கிருஷ்ணனுக்குப் பன்னிரு நாமங்கள்

Krishna_Lord_Kanna_Govinda_Gopala_Giridhara_Flute_Arts_Paintings

குழந்தைகளுக்குக் காதுகுத்தி அதில் தோடு, அல்லது குண்டலங்கள் அணிவித்து அழகுபார்ப்பதென்பது தொன்றுதொட்டு பாரததேசத்தில் இருந்து வரும் ஒரு சம்பிரதாயமாகும். இது அழகுபார்ப்பதுடன் நிற்காமல், குழந்தையின் உடல்நலத்தினையும் கருத்தில்கொண்டு செய்யப்படும் ஒரு சடங்காகும் எனக் கருதவும் இடமுள்ளது.
தத்துவ, மருத்துவ ரீதியாக, காதுமடலில் துளையிடுவதென்பது புத்திக்கூர்மை, சிந்தனைவளர்ச்சி, பலவிஷயங்களில் தகுந்த முடிவெடுப்பது எனப்பலவிதமான மூளைவளர்ச்சிச் செய்கைகளுடன் தொடர்புபடுத்தி ஆராயப்பட்டுள்ளது. மேலும் இக்காலத்தில் நவீன மருத்துவ சிகிச்சைமுறைகளாக அறியப்படும் அக்குபிரஷர், அக்குபங்ச்சர் ஆகியவற்றுடனும் இது தொடர்புபடுத்தப்படுகின்றது.
முற்காலத்தில், ஆண்,பெண் இருபாலருமே காதுகுத்திக்கொள்ளும் வழக்கம் இருந்தது. தற்காலத்தில் இது பெண்கள்மட்டுமே செய்துகொள்ளும் அழகுசம்பந்தப்பட்ட செயலாகக்கருதப்படுகிறது! குழந்தைகளுக்கு ஒராண்டு நிறைவதற்குள் காதுகுத்துவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். அவர்கள் காதினைக் குத்துவதால் உண்டாகும் வலியை அதிகமாக உணர்ந்து துன்பப்படாதிருக்கவேண்டிச் செய்யப்பட்டது. பெரும்பாலும் பொற்கொல்லர்களே இதனைச் செய்தனர். தற்காலத்தில் மருத்துவர்கள், குழந்தை வலியை உணராதிருக்கும்பொருட்டு, காதுமடலை மருந்தால் மரக்கச்செய்து, காதினைக் குத்திவிடுகின்றனர்.
மேலும், வீடுகளில் இது ஒரு குடும்பவிழாவாகக் கொண்டாடப்பட்டது. ஒரு நல்லநாளில் உறவினரை அழைத்து, குழந்தையின் காதினைத்துளையிட்டு, தோட்டினை அணிவித்துப் பின் அனைவருக்கும் விருந்தளிப்பதும், குழந்தைக்குப் பல பரிசுகளும் புத்தாடைகளும் அணிவிப்பதும் வழக்கமாக இன்றளவும் செய்யப்பட்டு வருகின்றன.

oOo

அன்னை யசோதைக்கும் தன் செல்லக்குழந்தை கிருஷ்ணனின் காதுகளில் துளையிட்டு, மற்றச் சிறுவர்களைப்போல் அழகழகான காதணிகளை அணிவித்துப் பார்க்க ஆசை இராதா? பெரியாழ்வாரின் திருவாய்மொழியாக நாம் இங்கு காணப்போவது வெகுசுவாரசியமான இந்த நிகழ்ச்சியைத்தான்! யசோதையின் ஒருதலைக்கூற்றாகப் (monologue)  பாசுரங்களாக்கி இந்தக் காதுகுத்தும் நிகழ்ச்சியைக் கதைப்போக்கில் அளித்துள்ள அழகும் நயமும் உள்ளத்தைக் கொள்ளை கொண்டுவிடுகின்றன. இதில் இன்னும் ஒரு அழகான  விஷயம் என்னவென்றால் திருமாலடியார்கள் உயர்வாகக்கருதும்  கிருஷ்ணனின் பன்னிரு திருநாமங்களைக் கொண்டு இப்பாடல்களை அமைத்துள்ளதுதான்!

oOo

தினந்தோறும் நந்தகோபன் பசுக்களை மேய்ச்சலுக்கு ஓட்டிச்சென்றுவர மிகுந்த தாமதமாகி விடுகிறது. குழந்தை கிருஷ்ணனோ யார் சொல்லையும் கேளாமல் காடுமேடெல்லாம் சுற்றியலைந்து வருகிறான். கம்சன் எனும் கொடியவனுடைய பிடியில் என்று அகப்பட்டுக் கொள்வானோ என யசோதையின் தாயுள்ளம் தவிக்கிறது. அவன் காதினைக் குத்தித் தோடணிவிப்பது அவனைக்காக்கும் என அன்னை யசோதை நம்பினாளோ என்னவோ, ஆய்ப்பாடிப் பாலர்களையும் இடைப்பெண்களையும் அழைத்து கிருஷ்ணனுக்குக் காதுகுத்த ஏற்பாடும் செய்துவிட்டாள். நந்தகோபன் வரும்போது வரட்டும். குழந்தைக்குச் செய்யவேண்டிய நல்ல காரியங்களை இனியும் தள்ளிப்போடாலாகாது என்று எண்ணிக் கொண்டாள் அவள்.
“கேசவ  நம்பீ! உன்னைக் காதுகுத்த
    ஆய்ப்பாலர் பெண்டுகள் எல்லாரும் வந்தார்;
      அடைக்காய் திருத்திநான் வைத்தேன்,”* என்று வெற்றிலைபாக்கு அனைத்தையும் தயாராக வைத்துக்கொண்டு ஆசையோடு காத்திருக்கிறாள் அன்பான யசோதை. அடைக்காய் மாத்திரமல்ல. அறுசுவைப் பணியாரங்களும் விருந்தும் கூட அவள் இல்லத்தில் இன்று அனைவருக்கும் அளிக்கப்படும்.
இப்போது இந்தக் கிருஷ்ணன் வளர்ந்த நான்கைந்து வயதுக் குழந்தை; சிறுவன். மற்ற குழந்தைகளுக்குக் காதுகுத்துவதனைப் பார்த்திருக்கிறான். அவர்கள் படும் வலி, வேதனையைக் கண்டிருப்பதால், இதனை எப்படியாவது தவிர்த்துவிட வேண்டும் என்பதிலேயே முனைப்பாக இருக்கிறான். ஆகவே, எல்லாரும் வந்துகுழுமியிருக்கும் கூடத்தில் ஒருமூலையில் இடுப்பில் கைகளை ஊன்றியவண்ணம் நின்றுகொண்டு வராமல் சண்டித்தனம் செய்கிறான். அவனுடைய இந்தப் பிடிவாதமும் அழகாகத்தான் இருக்கிறது அன்னைக்கு! அரையில் பவளவடம் என்ற அணி; தாமரைமலர் போலும் திருவடிகளில் அணிந்துள்ள சதங்கை அவன் பிடிவாதத்துடன் தரையை உதைக்கும்போது அழகாக ஒலி எழுப்புகிறது. யசோதை அவனுக்கு ஆசைகாட்டுகிறாள்: “என் கண்ணல்லவோ நீ! எண்ணங்களுக்கு அப்பாற்பட்ட எம்பிரானல்லவோ நீ! பார் இந்த அழகான தங்கக்கடுக்கன்களை! உனக்காகவே செய்துவைத்தது. உனக்கு எரிச்சல் ஏற்படாமல் உன் காதில் இதன் திரியை இடுவேனடா குழந்தாய்! இதை அணிந்துகொண்டால் உன் கண்களுக்கும் இது மிகவும் நல்லதப்பா! நாராயணா! கிட்டேதான் வந்துபாரேன்!” என்று நயமாக வேண்டுகிறாள்.
“நண்ணித்தொழும் அவர் சிந்தை பிரியாத நாராயணா! இங்கே வாராய்,” என்று கெஞ்சுகிறாள். அவன் மசியவில்லை!
அவனைமீறி அன்னையால் அவன் காதுகளைக் குத்திவிட இயலாது! அடுத்த உபாயத்திற்குப் போகிறாள் அன்னை! “மாதவா, உலகிலேயே விலையுயர்ந்த குண்டலங்கள் இவை கண்ணா! உன் காது மிகச் சிறிதேதான் வலிக்கும்; இந்தச் சுவையான தின்பண்டங்களை நீ தின்னும்போது அது உனக்குத் தெரியவேதெரியாது,” என ஆசைகாட்டுகிறாள்.
“வையம் எல்லாம் பெறும்வார் கடல்வாழும்
        மகரக்குழை கொண்டு வைத்தேன்;
    வெய்யவே காதில் திரியை இடுவன்நீ
        வேண்டிய தெல்லாம் தருவன்:
………………………………….
        மாதவனே! இங்கே வாராய்.”*
குழந்தைக்குத் தெரியுமா அழகு, விலைமதிப்பு எல்லாம். வலியை எண்ணி இதனை மறுத்தபடி நிற்கிறான் அவன்.
ஆய்ப்பாடியில் இவன் வயதொத்த மற்றகுழந்தைகள் அழகான வைரக்குண்டலங்களை அணிந்துள்ளனர். ஆய்ப்பாடியின் தலைவனான நந்தகோபன் மகனல்லவோ இவன். இவன் ஏன் இப்படிப் பிடிவாதம் செய்கிறானோ தெரியவில்லை. “கோவிந்தா, என் சொல்லுக் கேட்டுக்கொள்ளாய், இக்காதணிகளை அணிந்துகொண்டால், உனக்கு நான் என்னவெல்லாம் தருவேன் தெரியுமா? சுவையான பலாப்பழம், நீ விரும்பி அருந்தும் என் முலைப்பால் எல்லாம் தருவேன்; உன்னைக் கையெடுத்துக் கும்பிடுகிறேன், வா அப்பனே!” என வேண்டுகிறாள்.
அவள் வேண்ட வேண்ட இச்சிறுகுட்டன் உதடுகளை மடித்தபடி, தலையை இப்படியும் அப்படியுமாக ஆட்டி மறுத்தவண்ணமாக நிற்கிறான். பொழுது சென்றுகொண்டிருக்கிறது. மனக்கண்ணில் இக்காட்சியைக் காணும் பெரியாழ்வாருக்கு, மூங்கிலை ஒத்த வேய்ந்தடந்தோளாராகிய பெண்கள் விரும்பும் அழகான இளைஞன் கருங்குழல் விஷ்ணுவாக அவன் தெரிகிறான்.
தாயாகிக் கூறுகிறார்: “நீ பெண்களுடன் சேர்ந்து குரவைக்கூத்து ஆடிக்களித்துவந்தால் நான் தவறாக எடுத்துக்கொள்ளமாட்டேன். உன் காதில்மட்டும் இந்தத் திரியை இடவிட்டயானால், பண்ணிவைத்துள்ள பெரிய பெரிய சுவைமிகுந்த அப்பங்களை உனக்காகத் தருவேனே,” எனப் பேரம் பேசிப்பார்க்கிறாள்.
‘பேர்த்தும் பெரியன அப்பம் தருவன்
        பிரானே! திரியிட ஒட்டில்;
    வேய்ந்தடந் தோளார் விரும்பு கருங்குழல்
        விட்டுவே! நீ இங்கே வாராய்.*
(விட்டு- விஷ்ணு)
கிருஷ்ணன் அசைவதாயில்லை. அவனைப் பிடிக்கப்போனால் சிட்டாகப் பறந்துவிடுவான் எனத்தெரியும். ஆகவே, அடுத்து, அவனிடமே அவனைப்பற்றி உயர்வாகப்பேசுகிறாள். “நீ மண்ணைத் தின்றபோது நான் அடித்தேன்; நீ உரத்துக் கதறி அழுதாய். பூச்சிபொட்டைத்தின்று விட்டாயோ எனப்பயந்து உன் வாயைத் திறக்கச்சொன்னேன். உலகங்களையெல்லாம் அதில் கண்டபோது நீயே மதுசூதனன் என அறிந்துகொண்டேனே குழந்தாய்! நீ சாமானியனல்லவப்பா! உன் காது புண்ணே ஆகாதபடிக்கு நான் அதில் இந்தத்தோட்டை இடுகிறேன். ஒரு கணநேரம் பொறுத்துக்கொள்ளடா!” எனக் கொஞ்சுகிறாள்.
மெல்லக்கிட்டே சென்று அந்தப்பிஞ்சு முகத்தைத் தடவிக்கொடுத்து, பட்டுக்கன்னத்தில் முத்தமிட்டு, கட்டியணைத்து மடியிலிருத்தி ஒருவழியாக எவ்வாறோ ஒருகாதில் துளையிட வாகாக ஊசிபோல அமைந்த திருகுடைய காதணியையும் இட்டுவிட்டாள் யசோதை. சினம்பொங்கத் துள்ளியெழுந்த கிருஷ்ணன், காதணியைக் கணப்போதில் பிடுங்கி வீசி எறிந்து விடுகிறான். “அம்மா! நீ எனக்கு ஒன்றும் தர வேண்டாம்,” என ஓட்டமாக அங்கிருந்து ஓடலானான். ஓடி மறையவில்லை அக்கள்ளன். கைக்கெட்டாத தொலைவில் நின்று  பழிப்புக்காட்டுகிறான். அன்னைக்கு ஆற்றாமை பொங்குகிறது. ‘என்ன குழந்தை இவன்’ என அங்கலாய்த்துக்கொண்டு கூறுகிறாள்: “திரிவிக்கிரமா! ஆயர்குலத்தாரை காக்க மலையைக் குடையாகப் பிடித்தவனல்லவோ நீ! பசுக்களை மேய்த்தவன் நீ! இராமனாகப்பிறந்தபோது, சிவதனுசை முறித்தாய்! இவ்வளவெல்லம் செய்த உனக்கு நான் நீ தலைகூட சரியாக நிற்காத சிறுகுழந்தையாக இருக்கும்போதே காதினைக்குத்தாமல் விட்டுவிட்டேனே! அது என்னுடைய தவறுதான். பெரியவனானபின் நீ இப்படி செய்வாய் எனத் தெரியாமல் போய்விட்டதே!” எனத் தன்னையே நொந்துகொள்கிறாள்.
முலைஏதும் வேண்டேன் என்று ஓடி நின்காதிற்
        கடிப்பைப் பறித்து எறிந்திட்டு
    மலையை எடுத்து மகிழ்ந்து கல்மாரி
        காத்துப் பசுநிரை மேய்த்தாய்;
    சிலைஒன்று இறுத்தாய்; திரிவிக் கிரமா
        திருஆயர் பாடிப் பிரானே!
    தலைநிலாப் போதே உன்காதைப் பெருக்காதே
        விட்டிட்டேன், குற்றமே அன்றோ?*
“அம்மா!, இப்படியெல்லாம் என் குற்றம் எனக்கூறிக்கொள்ள வேண்டாம். அன்றொருநாள் நான் மண்ணைத்தின்று விட்டாதாகக் கருதி, என்வாயைத் திறக்கச்சொல்லிப் பார்த்தாய். அதில் மண்ணின் சுவடே காணாதபோதும், “இவன் மண்தின்றதைப்பாருங்கள், பெண்களே!” எனச்சொல்லி எல்லார்முன்பும் என்னைப்போட்டு அடித்தாய்! அது ஏன்?” எனக் கேட்கிறான். இதற்கு அன்னை என்ன கூறுவாள்? பேச்சை மாற்றமுயன்று கூறுகிறாள்: “கண்ணா, வாமன நம்பீ! பாம்பின் பகைவனான கருடனைக் கொடியாக உடையவனே! நீ எல்லார் துன்பங்களையும் போக்குபவன். பேசிக்கொண்டே இருந்தால் காதுத்துளைகள் தூர்ந்துபோய்விடும். வா, வா, அதில் திரியை இட்டு விடுகிறேன்,” என்கிறாள்.
சிறுகுழந்தைகள் பேரறிவு மிக்கவர்கள். சில பொழுதுகளில் அவர்கள் கூறும் சொற்களுக்கு மறுமொழிகூறுவதற்கு இயலாது நமக்கு வாயடைத்துவிடும். வேறு எதையாவது கூறி பேச்சையே மாற்ற முயலுவோம். யசோதையும் அவ்வாறே ஒரு இக்கட்டில் மாட்டிக்கொண்டு தவிக்கிறாள்!
“அம்மா நீ  பேச்சை மாற்றாதே! என்னை அடிப்பதில்லையென உறுதிமொழி கொடு,” எனக்கண்ணன் கூற, அவளும், “நான் சொல்லுகேன் மெய்யே! என் குழந்தாய்!” என்கிறாள். கண்ணன் தன்தாய் வகையாக மாட்டிக் கொண்டுவிட்டாள் என அறிந்ததும் விடாது மேலும் மேலும் வழக்காடுகிறான்.
“நான் வெண்ணெய்திருடினேன் என்று மற்றப்பெண்கள் கூறியதைக் கேட்டுக்கொண்டு, அதை உண்மை எனநம்பி என்கையைப்பிடித்திழுத்து என்னை உரலுடன் வைத்துக் கட்டினாயே! அது என்ன நியாயம்?” என எதிர்க்கேள்வி கேட்கிறான்.
“சிரீதரா! (ஸ்ரீதரா!) இவ்வாறு பலகதைகளையும் பேசிப்பேசி நகைத்துக்கொண்டிருந்தால் உன்காது தூர்ந்துவிடுமடா குழந்தாய்! மற்றபெண்கள் உன்னைக்கண்டு ‘கூழைக்காதன்’ எனக்கூறி ஏளனம் செய்வார்களே! அவ்வறெல்லாம் ஆகுமுன்பே நான் உன்காது பெருகவேண்டி இத்திரியை இடுகிறேனே,” எனக்கெஞ்சுகிறாள்.
மெய்யென்று சொல்லுவார் சொல்லைக் கருதித்
        தொடுப்புண்டாய் வெண்ணெயை என்று
    கையைப் பிடித்துக் கரைஉரலோடு என்னைக்
        காணவே கட்டிற் றிலையே?
    செய்தன சொல்லிச் சிரித்து அங்கு இருக்கில்
        சிரீதரா! உன்காது தூரும்
    கையில் திரியை இடுகிடாய், இந்நின்ற
        காரிகையார் சிரியாமே.*
அன்னை பாய்க்கடியில் புகுந்தால் இவன் கோலத்திற்கடியில் புகுகிறான். பின்னும் கேட்கிறான்: என் காதுகள் வீங்கி எரிந்தால் ஏளனம் பேசும் அந்தப்பெண்களுக்கும் உனக்கும் என்னவாயிற்றாம்? அதனால் உனக்கென்ன குறை?”
“கண்ணா! குழந்தைப்பருவத்தில் உன் காதைக்குத்தினால் உன் தலைநோகுமே என அதனைச்செய்யாமல் விட்டது என் தவறுதான். அரிட்டநேமி எனும் காளையையும்  கன்றாக வந்த வத்சாசுரன் எனும் அசுரனையும் கொன்ற என் சிறுகண்ணா! இருடீகேசா! பார்! உன்னொத்த ஆய்ப்பாடிச்சிறுவர்கள் யாவரும் தமது காதுகளைப் பெருக்கிக்கொண்டு நடமாடுவதைக் கண்டபின்பும் இவ்வாறெல்லாம் நீ கேட்கலாமோ?” என்றாள் அன்னை.
சேரியிற் பிள்ளைகள் எல்லாரும் காது
        பெருக்கித் திரியவும் காண்டி;
    ஏர்விடை செற்று இளங்கன்று எறிந்திட்ட
        இருடி கேசா எந்தன் கண்ணே.*
(இருடிகேசா- ரிஷிகேசா)
கேட்டுக்கொண்டிருந்த கண்ணன், ‘இதென்ன இவள் தான் சொல்வதையே விடாப்பிடியாகச் சொல்லிக்கொண்டிருக்கிறாள்,’ என ஆடாது அசையாது நின்றிருந்தான். அவன் மெல்லத் தழைந்து வருகிறான் என அவள் எண்ணிக்கொண்டாள். இன்னும் சில தேன்போலும் சொற்களைக்கூறுவாள்:
“எம்பெருமானே! சகடாசுரனை வதம் செய்த பத்மநாபா! பெண்கள் உன்னைப் பார்க்கும்போது அவர்கள் கண்கள் குளிர்ச்சியடையும்படி அவர்கள் மனத்தில் என்றென்றும் நிலைத்து நிற்பவனே! அமுதம் போன்றவனே! உனக்காக சுவைமிகுந்த பழங்களைக் கொண்டு வந்துள்ளேன் பாராய்! வலி தெரியாதபடி உன் காதுகளுக்கு இந்த அணியை அணிவிக்கிறேன், வாயேன் கண்ணா!” என்கிறாள்.
“உண்ணக் கனிகள் தருவன், கடிப்பு ஒன்றும்
        நோவாமே காதுக்கு இடுவன்;
    பண்ணைக் கிழியச் சகடம் உதைத்திட்ட
        பற்பநாபா இங்கே வாராய்!”*
இப்போது இதையெல்லாம் கேட்டுக்கொண்ட கண்ணன் தனது அன்னையிடம் கேட்கும் கேள்வி ஆச்சரியத்தினைத்தான் விளைவிக்கின்றது!
“வா என்று என் கையைப்பிடித்திழுத்து கட்டாயமாக என்காதில் இந்தக்கடுக்கனை எனக்கு வலிக்கவலிக்க அணிவிப்பதால் உனக்கு என்ன ஆகப்போகிறதாம்? எனக்குக் காதுவலிக்கும். நான் வரமாட்டேன், நீ என்ன வேணுமானாலும் செய்துகொள்,” எனப்பிடிவாதமாக மறுத்து விடுகிறான். யசோதை என்னவோ இவன் இன்னும் சிறுகுழந்தை என எண்ணிக்கொண்டு, “உனக்கு மிகவும் பிடித்தமான நாவல்பழங்களைத் தேடிக்கொண்டுவந்து வைத்திருக்கிறேன் பாரடா! பூதனையைப் பாலருந்திக் கொன்றவனே! சகடாசுரனைக் கொன்ற தாமோதரனே!, பிடிவாதம் வேண்டாமடா,” எனக் கெஞ்சியும் கொஞ்சியும் பார்க்கிறாள்.
வாஎன்று சொல்லி எங்கையைப் பிடித்து
        வலியவே காதிற் கடிப்பை
    நோவத் திரிக்கில், உனக்கு இங்கு இழுக்குற்றென்?
        காதுகள் நொந்திடும்; கில்லேன்;
    நாவற்பழம் கொண்டு வைத்தேன், இவைகாணாய்;
நம்பீ! முன்வஞ்ச மகளைச்
    சாவப்பால் உண்டு சகடுஇறப் பாய்ந்திட்ட
        தாமோதரா! இங்கே வாராய்.*
(*பாசுரங்கள் அனைத்தும் பெரியாழ்வார் திருமொழி- இரண்டாம் பத்து)
பெரியாழ்வார் பாடிவைத்துள்ள இந்தக் காதுகுத்தல் பற்றிய பாசுரங்கள் கிருஷ்ணன் எனும் குட்டன் தன் அன்னை காதுகுத்திக் கடுக்கன் அணிவிக்க முயன்றபோது அவளுடன் செய்த வாக்குவாதத்தை அழகான பாடல்களில் நயம்பட விளக்குகிறது.
கிருஷ்ணனின் புகழைப்பாட இதுவும் ஒருவழி; அவனை நம்வீட்டுச் சிறுகுழந்தையாக்கி, அக்குழந்தை செய்யும் குறும்புகளையும் பிடிவாதத்தினையும் தர்க்கங்களையும் விவரித்தல் ஒருவகையான ஆனந்தத்தை உண்டுபண்ணி, அவனிடம் நமக்கான நெருக்கத்தை (intimacy) அதிகரிக்கின்றதல்லவா? அதனால்தான்பெரியோர்கள் இவ்வழியைத் தேர்ந்தெடுத்தனர் என எண்ணவும் தோன்றுகின்றது. எவ்வாறாயினும், தொன்றுதொட்டு இருந்துவரும் சில சம்பிரதாயங்களையும், அவற்றின் காரணங்களையும் அறிந்துகொள்ளவும் முடிகின்றது. தன்குழந்தையின் நலத்தையே நாடும்தாய் எவ்வாறெல்லாம் சிந்தித்து அதனை நடைமுறைப்படுத்துகிறாள் என்பது ஆச்சரியத்தினையும் விளைவிக்கிறது. பிற்காலக் கவிஞர்களான ஊத்துக்காடு வெங்கடசுப்பையர், சுப்ரமணிய பாரதியார், சுத்தானந்த பாரதியார், அம்புஜம் கிருஷ்ணா போன்றோரும் இந்தச் சிந்தனை இன்னும் மிகுந்து வளரும் வகையில் பாடல்களை இயற்றியுள்ளனர். வாய்ப்பு இருந்தால் அவற்றைப் பின்னொரு சமயம் காணலாம்.
 

(கிருஷ்ணலீலைகள் வளரும்)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.