child1

பெரிய அண்ணனின் முதல் குழந்தை தேன் ததும்பும் தனது மழலை மொழியில் சொன்ன முதல் வார்த்தை “காக்கா”. அண்ணியின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. பாய்ந்து வந்து என்னிடமிருந்து குழந்தையை வாங்கி முத்த மழை பொழிந்தார். இடையிடையே “ஐயோ! எம்பொண்ணு பேசிருச்சே ” என்று குதூகலித்தார். எனக்கு ஆச்சரியம். அண்ணியிடம் கேட்டேன், “அண்ணி ,பாப்பா இதுக்கு முன்னால எந்த வார்த்தையையும் சொன்னதில்லையா?”

“ம்ஹூம். இதான் மொத தடவ “

“அம்மா, அப்பா ன்னுகூடச் சொன்னதில்லயா ?”

“இல்ல “

“மா இல்லனா பா ன்னுகூடவா சொல்லல ?”

அண்ணி சிறிது நேரம் யோசித்து விட்டு “இல்ல” என்றார் .

எனக்கு இன்னமும் நன்றாக நினைவிருக்கிறது. அண்ணன் மகள் ஓரளவிற்கு எழுந்து நிற்கப் பழகிய தருணம் அது. ஒரு நாற்காலி, ஒரு திண்ணை, மேஜை, கட்டில் குறைந்தபட்சம் ஒரு தண்ணீர்த் தொட்டி தேவைப்பட்டது அந்தக் குழந்தை எழுந்து நிற்பதற்காக. அன்று நான் விடுதியிலிருந்து விடுப்பு எடுத்து வீடு வந்திருந்தேன். வீட்டில் நுழைவதற்கு முன்பாக, வீட்டின் பக்கவாட்டிலிருந்த தண்ணீர்த் தொட்டியில் கை, கால் முகமலம்பிக்கொண்டிருந்தேன்.

அண்ணி நான் வந்ததைக் கண்டவுடன் அவர்களின் அறையில் தூங்கிக்கொண்டிருந்த குழந்தையைத் தூக்கி வந்துவிட்டார். என்னைக் காட்டி,

“பாப்பா! பாத்தியா சின்னச் சித்தப்பா வந்துட்டார். கேளு என்ன வாங்கிட்டு வந்துருக்கார்ன்னு?” என்றவுடன் உறக்கம் மிச்சமிருந்த கண்களை விரித்து “ஞே”என்று பலமாகச் சிரித்தது குழந்தை. நானும் கைகால் முகம் துடைத்து குழந்தையை வாங்கிக் கொஞ்சத் தொடங்கினேன் .

அன்று எனது தந்தையின் முதலாம் நினைவு தினம். வீட்டிற்கு உறவினர்களில் முக்கியமானவர்கள் அனைவரும் வந்திருக்க, உச்சிவேளையில் அப்பாவின் கடைசிப் புகைப்படம் முன்பாகப் பலவகைப்பலகாரங்களும், பழங்களும் இட்டு கும்பிட்டோம். எல்லாம் முடிந்து ஒரு சிறிய இலையில் வடை, பாயாசம், அப்பளம், கொஞ்சம் சோறு வைத்து என்னிடம் கொடுத்தார்கள். ஏற்கெனவே பசி காதை அடைத்துவிட்ட நிலையிலிருந்த நான் அதைத்தின்ன முயல, எனது பெரிய தாய்மாமன் பற்களைக் கடித்துக் கொண்டு,

“என்னடாப் படிச்சிக் கிழிச்ச. போ. போய் மொதல்ல காக்காவுக்கு வச்சிட்டு வா. காக்கா தின்னதுக்கு அப்பறம்தான் நாம திங்கனும்” என்றார். எனக்குப் புரியவில்லை. படிப்பிற்கும் இதற்கும் என்ன சம்பந்தம்.நான் படித்துக்கொண்டிருந்த பொறியியலில் இதுபோன்ற தேற்றமோ கோட்பாடோ வந்ததில்லையே ?

கோபத்தை அடக்கிக்கொண்டு ஒரு கையில் இலைச்சோறும், மறுகையில் அண்ணனது குழந்தையுமாக நான் மாடியேற பின்தொடர்ந்து வந்தார் அம்மா. மொட்டை மாடியின் கைப்பிடிச்சுவரில் இலைச்சோற்றை வைத்துவிட்டு நான் எதிர்த்தவீட்டு முற்றத்தைப் பார்த்தேன். காரணம் நான் வந்த அதே பேருந்தில்தான் எதிர்த்த வீட்டிற்கும் ஒரு பட்டுத் தாவணி வந்திருந்தது. நான் பார்த்தபொழுது அவள் முற்றத்தில் நின்று என்னையே பார்த்துக்கொண்டிருந்தாள்.

அம்மா “அங்க என்னப்பாப் பாக்குற. கூப்புடுப்பா காக்கா காக்கா ன்னு” என்றார். எனக்கு நா எழவில்லை. பட்டுத் தாவணியின் முன் என் கெளரவம் என்னாவது?

வேறுவழியின்றி அம்மா தனது நடுங்கும் குரலில் காக்காவைக் கூப்பிட ஆரம்பித்தாள். அது என் செவிக்கே எட்டவில்லை. இறுதியாகப் பசி பொறுக்கமாட்டாமல் என் குடும்பத்தினர் அனைவரும் மாடிக்கு வந்து ஏக காலத்தில் கத்தத் தொடங்க, ஏகப்பட்ட காக்காக்கள் காற்று வழியில் பறவ ஆரம்பித்தன. காகம் ஒன்றும் வரக்காணோம்.

கடைசியாக ஒரு காகம் வந்து அதன் தொடர்ச்சியாகப் பல காகங்கள் வந்ததும், அவைகளுக்கு நாங்கள் வழிவிட்டு பசிதீர்க்கும் வெறியில் விலகி நடக்கையில் ஒரு மெல்லிய அழகான குரல் “காகா “என்றது. அது என் கையிலிருந்த என் அண்ணனின் குழந்தைதான் அது. கையை விரித்து ஆட்டி, இரண்டே இரண்டு பற்கள் இருந்த பொக்கை வாய் திறந்து “காகா”என்று சொல்லிக்கொண்டிருந்தாள். அது “காகா”விற்கும், ஹாஹா”விற்கும் நடுவிலிருந்தது. அனைவருக்கும் பசிமறந்து குதூகலம் பிறந்தது. அண்ணி பாய்ந்து வந்து குழந்தையைப் பறித்து முத்தமிட்டார். அப்பொழுதுதான் முதலில் சொன்ன உரையாடல் நிகழ்ந்தது…

எனவே அன்றைய உணவு வேளை உரையாடலில் நாங்கள் அனைவரும் முதன்முதலாக அல்லது மிக அதிகமாக உச்சரித்த வார்த்தைகளை அம்மா பெருமிதத்துடன் சொல்ல அனைவர் முகத்திலும் மகிழ்ச்சி பொங்கியது .

அக்கா “ம்மா “

பெரியண்ணன் “க்கா”. (அக்கா என்பதன் மழலை மொழியென்று அம்மாவின் விளக்கம் )

இரண்டாம் அண்ணன் “ஆயா”(எங்கள் பாட்டி வீட்டில் குழந்தைப் பருவத்தைக் கழித்தவர் )

மூன்றாம் அண்ணன் “ம்பி”(தம்பி என்பதன் மரூஉ என்பது அம்மாவின் விளக்கம்)

நான்காம் அண்ணன் “ப்பா ” என்றதோடு நிறுத்திவிட்டார்.

என்னைப்பற்றி எதுவும் சொல்லவில்லை. ஏனென்றால் எனது முதல் மழலைச் சொல் எதுவென்பது ஊரறிந்த இரகசியம். அனைவருக்கும் தெரியுமாதலால் அனைவரும் என்னைப் பார்த்து ஒரு கேலிச் சிரிப்பை உதிர்த்தனர் .

உண்மை இதுதான். பிறந்ததிலிருந்து எனது தாத்தா வீட்டில் வளர்ந்ததாகவும், எனக்கு இரண்டு வயது ஆகும்போது தாத்தாவும் பாட்டியும் ஒரு மாத இடைவெளியில் காலஞ்சென்றதாகவும் சொல்லி இருந்தார்கள். அவர்களுடன் இருக்கையில் தாத்தா ஊர் நியாயம் பேசப்போகையில் என்னையும் தூக்கிச் செல்வாராம். அப்படித் தாத்தா பேசுகையில் அவருடைய ஒரு வழக்கமான கெட்ட வார்த்தையைப் பயன்படுத்தாமல் அவருக்குப் பேசவராதாம். அப்படி அவர் தினமும் என்னைத் தூக்கிச் செல்ல,ஒருநாள் நானும் அதே கெட்ட வார்த்தையை எனது மழலை மொழியில் கூறிவிட, பாட்டி தாத்தாவைத் திட்டியது இரண்டு தெருக்கள் தள்ளியும் தெளிவாகக் கேட்டதாம். அத்தோடு தாத்தா கைவிட்டு விட்டாராம். கெட்ட வார்த்தை பேசுவதை அல்ல, என்னைத் தன்னோடு தூக்கிச் செல்வதை ( அது என்ன வார்த்தை என்பதற்கு ஒரு குறிப்புத் தருகிறேன் .தாத்தா கொஞ்ச காலம் சென்னையில் யாரிடமோ எடுபிடியாக ஒரு காலத்தில் இருந்திருக்கிறார் )

படிப்படியாக என்னைத் தவிர்த்து அனைவருக்கும் (அந்தப் பட்டுத் தாவணியையும் சேர்த்து) திருமணமாகிவிட, நான் பொறியியல் முடித்து, நாயலை பேயலை அலைந்து, ஒருவழியாகக் கர்நாடகத்தில் நல்ல நிலையில் நல்ல சம்பளத்தில் இருந்தபொழுது பாதிக் கிழவனாகியிருந்தேன். தலையிலிருந்த முடிகள் அனைத்தும் உதிர்ந்துபோய் மண்டை பளிங்காக மின்னிக்கொண்டிருந்தது..

ஒவ்வொரு முறை ஊருக்குப்போகும்போதெல்லாம் வீட்டின் புது வரவுகள் கைகால்களை உதைத்து,”ஞே ” என்று சிரித்துக்கொண்டும் அல்லது “யீ ” என்று அழுதுகொண்டும் இருந்தன. ஒவ்வொரு முறையும் யாரோ ஒருவர் புதிதாகப் பேசப்பழகி இருந்தார்கள். அவர்கள் முதன் முதலில் என்ன பேசினார்கள் என்று கேட்டால் அண்ணிகள் “ம்மா” என்றார்கள். அண்ணன்கள் “ப்பா”என்றார்கள்

மூன்றாம் அண்ணனின் இரண்டாம் மகன் மட்டும் இதில் விதிவிலக்கு. ஊருக்கு சென்று திரும்பி வருகையில் வழியில் கிடந்த செத்தப் பாம்பை பார்த்துவிட்டு அண்ணி “பாம்பு, பாம்பு” என்று அலறியபடி கக்கத்தில் இருந்த இவனைத் தூக்கிக்கொண்டு ஓட, அன்று இரவு”ஆம்பூ” என்று அலறி எழுந்து அண்ணியைக் கட்டிக்கொண்டிருக்கிறான். என்னத்தான் நான் அவர்களின் முதல் வார்த்தைகளை உடனிருந்து கேட்காவிட்டாலும், அக்குழந்தைகள் முதன்முதலாக என்னிடம் பேசிய வார்த்தைகள் இரசமானவை. அவை ஞானிகளின் பேச்சுகளைப்போல் மறக்க இயலாதவை.

“பப்பா “

“மாமா “(உண்மையில் நான் சித்தப்பா )

“பன்னி “(பன்றி )

“சந்திரப்பா “(என்பெயர் சந்திரன் )

“மைசூரப்பா “(மைசூரு சித்தப்பா .நான் மைசூரில் இருந்தபொழுது )

“இஞ்சிப்பா “(இஞ்சினியர் சித்தப்பா )

“ஆறு நீ .அப்பாவப் பாக்க வந்தியா?”

“ஆயா உன்னைப்பாக்க ஆரோ வந்திருக்கான்”

நினைக்கையில் ஆச்சரியமாக இருக்கும். இரண்டு நாட்கள் தங்கிவிட்டுக் கிளம்புகையில் கீழே விழுந்து கை கால்களை உதைத்து அழ ஆரம்பிப்பார்கள்.

இந்த முதன் முதலாக அர்த்த இராத்திரியில் “ஆம்பூ”என்று அலறியவன் மட்டும் என்னிடம் பேசியதில்லை. என் மடியில் அமர்வான். நான் செய்வதை, பேசுவதைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருப்பான். யாரோடும் அவன் பேசியதை நான் பார்த்ததேயில்லை. அவனுடைய செய்கைகள், முகத்தில் எப்பொழுதும் தவழும் புன்சிரிப்பு அவனை ஒரு பிறவி ஞானியாக எனக்குக் காட்டின. ஆனால் அம்மாவும்,அண்ணன்மார்களும் அண்ணிமார்களும் அவன் நன்றாகத்தான் பேசுகிறான் என்று சொன்னார்கள். ஆனால் இரண்டு வயது வரை “ஆம்பூ” விட்டு வேறு எதையும் அவன் பேசியதில்லை என்பதையும் ஒப்புக்கொண்டார்கள்.

மொத்தமாக எல்லாக் குழந்தைகளுக்கும் ஒரே நாளில் எங்கள் குலதெய்வக் கோயிலில் முடியிறக்கத் தீர்மானித்து எனக்கும் தகவலனுப்பினார்கள். ஆனால் நான் பன்னாட்டு நிறுவனம் ஒன்றிற்கு வாக்கப்பட்டிருந்ததால், வேலைப்பளுவின் காரணமாக என்னால் ஒரு வாரம் கழித்துத்தான் விடுப்பு கிடைத்து ஊருக்குப் போக முடிந்தது. எல்லாக் குழந்தைகளும் மொட்டைப் போடப்பட்டிருந்ததால் என்னால் சரிவர அடையாளம் காண கூட இயலவில்லை. தலைவாரிப் பூச்சூடும் வேலை இல்லை என்பதால் அண்ணிகள் அனைவரும் காலைவேளையில் கூடப் புன்னகையுடன் இருந்தார்கள்.

அன்று மாலை பள்ளி முடிந்து “ஆம்பூ” பையன் ஓடிவந்தான். என்னைப்பார்த்ததும் சிரித்துக்கொண்டே பின்புறமாக வந்து கட்டிக்கொண்டான். ஒருவர் பின் ஒருவராக எங்கள் குடும்ப வாரிசுகள் வர ஆரம்பித்தார்கள். “ஆம்பூ” பையன் எல்லோரையும் மௌனமாகப் பார்த்துவிட்டு என் தலையைத் தடவி முதன் முதலாக என்னிடம் கேட்டான்,

“சித்தப்பா, உனக்கு எப்ப மொட்டை போட்டாங்க?”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.