அழிக்க வந்த போலி காருண்யம்

Paint_Jallikkattu_Maadu_Cows_Manju_Virattu-Race_Bull_Run_Tamil_Nadu_India_TN_Buffalo_Bullfighting_Culture_Pongal_Maattu_V_G_Rana
மீண்டும் ஜல்லிக்கட்டு. ரேக்ளா பந்தயம் பற்றி அவசரமாகப் பேசத்துவங்கியுள்ளனர். மூன்று நாள் கூடி பிரியும் பொங்கல் திருவிழாவை வெளிநாட்டினர் வந்து கைத்தட்டி மகிழ்ந்து செல்லும் ஒன்றாக பண்பாட்டாளர்கள் பார்க்கின்றனர். சிலர் நற்றிணையில் ஏறு தழுவுதல் சொல்லப்பட்டிருக்கிறது எனவே இது தமிழ் பண்பாட்டின் மூல அடையாளம் என்று பேசுகின்றனர். ‘சல்லிக்காசுகளை’ கொம்பில் கட்டி திறமையானவர்கள் எடுத்துக்கொள்ள எருது விட்டதால் சல்லிக்கட்டு வந்ததாகப் பெயர் ஆராய்ச்சி செய்கின்றனர். இந்த பாரம்பரியம் மிக்க தமிழரின் வீரவிளையாட்டிற்கு தடை செய்ய கூடாது என்கின்றனர்.
ஆடு மாடுகளின் மூத்திர வாசத்தைக்கூட முகராத, சாணியள்ளாத கூளம்போடாத பிராணி நல ஆர்வலர்கள் காளைகள் மீது மனிதன் தொடுக்கும் கொடூர வன்முறை என்று போலி காருண்யம் காட்டுகின்றனர். உச்ச நீதிமன்றம் வரை ரேக்ளா பந்தயத்திற்கு தடையும் வாங்கி உள்ளனர்.
குத்துச் சண்டையை பார்க்கும் போதெல்லாம் இது மிக பெரிய மனித வதை என்று விலங்கு மீது காருண்யம் காட்டுபவர்கள் தடை விதிக்க கோருவதில்லை. நாக்கு வறண்டு ஓட முடியாத கிரிகெட் வீரனை ‘சதம்’ எடுக்கவில்லை என்று கல்லெறிவதை கண்ட பின் கிரிக்கெட்டை தடை செய்ய கோருவதில்லை. பிலிப் ஹுக்ஸ் பிடரியில் பந்துபட்டு இறந்த பின்னும் கிரிக்கெட்டை தடை செய்ய கோரவில்லை. ஏழெட்டாண்டுகளுக்கு முன் சென்னையில் நடந்த கால்பந்து களத்தில் இதயம் வெடித்து ஒரு வீரன் இறந்த பின்னும் கால்பந்தை தடை செய்யவில்லை. உலகக் கோப்பை 2014 ல் நெய்மாருக்கு எலும்பு விரிசல் கண்ட பின்னும் கால்பந்தை தடை செய்யவில்லை. புதிதான இருசக்கர வாகனத்தில் ஜனநெருக்கடி மிகுந்த நெடுஞ்சாலையில் டர்ர்ரென வளைந்து நெளிந்து சென்று எதிர் வந்த லாரியில் மோதி தலை நொறுங்கி அக்கணத்தில் உயிர் நீத்தக் காட்சி தினம் தினம் கண்ட போதும் வண்டி ஓட்டுவதை தடை செய்ய முடிவதில்லை. எதில் தான் சாவு இல்லை?
விளையாட்டு என்பது மானுட எழுச்சி சம்பந்தமான தருணம். இவையெல்லாம் சாகசம் என்றால் ஒரு திமிராக ஆடும் காளையை அணைவதும் சாகசம் தான். அறிவின் உச்சத்தில் இருப்பதாக கூறிக் கொள்ளும் இந்த மனிதர்கள் தான் WWF என்ற விளையாட்டை காட்டுகிறார்கள். நாற்காலியை எடுத்து தலையில் அடிப்பதும் பலகையை எடுத்து அடிப்பதும் வாதையாக தெரியவில்லை. அது சந்தோசம். அது அறிவார்ந்த விளையாட்டு. காளைக்கு ஒரு சின்ன காயம் கூட ஏற்படுத்தாத தழுவி ஆடும் ஒரு நிமிட விளையாட்டு கொடூரமானதாக தெரிகிறது. இது பண்பாட்டு அழித்தொழிப்பாகத் தான் தெரிகிறது. விலங்குகளோடு கொண்டுள்ள உறவை துண்டிக்கிற செயலாக முடியும் என்று தோன்றவில்லை. டி வி முன் முடங்கும் சோம்பேறி உலகம் இவர்களுக்கு உவப்பானது போலும்.
உடுமலை பொள்ளாச்சி சாலையில் ஆடுமாடுகளை ஏற்றிச் செல்லும் லாரிகளை வாரத்தில் இரண்டு நாள் பார்ப்பேன். அப்படி கொண்டு செல்லப்பட்ட லாரியில் நெரிசலில் ஒரு எருமையை பின்னிருந்து ஒரு எருமை முட்டி தூக்கியது. தப்பிக்க தாவிய எருமை கயிற்றின் பின்னலோடு விழுந்து அரை கிலோமீட்டர் தூரம் தார் சாலையில் ரத்தம் தோய கத்த முடியாமல் தரதரவென இழுத்துச் செல்லப்பட்டது. வேலம்பட்டியில் நடந்த இந்த காட்சியை காணும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. மற்ற எருமைகள் மறுநாள் உச்சிப் பொழுதில் கூர்மையான முழக்குச்சியால் சுத்தியலில் ஓங்கி அடித்து வீழ்த்தி கறியாக போகும் அவலம் அறியாதவை. தினம் தினம் லட்சோப லட்சம் கறிக்கோழியின் மயிர்நீக்க, கொதிக்கும் சுடுநீரில் முக்கி மெஷினில் போட்டு தோல் உரித்தெடுத்து கொடுப்பது அன்பின்பாற்பட்டதாக தெரிகிறது போலும். ஏன் இவற்றை தடை செய்ய முயலவில்லை? இவை பற்றியெல்லாம் எழுதாத கட்டுரையாளர்கள், கவிஞர்கள் ஜல்லிக்கட்டு ரேக்ளா காளைகள் மீது காட்டும் பாசம் ஒரு மோசடி என்பதாகவே படுகிறது. பண்பாட்டின் அடையாள அழிப்பின் இனவாத அரசியலின் உள்ளே புதைந்திருக்கிறது. மொகஞ்சதாரோ காளைச் சின்னத்தை குதிரை சின்னமாக (மாட்டின் பின்பகுதியை) மாற்ற முனைந்த வரலாற்று திரிபுதான் இந்த தடை விவகாரத்திற்குள்ளும் இருப்பதாக படுகிறது. தடை கோருபவர்களை ஆராய்ந்தால் உண்மை பட்டவர்த்தனமாகும்.
ஜல்லிக்கட்டு என்பதும் மாட்டுவண்டி பந்தயம் என்பதும் விளையாட்டு மட்டுமல்ல. மேலூர் காளைகளும் (மணப்பாறை வம்சம்) காங்கேயம் காளைகளும் இந்த மண்ணில் உயிர்வாழ்வதற்கான கடைசி பற்றுக்கோடு. இந்த விளையாட்டை நம்பித்தான் இந்த இனங்கள் இனிமேல் இந்த மண்ணில் இருப்பதும் மறைவதும். தடை தான் இறுதி விடையானால் இந்த இனங்களை அழித்து ஒழித்த ‘பிரியத்தை’ நீதிமன்றமும், பிராணி நல ஆர்வலர்களும் செய்தவர்களாகவே பின்னாளில் வரலாறு எழுதப்படும். பசுக்கள் மனிதர்களை நம்பி உடன் உறையும் வீட்டு நபர்களாக மாறி 3௦௦௦ ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டன. கலப்பையை கண்டுபிடித்த நாளிலிருந்து மனித வர்க்கத்திற்காக பாடுபட தன் கழுத்தை நீட்டியது. ஏன் ஒரு புலியை, கரடியை, காட்டுமாட்டை, மானை மனிதன் உழுவதற்கு பயன்படுத்தவில்லை? அவை இந்த பண்பாட்டிற்கு உகந்தது அல்ல எனத் தேர்ந்தான். பசு இனம்தான் அவனுடைய தொழிலுக்கு இசைவான விலங்கு. நிதானமான, புரிந்து கொண்ட விலங்கு. அதனால்தான் இன்னும் கிராமங்களில் மகளுக்குச் சீதனமாக பசுவை வழங்கும் வழக்கும் தொடர்ந்து வருகிறது.
ட்ராக்டர் வந்தபின் மாட்டின் பயன்பாடு குறையத் தொடங்கியது. விவசாயம் பொய்க்க பொய்க்க விவசாயத்தையும் மாடுகளையும் விவசாயிகள் கைவிட்டனர். எல்லாம் அடிமாடுகளாய்ப் போய்ச் சேர்ந்தன. பாலுக்கு ஜெர்சி வந்துவிட்டது. உழுகத் தெரிந்த இளந் தலைமுறை தமிழ்நாட்டில் இல்லாமல் போய் விட்டது. இளைஞர்கள் நகரத்தில் ஜவுளி கடைகளுக்கும் எலக்ட்ரிக் கடைகளுக்கும், இரும்பு கடைகளுக்கும் சென்று விட்டனர். விவசாயத்தில் இளைஞர்கள் இன்று இல்லை. மாடுகள் இன்று விவசாயத்திற்காக இல்லை. நெஞ்சார அன்பு வைத்தவர்கள் அவற்றினிடமிருந்து பிரிய முடியாத ரத்தபந்தத்தால் அவற்றை வளர்க்கிறார்கள். தன் மகன் கபடி விளையாடுவது போல, தன் மகன் நூறு மீட்டர் ஓட்டம் ஓடுவது போல அவைகளுக்கு வைத்து மகிழ்கிறார்கள். அப்படி வைக்கவில்லை என்றால் மாடுகளுக்கு நீர் ரத்தம் கண்டு நடக்க முடியாமல் சிரமப்படும்.
ஒரு ஜோடி ரேக்ளா காங்கேயம் காளைகள் வளர்க்க ஒரு நாளுக்கு 500 ரூபாய் தீவன செலவினம் ஆகும். ஒரு ஜல்லிக்கட்டு காளைக்கு ஒரு நாள் தீவன செலவினம் 200 ரூபாய் ஆகும். வருடத்திற்கு கணக்குப் பாருங்கள். இந்த பாமரன்கள் பிழைக்கத் தெரியாதவர்கள். பணத்தின் மீது வெறியை வைய்யுங்கள் என்று இவர்களுக்குக் கற்றுத் தரப்போகிறது இந்தத் தடை.
மூவாயிரம் ஆண்டுகள் இந்த பாமரர்களை அண்டி வாழ்ந்த கம்பீரம் மிக்க காங்கேயம் காளைகளும், மேலூர் காளைகளும் அரவணைக்க ஒரு மனித சமுதாயம் இல்லாமல் அழியப் போவது உறுதி. இன்று இந்த இனம் விவசாயத்தால் தங்களை நிலைநிறுத்திக் கொள்ளவில்லை. இந்த பாரம்பரியம் மிக்க விளையாட்டால் மட்டுமே தங்களை நிலைநிறுத்திக் கொள்ளும் ஒரு சந்தர்ப்பத்தை எதிர்நோக்கியுள்ளன அன்பர்களே. இந்த விலங்கை வதைத்து அவன் விளையாட விடுவதில்லை நண்பர்களே. கொம்பால் செண்டி வீசி விளையாடிய காளை சோர்ந்து நிற்கும் கணத்தின் போது அடக்க முடியாது விட்ட வீரன் பாராட்டுவான். வெறுப்பு கொள்ள மாட்டான். அடுத்தவனின் கையடி பட்டால் கண் கலங்கும் காளைக்குரியவனை நீங்கள் பார்த்ததுண்டா? பார்த்திருக்க மாட்டீர்கள். மழையில்லாத சென்ற மூன்றாண்டுகள் தீவனத்திற்காக கொளுத்தும் வெயிலில் அலைந்தது பற்றி ஏதேனும் உங்களுக்குத் தெரியுமா? தீவனம் கிட்டாமல் ரேக்ளா காளைகளை சொற்ப விலைக்கு சந்தையில் விற்று திரும்பியவன் நடு ஜாமத்தில் நெஞ்சில் அடித்து அழுததை நீங்கள் கண்டதுண்டா? மாட்டு வயிறு நிறையவில்லை என்பதற்காக பெண்டாட்டியை மானாங்கன்னியாக திட்டியவனும் இவன்தான் நண்பர்களே.
தென் இந்தியா முழுக்கச் சுற்றி வந்திருக்கிறேன். இந்திய மாட்டினத்திலேயே கர்நாடக ஹள்ளி கலைகள் போல அழகும் கம்பீரமும், ராஜாம்சமும் பொருந்திய காளைகளை நான் பார்த்ததில்லை. காங்குராஜ், கென்வாரி, சாகிவால், ஒங்கோல், நகோரி போன்ற இந்திய மண்ணுக்கே உரிய காளைகளோடு ஒப்பிட்டே இதை முன் வைக்கிறேன்.
புலிக்கு ஆனைமலையிலும் சத்தியமங்கலத்திலும் சரணாலயம் ஏற்படுத்தி விட்டாரகள். அழிந்து வரும் இந்த அபூர்வ காளை இனங்களுக்கு விலங்கு நேய ஆர்வலர்கள் மாற்று ஏற்பாடேனும் செய்து வைத்திருக்கிறார்களா? சாத்தியம்தானா? புலி, சிறுத்தை, செந்நாய்களுடன் இந்த பசுவினம் வாழ்ந்து விடுமா? காட்டை விட்டுப் பிரிந்து 3000 ஆண்டுகள் ஆகிவிட்டன. மனிதனை நம்பி மேய்ச்சல் செய்கின்ற இனமாக சங்க காலத்திற்கு முன்பிருந்தே ஆகி விட்டது. நான் பார்த்த கோசாலையில் நோயுற்று மெலிந்து தீவனமில்லாமல் சாக நிற்கின்றன ஜெர்சி பசுக்கள்.
கர்நாடகத் துளு மக்களின் பாரம்பரிய சேற்று காளை விரட்டான ‘கம்பளா’ என்ற எருமை விளையாட்டுக்கு அங்கீகாரம் அளிக்கிறது நீதிமன்றம். ஜல்லிக்கட்டு அவ்வளவு கொடூரமானதா? ஒரு நிமிட அரை நிமிட வாடிவாசல் ஆட்டம் என்பதை உலகம் முழுக்கப் பார்த்திருக்கிறதே! குதிரைப் பந்தயம் போன்றதுதானே ரேக்ளா மாட்டு வண்டி பந்தயமும். விவசாய தமிழ் மனங்களின் தொப்புள்கொடி உறவிலிருந்து பிரிக்கிற சட்டம் வருமானால் வீட்டு விலங்கான இந்த இனங்கள் அழிவது உறுதி. மனிதனை அண்டி வாழ்ந்தவை இன்று நிர்க்கதியான நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றன. வெற்று உபதேசம் அறுவைக்கு உதவாது.. வளர்த்துப் பார்க்க வேண்டும். மாடுகள் துள்ளிக் குதித்து ஓடவில்லை என்றால் மூக்கடைப்பு வந்து அவதிப்படும்.
பிரசித்தி பெற்ற ஸ்பெயின் காளை சண்டையல்ல, கணத்தில் குத்தி வீழ்த்துவதற்கு. தோற்றாலும் வென்றாலும் மாடுகள் வீட்டிற்கு வந்ததும் குளிக்க வைத்து தாடையை அணைத்துக் கொஞ்சுவர். அலுப்பு அகல ஒற்றைச் சாக்கை மடித்துப் போட்டு முதுகு தேய்த்து விடுவர். அடுத்த விளையாட்டில் வெல்ல பருத்திக் கோட்டை வைப்பர். கம்பங்கூழ் காய்ச்சி வைப்பர். அவர்களுக்கு மாடு ஒரு பிள்ளை. நீங்கள் கி.ரா.வின் ‘குடும்பத்தில் ஒரு நபர்‘ கதையை படித்திருக்க மாட்டீர்கள். முதலில் அதைப் படியுங்கள். மாட்டிற்கும் எங்களுக்கும் உள்ள ரத்த உறவு என்னவென்று புரியும்.
இந்த ஜல்லிக்கட்டும் மாட்டு வண்டி பந்தயமும் தமிழ் மண்ணின் புவிசார் குறியீடு. உலகில் வேறெங்கும் இல்லாத அபூர்வ விளையாட்டு. கர்நாடக ‘கம்பளா’ ஒரு புவிசார் குறியீடு. எருமை ஓட்டப் பந்தயம், புவிசார் குறியீடுக்கு உலகமெங்கும் அங்கீகாரமும் போற்றிப் பாதுகாக்கும் பணியையும் செய்து வரும் நாளில்தான் இங்கு அழிவை நோக்கித் தள்ளுகிறார்கள். இந்திய நீதிமன்றமும் கை விரித்தால் உலக நீதி மன்றத்திற்கு தமிழ் மக்கள் செல்லலாம். தமிழ்த்தாய்மார்களை விட்டால் இந்தக் காளைகளுக்கு கதி இல்லை. உலக நீதி மன்றம் இந்த விளையாட்டானது உலகில் வேறெங்கும் இல்லாத தமிழ் மண்ணுக்கே உரிய புவிசார் குறியீடு என ஒருக்கால் ரொம்ப காலங்கடந்து தீர்ப்பு வரும் பட்சத்தில் இந்த இனங்கள் இந்த மண்ணில் இல்லாமல் போய் விடும். அப்போது ரேக்ளா பந்தயமும், ஜல்லிக்கட்டும் காளைகள் இல்லாத உலகில் அர்த்தமற்றுப் பேசப்படும். புதைகுழியிலிருந்து வரலாறு எழுதும் அவலமாக இருக்கும். ஜல்லிக்கட்டு மட்டுமல்ல, சேவல் சண்டையால்தான் நாட்டுக் கோழிகளில் நூலான், பொன்றன், கழுகு, காகம், கீறி, சங்ககிரி கருப்பு இனங்கள் வாழ்கின்றன. எந்த விளையாட்டும் தடைக்குரியன அல்ல. ஒழுங்குபடுத்தக் கூடியவை மட்டுமே. ஒவ்வொரு மாலையும் டாஸ்மாக்கில் சரக்கு வாங்கி போதை ஏற்றி தெருவோரம் விழுந்து கிடக்கும் விளையாட்டைவிட கேவலமானதல்ல.
காளை விளையாட்டிற்குத் தடை வாங்கத் துடிப்போர் பாட்டாளிகளின் பண்பாட்டை அழித்து ஒற்றை கலாச்சாரத்திற்குள் முடக்கப் பார்ப்பது தெரிய வரும். இதை எதிர்ப்பவர்கள் விவசாயிகளா, மேட்டுக்குடியினரா என ஆய்வு செய்ய வேண்டும். “பெத்தவளுக்குத் தெரியாதா பிள்ளைய எப்படி வளக்கணுமுன்னு” என்ற மரபு தொடரை மக்கள் பயன்படுத்துவதைக் கேள்விப்பட்டிருக்கலாம். எனவே இந்தக் கண்காணிப்பில் ஒரு பண்பாட்டு அரசியல் வேலை செய்கிறது. இதை வழக்கறிஞர்கள் உணர வேண்டும். கிராமங்களில் கழுதை இனம் கைவிடப்பட்டு அழிந்தது போல், இந்த காளை இனங்களும் நிச்சயம் அழிந்து போகும். பன்மைத்தன்மை கொண்ட ஒரு தேசத்தில் ஒற்றைக் கலாச்சாரத்திற்குள் கொண்டு வர முனையும் சதி இதன் பின்னணியில் இருப்பது தெரிய வரும்.
இந்த காளை இனங்களை- பசுக்களைக் காப்பாற்ற மற்றொரு வழி இருக்கிறது. கறிக்காக பன்றி வளர்ப்பது போல், பிராய்லர் கோழி வளர்ப்பது போல, காங்கேயம், மணப்பாறை கறிமாடுகள் வளர்த்து கேரளாவிற்கு ஏற்றுமதி செய்யலாம். யதார்த்தம் உக்கிரமானது. இன்றைய ராக்கெட் யுகத்தில் குதிரைக்கு என்ன வேலை? ஐரோப்பிய தேசத்தில் உழுதா உயிர் வாழ்கின்றன? தங்களது புட்டத்தில் அடி வாங்கியபடி ஓடித்தான் தமது இனத்தை வாழ வைத்துக் கொண்டிருக்கின்றன. ரயில் தடத்தில் யானைகள் தங்கள் குட்டிகளை பலி கொடுத்துதான் வாழ்கின்றன. காட்டின் பாதைகளை ஒட்டுமொத்தமாக அடைத்து விட முடியுமா? மனிதனுக்கு ஒரு நீதி, விலங்குகளுக்கு ஒரு நீதி என உண்டா? நீதி மனிதனையும் விலங்கையும் கலந்த ஒன்றாக மாறி வெகு காலமாகிவிட்டது.
ஒரு விவசாயியாகப் பிறந்த நீதிபதி ஒருபோதும் போலி காருண்யத்துக்கு தலைவணங்க மாட்டார். விளையாட்டின் தாத்பர்யத்தில் அமிழ்ந்திருக்கும் ‘இன்றைய உண்மையை’ (நேற்றைய உண்மையை அல்ல) கண்டு நீதி வழங்குவார். ஜல்லிக்கட்டு, ரேக்களா பந்தயம், சேவல் சண்டை வாழும் வரலாறானால்தான் இந்த இனங்கள் வாழும் என்பது ஒரு உண்மையான உண்மை. ஏற்கெனவே கிராமம் நகர மனோபாவம் கொண்டு நாள் ஆகிவிட்டது. அவர்களையும் அலுவலகப் பணியாளர்களாக மாற்றி பணத்திற்கு ஓடும் கூட்டமாக மாற்றிவிடக் கூடாது. இந்த விலங்குகள் அவர்கள் கிராமத்தில் இருக்கும்வரைதான் வாழ முடியும். மேட்டுக்குடியினருக்கு பின்னாளில் போட்டியாளர்களாக உருவெடுக்க இதுகூட ஒரு வழியாகும் என்பதை சேர்த்தே சொல்லி விடுகிறேன்.

One Reply to “அழிக்க வந்த போலி காருண்யம்”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.