மராத்தி மொழிக் கவிதைகள்

கேள்வி

மூலம் : எப்.எம். ஷின்டே
ஆங்கிலம் : சந்தோஷ் பூம்கர்
தமிழில் : தி.இரா. மீனா

fmshnide

எப்.எம். ஷின்டே [1948 ] ஓரங்க நாடகம் மொழி பெயர்ப்பு, ,நகைச்சுவைக் கட்டுரைகள்,கவிதைகள் என்ற பன்முகம் கொண்ட படைப்பாளி. மகாராஷ்டிர மாநில விருதை மூன்று முறை பெற்றவர். இது தவிர பரிமள விருது,அஸ்மிதாத தர்ஷ விருது, விகெ பாட்டீல் விருது ஆகிய விருதுகளைப் பெற்றவர். இதுவரை 24 கவிதைத் தொகுப்புகள் வெளி வந்துள்ளன.

நீ என்னிடம் அந்தப் பழைய கேள்வியைக் கேட்டாய்
உண்மையில் நாம் ஒருவருக்கொருவர் யாரென்று
என்னுடைய பதிலும் பழையதுதான்
அவ்வகையில் நாம் ஒருவருமில்லை
ஆனால் இருக்கிறோம்
காலம் கேள்விகளுக்காக இல்லை
கேள்விகள் மீண்டும் பதில்களுக்கு அடிமைதான்
அவையும் நாம் என
கேள்வி ஒதுக்கப் பட்ட பிறகு
நமக்குரியதாக
சதை வளர்ந்து தோலாகி
நம் சொந்தம்.
 

கண்ணியத்தில் முதுகு நோகிறது

மூலம் : கணேஷ் விஸ்புத்
ஆங்கிலம் : சந்தோஷ் பூம்கர்
தமிழில் : தி .இரா.மீனா

Ganesh-Vispute-443x400

கணேஷ் விஸ்புத் [1963 ]மகாராட்டிர மாநில அரசுத் துறையில் சிவில் இன்ஜினியராகப் பணி புரிந்தவர். கவிஞர் ,மொழி பெயர்ப்பாளர், ஓவியர்.திரைப்படத் துறையிலும் ஈடுபாடு உடையவர். இவரது முதல் கவிதைத் தொகுதி சினார்.

நான் நிமிர்ந்து நிற்கும் போது
Hands_Fingers-Shush_Silent_Shhh_Keep_Quiet_Mouth_Silence_Noகண்ணியத்தால் முதுகு நோகிறது
அவர்களின் கழுத்து வலிக்கிறது.
நீ வேறாக இருந்தால்
எல்லாம் நன்றாகவே நடக்கிறது
நீ நீயாக இருந்தால்
அவர்கள் அஜீரணப் படுகின்றனர்
நீ குனியும் போது சிக்கலின்றி
எல்லாம் உன்வசமாகிறது
சோர்வைத் தளர்த்த நீ
நிமிர்ந்து நின்றாலும்
உன் இனத்து மனிதர்களோடு சேரமுடியாது
உன் சிக்கல் எப்போதும்
உன்னால் வளைய முடியாது என்பதுதான்
உன்னை ஆசீர்வதிக்க
உன் தோள்களையோ
உன் தலையையோ
தொடும் அளவுக்கு அவர்கள்
கைகள் உயர்வதில்லை
அது அவர்களின் இயலாமை
அவர்களின் கைகள் அனுபவப்பட்டவை
அவற்றை அறிந்திருக்க மாட்டாய்
நீ எப்போதும் உன்னுலக வானில்தான்
இதற்கிடையில்
உன் காலைச் சுற்றி
அவர்கள் தூக்குக் கயிறு எறிகின்றனர்
அதை இழுக்கவும் தயார்தான்
அவர்களின் கைகள் அனுபவப்பட்டவை
அவற்றை நீ அறிந்திருக்கவும் மாட்டாய்