அவர்களுக்கிடையே

Yang_Xianyi_and_Gladys_Taylor

வாங் அன் யீ மற்றும் கிளாடிஸ் யாங்

 
சைக்கிள்கள் அந்தக் குறுக்குச் சந்தில்  மணிச் சத்தம் எழுப்பியபடி வந்து கொண்டும் ,போய்க் கொண்டும் இருந்தன. வரிசையாக நவீன வீடுகள் அந்தத் தெருவில் இருந்த போதும். தெரு முடிவில் மனிதர்கள் சிறு வீடுகளையும் கட்டியிருந்தனர் .அவைகளுக்கு எரிவாயு தொடர்பு இல்லை. ஸ்டவ் ,சுள்ளி என்று அடுப்புகளை அவர்கள் பயன்படுத்தியதால் எங்கும் புகை படர்ந்திருந் தது.ஒரு சிறுவன் புகையும் அடுப்பின் முன்னால் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.முதலில் மாமிசத்தைச் சுற்றி இருந்த பகுதியைச்  சாப்பிட்டு விட்டு மீதமானதை பெரிய பாத்திரத்தில் போட்டு விட்டு அதிலிருந்த கறி உருண்டைகளை ஒவ்வொன்றாகச் சாப்பிடத் தொடங்கினான்.
“நீ போன ஜன்மத்தில் இறைச்சி  என்பதையே சாப்பிட்டதில்லையா?” தாத்தா உறுமினார். அவர் பெரிய பாத்திரத்தில் உள்ள கெட்டியான கஞ்சியைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.
அந்தச் சிறுவன் இறைச்சியை  வாயில் திணித்துக் கொண்டிருந்தான்.
“அவன் பன்றியைப் போல அடைத்துக் கொள்கிறான் பாருங்கள் “ எதிரிலிருந்த பாட்டி சொன்னாள்.அவள் அடுப்பை எரிய வைக்கப் போராடியதால் கரும்புகை சூழ்ந்திருந்தது.
“நான் அவனுக்கு இறைச்சியே கொடுத்ததில்லை. போன ஜன்மத்தில் பட்டினி கிடந்து அவன் செத்திருக்க வேண்டும் ” தாத்தா சொல்லியபடி கையிலிருந்த கம்பால் சிறுவனின் தலையில் தட்டினார்.
அப்போது அந்தச் சந்தில் ஒரு பெண் தன் பைக்கோடு போனாள். தாத்தா காறித் துப்பினார். அது வண்டியின் கேரியரில் பட்டது. இந்த மாதிரி துல்லியமாக துப்புவதில் தேர்ந்தவர்.
சாப்பாடு முடிந்தது.சிறுவன் தலையில்  குல்லா அணிந்து கொண்டு ஓடினான். ஓடிய வேகத்தில் பாட்டியின் கால்களை மிதித்து விட்டான். “நீ குருடா? “ பாட்டி கோபத்தில் கத்தினாள்.
“செத்து ஒழி ” தாத்தாவும் கத்தினார்.
அதற்குள் சிறுவன் சிட்டாய்ப் பறந்து விட்டான்.பள்ளிக் கூடம் மிகவும் அருகில்தான். பத்து நிமிட இடைவெளி நேரத்தில் வந்து ஒரு உருண்டை சில்லிட்ட சோற்றை வாயில் அடைத்துக் கொண்டு ஓடுவான்.
கார் ஹாரன் போன்ற ஒலியை ஏற்படுத்திக் கொண்டு ஒடினான்.யார் காலையோ மிதித்து செருப்பு வெளியே வந்து ஒரு குழந்தையின் மேல் மோதி, தானே விழுந்து எழுந்து முட்டியைத் தட்டிக் கொண்டு ஓடினான். பள்ளிக் கூட கேட்டை அடைந்த போது வகுப்புத் தோழர்கள் இரண்டு பேர் அவனை நிறுத்தி கைக்குட்டை கேட்டனர். நன்றாக மடிக்கப் பட்ட ஆனால் அழுக்கான கறுப்பான கைக்குட்டையைத் தந்தான்.அது கைக்குட்டைதானா என்று பரிசோதிப்பது போல சிறிது யோசனைக்குப் பிறகு அவர்கள் அவனை விட்டனர்.
தடுத்து நிறுத்தப்பட்டதைக்  காட்டுவது போல மீண்டும் யார் மீதோ  மோதி னான். பல குரல்கள் எழுந்தன.
வாங் யாக்சின் மோதியது ஆசிரியர் ஜாங் மீது .
அவர் தன்னை சமாளித்துக் கொண்டார்.
அவன் அதிர்ந்து அவரைப் பார்த்தன்.  ஆசிரியர் சிரித்தார். “கவலைப் படாதே ! நீ வேண்டும் என்று செய்யவில்லையே “
அதைக் கேட்டுவிட்டு மீண்டும் ஓடினான்.
“வாங் யாக்சின் ! ஆசிரியரிடம் மன்னிப்பு கேள்! “ மற்ற குழந்தைகள் கத்தின.
ஆசிரியர் தன் கண்ணாடியைச் சரி செய்து கொண்டு கையில் உள்ள புத்தகங் களை அடுக்கியபடி தன் வழியில் நடந்தார்.
“காலை வணக்கம் ஐயா” இரண்டு பெண் குழந்தைகள் வரவேற்றன.
“வணக்கம்” என்று சிறிது வெட்கமாகவே சொன்னார்.
வரிசையாக குழந்தைகள் வணக்கம் சொல்லியபடி இருக்க அவர் ஆசிரியர்கள் அறையை அடைந்தார்.மணி அடித்த பிறகு குழந்தைகள் பெரும் சத்தத்தோடு விளையாட்டுத் திடலை அடைந்தனர். சிறிது அமைதி ஏற்பட்டது.ஒரு நிம்மதி யோடு கடையில் வாங்கி வந்திருந்த ரொட்டியில் சிறிது வெந்நீர் சேர்த்து சாப்பிடத் தொடங்கினார். அவர் வகுப்பு இரண்டாவது பீரியடிற்குப் பிறகுதான்.
“உங்கள் காலைச் சிற்றுண்டியா?” நண்பர் கேட்டார்
வாய் நிறைய அடைத்துக் கொண்டபடி “ ஆமாம் “ என்றார்.
“காலையில் சாப்பிடுவது கொஞ்சம் சிரமம் தான் “ என்றார் இன்னொருவர்.
’கஞ்சிதான் காலைச் சிற்றுண்டிக்குச் சரியானது “ என்றார் ஒருவர்.
“ம்ம்” சாப்பிடுவதை நிறுத்தி மிஞ்சியதைத் தாளில் சுற்றிப் பையில் வைத்தார்.
உடற்பயிற்சி ஆசிரியர் விளையாட்டுத் திடலில் சாக்பீசால் கோடுகள் போட் டுக் கொண்டிருந்தார். சூரிய ஒளி பரவியது. இந்தக் கோடுகளும், அவருடைய உடையும் சூரிய ஒளியில் மின்னின.ஒரு குருவி தத்தித் தத்தி நடந்தது. குழந்தைகள் மனப்பாடம் செய்த பாடலை இழுத்துக் கூட்டமாகப் பாடினர்.

oOo

மணி அடித்தது. எங்கும் கூச்சல் .குழந்தைகள் வகுப்பு அறையிலிருந்து விளையாட்டு மைதானத்தை நோக்கிப் போய் ,பின்பு பள்ளி கேட்டை அடைந்தனர்.
ஜாங் புத்தகத்தையும் சாக்பீசையும் எடுத்துக் கொண்டு ஆசிரியர் அறைக்குத் திரும்பினார். அங்கு ஒன்பதாம் வகுப்பு ஆசிரியர் தாவ்  வாங்கிடம் அறிவுரை சொல்லிக் கொண்டிருந்தார்.
“நேராக நில். இன்று வகுப்பு அறையில் எப்படி நடந்து கொண்டாய் என்று யோசித்துப் பார் ” சொல்லி விட்டு அவள் உணவு விடுதியை நோக்கித் தன் பையோடு போனாள்.
வாங் அவள் மேஜையின் முன்னால் நின்றுகொண்டு இடது காலை வலது கால் மேல் வைத்தும்,வலது காலை இடது கால் மேல் மாற்றி மாற்றி வைத்தும் நின்றான்.முதுகை கையால் சொறிய முயன்றும், சட்டைக் காலரை கீழே இழுக்கவும் முயன்றான். ஒருகணம் கூட அவனால் சும்மா இருக்க முடியவில்லை.
ஜாங் தன் மேஜையைத் திறந்து தன் உணவு டப்பாவை எடுத்துக் கொண்டு அவனைக் கடக்க முயன்ற போது அந்தச் சிறுவனின் வயிறு சத்தமிடுவது கேட்டது. அருகே குனிந்து ’ பசிக்கிறதா? “என்று கேட்டார்.
அவன் ஒன்றும் சொல்லாமல் அவரைப் பார்த்துச் சிரித்தான்.
“வகுப்பில் திரும்பவும் ரவுடித்தனம் செய்தாயா? ”
சிறுவன் சிரித்தபடி வெட்கமாகக்  குனிந்து கொண்டான்.
“உன்னால் சும்மா இருக்கவே முடியாதா?”
அவன் திரும்பவும் சிரித்தான்.
ஜாங் திரும்பத் தன்னிடத்திற்குப் போய்  பையிலிருந்த ரொட்டியை எடுத்து அவனிடம் கொடுத்தார்.
அதை வாங்க பயந்தவன் போல் பார்த்து விட்டு வாங்கிக் கொண்டான்.வாயில் திணித்துக் கொண்டு சுற்றுமுற்றும் பார்த்தான்.
அப்போது வயதான ஒருவர் நடக்க முடியாமல் தள்ளாடியபடி, சுருங்கிய கைகள்  நடுங்க  நடந்து வந்தார்.
“திரும்பவும் இவன் சேட்டை ஆரம்பித்து விட்டதா?”
“நீங்கள் அவன் தாத்தாவாக இருக்க வேண்டும்”ஆசிரியர் சொன்னார்.
“இந்த முறை என்ன செய்தான்?’
“சொல் வாங் ’ ஆசிரியர் சொன்னார்.
“சீன மொழி வகுப்பில் நான் இங்கும் அங்கும் பேசிக் கொண்டிருந்தேன்”.அவன் முனகியவாறு தலையைக் குனிந்து கொண்டு பயந்தவானாகச் சொன்னான்.
“திருட்டுப் பயலே “ திட்டியபடி தாத்தா தலையில் அடித்தார்.
ஜாங் அந்த முதியவரின் கையைப் பிடித்து தடுக்க முயன்றார். ஆனால் அவர் ஆசிரியரை விடத் தான் பலமானவர் என்று காண்பிப்பதைப் போலத் தன் கையை உயர்த்த இரண்டு பேரின் அடியும் சிறுவன் மேல் பட்டது.
“இது போதாது. இப்படி எல்லாம் இவனைத் திருத்த முடியாது”
முதியவர் அவனைச் சில அடிகள் அடித்தார் பிறகு “ சரி.போகட்டும் அவனை விட்டு விடுங்கள். வீட்டுக்குப் போய்ச் சாப்பிடட்டும்” என்று ஆசிரியரிடம் சொன்னார்.
ஜாங்கிற்கு இது போதும். இந்தச் சிக்கல் முடிந்தால் சரி.
“திரும்பவும் இது போல அவன் செய்தால் நீங்கள் அவனை நன்றாக அடியுங்கள். செத்தாலும் பரவாயில்லை.நான் எதுவும் சொல்ல மாட்டேன் “
ஐயோ எப்படிப் பேசுகிறார்!
“சரி. உங்களுக்கு நிறைய வேலை இருக்கும் .நான் இவனை அழைத்துப் போகிறேன்”
“அவருடன் போ ” ஜாங்கால் சொல்ல முடிந்தது அவ்வளவுதான்.
பேரனை இழுத்துக் கொண்டு போனார். ஜாங் தன் சாப்பாட்டை எடுத்துக் கொண்டு உணவு விடுதியை நோக்கி நடந்தார் .அங்கு ஆசிரியை தாவைப் பார்த்தார் .”வாங்கின்  தாத்தா அவனை அழைத்துக் கொண்டு போய் விட்டார்” என்றார்.
“வீட்டுக்கு அழைத்துப் போய் விட்டாரா?”ஆசிரியையின் கண்கள் கண்ணாடியிலிருந்து குதிப்பதைப் போல பார்த்தன.
“ஆமாம்” தலையைக் குனிந்து கொண்டு சொன்னார்.
“அனுமதி கொடுத்தீர்களா?’
“அவன் தாத்தா வந்தார்….”
“நான் அவருடன் பேச விரும்பினேன்”
’நான்…”
“பரவாயில்லை.போகட்டும். நீங்கள் காப்பாற்றி விட்டீர்கள். சரி. நீங்கள் கதாநாயகனாகி விட்டீர்கள். நான் வில்லியாக இருக்க விரும்பவில்லை.நான் அவனைக் கை கழுவி விட்டேன். இனி நீங்கள் பொறுப்பு எடுத்துக் கொள்ளுங்கள் ” பிணங்கிக் கொண்டு போனார் ஆசிரியை.
ஒரு கோபமான நிலையில் அவர் விடுதியை விட்டு வெளியே வந்தார். பசி மறைந்தது.
இதற்கிடையே வாங்  உணவை விழுங்கிக் கொண்டிருந்தான். துணி துவைத்துக் கொண்டிருந்த பாட்டி அவன் சப்தத்தோடு சாப்பிடுவதைப் பார்த்தாள்.
“இவன் சாப்பிடுவதைப் பார்ப்பது வெறுப்பாக அல்லவா இருக்கிறது ”என்று துணி தைத்துக் கொண்டிருந்த பக்கத்து வீட்டுப் பெண்ணிடம் சலித்துக் கொண்டாள்.
“அவன் முகமே பார்க்கச் சகிக்கவில்லை ”அந்தப் பெண்ணும் ஆமோதித்தாள்.
“அவன் காதுகள் சிறியவை.அவன் புருவமும், வாயோரமும் சேரும் போது அழுவது போல இருக்கிறது.”
“அது சரிதான். அவன் பிறந்த அன்று ஒரு நிமிடம் கூட விடாமல் அழுது அம்மாவைக் கொன்று விட்டான்.அப்புறம் அழுகை ஒரேயடியாய் நின்றதுதான் வினோதம். தாத்தா அடிக்கும் போது கூட அவன் அழுவதில்லை”.
வாங்கிற்கு வயிறு நிரம்பியது.அருகில் இருந்த பானையில் இருந்து அரிசியை வாயில் அள்ளிப் போட்டுக் கொண்டு போனான்.

oOo

பைக்குகள், கார்கள் ஹாரனை அடித்துக் கொண்டு கடந்தன. ஜாங் பஸ்சில் அடித்துப் பிடித்து ஏறினார் . கதவு மூடியது.அவர் ஜாக்கெட் கதவிடுக்கில்  சிக்கிக் கொண்டது.
“என் ஜாக்கெட் சிக்கிக் கொண்டு விட்டது ” என்றார் அவர். ”தயவு செய்து டிக்கெட் வாங்குங்கள். அல்லது உங்களது பாசைக் காட்டுங்கள் “ என்றார் கண்டக்டர். அதில் வாங் குரல் அமுங்கியது.
அவர் அமைதியானார். நல்ல வேளை. கீழ்ப் பகுதி சிக்கவில்லை.
“நீங்கள் இறங்கவில்லை என்றால் நாம் இடத்தை மாற்றிக் கொள்ளலாம்” என்று ஒரு பெண் சொல்லி விட்டு அவரைத் தள்ளிக் கொண்டு போனாள்.
அவர் முன்னே போக முயன்றார். முடியவில்லை.”நான் அடுத்த நிறுத்தத்தில் முதலில் இறங்கி விடுகிறேன் ”என்றார் மன்னிப்புக் கேட்பது போல.
அந்தப் பெண் அவரைத் தள்ளிக் கொண்டு சென்ற போது  அவள் ஸ்வெட்டர்  விலக கழுத்தில் இருந்த நெக்லசை அவர் பார்க்க நேர்ந்தது.அவர் இதயம் துடித்தது, அவளைப் பார்ப்பதைத் தவிர்த்து தலையைத் திருப்பிக் கொண்டார்.
திடீரென்று ஒரு குழப்பம் பஸ்சில்.ஒரு பயணியின் பர்ஸ் தொலைந்து விட்டது.
“யார் எடுத்திருந்தாலும் கொடுத்து விடுங்கள். இல்லாவிட்டால் போலீஸ் நிலையம் போக வேண்டியிருக்கும்” கண்டக்டர் கத்தினார்.
“சீக்கிரம் கொடுத்து விடுங்கள் சீக்கிரம்.. வேலைக்குப் போக தாமதமாகிவிடும்” என்று சில பயணிகள் கத்தினர்.
“எல்லோரும் குனிந்து கீழே கிடக்கிறதா என்று பாருங்கள்”
ஒருவர் மீது ஒருவர் மோதிக் கொண்டு  குனிந்து பார்த்தார்கள்.
அவருடைய இதயத் துடிப்பு வேகமானது.முகம் வெளுத்தது.வலிந்து சிரித்தார். அது பொருத்தமில்லாமல் இருந்தது.ஒரு பெண் அவரைப் பார்த்த பார்வை பயத்தை தந்தது. வியர்வை வழிந்தது.
“பர்ஸ் கிடைத்து விட்டது”என்றார் ஒருவர்.
“எல்லாம் இருக்கிறதா பாருங்கள் “
“எதுவும் தொலையவில்லை..”
அவருக்கு மூச்சு வந்தது. இன்னும் அந்தப் பெண் அவரையே பார்த்தாள்.கதவு திறந்தது.நிஜமாகவே அவர் கீழே விழுந்தார்.அவள் பஸ்ஸை விட்டு இறங்கி திரும்பவும் அவரைப் பார்த்து விட்டுப் போனாள்.
பள்ளிக் கூடத்தை அடைந்த போது வாங்கை கேட் அருகில் பார்த்தார். ”வாங்.உன்னிடம் ஒன்று சொல்ல வேண்டும்”
வாங் நின்றான்.முதலில் காலரைத் தொட்டு பின் முதுகைச் சொறிந்தான்.
“நீ வகுப்பு அறையில் சும்மாவே  இருக்க மாட்டாயா?”
அவன் எதுவும் சொல்லாமல் குறும்பாகச் சிரித்தான்.
“நீ எதற்காக அப்படிச் சத்தம் போடுகிறாய்?”
தலைக்குள் எல்லாவற்றையும் சேர்ப்பது போல உறிஞ்சி இன்னமும் சிரித்த படி இருந்தான்.
“நேற்று உன்னைச் சாப்பாடு நேரத்தில் வீட்டுக்கு அனுப்பியதால் உன் வகுப்பு ஆசிரியை என்னிடம் கோபப்பட்டார் ” இதை அவர் சிறுவனிடம் வெளிப்படை யாகச் சொல்ல வேண்டியிருந்தது.
அவன் குழம்பியவன் போலப் பார்த்தான்.
“நீ இது போல மோசமாக நடந்து கொள்வது எனக்குத்தான் கெட்ட பெயரைத் தரும் ”.இதைச் சாதாரணமாகச் சொல்லி விட்டு அவன் தலையைக் கோதி விட்டு நடந்தார்.
“தலைமை ஆசிரியர் உடனடியாக உங்களைப் பார்க்க விரும்புகிறார்”யாரோ சொன்னார்கள்.
“என்னையா?” பையை வைத்து விட்டு அலுவலகத்திற்குச் சென்றார்.
“வாருங்கள் ஜாங் .உட்காருங்கள். “அந்த மென்மை பயமுறுத்திற்று.
“சொல்லுங்கள் ஐயா என்றார் ” இருக்கையின் நுனியில் உட்கார்ந்தபடி.
தலைமை ஆசிரியர் டிராயரைத் திறந்து  ஒரு பேப்பரை அவரிடம் தந்து “படியுங்கள்”என்றார்.
அது அவர் தந்தை இருபது ஆண்டுகளுக்கு முன்பு வேலை செய்த இடத்தி லிருந்து வந்த அதிகாரபூர்வ கடிதம்.  அது போராளி என்று முத்திரை குத்தப் பட்ட தந்தை குற்றவாளி இல்லை என்பதைச் சொல்லியது. அவரைப் பொறுத்த வரை மிக இளைய வயதில் குடும்பத்தைப் பிரிந்து இறந்து விட்ட தந்தை ஒரு வழிப் போக்கர் போல்தான். ”உன் தந்தை மிகவும் வித்தியாச மானவர். அவர் மட்டும் உன்னைப் போல் இருந்தால் எந்தச் சிக்கலும் வந்தி ருக்காது “என்று அவருடன் வேலை செய்தவர்கள் சொல்லி இருக்கின்றனர். அவர் சிறுவயது முதலே எங்கு போனாலும்,அவருக்குப் பின்னால் “அந்த முதியவரின்.. “என்று சுட்டிக் காட்டுவார்கள்.
“அந்த முதியவர்..”
“பாராட்டுக்கள்!” தலைமை ஆசிரியர் அவர் கையைக் குலுக்கினார்.ஜாங் எழுந்து நின்று மரியாதை செலுத்தி விட்டு உட்கார்ந்தார். ” உங்கள்  தந்தை பற்றி இருந்த கடந்த காலக் குறிப்புகளை உங்கள் ஆவணத்தில் இருந்து நீக்கி  விடுவோம்.இனி  நீங்கள் எந்தக் கவலையும் இல்லாமல் வேலை செய்ய லாம்” என்றார்.
“ஆமாம்! அது இப்போது சரித்திரமாகி விட்டது”என்று ஜாங் பதில் சொன்னார்.
“அது முடிந்து போன கடந்த காலம். இனி எதிர்காலத்தைப் பார்க்கலாம்” என்றார் தலைமை ஆசிரியரும்.
அவர் ஆசிரியர்கள் அறைக்குச் சென்று டீ குடித்தார். உள்ளாடைகள் நனைந் திருப்பதை அவரால் உணர முடிந்தது.மணி அடித்தது. கூச்சல்..அடுத்த நிமிடத் தில் விளையாட்டு மைதானம் குழந்தைகளால் நிரம்பியது.மாணவிகள் கயிறு தாண்டி விளையாட , மாணவர்கள் இங்குமங்கும் ஓடிக் கொண்டிருந்தனர். ஆசிரியை தாவ் வந்தார்.முகம் இறுகி இருந்தது.அவர் டீ குடிப்பதை நிறுத்தி னார். அவர் நேரடியாகச் சென்று ,எதுவும் பேசாமல் தன் இடத்தில் அமர்ந்தார். அவரிடம் எதுவும் கேட்கும் தைரியம் இல்லாமல் எங்கோ பார்த்தபடி டீயைப் பருகினார். பிறகு வெளியே போனார்.அப்போது வாங் ஓடி வர அவனை நிறுத்தினார்
“வாங்.திரும்பவும் வகுப்பில் நீ ஆரம்பித்து விட்டாயா?”
“இல்லை ” வியப்பாக அவரைப் பார்த்தபடி சொன்னான்.
“தாவ் கோபமாக இருக்கிறார்” ரகசியம் போல் சொன்னார்.
“என்னிடம் கோபமில்லை. வகுப்பில் என்னைப் பற்றிப் பெருமையாகப் பேசினார்”
“என்ன பேசினார்?’ சிறுவன் கேலியை பாராட்டாக எடுத்துக் கொண்டு விட்டானோ என்று சந்தேகித்தார்.
“தாவ் மிங்கிடம் என்னைச் சுட்டிக் காட்டி அவன் கூட அமைதியாக இருக்கிறான். நீ இப்போது ஆரம்பித்து விட்டாய் ” என்று சொல்லி விட்டு முன்பல்,பின்பல் தெரியச் சிரித்தான் வாயெல்லாம் பல் நிரம்பி யிருப்பது போல தெரிந்தது.அவனைப் பார்த்து பரிதாபப் படாமல் இருக்க முடியாது.

oOo

ஜாங் அதிக நேரம் தூங்கி விட்டார். விழித்துப் பார்த்த போது பழைய அந்த கடிகாரம் மணி ஏழானதைக் காட்டியது.காலைச் சிற்றுண்டி வாங்கக் கூட நேரமில்லாமல் பஸ் பிடிக்க ஓடினார்.அவர் பள்ளிக்குப் போன போது யாரும் இல்லை நிசப்தமாக இருந்தது .யாரிடமோ கேட்ட போது அப்போதுதான் மணி ஆறு என்று சொன்னார்கள்.. தன் கடிகாரம் ஒரு மணி நேரம் அதிகம் காட்டி யுள்ளது தெரிய வந்தது.ஆசிரியர் அறையின் தன் பொருட்களை வைத்த போது சூப்பின் வாசம் வந்தது .குடிக்க வேண்டும் போலிருக்க பள்ளியின் அருகில் இருந்த சிறிய உணவு விடுதிக்குப்  போனார். அங்கு நிறையப் பேர் இருந்தனர். சிலர் சாப்பிட்டுக் கொண்டும்,சிலர் வேடிக்கை பார்த்துக் கொண்டும்.. சிலர் அவரை வெறித்தனர்.
அவர் உள்ளே போவதா வேண்டாமா என்று குழம்பியவர் போல் நின்றார். காலியான இருக்கையைப் பார்ப்பது போல் நடக்க பல கண்கள் அவரை உற்று நோக்கின.
சில அடிகள் நடந்தார்.இரு வரிசைகள் இருந்தன. ஒன்று டிக்கெட் வாங்க. இன்னொன்று பண்டங்களைப் பெற்றுக் கொள்ள.. பர்ஸை வெளியே எடுத்துக் கொண்டு கவுண்டர் அருகே போனார்.
“ஸார் ’யாரோ கூப்பிட்டார்கள்.
திரும்பிப் பார்த்தார். வாங் வரிசையில் இருந்தான். கவுண்டர் அருகேயும் சென்று விட்டான்.
“ஸார் ! வேகமாக வாருங்கள் “என்றான்.
அவர் அவனைப் பார்த்துச் சிரித்தார். இதைச் செய்வதைக் காட்டிலும் சொல்வது எளிது.
வரிசையில் நின்று கொண்டிருந்த வாங் குச்சியைப் பல்லில் வைத்துச் தேய்த்தான்.
“வாங்..வாயிலிருந்து அதை எடுத்து விடு.அது உன் தொண்டையைக் கிழித்து விடும் .”என்றார்.
உடனே அதை எடுத்து விட்ட வாங் அவரிடம் வேகமாக கவுண்டருக்கு வரும்படி கத்தினான்.
அவருக்கு முன்னால் மூன்று பேர் வரிசையில் இருந்தனர்.
வாங்  கவுண்டர் முன்னால் நின்றான்..கையில் இருந்த டிக்கெட்டைக்  கொடுத்தான்.. தின்பண்டம் தரப்பட்டது. கையில் எடுக்காமல் அதில் இருந்த எண்ணெயை உற்றுப் பார்த்தான்.
“வேகமாக எடு “ அந்தப் பெண் சொன்னாள்.
“மிகவும் சூடாக இருக்கிறது”.
“இவ்வளவு நேரத்திற்கு சூடு இருக்காது “என்றார் ஒருவர்
“நான் சிறுவன் . எனக்கு பயம் “ என்று சொல்லி விட்டு ஜாங்கைப் பார்த்து “வேகமாக வாருங்கள் “என்றான்.
“நீ எல்லோருக்காகவும் வாங்க முடியாது.” வரிசையில் நின்ற சிலர் சொல்லி யபடி அவனைத் தள்ளினர். அப்போதுதான் அவருக்குப் புரிந்தது ஏன் அவரைப் பார்த்து அவன் சிரித்தான் என்று.” நான் வரிசையில் வந்து வாங்கிக் கொள் கிறேன்.அதிகக் கூட்டமில்லை”என்றார்.
“என்னுடையதை எடுத்துக் கொள்ளுங்கள். நான் திரும்ப வரிசையில் வருகிறேன்”
“வேண்டாம் வேண்டாம்”
வாங் அதில் அவரைப் பார்த்து சிறிதைத்  தூக்கிப் போட்டு தன் எண்ணைய் கையை சட்டையில் துடைத்துக் கொண்டான். ஜாங் அதை பிடித்துக்  கொண் டார். கையில் உள்ள காகிதத்தில் சுற்றி வைத்தார். நடந்து கொண்டே திரும் பிப் பார்த்த போது வாங் கையில் உள்ளதைத் தின்றபடி மீண்டும் வரிசையில் நிற்பதைப் பார்த்தார்.அவன் தொடர்ந்து அதைச் சாப்பிட்டபடி நின்றான்.
இடைவேளை நேரத்தின் போது ஆசிரியர்கள் அறை வேகமாகத் திறக்கப் பட்டது. இரு சிறுமிகள் ஒரு அழும்  சிறுமியை அழைத்து வந்தனர். சிறுவர்கள் கூட்டம் வாங் பின் தொடர தாவின் மேஜையை நோக்கி நடந்தனர்.அந்தச் சிறுவர்கள் அனைவரும் சிறுமியைத் தள்ளி விட்டு அவள் மீது விழுந்ததில் அவள் கை தூக்க முடியாமல் இருந்தது. தாவ் இதை விசாரிக்க நேரம் இல்லாமல் சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். திரும்பி வந்து சிறுமியின் கை முறிந்து போனதைத் தெரிவித்தார்.
பள்ளி நேரம் முடிந்த்தும் தாவ் சிறுவர்களை அழைத்து அது எப்படி நடந்தது என்று விசாரித்தார்.வாங் அவர்களோடு இருந்ததால் ஜாங் அவனைச் சந்தே கித்தார்.
“ஏன் அவளைத் தள்ளி விட்டாய்?”
“நாங்கள் வேண்டுமென்றே செய்யவில்லை”
“ஏன் பிறகு தள்ளினீர்கள்?”
”சும்மா.விளையாட்டுக்காக”
’அதில் என்ன வேடிக்கை இருக்கிறது?அது என்ன விளையாட்டா?யார் அதை ஆரம்பித்தது ? ” தாவ்  கத்தினார்
“வாங்தான் என்னைத் தள்ளினான்” மிங் முதலில் சொன்னான்.
“ஜு யான் தள்ளினான்”என்றான் வாங்
“பெங் தள்ளினான் “ என்றான் ஜுயான்
“லூ ஹாங் தள்ளினான் “என்றான் பெங்
“மெங் தள்ளினான் “என்றான் லூ
’வாங் தள்ளினான் “என்றான் மெங்
“இப்படி எல்லோரும் ஒரு வட்டம் போல விளையாடி இருக்கிறீர்கள் “என்று சொல்லி தாவ் சிரித்தார்.
ஆனால் யார் இதை ஆரம்பித்தது ? கண்டுபிடிப்பது கடினம்தான்.எனவே சிறுமிக்கு ஆகும் மருத்துவச் செலவுகளை அவர்கள் சமமாகப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று முடிவு செய்யப் பட்டது.தாவ் வகுப்பு ஆசிரியர் என்பதால் ஒரு பங்கைக் கொடுத்து விட்டார்..
“வீட்டிற்குப் போய் இதைப் பெற்றோரிடம் சொல்லுங்கள் .புரிகிறதா? நான் ரசீதுகளை உங்களிடம் காண்பித்து பணம் வாங்கிக் கொள்வேன் .நீங்கள் போகலாம்”
ஆசிரியர்கள் அறையை விட்டு வெளியே போன பிறகு மாணவர்கள் கேலி செய்து கொண்டும் , தாவியும் ஓடினர்.
ஜாங் அவர்களை அனுப்பி விட்டு வாங்கை நிறுத்தினார்.
“ஓ..நீ திரும்பவும் மாட்டிக் கொண்டாய்”.
அவன் சிரித்தான். வெட்கமில்லாதவன்
“நீ இப்படிச் செய்வதை நிறுத்தவே மாட்டாயா?:”
இன்னமும் சிரித்தான்.
“உன்னால் மருத்துவ செலவுக்குப் பணத்தைத் தர முடியுமா?”அந்தக் கேள்வி அவன் சிரிப்பை மறைத்தது.
“நான் வேண்டுமானால் உன் தாத்தாவிடம் பேசட்டுமா? ”
“ஒரு பிரயோஜனமும் இல்லை. எங்களால் தர முடியாது”
“ஏன் கொடுக்க முடியாது? ”
“நேற்று என் அப்பாவைப் பார்த்து பணம் வாங்கி வரத்  தாத்தா போனார். அப்பா கொடுத்தது கொஞ்சம் தான் .தாத்தா அப்பாவைச் சபித்தார் ”.
“உன் அப்பா ஏன் அப்படி நடந்து கொள்கிறார் ?”
“அவர் மனைவி ஒரு பேய். அவள் சொல்வதைத் தான்  கேட்க வேண்டும். பாவம் அவர் ”.
“உனக்கு எப்படி இதெல்லாம் தெரிந்தது?”
“அதில் என்ன அதிசயம்?” சிரித்தான்
“உண்மையாக உங்களிடம் பணம் இல்லை என்றால் நான் உன் பங்கைத் தருகிறேன்”
“உண்மையாகவா? “அவன் கண்கள் தாழ்ந்தன.
“உண்மையாகத் தருவேன். ஆனால் நீ உன் சேட்டையை நிறுத்த வேண்டும்”
“சரி” சொல்லி விட்டு அவன் வேகமாக ஓடினான். .” உங்களுக்கு மாமிச சூப் வேண்டுமா?” என்ற கேள்வியோடு. ஆசிரியர் தன் மனதை மாற்றிக் கொண்டு விடுவாரோ என்பது போல.
“ஏன் கேட்கிறாய்?”
“நான் உங்களுக்காக வரிசையில் நிற்கலாம்.அடிக்கடி நான் காலையில் போய் சீட்டு வாங்குவேன். யாருக்குக் கிடைக்கவில்லையோ அவர்களுக்கு அதை நாற்பது சென்ட்டுக்கு மதியம் விற்பேன்.உங்களிடம் காசு வாங்க மாட்டேன்”
“நான் அதெல்லாம் சாப்பிடுவதில்லை “என்றார் ஜாங்.

oOo

பள்ளிக்கூடம் முடிந்த பிறகு வாங்கின் தாத்தா அவன் காதை ஒரு கையால் யால் இழுத்தும்  ,மற்றொரு கையில் அவன் ஆடைகளை கம்புக்குள் கோர்த்து வைத்திருப்பது  போலவும் அவனைக் கூட்டி வந்தார். தலையை ஒரு பக்கம் சாய்த்துக் கொண்டு அவனும் அவருக்கு இணையாக வேகமாக அடி எடுத்து வைத்தான். முரண்டு பிடித்தால் நிலைமை மோசமாகி விடு மென்று அவனுக்குத் தெரியும்.ஜாங்கை அவருக்குத் தெரியுமாதலால் நேராக அவரிடம் போனார்.
“ஐயா இவனைக் கண்டிக்க எனக்கு உதவுங்கள்.சாவின் வாசலில் என் ஒரு கால் இருக்கிறது. இவனை என்னால் அடிக்க முடியாது. நீங்கள் தான் எனக்கு உதவி செய்ய வேண்டும் ” இதை வேர்த்து விறுவிறுத்து அவர் சொன்னார். ஆசிரியர் அறையில் இருந்த எல்லா ஆசிரியர்களும் அவரை வெறித்தனர்.
“என்ன ஆயிற்று? உட்காருங்கள்” ஜாங் வருத்தமாக உணர்ந்தார்.
“எனக்கு உடல் நலமில்லை. அசைய முடியவில்லை. அரிசியைக் கழுவும்படி இவனிடம் சொன்னேன். மறுத்து ஒடி வந்து விட்டான்.” சொல்லியபடி கம்பை நீட்டினார். அவன் கயிற்றில் குதிப்பது போல குதித்தான்.
“வாங்!  இங்கே வா ! தாத்தாவிடம் மன்னிப்பு கேள்”
“ஸாரி ”முணுமுணுப்பாகச் சொன்னபடி ஒரு அடி முன்னே வந்தான்.
“மன்னிப்புக் கேட்பதால் என்ன பயன் ?அவன் எனக்கு உதவி செய்ய வேண்டும். நீங்கள் அவனைக் கொன்றாலும் நான் உங்களை நான் ஒன்றும் சொல்ல மாட்டேன்” சொல்லிவிட்டுக் கம்பை ஜாங்கிடம் தந்தார். அதை வைத்துக் கொண்டு என்ன செய்வதென்று ஜாங்கிற்குத் தெரியவில்லை.
“சரி தாத்தா.அவன் தன் தப்பை ஒப்புக் கொண்டு விட்டான்.வாங்! நான் செய்தது தப்பு என்று சொல் “என்று  சொன்னார்.
“நான் செய்த்து தப்பு ”  என்று சிறுவன் மெல்லிய குரலில் சொன்னான்.
“பாருங்கள்! அவன் உண்மையை உணர்ந்து விட்டான். இந்த முறை அவனை விட்டு விடுங்கள் .திரும்பவும் அவன் அப்படிச் செய்தால் நாம் அவனுக்குஒரு பாடம் கற்பிக்கலாம் ”அவர் சொன்ன பிறகு தாத்தாவும் அவனும் போய் விட்ட னர். மீண்டும் எதையோ எடுத்துப் போக வாங் வந்தான். அப்போது  “வாங் நீங்கள் சொன்னதைக் கேட்கிறான் ” என்று  சக ஆசிரியர் ஒருவர் சொன்னார்.
“இல்லை.அப்படியெல்லாமில்லை”
“அவன் உங்கள் மகனைப் போல நடந்து கொள்கிறான்.”
“இல்லையில்லை”அவர் மறுத்த போதும் அதைக் கேட்டு மகிழ்ந்தார்.பள்ளியை விட்டுப் புறப்படும் போது  வாங்கின் தாத்தாவிற்கு உடல் நலமில்லாததால் அவரைப் போய் பார்க்க விரும்பினார்.கடைக்குப் போய் ஜெல்லி டானிக் ஒன்றை வாங்கிக் கொண்டு அவர்கள் வீட்டுக்குப் போனார்.
போன போது பெரிய பாத்திரம் ஒன்றைக் கையில் வைத்திருந்தபடி வாங் நின்றான். அதற்குள் பக்கத்து வீட்டில் சண்டை போடும் சத்தம் வரவே . பாத்திரத்தைக்  கதவருகே வைத்து விட்டு அதைப் பார்க்க ஓடினான். ஜாங் அவனைத் திரும்ப அழைத்துக் கொண்டு  வீட்டிற்குள் வந்தார்.
அவர்கள் வீடு ஒரு கல் சுவற்றினை ஒட்டி கட்டப் பட்ட மர வீடாக இருந்தது.தாத்தா நூடுல்ஸ் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.வாங்கின் தட்டில் நூடுல்ஸும், ஊறுகாயும் ,கறியும் இருந்தன.
அதைப் பார்த்த போது அவருக்கு மகிழ்ச்சியாக இருந்தது. “வாங் .தாத்தா உன்னிடம் அன்பாக இருக்கிறார். நீ அவருக்கு  மரியாதை கொடுக்க வேண்டும் ” அந்தக் காட்சியால் கவரப் பட்டவராக ஜாங்  சொன்னார்.
“போன ஜன்மத்தில் நான் செய்த பாவம் இவரிடம் கடன் பட்டிருக்கிறேன். அதை நான் எப்போதும் அடைக்க முடியாது” சிறுவன் சொன்னான்.
அந்த பதில் ஜாங்கை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி மௌனமாக்கியது.
வெளியே இன்னொரு சண்டை ஆரம்பமானது.வாங் உட்கார முடியாமல் எழுந்தோடினான்.
“சனியன்  தன் அம்மாவை மூன்று வயதிலேயே முழுங்கி விட்டான். நான்தான் அவனை வளர்த்தேன்.என்னிடம் பணம் கிடையாது.ஆனால் நான் மாற்றாந் தாயைவிட நன்றாகப் பர்த்துக் கொள்வேன்.என்னுடைய ஒரே பயம் எனக்கு வயதாகி விட்டது என்பதுதான்”
“அப்படியெல்லாம் சொல்லாதீர்கள். நீங்கள் ஆரோக்கியமாகத் தான் இருக் கிறீர்கள் ”
“நான் போய் விட்ட பிறகு அவனுக்கு கஷ்ட காலம்தான்”
“இல்லை.அப்படியெல்லாம் ஆகாது .எல்லோரும் கவனித்துக் கொள்வார்கள்.”
ஓரக் கண்ணால் ஜாங்கைப் பார்த்தபடி “அவனுக்காக நான் கொஞ்சம் பணம் சேமித்து வைக்க ஆரம்பித்தேன். பணம் இருந்தால் பயம் வேண்டாம்.”என்றார்.
“அப்படியெல்லாமில்லை”
“என் வாழ்க்கையில் முப்பது வருடங்கள் ஷங்காய் கரையி பழைய தெருவிலும்.இப்போது இங்கு முப்பது வருடங்கள் இங்கும் இருந்திருக்கிறேன். எல்லோரையும் பார்த்திருக்கிறேன்.மனிதர்கள் மீன் போன்றவர்கள். பணம் தண்ணீர் போன்றது. தண்ணீரிலிருந்து வெளியே வந்தால் மீன் அவ்வளவுதான் ”
ஜாங் அமைதியாகத் தானிருக்க வேண்டும்.தாத்தாவின் அணுகுமுறை தவறு என்றாலும் எப்படி அதை மறுப்பது என்று அவருக்குத் தெரியவில்லை.அவருக்கும் சொல்வதற்கு நல்ல உருவகம் அவருக்கும்  கிடைக்க வேண்டுமே.
வெளியே சண்டை நின்றது.உள்ளே ஓடி வந்த வாங் தாத்தாவைப் பார்த்து “நம் குழுத் தலைவர் வந்திருக்கிறார் ”என்றான்.
“நான் போக வேண்டும் “ ஜாங் எழுந்தார்.
“போய் வாருங்கள்”
சிறுவன் அவரோடு வெளியே வந்தான். எதிரே ஒரு கூட்டம் நின்றிருந்தது.
“என்ன சண்டை? “
மோமியும் அவன் அக்காவும் சண்டை போடுகின்றனர். அவளுக்கு வேலை கிடைக்கவில்லை என்று. ஆனால் அது அவளுடைய தவறு இல்லை..”
“ஆமாம்.அது அவளுடைய தவறில்லை” ஜாங் ஒப்புக் கொண்டார்.
இருவரும் மெயின் ரோடுக்கு வந்தனர்.
“வீட்டுக்குப் போ”
“பரவாயில்லை”அவன் அவரோடு நடந்தான்.
“நீ வகுப்பில் இன்னமும் ஒழுங்காக நடந்து கொள்ள வேண்டும்.புரிகிறதா?;
“ஹூம்”
“வெளியிலும்தான் .சரியா?”
ஹும்”
சிறிது தூரம் அமைதியாக நடந்தனர்
“நீங்கள் ஏன் திருமணம் செய்து கொள்ளக் கூடாது”
“ஹ் ..அவர் வியப்புடன் அவனைப் பார்த்தார்.
“யாரையும் உங்களுக்குத் தெரியாதா?”
அவர் பேச்சிழந்தார். முகம் செம்மையானது.
“நீங்கள் மோமியைத் திருமணம் செய்து கொண்டால் நன்றாக இருக்கும்”
“என்ன இது?” அவர் தலை சுழன்றது.
“சொல்லப் போனால் மோமிக்கு வேலை இல்லை என்பதைத் தவிர வேறு குறை இல்லாதவள். கொஞ்சம் குண்டு. அவ்வளவுதான் ”
“நீ அப்படியெல்லாம் பேசக் கூடாது” அவர் முகம் இறுகியது.
“ஏன்? நான் தப்பாக ஏதும் சொல்லி விட்டேனா?” வியப்படைந்தவன் போலக் கேட்டு விட்டு அவரைக் கவலையோடு பார்த்தான்.
“நீ மிகவும் சிறியவன்.இதையெல்லாம் பேசக் கூடாது.”
“நீங்கள் அப்படி நினைக்கிறீர்கள்.அவளுக்கு வேலை இல்லாவிட்டாலும் சின்னவள் தான் .நீங்கள் அவளை விட்டு விடக்கூடாது”
“உன் வேலையைப் பார்”
“நான் மோமியைப் பற்றியும் யோசிக்கிறேன்.”
“அவள் உன்னைக் கேட்கவில்லை .உன் வேலையைப் பார்”
மீண்டும் அமைதியாக நடந்தனர்.
“வாங் ! நீ பள்ளியில் மரியாதையாக நடந்து கொள்ள வேண்டும் .சரியா?”
ஹூம்”
“வெளியிலும் தான்”
“ஹூம்”
தெரு விளக்கு அவர்களின் நிழலைக் காட்டியது. ஒன்று பெரியது.ஒன்று சிறியது.

oOo

பள்ளி நேரம் முடிந்த்தும் விளையாட்டு ஆசிரியர் வாங்கை அவரிடம் அழைத்து வந்தார்.”இவனைக் கண்டியுங்கள் ! இன்று வகுப்பில் அமளி செய்து விட்டான். எல்லோரையும் அது  பாதித்து விட்டது ”என்றார்.
“வாங்! இந்தத் தடவை என்ன செய்தாய்?’
அவன் எதுவும் சொல்லாமல் சிரித்தான்.
“வரிசையாக நிற்கச் சொன்ன போது இவன் நேராக நிற்கவில்லை .இங்கும் அங்குமாகச் சாய்ந்தான். ஒரு பையன் மேல் சாய்ந்து நின்றான்.நிற்க முடி யாமல்  .எலும்புகள் உடைந்தது போல மண்ணில்  விழுந்தான் ”அவர் சொல்லிக் கொண்டே போனார்.
“நீ செய்தது சரியா வாங்?” ஜாங் கேட்டார்.
அவன் எதுவும் சொல்லாமல் சிரித்தபடி நின்றான்.
“இந்தச் சிறுவன் நேராக உட்காரவோ நிற்கவோ மறுக்கிறான். உங்களைத் தவிர யார் பேச்சையும் கேட்பதில்லை ” அவர் சொன்னது போல வாங் சரியாக நிற்கவில்லை.ஒரு கால் நேராகவும், இன்னொரு கால் வளைந்தும், ஒரு தோள் இன்னொரு தோளை விட உயரமாகவும்..கையும்,கழுத்தும் ஒரு பக்கம் சாய்ந்தும்.. புருவங்கள் கோணலாகவும், கண்கள் திருகியது போலவும் இருந்தன.
“வாங் ! நேராக நில் ” தட்டினார்.
சிறுவன் இப்பொழுதும் ஒரு காலை நேராகவும் மற்றொன்றை வளைத்தும் வைத்து நின்றான். ஒரு தோள் மற்றொன்றை விட உயரமாக….
“வாங்! உனக்கு எப்படி நிற்க வேண்டுமென்று கூடத் தெரியாதா?’ ஜாங் பொறுமையாகக் கேட்டார்.
அவன் பிடிவாதமோ ,வெட்கமோ எதுவென்றுதெரியாத வகையில் தலை யாட்டினான்.
“ஏதாவது மனநிலை ரீதியான பாதிப்பு சிறுவனுக்கு இருக்கிறதோ?’ விளை யாட்டு ஆசிரியர் கேட்டார்..
“நேராக நில் வாங் ” பொறுமையிழந்தார் ஜாங்
“மாட்டேன்”
ஜாங் அவனை அறைந்தார்.
அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்..விளையாட்டு ஆசிரியர் அவரை இழுத்தார். “குழந்தைகளை நாம் அடிக்கக் கூடாது”
“நீங்கள் என்னை அடித்து விட்டீர்கள் .நீங்கள் என்னை அடித்து விட்டீர்கள்” சிறுவன் திரும்பத் திரும்பச் சொன்னான்.
ஜாங் அவனைப் பார்த்தார். வெறுமையாக உணர்ந்தார். இரண்டு கண்களாலும் தேம்பி அழும் அவன் கண்கள்  நடத்தை கெட்ட ஒரு நிலையைக் காட்டுவ தாகத் தெரிந்தது.
சிறுவன் தேம்பியபடி கதவை நோக்கிப் போனான். யாரும் அவனைத் தடுத்து நிறுத்தவில்லை. அவன் போவது வரை பார்த்திருந்து விட்டு பின்பு ஜாங்  பக்கம் திரும்பினர்.
அவர் மனம் அந்தக் கண்களை நினைத்தபடியிருந்தது.
சிறிது நேரத்தில் அவன் தாத்தா வந்தார் ” முரடனே! நீ என் பேரனை அடித்து விட்டாயல்லவா?ஆசிரியர்கள் எப்படி பள்ளிக் குழந்தைகளை அடிக்க முடியும்? இது ஒரு புதுச் சமூகம். பழைய பாணியில்  தனியார் பள்ளியில் வேலை பார்க்கும்  ஆசிரியராக இருந்து கொண்டு  நினைத்த போதெல்லாம் குழந்தைகளை அடிக்கவோ, சாபமிடவோ முடிகிற காலமில்லை இது.”
ஜாங்கின் முன்னால் சென்ற முதியவரை மற்ற ஆசிரியர்கள்  தடுக்க முயன்றனர்.ஜாங் வேர்த்து விறுவிறுத்துப் போனார்.கையைக் கட்டிக் கொண்டு நிற்பதைத் தவிர அவரால் ஒன்றும் செய்ய  முடியவில்லை.
“நான் தலைமை ஆசிரியரிடம் போகிறேன்.” முதியவர் கத்தினார்.
“நானும் உங்களுடன் வருகிறேன் ” கடைசியாக ஜாங் பேசினார்.
அவர்கள் இருவரும் தலைமை ஆசிரியர் அறைக்குப் போனார்கள்.அங்கு ஜாங் முதியவரிடம் மன்னிப்புக் கேட்டார்.
அடுத்த நாள் அவர் தாவோவின் வகுப்பிற்குச் சென்று மாணவர்களின் முன்னால் வாங்கிடம் மன்னிப்புக் கேட்டார்.
மூன்றாவது நாள் ஆசிரியர்கள் சங்கத்தில் தன் மீது தவறு எனச் சொல்லி  மற்ற ஆசிரியர்களின் விமரிசனத்தைக் கேட்டுக் கொண்டார்.
நான்காவது நாள் அவர் தலைமையாசிரியரின் வீட்டுக்குச் சென்று தன் பதவி உயர்வுக்கான விண்ணப்பத்தைத் திரும்பப் பெற்றார்.
ஐந்தாவது நாள் தலைமையாசிரியர் பதவி உயர்வுக்காக  கல்வித் துறைக்கு அனுப்பப் பட்ட சிறந்த ஆசிரியர்களின் பட்டியலைத் திரும்பப் பெற்றார்.
ஆறாவது நாள் ஞாயிற்றுக் கிழமை.
ஏழாவது நாள் திங்கட்கிழமை
எட்டாவது நாள் செவ்வாய்க் கிழமை
ஒன்பதாவது நாள் ஜாங் ஆசிரியர் அறையிலிருந்து தன் வகுப்பிற்குப் போன போது வாங் தலையில் வேர்வையுடன் சிகப்பு நிற கைக்குட்டையைக் கட்டியபடி வேகமாக ஓடினான். அவரைப் பார்த்ததும் மூன்று நான்கு மீட்டர் இடைவெளியில் நின்றான்.
ஜாங்கும் நின்றார்.
வாங் அவரைப் பார்த்தான்.
ஜாங் அவனைப் பார்த்தார்.
இருவரும் பேசவில்லை.
ஜாங் திரும்பி நடந்தார்.
வாங் தன் திசையை மாற்றிக் கொண்டு நடந்தான்.
இருவரும் குழம்பி இருக்க வேண்டும்.
 
 

Beijing_Shanghai_China_Shorts_Fiction_Gladys Yang and Yang Xianyi

வாங் அன் யீ சீன நாட்டில் ப்யூஜியன் மாகாணத்தில் 1954 ல் பிறந்தவர். பிரபல பெண் எழுத்தாளர் ரு ஜி ஜூவானின் மகள்.பண்பாட்டுப் புரட்சியின் காரணமாக அடிப்படைக் கல்வி பாதிக்கப்பட்ட சீன எழுத்தாளர் தலைமுறை யைச் சேர்ந்தவர். பதினைந்தாம் வயதில் வட அன்குல் பகுதிக்கு பண்ணை வேலைக்கு அனுப்பப் பட்டார்.1976 ல் இருந்து அவர் சிறுகதை படைப்புகள் வெளிவரத் தொடங்கின. 1978 ல் ஷங்காய்க்கு திருப்பி அழைக்கப் பட்டார் ”சைல்டு ஹுட் என்னும் பத்திரிகையின் ஆசிரியராகப் பணியாற்றினார். ’தி டெஸ்டினேஷன் , “ தி லேப்ஸ் ஆப் டைம்” ஆகிய இரண்டு படைப்புகளும் சிறந்த இலக்கிய விருது பெற்றவை. ”தி ஸாங் ஆப் எவெர் லாஸ்டிங் ஸாரோ “ அவருடைய பிரபலமான நாவலாகும்.அது மிகச் சிறந்த இலக்கியப் படைப்பாகக் கருதப் படுகிறது. ஷங்காய் எழுத்தாளர் சங்கத்தின் தலைவராகப் பணியாற்றிய பெருமை உடையவர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.