ஒரு நாள், பெருமை மிகு நாடான பாண்டூரியாவின் உயரதிகாரிகளுக்கு ராணுவ மேட்டிமைக்கெதிரான கருத்துக்களைப் புத்தகங்கள் கொண்டிருக்குமோ என்ற ஐயம் எழுந்தது. சில வழக்குகளும் விசாரணைகளும் அதற்கு ஆதாரமளித்தன. ராணுவ அதிகாரிகள் எல்லோரையும் போல் தவறு சேய்யக் கூடியவர்கள், பேரிழப்பு ஏற்படுத்தக் கூடியவர்கள், போர்கள் எப்போதுமே மகோன்னத வெற்றி நிலைக்கு இட்டுச் செல்வதில்லை போன்று மக்களிடயே தற்போது நிலவி வரும் கருத்துக்கள் புராதன, புதிய, பாண்டூடிரிய, வெளிநாட்டு என்று பல்வேறு வகையான புத்தகங்களில் ஏற்கனவே இருப்பது தெரிய வந்தது.
நிலைமையைக் கணிக்க பாண்டூரியாவின் ராணுவக் குழு கூடியது. புத்தகங்களைப் பற்றி எதுவுமே தெரியாததால் அவர்களுக்கு எங்கிருந்து ஆரம்பிப்பது என்று புரியவில்லை. பெடீனா என்ற கடுமையான அதிகாரியின் கீழ் ஒரு விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. பாண்டூரியாவின் மிகப் பெரிய நூலகத்திலுள்ள எல்லாப் புத்தகங்களையும் ஆராய்வதே அக்குழுவின் பணி.
வண்ணமிழந்து விரிசல் பட்ட சுவர்களும் பெரும் தூண்களும் படிக்கட்டுக்களும் நிறைந்த ஒரு பழைய கட்டிடத்தில் இருந்தது அந்த நூலகம். அதன் வெப்பமூட்டப்படாத அறைகளிலும் எலிகள் மட்டுமே எட்டக் கூடிய மூலைகளிலும் புத்தகங்கள் பிதுங்கிக்கொண்டிருந்தன. பெரும் ராணுவச் செலவில் மூழ்கியிருந்த பாண்டூரியாவால் இந்நூலகத்திற்கு எந்த வித உதவியும் செய்ய இயலவில்லை.
ஓர் நவம்பர் மாத மழை நாளில் நூலகத்தைக் கைப்பற்றியது ராணுவம். மழித்த முகமும் மூக்குக் கண்ணாடியினூடேநெறித்த புருவமும் கொண்ட மிடுக்கான தளபதி குதிரையிலிருந்து இறங்கினான். அவன் பின்னால் நெடிதுயர்ந்த ஒல்லியான நான்கு துணையதிகாரிகள் காரிலிருந்து இறங்கினார்கள். தலை நிமிர்த்திப் புருவம் குனித்த அவர்கள் ஒவ்வொருவர் கையிலும் ஒரு பெட்டி இருந்தது. அவர்கள் பின்னால் படைக்கூட்டம் வந்திறங்கியது. அவர்கள் நூலகத்தின் பழைய முற்றத்தில் கோவேறு கழுதைகள், வைக்கோல் போர்கள், சமையல் பாத்திரங்கள், முகாமிற்கான வானொலி வழித் தொடர்புப் பெட்டிகள், சைகைக்கொடிகள் ஆகியன கொண்ட ஒரு கூடாரத்தை நிறுவினார்கள்.
’நுட்பமான பெரும் பணி நடப்பதால் உள்ளே செல்ல அனுமதி கிடையாது’ என்ற அறிவிப்புப் பலகை நூலக வாயிலில் வைக்கப்பட்டது. அதனருகில் வாயில்காப்பான்கள் நிறுத்தப் பட்டார்கள். இரகசியமாய் விசாரணை நடத்துவதற்கான ஒரு குயுக்தி இது. குளிர் தாங்குவதற்காகக் கனமான ஆடைகளும், முகமூடியும், வல்லவாட்டும் அணிந்து கொண்டு நூலகத்திற்குத் தினமும் செல்லும் அறிஞர்கள் அவரவர்கள் வீடுகளுக்குத் திருப்பி அனுப்பப் பட்டார்கள். “அப்படி என்ன இரகசியப் பெரும் பணி நூலகத்தில்? இந்த இடத்தை நாசமாக்க மாட்டார்களா? இராணுவப் படை எதற்கு? சுடவும் போகிறார்களா? “ என்று வியந்தார்கள் அவ்வறிஞர்கள்.
புத்தகங்கள் எவ்வாறு வரிசைப் படுத்த பட்டுள்ளன என்று இராணுவ அதிகாரிகளுக்கு விளக்க நூலகத்தில் வேலை பார்ப்பவர்களில் ஒருவரான, வழுக்கையான முன் மண்டையும் முட்டைக் கண்ணும் கொண்ட குள்ள மனிதரான சின்யோர் கிரிஸ்பினோ என்ற முதியவர் மட்டும் நூலகத்தில் அனுமதிக்கப் பட்டார். மிகுந்த கவனத்துடன் கவனம் சிதறாமல் செய்யவேண்டிய பணியாதலால் விசாரணை முடியுமுன் நூலகத்தை விட்டு விசாரணைக்குழுவைச் சேர்ந்தவர் யாரும் வெளியேறக் கூடாது என்று கட்டளை இட்டிருந்தார் தளபதி பெடீனா. அதற்குத் தேவையான ஏற்பாடுகள் செய்வதை முதன்மை காரியமாகக் கொண்டிருந்தார் அவர். மளிகைச் சாமான்கள், கோட்டை அடுப்புகள், விறகுப் பொதிகள் மற்றும் சுவாரசியமற்றவை என்று பரவலாகக் கருதப்பட்ட வாரப் பத்திரிக்கைகள் ஆகியவை நூலகத்திற்குள் கொண்டு வரப்பட்டன. எந்தப் பனிக்காலத்திலும் இல்லாத வெப்பத்துடனிருந்தது நூலகம். தளபதிக்கும் அவரது அதிகாரிகளுக்கும் எலிப்பொறிகளால் சூழப்பட்ட பாதுகாப்பான இடத்தில் திண்டுப் படுக்கைகள் அமைக்கப்பட்டன.
அதிகாரிகளின் பொறுப்புக்கள் நிர்ணயிக்கப்பட்டன. ஒவ்வொரு அதிகாரிக்கும் ஒரு அறிவுசார்ந்த துறையும் ஒரு நூற்றாண்டும் ஒதுக்கப்பட்டன. புத்தகங்களை வரிசைப்படுத்துவதை மேற்பார்வையிடவும் அதிகாரிகளுக்கு, துணையதிகாரிகளுக்கு, அடிமட்ட படை வீரர்களுக்கு என்று ஒவ்வொரு சாராருக்கும் ஏற்ற புத்தகம் என்று சான்றளிக்கப்பட்ட பின் அதற்காகத் தனித்தனி முத்திரை குத்துவதற்குமான பொறுப்பும் தளபதிக்குக் கொடுக்கப் பட்டிருந்தது. எந்தப் பிரிவிலும் சேர்க்க முடியாத புத்தகங்களைக் குறித்த அறிக்கையை இராணுவ வழக்குமன்றத்திற்குச் சமர்ப்பிக்கும் பொறுப்பும் பெடீனாவுக்கு அளிக்கப் பட்டிருந்தது.
விசாரணைக்குழு தன் பணியைத் தொடங்கியது. ஒவ்வொரு மாலையும் வானொலியின் மூலம் தளபதி பெடீனாவின் அறிக்கை இராணுவத் தலைமையகத்திற்குச் சமர்ப்பிக்கப்பட்டது.
“இன்று இத்தனை புத்தகங்கள் பரிசீலிக்கப்பட்டன. சந்தேகத்திற்கிடமான புத்தகங்கள் இத்தனை கையகப்படுத்தப்பட்டன. இத்தனை புத்தகங்கள் அதிகாரிகளுக்கும் படைவீரர்களுக்கும் ஏற்றவை என அறிவிக்கப்படுகின்றன”. எப்போதாவது இந்த எண்ணிக்கைகளுடன் சம்பந்தமேயில்லாத சில தகவல்களும் சேர்த்து அனுப்பப் பட்டன: முக்குக் கண்ணாடியை உடைத்துவிட்ட ஒரு அதிகாரிக்கு மாற்று (கிட்டப்பார்வை) முக்குக்கண்ணாடிகள் தேவை, கவனிப்பாரற்று விடப்பட்ட சிசேரோவின் மிக அரிதான கையெழுத்துப் பிரதி ஒன்றை கோவேறு கழுதை தின்றுவிட்டது.
அதை விடவும் முக்கியமான சில நிகழ்வுகள் நூலகத்தினுள் நடந்து கொண்டிருந்தன, ஆனால் அவற்றைப் பற்றி எந்தச் செய்தியையும் வானொலி ஒலிபரப்பவில்லை. குறைவதற்குப் பதிலாகப் புத்தகக் காடுகள் சிக்கலான வகையில் வளர்ந்து கொண்டிருந்தன. சின்யோர் கிரிஸ்பினோவின் உதவி மட்டும் இருந்திருக்காவிட்டால் அதிகாரிகள் புத்தகக் காட்டினுள் தொலைந்து போயிருப்பார்கள். உதாரணத்திற்கு “பூயுனிக் போரைப் பற்றிய ஒரு புத்தகம் கார்த்தக்கீனியர்களை உயர்த்தியும் ரோமானியர்களைத் தாழ்த்தியும் பேசுகிறது. இது அருவருக்கத்தக்கது! இதைப் பற்றி உடனடியாக முறையிட வேண்டும்” என்று கோபத்தில் கத்தியபடி தான் படித்துக் கொண்டிருந்த புத்தகத்தைத் தூக்கி எறிந்தார் துணையதிகாரி அப்ரொகாடி(பாண்டூரியர்கள் தாங்கள் ரோமானிய வழிவந்தோர் என்று – சரியாகவோ தவறாகவோ – கருதினார்கள் என்பதை இங்குக் குறிப்பிட வேண்டும்). அங்கு வந்த நூலகர் கிரிஸ்பினோ அமைதியாக “இது ஒன்றும் பெரிய விஷயமில்லை இங்கே இதைப் படித்துப் பாருங்கள், ரோமானியர்களைப் பற்றி இது என்ன கூறுகின்றது என்று பாருங்கள், இதோ இந்தப் புத்தங்களையும் படியுங்கள். படித்துவிட்டு இவற்றையும் உங்கள் முறையீட்டில் சேர்த்துக் கொள்ளுங்கள்” என்று அவர் முன் ஒரு புத்தகக் குவியலை வைத்தார். பதட்டத்துடன் அந்தப் புத்தகங்களைப் புரட்டினானர் அந்த உதவி அதிகாரி. ஆவலால் தூண்டப்பட்டு அப்புத்தகங்களைப் படித்துக் குறிப்பு எடுக்கத் தொடங்கினார். “அடேங்கப்பா! தெரிந்து கொள்ள எவ்வளவு விஷயங்கள் ! யாரும் நினைத்துக் கூடப் பார்த்திருப்பார்களா” என்று தலையைச் சொறிந்தவாறு வியந்தார். அடுத்துக் கோபத்தில் ஒரு புத்தகக் குவியலை மூடிக்கொண்டிருந்த துணையதிகாரி லுசெட்டியிடம் சென்றார் சின்யோர் கிரிஸ்பினோ. “நல்ல கதையா இருக்கே இது! புனிதப்போருக்குக் காரணமாயிருந்த சீரிய குற்றமற்ற குறிக்கோள்களைக் கேள்வி கேட்பதற்கான தைரியம் எப்படி இவர்களுக்கு வந்தது” என்று கோபத்துடன் கத்திக்கொண்டிருந்த லுசெட்டியிடம் “ஓ, அதைப்பற்றிய அறிக்கை ஒன்று தயார் செய்யப் போகின்றீர் என்றால் இதோ இந்தப் புத்தங்களையும் படித்து மேலும் விவரங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்” என்று சிரித்துக் கொண்டே ஒரு கட்டுப் புத்தகங்களை அவர் முன் வைத்தார். அப்புத்தகக் குவியலில் தன்னை ஆழ்த்திக் கொண்டார் லுசெட்டி. ஒரு வாரத்திற்கு அவரிடமிருந்து புத்தகப் பக்கங்களைத் திருப்பும் சத்தமும் “இந்தப் புனிதப் போர்கள் ….ஆஹா…மிக நன்று,” என்ற முனகல் சத்தமும் மட்டுமே வந்து கொண்டிருந்தது.
விசாரணைக் குழுவின் மாலை நேர அறிக்கையில் பரிசீலிக்கப்பட்ட புத்தகங்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டே போனது. ஆனால் இப்போது அந்த எண்ணிக்கையில் இவை நல்லவை இவை கெட்டவை என்ற பாகுபாட்டுக் கணக்குகள் இருக்கவில்லை. பெடீனாவின் முத்திரை ஒய்வெடுத்துக்கொண்டிருந்தது. சில சமயம் தன் துணையதிகாரியின் வேலையைச் சரி செய்யும் போது “இந்தக் கதையில் தவறேதும் இல்லை என்று எப்படி முடிவெடுத்தீர்கள்? இது படைவீரர்களை அதிகாரிகளைவிடச் சிறந்தவர்களாகக் காட்டுகிறது ! இந்த ஆசிரியருக்கு அதிகாரக் கட்டமைப்பின் மேல் மரியாதை இல்லை” என்று கடிந்து பேசுவார் பெடீனா. அதற்குப் பதிலளிக்க அத்துணையதிகாரி மற்றஆசிரியர்களை மேற்கோள் காட்டி வரலாறு தத்துவம் பொருளாதாரம் போன்ற விஷயங்களில் மூழ்குவார். இது ஒளிவு மறைவற்ற நீண்ட வாக்குவாதங்களுக்கு வழி வகுத்தது. அங்கு அமைதியாக உலவி கொண்டிருந்த சின்யோர் கிரிஸ்பினோ சரியான நேரத்தில் இவ்விவாதங்களில் தலையிட்டு விவாதத்திற்குத் தேவையான தகவல்கள் இருக்கின்றன என்று தான் கருதிய புத்தகங்களைக் கொண்டு வந்து தருவார். அவை பெடீனா கொண்டிருந்த திடமான கொள்கைகளைச் சீரிய முறையில் குலைக்கும் வண்ணமே எப்போதும் அமைந்திருந்தன.
இது இவ்வாறு இருக்கப் படைவீரர்கள் செய்வதற்கு வேலையேதுமில்லாததால் சலிப்படைந்திருந்தார்கள். அவர்களுள் அதிகம் படித்தவனான பரபாஸோ அதிகாரிகளிடம் படிப்பதற்கு ஒரு புத்தகம் கேட்டான். படைவீரர்களுக்கு ஏற்றது என்று தணிக்கை செய்யப்பட்ட சில புத்தகங்களைக் கொடுக்கலாம் என்றே முதலில் எண்ணினார்கள். பின்னர் ஆயிரக்கணக்கான புத்தகங்கள் பரிசீலிக்கப் படாமல் இருக்கின்றன என்ற நினைவு வந்தமையாலும், வேலை நேரத்தை விரயப்படுத்தக் கூடாது என்ற காரணத்தினாலும் பார்க்க எளிதாகப் பட்ட ஏற்கனவே பரிசீலிக்கப் படாத, கிரிஸ்பினோவால் பரிந்துரைக்கப்பட்ட ஒரு புத்தகத்தைக் கொடுக்க அவர்கள் முடிவெடுத்தார்கள். புத்தகத்தைப் படித்தபின் தளபதியிடம் அறிக்கை சமர்ப்பிக்குமாறு பணிக்கப்பட்டான் பரபாஸோ. மற்ற படைவீரர்களும் புத்தகங்களைப் படிக்க விண்ணப்பித்தார்கள். அவர்களுக்கும் படித்த பின் அறிக்கை சமர்ப்பிக்கும் பணி இடப்பட்டது. படிக்கத் தெரியாத மற்றொரு படை வீரனுக்கு உரக்கப் படித்துக் காட்டினான் படைவீரன் தோமசோனே. படிக்கக் கேட்ட பின் தன் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டான் அப்படைவீரன். அதிகாரிகளுடன் விவாதங்களில் ஈடுபட்டார்கள் படை வீரர்கள்.
விசாரணைக்குழுவின் பணியில் ஏற்பட்ட முன்னேற்றங்கள் பற்றி எந்தவொரு தகவலும் இல்லை. பனிக்காலத்தில் நூலகத்தில் நடந்தது என்ன என்பதைப் பற்றி எந்தவொரு அறிக்கையும் இல்லை. தலைமையகத்திற்குத் தளபதி பெடீனாவின் வானொலி அனுப்பும் அறிக்கைகள் மிக அரிதாகி, பின்பு முழுவதுமாக நின்றன என்பது மட்டுமே நமக்குத் தெரியும். துணுக்குற்ற இராணுவத் தலைமையதிகாரி விசாரணையை உடனடியாக முடித்துக் கொண்டு விலாவாரியான முழு அறிக்கையை உடனே அளிக்குமாறு ஆணை பிறப்பித்தார்.
இந்த ஆணை தளபதி பெடீனாவையும் அவருடைய அதிகாரிகளையும் மனக் குழப்பத்தில் ஆழ்த்தியது. ஒருபுறம் அவர்கள் தினந்தோறும் புதிய விருப்பங்களால் தங்களைத் திருப்திப் படுத்திக் கொண்டும் கற்பனைக்கெட்டாத களிப்பில் திளைத்துக் கொண்டுமிருந்தார்கள். மறுபுறம் வெளி உலகிற்குச் சென்று வாழ்க்கையை வாழ்வதற்கு ஆவலாய் இருந்தார்கள். உலகும் வாழ்க்கையும் அவர்கள் கண் முன்னால் தங்களைத் தாமே புதுப்பித்துக் கொண்டு மிகவும் நுட்பமாகத் தோன்றின. விரைவில் நூலகத்தை விட்டு வெளியே செல்ல வேண்டிய நாள் நெருங்குகிறது என்ற உண்மை அவர்களைப் பதட்டத்தில் ஆழ்த்தியது. வெளியே சென்று அவர்கள் மெற்கொண்டிருந்த பணியைப் பற்றிய அறிக்கை தயாரிக்கவேண்டும். வெவ்வேறு எண்ணங்களால் அலைக்கழிக்கப்பட்ட அவர்கள் தாங்கள் மாட்டிக் கொண்ட இக்கட்டான சூழலிலிருந்து தப்புவதெப்படி என்று தெரியாமல் தவித்தார்கள்.
மாலை நேரங்களில் அவர்களில் ஒருவன் சத்தமாகக் கவிதை படிப்பான். மற்றவர்கள் மாலை நேரத்து வெயிலில் ஜொலித்துக் கொண்டிருக்கும் அன்று பூத்த மொட்டுக்களையும் நகரத்திலிருந்து மெல்ல வெளியேறும் வெளிச்சத்தையும் பார்த்தவாறிருப்பார்கள். பெடீனா அவர்களிடையே இருப்பதில்லை. நிறைவறிக்கையைத் தயார் செய்துகொண்டிருப்பதால் தன்னை யாரும் தொந்தரவு செய்ய வேண்டாம் என்று ஆணையிட்டிருந்தார். ஆனால் அப்போதைக்கப்போது மணி அடித்து ‘கிரிஸ்பினோ…கிரிஸ்பினோ’ என்று பெடீனா கூப்பிடும் ஓசையும் கேட்டது. அந்த வயதான நூலகரின் உதவியின்றிப் பெடீனா எங்கும் செல்வதில்லை. அவர்கள் இருவரும் மேசையின் முன் அமர்ந்து ஒன்றாக அறிக்கையை எழுத ஆரம்பித்தார்கள்.
ஒரு பிரகாசமான காலையில் விசாரணைக் குழு ஒருவழியாக நூலகத்தை விட்டு வெளியேறி தலைமையதிகாரியிடம் அறிக்கை சமர்ப்பிக்கச் சென்றது. பெடீனா அலுவல் குழுவின் முன் இறுதி அறிக்கையை விவரித்து உரையாற்றினார். அவருடைய பேச்சுத் தோற்றம் முதல் இன்று வரையான மனித வரலாற்றின் களஞ்சியம் போல் தோன்றியது – விவாதத்திற்கு அப்பாற்பட்ட கருத்துக்கள் எனப் பாண்டூரியரிப் பெருமக்களால் கருதப்பட்ட கருத்துக்களைத் தாக்கும் களஞ்சியம், நாட்டைப் பிடித்த பிணிகளுக்கு ஆளும் வர்க்கமே காரணம் என்று கூறும் களஞ்சியம், தவறான கொள்கைகளுக்கும் தேவையற்ற போர்களுக்கும் வீரக் காவுகளாக மக்களைத் தூக்கிப் பிடிக்கும் களஞ்சியம். அண்மையில் புதிய கருத்துக்களைத் தழுவியோர் கொள்ளும் குழப்பம் போல் அவ்வுரை மிகவும் குழப்பமிக்கதாக எளிமையான ஒன்றோறொன்று முரணான தீர்மானங்கள் நிரம்பியதாக இருந்தது. ஆனால் அவ்வுரை முன் வைத்த ஒட்டு மொத்த கருத்தில் சந்தேகம் எதுவும் இருந்ததாகத் தெரியவில்லை. தளபதிகள் ஸ்தம்பித்தார்கள், அவர்கள் கண்கள் அகல விரிந்தன, தங்களுக்குக் குரல் இருக்கிறது என்று அப்போதுதான் கண்டுபிடித்தவர்கள் போல் கூச்சலிட ஆரம்பித்தார்கள். அவர்கள் பெடீனாவை உரையை முழுதுமாக முடிக்க விடவில்லை. அவரை இராணுவ வழக்குமன்றத்தில் விசாரணை செய்து பதவி இறக்கம் செய்யக்கூடும் என்று பேச்சு அடிபட்டது. ஆனால் இதற்குப் பின்னால் ஒரு பயங்கரச் சதி இருக்குக் கூடும் என்று பயந்து பெடீனாவும் அவர் கீழிலிருந்த நான்கு துணையதிகாரிகளும் கட்டாய ஓய்வில் விடுவிக்கப்பட்டார்கள். ‘பணியினால் மிகத் தீவிர மன அழுத்ததிற்கு உள்ளானார்கள்’ என்று காரணம் கூறப்பட்டது. பனியில் உறைந்து போகாமல் இருக்கக் கனமான மேலங்கிகளையும் ஸ்வெட்டர்களையும் அணிந்து கொண்டு அவர்கள் அந்தப் பழைய நூலத்திற்கு அடிக்கடி செல்வதைக் காண முடிகின்றது. சின்யோர் கிரிஸ்பினோ தன் புத்தகங்களுடன் அவர்களுக்காக எப்போதும் காத்துக் கொண்டிருக்கிறார்.