காணாமல் போனவன்

kanamal

யார் கண்ணிலும் படாத படி காணாமல் போய் விட வேண்டும் என்று பல முறை எனக்கு தோன்றியிருக்கிறது. முன்னர் இல்லாத வகையில் இம்முறை எண்ணத்தின் தீவிரம் அதிகமாய் இருந்தது. அதைச் செயல் படுத்தாமல் இருக்க முடியாது என்று தோன்றிற்று. என் இதயத்துக்கு நெருக்கமானவர்களின் பார்வையில் நான் படுவது நின்று போய் சில காலம் ஆகியிருக்கிறது. நான் தான் அதை உணராமலேயே இருந்திருக்கிறேன். மற்றவர்கள் கண்ணில் காணாமல் போனதும் என் மனப்பரப்பில் நிம்மதி பரவிற்று.  நிம்மதி மட்டுமல்ல. அசாதாரண சுகமும். இதற்கு முன்னர் உணர்ந்திராத இலேசான தன்மையையும் அடைந்தேன்.
என் தம்பி சதா பத்தாம் வகுப்பில் தோல்வியுற்று வீட்டில் இருந்து ஓடிய பிறகு அவன் ஒரு ஹீரோவாக ஆனான். சிறுவயதில் கடைசி பென்ச் நண்பர்களின் சகவாசத்தில் படிக்காமல் பள்ளிக்கு ஒழுங்காகச் செல்லாமல் திரிந்து வந்தான் அவன். “அவிழ்த்து விட்ட கழுதை” “உதவாக்கறை” என்றேல்லாம் பட்டப் பெயர்கள் தாங்கி உலவினான். ஒருநாள் அவன் வீட்டிலிருந்து விலகி எங்கோ சென்று விட்டான். அவன் காணாமல் போனதும் வீட்டில் எல்லோரும் கவலைப்பட்டனர். ஊரெங்கும் அவனைத் தேடி நானும் என் தந்தையாரும் அலைந்தோம். தெரிந்த நண்பர்கள் எல்லோரிடமும் விசாரித்தோம். “பையனைக் கரித்து கொட்டியே வீட்டை விட்டு துரத்தியடிச்சுட்டீங்களே!” என்று அம்மா அப்பாவிடம் புலம்பிக் கொண்டிருந்தாள். கொஞ்ச நாள் கழித்து கோயம்புத்தூர் அத்தையிடமிருந்து கடிதம் வந்தது. (பதினைந்து பைசா தபாலட்டையில் கோழிக்கிறுக்கலான கையெழுத்தில்!) சதா ஒரு வாரம் அவர்கள் வீட்டில் வந்து விட்டு போனானாம். ஊருக்கு நலமுடன் திரும்பினானா என்று கேட்டு எழுதியிருந்தார்கள். தொடர்ந்து இது மாதிரி உறவினர்களிடமிருந்து கடிதங்கள் வந்த வண்ணம் இருந்தன. ஹைதராபாத் மாமா, ஜபல்பூர் பெரியப்பா, சென்னை பெரிய தாத்தா – இவர்களெல்லாம் கடிதம் எழுதினார்கள். வீட்டுக்கு வரும் கடிதங்கள் எல்லாம் “சதா இப்போது எந்த ஊரில் இருக்கிறான்?” என்பதை அறியும் ஆவலில் வாசிக்கப்பட்டன. சதா பற்றிய தகவல் வருவது நின்ற போதும் கவலையுணர்ச்சி ஏதும் எஞ்சியிருக்கவில்லை. பல வருடங்கள் கழித்து ரிஷி-முனி மாதிரி காடான தாடியுடனும் கூடவே ஒரு மணிப்பூர்க் காரியுடனும் வந்து என்னை சந்தித்தான். நான் அப்போது தான் பம்பாயில் குடியேறியிருந்தேன். என்னை விட நான்கு வருடங்கள் சின்னவனான சதா அந்த மணிப்பூர்க்காரியை “உன்னுடைய பாபி” என்று அறிமுகப்படுத்தினான். அவனுக்கு அப்போது ”பாபி” வந்திருக்கவில்லை. ஒரு காகிதத்துள் பொடியை போட்டுச் சுருட்டி சிகரெட்டாக புகைத்தான் சதா. அவன் பாதி புகைத்துவிட்டு அவளிடம் தருவான். அவளும் புகைப்பாள். சதாவும் மணிப்பூர்க்காரியும் இரண்டு – மூன்று நாட்கள் என்னுடன் தங்கியிருந்தார்கள். வீட்டை விட்டு ஓடிப்போன சதா இப்போதெல்லாம் பற்றி யாரும் கேட்பதில்லை. இந்தியாவின் ஒரு மூலையில் எங்கோ மணிப்பூர்க்காரியுடன் அவன் சுற்றிக் கொண்டிருப்பான் என்ற நம்பிக்கை குடும்பத்தில் இன்றளவும் நிலவுகிறது.

 

சொந்தங்கள் விலகி தூரமாய்ப் போவது மாதிரி தான் காணாமல் போவதும். கொஞ்ச நேரம் தேடப்படுவோம். பின்னர் காணாமல் போன உண்மையை எல்லோரும் ஜீரணித்ததும் தேடுதல் கை விடப்படும். பாதிப்புக்குள்ளான நெருங்கிய உறவுகள் தத்தம் வாழ்க்கையைத் தொடர்ந்துவிடுவார்கள். மரணத்திற்கும் காணாமல் போதலுக்கும் என்ன வித்தியாசம்? இரண்டிலுமே உடம்பு இருப்பதில்லை. சிலரது நினைவுகளில் காணாமல் போனவர் நிறைந்திருக்கலாம். தான் விட்டுச்சென்ற வாழ்க்கையை எண்ணி காணாமல் போனவர் மருகாத வரை, மற்றவர்களின் நினைவுகளில் வருதலும் வராமல் இருத்தலும் அவருக்கு என்ன நட்டத்தை ஏற்படுத்தி விடக்கூடும்?

 

வர்ஷா என்னைத் தேடுவாளா? எப்படித் தேடுவாள்? அவள் பக்க உறவு என்று யாரும் இல்லை. அவளை வளர்த்த பெரியப்பா குடும்பம் வெளிநாட்டில் இருக்கிறது. கிட்டத்தட்ட அனாதை போலத்தான். தர்மேஷ் என்னைத் தேடி அலைகிறானோ? காவல் நிலையத்து நடைமுறைகளைச் செய்து தருவது அவனுக்கு மிக எளிதாக இருக்கும். அவனே ஒரு போலீஸ் காரன் என்பதால். என் பக்கத்து ஃப்ளாட்டில் இருந்தான். ஒரு காலத்தில் என் நெருங்கிய நண்பனாக இருந்தவன். இப்போதெல்லாம் அப்படி இல்லை. அவன் வர்ஷாவுடன் பேசும் சமயங்களில் ஐந்தடி ஏழங்குல உயரமான நான் அவன் கண்களுக்கு காணாமல் போய் விடுகிறேன்.

 

நான் எங்கிருக்கிறேன் என்பதை அவர்கள் இருவராலும் கண்டு பிடிக்கவே முடியாது. அவர்கள் தேடிக் கண்டுபிடிக்க முடியா தொலைவுக்குச் சென்று விடுவேன். அசைக்க முடியா நம்பிக்கை எனக்குள் வந்திருந்தது. இது வரை அப்படி நான் உணர்ந்ததில்லை. சுய ஐயம் நிரம்பிய மனிதனாய் இத்தனை காலமாய் உலவி வந்தேன். ஓர் இயந்திரம் போல. இயங்கிக் கொண்டிருத்தல் மட்டுமே எனக்கு விதிக்கப்பட்டிருக்கிறது என்றெண்ணிக் கொண்டிருந்தேன். வர்ஷாவின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்வது, என் ஆறு வயது மகன் மகேஷை வளர்த்து பெரிய ஆளாக்குவது – இவ்விரண்டையும் தவிர வேறெதுவும் என் இலக்காக இருக்கவில்லை. வர்ஷாவின் அபிலாஷைகள் என்ன என்பதை எவ்வளவு புரிந்து வைத்திருந்தேன் என்பது என்பது வேறு விஷயம். நம் குடும்பம், சிறு தேவைகள், சின்ன திருப்திகள் என்ற நடுத்தர குடும்ப அளவுகோலில் அளக்கப்பட்ட விழைவுகள் தாம் அவளுள் ஆரம்ப காலத்தில் இருந்தன. எது அவளை மாற்றியது? மும்பை எனும் ராட்சத நகரமா? அதன் இயந்திரத்தனமான ஓட்டமா? அல்லது என்னுடைய ஓட்டமா? பொருளியல் பகட்டு அல்லது சமூக அந்தஸ்து என்கிற மாயவலையில் அவள் சூழ்ந்திருக்கிறாள் என்ற என் கணிப்பு சரியா எனப் புரியவில்லை. என் கணிப்பு உண்மை என்று வைத்துக் கொண்டாலும் அவள் தரப்பு  நியாயம் எனக்குப் புரியாமல் இல்லை. பெரியப்பா குடும்பத்தினரால் ஒரு வேலைக்காரி போல நடத்தப்பட்ட வாழ்க்கை ; இளம் வயதிலேயே தாய்-தந்தையரை இழந்தது என கிட்டத்தட்ட அனாதை போல் வளர்ந்த ஒருத்தி பாதுகாப்பின்மையில் தத்தளிப்பது ஒன்றும் ஆச்சரியமான விஷயமில்லை. அவளுடைய பாதுகாப்பின்மையை என்னால் ஏன் போக்க முடியவில்லை என்ற கேள்விக்கு என்னிடம் ஒரு விடையும் இல்லை. அவளிடம் என்னை நிரூபித்துக்காட்ட வேண்டும் என்ற தூண்டுதலை என்னால் கடைசி வரை களைந்தெறிய முடியாமல் போனது தான் எங்களுடைய விலகலை வேகப்படுத்தியதோ?. நான் அவளுக்கு ஏற்றவன் என்பதை நிலைநிறுத்த வேண்டும் என்ற ஒரே இச்சை அவள் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாத ஓர் இயந்திரமாய் என்னை மாற்றியிருந்தது.  புதுப் புது வேலைகளாக மாறிய வண்ணம் இருந்தேன். நெடுங்காலம் வேலை பார்த்த பம்பாய் நிறுவனத்தில் வழங்கப்பட்ட சம்பளம் போதவில்லையெனச் சொல்லிக் கொண்டிருந்தாள். அதிக சம்பளத்துக்காக அடிக்கடி வேலை மாற்றம் செய்து கொண்டேன். கோஹ்லாப்பூரில் ஒரு பால் பொருள் தயாரிப்பு நிறுவனத்தில் ஒரு வருடம் வேலை செய்தேன். குடும்பம் பம்பாயிலேயே இருந்தது. பின்னர் நாசிக்கில் சமையற் கருவிகளைத் தயாரிக்கும் நிறுவனத்தில் இரண்டு வருடம். மாதம் ஒரு முறையோ அல்லது இரு மாதங்களுக்கொரு முறையோ என்றுதான் பம்பாய் வந்து குடும்பத்தை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.

 

வர்ஷா என்றால் மழை. சிறு வயதிலிருந்தே கண்டிப்பும் கட்டிறுக்கமுமாக வளர்க்கப்பட்ட எனக்கு என் வாழ்வின் மழையாக அவள் வந்தாள். அவளுள் நான் ஆனந்தமாக நனைந்த நாட்கள் உண்டு. ஆனால் அவளிடமிருந்து வெகு தொலைவு வந்து விட்ட எண்ணத்தை கோஹ்லாப்பூர் – நாசிக் தினங்கள் என்னுள் தோற்றுவித்தன. பம்பாய் வரும் நாட்களில் மகேஷும் என்னிடமிருந்து விலகிப் போவதை கவனித்திருந்தேன்.  மகேஷுடனான தூரத்தை நீக்கி விட வேண்டும் என்ற உந்துதல் அதிகமாயிற்று. ஆனால் நாசிக் வேலையைத் தூக்கி எறியும் தைரியம் வரவில்லை. என் பழைய பம்பாய் நிறுவனத்தை மீண்டும் அணுகி வேலை கேட்டேன். சம்பளத்தில் சமரசம் செய்து கொண்டேன். வர்ஷாவுக்கு சம்பள விஷயம் அவ்வளவு திருப்தி தரவில்லை. “நீங்க சரியான ஏமாளியா இருக்கீங்க. இப்போ பம்பாய்ல ஒண்ணா சேர்ந்து இருக்கறதா முக்கியம். செலவுகள் அதிகரிச்சுகிட்டே போகுதே அது உங்களுக்குத் தெரியலியா?” ஒரு சராசரி இல்லறத்தலைவியின் புலம்பல்களாக அதை எடுத்துக் கொண்டாலும் நான் பம்பாய் வராமல் இருப்பதைத்தான் இவள் விரும்புகிறாளோ என்ற சந்தேகம் பேயாக என்னுள் ஒட்டிக்கொண்டது.

 

சொன்னதற்கு பத்து நாட்கள் முன்னதாகவே நாசிக் வேலையிலிருந்து “ரிலீவ்” ஆகி தங்கியிருந்த அறையைக் காலி செய்துவிட்டு மும்பைக்குப் புறப்பட்ட மாலை! பேருந்தில் ஏறியதும் மழை பெய்ய ஆரம்பித்தது. வீடியோ டெக்கில் “ஏக் தூஜே கேலியே” படம் போட்டுக் கொண்டிருந்தார்கள். விதவையாக வரும் சந்தியா என்கிற பாத்திரம் வாசு என்கிற பாத்திரத்துக்கு நடனம் பயில்வித்துக் கொண்டிருந்தது. பஸ்சுக்கு வெளியே நான்கு மணிக்கு இருக்க வேண்டிய வெளிச்சம் தொலைந்து போயிருந்தது. பேருந்து ஓர் இருட்டான அறைக்குள் நுழைந்து விட்டதோ என்னும்படி மேகங்களின் கருமை பகலை இருட்டாக்கியிருந்தது. மனதில் அளைந்த இனம் புரியா பயவுணர்வு! அதற்கான வெளிப்படையான காரணத்தை விளங்கிக் கொள்ள முடியவில்லை. சொந்த வீட்டுக்குச் செல்லும் போது ஏற்படும் உற்சாகம் பல மாதங்களாக என்னுள் இல்லாமல் போனதை அதற்கு முன்னர் கூட அவதானித்ததுண்டு. உற்சாகமின்மை பயவுணர்வாக மாறிவிட்டதோ? ”பயமும் ஓர் எண்ணமாகத் தான் நம்முள்ளில் இருக்கிறது. எண்ணத்தை மாற்று ; உணர்வு மாறிவிடும்.” என்று சுய-உரையாடலில் ஈடுபட்டேன். கை முஷ்டியை இறுக்கிக் கொண்டேன்.

 

குரூரமான க்ளைமாக்ஸுடன் படம் முடிவடைந்ததும் பஸ்ஸில் கொஞ்சம் அமைதி. கஸாரா காட்-டை பஸ் கடந்து பஸ் சமவெளியில் இறங்கியது. பாதையில் மழை ஈரம் கொஞ்சமும் இல்லை. கணவாயின் அந்தப் புறம் பெய்த மழை இந்தப் புறம் இல்லை. ஈரத்தின் சுவடின்றி மண் காய்ந்து கிடந்தது. ஒரே நிலப்பரப்பு. ஆனாலும் ஓரிடத்தில் மழை. வேறோரிடத்தில் மழையில்லை. எந்த இடத்தில் ஈரத்தரை முடிந்து ஈரமற்ற தரை தொடங்கியது என்பதைக் கவனிக்கவில்லை. பயண மும்முரத்தில் பாதையைக் கவனிக்காமல் விட்டது என் யதார்த்ததை பிரதிபலித்தது. வர்ஷாவுடனான என் வாழ்க்கையிலும் எப்போது ஈரம் விலகியது?

 

செம்பூரில் வந்திறங்கிய போது ரொம்ப நேரமாகிவிட்டது. இரண்டொரு ஆட்டோ ரிக்‌ஷாக்காரர்களுக்கு முலுண்ட் வரை செல்ல மனமில்லை. ஆட்டோ கிடைத்து வீடு வந்து சேர்ந்த போது காம்ப்ளெக்ஸின் எல்லா ஃப்ளாட்டுகளிலும் லைட்கள் அணைக்கப்பட்டு காரிருளில் மூழ்கியிருந்தன.  வாட்ச்மேன்கள் கேபினில் மட்டும் சின்ன பேட்டரி லைட் ஒளிர்ந்தது. இரண்டு கூர்க்காக்களும் விழித்திருந்தனர். ”லிஃப்ட் ரிப்பேர் சார்…உங்க ஃப்ளொர்ல இருக்கற தர்மேஷ் சாப் அணைச்சு வச்சிருக்க சொல்லியிருக்கார்” என்றான் ஒருவன். பின்னர் இன்னொருவனைப் பார்த்து “ஆறாம் ஃப்ளோர்ல லைட் எரியுதா பாரு” என்று சொன்னான். இருவரும் கேலிப் புன்னைகை புரிந்தது போல் தெரிந்தது. ஆனால் உறுதியாகச் சொல்ல முடியவில்லை. வெளிச்சம் குறைவாக இருந்தது. கூர்க்காக்களின் புன்னகை ஒரு பிரமையாக இருக்கலாம்!.

 

படியேற வேண்டியதாயிற்று. கையில் இருந்த லக்கேஜ்கள் கனத்தன. தர்மேஷின் அபார்ட்மெண்ட் கதவு திறந்து கிடந்தது. அவன் எப்போதுமே ஃப்ளாட்டின் கதவை திறந்து போட்டுக் கொண்டு தான் தூங்குவான். ஏன் அப்படி என்று கேட்டால் ”போலீஸ்காரன் வீட்டுக்கு எந்த திருடன் வர்றான்னு பார்க்கறேன்” என்று பதில் சொல்வான். தர்மேஷ் ஃப்ளாட்டைத் தொட்டடுத்த என் ஃப்ளாட்டின் பஸ்ஸரை அழுத்தியதும் உடனடி கதவு திறந்தது. ஏதோ கதவுக்குப் பின்னாலேயே இத்தனை நேரம் தயாராய் நின்றிருந்த மாதிரி!

 

ஹால் விளக்கு போடப்படவில்லை. வர்ஷாவை இது வரை காணாத ரூபத்தில் கண்டேன். குட்டையான பாவாடை அணிந்திருந்தாள். அவள் அணிந்திருந்த பாவாடை கால்மூட்டைத் தொடவில்லை. என்னுடைய பழைய சட்டை ஒன்றை அணிந்திருந்தாள். புடைவையைத் தவிர வேறோர் உடையை அவள் அணிந்து பார்த்திராத எனக்கு ‘என் முன்னால் நிற்பது வர்ஷாவா இல்லை ; வேறு யாரோ மோகினியா’ என்ற எண்ணம் ஓடியது. பரபரப்பு உள்ளோடும் மனவெழுச்சியோடு ஃபளாட்டுக்குள் நுழைந்தேன். எப்போதும் படிய வாரி, பின்னிய கூந்தலுடன் இருப்பவள் அன்றிரவு குழலைக் கலைத்து விட்டிருந்தாள். பஸ் பயணத்தில் முகர்ந்த மழையின் வாசம் ஞாபகத்துக்கு வந்தது.

 

“வரப்போறீங்கன்னு முன்னாடியே சொன்னா என்ன? ஒண்ணும் சாப்பிடறதுக்கு இல்ல….படுங்க…காலையில பாக்கலாம்” – குரலில் கடுமை தெறித்தது.

 

அவள் ஒற்றைக் காலில் கொலுசு அணிந்திருந்தாள். இதுவும் புதிது. படுக்கையறையில் என்னிடமிருந்து கொஞ்சம் தள்ளி படுத்தாள். எங்கிருந்தோ ஜன்னலில் வந்த ஒளியில்….ஒளியா அல்லது இருட்டு பழகி விட்டதா…தெரியவில்லை…அவளின் சலவைக் கல் போன்ற வழவழு கால்கள் மின்னின. விரலால் அவள் கால்களை வருடும் ஆசை முளைவிட்டது. அவளிடம் பேச்சு கொடுத்தேன்.

 

“மகேஷ் எங்க…காணல”

 

“தர்மேஷ் வீட்டுல விளையாடிட்டிருந்தான்…அங்கயே படுத்துக் தூங்கிட்டான்….தர்மேஷ் அங்கயே தூங்கட்டும்னுட்டார்….”

 

அவள் கவர்ச்சி என்னுள் ஏற்படுத்திய மயக்க நிலை என் சிந்தனையை ஊமையாக்கியது. சில நிமிடங்கள் தாம். திடுக்கென ஒரு கரு நிறப் போர்வையை எடுத்து உச்சி முதல் பாதம் வரை மூடிக் கொண்டாள். நடுநிசியின் அமைதியில் கீழே கேட்டுக்கருகே வாட்ச்மேன்கள் சிரித்துப் பேசிக்கொண்டிருக்கும் சத்தம் கேட்டது.

 

எட்டு மணி லோக்கலில் ஜனக்கடலுக்கு நடுவே நின்ற படி பயணம் செய்தேன். என் பழைய நண்பர்கள் – வைர-குரியர் படேல் பாயும் கூட்டுறவு வங்கியொன்றில் காசாளராக வேலை செய்யும் ஆரேகரும் என் கண்ணில் பட்டார்கள். என்னைப் பார்த்து கையாட்டி அவர்கள் உட்கார்ந்திருந்த கடைசி வரி இருக்கைகளுக்கருகே வரச் சொன்னார்கள். நான் தலையாட்டி “இங்கேயே நின்று கொள்கிறேன்” என்பது போல சைகை செய்தேன். வி டி ஸ்டேஷன் வந்ததும் அவர்கள் இறங்குவதற்கு முன்னமே இறங்கிச் சென்றேன். வேலையில் சேர இன்னும் ஒரு வாரம் இருந்தது. எனினும் கூட்டம் அலை மோதும் காலை எட்டு மணி ரயிலேறி “டவுனுக்கு” வருவதற்கு என்ன காரணம்? ”ஏதோ ஃபார்மாலிடிக்காக என்னை வரச் சொல்லியிருக்கிறார்கள்?” என்று பொய் சொன்னதும் “வீட்டிலேயே இருங்களேன். இன்னிக்கும் வெளியில் போகணுமா?” என்று வர்ஷா கேட்கவில்லை. முந்தைய வாரம் நண்பர்களுடன் ‘டவுனுக்குப்’ போன போது அக்பரல்லிஸுக்குப் பக்கத்தில் இருந்த ஓர் ஆடையகத்தில்  உடை வாங்கியதாகவும் அதன் உயரத்தைக் குறைப்பதற்கென்று  தைக்கக் கொடுத்திருப்பதாகவும், அதே ஆடையகத்துக்குப் போய் வாங்கி வருமாறும் ஒரு டோக்கனை என்னிடம் தந்தாள். வி டி ஸ்டேஷனுக்கு வெளியே டி என் ரோட்டின் இடப்புற நடைமேடைகளில் கூட்டம் நிரம்பி வழிந்தது. இடித்துக் கொண்டும் மோதிக் கொண்டும் மக்கள் நடந்து சென்று கொண்டிருந்தார்கள். நான் சாலைக்குள் இறங்கி ஓரமாக நடந்தேன். நியூ எம்பயர் தியேட்டரில் ஒன்பது மணிக்கே டிக்கெட் வாங்குவதற்காக மக்கள் காத்திருந்தனர். தியேட்டர் முகப்பில் இருந்த போஸ்டரில் அமிதாப்பச்சனின் இரு கைகளிலும் விலங்கிடப்பட்டிருந்தன. ஆக்ரோஷப்பார்வை பார்த்துக் கொண்டிருந்தார். போலீஸ் சீருடையிட்ட ப்ரான் கம்பீரமாய் நின்றிருந்தார். பம்பாய்க்கே உரித்தான காற்றின் வாசமும் ஈரப்பதமும் என் நாசியையும் சருமத்தையும் ஊடுருவின. காதணிகள் விற்பவர்கள், தர்பூசணிப் பழத்தையும் அன்னாசிப் பழத்தையும் வெட்டி துண்டுகளாக விற்பவர்கள், பழைய புத்தகக்காரர்கள் எல்லோரும் அதிசுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தார்கள். ஃப்ளோரா ஃபவுண்டெனுக்கு வலப்புறம் இருந்த சாலையில் திரும்பி அக்பரல்லிஸ் பல்துறை அங்காடிக்கு இரண்டு கடைகள் தள்ளி இருந்த ஆடையகத்தை அடைந்தேன். டோக்கனைச் சரிபார்த்து திருத்திய ஆடையை என்னிடம் கொடுத்தார் கடைக்காரர். கூடவே துணிக்கான வவுச்சரையும் கொடுத்தார். வவுச்சருடன் பணம் செலுத்தியதற்கான கடனட்டை விற்பனை ரசிது “பின்” செய்யப்பட்டிருந்தது. வர்ஷாவிடம் கடனட்டை கிடையாது. கடனட்டைக்குச் சொந்தக்காரரின் பெயர் விற்பனை ரசீதில் ‘இம்ப்ரிண்ட்” செய்யப்பட்டிருந்தது. தர்மேஷ் வி கோரே.

 

என் கால்கள் இலக்கின்றி நடந்தன. தெற்கு பம்பாயில் அன்று என் கால்கள் படாத இடம் இல்லை என்று சொல்லலாம். கேட்வே ஆஃப் இந்தியாவில் கடல் சற்று தள்ளிப் போயிருந்தது. லியோபோல்ட் கஃபேயில் வழக்கமாகக் காணப்படும் கூட்டம் இல்லை. கொலாபாவின் செருப்பு கடைகள், காலாகோடாவுக்கருகே வீதியின் இரு புறங்களிலும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கும் ஓவியங்கள், ஓட்டல் பிரெசிடெண்டின் வாசலில் காத்திருந்த கருப்பு-மஞ்சள் டாக்ஸிகள், ஒபெராய் ஓட்டலுக்கு வெளியே நின்றிருந்த சுற்றுலா பயணிகள், அரபிக்கடலோரத்தில் போடப்பட்ட பாறைகள், கைகளைப் பின்னிக்கொண்டும் தோள்களை உரசிக்கொண்டும் கடற்கரைச்சுவரில் உட்கார்ந்திருந்த ஜோடிகள், பிஸ்ஸா – ஆன் – தி – பே உணவகத்துக்கு வெளியே போடப்பட்டிருந்த இருக்கைகள் – கடந்து போகும் சித்திரங்களாக எல்லாம் நகர்ந்து கொண்டிருந்தன. நியூ எம்பயரில் ஓடும் திரைப்படமே ஈராஸ் தியேட்டரிலும் ஓடியது. காலியா. ஈராஸ் தியேட்டரை ஒட்டிய சிற்றுண்டி நிலையத்தில் கிஷோர் குமாரின் குரலில் “ஜஹான் தெரி யெ நஸர் ஹே” என்ற பாடல் அதிக கனபரிமாணத்தில் ஒலித்துக் கொண்டிருந்தது. சர்ச்-கேட்டுக்குப் போகும் சப்-வேயில் இருந்த மருந்துக் கடையில் நுழைந்தேன். பின்னர் ஜன சமுத்திரத்தில் ஒரு புள்ளியாகக் காணாமல் போனேன்.

 

oOo

 

மற்றவர்கள் கண்ணுக்குப் படாமல் வர்ஷாவின் வாழ்க்கையில் நிகழ்வதை அறிய ஆவல் என்னைத் தூண்டவும், மீண்டும் நான் வாழ்ந்த வீட்டுக்குச் சென்று பார்க்க முடிவு செய்தேன். எண்ண ரூபமாய் அங்கு அலைந்து திரிவதில் என்ன தடை ஏற்படப் போகிறது? ஆறாம் ஃப்ளோரை அடைந்தேன். தர்மேஷ் ஃப்ளாட், என் பழைய ப்ளாட் – இரண்டின் கதவுகளும் திறந்து கிடந்தன. தர்மேஷ் வீட்டில் மகேஷ் இருக்கிறானா என்று பார்த்தேன். இல்லை. என் வீட்டின் ஹால் காலியாகஇருந்தது. அன்று வி டி போன போது நான் எடுத்துச் சென்றிருந்த தோல் கைப்பை ஜன்னல் கம்பியில் தொங்கிக் கொண்டிருந்தது. திறந்திருந்த ஜிப்பர் வழி நோக்கினேன். உடை, ரசீது, மருந்துக் கடையில் வாங்கிய மாத்திரைப் புட்டி எல்லாம் இருந்தன. புட்டி காலி. ஒரு மாத்திரை கூட மிச்சமில்லை. அறையில் ஊதுபத்தி நெடி. சுவரில் என் உருவம் தாங்கிய சட்டகத்துக்கு மாலை போடப்பட்டிருந்தது. பிளாஸ்டிக் மாலை. படுக்கையறையில் வர்ஷா அழும் சத்தம் கேட்டது. கட்டிலில் உட்கார்ந்திருந்தாள். அவள் அடிக்கடி அணியும் பச்சை நிறச் சேலை. அடர் சிவப்பு நிற ரவிக்கை. ரவிக்கைச் சட்டையின் கை முழங்கை வரை நீண்டிருந்தது. கட்டிலுக்கருகே தர்மேஷ் நின்றிருந்தான். அவன் கை அவள் உச்சந்தலை முடியை மென்மையாக வருடிக் கொண்டிருந்தது. அவள் தன் முகத்தை அவன் இடுப்பில் புதைத்தவாறு அழுது கொண்டிருந்தாள். கணவாய்க்கு ஒரு புறத்தில் பெய்த மழையில் கணவாயின் மறுபுறம் நனையவில்லை. மற்றவர்கள் கண்ணுக்கு மட்டும் காணாமல் போயிருந்த நான் எனக்கும் காணாமல் போகும் சமயம் வந்து விட்டது. ஊதுபத்திப் புகைக்குள் புகுந்து காணாமல் போனேன்.

 

oOo
கருங்கற்கள் குவியலின் மேல் சாய்ந்த படி கண்ணயர்ந்திருந்தேன். முதுகுப் புறம் சில கற்களின் கூர்மையான முனைகள் குத்தின. கண்களைத் திறந்தேன். சமிக்ஞை கோளாறின் காரணமாக கௌஹாத்தி செல்லும் ரயில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நின்றிருந்தது. ரெய்ப்பூர் நகரம் தாண்டி ஏறத்தாழ ஐம்பது கிலோமீட்டர் தூரம் கடந்திருந்தது. என்னைப் போலவே பொது வகுப்பில் அமர்ந்திருந்த வேறு பயணிகளு ரயிலிலிருந்து இறங்கியிருந்தனர். கிழவி ஒருத்தி கொய்யாப்பழத் துண்டுகளைக் கூவி விற்றுக் கொண்டிருந்தாள். ஒரு சின்னப் பையன் தண்ணீர் விற்றுக் கொண்டிருந்தான். அவனிடமிருந்து ஐந்து பைசாவுக்கு ஒரு கோப்பை தண்ணீர் வாங்கி முகம் கழுவிக் கொண்டேன். ரயில் இப்போதைக்கு கிளம்பாது போலிருந்தது. அந்த ரயிலை விட்டுவிடுவது என்று முடிவு செய்தேன். தண்டவாளத்தை ஒட்டிய வயலில் மெதுவாக இறங்கினேன். வரப்பு வழியாக நடந்து ஒரு கிராமத்தை அடைந்தேன். கிராமத்தினுள் மூடிக்கிடந்த தபாலாபீஸைக் கடக்கையில் எனக்கு சதாவின் ஞாபகம் வந்தது. அவன் போய்ச் சென்று தங்கிய இடங்களிலிருந்தெல்லாம் எங்கள் உறவினர்கள் கடிதம் எழுதிக் கொண்டிருந்தார்கள். வர்ஷாவுக்கு கடிதம் போட்டு என் நலத்தைத் தெரிவிக்கும் வாய்ப்பை நான் யாருக்கும் கொடுக்கவில்லை.

One Reply to “காணாமல் போனவன்”

  1. ச்சட்டென்று காணாமல் போய்விட்டால்தான் என்ன என்று க்ஷண காலம் தோன்றியது கணேஷ். அதன் possibility இங்கு கேள்வியல்ல. கண்டிப்பாக கொஞ்ச காலம் மனதை அசைத்துப்பார்க்கும். மிக நல்ல நடை. வெகுசில typo

Leave a Reply to Usha VenkatCancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.