எட்டாண்டு ஒபாமா ஆட்சி – ரிப்போர்ட் கார்டு

America_USA_Barak_Obama_Barack_President_GOP_Donkey_Elephant_Democrats

முதன்முதலில் ஒபாமா அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் நாடே ஒரு வித உற்சாக கொந்தளிப்பில் இருந்தது. வெள்ளை, கறுப்பின மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் பெருவாரியாக வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்த நாளில் தங்களை காக்க வந்த தெய்வமாகவே பார்த்தார்கள் பெரும்பாலானோர். கறுப்பின மக்கள் அவரை, அவருடைய பதவியேற்பை தங்களுக்கான அங்கீகாரம் என்றே நம்பினார்கள். சரித்திரத்தில் இடம் பெற்ற அவரது பதவியேற்பின் போது மக்கள் கூட்டம் வாஷிங்டன் டி.சி வரை பயணித்து தங்களை வெறுத்து அடிமையாக நடத்திய வெள்ளையினத்திற்குத் தக்க பதிலடியாகாவே பலரும் அன்றைய நாளை கொண்டாடினார்கள். மார்டின் லூதர் கிங்கின் கனவுகள் நனவாகி அமெரிக்க மண்ணில் கறுப்பர்களுக்கான அடையாளம் கிடைத்து விட்டதாக மகிழ்ச்சியடைந்த நாள் அந்நாள். ( பட்லர் என்ற திரைப்படத்தில் அதை அழகாக காட்சிப்படுத்தி இருந்தார்கள்.)
இவற்றை எல்லாம் காண சகிக்காத குடியரசுக்கட்சி அவர் அமெரிக்கன் இல்லை, இங்கு பிறக்கவில்லை, அப்பா ஒரு ஆப்ரிக்கன் , அவர் ஒரு முஸ்லீம் என்று வழக்கமான சேற்றை வாரி ஏசினாலும், பொய் சொல்லி ஈராக் மீது படையெடுத்தது, கோடிக்கணக்கில் போருக்காக பணத்தை செலவழித்தது, ஆப்கான், பாகிஸ்தான் எங்கிருக்கிறது என்று தெரியாமல் இருந்த அமெரிக்கர்களுக்கு அவர்களைப் பற்றின பிம்பத்தை வளர்த்து பயமூட்டியது, வேலையில்லா திண்டாட்டம் என புஷ் ஆட்சியில் மக்களுக்கு இருந்த அதிருப்தியில் மாற்றம் வேண்டும் என்ற ஒபாமாவின் குரல் உரக்க கேட்டதில் அதிசயமில்லை.
முதன் முதலில் அமெரிக்க தேர்தலைப் பற்றிய புரிதல் ஆச்சரியமாக இருந்தது. primary election என்று ஒன்று நடத்துகிறார்கள். அதில் அவரவர் கட்சியைச் சார்ந்தவர்கள் ஜனாதிபதி பதவிக்குத் தாங்கள் உகந்தவர்கள் என்று நம்புபவர்கள் போட்டி இடுகிறார்கள். மக்கள் முன்னிலையில் நாடே பார்க்க, தான் ஏன் அந்தப் போட்டிக்குத் தகுதியானவன்(ள் ) என்று பேசுகிறார்கள். அங்கு சில பல கோமாளித்தனங்கள் நடந்தாலும் மக்கள் யார் தலைவராக வந்தால் நல்லது என்று இனம் கண்டு கொள்கிறார்கள். அவர்களை கட்சியின் சார்பில் ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னார் தான் என்று அறிவித்து விட்ட நாளிலிருந்து கட்சியில் இருக்கும் அனைவரும் ஒருமித்த கருத்துடன் அவரை வெற்றி பெறச் செய்ய வேண்டிய வேலைகளில் இறங்கி விடுகிறார்கள்.
ஒவ்வொரு தேர்தல் கூட்டத்திலும் ஒபாமாவின் பேச்சு சாமானியரையும் கவர்ந்தது. தலைவர் என்ற பந்தா இல்லாமல் தங்களுள் ஒருவராக மக்கள் அவரை இனம் கண்டார்கள். அவரால் நிச்சயமாக நாட்டை நல்வழிப்படுத்த முடியும் என்று தீவிரமாக நம்பினார்கள்.
பதவி ஏற்பு முடிந்து வெள்ளை மாளிகையில் குடும்பத்துடன் குடியேறிய ஒபாமாவை வாய் ஓயாது பெருமையாக பேசிக் கொண்டிருந்த மக்கள் கூட்டம் அடுத்து அவர் என்ன செய்யப் போகிறார் என்று ஆவலுடன் காத்திருந்தார்கள். அவர் மேல் தீவிர கடுப்பில் இருந்த குடியரசுக்கட்சியும் அவருடைய ஒவ்வொரு கோரிக்கைக்கும் தடை போட்டுக் கொண்டே வந்தது. வேலையில்லா திண்டாட்டம் அதிகரிக்க, மக்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்களுக்கு உதவ, பணம் கரைய, ஹௌசிங் மார்க்கெட் சரிய, உள்ளூர் கார் உற்பத்தியாளர்கள் நஷ்டத்தில் இயங்க, ஈராக் போர் தீவிரமடைய, பல போர் வீரர்களின் உடல்கள் போர்த்திய கொடிகளுடன் ஊர் திரும்ப, இயற்கைப் பேரிடர்கள் என முதல் நான்கு வருடம் ஒபாமாவின் சோதனைக் காலம்.
வேலையில்லா திண்டாட்டத்தை குறைக்க சில வழிகளை கையாண்டது, வீடு வாங்குபவர்களுக்குச் சலுகைகள், கார் கம்பனிகளுக்கு அரசாங்கமே கடன் என்ற பெயரில் பண உதவி வழங்கி அவர்களை மீட்டது, ஒசாமா பின் லாடனை பிடித்தது அவருடைய அரசின் சாதனை தான். அவருடைய மனைவியும் போர் வீரர்களுக்கு உதவிகள், பள்ளியில் குழந்தைகளுக்குச் சத்தான உணவுத்திட்டம் என்று அவரளவில் மக்களிடையே பல நற்செய்திகளை கொண்டுச் சென்றார். மக்களும் இவரைச் சொல்லி குற்றமில்லை, எதிர்க்கட்சிகள் இவரின் திட்டங்களுக்கு ஆதரவு அளிப்பதில்லை அதற்கு முன்பிருந்த புஷ் அரசின் தவறான கொள்கையால் தான் அவரே நினைத்தாலும் இன்னும் பல தேர்தல் வாக்குறுதிகளை செய்ய இயலவில்லை என்று திண்ணமாக நம்பினார்கள்.
அடுத்த தேர்தலும் வாசற் கதவை தட்ட, மீண்டும் ஒரு முறை அவரே ஜனநாயக கட்சியின் சார்பில் போட்டியிட, அவர் மேல் கொண்டிருந்த நம்பிக்கையில் மக்கள் அவரையே தேர்ந்தெடுத்தனர். அமெரிக்காவில் கொள்ளை அடித்துக் கொண்டிருக்கும் இன்சூரன்ஸ் கொள்ளையர்களிடமிருந்து எளியவரை காக்க அவர் கொண்டு வந்த திட்டத்தை தீவிரமாக எதிர்த்த எதிர்க்கட்சி அதை செயலாக்க விடாமல் அவரை எதிர்த்துக் கொண்டே இருந்தது. பல்வேறு எதிர்ப்புகளையும் மீறி பல மில்லியன் டாலர் செலவழித்து ஒபாமாகேர் வந்து விட்டது. இன்றும் அதனுடைய பயன்கள் எப்படி சாமானியர்களுக்கு உதவப் போகிறது என்று தெரியவில்லை. இன்சூரன்ஸ் கம்பெனிகளும் மருத்துவர்களும் ஒபாமாகேரில் நாட்டமில்லாதவர்களாகவே இருக்கிறார்கள்.
மக்களின் எதிர்ப்பார்ப்புடன் வெள்ளைமாளிகைக்கு வந்த ஒபாமாவை ஒரே இரவில் நாட்டை ஜீ பூம்பா சொல்லி மாற்றி விடும் மாயஜால வித்தைக்கார் என்று நினைத்த கூட்டம் அவரின் கைகள் கட்டுண்ட நிலையில் வெள்ளை மாளிகையை ஆளுவது இன்ன பிற சக்திகள் , ஜனாதிபதி என்ற தனிமனிதனின் கையில் எதுவுமில்லை என்று புரிந்து கொள்ள ஆரம்பித்திருக்கிறது.
இதோ இந்த வருடம் மீண்டும் ஜனாதிபதி தேர்தல் வருகிறது. அதற்கான கூத்துகளும் நடக்க ஆரம்பித்து விட்டது. சமீபத்தில் நடந்த ஸ்டேட் ஆப் தி யூனியன் கூட்டத்தின் போது அவருடைய பேச்சு கேட்பவரை மெய்சிலிர்க்கத் தான் செய்தது. நடக்கவிருக்கும் தேர்தலுக்கான முஸ்தீபுகளில் ஜனநாயக கட்சி இறங்கி விட்டது என்பது தெள்ளத் தெளிவாக தெரிந்தது அவர் பேச்சில். தீவிரவாதிகளை தான் கையாளும் விதமே சரி என்ற தொனியில் எதிர்க்கட்சிகளின் ஆவேச பேச்சு பிரச்னைகளுக்குத் தான் வழிவகுக்கும் என்று கூறினார்.
உலக மக்களிடையே பிரபலமானவராக புன்னகையுடன் வலம் வந்த முதல் கறுப்பின ஜனாதிபதி, கறுப்பின மக்களுக்காக போராடிய மார்டின் லூதர் கிங்கின் கனவை நிஜமாக்கிய ஒரு நல்ல மனிதர் ஜனாதிபதி ஒபாமா என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆயினும் சமீப காலமாக ஒபாமா முஸ்லிம்கள் விஷயத்தில் அமைதி காக்கிறார், நாட்டில் நடக்கும் தீவிரவாத நிகழ்ச்சிகளை இருட்டடிப்பு செய்கிறார் என்ற அதிருப்தியில் மக்கள் பலரும் இருக்கிறார்கள்.
ஆனாலும் நாற்பத்தி நான்காவது ஜனாதிபதியாக ஒபாமா ஆட்சிக்கு வந்து வாஷிங்டனில் லட்சகணக்கான அமெரிக்கர்களின் முன் கருப்பின மக்களின் சமூக உரிமைகளுக்காக, சம அந்தஸ்திற்காக ஓங்கி ஒலித்த மார்டின் லூதர் கிங் ஜூனியரின் கனவை நனவாக்கி பல அமெரிக்கர்களுக்கு நம்பிக்கையையும் உத்வேகத்தையும் அளித்துள்ளார் என்றே கூறலாம்.

One Reply to “எட்டாண்டு ஒபாமா ஆட்சி – ரிப்போர்ட் கார்டு”

Comments are closed.