”எப்படி நடந்ததுன்னே தெரியலை…”
”போன மாசம் கோடி கணக்கில செலவழிச்சு சென்சார், கம்ப்யூட்டர் எல்லாம் நிறுவி, உற்பத்தி பிரகாசிக்கும்னு சொன்னானே அந்த சேல்ஸ்மேன்”
“தப்பு எப்படி நடந்ததுன்னே தெரியல. நம்ம ஐடி ஆசாமிங்க என்னமோ ரஷ்ய சதிங்கறாங்க…”
”புரிய மாதிரி சொல்லய்யா..”
“நம்ம தொழிற்சாலைல, ஒவ்வொரு நாளும், 3,000 சிலிண்டர்கள் தயாரிக்கறோம் இல்லையா? அதில் மேல் பகுதியில், மரையுடன் கூடிய மூடியை நமது காண்ட்ராக்ட் சப்ளையர் அனுப்பி வைப்பார்கள். எப்படியோ, சிலிண்டரில் உள்ள மரை வடஞ்சுழியாக (clockwise threads) இல்லாமல், இடஞ்சுழியாக (anti-clockwise) இன்று வெளி வந்துள்ளது”
“அதுக்கு ஏன் இப்படி டென்ஷன் பண்றீங்க?”
”நம்ம கிட்ட இருக்கற மூடியைப் பயன்படுத்த முடியாது. சப்ளையர் புதிதாக வலஞ்சுழி மூடி வேண்டுமானால், இன்னும் 2 வாரங்களாகுமாம். அதுவரைக்கும் நம்ம தயாரிப்பை மார்கெட்டுக்கு அனுப்ப முடியாது …”
”கூப்பிடப்பா அந்த மெஷின் ஷாப் எஞ்சினியரை? எப்படியா இப்படி தப்பு நடந்தது?’
”ஐ.டி. காரங்க, ஏதோ ரஷ்ய சதிங்கறாங்க. ரஷ்ய விஷம நிரலர்கள் நம்முடைய எந்திரங்களை எப்படியோ இணையம் மூலம் தொடர்பு கொண்டு அதன் ஆணைகளை மாற்றி, இப்படி நடந்துச்சின்றாங்க”
~oOo~
மேற்குலகில், ஏன் வளரும் நாடுகளில் கூட, தொழிற்சாலை சூழலில், ஏராளமான கருவிகள்/உணர்விகள் நிறுவப்பட்டுள்ளன. தேவையான பொழுது, பொறியாளர்கள், உணர்விகள் அளந்து காட்டும் அளவுகளை கண்கானிக்கிறார்கள். மற்ற நேரங்களில், இந்த அளவுகள் (measurements) , யாரும் கண்டு கொள்ளாமல் விடப்படுகிறது. கடந்த 10 ஆண்டு காலமாக நிறுவப்படும் எந்திரங்களில் உள்ள மானிகளில் (instruments) டிஜிட்டல் மயமாக உள்ளது. பிரச்னை என்னவென்றால், இந்தக் கருவிகள் மற்றும் மானிகள் அளந்து வெளியிடும் அளவுகள் எங்கும் போவதில்லை. இந்த அளவுகளை வைத்து ஏராளமான எந்திரங்கள் மற்றும் உற்பத்தி பிரச்னைகளைத் தீர்க்க முடியும் என்று நமக்குத் தோன்றவில்லை. விவரமாக இத்துறையில் கருவிகளின் இணையம் பற்றி பேசுமுன், ஒரு முக்கிய எச்சரிக்கை – வீடுகளில், மற்றும் கார்கள்/அலுவலகங்களில் உள்ள கருவிகள் போல இவை வசீகரமற்றவை. போரடித்தாலும், மிகவும் பயனளிப்பவை.
பொதுவாக, உற்பத்தி மற்றும் தயாரித்தல் உலகை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்.
- தொடர் செய்லாக்கத் தொழில்கள் (continuous process manufacturing)
- தொகுப்புத் தொழில்கள் (assembly based manufacturing)
- பொறியியல் பிரத்யேகத் தயாரிப்புத் தொழில்கள் (engineering job order)
இந்த மூவகைத் தொழில் முறைகளிலும் பல்வேறு உப பிரிவுகள் உள்ளன. உதாரணத்திற்கு, ஒரு கச்சா எண்ணை சுத்திகரிப்பு, தொடர் செய்லாக்கத் தொழில்; அதே போல, ஒரு மிகப் பெரிய பரப்பளவில் பல சுரங்கங்களை இயக்கும் தொழிலும், தொடர் செய்லாக்க தொழில்தான். கார் நிறுவனம், ஒரு தொகுப்புத் தொழில்; அதே போல மோட்டர்களை உருவாக்கும் தொழிலும் ஒரு தொகுப்புத் தொழில். தொழிலகம் என்று சொன்னவுடன், நம் மனதில், ஊருக்குப் புறமாக, ஒரு பெரிய பரப்பளவில் ஏராளமான இரைச்சலுடன் எந்திரங்கள் இயங்கும் மையம் என்று நினைக்கிறோம். ஆனால், இன்று, சத்தமில்லாமல், பல தொழிலகங்கள், நகரின் உள்ளே நடந்து வருகிறது. அத்துடன், பல புதிய தொழில்கள், தொடர் செய்லாக்க தொகுப்புத் தொழில்களாகவும் இருக்கின்றன.
எந்த ஒரு தொகுப்பு தொழிலிலும், பல கட்டங்கள் உள்ளன.இவற்றை, பொதுவாக, இவ்வாறு பிரிக்கலாம்;
- வடிவமைப்பு (design)
- தயாரிப்பு (manufacturing)
- பகிர்மானம் (distribution)
இன்றைய தொகுப்புத் தொழில்கள் பல்வேறு உப தொழில்களோடு இணைந்து (ancillary manufacturing), பல மாநிலங்கள், தேசங்கள் என்று மிகவும் விரிவாகி சிக்கலாகவும் உள்ளது. உதாரணத்திற்கு, ஐரோப்பிய நாடு ஒன்றின் டீலருக்கு தேவையான 1,000 கார்களுக்கு, சென்னையில் தொகுப்புத் தயாரிப்பு நடக்கிறது என்று வைத்துக் கொள்வோம். சென்னை தயாரிப்பு நிறுவனத்திற்கு தேவையான பாகங்கள், இந்தியா முழுவதிலுமிருந்து சரியான நேரத்திற்கு தயாரிப்பாளரிடம் வந்தடைய வேண்டும். இன்றைய சூழலில் இணையமில்லையேல், இதில் எதுவும் சாத்தியமில்லை. ஐரோப்பிய டீலரின் ஆணை, இணையத் தொடர்பு மூலம், சென்னை தொழிற்சாலையை அடைகிறது. சென்னை தொழிற்சாலையிலிருந்து, உதிரி தயாரிப்பாளருக்கும் ஆணை இது போலவே இணைய வசதி மூலம் கிடைக்கிறது. பாகங்கள் சரியாக வந்தடைந்ததும், தயாரிப்பு வேலைத் துவங்கி, உருவாக்கப்பட்ட பொருள் சோதனை செய்யப்பட்டு பகிர்மானத்திற்காகக் கப்பலேற்றப்பட வேண்டும்.
சில சொற்கள் தடிமனாகக் காட்டியிருப்பதன் காரணம், இவ்விஷயங்களில், கருவிகள் சரியாகப் பயன்படுத்தப்பட்டால், ஒரு நிறுவனத்தின் செயல்திறனைக் கூட்டி, அதன் லாபத்தை உயர்த்த பல வாய்ப்புகள் உள்ளன. சில பகுதிகளில், ஒரு 1% உயர்வு, பல நூறு கோடி ரூபாய்கள் லாபத்திற்கு வழி வகுக்க வல்லது.
மனிதர்களால், தொடர்ந்து கோடிக்கணக்கில் உருவாக்கப்படும் பொருட்களின் தரத்தை சோதனை செய்வது இயலாத காரியம். கருவிகளுக்கு இது சர்வ சாதாரணம். அதே போல, பகிர்மானத்தில், இத்தகைய கருவிகள், ஓயாமல், ஓரிடத்திலிருந்து இன்னொன்றுக்கு ஓடி, சரியாக பேக் செய்யும் நேர்த்தி, ஒரு நிறுவனத்திற்கு பல வகையிலும் உதவும்.
உதாரணத்திற்கு, அமேஸான் நிறுவனம், வட அமெரிக்காவில், எங்கு வேண்டுமானாலும் அடுத்த நாளே ஆணையிட்ட பொருளை கொண்டு சேர்க்கும் வல்லமையை எப்படிப் பெற்றது?
- சில கருவிகளைத் தாங்கிய ரோபோக்கள், (பார்க்க, தூரத்தை அளவிட, கிடங்கு கணினியிலிருந்து ஆணைகளை பெற, எடை அளக்க என்று பல வகை உணர்விகள் இந்த ரோபோக்களுக்கு உண்டு) அமேஸானின் கிடங்குகளில், சுறுசுறுப்பாக, மனிதர்களுடன் கிடங்கின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று வாடிக்கையாளர்கள் ஆணையிட்ட பொருட்களை பிளாஸ்டிக் டப்பாக்களில் சேர்க்கிறது
- சேர்த்த டப்பாக்களை காத்திருக்கும் லாரிகளில் ஏற்றும் மின்சார நகரும் வாரில் (electric conveyer belt) சேர்த்து விடுகிறது
- இரண்டாயிரம் ரோபோக்கள் இரவு பகலாக இவ்வாறு வேலை செய்வதால், இன்று நுகர்வோர் கடைகளுக்குச் சென்று வாங்குவதை குறைத்துக் கொண்டுள்ளார்கள். இதனால், அமேஸானின் வியாபாரம் அதிகரித்துக் கொண்டே போகிறது. நுகர்வோரைப் பொறுத்த வரையில், கிளிக்கினால், ஒரு நாளில் பொருள் வீட்டிற்கு வந்து இறங்கும்
- புத்தகக் கடையாக ஆரம்பித்த அமேஸானின் வளர்ச்சிக்குக் காரணம், கருவிகளின் இணையம் என்றால், மிகையல்ல
கீழே உள்ள இரு விடியோக்கள். அமேஸானின் பகிர்மான செயல்திறனை உணர்விகள் தாங்கிய ரோபோக்கள் எப்படி உயர்த்துகின்றன என்று காட்டுகின்றன.
இதுவரை நாம் பார்த்தது, பகிர்மான உதாரணம். தொகுப்பு வரிசையில் (assembly line) எவ்வகைக் கருவிகள் உதவலாம்?
- தொழில் ரகசியம் கருதி, இதுபோன்ற பல உதாரணங்கள் யூடியூப்பில் இருப்பதில்லை. எனினும், பெரும்பாலனவை, ரோபோக்களின் செயல்திறனை உயர்த்தும் முயற்சிகள். பல ரோபோக்கள், இன்று நிரல்களின் கட்டளைபடி இயங்கினாலும், ரோபோக்களுக்கு கணினி மற்றும் வேலை தளக் கருவிகள் தவிர, வேறு எந்த ஒரு கருவியுடனும் தொடர்பு இல்லை. உதாரணத்திற்கு, ரோபோவை இயக்கும் இன்னொரும் மோட்டாரின் செயல்திறன் பற்றிய எந்த செய்தியும் ரோபோவிடம் கிடையாது. சற்று பழுதடைந்த ஒரு பாகத்துடன் சமயோசிதமாக செயலாற்றும் திறமை எல்லாம், அதற்குக் கிடையாது. இத்தகைய முடிவாற்றல் திறமைகளை வளர்ப்பது கருவிகளின் இணையத்தின் குறிக்கோள்
- செயல்திறன் குறைந்த இன்னொரு எந்திரத்தின் பழுது பார்க்கும் வேலையை துவங்க வழி வகுத்து (நம்முடைய உதாரணத்தில் இதைப்பற்றி பார்த்தோம்). சரியாகும் வரை, அந்த எந்திரத்தின் குறைந்த செய்லதிறனுக்கேற்ப வேலைகளை முடித்து விட வேண்டும்
- இன்னொரு தொகுப்புத் தொழில் விஷயம், கணினி ஆணைகள் மூலம், உலகின் எங்கிருந்து வேண்டுமானாலும் எந்திரங்களைக் கட்டுப் படுத்தும் முயற்சி. இது சில பயன்பாட்டுக்களுக்கு மட்டுமே சரிப்படும். உதாரணத்திற்கு, கனடாவின் குளிர்காலத்தில், பயங்கரப் பனிப்பொழிவின் காரணமாக, தொழிற்சாலையை வீட்டிலிருந்தே கட்டுப்படுத்துவது நல்ல ஏற்பாடாகத் தோன்றலாம். ஆனால், இப்பகுதியின் ஆரம்பத்தில் விவரித்த நிகழ்வு போல நேர வாய்ப்புண்டு,
யூரோப்பில், இந்தத் தொழில்நுட்பத்தை, Industry 4.0 என்று அழைக்கிறார்கள். இவர்களது (குறிப்பாக, ஜெர்மானியர்கள்) பார்வையில், RFID தாங்கிய கருவிகள் தொகுப்பு மற்றும், தொடர் செயலாக்கத் தொழில்களை தலைகீழாக மாற்றும் சக்தி கொண்டது. தேவைக்கேற்ப, என்ன பொருட்களைத் தயாரிப்பது என்று மனிதர் முடிவெடுக்க வேண்டாம். பொருட்களே முடிவெடுக்கும். இன்று ஒரு குளிர்பான தயாரிப்பு நிறுவனத்தில், ஒரு ஷிஃப்டில் ஒரு வகை பானம்தான் தயாரிக்க முடியும். இத்தகைய முன்னேற்றம் வந்தால், சந்தையின் தேவைக்கேற்ப திரும்ப வரும் பாட்டில்கள், அருந்தப்பட்ட பானத்தை நிரப்பிவிடலாம்! அதுவும் நொடிக்குள்.
இந்தத் தொழில்நுட்பத்தில் பிரச்னைகள் இல்லாமல் இல்லை. ஆனால், இதில் உள்ள பயனும் வசீகரமானது. நுகர்வோருக்குப் பிடித்த பானத்தை தயாரித்து விற்றால், குளிர்பான னிறுவனத்தின் மார்கெடிங் செலவின் தாக்கம் இன்னும் உயரும்.
அடுத்தபடியாக, தொடர் செயலாக்கத் தொழில்களில் கருவி/உணர்விகளின் தாக்கம் எப்படி என்று பார்ப்போம். தொடர் செயலாக்கம் என்றவுடன், நாம் முன்னம் சொன்ன பாட்டில் நிரப்பும் தொழில் நினைவுக்கு வரலாம் ஆனால், இவ்வகை தொழிலில், சுரங்கத் தொழிலும் அடங்கும். பெரிய சுரங்கங்கள் நிறைந்த பகுதி, மற்றும் எண்ணெய் கிணறுகள் நிறைந்த ஒரு பகுதியில், பலவகையான கருவிகள் மற்றும் உணர்விகள், மூன்று விஷயங்களில் பெரிய உதவி செய்ய வல்லது.
- கண்கொட்டாமல் (மனிதர்களின் ஒரு உணர்வி கண்) வெப்பம், அழுத்தம், மற்றும், ஓட்டம் (flow) போன்ற அளவுகளை கண்கானித்து மானிக்கு அனுப்பிக் கொண்டே இருக்கும். மானியும், சில முன்னே கணிக்கப்பட்டுள்ள அளவுகளை தாண்டினால், மற்ற உணர்விகள் கொண்டு (இதற்கு ஒரு கட்டுப்பாட்டுக் கணினி தேவை) அளவுகளைக் கட்டுப்படுத்த முயற்சி செய்யும்
- சில அளவுகளை அளக்கும் தளங்கள் அபாயமானவை (உதாரணம், 1,000 டிகிரி வெப்பம்). உணர்விகள் மற்றும் கருவிகளுக்கு அவை சாதாரணம்
- அளவுகள் குறிப்பிட்ட எல்லையைத் தாண்டிவிட்டால், இவ்வகைத் தொழில்களில், அவற்றை கட்டுப்படுத்தும் வாய்ப்பு சில நொடிகளே நீடிக்கும். கணினி, கருவி, உணர்வி கூட்டணிக்கு இது தோதான விஷயம்
இவ்வகை வசீகரமற்ற பயன்பாடுகளே இந்தத் தொழிலை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் என்று நம்பப்படுகிறது. மிகச் சிறிய செயல்திறன் உயர்வு, இவ்வகை தொழில்களில், பல நூறு கோடிகளை சர்வ சாதாரணமாக மிச்சம் செய்யும் வல்லமை படைத்தது. கட்டுப்படுத்தும் கணினிகள் இணையம் மூலம், கருவிகளுடன் தொடர்பில் இருக்கும் தேவையும் இவ்வகை தொழிலில் அவசியம்.
மேலே சொன்ன கருவிகள்/உணர்விகள், திரைத்தடவல், அழகான நிறங்களுடன் கூடிய பளிச் காட்சியளிப்பு போன்ற வசீகரமற்றப் பயன்பாடுகள். ஆனால், மிக முக்கிய விஷயம், கருவிகள்/உணர்சிகளின் துல்லியம் மற்றும் உடன் கட்டுப்படுத்தும் திறன். எந்திரங்களுடன், மனித இயக்க முறைகள் (human interface) நுகர்வோர் பயன்பாடுகளில் மிகவும் அவசியமானது என்றாலும், உணர்விகளின் துல்லியம் எல்லா பயன்பாடுகளுக்கும் அவசியம். ஏனென்றால், இந்த்த் தொழில்நுட்பம் வரும்வரை, அவ்வளவு துல்லியம் இல்லாத முறைகளால், மனிதர்கள் எந்திரங்களை கட்டுப்படுத்தி கொண்டுதான் வந்துள்ளார்கள், துல்லியம் மற்றும் உடன் செயல்பாடு உணர்விகள்/கருவிகளின் இணைய பயன்பாடுகளின் அடிப்படைத் தேவை என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. இவ்வகைத் தொழில்கள் மூலம் துல்லியத்தைச் சரியாக வளர்த்தால், நுகர்வோர் வசீகரங்களைச் சேர்ப்பது எளிது.
இறுதியாகத், தொழில் துறையில் கருவி இணைய முயற்சிகள் பெரிய புரட்சி உருவாக்கும் என்ற கருத்திற்கே பலர் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். இவர்களது வாதத்தின் மிக முக்கிய விஷயம், கருவி இணைய விஷயங்கள் மற்றத் துறைகளுக்குப் புதிதாக இருக்கலாம். அத்துடன், நுண்ணறிப்பேசிகளின் வசீகரத்தால், இந்தத் தொழில்நுட்பம் நேற்று கண்டுபிடித்தது போலத் தோன்றலாம். ஆனால், கருவி இணையம் என்பது தொழில் துறையில் கடந்த 10 ஆண்டுகளாக நடந்து வரும் விஷயம். புதிதாக செயல்திறனை அதிகரிக்கும் இணையக் கருவிகள் என்பது சற்று ஓவராக ஊதிவாசிப்பு என்பது இவர்களது கருத்து.