தரிசனம்

Kiran Singh_Arts_Painting_Humans_Faces_Pick_up_Names_India

சுற்றித் தடுத்து என்னைத் தன்
ஆளாக்கி
என்னுள் படர்ந்து என்னுயிரை
இயக்கிவந்த மாயத் தெய்வத்
திரைப்படலம்
நானே ஏற்றுவித்ததெனப் பிறந்த
உணர்வில் கிழித்துவிட்டு
அகவிருட்டைப் பிளந்தெரிக்கும்
அறிவுக் கண்ணொளி விளக்கேந்தி
நவமான முன்னேற்றப் பாதையில்
நல்வாழ்வுச் சரித்திரம் படைத்திட நான்முனைந்தேன்
முனைந்தேன்… முனைந்தே… முனைந்…
முனை… மு…
முன்னேற்ற வாழ்வு ஒரு
அக்ஷய பாத்திரக் கனவு
போடப் போடப் போட
விழுங்கி ஏப்பமிட்டுப் பின்னும்
இன்னும் தா, இல்லையெனில்
பின்னிறங்கிச் சாவாய்
எனச் சபிக்கும்
பிரமராக்ஷஸ அக்ஷய பாத்திரம்…
என் பசியை ஆற்றுவதற்கு
இவ்வுலகையே விற்றுத்தீனியாக்கி
என் பசியைப் பின்னும் பெரிதாக்கும்
அக்ஷய பாத்திர யந்திரம் – என்னும்
ஞானம் என்னுள் பிறக்கிறது.
துருப்பிடித்து மங்கித் தளர்ந்து உதிர்ந்து வரும்
விளக்காயுதங்களைத்
தூர எறிந்துவிட நான் தயார்
ஆனாலும்
இருந்தபடி இருக்க
இரைத்தபடி ஓடக் கட்டாயக் கட்டளையிடும்
முன்னேற்ற வாழ்விற்கு ஈடுகொடுத்து
இறுமாந்து இருக்க உதவும்
திடமான நிலையான வளையாத
நெருப்பான கைத்தடி ஒன்று
வேணுமே.

நன்றி: கணையாழி – மே, 1992