புகழ் பெற்ற கதாபாத்திரங்களை தற்காலத்திற்கேற்ப மறு ஆக்கம் செய்வது ஒரு சுவாரசியமான விஷயம். உதாரணத்திற்கு கிங்காங் – 1933லிருந்து இதுவரை ஏழு திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. 2017 மற்றும் 2020 களில் இன்னும் இரு திரைப்படங்கள் வெளிவர இருப்பதாக விக்கி சொல்கிறது.
ஷெர்லாக் ஹோம்ஸ் – சமீபத்தில் பிபிஸியில் வெளிவந்த நவீன ஷெர்லாக் தொடர். ஆதாரமான விஷயங்களையெல்லாம் மாற்றாமல் (அதே பேக்கர் தெரு, சற்றே அசட்டு மருத்துவ நண்பர், ஷெர்லாக்கைவிட புத்திசாலியான அவரது சகோதரர்) ஷெர்லாக், இன்றைய நவீன, மொபைல், இணைய, உலகில் இருந்தால் எப்படி இருக்கும் என்பதுதான் பின்னணி. இந்த ஜனவரியின் முதல் வாரத்தில் வந்த பகுதி மிகப்பெரிய வரவேற்ப்பை பெற்றிருக்கிறது.
இது போல் போரும் அமைதியும் – ஆறு வார பகுதிகளாக பிபிஸியில் சமீபத்தில் இதுவரை ஒளிபரப்பாகி இருக்கின்றன. எதிர்பார்த்தது போல் ஊடகத்தில் மறுவினைகள் – புருவ உயர்த்தல், புன்னகைகள், ஆச்சரிய வரவேற்புகள், புருவ நெளிப்புகள், முகச் சுண்டல்கள் இத்யாதி. தல்ஸ்தோயின் ரஷ்யா போல இல்லை; ஜேன் ஆஸ்டினின் ஜார்ஜிய இங்கிலாந்து போன்றுதான் தெரிகிறது என்று பொறுமல்கள். குளிர்காலம், செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் என்று திரையில் விரியும் போதே கவர்கிறது. பிரமாண்ட அரண்மனை நடன அரங்கங்களும் போர்களங்களும், உடைகளும்; போர்க்களத்தில் வீழ்ந்து கிடக்கும் இளவரசன் ஆண்ட்ரூ வானத்தைப் பார்த்து வியப்பதையும் தொலைக்காட்சித் தொடரில் தவற விட வேண்டாம்.
இத்தனை பெரிய ஆக்கத்தில் நூற்றுக்கணக்கான பாத்திரங்கள் கொண்ட மூலத்தை ஆறு வாரங்களுக்குச் சுருக்கி – மூல புத்தகத்தை அப்படியே தலை கீழாக கவிழ்த்து, உதிர்ந்த பாத்திரங்களை, நிகழ்ச்சிகளை முழுவதுமாக தவிர்த்துவிட்டு அல்லது கோடி காட்டிவிட்டு பின் புத்தகத்தை நிமிர்த்தி உறுதியாக நின்றிருக்கும் பாத்திரங்களை, நிகழ்ச்சிகளை ஒளிக் காட்சிகளாக காட்டுவதை எப்படி தீர்மானிக்கிறார்கள்? மிகவும் சிக்கலானதுதான்; அருமையான வேலையாக இருக்கும் என நம்புவோம்.