எண்ணங்கள் சிந்தனைகள் – எதிர்வினைக்கான பதில்கள்

தொடர்புள்ள முந்தைய பதிவுகள்:
1. எண்ணங்கள், சிந்தனைகள்: டி.கே. அகிலன்
2. எண்ணங்கள், சிந்தனைகள் கட்டுரையை முன்வைத்து…: வ.ஸ்ரீநிவாசன்

Faces_Two_Multiple_Colors_Images_India_Art_Painting_DVS Krishna

‘எண்ணங்கள், சிந்தனைகள்’ என்னும் தலைப்பில் 20-12-2015 அன்று வெளியான கட்டுரையை மதித்து, நீண்ட எதிர்வினையை அளித்திருக்கும் வ.ஸ்ரீநிவாசன் அவர்களுக்கு நன்றிகள். இந்த எதிர்வினைக்குப் பொருத்தமான கவித்துவமான நிழல்படத்தை உபயோகப்படுத்தியிருக்கும் சொல்வனத்துக்கும் பாராட்டுகள்.
அட்டவணை இட்டு தன் கருத்துக்களை வ.ஸ்ரீநிவாசன் எழுதியிருக்கிறார். இன்னொரு அட்டவணையிட்டு அதற்கான பதில்களை எழுதினால், அது கூறவந்தக் கருத்தை விட்டு விட்டு, வார்த்தைகளுக்கு வார்த்தை பதிலளிப்பதாக மாறிவிடும். அவ்வாறு வார்த்தைக்கு வார்த்தை பதிலளிக்கும் அரசியல் இது இல்லை என்றே கருதுகிறேன். எனவே பொதுவான என் எண்ணங்களை இங்கு முன் வைக்கிறேன். அவை முன்வைக்கப்பட்ட எதிர்வினைகளின் வரிசையில் இல்லாமல் இருக்கலாம். பல எதிர்வினைகளுக்கு ஒரே பகுதி பதிலாகவும் அமைந்திருக்கலாம்.
முதலில் இந்தக் கட்டுரையின் பேசுதளம் என்னளவில் என்ன என்பதை கூறிவிடுகிறேன். இது உண்மையில் ஆன்மீகம் என நான் கருதுவதின் சாரம். தர்க்கம் எங்கு முடியுமோ அங்குதான் ஆன்மீகம் தொடங்கும் என்னும் ஒரு கூற்று உண்டு. இதற்கு அர்த்தம் ஆன்மீகத்திற்கும் தர்கத்திற்கும் தொடர்பு இல்லை என்பதல்ல. ஆன்மீக அடைதலுக்கு தர்க்கமும் ஒரு கருவி. அது கருவி மட்டுமே. அந்தக் கருவிக்கு வெளியேதான் ஆன்மீகம் உள்ளது.

ஸ்தூல உலகம் பற்றி

ஸ்தூல உலகம் உள்ளது. (இல்லை என்று கூறும் கருத்துக்களும் உள்ளன என்றே நினைக்கிறேன்). ஆனால் நாம் அறியும் ஸ்தூல உலகு இங்கு இருக்கும் ஸ்தூல உலகு அல்ல. அது நம் புலன்களால், புலன்களின் திறனுக்கேற்ப நாம் உணர்பவை. புலன்களால் உணரப்பட்டவை மூளையால், அங்கிருக்கும் முந்தையப் பதிவுகளுக்கேற்ப அறியப்படுபவை. அல்லது அறிபவன், புலன்கள் மற்றும் புலனுணர்வுகளை மூளை செயல்படுத்தும்(Processing) விதம் ஆகியவற்றின் மூலம் அறிபவை! உதாரணமாக உங்களுடைய சிவப்பு நிறமும் என்னுடைய சிவப்பு நிறமும் ஒன்று போல் இருக்க வேண்டும் என்னும் அவசியம் இல்லையே. உங்கள் சிவப்பு நிறம் எனக்கு நீலமாகவும் உங்கள் நீல நிறம் எனக்கு சிவப்பாகவும் தோற்றமளிக்கலாம், ஆனாலும் எத்தகைய குழப்பங்களும் இல்லாமல் நிறங்களை நாமிருவரும் பகுத்தறிவது சாத்தியம்தானே. அதாவது நான் உணரும் நீல நிறத்தை சிகப்பு என்றும் சிகப்பு நிறத்தை நீலம் என்றும் கூறுவேன். அல்லது உங்கள் சிகப்பு நிறமும் என் நீல நிறமும் ஒன்று, இருவரும் அதை சிவப்பு என்றே கூறுவோம் – குழப்பமாக இருக்கிறதா? கொஞ்சம் யோசியுங்கள், புரிந்து விடும்.
மேலும் தனிமனிதனைப் பொறுத்தவரையில் அம்மனிதன் அறிந்தவை அவன் அறியும் முறையில்\வழியில் மட்டுமே வெளி உலகத்தில், அது ஸ்தூல உலகாக இருந்தாலும் சூட்சும உலகாக இருந்தாலும், இருக்க முடியும். அவன் அறியாதது எதுவும், அம்மனிதனைப் பொறுத்தவரையில், எங்கும் இல்லை. ஆக ஸ்தூல உலகில் என்ன இருக்கிறது என்பது பொருட்டல்ல. அதை நாம் எவ்வாறு அறிகிறோம் என்பதுதான் இங்கு முக்கியம். அதாவது மனிதன் அறியாதது எதுவும் அம்மனிதனின் உலகில் இல்லை.
எனில் மனதில் இருப்பவற்றை மட்டும்தான் மனிதனால் அறிய முடியுமா? அப்படி இல்லை என்றே கருதுகிறேன். புதிய அறிதல்கள் நிகழலாம். ஆனால் அவையும் மனதில் முன்பே இருப்பவற்றைச் சார்ந்துதான் இருக்கும். அதாவது எல்லா அறிதல்களும் மனம் முன்பே அறிந்தவற்றைச் சார்ந்துதான் நிகழும். புதிதாக அறியும் அனைத்தையும் தொடர்புறுத்துவதற்கான அறிதல்கள் மனதில் முன்பே அமைந்திருக்கின்றன. முற்றிலும் புதிதான அறிதல்கள் நிகழும் என்றால், அம்மனிதன் ஒரு எல்லையைக் கடந்திருப்பான். அந்த எல்லை எது என்று கூறும் தகுதி தற்போது எனக்கு இல்லை.

எண்ணங்கள் அற்று இருக்கும் நிலையில் இயக்கங்கள் பற்றி

எண்ணங்களால் உந்தப்படாத மனித இயக்கங்கள் இல்லை. அந்த எண்ணங்களின் மேல் மனிதர்கள் விழிப்புடன் இருக்கலாம் அல்லது விழிப்பில்லாமல் இருக்கலாம். எண்ணங்களின் மேல் விழிப்புடன் இல்லை எனில் அங்கு எண்ணங்கள் இல்லை என்று அர்த்தமல்ல. மனிதன் செயல்பட வேண்டுமெனில் மூளை இயங்க வேண்டும். மூளை இயங்கும் செயல்பாடுதான் மனம். இன்னும் சற்றே விரிவாகப் பார்த்தால், மனித உடலில் உள்ள ஒவ்வொரு ‘செல்’லும் ஒரு தனி உயிரினம் என்று கூறலாம். இந்த வகையில் மனிதன் பல கோடி கோடி உயிர்களின் தொகுப்பு. மனித உடலில் உள்ள ஒவ்வொரு ‘செல்’லும், அவற்றின் இயக்கங்களின் எல்லைக்குள், அவற்றிற்குத் தேவையானவற்றை அவற்றின் சுற்றுச் சூழலிலுருந்துப் பெற்று அவையாகவே இயங்குகின்றன. அவற்றை இயக்கும் அறிவு அவற்றினுள்ளேயே உள்ளது. அதாவது ஒரு செல்லின் மனம் அந்த செல்லினுள்ளேயே உள்ளது. இன்னொரு தளத்திலிருந்துப் பார்த்தால், அந்த ‘செல்’லின் இயக்கம் அதன் மீது செலுத்தப்படும் புற விசைகளால் இயக்கப்படுகிறது. அந்த விசைகளை மனித மூளை ஒருங்கிணைக்கிறது. மூளையின் செயல்பாடுதான் மனம். அது எண்ணங்கள் மற்றும் நினைவுகளின் தொகுப்பு. எனவே எண்ணங்கள் இல்லாமல் (அதாவது மூளை இயங்காமல்) எந்த மனித இயக்கங்களும் இல்லை. மனம் என்பதை மூளையின் செயலியக்கம் (The process happening in brain) என்பதைப் புரிந்துக்கொள்ள அல்லது ஏற்றுக்கொள்ள முடிந்தால், எண்ணங்கள் இல்லாமல் மனித இயக்கம் இல்லை என்பதைப் புரிந்துக்கொள்ள அல்லது ஏற்றுக்கொள்ள இடர் இல்லை. இங்கு உயரத்திலிருந்துத் தவறி விழும் மனிதன் ஈர்ப்பு விசையால் பூமியின் பரப்பை நோக்கி விழுவதை மனித இயக்கம் என்று கூறவில்லை.

அறிவியல் சான்றுகள் குறித்து

அறிவியல் சான்று என்பது என்ன? புள்ளியியல் மூலம் ஒரு நிகழ்வை நிலைநிறுத்துவதைத்தானே அறிவியல் சான்று என்கிறோம். அதாவது ஒரு கருத்து மீண்டும் மீண்டும் நிகழ்த்தப்படும் சோதனைகளில் ஒரே முடிவை (அல்லது கிட்டத்தட்ட ஒரே முடிவை) அளித்தால் அதை அறிவியல் சான்று என்கிறோம். மேலும் இவற்றை அறிவியலாளர்கள் எனப்படுபவர்கள் தரவுப்படுத்தியிருக்க வேண்டும் என்னும் நிபந்தனையையும் வைக்கிறோம். ஆனால் இந்த ஆராய்ச்சிகளை நிகழ்த்துபவர்களை அறிதல்களை அடைபவர்களை நாம் அறிவியலாளர்கள் என ஒப்புக்கொள்வதில்லையே. அவர்களை மறைஞானிகள் (Mystic) என்று ஒதுக்கி வைத்து விடுகிறோமே. அல்லது கடவுளாக மாற்றி விடுகிறோமே. எனில் இங்கு அறிவியல் சான்றை முன்வைக்க முடியுமா?

மனதின் இருப்பிடம் குறித்து

மனம் என்றால் என்ன என்று பலரால் பல விதங்களில் விளக்கப்பட்டுள்ளது. அதையே, இங்குத் தேவைப்படுவதால் மீண்டும் ஒருமுறை, ஒருவிதமாகக் கூறலாம். மனம் ஒரு தனித்த இருப்பு அல்ல. அது மூளையின் இயக்கம். மூளை ‘செல்’களின் (நியூரான்களின்) தொகுப்பை மூளையின் இருப்பு எனலாம். அவை தொடரந்து வேதிவினை அல்லது வேதிவினையின் விளைவான மின்இயக்கத்தால் இயங்குகிறது. அந்த இயக்கம், அதாவது ஒரு நியூரானின் வேதி இயக்கம் அடுத்த நியூரான்களை தூண்டுவதால் அங்கும் நிகழும் வேதிஇயக்கம் இவற்றின் தொடர் சங்கிலியை மனம் என்று கூறலாம். கணினியின் ப்ராஸஸர் வேலை செய்வது மின் இயக்கத்தை அதிவேகத்தில் அடுத்தடுத்த bits எனப்படும் நினைவுக் கண்ணிகளுக்குச் செலுத்துவதுதானே. அங்கு செல்வது என்ன? மென்பொருளால் வழிப்படுத்தப்பட்ட மின் இயக்கம்தானே? மின்இயக்கமாக மாறிய மெனபொருள்தானே? (இங்கு Firmware, Software இரண்டையுமே மென்பொருள் என்று எடுத்துக்கொள்வோம்). ப்ராஸஸர் இருக்கிறது. அதில் மென்பொருள் மின் இயக்கமாக அங்கும் இங்கும் செல்வதன் மூலம் ப்ராஸஸர் இயங்குகிறது. அதேபோல மூளை இருக்கிறது. மனம் என்னும் மென்பொருள் வேதி\மின் இயக்கங்களின் மூலம் மூளையினுள் செல்வதால் மூளை இயங்குகிறது.
மனிதர்களால் தங்கள் மூளை இயங்குவதை அறிய முடியும். (விலங்குகளால் முடியுமா?, முடியுமெனில் அதன் எல்லை என்ன?) அந்த அறிதல்தான், அறியும் உணர்வுதான் நாம் உணரும் எண்ணங்கள். மூளை இயங்குவதை அறிவதையும், மூளையால் மீண்டும் அறிய முடியும். சாதாரணமாக மேல் மனம் என்னும் இயக்கத்தை மட்டும்தான் பெரும்பாலான மனிதர்கள் அறிகிறார்கள். ஆனால் மூளையின் அனைத்து இயக்கங்களையும் தகுந்தப் பயிற்சியின் மூலமும் முயற்சியின் மூலமும் அறிய முடியலாம் என்று கூறப்படுகிறது. இந்த அறிதலை நோக்கி பயணிப்பவர்கள், மனதின் மேல் பகுதியிலிருந்து உள்நோக்கிச் செல்வதை அனுபவப்பூர்வமாக அறியலாம். அது அவர்களின் முயற்சியையும் பயிற்சியையும் பொறுத்தது. மனிதனை, தன் மூளையின் இயக்கத்தை அறியும் சாத்தியமுள்ள விலங்கு என்று கூறலாமா?
மேலே கூறியவற்றைப் புரிந்துக் கொள்ள அல்லது ஏற்றுக் கொள்ள முடிந்தால், பல கேள்விகளுக்கு மூலக் கட்டுரையிலேயே பதில் உள்ளது என்றே கருதுகிறேன். அவற்றை மீண்டும் இங்கு கூறத் தேவையில்லை. அல்லது இந்தக் கருத்துக்களை ஏற்றுக் கொள்ள முடியாவிட்டால், எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளிப்பது சாத்தியம் இல்லை. ஏனெனில் இவை மேலே கூறப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில் முன்வைக்கப்பட்டவை.
மனித மூளையில் சுமார் 100 பில்லியன் நியூரான்கள் உள்ளனவாம். அவை ஒவ்வொன்றும் 1000 முதல் 10000 வரையிலான பிற நியூரான்களுடன் தொடர்புறுத்தப்பட்டிருக்கின்றனவாம். அதாவது ஒவ்வொரு நியூரானும் சராசரியாக 5500 வேறு நியூரான்களுடன் தொடர்புறுதப்பட்டிருக்கிறது. வேறு வார்த்தைகளில் கூறினால் ஒவ்வொரு நியூரானும் சராசரியாக 5500 வெவ்வேறு நிலைகளில் இருக்கும் சாத்தியத்தைப் பெற்றிருக்கின்றன. அதாவது ஒன்றரை கிலோ எடையுள்ள மனித மூளை, சுமார் 5500 ^ 100 பில்லியன் (100 பில்லியன் முறைகள் 5500-ஐ பெருக்குவதன் மூலம் கிடைக்கும் எண்) வெவ்வேறு நிலைகளில் இருக்கும் சாத்தியங்களை உடையது. இந்தச் சுட்டியைப் பார்க்கவும்.

ஆக மனித மூளையின் சாத்தியங்களை கொஞ்சம் கற்பனைச் செய்ய முடிகிறதா? இது எப்படி சாத்தியம் என்பதை இன்னொருவர் நமக்குக் கூற முடியாது. இந்தக் கேள்வி நமக்குள் தோன்றினால், நாமேதான் அதன் விடையை கண்டடைய வேண்டும். அந்தத் தேடல்தான் ஆன்மீகத் தேடல்.

மூளை தன்னால் உருவாக்கப்பட்ட மனதின் துணைக்கொண்டு தன் உருவாக்கத்தையும் இருப்பையும் அழிப்பையும் செய்வது பற்றி

மனதின் அல்லது மூளையின் முதல் பதிவு எவ்வாறு உருவாகியிருக்கக் கூடும் (இந்தக் கட்டுரையின் பேசுதளத்தில்) என்பது மூலக்கட்டுரையிலேயே உள்ளது. உடலின் இயக்கத்தை மூளை கட்டுப்படுத்துகிறது என்று கூறும்போது, உடலின் பாகமான மூளையின் இயக்கத்தையும் அதுதானே கட்டுப்படுத்த வேண்டும்? மூளையின் இயக்கம்தானே மனம். அதாவது மூளை இயங்குவதைப் பொறுத்து அல்லது மனதின் இயல்பைப் பொறுத்து மூளையின் உருவாக்கமும் இருப்பும் அழிப்பும் அதனாலேயே இயக்கப்படுகிறது.
மேலும் மனம் ஒரு விஷயம் அல்லது கருத்தைக் குறித்து சில நினைவுப் பதிவுகளை ஏற்படுத்தியிருக்கிறது. ஒரு வேளை அந்த விஷயம் அல்லது கருத்துக் குறித்து நம் அறிதல் விசாலம் அடையும்போது, முன்பு இருக்கும் நினைவுப் பதிவுகள் முற்றிலும் புதிய விதத்தில் மாற்றியமைக்கப்படுவது சாத்தியம்தானே. இதுவும் ஒருவகையில் மூளை தன் உருவாக்கத்தையும் இருப்பையும் அழிப்பையும் செய்வதுதானே. இவற்றை புறப் பொருட்களின் உருவாக்கம் இருப்பு அழிப்பு என்பவற்றுடன் ஒப்பிட்டுப் பொருத்திக்கொள்ள முடியாமல் இருக்கலாம். ஆனால் மனதின் அல்லது மூளையின் நுண்ணிய நிலையில் கற்பனை செய்து கொள்ள முடியலாம்.

மனதின் ஆதிக்கத்திலிருந்து விடுபடுவது குறித்து

மனிதச் செயல்களையும் அச்செயல்களுக்கான மனஇயக்கங்களையும் நேர்மையுடன் கூர்ந்து நோக்கினால், எந்தச் செயல்களும் கட்டுப்படுத்தப்பட்டவையாக இல்லை என்பதை அறியலாம். அதாவது மனம் தன்னிச்சையாக இயங்குகிறது. அந்த இயக்கத்தின் அடிப்படையில் செயல்கள் நடைபெறுகின்றன. நான் செயல் புரிகிறேன், நான் விரும்பும்வகையில் செயல் புரிகிறேன் என்று கூறுபவை வெறும் எண்ணங்கள்தான்.
மனதின் ஆதிக்கத்திலிருந்து விடுபடுவது குறித்தும் பலரால் பலவிதங்களில் விளக்கப்பட்டுள்ளது. ஒரு முறை கூட என் வழியில் விளக்க முயல்வதால் புதிதாக எதுவும் நிகழ்ந்து விடவோ அழிந்து விடவோ போவதில்லை. அந்த நம்பிக்கையில் மீண்டும் ஒரு விளக்கம்.
மூளையின் இயக்கத்தை அறிவதுதான் நாம் அறியும் எண்ணங்கள் என்று பார்த்தோம். அந்த இயக்கத்தை அறிவது யார்? அதை அறிவது, அதே மூளைதான். (இங்கு ஆன்மா போன்ற கருத்துருவாக்கங்களை சற்றே ஒதுக்கி வைத்துக் கொள்ளலாம். மூளை, மனம் என்னும் இரண்டு கருத்துக்களை மட்டும் கொண்டு விளக்க முயலலாம்.) அதாவது மனம்தான் மனதை அறிகிறது. எனில் எவ்வாறு அந்த இயக்கங்களிலிருந்து விடுபடுவது? அதை இவ்வாறு கூறலாம். ஒரு செயல் நிகழ்பெறுகிறது. அதன் மூலம் ஒன்றோ அதற்கு மேற்பட்ட விளைவுகளோ ஏற்படலாம். அந்த விளைவுகளை அறிந்த மனம், அதன் தொடர்ச்சியாக அந்த விளைவுகளால் தூண்டப்பட்டு மேலும் செயல்களை செய்கிறது அதன் மூலம் இன்னும் பல விளைவுகளைப் பெறுகிறது. இவ்வாறு நூல் பின்னல்கள் போல ஒன்றிலிருந்து பல செயல்களும் விளைவுகளும் மீண்டும் செயல்களும் உருவாகிக் கொண்டிருக்கின்றன.
இப்போது தேவையின் பொருட்டு ஒரு குறிப்பிட்ட செயலைச் செய்த மனம், அந்தச் செயல் உருவாக்கும் விளைவுகளைப் பொருட்படுத்தாமல் தேவை முடிந்த பின் அந்தச் செயலின் தொடர்கண்ணிகளிலிருந்து விடுபட்டு இருக்க முடிந்தால், அத்தகைய மனதை விடுபட்ட மனம் என்று கூறலாம். அதாவது தேவையின் பொருட்டு ஒரு செயல் செய்யப்படுகிறது. தேவை முடிந்தபின், அதன் விளைவுகள் எவ்வாறாக இருந்தாலும், அந்தச் செயலின் விளைவுகளிலிருந்தும் அந்தச் செயலில் இருந்தும் விடுபட்டு இருக்க முடிந்த மனம் விடுபட்ட மனமாகும்.
மூளையின் இயக்கம் மனம் என்று பார்த்தோம். மனம் எண்ணங்களால் ஆனது. அதாவது மூளையின் இயக்கங்களே எண்ணங்கள். உடலில் நடக்கும் அனைத்துச் செயல்பாடுகளுக்கும் மூளையின் இயக்கம் தேவைப்படுகிறது. அது இல்லாமல் போகும்போது அந்த மனிதனின் இருப்பும் இல்லாமல் போகிறது. மேலும் எண்ணங்களிலிருந்து விடுபட்டிருப்பது என்பது எண்ணங்கள் இல்லாமல் இருப்பதல்ல. எண்ணங்களின் தொடர் வினைகளிலிருந்து விடுபட்டிருப்பது. எண்ணங்களின் செயல்…விளைவு…செயல் சங்கிலித்தொடரிலிருந்து விடுபட்டிருப்பது.
மனம் தன்னைத் தானே அறிவது என்பது, சற்று ஆழமாகப் பார்த்தால், ஒரு புதிய எண்ணத்தை உருவாக்குவதுதான். மனம் இயங்குகிறது. அந்த இயக்கத்தை அறிவது மனதின் இன்னொரு திரி. மனம் போதிய விழிப்புடன் இருந்தால் அந்த அறிதலையும் அது அறியும். அதாவது மேலும் ஒரு திரி மனதில் உருவாகும். மனதின் ஒரு பகுதி இயங்குகிறது. அதை மனதின் இன்னொரு பகுதி அறிகிறது. அந்த அறிதலும் இன்னொரு மனஇயக்கமே. அந்த இயக்கத்தை மனதின் வேறொரு பகுதி அறிகிறது. இது மீண்டும் ஒரு மனதின் இயக்கம். இந்த இயக்கத் தொடரில் விழிப்புடன் உள்ளே செல்லச்செல்ல, ஒரு நிலையில் மனதின் ஒரு குறிப்பிட்ட இயக்கம், அதே இயக்கத்தை, அந்த இயக்கத்தாலே அறிகிறது. அதாவது இங்கே அறியப்படும் மனதின் இயக்கமும் (அறிபடு பொருள்) அறியும் மனிதின் இயக்கமும் (அறிபவன்), அந்த அறிதலின் வழியாக அடையப்படும் உணர்வும்(அறிவு) ஒன்றாக மாறும் என்று கூறப்படுகிறது. மனதின் இந்த நிலையே அத்தவைத தத்துவத்தில் இறுதியில் அடையப்படும் மனநிலை என்றும் கூறப்படுகிறது.
தன்னைத்தானே தீவிரமாக நோக்க முடிந்த மனதால், தன் ஆழங்களுக்குள் செல்ல முடிந்த மனதால் நினைவுகளை மறுபரிசீலனை செய்ய முடியலாம். மேலும் சிந்தனைகள் என்பதே பழையனவற்றை துழாவுவதுதான். நிகழ்கால தேவைகளுக்கு, கடந்தகாலத்தை எவ்வாறு உபயோகப்படுத்தலாம் என்பதுதான். ஆகவேதான் அங்கு அகங்காரத்திலிருந்து விடுபட்டிருக்க வேண்டிய தேவை ஏற்படுகிறது. அகங்காரம் நினைவுகளை மேலும் திரிபுப்படுத்தி விடும். உண்மைக்கு எத்தனை நெருக்கமானவர் என்பதை வேறு எவரும் எடைபோட்டு விட முடியாது. தன்னைத்தானே கேட்டுக்கொள்வது மட்டும்தான் இங்கு சாத்தியம். அது ஒருவரால் தனக்குள் எத்தனை ஆழத்துக்குச் செல்ல முடிகிறது என்பதையும் பொறுத்து இருக்கலாம்.

எண்ணங்களிலிருந்து விடுபட்டுத் தன் செயலில் ஆழ்ந்திருக்கும் குழந்தையை பற்றி

விளையாட்டிலும் செயலிலும் தான் என்பது இல்லாமல் இருக்கும் ஒரு குழந்தையைப் போல மாற முடியுமா என்னும் ஆராய்ச்சியின் ஒரு வடிவம்தான் இதன் மூலக்கட்டுரையும். தான் என ஒரு இயக்கம் இல்லாமல் தன் விளையாட்டில் மூழ்கியிருக்கும் குழந்தையின் மூளையும் அதித்தீவிரமாக செயலாற்றிக் கொண்டிருக்கும். என்ன, அந்தக் குழந்தை அந்தச் செயல்களிலிருந்து, எனவே எண்ணங்களிலிருந்தும் விடுபட்டிருக்கும்.

பிற உயிரினங்களிடமிருந்து மனிதன் எப்படி மாறுபடுகிறான் என்பது

மனிதன் பிற விலங்குகளிலிருந்து நிச்சயமாக மாறுபட்டிருக்கிறான். அந்த மாறுதல், தன் மூளையின் இயக்கத்தை, மனதின் இயக்கத்தை முழுமையாக அறியும் சாத்தியத்தைப் பெற்றிருப்பதுதான். அறிதலின் உச்சத்திற்குச் செல்லும் சாத்தியம். இதுவே பூமியில் இன்றுவரை அடைந்த உயிர்ப் பரிணாம வளர்ச்சியின் உச்சம். அந்த சாத்தியத்தின் துளியைக் கூட அனுபவிக்காமல் விடுவது, அல்லது எதிர்மறையாக அனுபவித்து விலங்குகளிலிருந்தும் தாழ்ந்து செல்வது, இயற்கை கொடுத்தக் கொடையை புறந்தள்ளுவதாகும். அது இயற்கையை, கடவுள் நம்பிக்கை உடையவராக இருந்தால் கடவுளை, அவமதிப்பதற்கு சமம்.

வெற்றி குறித்து

ஒரு நோக்கத்தை அடைவதைத்தானே வெற்றி என்றுக் கூறுகிறோம்? ஆன்மீகமும் ஒரு நோக்கமாக இருக்கும்வரை அங்கும் வெற்றி என்னும் கருத்து இருக்கத்தானே செய்யும். ஒருவேளை வெற்றி தோல்வி என்பவற்றைக் கடந்த நிலையை ஒருவரின் ஆன்மீக அடைதல் சென்று சேர்ந்து விட்டால் அல்லது ஆன்மீகம் ஒரு நோக்கமாக இல்லாமல் இயல்பாக மாறிவிட்டால், அங்கு வெற்றி என்னும் கருதுகோள் தேவை இல்லாமல் இருக்கலாம்.

புரிந்துக் கொள்ளும் இயக்கம் பற்றி

புரிந்துக் கொள்ளுதல் என்னும் இயக்கம், நாம் அறியத் தலைப்படும் ஒன்றை, ஏற்கனவே அறிந்தவற்றுடன் தொடர்புறுத்தி, மனதினுள் ஒரு தொடர்பை அல்லது சார்பு நிலையை அல்லது உறவை ஏற்படுத்துவதானே? எனில் புரிந்து கொள்ளும் இயக்கமும் எண்ணங்களின் இயக்கம்தானே?
இந்தக் கட்டுரையில், முற்பிறவிகளுடன் தொடர்புறுத்தப்படும் வாஸனா கர்மா போன்றவற்றைப் பற்றிப் பேசவில்லை என்றே குறிப்பிடப்பட்டுள்து. கட்டுரையின் இந்த வாக்கியம் சரியாக அமைக்கப்படாமல் இருந்திருந்தால், மன்னிக்க வேண்டுகிறேன். இதற்கான காரணம், முற்பிறப்பு என்னும் கருதுகோள் என் அறிதலில் இன்னும் ஏற்படவில்லை. நான் அறிந்திருப்பவை அவற்றைப் பற்றியான எந்தப் புரிதல்களையும் எனக்கு அளிக்கவில்லை. இந்த நிலையில் அவற்றைப்பற்றி பேச வேண்டுமானால் முற்றிலும் மற்றவர்களின் கருத்துக்களைத்தான் மீண்டும் கூற வேண்டும். இக்கட்டுரையின் பேசுதளத்தில், அவை தேவையில்லை என்று கருதியதால், அவை இதிலிருந்து விலக்கப்பட்டது.
பெரும்பாலான எதிர்வினைகளுக்குப் பதிலளிக்கப்பட்டுள்ளது என்றே கருதுகிறேன். மேலும் சில பதில்களை இன்னொருவருக்காக இங்கு விளக்கப்பட முடியாது என்றும் கருதுகிறேன். ஏனெனில் அவை சுய அறிதல்களின் மூலம் அடையப்பட வேண்டிய பதில்கள். இந்த எதிர்வினையை அளித்த வ.ஸ்ரீநிவாசன் அவர்களிடம், நிச்சயமாக இவற்றுக்கான பதில்கள் அவருக்கேயான முறையில் இருக்கும். ஒருவேளை இந்தக்கட்டுரை கூறுபவற்றுடன் அவற்றைப் பொருத்திக் கொள்ள முடியாமல் இருக்கலாம். அவ்வாறான நிலையில் இந்தக் கட்டுரையில் கூறப்பட்டுள்ளவற்றை புறந்தள்ளி விடுவதே சிறந்தது. அல்லது, இந்தக் கட்டுரையில் கூறப்பட்டுள்ளவற்றில் சற்றேனும் தர்க்க நிலை (Logic) இருப்பதாகக் கருதினால் அவரிடம் இருக்கும் பதில்களை மறுபரிசீலனை செய்யலாம். அதன் பின், இதில் கூறியிருப்பவற்றையோ அல்லது அவரிடம் இருக்கும் பதில்களையோ புறந்தள்ளிவிடலாம். அதுவும் இல்லையெனில் அவரிடம் இருக்கும் பதில்களையும், கட்டுரையில் கூறப்பட்டிருக்கும் கருத்துக்களையும் பரிசீலனை செய்து அவருக்கேயான புதுப் பதில்களை அடையலாம். அத்தகைய இயக்கத்தையே நுண்ணறிவு என்று இந்தக் கட்டுரை கூறுகிறது.

One Reply to “எண்ணங்கள் சிந்தனைகள் – எதிர்வினைக்கான பதில்கள்”

  1. நல்ல அறிவியல் பூர்வமான விளக்கம். ரமணரின் ” நான் யார்?” கட்டுரை போல இருக்கிறது.
    http://www.sriramanamaharshi.org/downloadbooks/whoami_all_languages/Who-Am-I-Tamil.pdf
    கட்டுரை ஆசிரியர் உண்மைக்கு மிக நெருக்கத்தில் இருக்கின்றார்போல் தெரிகிறது.மிக்க நன்றி.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.