லண்டனில் இலக்கிய உரையாடல்கள் – புதுமைப்பித்தனின் “செல்லம்மாள்”

தமிழின் முன்னணி எழுத்தாளர்கள் தமிழின் முக்கியமான சிறுகதைகளின் பட்டியலை கொடுத்திருக்கிறார்கள். ஒரு தமிழ் இலக்கிய வாசகன் நிச்சயம் வாசித்திருக்கவேண்டிய சிறுகதைகளின் பட்டியல், ஒவ்வொரு வாரமும் இப்பட்டியல்களிலிருந்து தேர்ந்தெடுத்த ஓரிரு கதைகளை விவாதிப்பதை லண்டன் வாசகர் வட்டம் தொடங்கியுள்ளது. விவாதத்தைத் தொடர்ந்து முக்கியமான குறிப்புகளைத் தொகுப்பதின் மூலம் புது வாசிப்புகளை ஆர்வமுள்ளவர்களோடு பகிரலாம் என விரும்புகிறோம். வாசகர்கள் இக்கதை அல்லது பார்வை குறித்த தங்கள் கருத்துகளை பின்னூட்டத்தில் தெரிவிப்பதன் மூலம் இவ்விவாதங்களில் பங்குகொள்ளலாம்.

உரையாடல் வழியே இலக்கிய விசாரம்:

ஸ்கைப் மவுனமாக இருந்தாலும் உயிரோடு இருக்கிறது என்பதை இணைந்திருப்பவர்கள் அனைவரும் உணர்ந்திருக்கிறார்கள்.
பிரபு சற்றே தயங்கிய ஆனால் உறுதியான குரலில், “ நண்பர்களே, அனைவரும் சரியான நேரத்திற்கு இணைந்ததற்கு நன்றி. நாம் முன்னரே பேசி உறுதி செய்து கொண்டபடி இன்றிரவு தமிழ் இலக்கியத்தில் மிக முக்கியமானவர், முன்னோடி திரு. புதுமைப்பித்தன் அவர்களின் முக்கியப் படைப்பான ”செல்லம்மாள்” சிறுகதையை எடுத்துக்கொள்கிறோம்”
“முதலில் கதைக் கருவை ஒரு சிறுவடிவாகக் கூற சதீஷை அழைக்கிறேன்”
சதீஷ் மைக்கிற்கு மிக அருகில் வந்திருக்கிறார் என்பதை அனைவரும் உணர்கிறார்கள்.
“பிரம்மநாயகம் பிள்ளை, செல்லம்மாள் தம்பதியிரைப் பற்றிய கதை இது. பி.பி தனது கிராமத்தில் இருந்து பட்டினத்திற்கு வேலைக்கு வருகிறார். கிராமத்தில் தந்தையாரின் கணக்கு வழக்கு போக அவருக்கு என்று சொத்து ஒன்றுமில்லை.
நகரத்தில் ஒரு துணிக் கடையில் வேலை. மாதம் பிறந்தால் சம்பளம் என்பதில்லை. அவ்வப்போது முதலாளிக்கேற்ப சம்பளம். அதையும் பெறுதற்கு பி.பி தனது தேவைகளைச் சில வாரங்களுக்கு முன்னரே சொல்லி முதலாளியைத் தயார் செய்ய வேண்டும். அதுவும் “ஒரு ஜோடி உயிர்கள் கீழே போட்டுவிடாமல் இருக்க கூடிய அளவு சம்பளம்” அவ்வளவுதான்.
செல்லம்மாள், அவரது துணைவி. உடல் நலமில்லாத பெண்மணி. பி.பி. யின் வருமானத்தின் பெரும் பகுதி, செல்லம்மாளின் சிகிச்சைக்கு செல்கிறது. பணத்தை மிச்சப்படுத்த, பி.பி ஊரைத் தாண்டி மின்சாரம் கூட இல்லாத வீட்டில் வசிக்கிறார். தினமும் பொடி நடையாக வேலைக்கு சென்று வருகிறார்.
குழந்தைகள் இல்லாத தம்பதியர்கள், இந்த வறுமைச் சூழலிலும், எப்படி வாஞ்சையுடன் இருக்கிறார்கள் என்பதே கதையின் அம்சம். ஒரு நாள் காலையில் துவங்கி அடுத்த நாள் காலையில் முடிகிறது.

PP1

 
பி.பியின் “வாழ்க்கை முன்னேற்றத்தை” ஆசிரியர் கச்சிதமாக “அவர் ஏறிய சிறுசிறு மேடுகள் யாவும் படிப்படியாக இறங்கிக் கொண்டே போகும் பள்ளத்தின் கோளாறுகளேயாகும்” என்கிறார். வாழ்கையில் நிலையான வெற்றி என்று ஒன்றை பார்த்திருக்காத மனிதர்.
பல நாட்களில் இரவில் வேறு நேரம் கழித்துத் திரும்பும் பி.பி சமைத்தால்தான் இரு உயிர்களுக்குச் சாப்பாடு. செல்லம்மாள் உடம்பு ஒத்துழைக்காததால் இந்த ஜீவன்களுக்கு ஊர்ப் பேச்சுகளும், ஊருக்குப் போய்விடுவதிலுள்ள உள்ள சுகங்களைப் பற்றிய கதைத்தலும்தான் ஒரே வடிகால். செல்லம்மாள் பொங்கலுக்கு ஊருக்குப் போய் வரலாம் என்று ஆசைப்படுகிறாள். இதற்கு புலிப் பாலை கொணர்ந்து வரவே சொல்லியிருக்கலாம் என்றுபடுகிறது பி.பிக்கு. காலையில் வேலைக்குக் கிளம்பும் முன், பி.பிக்கு தீபாவளிக்குக் கடையில் துணி கிடைத்துவிடுமா என்று ஒரு ஆதங்கம்.
பி.பி முதலாளியிடம் கேட்டு மூன்று சேலைகளைப் பதிவு செய்துவிட்டு அவற்றுடன் வீடு திரும்புகிறார். ஆனால் வீட்டில் செல்லம்மாள் நிலை குலைந்து கிடக்கிறாள். அடுக்களையில் சமையல் செய்து தயாராக இருக்கிறது. பி.பி தனது கை வைத்தியம் செய்து அவ்விரவைக் கடக்கிறார். காலையில் ஒரு சித்த வைத்தியர் வந்து மருந்து கொடுக்கிறார். சற்றே உடம்பு தேறும் செல்லம்மாளிடம், புடவையைக் காட்டுகிறார். செல்லம்மாளுக்கு சந்தோஷம். அன்று இரவே அவளுக்கு உடல்நிலை மோசமாகி அதிகாலையில் இறந்து விடுகிறாள்.
சடலத்திற்கு அந்த புதுப் புடவையை சுற்றி விடுவதுடன் கதை முடிகிறது.”
“…”
“நன்றி சதீஷ். கதையின் தாக்கமாக நீங்கள் உணர்வதைப் பகிர முடியுமா? நன்றி”
சதீஷ் “ வெல், இந்த தம்பதிகள் இக்கட்டான வறுமையிலிருந்து மீள முடியாத சூழ்நிலையிலும் ஒருவரை ஒருவர் ரணப்படுத்திக் கொள்ளாமல் பார்த்துகொள்வது;
பி.பி தனக்கு துணையாக இருந்த ஒரு உயிர் போய்விட்டதே என்பதைவிட, தான் நேசித்த ஒரு ஆன்மா தான் அனுபவித்த துன்பங்களை விட்டு விடுதலை அடைந்தது என்று எண்ணி இலகுவாக உணர்வது இவற்றைச் சொல்லலாம் என்று தோன்றுகிறது.”
சிரில் இப்போது சற்றே கனைக்கிறார். அவர் ஏதோ சொல்ல வருவது போன்று மற்றவர்கள் உணர்கிறார்கள். அவர்
மேலே தொடர்வதற்குள்,
“நண்பர் கிரி, உங்கள் பார்வையில்?” என்ற பிரபுவின் குரல் மற்ற அனைவர்களையும் அடைத்துவிடுகிறது.
கிரி தனக்கு மற்றவர்கள் கொடுத்த மவுன இடைவெளி இடத்தை நிதானமாக நிரப்ப ஆரம்பிக்கிறார்.
“நண்பர்களே, இது பிரம்மநாயகம் பிள்ளை – செல்லம்மாள் தம்பதியினரின் காதலைச் சொல்லும் கதை. செல்லம்மாள் இறப்பதிலிருந்து பின் சென்று அவர்களிடையேயான வாழ்க்கையை விவரிக்கிறது.

ஒரு பெரும்பளுவை இறக்கிக் கழுத்துக்கு அல்லது தோளிற்கு ஆசுவாசம் கொடுப்பது போலவே, அவரது மனதிலிருந்து பெரும் பளு இறங்கியது. மனதிலே, மரணப் பிரிவினால் துன்பப் பிரவாகம் மதகுடைத்துக்கொண்டு பெருகி அவரை நிலைகுலையச் செய்யவில்லை. சகதர்மிணியாக இருந்த ஒரு ஜன்மத்துக்குத் துன்பச் சுமை குறைந்துவிட்டது என்பதில் அவர் மனதிற்கு ஒரு நிம்மதி.

கதை சொன்ன விதத்தில் எனக்கு முக்கியமாகப் பட்டவை – நேரடியாகச் சொல்லாமல் விடப்படும் வியாதி. வியாதியின் பல விவரணைகளை இவர்களுக்கு இடையே இருக்கும் பரஸ்பர அன்பின் அளவாகப் பார்க்கலாம். வியாதி, கடன் எனும் பெயரில் வெளியிலும் படருகிறது. அது ஒரு ரணமாக பிரமநாயகம் மனதில் தொடங்கி வெளியே கடன் எனும் பெயரில் படருகிறது.

ஒரு ஜோடி ஜீவன்கள் உடலைக்கீழே போட்டுவிடாமல் இருக்கவேண்டிய அளவிற்கு ஊதியம் தருகிறார். செல்லம்மாளின் வியாதி அதில் பெருமளவு தின்றுவிடுவதுடன் கடன் என்ற பெயரால் வெளியிலும் படருகிறது.

வறுமையை, தனிமையை கற்பனாவாதத்தின் அழகியலாக அவரால் சொல்ல முடிந்திருக்கிறது. கடன் பற்றி வரும் மற்றொரு விவரணை:

பாம்பு தன் வாலைத்தானே விழுங்க முயலும் சாதுர்யத்துடன் பிரமநாயகம் பிள்ளை தமது வாழ்வின் ஜீவனோபாய வசதிகளை, தேவை என்ற எல்லை காணமுடியாத பாலைவனத்தைப் பாசனம் செய்ய, தவைண என்ற வடிகால்களை உபயோகிக்கிறார்.

வறுமையின் துயரம் பற்றிச் சொல்லப்பட்ட கதை எனினும் அதன் துக்கங்களும், கழிவிரக்கங்களும் இல்லாது பிரமநாயகம் பிள்ளைக்கும் செல்லம்மாளுக்கும் இடையே இருக்கும் காதலைப் பற்றிச் சொல்லப்படும் கதை. வறுமையும் மன உளைச்சல்களுமே அவளது வியாதிக்குக் காரணம் எனும்போது பிரமநாயகம் பிள்ளையின் குற்ற உணர்ச்சி புரிந்துகொள்ளக்கூடியதே. ஊரிலிருந்த தகப்பனது கடனை அடைக்க முடியாது சென்னைக்கு வருபவர் ஒரு ஜவுளிக்கடையில் வேலை செய்கிறார். வேலைக்குச் செல்லும் கணவனை வழியனுப்பி தாழ்ப்பாள் கூடப்போடமுடியாதவள் செல்லம்மாள்.

செல்லம்மாளுக்கு உடம்பு இற்றுப் போயிற்று. இடைவிடாத மன உளைச்சலும் பட்டினியும் சேர்ந்து நோய் அவளைக் கிடத்திவிடும்.

கடும் ஜுரத்தில் செல்லம்மாள் ஊருக்குப்போவதைப் பற்றிப் பிதற்றுவது தனிமை பற்றிய குறிப்பாக இருந்தாலும், இறந்துபோன தன் தாயோடு பேசுவது விளங்கக்கூடியதாக இல்லை. அவளது தனிமைக்கு வடிகாலாக இருக்கலாம். அந்த சமயத்தில் தாயாக நடிக்கும் பிரமநாயகம் எதிர்பார்ப்பற்ற அன்பைக் காட்டி நிற்கிறார். செல்லம்மாளின் வியாதி ஒரு ரணமாக அவளைச் சாகடிப்பதிலிருந்து ஒரு விடுதலையை எதிர்பார்த்தபடி இருக்கிறார். செல்லம்மாள் இறந்தபின், பிரமநாயகம் கலக்கமடையாமல் உச்சகட்ட மன ஒருமையோடு கிரியைகளை மேற்கொள்வது அவரது விடுதலையின் அடையாளம். செல்லம்மாளுக்குக் கிடைத்த விடுதலையில் பிரமநாயகம் மனபாரம் குறைந்தவராக ஆகிறார்.

“செல்லம்மாள் இவ்வளவு கனமில்லையே; என்னமாக் கனக்கிறது!” என்று எண்ணமிட்டார்.

கிரி சற்றே இடைவெளி விடுகிறார். அனைவரும் மவுனமாகவும் மானசீகமாகவும் கிரியைத் தொடர்ந்து கவனித்துக்கொண்டிருக்கிறார்கள்.
“நண்பர்களே, இன்னொரு கோணம் – காலம், இடம் சார்ந்த பார்வையில் செல்லம்மாளின் வியாதியைப் பார்க்கலாம். கடும் ஜுரத்தில் அவள் பிரமநாயகத்தின் காலத்தில் இருப்பதில்லை. அவள் இருக்கும் இடத்தில் இறந்து போன தாயுடன் பேசுகிறாள் – தன்னை இங்கிருந்து ஊருக்குக் கூட்டிச் செல்லக் கேட்கிறாள். இது ஒரு கால நகர்வின் பார்வை. அவள் அம்மாவுடன் பேசும் காலத்தில் பிரமநாயகம் அங்கில்லை. முடிவில் அவள் உயிர் பிரிந்து உடல் மட்டும் இருக்கும் காலத்தில் கூடவே இருக்கிறார். இருவரும் சேர்ந்திருக்கும் காலத்தில் அவர்களிடையே இருக்கும் அன்பு மிகுந்து வெளிப்படுகிறது. இது இரட்டை நிலையா? பிரம்மநாயகத்தைச் சமையற்கட்டில் வேலை செய்யக்கூடாது வேலைக்குப் போங்கள் எனச் சொல்பவள், இவர் என்னைத் தனியே விட்டுவிட்டு வெளியே சென்று விடுகிறார் என அரற்றுகிறாள் – இது அவளது ரெட்டை வேஷமா? இங்கு தான் இக்கதையின் கடைசி வரி பொருந்திப்போகிறது என்று தோன்றுகிறது…

மனசில் வருத்தமில்லாமல், பிலாக்கணம் தொடுக்கும் ஒரு பெண்ணின் அழுகையில் வெளிப்பட்ட வேஷத்தை மறைப்பதற்கு வெளியில் இரட்டைச் சங்கு பிலாக்கணம் தொடுத்தது.

உடம்புக்குப் பணிவிடை செய்தபின் வெளியே வந்து எட்டிப்பார்க்கிறார்.

வானத்திலே தறிகெட்டுச் சிதறிக் கிடந்த நட்சத்திரங்களில் திரிசங்கு கிரகமண்டலம் அவர் கண்ணில் பட்டது. அவருக்கு வான சாஸ்திரம் தெரியாது. சங்கு மண்டலத்தின் கால், தூரத்தில் தெரிந்த கறுப்பு ஊசிக்க் கோபுரத்தில் மாட்டிக் கொண்டு அஸ்தமிக்கேவா உதயமாகேவா முடியாமல் தவித்தது.

சங்கு மண்டலம் crux எனப்படும் நட்சத்திரக்கூட்டம். நமது புராணத்தில் அது திரிசங்கு சொர்க்கம் – அங்கும் போக முடியாமல் இங்கும் வரமுடியாமல் நடக்கும் ஊசலாட்டத்தைக் குறிக்கிறது. இங்கு செல்லம்மாளின் மனநிலை அப்படிப்பட்டது தான். அவளது சமூக மனம் கணவன் வேலைக்குச் அனுப்ப நினைக்கிறது, உடல் வியாதியும் மனமும் தனிமையை உணர்ந்து தவிக்கிறது“
ஸ்கைப்பில் இணைந்திருக்கும் யாரோ ஒருவர் விடும் மூச்சு சற்றே விகாரமாக ஒலிக்கிறது. இன்னொருவரின் பின்னணியில் கைக்குழந்தை சிரிக்கும் சத்தமும் அனைவருக்கும் கேட்க கிடைக்கிறது.
இப்போது பிரபு, “நண்பர்களே,

வைத்த கையை மாற்றாமல் பூதாகரமாக சுவரில் விழுந்த தமது சாயையை பார்த்தார். அதன் கைகள் செல்லம்மாள் நெஞ்சைத் தோண்டி உயிரை பிடுங்குவது போல் இருந்தன.

இந்த வரியை வைத்து இது பொருந்தாத உறவு குறித்த கதையாக வேதசகாயகுமார் போன்றவர்கள் வாசித்ததாக ஜெயமோகன் சொல்லியுள்ளார்.
இத்துடன் சேர்த்து செல்லம்மாள் பிதற்றும் பகுதிகளையும் சேர்த்து படித்தால் இது அன்னியோனியம் மட்டுமல்ல, முரண்பாடும் மோதலும் உள்ளடக்கிய ஒரு உறவினை சொல்லும் கதையாகவும் நாம் வாசிக்க முடியும்” என்று முடிக்கிறார்.
சிவாகி மெலிதாகக் கனைத்துக்கொள்கிறார். அவர் பேச ஆரம்பிக்கப் போகிறார் என்று அனைவருக்கும் புரிந்துவிடுகிறது.
அதற்கு முன் சிரில், “ எனக்கு கதையின் இறுதியில் பிரம்ம நாயகம் இறந்துவிடுவதாகப் படுகிறது”.
இந்தப் பார்வை அனைவரையும் சற்றே ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது.
சிவாகி “அப்படியா சொல்கிறீர்கள்? இதற்கு கதையில் எங்கும் குறிப்புகளே தென்படவில்லையே!”

சிரில் “ஆனால் அந்த இரவு முழுவதும் விடியல் நட்சத்திரங்கள் வரைக்கும் அங்கே இருந்த பிரமநாயகம் பிள்ளை விடியலில் அந்தப் பெண் ஒப்பாரி வைக்கையில் எங்கிருக்கிறார் என்பது குறிப்பிடப்படவில்லை. கதை செல்லம்மாள் எனப் பெயரிடப்பட்டிருந்தாலும் முழுக்க முழுக்க பிரமநாயகமே வியாபித்து நிற்கும் கதையின் முடிவில் அவர் குறிப்பிடப்படாததும் ‘இரட்டைச் சங்கு’ என்பது இரண்டு மரணங்களை குறிப்பதாக இருக்கலாம்”
பிரபு, “அப்படி ஒரு சடங்கு முறை இருக்குமென்றால் அதை அப்படிக் கருத வாய்ப்புண்டு.”

சிவாகி, “கதையில் வெளிப்படையாக தெரியும் விஷயங்களைத் தாண்டி, சொல்லப்படாத (இடைவெளி விடப்பட்ட) இடங்களைப் பற்றி கூர்மையான வாசகன் நோக்குவான்தான். ஆனாலும் எனக்கு இன்னும் இந்தக் கோணம் ஏற்புடையதாகப் படவில்லை” என்று சட்டெனச் சொல்கிறார்.

சிரில், “ செல்லம்மாளுக்குப் பின் பிரமநாயகம் வாழ்வதில் என்ன அர்த்தம் உள்ளது?” என வினவினார்.

சிலர் அதை ஆமோதிப்பதைப் போலவும் சிலர் மறுத்ததைப்போலவும் தோன்றியது. நிச்சயம் எல்லோரையும் யோசிக்க வைக்கிறது இந்தக் கோணம்.

இறுதியாக சிவாகி,

“நண்பர்களே, நாம் அனைவரும் திரு.புதுமைப்பித்தன் அவர்களின் முக்கிய படைப்புகளில் சிலவற்றையாவது நிச்சயம் படித்திருப்போம். 80களில் பள்ளி சென்றவர்கள் நிச்சயம் பதினோராம் வகுப்பு துணைப்பாட நூலில் “ஒரு நாள் கழிந்தது” என்ற சிறுகதையைப் படித்திருப்பார்கள். ஒண்டுக்குடித்தனத்து வறுமையின் அவலத்தை எள்ளலாகவே சொல்லியிருப்பார். அதுவரை நாம் படித்திருந்த கதைகளிலிருந்து மிகுந்த வித்தியாசமாக பட்டிருக்கும் அந்த கதை. அவர் கதைகளில் பொதுவாகத் தெரியும் வறுமை, அதை மெல்லிய எள்ளலாகவே சொல்லிப்போகும் திறனை இந்தக் கதையிலும் நான் காண்கிறேன். ஆனால் திருவல்லிக்கேணி பிரம்மாச்சாரி மெஸ்ஸில் போடப்படும் அளவுச்சாப்பாடு அளவாக எல்லை மீறாமல் இருக்கிறது. 1943ல் எழுதிய நடை என்று நம்பவே முடியவில்லை. எழுதினவுடன் ஏதோ பெரும் பனிச்சரிவில் புதைந்ததை நாம் அழியாச்சுடர் தளத்தில் வழியாக தற்போது வாசிப்பது போன்று அத்தனை புதிதான நடை.

“கதையின் முடிவில் ஒரு கவித்துவம் மிக்க வாக்கியத்தைக் கவனித்திருப்பீர்கள்”

இப்போது கிரி ஏதோ சொல்ல வருகிறார். ஆனால் சிவாகி தொடர்வதைக் கேட்டு நிறுத்திவிடுகிறார்.

“ஆம் கிரி, கதை முழுவதுமே கவித்துவம் இருந்து கொண்டே இருக்கின்றது. இருந்தும் அந்த வாக்கியம், நீங்கள் கூட குறிப்பிட்டீர்களே “சங்கு மண்டலத்தின் கால், தூரத்தில் தெரிந்த கறுப்பு ஊசிக் கோபுரத்தில் மாட்டிக் கொண்டு அஸ்தமிக்கேவா உதயமாகேவா முடியாமல் தவித்தது.”

“எங்கோ இருக்கும் சங்கு மண்டலமும் சற்று தூரத்தில் தெரியும் கருப்பு ஊசிக்கோபுரமும் சேர்ந்து தெரிவதை குறிப்பிடும் இடம்…மனம் கனக்கிறது, நண்பர்களே”

‘…’

“கடும் துயரத்தை, ஒரு மனிதன் தன் வாழ்நாளில் எப்போதுமே நேர்கொள்ள விரும்பாத துயரத்தை, அவலத்தை கதை முழுவதும் பொறுமையாக விவரித்துக்கொண்டு வந்தாலும் வாசகன் அந்த சோகத்தை வெளிப்படையாக ஓவென, கூச்சலாக, வெளிப்படையாக உணர்வதில்லை. கடும் துயரத்தில் மண்டியிட்ட மனிதனின் மூடிய கண்களுக்குள் திரண்டிருக்கும் கண்ணீர் துளிகளாகத்தான் உணர்கிறான். ஆம், மூடிய கண்கள் என்றாலும் கண்ணீரின் வெம்மை…”

ஸ்கைப்பின் கரகர ஒலி அந்த நள்ளிரவில் தொடர்ந்து கொண்டிருக்கிறது…

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.