நாஞ்சில் நாடன், சு. வேணுகோபாலைத் தொடர்ந்து தனது அடுத்த எழுத்தாளர் மலரை பாவண்ணன் சிறப்பிதழாக பதாகை வெளியிட்டு இருக்கிறது. அதை இங்கே சென்று வாசிக்கலாம்: http://padhaakai.com/jan-2016/paavannan-special/
இதழில் இருந்து சில மேற்கோள்கள்:
குதிரை வீரன் பயணம் (பாவண்ணன் நேர்காணல்)
ஓர் ஒற்றையடிப்பாதையில் எந்த அவசரமும் இல்லாமல் நாலாபக்கங்களிலும் வேடிக்கை பார்த்தபடி நடந்துபோய்க்கொண்டிருக்கிறோம் என்று வைத்துக்கொள்ளுங்கள். அப்போது நமக்குப் பின்னால் இரண்டு சக்கர வண்டிகளும் நான்கு சக்கர வண்டிகளும் சர்புர்ரென்று சத்தமெழுப்பியபடி ஒன்றையடுத்து ஒன்றாக வருவதைப் பார்க்க நேர்ந்தால் எப்படி இருக்கும்? முதலில் அச்சத்தில் நடுங்கி எல்லாவற்றுக்கும் ஒதுங்கி வழிவிட்டு நின்றுவிடுவோம். அப்புறம் திகைப்போடு சில கணங்கள் வேடிக்கை பார்ப்போம். அதற்கடுத்து நாமே ஒரு தடத்தை உருவாக்கிக்கொண்டு நடந்துபோய்க்கொண்டே இருப்போம் அல்லவா? அதுபோலத்தான் நடந்தது. தொடக்கத்தில் அந்தப் பேச்சுகளும் விவாதங்களும் என்னைத் திகைக்கவைத்தன என்பதுதான் உண்மை. ஆனால் எதையும் வெறுக்க நினைக்கவில்லை. வெறுப்பது என் இயல்பே அல்ல. அதைப் புரிந்துகொள்ள முயற்சி செய்தேன். கிராப்ஃட்டுக்கும் மன எழுச்சிக்கும் உள்ள உறவு…
திண்ணை – (பாவண்ணனின் புதிய சிறுகதை)
ஆட்டோவுக்கு அருகில் பெரிய அத்தை நின்றிருந்தார். ஒரு கோயில் தூண்போன்ற உறுதியான உருவம். அவரிடம் மாயாண்டி என்னமோ பதில் சொல்லிக்கொண்டிருந்தான். ஆண்டாள் தம் கண்களிலிருந்து கண்ணீர் சரிந்து விழுந்துவிடாதபடி உதடுகளை இறுக்கமாக கடித்துக்கொண்டு பக்கவாட்டில் இருந்த முருங்கைமரத்தைப் பார்த்தபடி நின்றிருந்தார். இரண்டு குருவிகள் நிலைகொள்ளாமல் கிளைகிளையாகத் தாவியபடி இருந்தன. ஆட்டோவுக்கு அருகில் அவர்கள் சென்று நின்றதை பெரிய அத்தை கவனிக்கவே இல்லை. அருவருப்பான பொருளுக்கு அருகில் நிற்பதுபோல முகத்தைச் சுளித்தபடி மாயாண்டியை வாய்க்கு வந்தபடி திட்டினார் அவர்.
மொத்த ஆக்கங்களையும் இங்கே வாசிக்கலாம்.