் பொருட்களைச் சேகரிப்பவர்களால் விலை கொடுத்து எடுத்துச் செல்லப்படுகின்றனவாம்.
அப்படிச் சில அரிய பொருட்களாக இப்போது தெரிய வந்தன- ‘ஞானத்தின் ஏழு தூண்கள்’ (’ஸெவன் பில்லர்ஸ் ஆஃப் விஸ்டம்’) என்ற 1920களின் புகழ் பெற்ற ஒரு நினைவுக் குறிப்பு நூலை எழுதிய டி.ஈ.லாரன்ஸ் என்பாரின் இரு வெற்றிச் சின்னங்கள். அந்தப் புத்தகம் 1920களில் லாரன்ஸுக்குப் பெரும் புகழ் ஈட்டித் தந்தது. ஆட்டமான் சாம்ராஜ்யத்தின் மீது பிரிட்டன் தொடுத்த போர், அந்த சாம்ராஜ்யத்தைத் தகர்த்தது, துருக்கியின் காலிஃபேட்டில் கீழ்மைப்பட்ட இரண்டாம் தரக் குடிமக்களாகவும், பிரஜைகளாகவும் இருந்த அரபியருக்கு துருக்கியரிடமிருந்து விடுதலை பெற்றுக் கொடுத்தால் அரபுகளின் நன்றி தமக்கு என்றும் இருக்கும் என்றும், துருக்கியின் சாம்ராஜ்யம் வலுவிழந்து உதிரும் என்றும் பிரிட்டிஷ் ராஜதந்திரிகள் கணக்கிட்டனர். அந்தக் கணக்கை முன்வைத்தவர்களில் ஒருவர் டி.ஈ.லாரன்ஸ் என்னும் மானுடவியலாளர்/ அயல்நாட்டுத் தூதரக ஊழியர்.
இந்த லாரன்ஸ் சில பாலைவனத்து நாடோடிக் குழுக்களோடு உறவு பூண்டு, அவர்களுக்குப் பிரிட்டனிலிருந்து ஆயுதங்களை வாங்கிக் கொடுத்து, பிரிட்டன் துருக்கியோடு போர் செய்யும் தருவாயில் எதிர்பாராத புறங்களிலிருந்து துருக்கியின் ராணுவத் தலங்களைத் தாக்கியும், நகரங்களைக் கொள்ளையடித்தும் வரச் செய்தார். அவரே சில கொரில்லாத் தாக்குதல்களில் பங்கெடுத்ததாகவும் அவர் சொல்கிறார்.
அப்படி அகபா வளைகுடா என்ற பகுதியில் ஒரு நகரத்தைத் துருக்கியின் ராணுவத்திடமிருந்து கைப்பற்றி அரபுகள் அதைத் தம் வசமாக்கிக் கொள்கின்றனர். பின் அரபுகளில் ஒரு குழு அரபுகளின் அரசு ஒன்றையே அறிவித்து அது பின்னாளில் அரபு நாடுமாகிறது. அந்த அகபா வெற்றியைக் கொண்டாடி லாரன்ஸுக்கு அரபு அரச குடும்பத்தினர் கொடுத்த ஒரு குறுவாளும், பட்டு உள்ளங்கிகளும் லாரன்ஸைப் படம் வரைந்த ஒரு பிரிட்டிஷ் பெண் ஓவியரின் குடும்பத்தினரிடம் வெகு காலமாகக் கிடந்தன. அக்குடும்பத்தினர் இவற்றைச் சமீபத்தில் ஏலத்தில் கொணர்ந்து விற்க முனைந்த போது பிரிட்டிஷ் அரசு செயலில் இறங்கி அதற்குத் தடை விதித்திருக்கிறது. பிரிட்டிஷ் பிரஜை யாரேனும் அந்த ஏல விலையைக் கொடுத்து வாங்க முன்வந்தால் விற்கலாம் என்பது அந்த அரசின் கருத்து. இப்படிப் பட்ட வரலாற்று முக்கியத்துவம் மிக்க பொருட்கள் பிரிட்டனை விட்டு வெளியேறக் கூடாது என்பது பிரிட்டனின் இன்றைய அரசின் நிலைப்பாடு.
ஆனால் அதே அரசு ஆசிய ஆஃப்ரிக்க நாடுகளிடமிருந்தும், பல சமூகங்களிலிருந்தும் பிரிட்டிஷார் திருடிச் சென்ற பொக்கிஷங்களில் எதையும் திருப்பிக் கொடுக்கத் தயாரில்லை. அப்படி ஒரு நேர்த்தியான அறப் பார்வை பிரிட்டிஷாருக்கு. இந்த பிரிட்டிஷாருக்கு சில தமிழ் தேசியக் கருத்தியலாளர் நன்றி தெரிவித்தும், அந்தக் குழுவிலிருந்து வந்த  எவாஞ்சலியப் பாதிரிக்கும், ஒரு பிரிட்டிஷ் அதிகாரிக்கும் வீர வணக்கமெல்லாம் தெரிவித்தும் கொண்டாடியதாகச் செய்திகளைப் பார்த்திருப்பீர்கள்.
நம்மவரின் வரலாற்று அறிவு எப்போதுமே பிரபலமானது. இன்று மட்டும் எப்படி மாறி விடப் போகிறது.
http://www.theguardian.com/world/2016/feb/02/battle-to-save-lawrence-of-arabias-dagger-and-robes-for-the-nation
 

~oOo~

ஓடிக் களைத்து விட்டதா பாண்டா கரடி

ChinasHouseofCards

பட்ட காலிலேயே படும் என்பார்கள், அது வெற்றுப் பழமொழியோ, மூட நம்பிக்கையோ அல்ல. அடிபட்ட கால் அத்தனை இயல்பாக இயங்காது, அடிபட்ட நபருடைய புத்தியும் சற்றுத் தளர்ந்து போய் இருக்கும். பாதிச் செய்கைகள் மனித வாழ்வில் கூர்ந்த கவனத்துடன் செய்யப்படுவன அல்ல. உடலுக்கு நினைவு என்று ஒன்று சொல்கிறார்கள். சாதாரணமாக மனது/ புத்திக்குத்தான் நினைவு என்பது பொருந்தும் என்று நினைப்போம். ஆனால் அவயங்களுக்குக் கூட நினைவு இருக்கிறது என்பது இன்றைய கோட்பாடு. இது உண்மையா பொய்யா என்று ஆராயப் புகுவதை விட நம் அனுபவத்தில் எத்தனை தூரம் இதை நாம் நம்புகிறோம் என்பதை யோசிக்கலாம். விளையாட்டுகளில் தீவிரப் போட்டி இடுபவர்கள் திரும்பத் திரும்பப் பயிற்சி செய்வதை, வெறும் பார்வையாளரின் புறமிருந்து நோக்கினால், ஏதோ தேவையற்ற ஆடம்பரம் என்று கூடத் தோன்றலாம். தோனிக்கு இனிமேல் கற்க கிரிக்கெட்டில் என்ன இருக்கப் போகிறது? ஃபெடரருக்குத் தன் விளையாட்டை மேலும் கூர்மையாக்க என்ன இடம் இருக்கும்? மெஸ்ஸிக்குக் காலபந்தை உதைப்பதில், இடம் பார்த்து அனுப்புவதில் கற்க என்ன இருக்க முடியும்? ஆனால் இவர்களையும் போட்டி இல்லாத தினங்களில் கூட பயிற்சி செய்பவர்களாக நாம் பார்க்க முடியும். எதற்கு அத்தனை வருத்திக் கொண்டு பயில்கிறார்கள் என்றும் நாம் யோசிக்கலாம்.
புதிதாகக் கற்பது என்பது எப்போதும் கொஞ்சம் இருக்கிறது என்றாலும், உடலுக்கு வருடா வருடம் மட்டுமல்ல, தினம் தினமும் வயது கூடிக்கொண்டு வருகிறது. தவிர உடலுக்கும் மனதுக்கும் மறதியும் உண்டு, சலிப்பும் உண்டு, நோய்களும் வரும். ஆகவே உடல் எந்நேரமும் கருக்கான நிலையில் இராது. இவற்றை எல்லாம் தாண்டிக் கொண்டு வர உடலை வளைக்கும் முயற்சிதான் இந்தப் பயிற்சி என்பது. அதற்கு மேல் போய், அவர்கள் வழக்கமாக ஆடும் வகைகளையே உடலுக்கு அடிக்கடி செய்து காட்டச் செய்தால் அந்த ஆட்டங்கள், வீச்சுகள், குதிப்புகள் எல்லாம் தன்னியல்பாக மாறும். இந்தத் தன்னியல்பு என்பது புத்தியால் கடிந்து செலுத்தப்படாது, விளையாட்டுப் போட்டியின் ஓட்டத்தில், இழுப்பில் புத்தி தோய்ந்திருக்கையில், உடல் தன் நினைவில் இருக்கும் வகை முறைகளால் வேறெங்கொ புதைந்திருக்கும் புத்தியின் எதிர்பார்ப்புகளை அனுமானித்துத் தன்னை அந்த இடங்களில் பொருத்திக் கொள்ளும் தன்மை என்று சொல்லலாம். அதாவது விழிப்புணர்வோடு செயல்படாமல் உடலே தானாக ஒரு சவாலுக்குப் பதில் சொல்லும் விதமாக இயங்கும்.
அது பல நேரம் திறமையான விளையாட்டுக்காரர்களின் அசாதாரணமான சாதனையாகக் காட்சி தரவும் கூடும். அதை எப்படி ஆடினோம், செய்தோம் என்று அந்த விளையாட்டுக்காரருக்குத் தெரியாமல் கூட இருக்கும். நம்மைப் போலவே அவருக்குமே அது ஒரு வியப்பான செயலாக இருக்கும். அதையே இன்னொரு தினம் அவர் முயன்றால் அது கை கூடாமல் போக வாய்ப்பு உண்டு. ஆனால் அந்தச் சாதனை விளையாட்டை நினைவு கொண்டு உடலுக்கு அது சாத்தியம் என்று தெரிந்து கொண்ட பின் அதை இழக்க மனமில்லாமல், அது போலவே பயிற்சியில் செய்து பார்த்து அதை ஒரு பழக்கமாக ஆக்க முயல்பவர் பெரும் சாதனையாளர்களாக ஆகிறார்கள். இந்த உடல் நினைவு என்பது அப்படி ஒரு பழக்கத்தால் தன்னியல்பாக இயங்கும் தன்மை என்று நாம் கருதலாம்.
பட்ட கால் எனப்படும் காயம்பட்ட, அடிபட்ட ஒரு அங்கம் அப்படி ஒரு நினைவைப் பழுதாக்குகிறது. இது சாதனையாளர்களை மட்டும் பாதிப்பது இல்லை. மாறாக அன்றாட நடவடிக்கைகளைச் செய்பவர்களைக் கூடப் பாதிக்கும். தன்னியல்பாக நடப்பவர்கள் இப்போது கவனமாக அடியெடுத்து நடக்கத் தேவை என்று உணர்ந்து சுவாதீனமாக இயங்குவதைத் தவிர்ப்பார்கள். அதனாலேயே பல சிறு விபத்துகள் ஏற்படும். கூடதிகமாக சுய கவனத்துடன் இருந்தால் நிகழ்வது அத்தனை சுலபமாகக் கை கூடாது என்பது நாம் அறிந்ததே.
அதேதான் பொருளாதாரம், சமூக நடவடிக்கைகள், படிக்கும் முறைகள், உரை நிகழ்த்தல் என்று பற்பல இடங்களிலும் செயல்படுகிறது.
அடுத்து என்ன சொல்லைப் பயன்படுத்தலாம் என்று யோசித்து யோசித்துப் பேசத் துவங்கினால் கேட்டுக் கொண்டிருப்பவர்களுக்குப் பொறுமை போய்விடும். சகஜப் பேச்சு தடைப்படும். மேடைப் பேச்சாளர்களில் நாம் வியந்து பாராட்டுபவர்கள் யாரென்று பார்த்தால், தங்கு தடையின்றி அருவியாகக் கொட்டிப் பேசுவோரைத்தான் ஆச்சரியத்தோடு பார்க்கிறோம். ஏனெனில் பேசுவதைச் சிந்தித்துப் பேச அவகாசமே தேவைப்படாத அளவு வேகமாக அவர்களின் புத்தி/ மனது வேலை செய்கிறது, சொற்குவியல் நாக்கில் கொட்டுகிறது, கருத்துகளும் சொற்களுமாகச் சரளமாகக் கொட்டிப் பின்னிய ஒரு மாய விரிப்பை அவர்கள் நம் முன் பரப்பி நம்மைப் பிரமிக்க வைக்கிறார்கள். அந்தத் துரிதத்தோடு அவர்கள் சாதுரியமாகவும் பேசுவாரே ஆயின் அவர்களால் பெரும் கூட்டங்களைக் கட்டிப் போட்டு வைக்க முடியும். இதை இங்கிலிஷில் ‘கரிஸ்மா’ என்று அழைக்கிறார்கள். வசீகரிப்பு என்று இதைத் தமிழில் சொல்கிறோம் என்று நினைக்கிறேன். காந்த சக்தி என்று பேச்சில் சொல்வோம். இந்த காந்த சக்தி இந்த வகைப் பேச்சாளர்களுக்கு தன்னியல்பாகக் கூட மாறுவது நேரும்.
அடிபட்டவர்களுக்கு அந்த சகஜ நிலை என்பது குலைந்த நிலையில் இருக்கும். நாளாவட்டத்தில் உடல் தேறத் தேற அவர்களின் நடையோ, ஓட்டமோ மறுபடி பழைய நன்னிலைக்கு வந்து விடும் என்பது சரிதான். ஆனால் அதுவரை அவர்களுக்குச் சிறு விபத்துகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. எனவே அந்தப் பழமொழி வழக்கத்தில் இருக்கிறது. பொய்யோ, மூட நம்பிக்கையோ இல்லை.
அரை வேக்காட்டு ‘அறிவாளிகள்’ பண்டை நாகரீகத்திலிருந்து கிட்டும் எதையும் மூட நம்பிக்கை என்று மூட்டை கட்டிப் போடத் துடிப்பாக இருப்பார்கள். அவர்களுடைய செயல்பாடுகள் கால ஓட்டத்தில் மூட நம்பிக்கைகள் என்று அழிபடும். (தற்கால நிகழ்வுகள்: ஈவெராவியம், மார்க்சியம் ஆகியன இன்று மூட நம்பிக்கைகள் என்று ஒதுக்கப்படுகின்றதைப் பார்க்கிறோம்.)
இத்தனையும் சொல்லக் காரணம் வேறு ஒரு களத்தில், வேறு ஒரு வேகத்தில் நடக்கும் இன்றைய நிகழ்வு ஒன்று நமக்குப் புரிபட வேண்டி.
சீனாவின் பொருளாதாரம் இன்னமும் வளர்ந்துதான் வருகிறது. சுமார் 6% வளர்ச்சியாக ஆண்டு வளர்ச்சி இருக்கிறது. ஒரு பத்திருபதாண்டு முன்பு இதே பொருளாதாரம் 14% போல எல்லாம் வளர்ந்ததாகக் கதைகள் சொல்லப்படுகின்றன. இரட்டை இலக்க வளர்ச்சி என்பதைத் தொடர்ந்து பத்தாண்டுகளுக்கும் மேலாகச் சாதித்த நாடு என்றெல்லாம் சீனாவைப் புகழ்கிறார்கள். அதனாலேயே மேலை நாடுகள் தம் முதலீடுகளை அங்கே கொண்டு கொட்டித் தீர்த்தன. மேன்மேலும் முதலீட்டைச் சீனாவில் அவை கொட்டக் கொட்ட சீனா வளர்ந்தது, மேற்கு தேய்ந்தது. இன்னமும் உற்பத்தியைக் கைவிடாது தொடரும் நாடுகள்தாம் உலகப் பொருளாதாரத்தில் மேநிலையில் இருக்கின்றன. நுகர்வில் இறங்கி, உற்பத்தியைக் கைவிட்ட நாடுகள் பிரிட்டிஷ் காலத்து ஜமீன் தாரர்கள் (நிலப் பிரபுக்கள்) போலப் படிப்படியாக வீழ்ச்சியடையும் நாடுகளாகவே மாறின. இத்தலி, கிரீஸ், ஸ்பெயின், போர்ச்சுகல், பெல்ஜியம், ஓரளவுக்கு பிரிட்டன், ஃப்ரான்ஸ் ஆகியன இவை எல்லாம் கரைந்து மெலிந்து வரக் காரணம் உற்பத்தி மையங்களாக அவை இல்லாது போனமைதான்.
ஆனால் மூன்று தலைமுறை வாழ்ந்தவரில்லை, மூன்று தலைமுறை தேய்ந்தவரில்லை என்றும் ஒரு வழக்கு நம் ஊரில் உண்டு. அது போல முன்பு வளர்ந்த நாடுகளின் உச்சியில் இருந்த ரஷ்யா இன்று எலியாக ஆகி வருகிறது. அமெரிக்கா ஆகிருதி இழந்து உள்ளே செல்லரித்த கூடாக மாறி வருகிறது. பற்பல யூரோப்பிய நாடுகள் சரிவில் இருக்கின்றன. கிரீஸ் போன்ற முந்நாள் சாம்ராஜ்யத் தலை நாடுகள் இன்று கடனில் மூழ்கி மொத்த நாடே ஜப்திக்கு வரும் நிலையில் உள்ளன.
ஆனால் சீனா இன்னமும் வளர்கிறதா என்றால் ஆம். முன்பு போல அசுர வேகத்திலா என்றால், இல்லை. ஏனெனில் உலகச் சந்தையே இன்று தேய்மானத்தில் இருக்கிறது. அதனால் உலகுக்குப் பொருட்களை விற்று அசுர வேகத்தில் வளர்ந்த சீனாவின் பல்லாண்டுப் பழக்க நிலையான 12 சதவீத வளர்ச்சி தேய்ந்து 6% ஆக ஆகி விட்டது. ஆனால் 20 வயது இளைஞனின் ஓட்டமும், 50 வயது மனிதனின் ஓட்டமும் ஒரே போல இராது. 20 வயதில் அவன் சொத்து பத்துகள் இல்லாத, சைகிளோட்டி இளைஞனாக இருந்தால் 50 இல் குறைந்தது ஒரு மோட்டர் சைக்கிளாவது வைத்திருக்கிறான். அவனுடைய உடலால் முடியாததை எந்திரம் செய்து விடும். சீனாவின் செல்வக் குவியல் 80களில் மிக அடிமட்ட நிலையில் இருந்தது, இன்று அது உலக நாடுகளில் மிக அதிகச் செல்வக் குவியலைக் கொண்ட நாடாக இருக்கிறது. அதனால் அந்நாட்டால் இன்னமும் பெரும் வளர்ச்சியைத் தொடர முடிகிறது. உலகத் தேக்கத்தை ஓரளவு எதிர் கொண்டு நாடு நசுங்காமல் பாதுகாக்கச் சில நடவடிக்கைகளை எடுக்க முடிகிறது. அவை போதுமா என்பதுதான் கேள்வி.
பெரும் செல்வக் குவியல் இருந்தும் அதில் பங்கு கேட்கும் மனிதர் எண்ணிக்கையும் உலக நாடுகளிலேயே மிக அதிக மக்கள் திரளாக இருப்பதால் ஒவ்வொரு மனிதருக்கும் கிட்டும் செல்வம் மிகக் குறைவுதான். ஒரே நேரம் மிகச் செழிப்பான நாடாகவும், வறுமையான நாடு என்றில்லாவிட்டாலும், நன்கு வளராத நாடாகவும் இருக்கும் விசித்திரம் சீனா. அதனால் தேக்கம் என்பதும் ஒவ்வொரு பகுதியை ஒவ்வோர் விதத்தில் தாக்குகிறது.
சீனாவுக்கு இன்று கொஞ்சம் ஜலதோஷம். காய்ச்சல். வயிற்று வலி எல்லாம். சீனாவின் ஏற்றுமதி இன்னும் உலக நாடுகளின் அளவில் வைத்து நோக்கினால் அபரிமிதமாகவே இருக்கிறது என்றாலும், முன்பு போல சீனப் பொருட்கள் உலகச் சந்தையில் விலை போகவில்லை. வாங்க ஆட்கள் குறைந்து போனார்கள். விற்காது தேங்கும் பொருட்களால் சீன உற்பத்தி தேங்கி விட்டது. ஏராளமான நிறுவனங்கள் மூடப்படுகின்றன. வேலையின்மை பெருகி வருகிறது. கடந்த சில பத்தாண்டுகளில் படிப்படியாகத் தம் வாழ்நிலையை முன்னேற்றிக் கொண்டிருந்த சீனப் பாட்டாளி மக்கள் இந்தத் தேக்கத்தால் அபரிமிதமாக நஷ்டப்படுகிறார்கள்.
ஆனால், வளமான சீனர்கள் அத்தனை பாதிக்கப்படவில்லை. ஏனெனில், சரிவை எதிர்நோக்கி அவர்கள் தம்மைப் பாதுகாக்கப் பல நடவடிக்கைகளை எடுக்கக் கூடியவர்களாக இருக்கிறார்கள். சீனாவின் பெருந்தனக்காரர்களும் வளமிக்க நபர்களும் சீனாவிலிருந்து தம் செல்வச் சேமிப்பை சட்ட பூர்வமாகவும், சட்ட விலக்கமாகவும் நாட்டை விட்டு வெளியே கொண்டு செல்கிறார்களாம். 2013 இல் சீனாவின் அன்னியச் செலாவணிச் சேமிப்புக் குவியல், 4 ட்ரில்லியன் டாலர்களாக இருந்ததாம். [ஒரு ட்ரில்லியன் என்பது ஆயிரம் பிலியன்கள். எண்ணாக எழுதினால், 1,000,000,000,000.) வரலாற்றில் ஒரு கட்டத்தில் இன்றைய சீனாவை விட அதிகம் குவித்திருந்த நாடு அமெரிக்கா ஒன்றாகத்தான் இருக்க முடியும். அதைக் குவிக்க அமெரிக்காவுக்குச் சில நூறாண்டுகள் கூட ஆயின. சீனாவோ இதை 40 வருடங்களில் குவித்திருக்கிறது.
ஆனால் வளர்ந்து வந்தாலும், அன்னியச் செலாவணி இன்னமும் நாட்டுக்குள் ஆறாகக் கொட்டிக் கொண்டிருந்தாலும், நாட்டை விட்டு வெளியேறும் அன்னியச் செலாவணி, வந்து கொட்டுவதை விட அதிகமாக இருப்பதால் 2016 ஜனவரியில் சீனாவின் அன்னியச் செலாவணிச் சேமிப்பு 3.23 ட்ரில்லியனாகக் குறைந்திருக்கிறது. அதாவது கிட்டத்தட்ட நான்கில் ஒரு பங்கு சேமிப்பு கரைந்திருக்கிறது.
இன்னமும் ஒரு ட்ரிலியன் டாலர் அன்னியச் செலாவணியைச் சம்பாதிக்கவே திணறும் இந்தியப் பொருளாதாரத்தைப் பார்ப்பவருக்கு இதெல்லாம் ஒரு துன்பமா என்று கேட்கத் தோன்றும். எப்போதுமே பணக்காரனின் வீழ்ச்சிதான் சோக நாடகமாக எழுதப்படும், அன்றாடங்காய்ச்சியின் சோகங்களை நாடகமாக எழுதுவதில் என்ன பலன் உண்டு? துன்ப சாகரத்தில் மூழ்கியவரைத் திரும்பத் திரும்ப சோக நாயகராகக் காட்டினால் அதே துன்பங்களை அனுபவிப்போரே கூட அமர்ந்து பார்க்க மாட்டார்கள். அவர்கள் களிநடனக் காமக் கூத்தாட்ட கொக்கரிப்பு நாடகத்தைத்தான் பார்க்கப் போவார்கள்.
சீனாவின் மத்திய வங்கி சீன நாணயமான ரென்மின்பியை முதலில் மதிப்புக் குறைத்துப் பார்த்தது. அப்படியாவது சீனப் பொருட்களின் விலை அன்னியச் சந்தையில் குறையும், எனவே அவற்றின் விற்பனை அதிகரிக்கும் என்று நோக்கம். மாறாக என்ன ஆயிற்றென்றால், சரியும் நாணயத்தைக் கொண்ட நாட்டில் வைத்திருந்தால் தம் முதலீட்டின் மதிப்பு குறைந்து விடும் என்று அச்சப்பட்டு அன்னிய முதலீட்டாளர்கள் மேலும் வேகமாகtஹ் தம் முதலீட்டை வெளியே கொண்டு போகத் துவங்கினார்கள்.
சீனா இப்போது தன் முயற்சியின் திக்கை மாற்றிக் கொண்டு டாலர்களைக் கொடுத்து ரென்மின்பியை வாங்கிக் கொண்டு அன்னியச் சந்தைகளில் ரென்மின்பியின் புழக்கத்தைக் குறைக்க முயன்றது. அப்போது ரென்மின்பி என்னும் நாணயத்தின் மதிப்பு குறையாது நிலைத்து நிற்கும் என்று நினைப்பு. இப்போது முன்னை விட வேகமாக சீனப் பணக்காரர்களே டாலர் வடிவில் தம் சேமிப்பை மாற்றிக் கொண்டு அன்னிய நாடுகளில் முதலீடு செய்ய வெளியே அனுப்பத் துவங்கினார்கள். ஆக எப்படி நகர்ந்தாலும் விளைவு எதிர்மாறாக இருக்கிறது. சீனாவின் மைய வங்கி, என்ன செய்வது என்று புரியாத சிக்கலில் இன்று இருக்கிறது.
இனி என்ன? அது இன்னும் தெளிவாக இல்லை. ஏனெனில் உலக நாடுகளில் பெரும் நாடுகள் எல்லாமே அனேகமாகத் தேங்கி இருக்கின்றன. அமெரிக்கா ஓரளவு தொடர்ந்து வளர்கிறது. 2% போல வளர்கிறது. சென்ற ஆண்டு ஒரு காலாண்டில் 4%த்துக்கு மேல் வளர்ந்திருப்பதாக வதந்தி உண்டு. ஆனாலும் சென்ற ஆண்டில் அதன் வரவு செலவைப் பார்த்தால், அதன் அன்னியக் கடன் என்பது அரை ட்ரிலியன் டாலர்கள். அமெரிக்கா சம்பாதித்ததை விட, செலவழித்தது அல்லது முதலீடாக வெளியே அனுப்பியது அரை ட்ரிலியன் டாலர்களுக்கு மேல்.
அயல் நாட்டு வர்த்தகத்திலும் அமெரிக்கா வரவை மீறிச் செலவழித்து பொருட்களை வாங்கிக் குவித்திருக்கிறது.
ஒப்பீட்டில் சீனாவின் நிலை மேல் என்று நமக்குத் தோன்றலாம். ஆனால் அது நிஜ நிலைமையா? ஒரு தடவை நம்பிக்கை இழக்கத் துவங்கினால் அன்னியச் சந்தையில் நம்பிக்கை இழப்பு மேன்மேலும் தொடருமா? சுதாரித்து மறுபடி வளர்ச்சி துவங்குமா? பட்ட காலிலேயே படுமா? இல்லை சகஜ நிலைக்குச் சீனப் பொருளாதாரம் திரும்புமா?
http://www.nytimes.com/2016/02/14/business/dealbook/chinese-start-to-lose-confidence-in-their-currency.html?hp&action=click&pgtype=Homepage&clickSource=story-heading&module=first-column-region&region=top-news&WT.nav=top-news

~oOo~

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.