எழுச்சியூட்டும் நம்பிக்கை

Paintings-fisher-women-acrylic-on-canvas

இப்போதெல்லாம் குடும்பங்களில் சேர்ந்து உட்கார்ந்து உணவு உண்பதற்கோ அல்லது பேசவோ முடிவதில்லை என்று பலர் சொல்வதுண்டு. எப்படி முடியும்? அதுதான் அவரவர், அவரவர் வேலையில் மும்முரமாக ஆகிவிடுகிறார்களே… அல்லது, டிவி நம் கவனத்தை முழுவதுமாக ஆக்கிரமித்துக்கொள்கிறது.
இந்த சூழ்நிலையைத் தன் குடும்பத்தில் மாற்ற முயன்ற ஒரு பெண்ணின் அனுபவத்தை  சமீபத்தில்  படித்தேன்.
குடும்பத்தினரை வீட்டில் சேர்க்க ஒரு வழி, தானே சமைப்பது என்று அவர் முடிவு செய்தாராம். அவர் சொல்கிறார்: “ என் சமையல் என்றவுடன் இன்னும் பயந்து ஓடுவார்களோ என்று எனக்கு கொஞ்சம் தயக்கம்இருந்ததென்னவோ உண்மைதான். முதலில் குடும்பத்தினர் நம்பவில்லை. “நீயாவது சமைப்பதாவது..” என்று பரிகசித்தனர். ஆனால் விடாமல் நானும் தினம் புதுப் புது சமையல் செய்ய ஆரம்பித்தேன். இரவு எட்டு மணிக்கு உணவு  நேரம் என்றால் அனைவருக்கும் ஒரு முறை ஞாபகப்படுத்த வேண்டும் கடைக்குட்டி பசி என்பாள்… பிஸ்கெட் கொடுத்து சரி செய்யலாம். எது எப்படியானாலும் எட்டு மணிக்கு எலோரும் ஒன்று சேர வேண்டும் என்று உறுதியாக இருந்தேன்.
“ஆனால் பாருங்கள், கல்லூரியில் படிக்கும் இளைய மகன் தன் சினேகிதனுடன் வருகிறான் -ஏழு மணிக்கு. அவனை ரயிலுக்கு அனுப்ப வேண்டும் என்று கொறித்துவிட்டு அரைமணியில் சென்று விடுகிறான். கணவர் எட்டரை மணிக்கு  போன் செய்து வருவதற்கு நேரமாகும் என்று அறிவிக்கிறார். ஒரு நிறுவனத்தில் வேலைப் பார்க்கும் மூத்த மகன் வழக்கம்போல் 10 மணிக்கு வந்துவிட்டு, ” நீங்கள் நிஜமாகவே வீட்டில் சமைப்பதாக சொன்னீர்களா ? ஏதோ தமாஷ் செய்கிறீர்கள் என்று நினைத்தேன்…” என்று சிரிக்கிறான். இப்படியே வாரம் முழுவதும் ஒவ்வொருவருக்கும் ஏதேதோ  காரணங்கள். எண்ணி இரண்டு நாள் சேர்ந்தாற்போல் உட்கார்ந்து சாப்பிட்டோமா என்பதே  சந்தேகம்….” என்று தன் அனுவத்தை விவரிக்கிறார்.
இதைப் படிக்குபோது குடும்பப் பிணைப்புகளையும் அதில் நிலவும் அன்பு பாசம் போன்றவைகளையும்  சினிமாக்கதைகள் மூலம் மட்டுமே உணரும் நிலை வருமோ என்று தோன்றுகிறது. ஒரு காலத்தில் கூட்டுக் குடும்பமாக இருந்ததுபோக இன்று மூன்று அல்லது  நான்குபேர் இருக்கும் சிறு குடும்பத்திலேயே நாம் தீவுகளாக வாழும் காலக்கட்டத்தில் இருக்கிறோம். இதில் குடும்பப் பிணைப்புகளும் நெறிகளும் நலிந்து வருகின்றனவா என்று நமக்கு கவலை இருக்கலாம்.
ஆங்கில நாவலாசிரியர்  ஷோபா டே பொதுவாக பாலுணர்வுகளை அடிப்படையா வைத்து தன் கதைகளை அமைக்கிறார் என்று ஒரு குற்றசாட்டு உண்டு. இருந்தாலும் அவர்  ஒரு தாய் என்ற அடிப்படையில் எழுதியிருக்கும் புத்தகங்கள் குறிப்பிடத்தக்கவை.
அவருடைய ஸ்பீட் போஸ்ட்(Speed Post) என்ற தன் புத்தகம்,  தன் ஆறு குழந்தைகளுக்கும் வாழ்க்கையின் பல அம்சங்களைப் பற்றி கடிதம் எழுதுவதாக அமைந்துள்ளது. அவருடைய இரு திருமணங்களிலிருந்தும்  உள்ள இவரது ஆறு குழந்தைகளும் பலதரப்பட்ட  வயதுள்ளவர்கள். ஆறு பேருக்கும் பொருந்தும் வண்ணம் பேசும் இவருக்கு ஆறு குழந்தைகளுடனும் நெருக்கமான சினேகிதம் உண்டு.
இவர்களின் முக்கியமான நாட்களின்போது – பிறந்த நாள் போன்றவை – இவர்களுக்கு இவர் மனம் விட்டு கடிதம் எழுதி தன் எண்ணங்களைப் பரிமாரிக்கொள்வது வழக்கமாம். “இதைப் பற்றி என்  பதிப்பாளரோடு பேசிக்கொண்டிருந்தபோது, அவர் இவற்றை தொகுத்து புத்தகமாக வெளியிடலாம் என்றார். ஆனால் என் குழந்தைகள் யாரும் நான் அவர்களுக்கு எழுதிய கடிதங்களைப் பிரசுரத்திற்கு மறுத்துவிட்டார்கள். வேறு வழியில்லாமல் நான் வேறு புதிதாகக் கடிதங்கள் எழுதும்படி ஆயிற்று…” என்று சொல்லும் ஷோபா டே, பிறருக்கு அறிவுரை கூறுமளவுக்குத்  தான் அப்படி ஒன்றும் சிறந்த தாய் இல்லை என்கிறார். “ஆனால், நான் என் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறேன். அவ்வளவே,” என்கிறார்.
இவர் நல்ல தாயா, எழுத்தாளரா என்ற கேள்விகளைத் தாண்டி இவர் சொல்லும் ஒரு கருத்து மனதில் பதிவதென்னவோ நிஜம்: “ஒரு பெற்றோர் இப்படி இருக்க வேண்டும் அப்படி இருக்க வேண்டும் என்று நான் சொல்ல வரவில்லை. ஆனால் ஒரு சின்ன யோசனை சொல்ல விரும்புகிறேன்.  பெற்றோர் அடிப்படையில் தன் குழந்தைகளிடம் நம்பிக்கையுள்ளவர்களாக இருக்க வேண்டும். உறவுகளின் அஸ்திவாரமே நம்பிக்கையில்தான் அமைந்திருக்கிறது. உங்கள் குழந்தைகளை சந்தேகப்படுவது உங்கள் இணைப்பையே அரித்துவிடும்.”  உணர்ந்து சொன்ன சத்தியமான வார்த்தைகள்.
இதே உணர்வை மற்றொரு தாய் பிரதிபலித்ததை சில வருடங்கள் முன்பு ஒரு செய்தியில் படித்தேன்.
இந்தியாவில் என்று இல்லை. ஓரளவு உலகெங்கிலுமே – அதுவும் குறிப்பாக ஆசிய நாடுகளில் – பள்ளியிறுதித் தேர்வுகளும் அனுமதித் தேர்வுகளும் பலக் குடும்பங்களில் ஒரு சோதனைக் காலமாகக் கருதப்படுகிறது. மன உளைச்சல்களும், மன அழுத்தமும் இந்தக் காலக்கட்டத்தில் சர்வ சகஜம்.
தாய்லாந்தில் ஒரு பெண் தன் மகளுக்காக ஒரு பெரிய வல்லமை உள்ளப் பள்ளிக்கூடத்தை எதிர்த்துப் போராடினார்.  சுமலீ என்ற அந்தப் பெண் ஒரு வழக்கறிஞர். இவரது மகள் உயர் கல்விக்கு ஒரு புகழ் வாய்ந்த, தரமான பள்ளியில் சேருவதற்காக எழுதிய அனுமதித் தேர்வில் வெற்றிபெறவில்லை.தேர்வு மிகக்கடினமானது என்று அந்தக் குடும்பம் சமாதானம் செய்து கொண்டு விட்டது. ஆனால் எதேச்சையாக சுமலீக்கு அந்தத் தேர்வின் இதர முடிவுகளைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அதில், இவரது மகளைவிடக் குறைந்த மதிப்பெண்கள் பெற்ற சில மாணவர்களுக்கு அந்தப் பள்ளியில் அனுமதி கிடைத்திருப்பது தெரிய வந்தது.
அவ்வளவுதான். அந்தப் பள்ளியை எதிர்த்து வழக்குப் போட்டார். அந்தப் பள்ளியதிகாரிகள் முதலில் மறுப்புத் தெரிவித்தாலும் இவர் விடாது போராடியதில், அனுமதித் தேர்வு முறையில் ஓட்டை இருப்பது தெரிய வந்தது. சமூகத்தில் சக்தி உள்ள புள்ளிகளைத் திருப்தி படுத்த சில மாணவர்கள் அனுமதிக்கப்பட்டிருந்தனர்-தகுதியில்லாமல். மிக்க மதிப்பும் மரியாதையும் உள்ளப் பள்ளிக்கூடத்தில் இப்படிப்பட்ட ஊழல் இருப்பது தெரிந்ததும் பலருக்குப் பெரும் அதிர்ச்சி. குழந்தைகளுக்கு வழிகாட்டியாக அமைய வேண்டியப் பள்ளிக்கூடம் இப்படி தவறு செய்கிறதே என்று பலர் குமுறினர்.
இதெல்லாம் உண்மை வெளிவந்து, அந்தப்பள்ளியின்  குற்றம் நிரூபணம் ஆனபின்னரே. ஆனால் முதலில் சுமலீ போராடத் துவங்கியபோது அவரை எள்ளி நகையாடியவரே அதிகம். விவரம் புரியாமல் ஒரு முதன்மையான ஸ்தாபனத்தை எதிர்த்துப் போராடுகிறார் என்று நினைத்தவர்களே அதிகம்
ஆனால், தன் மகளின் திறமையில் தாய்க்கு  அழுத்தமான  நம்பிக்கை இருந்தது. இதிலும் வேதனை என்னவென்றால்,இவரும் தன் பெரிய இடத்துத் தொடர்புகளைக் கொண்டு தன் மகளுக்கு சிறந்த பள்ளியில் இடம் வாங்கியிருக்கலாமே….அநாவசியமாக இப்படி சமூக ஓட்டத்திற்கு எதிராக ஏன் சண்டைப் போட்டுக் கொண்டு…என்று இவரை விமரிசித்தவர்களும்  உண்டாம்.
“என் தொழில் மூலம் கிடைத்த நண்பர்கள் மூலம் எளிதாக என் மகளுக்கு நல்ல மற்றொரு கல்வி நிறுவனத்தில் படிக்க வைத்திருக்க முடியும். ஆனால், அது எனக்கே அவள் திறமையின் மேல் நம்பிக்கை இல்லை என்று கூறுவதுபோல் அல்லவா ஆகும்? அது அவளுக்கு நான் இழைக்கும் பெரிய அவமரியாதை இல்லையா? நான் என் மகளுக்கு எதிர்காலத்தில் உலகளவில் போட்டிகளை சந்திக்கும் தன்மையை வளர்க்க விரும்புகிறேன்.” என்று இந்தத் தாய் தன் போராட்டத்துக்கு விளக்கம் அளித்தார்.
ஒவ்வொரு தாயும் மனதில் கொள்ள வேண்டிய சொற்கள்.
இன்று பல இளைஞர்கள் தங்கள் எண்ணங்களைத் தாங்கள்  நம்பும் கொள்கைகளைப் பலவிதங்களில்  வெளிப்படுத்துகிறார்கள் என்றால் அவர்களின் பெற்றோர்கள் அவர்களிடம் வைக்கும்நம்பிக்கையும் ஒரு காரணம்.
“சாலை சந்திப்புகளில் சிவப்பு விளக்கு எரிகிறது. உடனே வாகனத்தை நிறுத்த வேண்டியதுதானே..இதற்கு  போலீஸ் நமக்கு அறிவுரை செய்யும் அளவு வைத்துக்கொள்ள வேண்டுமா? அதேபோல், நாம் வசிக்கும் இடங்களில் நாம் பொறுப்பாக எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது பற்றியும் நமக்கே தெரிய வேண்டும். சிகரெட் புகைத்தல் நமக்கும் பிறருக்கும் கெடுதல், குப்பைகளைக் கண்ட இடத்தில் எறிவது அசிங்கம், பிளாஸ்டிக் கவர்களைக் கண்ட இடங்களில் போடுவது இயற்கைக்கேடு என்பது போன்ற விஷயங்கள் நமக்கே புரிய வேண்டும்…”  என்ற ரீதியில் பேசும்இளைஞர்கள் பெருமிதமூட்டுகிறார்கள்.
இப்படித் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளும் இளைஞர்கள் வெறும் பேச்சோடு நின்றுவிடுவதில்லை.  ஏழைக் குழந்தைகளுக்கு கல்வியறிவு பெற உதவி செய்கிறார்கள்; குப்பைகள் அகற்றுவதில் களத்தில் இறங்குகிறார்கள்; சுற்றுபுற சூழல் பாதுகாப்பு வேலைகளில் ஈடுபடுகிறார்கள். இப்படிப் பல விதங்களில் இவர்களின் செயலாக்கப் பட்டியல் நீள்கிறது. இப்படி ஆக்கப்பூர்வமாக செயல்படும் இளைஞர்கள் மனதுக்கு இதமாக இருந்தாலும் ஆங்காங்கே  நகர் மற்றும் கிராமப் புறங்களில் வேலை ஏதும்செய்யாமல் நேரத்தை வீணடிக்கும் இளைஞர்களும் கவலையை ஏற்படுத்துகிறார்கள்.
இளைஞர்கள், ஆங்காங்கே உட்கார்ந்து வெட்டியாக அரட்டையடித்துக்கொண்டு நேரத்தை வீணடிப்பதைக் காணும்போது இவர்களுக்கு வேறு வேலையே கிடையாதா என்று தோன்றும். ஒரு நாளில் – இருபத்து நாலு மணி நேரங்களே கொண்ட ஒரு நாட்பொழுதில் எப்படி இவர்களால் இப்படிக்  கவலையில்லாமல் நேரத்தை வீணாக்க முடிகிறது என்று வியப்பாக இருக்கும். என் தொழிலதிபர் நண்பர் ஒருவர் தன்னுடைய ஒரு  நாள் பொழுதில் எத்தனை அதிகம் வேலைகளை செய்யமுடியும் என்று முயல்பவர். தன் ஒவ்வொரு நிமிடத்தையும்  ஏதாவது ஒரு பயனுள்ள செயலில் செலவழிக்க வேண்டும் என்று கணக்கு பார்ப்பவர். பயனில்லாத செயல் ஏதாவது செய்யும் சூழ்நிலை ஏற்பட்டால், “நான் பணக்காரனாக இருக்கலாம். ஆனால் நேரத்தைப் பொறுத்தவரை நான் ஏழை. தாராளமாக செலவழிக்கும் அளவுக்கு என்னிடம் நேரம் இல்லை…” என்று நழுவி விடுவார்.
ஆனால் இதே “நேரமில்லை..” என்ற சாக்கைப் பலர் தங்கள் சோம்பேறித்தனத்துக்கோ அல்லது தங்களால் செய்ய மனமில்லாத வேலைகளுக்கும் கூறுவதுண்டு. இப்படி சில வேலைகள் செய்வதற்கு பலருக்கு உடல் வணங்காது. ஆக்கப்பூர்வமான வேலைகளுக்கு நேரத்தை திட்டமிடுவதுஅவசியம். அதெப்படி நேரமில்லை என்று கூறுகிறார்கள் என்றுபுரிவதில்லை.  கடவுள் ஒரு நாளுக்கு 23 மணி நேரம்தான் வைப்பதாக இருந்தாராம். ஆனால் கடைசி நிமிடத்தில் மனம் மாறி எதற்கும் உபரியாக இருக்கட்டும் என்று நினைத்து 24 மணி நேரம் அமைத்தாராம். இப்படி உபரியாக ஒரு மணி நேரம் இருக்கும்போது எப்படி நேரமில்லாமல் இருக்கும்…?” என்று  ஒரு  ஜோக் இணையத்தில் சுற்றி வந்தது.
நேரத்தைத் திட்டமிட்டு, கணக்கிட்டு செலவழித்து வாழ்க்கையில் வெற்றியடைய வழிகள் பல இருக்கும்போது மேலே சொன்னபடி நேரத்தை வீணாக்குபவர்கள் மேல் கோபப்படுவதா, பரிதாபப்படுவதா என்று தெரியவில்லை.
எத்தனையோ இளம் குருத்துக்கள்  தங்களையறியாமலேயே அழிவுப்பாதைகளைத் தேர்ந்தெடுத்துவிடுகின்றனர்.  இதற்கு என்ன காரணம் என்று அறுதியிட்டு எதையும் சொல்ல முடியாவிட்டாலும் ஓரளவு குடும்ப சூழ்நிலையும் அடிப்படைக் காரணம் என்று சொல்லலாம்.
குடும்பத்தில் பொதுவாக ஒருவருக்கொருவர் மனம் விட்டு எந்த ஒரு கருத்தையும் – அவை சரியா தவறா என்பது வேறு விஷயம் – வெளிப்படுத்தும் சூழ்நிலை இருப்பது அவசியம். வீட்டில் எத்தனைக்கெத்தனை அன்பும் ஆதரவும் வெளிப்படுகிறதோ அத்தனைக்கத்தனை இளைஞர்களின் எண்ணங்களும் ஆரோக்கியமாக இருக்கும். அன்பு இல்லாமல் குடும்பம் இருக்குமா என்ற கேள்வி எழலாம். ஆனால் அன்பையும் அக்கறையையும் வெளிப்படுத்துவதிலும் வித்தியாசங்கள் உள்ளன.
ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரு நியதி, ஒழுங்குமுறை இருக்கும். அவைக் குடும்ப அங்கத்தினர் அனைவருக்கும்  ஒரே மாதிரிதான் இருக்க வேண்டும் என்பது முக்கியம்.பெரியவர்களுக்கு ஒரு நியதி சிறியவர்களுக்கு வேறொரு நியதி என்றால் சரிபடாது. இரண்டாவதாக எந்த ஒரு நியதியின் அர்த்தத்தையும், முக்கியத்துவத்தையும்  இளைஞர்களுக்கு புரிய வைப்பது மிக அவசியம்.
“என் காலத்தில் நான் செய்தேன்..அதனால் நீயும் கேள்வி கேட்காமல் செய்..” என்றால் இந்த காலத்து இளைஞர்கள் ஒத்துக் கொள்ள மாட்டார்கள். காரணம்,டிவி, இணையம் என்று சுருங்கி வரும் உலகில் வித்தியாசமான கோணங்களை அவர்கள் சந்திக்கிறார்கள். இதனால் பாரம்பரிய பழக்க வழக்கங்களின் நியாயங்கள்  அவர்களுக்கு புரிவதில்லை.விளக்கமில்லாத அடக்குமுறையை அவர்கள் ஏற்றுகொள்ளவே மாட்டார்கள். நாம் போடும்  ஒவ்வொரு நியதிக்கும் பொறுமையாக விளக்கம் அளிப்பது மிக அவசியம்.
சுமார் பதினைந்திலிருந்து முப்பது வயது வரையில்தான் மனித வாழ்க்கையில் மிக முக்கியமான காலம். பல ஆக்க பூர்வமான செயல்கள், சாதனைகள் வெளிப்படுவது இந்த சமயத்தில்தான். இந்தக் காலக் கட்டத்தில் இவர்கள் ஆர்வங்களுக்கு ஒரு சரியான வடிகால் கிடைப்பது மிக அவசியம். பல சிந்தனைக் குழுக்கள் அல்லது பொது நல சேவைக் குழுக்கள் இவற்றில் சேர்ந்து பணியாற்றும்போது இவர்களின் ஆர்வங்களுக்கு ஒரு வடிகால் கிடைப்பதோடு சமூகத்தில் ஒரு ஈடுபாடு உண்டாகிறது. சமூகத்தில் இருக்கும் நிறை குறைகளை இவர்கள் அறியும்போது பரந்த சமுதாயத்தில் தாம் எவ்வளவு சிறிய புள்ளி என்ற உண்மையும் விளங்கும். சமூகத்தில் இருக்கும்  குறைகளில் கவனம் செல்லும்போது தமது தனிப்பட்ட வாழ்க்கையில் குறைகள் ஏதும் இருந்தாலும் அவைப் பெரிதாக தெரியாது.
இளைஞர் சமுதாயம் தீய வழிகளில் செல்லாமல் தங்கள் வாழ்க்கையில் சிறந்து விளங்க இப்படிப்பட்ட வடிகால்கள் முக்கிய அங்கம் வகிக்கின்றன. பல குடும்பங்களில்  விளையாட்டு, இசை, கைவேலை என்று சிறு வயது முதலே ஓய்வு நேரப் பழக்கங்களாகப் பழக்கப் படுத்திவிடுவார்கள். இன்னும் சில குடும்பங்களில் கலையார்வங்களை  வளர்ப்பார்கள்.  ஆண் பெண் பேதங்கள் இல்லாமல் பலவிதக்கலைகளிலும், விளையாட்டிலும் ஆர்வங்கள் பலவிதங்களில் வளர்க்கப்படும். இவையெல்லாமே இளம் வயது ஆர்வங்களுக்கு ஒரு வடிகால் வகுக்கும் வழிமுறைகள்தாம்.
தவிர, வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தையும் பல பெற்றோர்கள் இளைஞர்களிடம் தூண்டி விடுவதால் படிப்பிலோ, விளையாட்டிலோ சாதிக்க வேண்டும் என்ற ஆர்வமும் பல இளைஞர்களிடம் காணப்படுகிறது.
வாழ்க்கையில் முன்னேற வேண்டும், அரிய ரசனைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும் அல்லது சமுதாயத்தில் ஈடுபாடு கொள்ள வேண்டும் என்று பல இலக்குகளைக் குறி வைத்துக் கொண்டு செல்லும்போது தீய வழிகளில் அவர்கள் கவன்ம் சிதற வாய்ப்பில்லை.
ஆங்கிலத்தில் “sense of purpose” என்று சொல்வதுபோல் வாழ்வில் ஒரு நோக்கம் நோக்கி செல்லும் வகையில் நம் வாழ்ழ்க்கையைஅமைத்துக்கொள்வது அவசியம். பெரிதோ சிறிதோ ஒரு நோக்கம் இருப்பது அவசியம்.  இல்லாவிடில் சருகுபோல் காற்றடிக்கும் திசையெல்லாம் சுழலும்படி நேரும். உடலும் உள்ளமும் துடிப்பாக இருக்கும் இளம் வயதில் ஆக்க பூர்வமாக செயல்படவில்லையென்றால் பின்னர் வயதான காலத்தில் மன நிறைவும் அமைதியும் இல்லாமல் இருக்க நேரிடும். இதற்கான வழிகாட்டல் இளம்வயதில்  அமைவது  அவசியம்.
 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.