பரிவே ஆதார சுருதியாக வாழ்ந்து மறைந்த சார்வாகன் பற்றி

Dr_hari_Haran_Srinivasan_Sarvahan_Saarvagan

நாற்பது வருடங்களாக நெருக்கமாகத் தெரிந்த ஒருவரைப் பற்றி குறிப்பு எழுதுவது கடினமானது, அதுவும் அந்த மனிதர் மீது நாம் மிக்க அன்பு கொண்டிருந்தால் இந்த வேலை இன்னுமே பளுவானதாகிறது. அவருடன் நாம் கொண்டிருக்கும் பாசமுள்ள நெருக்கம் அந்த மனிதர் பற்றி நாம் கொண்டிருக்கும் புரிதலை மிக ஆழமாக ஆக்குவதால் அதை வெளிப்படுத்துவது சுலபமாக இருப்பதில்லை. அதே நேரம், இவரைப் பற்றி எழுதுவதற்கு உரிய இடத்தில் நாம் இருக்கிறோம் என்பது இந்தத் துன்பத்தை மேலும் முரண்பட்டதாக்குகிறது.
நான் இங்கு சார்வாகன் என்று அறியப்படுகிற டாக்டர் ஹரி ஸ்ரீநிவாசனைப் பற்றிப் பேசுகிறேன், இவர் கடந்த டிசம்பர் மாதம் 21 ஆம் தேதி அன்று, தன் 86 ஆவது வயதில் சென்னையில் காலமானார். சார்வாகன் அல்லது ஹரி ஸ்ரீ என்று அறியப்பட்ட இவர் 1960கள், 70கள் மற்றும் 80களில் உண்மையிலேயே ஒரு சிறந்த படைப்பு எழுத்தாளராக இருந்தவர். டாக்டர் ஹரி ஸ்ரீநிவாசனாக அவர், கைகளுக்கான அறுவை சிகிச்சையில் உலகப் புகழ் பெற்ற மருத்துவராக இருந்தார். இரண்டு எஃப் ஆர் சி எஸ் பட்டங்கள் பெற்றிருந்த இவர் அறுவை சிகிச்சையில் தன் ஆய்வுகள் மூலம் கண்டறிந்தவை இன்றும் உலக மருத்துவத்தில் முக்கியமாகக் கருதப்படுகின்றன. தன் தொழில் வாழ்வு முழுதையும் தொழு நோயாளிகளுக்கு மறு வாழ்வு கொடுப்பதற்கே செலவிட்டிருந்தார். தொழு நோய் மருத்துவராக இவர் ஆற்றிய சேவைக்காக இவர் பத்ம ஸ்ரீ விருதையும் பெற்றிருந்தார். இவர் ஒரு சிறப்பான சைத்ரீகர் என்பது பலருக்கும் தெரியாத ஒரு விவரம். தன் மருத்துவ ஆய்வுகளுக்கு இவர் வரைந்த பல வண்ண விளக்கச் சித்திரங்கள் சக்தி வாய்ந்தனவாக இருந்ததோடு மருத்துவ இலக்கியத்தில் புகழும் பெற்றிருந்தன.
ஆழ்ந்த தளங்களில் சுய பரிசீலனை செய்து கொள்ளும் திறன் கொண்டிருந்த இவர், ஒரு நவீனத்துவர். பின் நவீனத்துவர்கள் இகழ்வாகக் குறிக்கும் வகையில் இதை நான் சொல்லவில்லை. ஆனால், ஃப்ரான்ஸ் நாட்டின் பல் பொருளகராதியினர் முன்னாளில் எத்தகைய படைப்புத் திறனுக்கு முன்னுதாரணமாக இருந்தனரோ அந்த வகைப் படைப்பு சக்தி வாய்ந்த நவீனத்துவர் என்கிறேன். அன்றைய பல்பொருளகராதியினர் எப்படிக் கருத்துலகில் தொடர்ந்து தூரத்தில் மறையும் தொடுவானத்தை நோக்கிப் பயணித்த வண்ணம் இருந்தனரோ, அதே போன்ற ஒரு முடிவில்லாப் பயணத்தையே கருத்துலகிலும், அர்த்தங்களைத் தேடும் முயற்சிகளிலும் இவர் மேற்கொண்டிருந்தார். இதில் அவர் ஒரு பரிணாம வளர்ச்சிப் பாதையிலேயே பயணம் செய்தாரென்றும் நான் கருதுகிறேன்.
எட்டுப் பேர்களை உடன் பிறந்தவர்களாகக் கொண்டு, நடுத்தர வாழ்வு கொண்ட குடும்பத்தில் வளர்ந்தவர். அன்றைய வட ஆற்காடு மாவட்டத்திலிருந்த ஆரணியிலும், வேலூரிலும் வளர்ந்த ஹரி ஸ்ரீநிவாசனின் தாய் வழிக் குடும்பம் வளமான சைவ மரபையும், தேர்ந்த தமிழ்ப் புலமையையும் கொண்டிருந்தது. தகப்பனார் முன்னாளின் மருத்துவப் படிப்பான எல் எம் பி பட்டம் பெற்ற மருத்துவர். ஹரி ஸ்ரீநிவாசன் வளர்ந்தவரான பிறகு சென்னை மருத்துவக் கல்லூரியில் படிக்கையில், மார்க்சியத்தின் பாதிப்புக்குள்ளானார். இந்த பாதிப்பு அவர் இங்கிலாந்தில் ராயல் காலேஸ் ஆஃப் சர்ஜன்ஸ் என்னும் அமைப்பில் இரண்டு சிறப்புப் பட்டங்களுக்கான படிப்பைத் தொடர்கையிலும் நீடித்தது. அப்போது பிரிட்டனின் கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராகவும் சேர்ந்திருந்தாரென்று தெரிகிறது.
ஆனால் இவர் சோவியத் யூனியனுக்குப் போய் வந்த பிறகு ஆர்வெல்லிய மாற்றம் ஒன்று இவரிடம் நேர்ந்தது. ‘இயங்களின்’ பாதிப்பு விலகி, சுதந்திரமாகச் சிந்திக்கும் ஓர் இடது சாய்வு கொண்ட தாராளப் போக்கு கொண்ட அரசியல் சிந்தனையாளராக மாறி இருந்தார். இது இறுதி வரை நீடித்ததாகத் தெரிகிறது. இந்த வழியில் எதுவும் அவருடைய கருத்துச் சோதனைகளைத் தடுக்கவில்லை. உயிரியலில் என்ட்ராபி விதிகள் செல்லுபடியாகும் முறைகளைச் சோதிப்பதிலிருந்து, ஜென் பௌத்தத்தின் ‘ஏதும் இல்லா’க் கருத்தை ஆராய்வது வரை இவரது தேடல் தொடர்ந்தது. இந்தத் தேடலின் ஒரு நீட்சியாகவே இவரது சுதந்திரமான எழுத்துப் பயணமும் ஆர்.கே.நாராயணனிலிருந்து, ஃப்ரான்ஸ் காஃப்கா வழியே கேப்ரியெல் கார்ஸீயா மார்க்கெஸ் ஆகியோரின் பாதிப்புகளைக் கொண்டதாகத் தொடர்ந்தது. இந்த முழுப் பயணத்திலும் அவர் தன் எழுத்தில் மேற்படி எழுத்தாளர்களைப் பதிலி செய்வதைத் தவிர்த்திருந்தார். கருத்துப் பரிமாணத்தின் சாரத்திலும், ஆடம்பரமற்ற எளிமையிலும் தமிழராகவே இருந்தார், தனது குழந்தைப் பருவத்துக் களமான சிறு ஊர்களிலேயே தன் எழுத்துலக சஞ்சாரத்தையும் நடத்தினார்.
இந்திய தத்துவம், பண்பாட்டு வரலாறு ஆகியவை குறித்த அவரது ஆழ்ந்த அறிவு இந்திய எதார்த்தத்தின் பல தள இயக்கத்தை எளிதாகக் கைப்பற்றி படைப்புலகக் கருப்பொருளாக அமைக்க உதவியிருந்தது. இதனால் அவரது புனைவுகளில் அவை புராணத் தன்மை கொண்டதாக அமைந்தன, ஆனால் தொன்ம குணம் கொண்டு அமையவில்லை.
அவருடைய வாழ்வு நெடுக இருந்த பரிணாமத் தன்மை கொண்ட தேடலை எந்த சக்தி உந்தியது என்று பார்க்க முயன்றோமானால், அது அவருடைய விசாலமான பரிவுணர்வாகத்தான் இருக்க முடியும் என்று தெரிய வரும். அவரது கல்லூரிக் காலத்து மார்க்சியச் சாய்வாக இருக்கட்டும், அல்லது பின்னாளின் பல தளத்து எதார்த்தவியமாக இருக்கட்டும், மேலும் மானுடத்தின் இருப்புப் பிரச்சினையின் சிக்கல்களையும், பேரண்டம், வாழ்வு ஆகியவற்றின் தன்மைகளைப் புரிந்து கொள்ள அவர் இடைவிடாது மேற்கொண்ட தேடலாகட்டும் அவை எல்லாவற்றுக்கும் பின்னிருந்து உந்தியது இந்தப் பரிவுணர்வாகத்தான் இருக்க முடியும்.

சு. சிவகுமார்
இந்தியப் பொருளாதாரத் துறை ஆய்வாளர்
முன்னாள் எகனாமெட்ரிக்ஸ் துறைத் தலைவர், சென்னைப் பல்கலை.

2 Replies to “பரிவே ஆதார சுருதியாக வாழ்ந்து மறைந்த சார்வாகன் பற்றி”

  1. டாக்டர் ஸ்ரீநிவாசன் அவர்கள் மாபெரும் மனிதர். மிகவும் எளிமையானவர். ஒரு மனிதர் நல்லவராக வாழலாம் என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டாக வாழ்ந்தவர். சிறந்த அறிவாளி. மருத்துவத்துறையில் உலக அளவில் மாபெரும் சாதனைகளை செய்தவர். வாழ்நாள் முழுவதும் தொழுநோயாளிகளின் மறுவாழ்வுக்காகவே வாழ்ந்தவர்.
    அவருக்கு தாய்மொழி தமிழின் மேல் இருந்த ஆர்வத்தினால் “சார்வாகன்” என்ற புனைபெயரில் சிறந்த படைப்புகளை அளித்தார். அவரது மறைவு மருத்துவ துறைக்கும் தமிழுக்கும் ஈடுசெய்யமுடியாத ஓர் நஷ்டமே.

  2. தொண்டரும், சீரிய மருத்துவரும், தாய்த்தமிழை நேசித்த எழுத்தாளருமாகிய சார்வாகன் அவர்கட்கு எனது அஞ்சலி.
    அவரது எழுத்துக்கள் இணையத்தில் உள்ளனவா? இருப்பின் இணைப்பைத் தாருங்கள்.
    மா. அருச்சுனமணி, சிட்னி, ஆத்திரேலியா

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.