சுமை
தரைத் தூசியைப்
பெருக்குகிறது
ஓடும் மின்விசிறி,
அதன் இறகுகளில்
படிந்திருக்கும்
அழுக்கைச் சுமந்தபடி .
ஏக்கம்
அவை இரண்டும்
ஒன்றன் பின் ஒன்றாய்
வரும் பால்கனிக்கு .
முதலில் வருவது ஆண்
அடுத்தது பெண் என்று
என் பசலி மனம்
முடிவு செய்து விட்டது .
சிறிய கண்கள், சிறிய அலகு
கண்ணை றொப்பும் சாம்பல்
இறக்கைகள் .
கொண்டையை அசைத்தாடும்போது
கூடவே க்விக் க்விக் கூச்சல் !
வினயாவின் தோழர்கள் அவை.
அதுகளோடு குழந்தையின் சம்பாஷணை
காலம் ஓடாமல் நிற்கிறது
கேட்பதற்கு
பறந்து அவைகள்
போனதுக்குப் பின், தரையெங்கும் எச்சம் .
கூடவே
எங்கிருந்தோ எடுத்து வந்த
வைக்கோல் இழைகள்,
சிறு இலைகள் .
குப்பை வாரி முடியலை,
சனியன்கள் வந்தால் விரட்டுங்கோ
நாள்க்கணக்கில்
மனைவியின் பொருமல்.
தாங்காது ,
ஓடி ஓடி , உடற்பயிற்சியென
அவைகளை விரட்டுவது
தினமும் நடந்த காரியம்.
இரு தினங்களாய் அவை வரவில்லை.
போடா !
நீயும் ஆச்சு , உன்
வீடும் ஆச்சு என்றா ?
ஆடிக் காற்று கொண்டு வந்து
கொட்டுகிறது குப்பையை.
பொருமல் கேட்கிறது.
ஆனால்
விரட்ட முடியவில்லை காற்றை.
பால்கனியில் நிற்கிறேன்
சாம்பல் நிறம் தெரிகிறதா
என
பார்த்துத் தவித்தபடி .