ஜன்னல் இடைவெளியிலிருந்து காற்று மெதுவாக வீசிக்கொண்டிருந்தது. காற்றில் மிதந்து வந்த காப்பியும் காரபட்சணங்களும் நாசி வழி புகுந்து ஏதோ பண்ணியது. கிருஷ்ண விலாஸில் காப்பி குடிக்க வேண்டும் போலிருந்தது. மணி இன்னும் ஐந்து அடிக்கவில்லை ஆனாலும் சுந்தர மூர்த்தி எழுந்து கொண்டான். நாளைக்குப் பார்த்தாலும் அதே ஃபைல் தானே. சர்க்கார் உத்யோகம். மாற்றலுக்கு நாலு லகரமாம். இருந்தால் கொடுத்து விடுவான். அப்புறம் தினமும் இப்பிடி அலைய வேண்டியதில்லை. ட்ரெயினுக்கும் வீட்டுக்கும்.
காப்பிக்கு டோக்கன் வாங்கி சர்வரிடம் கொடுத்து விட்டு காலியான ஒரு சீட்டைப் பார்த்து உட்கார்ந்தான். கூட்டம் கொஞ்சம் அதிகம் தான். பக்கத்து சீட்டில் இருந்த பெண் எதேச்சையாய்த் திரும்பிப் பார்த்தாள். பார்வையை திருப்பி வேறு பக்கம் பார்த்தான். மட மனது. மறுபடியும் மறுபடியும் அதே தான். தன்னையே நொந்து கொண்டான். ஒரு வருஷம் ஆகிறது ரமா அவள் வீட்டுக்கு போய். எத்தனை நேரம் பாட்டு கேட்பது. புஸ்தகம் வாசிப்பது. ஒரிகாமி செய்து பார்த்தான். தியானம் பழகினான். சுவாமி அபயானந்தாவின் எளிய முறை யோகம் செய்தான். உடல் வளைந்தாலும் மனம் வளைவதில்லை. மறுபடியும் மறுபடியும் அதே தான். மட மனது. மீதிச் சில்லரையை தட்டில் வைத்து விட்டு திரும்புவது போல ஒரு முறை பார்த்தான். யாருமில்லை. காப்பியின் கசப்பு நினைவில் வந்து போனது.
மூணாவது பிளாட்பாரத்தில் தாம்பரம் வண்டி வந்து விட்டிருந்தது. படி இறங்கிப் போவதற்குள் கிளம்பி விட்டது. முன்னே சென்றே கொய்யாப் பழக் கூடையைத் தாண்டி ஒரு வழியாய் வண்டியைப் பிடித்து விட்டான். கடைசியில் போய் உட்கார்ந்தான். ஜன்னலோர ஆசாமி சிரத்தையாய் ஹிண்டு படித்தான். வாசலில் பையன்கள் சிலர் ஒற்றைக் கைய்யால் தொங்கிக் கொண்டே வந்தனர். எதிர் திசையில் யுவதிகள். ஒருத்தி வாய் மூடி சிரித்தாள். வாசலின் ஓரத்தில் சுந்தர மூர்த்திக்கு நேராய் நின்ற பெண் எதற்கோ சத்தம் போட்டு பேசிக் கொண்டிருந்தாள். சரிந்து விட்ட தோள்பையை சரி செய்து கொண்டாள். சுந்தர மூர்த்தியின் மனம் பறந்தது திசையேயில்லாமல். தலையைக் கீழே குனிந்து கொண்டான். அவளை எங்கோ பார்த்தது போல் இருந்தது. எங்கே பார்த்தோம்?
எவ்வளவு யோசித்தும் அவளுடைய முகம் நினைவு வரவில்லை. ஆனாலும் ஏதோ ஒன்று பரிச்சயமாய்த் தோன்றியது. எது ?
மனதை சூறையாடும் இந்த உடலை, அந்த அதரங்களை, வாளிப்பான உடலை எங்கோ பார்த்தது நினைவு வந்தது. ஒரு வேளை அவள் தானோ?. பாதகி என்னை ஒரு நாள் வதைத்தவள் !. அவளா நீ? ச ! இருக்காது இது அவளில்லை. ஆனால் அவளின் உடலின் பிரதி இது தான். என்ன பெண் அவள். கறுப்பழகி ! ஆனால் கொஞ்சம் திமிர் பிடித்தவள் தான். கண்ணில் எப்போதும் ஒரு காந்தம் இழுக்கும்.
என்ன செய்து விட்டாள் என்னை? ஒரு வேளை நான் மனதில் நினைத்ததை படித்து விட்டாளோ ?. இருக்காது அப்போது நான் இப்படி நினைக்க வில்லையே. ஆனாலும் அந்த உடல்- உடல் அல்ல அது ஏதோ லாகிரி வஸ்து.அந்த பதினெட்டு வயது மனதிற்குள் அது நுழைந்திருக்க வேண்டும். மெதுவாய் மிக மெதுவாய் இப்போது தான் வேலை செய்கிறது. இப்போதெல்லாம் எல்லா பெண்களிடமும் நான் அவளையே தேடுகிறேன். அவளையா? இல்லை அந்த வஸ்துவைத்தான். ஏன் அப்படி செய்தாள் என்னை ? ஒரு நாள் முழுவதும் கண்ணீர் தாரையாய் ஊற்றியதே?.
வேதியலில் நான் நன்கு படித்தேனே ?. ஒவ்வோரு முறை நடத்திய வேதியல் பாடங்கள் மனதில் இன்னும் ஞாபகம் இருக்கிறது. கன்னிசாரோ வினையும் ஃபிடல் க்ரப்ஸ் வினையும் இன்னும் என் மனதில் நிகழ்ந்து கொண்டிருக்கிறதே?. பிறகு ஏன் அப்படி செய்தாள்?.
நன்றாக நினைவு இருக்கிறது. அன்று அவள் கத்தரிப்பூ சேலை உடுத்தியிருந்தாள். வழக்கம் போலவே இடுப்பு வரை அணைத்து சொருகியிருந்தாள். நல்ல உயரம் ஆனாலும் எக்கி நடப்பது போல நடந்து வந்தாள். பாவி. கிராதகி. அப்படி செய்ய காரணம் என்ன?.
அப்போது திருப்புதல் தேர்வு முடிந்திருந்தது. ஏதோ ஒரு கேள்வி கேட்டாள். கேள்வியா? இல்லை ஏதோ ஒன்றை எழுதி வரச் சொல்லியிருந்தாள். நான் எழுதி வரவில்லை. பிறகு அதையே எல்லோர் முன்னும் எழுதவும் சொன்னாள். பரீட்சையில் எழுதியது மங்கலாக நினைவு வந்தது. யோசித்துக் கொண்டிருக்கும் போதே விழிகளைப் பெரிதாக்கி என்னை திட்டினாள். நான் அப்படியே ஏன் என்பது போலே நின்றிருந்தேன். இது ஒரு சாதாரண விஷயம் தான். அதுவும் எப்போதும் படித்துவிடும் எனக்கு இது அனாவசியமாய் பட்டது. நெஞ்சம் பதறியது. இந்த விதத்தில் எல்லோர்க்கும் உதாரணமவதில் வருத்தமாய் இருந்தது. வெம்மெறுமலாய் வந்தது. நீளமாக மூச்சு விட்டபடியே. மெதுவாக நடந்து வந்து என் பெஞ்சில் அமர்ந்து கொண்டேன். இப்போதெல்லாம் தெரியாத கடவுள் அப்போது எனக்கு சாசுவதமாய்த் தெரிந்தார். தேவி உபாசகனாய் இருந்தேன். இது அந்த தேவியின் சோதனையோ என நினத்து மனதில் அவளைத் தியானித்தேன். “ஓம் சக்திமஹா யோகினி நம “. பீஜ மந்திரம் சக்தியுள்ளதாக்கும். உடனே பலன் தந்தது. மனம் அடங்கியது. ஒரு சில முறை சொல்லிவிட்டு வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டேன். மணி அடித்தது. வகுப்பு முடிந்தது.
ஆனால் சோதனை முடியவில்லை மறு நாளும் தொடர்ந்தது. நான் வெளியே அவள் உள்ளே. ஏன் என்று தெரியவில்லை?. ஒரு வாரம் இப்படியே போனது. ஆரம்பத்தில் அழுகையாய் வந்தது. அடுத்து வந்த நாட்களில் எதுவும் தோன்றவில்லை. காரணத்தை மட்டும் யோசித்தேன். உருப்படியாய் ஒன்றும் தோன்றாமல் கண்ணீர் வரும் போலிருந்தது. யோசிப்பதை நிறுத்தி விட்டேன். அமைதிக்காக வினாயகர் அகவலும் கந்தர் ஷஷ்டி கவசமும் பாடினேன். தெரிந்த சில ஆசிரியர்கள் இவன் ஏன் நிற்கிறான் என்பது போல் பார்த்தார்கள். எதையும் பார்க்காதது போல் தூரத்தில் நடந்த கிரிக்கெட்டைப் பார்த்துக் கொண்டிருந்தேன். ஒரு வாரம் போனது. பிரின்சிபல் அக்கறையாய் அறிவுரை சொல்லிவிட்டு இனிமேல் இப்படி செய்யாதே என்று அனுப்பினார். எதை என்று அப்போது கேட்கவில்லை. ஆனால் இப்போது இவளிடம் கேட்கவேண்டும் போல ஆத்திரமாய் வந்தது. பதிலுக்காக இல்லாவிட்டாலும் கேள்விக்காகவாவது கேட்கவேண்டும்.
அடுத்த நிறுத்தம் வந்து விட்ட படியால் எல்லோரும் எழுந்து போனார்கள். கண்கள் அவளையே தேடின. அந்த பெண் இறங்கி விட்டாள். எரிச்சலாய் வெளியே பார்த்துக் கொண்டிருந்தான். வாழ்வில் இதம் தரும் எல்லா நிகழ்வுகளைப் போல இதுவும் மறைந்து விட்டது மின்னலைப் போல. அந்த கேள்வி மட்டும் மிச்சமிருந்தது. பெயர் தெரியாத ஒரு துக்கம் மனதில் ஒரு புயலாய் வீசத் தொடங்கியது. ஜன்னலோர இருக்கை காலியானதால் தள்ளி உட்கார்ந்தான். ஜன நெருக்கடி குறைந்து விட்டிருந்தது. பக்கத்திலிருந்த யாரோ எழுந்து கொண்டார்கள். யாரோ உட்கார்ந்தார்கள். திரும்பிப் பார்த்தான்.
”ஹலோ சார்”
“ஹலோ”
அவரை இதற்கு முன்பு வேலை செய்த அலுவலகத்தில் பார்த்திருக்கிறான். பேர் ஞாபகம் இல்லை.
”இப்ப எங்க இருக்கீங்க சுந்தர். சாரி உங்க பேர் சுந்தர் தானே”
”ஆமா என் பேர் சுந்தர் தான்; இப்ப வல்லத்தில இருக்கேன்”. இப்போதும் அவர் பெயர் ஞாபகம் வரவில்லை.
“என்ன கம்பேனி சார் ?”
”கவர்மெண்ட் வேலை வி.ஏ.ஒ ஆஃபிசில”.
“ஓ !”.
கொஞ்ச நேரம் அவர் அமைதியாக வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். மெல்ல சுந்தர மூர்த்தி பக்கம் திரும்பி
“அப்போ வருமானத்துக்கு குறைவில்லைனு சொல்லுங்க” . உள்ளங்கையில் பெருவிரலை தேய்த்துக் காட்டி சிரித்தார்.
சுந்தர மூர்த்தி அவரை முறைத்துப் பார்த்தான். ஏதும் சொல்ல வேண்டாம் என்று அடக்கிக் கொண்டான்.
அவர் தொடர்ந்தார்
“சார் வி.ஏ.ஒ ஆஃபிசினா எப்பவுமே மக்கள் வர இடமாச்சே அதனால சொன்னேன்’. எனக்கு தெரிஞ்சி ஒருத்தர் இப்பிடி தான் பஞ்சாயத்து ஆஃபிசில இருந்தார். கொஞ்ச நாள்ல வீடு வாசலுன்னு ஆய்ட்டார்”
நம்ம பாடு தான். ம்கும்” கையை மேலே தூக்கி காண்பித்தார்.
”ம்”. பதில் சொல்ல வாயெடுப்பதற்குள் “பாம்” என்று அலறியபடி ஒரு ரயில் கடந்து போனது. சுந்தர மூர்த்தி வேறு பக்கம் திரும்பிக் கொண்டான்.
“சார் கொஞ்சம் சொல்லுங்க எப்பிடி இந்த வேலைக்கு வந்தீங்கன்னு. யாருக்கு எவ்வளவு கொடுக்கனுன்னாலும் பரவாயில்லை. ரொம்ப கஷ்டமா இருக்கு”
இதற்கு மேல் சுந்தர மூர்த்தியால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.
“சார் யாருக்கும் எதுவும் கொடுக்க வேண்டாம். ரெண்டு வருஷ உழைப்பு சார் வேலைய விட்டுட்டு படிச்சேன். படிக்கிறீங்களா?”.
“அய்யோ நம்மால முடியாது சார். ஆனா நீங்க பொய் சொல்றீங்க சார். காசில்லாம இப்ப எப்பிடி சார். டிபார்ட்மெண்ட்ல யாரும் தெரிஞ்வங்க இருக்றாங்களா சொல்லுங்க சார்”
இனி பேசி பிரயோஜனமில்லை. அமைதியாக இருக்க ஆரம்பித்தான். வண்டி மெதுவாக ஊர்ந்து செல்ல தொடங்கியது. வாந்தி வருவது போல நாறியது. தார் நெடி. முகத்தை சுளித்துக் கொண்டான். ரயிலடிலிருந்த மெயின் ரோட்டின் நடுவே இருந்த குழியை நிரப்பிக் கொண்டிருந்தார்கள். ரொம்ப நாளாகவே அது அப்பிடியே தான் இருக்கிறது. இப்போதாவது மாற்றுகிறார்களே என நினத்துக் கொண்டான். அவர் மேலும் ஏதோ கேட்டு கொண்டிருந்தார். முகத்தை திருப்பி வெளியே பார்த்தான். இப்போது எதுவும் பேச வேண்டாம் என சங்கல்பம் செய்து கொண்டான். மனம் அலை பாய்ந்தது. தட்டு தடுமாறி எண்ணப் பள்ளத்தாக்குகளின் இடுக்குகளில் மாட்டிச் சிந்திச் சிதறியது. சத்தமில்லாமல் மனதிலேயே எண்ணிக் கொண்டான்.
1..2..3..4..5..1..2..3..4..5..
மனதை அமைதிப்படுத்த இது நல்லதொரு வழி. இன்னும் சில நொடிகள் அப்படியே சொல்லிக் கொண்டிருந்தான். நாசூக்காய் அலறியபடியே வண்டி கிளம்பியது. அடுத்த நிறுத்தத்தில் இறங்க வேண்டும் என சுந்தர மூர்த்தி நினத்துக் கொண்டான். எண்ணிக்கை ஒடிக் கொண்டே இருந்தது.
1..2..3..4..5..1..2..3..4..5..
“சார்” அவர்தான்.
என்ன என்பது போல் பார்த்தான் எண்ணிக்கொண்டே.
“அப்பிடி என்ன சார் கேட்டுட்டேன். சொல்ல விருப்பம் இல்லனா சொல்ல வேண்டாம் அதுக்காக ஏன் சார் இப்பிடி பண்றீங்க?”
” நானா என்ன பண்ணினேன் ?”
“திட்றீங்களே”
“அப்படில்லம் ஒண்ணுமில்லையே!”
“அதான் இப்ப திட்டலியா ? முண முணன்னு மந்திரம் மாதிரி. போங்க சார்”. அவர் எழுந்து கொண்டார். அவர் முகம் சுருங்கி விட்டது.
“மந்திரமா ? இல்ல அது மந்திரமில்ல”. அவர் இறங்கி விட்டார்.
மனதுக்குள்ளே சொல்லிக் கொண்டான்.
‘ஆமாம் அது மந்திரம் தான். இது வரை என்னை வதைத்த மந்திரம்’
’ஓம் சக்திமஹா யோகினி நம’
’ஓம் சக்திமஹா யோகினி நம’.
மனப் புயல் ஓய்ந்தது.