சவூதி அரேபியாவில் பெண்கள் நிலை – முன்னேற்றமா?

04-riyadh-winter-weekend-picnic-2048

ஓசாமா பின் லாடன் 2002 ல் அமெரிக்காவிற்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது ”உங்களின் தேசம் பெண்களை நுகர்வுப் பொருளாகவும், விளம்பரப் பொருளாகவும் பயன்படுத்துகிறது. பயணம் செய்பவர்களுக்குச் சேவை செய்பவர்களாகவும், வாடிக்கையாளர்களை வாயிலில் நின்று வரவேற்பு செய்பவர்களாகவும் உருமாற்றி, உங்களின் லாபம் கொழிக்கச் செய்ய உபயோகப்படுத்துகிறீர்கள். இதையெல்லாம் பெண்களுக்கான விடுதலை என்ற பெயரில் ஆரவாரவுரை செய்கிறீர்கள்.”
ஒசாமா பின் லாடனின் அல் குவைதா இயக்கத்தின் பார்வையில் மேற்கூறிய வாசகம் சொல்ல வருகிற செய்தி இதுதான்: “மரபுகளைப் போற்றும் வகையில் குடும்ப அமைப்புகள் செயல்பட வேண்டும். மரபான குடும்பங்கள் என்பது சில ஒழுங்கு நடவடிக்கைகளைக் கொண்டிருக்கும். அல் குவைதா சொல்கிற இந்த ஒழுங்கானது, வீடென்பது பெண்களுக்கானது. வெளியென்பது ஆண்களுக்கானது. பாலியல் உறவென்பது குடும்பத்திற்குள்ளானது, அது வீட்டோடு மட்டுமே இருக்க வேண்டும். வெளிகளில் பாலியல் உறவு என்பதை ஏற்க இயலாது. பெண் வெளிகளுக்குள் இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால் பாலியல் தொல்லைகளுக்கும், தேவையற்ற பாலியல் உறவுகளுக்கும் சிக்கக் கூடும். குழந்தைகளைப் பெறுவதும், அடுத்தச் சந்ததியை உருவாக்கவும், அவர்களைப் பேணிக் காப்பதும் மட்டுமே பெண்களின் கடமை.”
பெண்கள் விஷயத்தில் இன்னும் பெரும்பாலான நாடுகள் உரிய சுதந்திரத்தைக் கொடுத்து விடவில்லை. கடந்த முப்பது ஆண்டுகளாகப் பெண்களுக்கான பாதுகாப்பையும் உரிமையையும் நிலைநாட்டும் விதமாகப் பல சட்டங்களைப் பல்வேறு நாடுகள் கொண்டு வந்துள்ளன. சவூதி அரேபியாவும் பெண்களைப் பற்றிய பார்வையில் முப்பதாண்டுகளுக்கு முன்பு வரையிலும், ஒசாமா பின்லாடனின் கருத்தாக்கத்தையே கொண்டிருந்தது.
Gender Gap Index ல் உலகப் பொருளாதார அமைப்பின் ஆய்வறிக்கையின்படி சவூதி அரேபியா 127 /136ஆவது இடத்தில் தற்போது உள்ளது. மற்ற நாடுகளோடு ஒப்பிடுகையில் பெண்களின் விஷயத்தில் சவூதி அரேபியா பல படிகள் பின்னே இருந்தாலும், அங்கும் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு வருவது குறிப்பிடத் தக்கது. இந்தக் கட்டுரையில் அரசு சட்ட ரீதியாகக் கொண்டு வந்த மாற்றங்கள் பற்றியும், நடைமுறையில் எவ்வாறு உள்ளது என்பதைப் பற்றியும் காணலாம்.

பாதுகாவலர் சட்டம் (Guardian Rule)

உலகிலேயே பெண்கள் வாகனங்கள் ஓட்டக்கூடாது என்ற சட்டத்தை இன்றளவும் சவூதி அரேபியா மட்டுமே வைத்துள்ளது. பாதுகாவலர்(Guardian Rule) சட்டத்தின் கீழ், ஒரு பெண் தனது கணவரோடோ, தந்தையோடோ அல்லது மகனோடுதான் பொது வெளிகளில் செல்ல வேண்டும். பாதுகாவலர் சட்டத்தின் கீழ் பயணம் செய்வதானாலும், ஏதேனும் மருத்துவப் பரிசோதனை செய்வதானாலும், திருமணம் மற்றும் விவகாரத்து, பணிக்குச் செல்தல், வங்கிக் கணக்கு திறக்க வேண்டுமானாலும், வீட்டிலுள்ள ஆண் பாதுகாவலரின் கையொப்ப அனுமதியுடன் அல்லது அவரின் முன்னிலையில் மட்டுமே செய்ய இயலும்.
பெண்கள் எந்த வயதுடையவராக இருந்தாலும் எக்காரணம் கொண்டும், வேற்று ஆண் மனிதர்களோடு அதாவது ஆண் நண்பர்களோடோ, மற்ற ஆண் உறவினர்களோடோ, அக்கம் பக்கத்து வீடுகளில் உள்ள ஆண்களுடனோ பொது இடங்களில் உலா வந்தால் கடுந்தண்டனைக்கு உள்ளாவர். (பெண்கள் வெளியில் பணிகளுக்குச் சென்றால் பாலியல் தொல்லைகளுக்கு உள்ளாகக் கூடும் என்றும், நாட்டில் விபச்சாரம் பெருகி விடும் என்றும், அது சவுதிய கலாச்சாரத்திற்கு எதிரானது என்றும் அடிப்படைவாதிகள் இன்றும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்)
பாதுகாவலர் சட்டத்திற்கு அரசின் சட்டபூர்வ அங்கீகாரம் கிடையாது என்று மனித உரிமைகள் (Human Rights) அமைப்பிடம் சவூதி அரசு சொல்கிறதாம். ஆனால், பிரச்சினைகள் வழக்காடு மன்றத்திற்குச் செல்லும் பட்சத்தில், பாதுகாவலர் சட்டத்தின் படி நடக்காத பெண்களுக்குத் தண்டனைகள் வழங்கப்படுகின்றன என்று சமூக நல ஆர்வலர்கள் கருத்துரைக்கின்றனர். ஐநாவின் தூதரும் அதையே வழி மொழிகிறார்.
பெண்களைப் பொறுத்தவரை தமது பெயரில், தமது வருமானத்தில் நிலமோ வீடோ வாங்குவதாக இருந்தாலோ வணிகம் செய்ய வேண்டி வந்தாலோ இரண்டு ஆண்கள் சாட்சிகளாக, இந்தப் பெண் இன்னார்தான் என்று உறுதி செய்யவும், அவ்வாறு சாட்சிகளாக வந்த இரு ஆண்களும், அந்தப் பெண்ணுக்கு இந்த உறவு முறைதான் என்று உறுதி செய்யக் கூடுதலாக நான்கு ஆண்களும் இருந்தால் மட்டுமே பெண்ணால் மேற்கூறிய செயலைச் செய்ய இயலும்.

மதக் காவலர்களும் கட்டுப்பாடுகளும்

குறிப்பாக முத்தவாக்கள் ( Mutaween – Religious Police) தான் பெரும்பாலான நேரங்களில், பொது இடங்களில் பெண்களுக்கும் ஆண்களுக்கும் மதச் சட்டங்கள் என்ற பெயரில் “பாதுகாவலர் சட்டத்தை” மனதில் கொண்டு பல இன்னல்களையும் தண்டனைகளையும் வழங்கக் காரணமானவர்கள். இவர்கள் அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட , மதச் சட்ட முறைகளை மக்கள் பின்பற்றுகிறார்களா எனக் கண்டுபிடித்து அவர்களைக் கைது செய்யும் அதிகாரமும் சில வருடங்கள் முன்வரை அடிக்கும் உரிமையையும் கொண்டிருந்தவர்கள்.
அவர்களைப் பார்த்தவுடனே எளிதாக அடையாளம் காண இயலும். பெரிய அண்ணனின் சட்டையையும், கடைசித்தம்பியின் பேண்டையும் மாட்டிக்கொண்டால் ஒருவர் எப்படி இருப்பார்? அப்படித்தான் அவர்களின் ஆடையும், ட்ரிம் செய்யப்படாத தாடியும் இருக்கும். இவர்களின் பணியே அபயா போட்டுக்கொண்டு மால்களில் பெண்கள் முகத்தை மறைத்துக் கொண்டு வரவேண்டும், சலா (தொழுகை) நேரத்தில் எவரும் வெளியே பொது இடங்களில் (மால்களில்) சுற்றிக் கொண்டு இருக்கக் கூடாது, ஆண்களும் பெண்களும் தனித் தனியாகத்தான் நடக்க வேண்டும் (கையைப் பிடித்து உரசிக் கொண்டு பொது இடத்தில் நடக்கக் கூடாது) , உணவகங்களில் bachelors ம் குடும்பமும் common ஆக உட்கார்ந்து சாப்பிடக்கூடாது (அதாவது குடும்பங்கள் அமர்ந்து சாப்பிடுபவர்களுக்குத் தனியான இட வசதியை உணவகங்கள் செய்திருக்க வேண்டும், தனி gate டுடன் கூடிய மாற்று பாதை family Section vs Bachelor க்கு இடையில் இருக்க வேண்டும்), கையிலோ கழுத்திலோ தங்க நகைகளை ஆண்கள் அணியக் கூடாது, பெண்கள் மேக்கப் போட்டுக் கொண்டு திரியக் கூடாது, பெண்கள் புகை பிடிப்பது பற்றியோ, ஹோமோ செக்ஸ் வைத்திருப்பவர்களைப் பற்றிய தகவலோ, சாராயம் போதை மருந்து விற்பவர்களைப் பற்றிய தகவலோ வந்தால் காவலர்கள் தான் சென்று கைது செய்ய வேண்டுமென்பதில்லை. இந்த முத்தவாக்களுக்கு மேற்கூறிய விஷயங்களை /விஷயங்களுக்கு முரணாகச் செயல்படுபவர்களைக் கைது செய்யும் அதிகாரம் இருந்தது. இவர்கள் கைது செய்பவர்களுக்குக் கடும் தண்டனை கிடைக்கும்.

கிங் அப்துல்லா ஆட்சியே பெண்களுக்கான பொற்காலம்

கிங் அப்துல்லா முத்தவாக்களுக்கான அதிகாரத்தைக் குறிப்பாக அடுத்தவர்களை அடிப்பதோ துன்புறுத்துவதோ தண்டனை கொடுப்பது போன்ற அதிகாரங்களைக் குறைத்த பிறகே சற்று அடங்கி உள்ளார்கள். கிங் அப்துல்லா தான் பெண்களின் முன்னேற்றத்திலும், சமூக அமைப்பிலும் பல மாற்றங்களைக் கொண்டுவந்தவர். அப்துல்லா காலத்தில் சவுதியில் நிறையப் பல்கலைக் கழகங்கள்,கட்டுமானத்துறையில் நல்ல வளர்ச்சி என மிகப் பெரிய முன்னேற்றங்கள், கொஞ்சம் பிடி தளர்த்தல், முத்தவாக்களின் அதிகாரத்தைக் குறைத்தல், பெண்களை நிறுவனப் பணிகளிலும், கடைகள் போன்ற வணிக நிறுவனங்களிலும் பணிக்கு அமர்த்துதல் எனப் பல சமூக மாற்றங்களைக் கொண்டு வந்தவர்.

SA2

 
பல பிரச்சனைகளை இன்றும் பெண்கள் எதிர்கொண்டாலும் கிங் அப்துல்லாவின் ஆட்சிக் காலத்தில் பெண்களின் நிலை பல படிகள் முன்னேறி இருந்ததையும் குறிப்பிட்டாக வேண்டும். உலகிலேயே மிகப்பெரிய பெண்கள் பல்கலைக்கழகம் சவூதி அரேபியாவில்தான் உள்ளது. Princess Noura Bint Abdul Rahman Women University என்பதே அப்பல்கலைக்கழகத்தின் பெயர். அப்துல்லாவின் ஆட்சிக் காலத்தில் தான் இது கட்டப்பட்டு நடைமுறைக்கு வந்தது. 1970 ல் ஆண்களின் கல்வி விகிதம் 15 %ஆகவும், பெண்களின் கல்வி விகிதம் 2% ஆகவும் இருந்தது. உலக வங்கியின் கணக்கின் படி, தற்போது ஆண்களின் (15 -24 வயதுடையவர்களின்) கல்வி விகிதம் 98% என்றும் பெண்கள் 95% என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ( நம்ப முடியவில்லை, ஒருவேளை அரபு மொழியில் படிக்க எழுதத் தெரிந்தவர்களாக இருக்கலாம்). இன்றைய நிலையில் பெண்களே 60% பல்கலைக்கழகங்களில் படித்து வருகிறார்கள். ஆண்கள் 40% தான் உள்ளனர். மேலை நாடுகளுக்குச் சென்று படித்துப் பட்டம் பெறுபவர்களின் எண்ணிக்கையிலும் சவுதிய ஆண்களைக் காட்டிலும் பெண்களே அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

பள்ளிக்கூடங்களில் பெண்கள்

சவூதி அரேபிய பள்ளிக் கல்வியைப் பொறுத்தவரை ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித் தனிக் கல்விக் கூடங்கள் உள்ளன. இரு பாலார்கள் (Co-Education ) இணைந்து படிக்கும் பள்ளி வசதிகள் இருக்கக்கூடாது அல்லது பள்ளிகளும் வகுப்புகளும் தனியாகவே உள்ளன. மேல்நிலைப்பள்ளிகள் வரை பெண் மாணவிகளுக்குப் பெண் ஆசிரியையே பாடங்கள் எடுக்க வேண்டும் போன்ற கட்டுப்பாடுகள் உள்ளன.
இதுவரையிலும் ஒரேயொரு கல்லூரி மட்டுமே ( King Abdullah University of Science and Technology)இருபாலார்களும் இணைந்து படிக்கும் வசதியோடு உள்ளது. மற்ற அனைத்துப் பல்கலைக்கழகங்களும் தனித்தனியாகவே உள்ளன. பெண்களுக்குப் பெரும்பாலும் பெண் பேராசிரியர்களே வகுப்புகளை எடுத்தாலும், சில பாடங்களுக்குப் பெண் பேராசிரியர்கள் இல்லாத பட்சத்தில், ஆண் பேராசிரியர்கள் பாடம் எடுப்பது போன்றவை காணொளி மூலம் (Video Conferencing) மூலமே எடுக்கப்படுகின்றன.

விளையாட்டில் பெண்களின் பங்களிப்பு

2008 ஆம் ஆண்டு வரை சவுதிய பெண்கள் ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படவில்லை. பெண்களும் ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்ள அப்துல்லா அரசு அனுமதி வழங்கியது. அதன்படி 2012 ஆம் ஆண்டில் இரு பெண்கள் சவூதி சார்பில் ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொண்டார்கள். விளையாட்டுப் படிப்புகள் கூட இப்போதுதான் பெண் கல்விக்கூடங்களில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

அரசியலில் பெண்கள்:

2011 ஆம் ஆண்டு வரையிலும் பெண்கள் கலந்தாய்வுக் கூட்டங்களில் (Consultative Assembly) இடம் பெற அனுமதி இல்லாமல் இருந்தது. அதையும் கிங் அப்துல்லா உடைத்தார். 30 வயது நிரம்பிய பெண்கள் கலந்தாய்வுக் கூட்டத்தில் பங்கு பெற வழி வகுத்தார். 2013 ல் 30 பெண்கள் உறுப்பினராகவும், மூன்று பேர் Deputy Chair person ஆகவும் இருக்கும் வாய்ப்பைப் பெற்றார்கள்.2011 ஆம் ஆண்டுவரை பெண்கள் முனிசிபால் தேர்தல்களில் கூட வாக்களிக்கும் உரிமை இல்லாதவர்களாகவே இருந்தார்கள். அரசர் அப்துல்லா 2011 தேர்தலில் பெண்களும் வாக்களிக்கலாம் தேர்தலில் நிற்கலாம் என்று சொன்ன போதும் வாக்காளர்களைக் கணக்கில் கொண்டு வருவதில் ஏற்பட்ட சுணக்கம் காரணமாகப் பங்கெடுக்க முடியவில்லை. ஆனால் 2015 ல் பெண்கள் வாக்களித்தார்கள். 20 பெண்கள் முனிசிபால் தேர்தலில் நின்று வெற்றி பெற்றார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இன்றும் எந்தத் துறையின் அமைச்சராகவும் பெண்கள் பதவிக்கு வர இயலவில்லை. சவூதியைப் பொறுத்த மட்டில் இந்தியாவைப் போன்று மக்கள் வாக்களித்து முனிசிபால் சேர்மனோ, துறைகளின் மந்திரிகளோ தேர்ந்தெடுக்கப்படுவதில்லை. அரச குடும்பத்தில் உள்ளவர்கள் மட்டுமே தேர்தலில் நிற்க முடியும், அவர்கள் மட்டுமே பொறுப்பிலும் வர முடியும் என்பதை நினைவில் கொள்க.

திருமணம் மற்றும் விவகாரத்து

சவுதியில் திருமணம் ஆவதற்குக் குறைந்த பட்ச வயது என எந்த வயது வரம்பும் கிடையாது. மற்றபடி ஷரியா சட்டத்தில் உள்ளது போல ஆண் பெண்ணுக்கு மூன்று முறை தலாக் சொல்வதன் மூலம் விவகாரத்துக் கொடுக்கலாம். ஓர் ஆண் திருமணமான மனைவி இருக்கையிலேயே நான்கு பெண்களைத் திருமணம் செய்து கொள்ளலாம். ஆனால் பெண்கள் அவ்வாறு செய்யலாகாது. பெண்கள் தலாக் சொல்லி விவகாரத்து பெற இயலாது. நீதிமன்றத்தில் கணவனின் மீதான புகாரை நிரூபித்தே விவகாரத்துச் செய்யலாம். நான்கு மாதங்கள் கழித்து இன்னொரு ஆணைத் திருமணம் செய்யலாம். சவூதி அரசு பெண்களின் திருமணம் மற்றும் விவகாரத்து விஷயங்களில் இன்னும் பழமையையே பின்பற்றுகிறது. ஷா பானு போல அங்கும் பல பெண்கள் உரிமையை இழந்துள்ளார்கள். பத்து வயது பெண்ணை எண்பது வயதுமிக்கச் சவூதி ஒருவர் திருமணம் செய்து கொண்டார். பெண்ணின் தந்தை பணத்திற்காகவும் சொத்திற்காகவும் ஒத்துக்கொண்டார். அந்தப் பெண்ணைச் சில மாதங்களில் அவரது கணவர் விவகாரத்தும் செய்து விட்டார். தனது பெண்ணின் படிப்பு பறிபோய் விட்டது எனப் பெண்ணின் தாய் வழக்குத் தொடுத்தார். ஆனால் பலன் ஏதுமில்லை.

வேலைவாய்ப்புகளில்/பணிகளில் பெண்கள்

கடந்த 2005 ஆம் ஆண்டு வரையிலும் பெண்கள் மருத்துவ மனைகள் (மருத்துவர், நர்ஸ்), கல்விக்கூடங்கள் (ஆசிரியை), வங்கிகள் மற்றும் விமான நிலையங்களில் பெண்கள் பரிசோதனைப் பிரிவுகள் போன்ற பெண்கள் தொடர்புடைய துறைகளில் மட்டும் பெண்களுக்கு மட்டும் சேவை செய்யும் பணிகளில் அமர்த்தப்பட்டிருந்தார்கள்.
1980 ல் முதன் முதலில் பெண்கள் வங்கிகள் தொடங்கப்பட்டன. இன்றும் ஒவ்வொரு வங்கியிலும் Ladies Branch எனத் தனியாக உண்டு. அங்குப் பெண்கள் சேவைக்காகப் பெண் அதிகாரிகள் மட்டும் உள்ளார்கள். செக்யூரிட்டியைத் தவிரப் பெண்கள் பிரிவில் பெண்கள் மட்டுமே உள்ளே செல்ல முடியும். ஆண் செக்யூரிட்டி என்பது கூட வெளியிலிருந்து வேறெந்த ஆணும் உள்செல்வதைத் தடுக்க என்பதால் தான் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
பெண்களின் கல்வித் தகுதிக்கேற்ப அவர்களை வணிக வளாகங்களில் Billing Section, அரசுத் துறை நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், மருத்துவ மனைகள் வரவேற்பு (Reception/Information) போன்ற இடங்களில், பெண்களுக்கான உள்ளாடைகள்/வாசனைத் திரவியங்கள் பிரிவில் எனப் பல்வேறு இடங்களிலும் பணியில் அமர்த்தலாம் என்ற ஆணையையும் கிங் அப்துல்லாவே கொண்டு வந்தார்.
உள்ளாடைகள் பிரிவில் ஒரு வருடத்திற்குள்ளாகப் பெண்களைப் பணியில் அமர்த்தியே தீர வேண்டும் என்ற கட்டளையை 2011 ல் இட்டார். நிறுவனங்களில் பெண்கள் பணி புரிந்தாலும் அவர்களின் இருக்கைகள் ஆண்களோடு கலந்து இருத்தல் கூடாது, பெண்களுக்கெனத் தனி மூடிய (ஆண்கள் நுழைய அனுமதி இல்லை) அறைகள்/பிரிவுகள் இருக்க வேண்டும். உள்ளாடைகள் பிரிவில் ஆண்கள் நுழையத் தடை, Billing section ல் குடும்பத்தினர் மட்டுமே நிற்க வேண்டும், பெண்கள் பணி செய்யும் இடங்களில் அபயா அணிந்தே பணி புரிய வேண்டும் ( மருத்துவமனையும், பள்ளியும் மட்டும் விதிவிலக்கு) போன்ற கட்டுப்பாடுகள் இன்றும் உள்ளன. அபயா விஷயத்தைப் பொறுத்தவரையில் அனைத்து மதப் பெண்களும், எந்த நாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும் கட்டாயமாக அபயா அணிந்தே வெளியில் செல்ல வேண்டும் போன்ற சட்டங்கள் இன்றும் நடைமுறையில் உள்ளது. சில நகரங்களில் பெண்கள் தற்போது முகத்தைக் காட்டிக் கொள்ள இயலுகிறது என்பதே ஆடை சுதந்திரத்தில் முன்னேற்றம் என்று சொல்ல முடியுமென்றால் பார்த்துக்கொள்ளுங்கள். அதிலும் சில ஊர்களில் கண்ணையும் கை விரல்களைத் தவிர அனைத்து உறுப்புகளும் மறைக்கப்பட்டிருக்க வேண்டும்.
சவூதி அரேபியாவில் தனியார் நிறுவனங்கள் சவுதிகளைக் கட்டாயமாகக் குறைந்த பட்சம் குறைந்த பட்சம்30 % அமர்த்த வேண்டும் என்பது சட்டமாக உள்ளது. குறைந்த பட்சம் குறிப்பிட்ட அளவு இல்லாத நிறுவனங்கள் மூடப்படும் போன்ற சட்ட நடைமுறைகள் உள்ளன. ஒரு சவுதிய பெண்ணைப் பணிக்கு அமர்த்துவது இரு சவூதி ஆண்களைப் பணிக்கு அமர்த்துவதற்கு ஒப்பானது என்ற சட்ட வரைவையும் பெண்களின் முன்னேற்றம் கருதி கிங் அப்துல்லா கொண்டு வந்தார் என்றால் மிகையாகாது.
பெண்களின் முன்னேற்றம் என்பது கிங் அப்துல்லா பதவியிலிருந்த (2005 to 2015) காலத்தில்தான் அனேகமாக நடந்தேறியது. Face book, Twitter போன்றவற்றில் சவுதிய பெண்கள் அதிகமாகத் தங்கள் கருத்துகளைச் சொல்லி வருகிறார்கள். மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் சவூதி அரசு பல படிகள் பின்னோக்கி இருந்தாலும், உலகத்தின் பார்வைக்காகவும், பெண்களின் எதிர் குரல்களுக்காகவும் பல மாற்றங்கள் நடந்துள்ளன. பெண்ணுக்கான ஆடை சுதந்திரத்திலிருந்து அவள் வீட்டுக்கு வெளியே சுதந்திரமாகத் தனித்துப் போகும் உரிமைகள் என அடிப்படை உரிமைகளைக் கொடுக்காமல் பணியில் அமர்த்தி விட்டோம், ஓட்டுப் போட உரிமை கொடுத்தோம் என்று சொல்வதில் பொருளிருக்காது. காலம் எல்லாவற்றிலும் மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது. இன்னும் நிறைய அப்துல்லாக்கள் சவூதியில் உருவாகும் பட்சத்தில் பெண்களின் முன்னேற்றமும் எளிதாக அமையும்.
நோக்கு உரல்கள்

2 Replies to “சவூதி அரேபியாவில் பெண்கள் நிலை – முன்னேற்றமா?”

  1. இக்கட்டுரையில் இருந்து அரசர் அப்துல்லா எந்த அளவு மக்கள் நலவிரும்பியாக இருந்தார் என்பதும், மக்கள் நலனுக்காக தீவிரப்போக்குள்ள மதத்தை அவர் எப்படி புத்திசாலித்தனமாக கையாண்டர் என்பதும் தெரியவருகின்றன. அவர் மீது மரியாதையை வரவழைக்கிறது கட்டுரை.
    ஒரு நடுநிலையான கட்டுரை எப்படி இருக்க வேண்டுமோ, அப்படி இருக்கிறது கட்டுரை. இந்த பேசு பொருள் அரிதானது. பேசிய விதமும் அரிதானது.
    இது போன்ற விஷயங்கள் அறிய அரிதானவை. இத்தனை நாளா எங்கப்பா இருந்தீங்க மொமண்ட் ! 🙂
    தொடர்ந்து எழுதுங்கள் லக்‌ஷ்மணப் பெருமாள்.

  2. Although there is severe restriction for women’ human rights, I understand that Saudi King has 22 wives and many children and grandchildren. One rule for the people and another rule for the king. The aim is to use to produce more children to increase Muslim population. So long as Saudi has oil resources they will continue with their human rights violations. One day they will have to revert to square one.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.