1.
எல்லா முகங்களையும் வெறித்துப் பார்த்தபடி
அவர்கள் அங்கே உட்கார்ந்திருந்தார்கள்
காத்திருத்தலின் கணங்கள் சொட்டுச்சொட்டாய்
ஆன்மாவில் கவிந்து பரவி செல்லரிக்கச் செய்தன.
ஊரும் வீடும் எங்கோ தூரதேசத்தில்
தேவன் வந்தாலும் கொடுவாளுடன் எமன் வந்தாலும்
சம்மதமே
நீதியரசர் வந்தபோது பிணங்களே எஞ்சியிருந்தன
2.
என்னவென்றே தெரியாமல் நெஞ்சு கனக்கும்
இதுபோன்ற நாட்களில் தான்
உன்னை நினைத்துக் கொள்கிறேன்
இரவு என் மதுக்கோப்பையை கவிழ்த்துவைக்கிறது
மீண்டும் அந்த விடலைப்பருவ காதலுக்குச் செல்ல ஆசைப்படுகிறேன்,
அது தோல்வியில் முடிந்தது என்றபோதிலும்
என் கண்களை நீ நேராய் பார்த்துச் சிரித்த அந்தநாளில்
முன்புபோலல்லாது நானும் இப்போது மலர்ந்து சிரிக்கமுடியும்
முன்புபோலல்லாது உன்னிடம் உன்னை
எத்தனை நேசிக்கிறேன் என்று சொல்லமுடியும்
முன்புபோலல்லாது ஒரு அழகான கவிதையில்
என் காதலைப் புனைய முடியும்
எதுவுமே முன்புபோலில்லாததுதான் எத்தனை துயரமானது
– பாலா கருப்பசாமி
~oOo~
பயணம்
நின்றபடி வந்தவருக்கு
இருக்கை கிடைத்திருந்தது,
அமர்ந்தே வந்திருந்தவருக்கு
அப்போது தான்
கைகால்களின் நிலைப்பாடு சுகமாகியிருந்தது,
சண்டை போட்டிருந்த ஒருவனுக்கு
ஜன்னல் ஓர வரம் அகப்பட்டிருந்தது,
அழுதிருந்த பிள்ளை ஒன்று
தானே அடங்கி அமைதியாகியிருந்தது,
எதிர்பாரா இடம், விதம்
அப்பயணம் நிற்கையில்..
பின் எல்லோரும் சமமென
தரையில் இறங்கி நிற்க நேர்ந்தது
இருந்த அடைந்த நிலையெல்லாம் மறந்து….
– ப.ஆனந்த்
~oOo~
பேசியும் பேசாமலும்
(1)
கூடியிருந்தவர்கள் பேசப் போவதற்கு முன்னமேயே
காதைப் பொத்திக் கொள்ளும்
கருத்தரங்கின் சுவர்கள்.
ஒருவர் மாறி ஒருவர் பேச
அரங்கதிரும்.
அடித்துக் கொள்ளும் அரங்கின் ஜன்னல் கதவுகள்
போதுமென்று.
பேச்சுகள்
புகை சூழ்ந்து அரங்கில் நிரம்பியிருக்கும்.
காற்று
அரங்கிற்குள் நுழைய வேண்டியது அவசியமாயிருக்கும்.
பேச்சுகள் சிதறி
அர்த்தங்கள் கிழிந்து வார்த்தைகள் காற்றில் மிதக்கும்.
அவரவர் பேச்சு
அவரவர்க்குப் பிடித்தது போலிருக்கும்.
மற்றவர்க்கும் பிடித்திருக்க வேண்டுமென்று ஒவ்வொருவரும் விரும்புவது தெரியும்.
பேசவில்லை
நான்.
பேசவில்லை ஏனென்று பேசத் தவறிய என் பேச்சு
வீடு வரை துரத்தி வரும்.
நான் தங்கா விட்டால் தன் தனிமையில் மூடிக் கிடக்கும் வீட்டில் வாழும் என் தனிமையில் விடாது நச்சரிக்கும்.
வேறு வழியின்றி
பேசத் தவறிய என் பேச்சைப் பேசுவேன்.
என் பேச்சு பிடித்திருக்கும் எனக்கு
மற்றவர்க்கும் பிடித்திருக்க வேண்டுமென்று விரும்ப மற்றவரில்லாததால்.
(2)
என்
பேச்சையும்
உன்
பேச்சையும்
விட்டு
ஏகோபித்த மழையின் பேச்சை
ஒன்றும்
பேசாமல்
கேட்டாலென்ன?
மழை
தன்
கடைசித் துளியைப் பேசி முடிக்கும் வரை
ஒன்றும்
பேசாமல்
ஒரு தடவையாவது
கவனித்தாலென்ன?
எதைப் பேசியும் எதைப் பேசாமலும்
பெய்யும் மழை
என்பதைப்
பின்
நீயும்
நானும்
பேசலாம்.
(3)
ஒரு பேச்சும் பேசாமல்
கடலின்
ஓயாத பேச்சையும் கணக்கிலெடுத்துக் கொண்டு
என்ன
பேசுவதென்று தெரியாமல்
உட்கார்ந்திருப்பேன்
நான்
கடலின்
முன்.
(4)
ஒரு
சொல்லை
இன்னும் பேசவில்லை.
இன்னும் பேசாமலுமில்லை
என்றிருக்கும்
இடை வெளியில்
இருக்கும்
ஒரு
பொருள்
பொருளாய்.
– கு.அழகர்சாமி
ஆனந்தின் பயணம் அருமையாக இருந்தது…
நீ வாழ்க….. உன் தமிழ் புலம் வளர்ச்சி பெறுக……