நீரூற்று

neeroorru
நவம்பரின் முதல் பனிப்பொழிவு இரவோடு வீழ்ந்தது. நகருக்கு வெளியே, காலைச் சூரியஒளியில் மலைகள் வெண்பொடி பூசி ஒளிர்ந்தன. பர்வீஸ் ராஜாபி பஸ்ஸிலிருந்து ருடாகியில் இறங்கும்போது அதெல்லாம் அனேகமாக உருகி விட்டது. அவர் ஒரு பத்திரிகையாளர். ஐம்பது வயதுக்காரர், தன் கோபத்துக்குக் காரணம் என்னவென்று அவர் அறிந்திருக்கவில்லை.
நீ கட்டாயமாக ஏதாவது செய்ய வேண்டும்.
பர்வீஸுக்கு ஏதும் யோசனைகள் இல்லை, தன் அலுவலகத்துக்கான கிலோமீட்டரை நடந்தார், பனியோ, மலையோ யோசனை என்று வைத்துக் கொள்ள முடியுமா என்ன? அவர் தனக்கு எந்த உணர்ச்சிகளும் இல்லை என்று சொல்லி இருப்பார், ஆனால் அலுவலகத்து வாயில் கதவுகள் முன்னால் இருந்த காங்க்ரீட் தளத்தை ஷேர் பெருக்கிக் கொண்டிருப்பதைப் பார்த்ததும் அவருக்கு எரிச்சலேற்பட்டது. அந்த மனிதன் அந்த வாருகலைப் பிடித்திருந்த தோரணைதான் ஒரு காரணம். ஷேருக்கு எண்ணூறு வயது, அவருக்கு முகத்தை விட தாடிதான் அதிகம் இருந்தது. நீதி முறை என்று ஒன்று இருந்தால், அவருடைய ‘உங்களுக்கு அமைதி உண்டாகட்டும்’ என்ற விளிப்பு ஒரு குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யத் தக்கதாக இருக்கும்.
கிழவர் பர்வீஸைப் பின் தொடர்ந்து அந்த வளாகத்துக்குள் வந்தார், அனேகமாக காலியாகக் கிடந்த அலுவலகங்கள் நிரம்பியது அது. சோவியத்துகள் ஆண்டபோது அங்கு குடியிருப்புகள் இருந்தன. பளீரென்று இருந்த புல்தரையில் நீலக் கற்கள் பதித்த ஒரு நீரூற்று பார்க்க உற்சாகம் ஊட்டுவது போலிருந்தாலும், அதில் தண்ணீர் ஏதும் இல்லை. அந்த நீரூற்றின் விளிம்பில் அமர்ந்து தலை குனிந்து பார்த்துக் கொண்டிருந்த ஒரு இந்திய மைனா, அங்கிருந்த நீரெல்லாம் எங்கே போயிற்று என்று வியந்து கொண்டிருக்க வேண்டும். அந்தப் பறவையின் சலிப்பையேதான் பர்வீஸும் உணர்ந்தார். ஒவ்வொரு மாதமும் அந்த வீட்டுக்காரருக்கு ஒரு தொலைபேசி அழைப்பைக் கொடுத்து இது குறித்து ஒரு புகார் எழுப்பினார். அந்த நீரூற்று இப்படி காய்ந்திருக்க ஒரு காரணமும் இல்லை. அந்த வீட்டுக்காரர் அந்த அழைப்புகளை ஏற்கவும் இல்லை, திரும்பிக் கூப்பிடவும் இல்லை.
அந்த அலுவலகக் கட்டிடத்துக்கு யார் உரிமையாளர் என்பது தெளிவாக இல்லை. பர்வீஸ் வேலை பார்த்த அந்தச் செய்தித்தாளுடைய உரிமையாளர் யாரென்பதும் அவருக்குத் தெளிவாக இல்லை. அவர் மட்டும் கொஞ்சம் நேரம் செலவழித்தால், தனக்குத் தெளிவாக இல்லாதன என்னென்ன என்று ஒரு நீண்ட பட்டியலையே தயாரித்திருக்க முடியும்.
ஷேர் அவருக்கு முன்னே அசைந்து அசைந்து நடந்து போனார், மௌண்டன் நியூஸின் விசேஷ அறைகளின் கதவைத் திறக்க. பர்வீஸின் அலுவலகத்தைச் சிறப்பறைகள் என்று சொல்வது ரொம்பவே அதிகப்படி. ஒரு முன்னறையில் ஒரு மேஜை, ஒரு செயலருக்காக ஒதுக்கப்பட்டது, ஆனால் அப்படி யாரையும் நியமிக்கவே இல்லை. ஒரு கணினி அறை, அதில் பல்கலையிலிருந்து ஒரு வாலிபனுக்காக இடம் ஒதுக்கப்பட்டிருந்தது- பல வாலிபர்கள் மாற்றி மாற்றி சுழற்சியில் வந்து போனார்கள்- பர்வீஸ் எழுதுபவற்றை வலைத்தளத்தில் சேர்ப்பதற்காக அவர்கள் வந்து போனார்கள். மேலும் பர்வீஸின் அலுவலறை. அதன் சுவர்கள் அடர் பழுப்பு நிறத்தில் இருந்தன. ஒரு நீல சோஃபா இருந்தது, ரஷ்ய மொழியில் கிறுக்கல்கள் இரண்டு புறமும் செதுக்கப்பட்டிருந்த ஒரு மேஜை, உஷ்ணமான மாதங்களில் உரத்த ஓசையோடு வேலை செய்த ஒரு குளிர்பதன எந்திரம், அது அவரைச் சிந்திக்க விடாமல் சத்தம் போட்டது.
நுழைந்தவர், கதவைச் சாத்திக் கொண்டு, மேஜையடியில் உட்கார்ந்தார். கணினியை முடுக்கி விட்டார். தேநீரை அளிக்க வந்த ஷேரின் காலணி ஓசை காதை அடைக்கும் ஓசையால் தனக்கு எரிச்சலுறுவதற்காகக் காத்திருந்தார். ஆனால் கதவு வேகமாகத் திறந்தபோது உள்ளே வந்தவர் ஒரு பெண். ஒரு அமெரிக்கப் பெண்.
நீங்க ஏதாவது செய்ய வேண்டும்.
அவருடைய பெயர் மில்லிஸெண்ட். அவர் உயரமாக இருந்தார், அதுதான் அமெரிக்க பாணி போல. ஆரோக்கியமான தோல், நீண்ட கால் கைகள், அழுத்தமாகப் பேசும் தன்மை. அவருக்குப் பின்னே, முணமுணத்தபடி வந்தார் அயல்நாட்டு விருந்தாளியால் நிலை குலைந்திருந்த ஷேர், இந்த எதிர்பாராத இடைவெட்டால் பர்வீஸுக்குக் கோபம் வரும் என்று பயந்திருந்தது தெரிந்தது. ஷேர் பர்வீஸைச் செய்தியாளர் என்று அவர் அழைப்பது அதை ஒரு கௌரவப் பட்டம் என்று அவர் நினைப்பது போல இருக்கும்.
அமெரிக்கரை வரவேற்கவென எழுந்து நின்ற பர்வீஸ் பட்டெனத் தெறித்தார், “என்னை எப்படிக் கண்டு பிடித்தீர்கள்?” நல்ல ரஷ்ய மொழியில் அவர் பதில் சொன்னார், ” உங்களை இணையத்தில் தேடிப் பிடித்தேன்.” “டீ,” ஷேரிடம் பர்வீஸ் கட்டளை பிறப்பித்தார், சாக்லேட்களையும் கொண்டு வர வேண்டும் என்பது அதில் உள்ளடங்கியது. அந்தக் கிழட்டுப் பூனைக்கு அதெல்லாமாவது தெரிந்திருக்க வேண்டும். ஒரு சோஃபாவைச் சுட்டினார்.
மிலிஸெண்ட் உட்கார்ந்தார், உடனே வசதியாக இருந்தார், நிறைய இட்த்தைப் பிடித்துக் கொண்டார்.
“நான் வந்தது, என் பெயரை உங்கள் கட்டுரையில் நீங்கள் பயன்படுத்தலாம், எனக்கு அது பிரச்சினையில்லை என்று சொல்லத்தான்.”
பர்வீஸ் தலையாட்டினார். நீரில்லாத ஊற்றினால் அவருக்கு இருந்த எரிச்சலுணர்வு, மற்ற விதமான மறுவினைகளுக்கு இடமில்லாமல் நெருக்கடி கொடுத்தது. தவிர அவருக்குள் ஒரு கையற்ற நிலை பொங்கியது.
“நீங்கள் மேலும் ஏதாவது கண்டு பிடித்தீர்களா?” அப்பெண் கேட்டார்.
ஏதோ அவருக்கு அப்படிக் கேட்க உரிமை இருந்தது போல. குழப்பமானதொரு உந்துதல் ஒரு கண நேரத்துக்கு பர்வீஸை வந்தவரை ஒரு பெண்ணாக மட்டும் பார்க்கச் செய்தது. அவளுடைய தோல் தொடுகைக்கு எப்படி இருக்கும்? உதடுகளின் உஷ்ண அளவு. ஆனால் அந்தக் கற்பனைப் பெருக்கை அந்தக் கேள்விக்குப் பதிலளிக்குமுன் அவர் கட்டுக்குள் கொண்டு வந்திருந்தார். அவள் பர்வீஸின் பெண் முவ்ஸானாவை விடக் கூடுதலாக வயதானவள், அத்தனை அதிக வயது வேறுபாடு இல்லை என்ற போதும்.
“நான் நிலைமையை ஆராய்கிறேன்.’ அவர் பொய் சொன்னார்.
முந்தைய தினம் தேநீர் விடுதிக்குப் போயிருந்தார். அது ஒரு பிரும்மாண்டமான கட்டடம், அதன் மேலே கிரீடம் போல களங்கமில்லாத நீல வட்டக் கூம்புகள் இருந்து பார்க்கையில் கண்ணுக்கு அத்தனை கிளர்ச்சியூட்டின. சூரிய ஒளியில் அதைப் பார்க்கும்போது, சொர்க்கம் என்பது ஆசைப்பட வேண்டிய ஒரு இடம் என்று தோன்றாமல் அது கடந்த கால நினைவுதான் என்று தோன்றும். நூற்றுக் கணக்கான தூண்கள் இருந்தன, வளைவான ஒதுக்கிடங்கள் இருந்தன, முன்வாயில்களுக்கு இட்டுச் செல்லும் ஆடம்பரமான மாடிப்படிகள் இருந்தன. சோமோனி நிழற்சாலையைப் பார்க்க இருந்த படிகளில் ஒரு இளம்பெண் நின்று கொண்டிருந்தாள். அவள் ஒரு பெருஞ்செலவுக்கு எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டிருந்தாள். அரசாங்கம் இன்னொரு வெற்று ஆடம்பரத் திட்ட்த்திற்கு அறுபது மிலியன் டாலர்களுக்கு ஈடான தொகையைச் செலவழித்திருந்தது. ஆனால் நாட்டிலோ வேலைகள், பள்ளிகள், சாலைகள், மருத்துவ மனைகள் போன்ற வாழ்வாதாரங்களே மக்களுக்குக் கிட்டாத நிலை.
இது செய்திக்கான செயல். பர்வீஸோ ஒரு செய்தியாளர்.
தேநீர் விடுதியில் எதிர்ப்பைத் தெரிவித்து நின்ற அந்தப் பெண் அவருடைய மகள் வயதொத்தவள். அந்த அற்புதமான படிக்கட்டில் அவள் வெகுநேரம் தாக்குப் பிடிக்கவில்லை. மூன்று காவல்துறையினர் அந்தப் படிகளை ஏறுவதை பர்வீஸ் பார்த்திருந்தார். ஒருவன் அவளை வயிற்றில் தடியால் அடித்தான். அவள் சுருண்டு விழுந்தாள், மற்ற இருவரும் அவளைக் கீழே இழுத்து வந்தனர். ஒரு காவல்துறை வண்டியில் அவளை வீசினர், ஓட்டிப் போய் விட்டனர். சைரன்கள் கூட ஒலிக்கத் தேவை இருக்கவில்லை. அனைவரும் கவனித்தனர், யாரும் பார்க்கவில்லை. ஒரே ஒரு அமெரிக்கப் பெண்ணைத் தவிர. அப்பெண் அந்த நிழற்சாலை வழியே எதேச்சையாகப் போய்க் கொண்டிருந்தார். ஏதோ ஒரு உந்துதலில் பர்வீஸ் அவரை நோக்கிச் சென்றார். தன்னை ஒரு செய்தியாளர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு, அவர் அங்கு என்ன பார்த்தார் என்பதைத் தனக்குச் சொல்லுமாறு கேட்டார். இப்படித்தான் செய்தியாளர்கள் செயல்படுவார்கள்.
மிலிஸெண்ட் ஒரு கவனமுள்ள பார்வையாளர். அந்த எதிர்ப்பாளரை இழுத்துப் போன காவல்துறையின் வாகனத்தின் பதிவெண்ணை அவர் ஒப்பித்தபோது பர்விஸ் அயர்ந்து போனார்.
தன்னிடம் பர்வீஸுக்குப் பிடிக்காத ஒரு விஷயம், மற்றவர்களின் நிலைமைகளைக் கற்பனையாக உருவகித்துப் பார்க்கும் அவரது பழக்கம். அந்தப் பெண் ஒரு சிறை அறையில் இருப்பதை அவரால் மிக நன்றாகவே கற்பனை செய்ய முடிந்தது. அந்தக் கேலிகள், அவளுடைய உடல் வதைபடுவது, அவளுடைய புத்தியைக் குலைக்கும் முயற்சிகள். அவளுடைய பயம், அது சிறிதும் நில்லாததாக இருக்கும். இப்போது பேசும் விஷயத்தைத் திசை திருப்ப, அவர் மிலிஸெண்ட்டை அவர் எப்படி ரஷ்ய மொழியைப் பேசுகிறார் என்று கேட்டார்.
”நான் ‘அமைதி அணி’யில் ஒரு தன்னார்வலராக கஸகிஸ்தானில் இருந்தேன். அவர்கள் எனக்குச் சொல்லிக் கொடுத்தார்கள்.”
”அப்படியா அது.”
ஒரு கணம் அவர் ஒரு உளவாளியாக இருப்பாரோ என்று பர்வீஸ் யோசித்தார். உளவாளிகள் பல மொழிகளை லகுவாக்க் கையாள்வார்கள். ஆனால் இந்த யோசனை அவரிடம் தெறித்து மறைந்த போதே, இது எத்தனை அநியாயமானது என்று அவருக்குத் தெரிந்திருந்தது. அவள் ஒரு லட்சியவாதி. அதனால், உளவாளியத்தனை ஆபத்தானவளாகவும் இருக்கக் கூடும். அவள் போய்விட வேண்டும் என்று அவர் விரும்பினார். ஆனால், அப்போது ஷேர் ஒரு தட்டில் தேநீரும், தனித்தனியாக ப்ளாஸ்டிக் உறை சுற்றிய சாக்லேட்களுமாகக் கொணர்ந்தார். நீல சோஃபாவின் முன்னால் ஒரு சிறு மேசையில் அதை வைத்தார். பர்வீஸுக்கு இப்போது வேறு வழியில்லாமல், தன் மேஜையை விட்டு நீங்கி, மிலிஸெண்டுக்கு எதிரே அமர்ந்து, அவளுடன் தேநீர் அருந்த வேண்டி வந்தது. ஷேருக்கு அங்கேயே இருந்து இந்த வினோதமான விவகாரத்தைப் பார்க்க வேண்டும் போலிருந்த்து, ஆனால் அது சரியில்லை என்று தெரிந்திருந்த்தால், நெஞ்சின் மீது கையை வைத்து, அவர்களுக்குத் தேநீர் அளிக்க வாய்ப்புக் கொடுத்ததன் மூலம் அவர்கள் ஷேருக்கு ஏதோ நன்மை செய்தனர் என்று தெரிவித்து, குனிந்து மரியாதை செலுத்தி வெளியேறினார்.
மிலிஸெண்ட் சிறிதும் அவசரமில்லாதவளாகத் தெரிந்தாள். அவளுடைய தேநீரை ருசித்துக் குடித்தாள்.
“உள்நாட்டுப் போரில்,” பர்விஸ் அவளிடம் சொன்னார், “என் சகோதரனை நாங்கள் இழந்தோம்.”
“கேட்க வருத்தமாக இருக்கிறது, ஐயா. எனக்கு இரண்டு சகோதரர்கள் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவரை இழந்தால் நாங்கள் என்ன செய்வோம் என்று எனக்குத் தெரியவில்லை.”
பர்வீஸ் தலையை ஆட்டிக் கொண்டார், இந்த விஷயத்தை ஏன் எடுத்தோம் என்று வியந்தார். அவருடைய குடும்பத்தில் ருஸ்த்த்தைப் பற்றி அவர்கள் பேசுவதே இல்லை. அவருடைய அம்மா அதை அனுமதிப்பதில்லை. அந்தக் கொடுமையான தகவலை அவர்கள் கேட்ட தினத்திலிருந்த மாதிரியே இன்னமும் தீவிரமாக அவளுடைய மனவலி இருந்தது. இப்படி ஒரு அந்தரங்கமான விஷயத்தைப் பகிர்ந்து கொள்ளும்படி தான் தூண்டப்படுமளவு, இந்த அமெரிக்கப் பெண்ணிடம் என்ன சக்தி இருக்கிறது?
மிலிஸெண்ட் சொன்னார், “உங்கள் சகோதரர் எப்படி க் கொல்லப்பட்டார்?”
“அவன் அரசாங்கத்தோடு போர் புரிந்த எதிரணியுடன் சேர்ந்து சண்டை போட்டான்.”
அவள் புரிந்ததாகத் தலையசைத்தாள்.”அந்தப் பெண்ணைக் காவல் துறை இழுத்துப் போனதைப் பற்றி நீங்கள் ஏதும் எழுதவில்லையே?”
அது ஒரு குற்றச்சாட்டாகத் தெரிந்தது. அல்லது, அவர் அளவுக்கதிகமாக நுட்பமாக உணர்கிறாரா?
“இது ஒரு வாரப்பத்திரிகை.”
“ஆனால் உங்களுக்கு ஒரு வலைத்தளம் இருக்கிறதே. நீங்கள் விரும்பும்போது எதையும் அதில் பதிவு செய்யலாமே. எவ்வளவுக்கு நீங்கள் தாமதிக்கிறீர்களோ அத்தனைக்கு அந்தப் பெண்ணுக்கு ஆபத்து, ஒத்துக் கொள்வீர்களா?”
அவர் அவளுக்கு ஒரு சாக்லேட்டை நீட்டினார். அவள் மிட்டாயின் உறையை அகற்றியபோது எழுந்த சத்தம் அந்தச் செயலுக்கிருக்க வேண்டிய முக்கியத்தை விடப் பல மடங்கு அதிகமாக இருந்தது. அவர் தன் தேநீரைச் சிறிது உறிஞ்சினார். அவர் யோசித்துக் கொண்டிருந்தார்.
“தஜிகிஸ்தானில்,” என்று துவங்கினார், “நியுயார்க்கில் நடக்கிற மாதிரி எல்லாம் நடப்பதில்லை.”
“நான் மோண்டானாவிலிருந்து வருகிறேன்.”
தன் தொலைபேசியில் அவள் படங்களைக் காட்டினாள். மகிழ்வாகத் தோற்றமளித்த அவளுடைய பெற்றோர், சேதமேதுமில்லாமல் இருந்த அவளுடைய இரு சகோதரர்கள் ஆகியோரைச் சட்டம் போல அமெரிக்க மலைகள் சூழ்ந்திருந்தன. குடும்பத்தினருக்குப் பின்னே இருந்த புல்வெளியில், நன்கு பராமரிக்கப்பட்ட குதிரைகள் காமிராவை உன்னிப்பாகப் பார்த்தன.
“உங்கள் வீட்டின் படம் ஏதும் இருக்கிறதா?”
இல்லாமலா? அவளிடம் இருந்த்து, ஆனால் அவள் அதைக் காட்ட மாட்டாள். அதுவும் சரிதான். அவளுடைய பெரும் மாளிகையைக் காட்டி பீற்றிக் கொள்வது பொருத்தமாக இராது. கஸக்ஸ்தானில் கொஞ்சம் மரியாதையைக் கற்றுக் கொண்டிருப்பாள். பர்வீஸ், அந்தச் செய்தியைப் பற்றிப் பிரசுரித்த்தும் அவளுக்குத் தொலைபேசி மூலம் தகவல் தெரிவிப்பதாக உறுதி கொடுத்து விட்டு, அலுவலகத்திலிருந்து அவளை ஒரு வழியாக்க் கழற்றி விட்டார்.
வெளி வாயிலருகே, ஷேர் உற்றுக் கவனித்துக் கொண்டிருக்கையில், ஒரு ஆண் போல பர்வீஸின் கையைக் குலுக்கி அவள் விடை பெற்றாள்.
”ஐயா ராஜாபி, எனக்கு என்ன நினைவிருக்கிறது என்று உங்களுக்குத் தெரியுமா?”
“நீங்கள் என்ன நினைவு வைத்திருக்கிறீர்கள்?”
“அந்தக் காருக்குள் காவல்துறையினர் அவளைத் திணித்த போது அவள் அலறினாளே, அதை.”
பர்வீஸ் தலையை ஆட்டினார். தெருக் கோடியில் அவள் மறைந்தபின், அவர் தன் மேஜைக்குத் திரும்பினார். சில நிமிடங்கள் அமர்ந்திருந்தார், எதையும் யோசிக்கவில்லை. பிறகு தன் தொலைபேசியை எடுத்து, தன் அலுவலக்க் கட்டிடத்தின் சொந்தக்காரரை அழைத்தார். அங்கு ஏதும் பதிலில்லை.
அத்தனை வருடங்களில், தங்களால் மாற்ற முடியாத முக்கியமான விஷயங்களைப் பற்றி வாதாடுவதை நிறுத்தி விட அவர்கள் கற்றுக் கொண்டிருந்தனர். பணம். அவர்களுடைய குழந்தைகளின் ஆசிரியர்கள். அவர்களுக்குச் சிகிச்சை செய்யும் மருத்துவர்களின் தரம். (சோவியத் அமைப்பில் மருத்துவர்களின் தரம் மேலாக இருந்தது. சோவியத்தினருக்குக் கல்வி புகட்டுவது எப்படி என்று தெரிந்திருந்தது.) ஒவ்வொரு மாலையும் பர்வீஸும், தாமினாவும் அன்று அலுவலில் என்ன நடந்த்து என்று ஒருவரை ஒருவர் கேட்டுத் தெரிந்து கொண்டிருந்தனர். ரொம்பச் சாதாரண விஷயங்கள்தான், ஆனாலும் என்ன? இப்படிச் செய்வதால் குரோதம் தவிர்க்கப்பட்ட்து. தாமினா மீது அவர் பொழிந்த திட்டுகளெல்லாம் கொஞ்சமும் பொருத்தமானவை அல்ல. தன்னால் முடிந்த உடனேயே அவர் அவற்றை நிறுத்திக் கொண்டிருந்தார்.
பால்கனியில் இருள் சூழத் துவங்கிய போது, கைப்பிடிக் கம்பிகளில் காய்ந்து கொண்டிருந்த துவைத்த துணிகளையும், தாங்கமுடியாத மூட்த்தனத்தோடு வானை நோக்கிக் கொண்டிருந்த சாடிலைட் டிஷ்களையும் அவர் உணர்ந்திருந்தார். அது ஒரு க்ரூஷ்சாவ் காலத்துக் கட்டடம், நெடுநாள் நீடிக்க்க் கட்டப்படவில்லை. ஆனால் அது நீடித்துக் கொண்டிருந்தது. சில நிமிடங்களுக்குப் பிறகு, முவ்ஸானா சத்தமில்லாமல் அவரருகே அமர்ந்தாள், ஆனால் அவர் இன்னும் கோபமாக இருந்தாரா என்று கேட்கவில்லை. அவள் தன் அம்மா மாதிரி. குள்ளம், உருளை. உடலின் மேல்பகுதியின் வலு ஆண்களுக்குப் பொறாமை ஊட்டக் கூடிய வகையிலிருந்தது. வசீகரமான முகம், அதில் எப்போதும் ஒரு சிரிப்பு சிதறி வெளிப்படக் காத்திருந்தது.
“இந்தப் பையன்,” அவர் சொன்னார்.
அவர் சுட்டியது மாருஃப் பற்றி, அவனை அவளுக்கு நிச்சயம் செய்திருந்தார்கள். மாருஃபின் அப்பா தெற்கில் சரக்குப் போக்குவரத்து வியாபாரம் செய்தார். நல்ல வளமான வியாபாரம். அவரோடு அந்தப் பையனும் வளமாக இருப்பான் என்றுதான் எதிர்பார்க்க வேண்டும்.
“சொல்லுங்க, அப்பா.”
”உன் அதிர்ஷ்டத்தைப் பற்றி உனக்குத் திருப்தியாக இருக்குமே.”
கொஞ்ச நாட்களாக, திருமணத்தைப் பற்றிப் பேச்சு எழுந்தால், ஏதோ சலிப்பு வந்தவள் போல முவ்ஸானா பாவனை செய்வதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தாள், அதுதான் பொருத்தமான நடத்தை. அப்பாக்களும் அம்மாக்களும் அந்த மாதிரி அடக்கத்தைத்தான் ஆதரித்தனர். ஏனோ காரணமாக, மிலிஸெண்டுடன் பேசிய பிறகு, பர்வீஸுக்கு முவ்ஸானா ஒரு வேளை பாவலா செய்யவில்லையோ என்று தோன்றியது. அவள் ஏதும் பதில் சொல்லாத்தால், அவர் மறுபடி சொன்னார், “உனக்குச் சந்தோஷம்தானே?”
“நான் இந்த நபரை மணக்க இஷ்டப்படவில்லை.”
“ஏன்?”
இந்த நேரடிக் கேள்வி அவளை அதிரச் செய்தது, அவள் உள்புறம் நழுவிப் போய் விட்டாள். பின்னர், படுக்கையில் தாமினா குறட்டை விடுவது போல நடிக்கிறது தெளிவாகத் தெரிந்தது. அவளுடைய கையை அவர் உலுக்கினார்.
“இந்தப் பெண்ணுக்கு மாருஃபை மணக்க விருப்பமில்லையாம்.”
”அவளுக்கு எல்லாம் விருப்பம்தான்.”
பர்வீஸ் கடிகாரத்தின் டிக்டிக் ஒலியைக் கேட்டார். அந்தப் படுக்கை அறையில் அது மிகவும் வலுவாக ஒலித்தது. அவர்கள் அடுக்ககத்தில் அப்படி ஒலிக்கக் கூடிய கடிகாரம் ஏதுமே இல்லை. இரண்டு விஷயங்கள் தெளிவாக இருந்தன. அவருடைய மனைவி இரவுணவின் போது அவளிடம் அவர் கடுமையாகப் பேசியதற்கு அவரை மன்னித்து விட்டிருந்தாள், முவ்ஸானாவின் நிச்சயதார்த்தம் பற்றி அவள் பேச விரும்பவில்லை. அவரால் உறங்க முடியவில்லை. தன்னை எது பிடுங்கித் தின்கிறது என்பதைப் புரிந்து கொள்ள அவருக்கு நேரம் பிடித்த்து. மாருஃபின் அப்பாவிடம் அவர் அதிக மரியாதையாக நடந்து கொண்டிருந்தார், இந்த நிச்சயதார்த்தம் சுலபமாக நடக்க வேண்டும் என்பதற்காக. அவர் அப்படிச் செய்த்து தேவைக்கு மீறி இருந்திருக்கிறது. ஏதோ ஒரு கட்டத்தில் அவர் மரியாதையாக இருந்த்தைத் தாண்டிப் போய், பணிந்து போனதாக ஆகி விட்டிருக்கிறது. இருட்டில், அவருக்கு வெட்கம் சுட்டது.
காலையில் தேநீர் போட வெந்நீரைச் சுட வைக்க எரிவாயு இல்லை. தீர்ந்து போய் விட்டிருந்தது. இப்படிக் கவனம் தப்பிப் போனது யாருக்கு வேண்டுமானால் நடக்க்க் கூடியதுதான். வேலைக்குப் போகவிருந்த தாமினா, கதவருகே நின்று பர்வீஸுக்குத் தான் முவ்ஸானாவை அன்று மாலை அழைத்துப் போய் திருமண ஆடை வாங்கவிருப்பதை நினைவுபடுத்தினாள். அவர்கள் தாமதமாகத் திரும்புவார்கள். ஃப்ரிட்ஜில் பீன்ஸ் இருப்பதை அவர் அறிவார். அவருக்குப் பழகிய விதத்தில் புத்தி வேலை செய்வது நின்று போய்விட்டிருந்தது. ‘பீன்ஸ்’ என்கிற வார்த்தை அவரை மிலிஸெண்ட் வேலை பார்க்கும் இடத்துக்குப் போகும் பாதையில் அவரை அனுப்பியிருந்தது, அதை அவர் தன் அலுவலகத்திலிருந்து கொஞ்ச தூரத்திலேயே சில அலுவலகங்களிருந்த கட்டடத்தில் கண்டு பிடித்தார். ஒரு ரொட்டித் துண்டின் படத்தின் கீழே, ‘லெவன்”(புளித்து எழுந்தது) என்று தாஜிக் மேலும் ரஷ்ய மொழிகளில் இருந்த்து.
அவள் கதவருகேயே இவரை வரவேற்றாள், ஏதோ இவரை எதிர்பார்த்திருந்தவள் போல. அவளுடைய ஆரோக்கியமான முகம் கவலையைக் காட்டியது. “ஓ, ராஜாபி அவர்களா, உள்ளே செல்ல விரும்புகிறீர்களா?”
அது நல்ல துவக்கமாகத் தெரியவில்லை. ஆனாலும் அவளைப் பின் தொடர்ந்து, இருண்ட மையக் குகை போல இருந்த இட்த்தைச் சுற்றி கொத்தாக இருந்த அறைகளூடே போய் ஒரு நீண்ட மேஜையருகே வந்தடைந்தார். கலைந்திருந்த அடுக்காக இருந்த பத்திரிகைகளின் அருகில் ஒரு மேஜையில் பூக்களில்லாத கண்ணாடி பூஞ்சாடி இருந்தது. அந்த இடத்தின் வறுமை அவருக்குப் புரியாததாக இருந்தது. அமெரிக்கப் பணம் அந்த அமைப்பின் பின் இருந்ததாக அவருக்குத் தெரிந்திருந்தது. ஒரு மூடிய கதவுக்குப் பின்னே இருந்து ஒரு பெண் சீரான இடைவெளியில் முனகியது கேட்டது, அது அவளுக்கு ஒவ்வொரு சில நிமிடங்களிலும் ஏதோ ஒரு கெட்ட செய்தி வந்து சேர்கிறது போலத் தோன்றியது. மில்லிஸெண்ட் தன் அலுவல் அறையின் கதவை மூடிய பின், பர்வீஸை உட்கார அழைத்த போது, அந்த ஒலி அடங்கி ஒலித்தது, ஆனால் முழுதுமாகப் போய் விடவில்லை.
“அவளுடைய கணவர் அவளை அடித்து இருக்கிறார்,” மில்லிஸெண்ட் விளக்கினாள். “அவள் கர்ப்பமாக இருந்தாள். குழந்தையை இழந்து விட்டாள்.”
“அவள் இங்கே என்ன செய்கிறாள்?”
“நாங்கள் இந்த நாடு வளர உதவுவதற்காக வந்திருக்கிறோம். மக்களுடைய சக்தியைப் பெருக்குவதற்காக. ஆனால் அதை நாங்கள் வெளியில் சொல்ல முடியாது. உங்கள் அரசாங்கம் அப்படி ஒரு செயல் முனைப்பை எதிர்க்கும். நாங்கள் அடிக்கப்பட்ட ஒரு பெண்ணை உள்ளே அனுமதித்தோம் என்பதையும் வெளியில் சொல்ல முடியாது. இது ஒரு அசாதாரணமான நிலைமை, ராஜாபி அவர்களே. நாங்கள் வழியைத் துழாவித் தேடுகிறோம். எத்தனை குறைவான பெண்களே உதவி கேட்டு வெளியே வருவார்கள் என்பது என்னை விட உங்களுக்கு மேலாகத் தெரியும். அப்படி ஒருத்தி வரும்போது அவளை நாங்கள் மறுக்க முடியாது. “
அந்தப் புலம்பும் பெண்ணின் வாழ்க்கை எப்படி இருந்திருக்கும் என்று உடனே கற்பனை செய்யத் துவங்கும் தன் புத்தியின் தரத்தை பார்விஸ் சபித்தார். அந்தக் கணவன், அந்த வீடு, உயிரின்றிப் பிறந்த அக்குழந்தை. நாட்டிற்கே அவமானம் தரும் இப்படி ஒரு விஷயத்தை இந்த அன்னிய நாட்டுப் பெண் பார்க்க நேர்ந்தது மிகத் தவறானதாகத் தெரிந்தது அவருக்கு.
“உங்களுக்கு ஒரு மகள் இருக்கிறாள்,” மில்லிஸெண்ட் சொன்னாள்.
அவர் ஆமோதித்துத் தலையசைத்தார். எரிச்சலடைந்திருந்தார். இந்த அமெரிக்கப் பெண் ஏன் அவரைப் புரிந்து கொள்கிறாள்? அவர் அவளிடம் சொன்னார், “நேற்று என் சகோதரனைப் பற்றிச் சொன்னேனே”
“ஆமாம்?”
“அது ஒரு பொய்.”
“அவனுடைய பெயர் என்ன?”
அவர் அவசரப்பட்டு பதில் சொல்லி விட்டார்.”ருஸ்தம்.”
“ஓ, அப்படியா.”
முவ்ஸானாவை மில்லிஸெண்ட்டிற்கு அறிமுகம் செய்யலாம் என்ற ஒரு எண்ணம் அவருக்குத் தோன்றியது. அதை உடனே மூட்டை கட்டி அனுப்பி வைத்தார். அப்படி ஒரு சந்திப்பால் நல்லது ஏதும் நடக்காது.
குழந்தையை இழந்த அந்தப் பெண் ஓலமிட்டாள். பார்வீஸுக்கு அது வக்கிரமான முறையில் பிரசவ வலியில் ஒரு பெண் கத்துவது போல இருந்த்து. அந்தப் பாவமான பெண் சாவைப் பிரசவித்துக் கொண்டிருந்தாள். அவர் மில்லிஸெண்ட்டிடம் உண்மையைச் சொல்லத்தான் வந்திருந்தார். தேநீர் விடுதியின் படிக்கட்டுகளிலிருந்து பிடித்துச் செல்லப்பட்ட பெண்ணின் கதையை அவரால் எழுத முடியாது, ஏனெனில் அரசாங்கம் தண்டிக்கும் என்பது காரணம். கண்காணிப்பாளர்கள் இருந்தார்கள், வலைத்தளங்களை நாள் பூராவும் சலித்து, வெளியிடப்படக் கூடாத செய்திகளைத் தணிக்கை செய்வதற்கு அவர்களுக்கு ஊதியம் தரப்பட்டது. கனவான் மாவ்லியனோவிடமிருந்து அவரை வேலையிலிருந்து நீக்குவதாகச் சொல்லி மிக ஆத்திரமான ஒரு தொலைபேசி அழைப்பு வரும். வசந்தகாலத்துச் சூரிய ஒளியில் ஒரு பூங்காவில் பார்த்த ஒரு காட்சி அவருக்கு நினைவு வந்தது. ஒரு திருமணம். தன் வெள்ளை ஆடையில், படமெடுப்பதற்காக பல கோணங்களில் நின்று கொண்டிருந்த முவ்ஸானா மிகவும் துன்புற்றுத் தெரிகிறாள். அவளுடைய சோகத்தின் காரணமோ இன்னும் இரட்டிப்பாக ஆகி இருந்தது. அவள் மாருஃபை மணக்க விருப்பமற்று இருந்தாள், அவளுடைய அப்பாவோ காணாமல் போய் விட்டிருந்தார். இந்தக் காட்சி பார்வீஸின் மனதை மாற்றியது. அவருடைய நம்பகத் தன்மை அற்ற புத்தி இன்னொரு புதிரான தாவலை நிகழ்த்தியது.
“நீங்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.”
“இப்படிச் சொல்வதன் பொருள் என்ன?”
“உங்களுக்கு என்னைத் தெரியாது, இருந்தும் எளிதே பேசக்கூடாத விஷயங்களை என்னிடம் சொல்கிறீர்கள். நீங்கள் என்னிடம் சொன்ன விஷயங்களை அவர்கள் கேட்டிருந்தால், உங்களை நாட்டை விட்டு அனுப்பி இருப்பார்கள். ’லெவன்’ என்று நீங்கள் அழைக்கிற நிறுவனத்தைத் தடை செய்திருப்பார்கள். என்னை நம்ப உங்களுக்கு ஒரு காரணமும் இல்லை.”
தன்னுடைய அறிவிப்பு உள்ளே இறங்க அவர் காத்திருந்தார். அவள் ஆமோதித்துத் தலையை அசைத்தாள். அவளுடைய சிந்தனை அவள் பாதுகாத்த அந்தப் பெண் மீது இருந்த்து என்பது தெளிவாகத் தெரிந்தது.
“டீ சாப்பிடுகிறீர்களா, மிஸ்டர் ராஜாபி?”
ஆம், வீட்டிலிருந்து ஏதும் அருந்தாமல் வந்திருந்த அவர் டீ கிடைப்பதை நிச்சயம் விரும்புவார். ஆனால் அந்தப் பேச்சு முடிந்து விட்டிருந்த்து, அவள் அவரோடு வந்து வழியனுப்பினாள், அவர் முன் தினம் அவளுக்குச் செய்தது போலவே.
தெருவில் அவர் ஜூராபெக்கைக் கூப்பிட்டார். அவர்கள் இருவரும் பள்ளியில் ஒன்றாகப் படித்தவர்கள், தாஜிகிஸ்தான் ஒரு சோவியத் குடியரசாக இல்லாமல் ஆனபோது எல்லாருக்கும் கிட்டத் தொடங்கிய அதே தண்டமான கல்விதான் அவர்களுக்கும் கிட்டி இருந்தது. ஜூராபெக் ஜன்ங்களைக் கையாள்வதில் திறமையுள்ளவர், அதனால் காவல் துறையில் நல்ல வேலை ஒன்று அவருக்குக் கிட்டியது. அவருக்கு என்று தனி அலுவலகம் இருந்த்து, தன் வேலையைப் பற்றி அவர் ஒருபோதும் பேசியதில்லை. கனிவாகப் பழகினார், அவரது அம்மாவிடம் இருந்து அவருக்குக் கிட்டிய நல்ல மனதை பிறருக்கு வெளிக்காட்ட அவர் தயங்கியதில்லை. அவர்கள் குறைவான நேரம்தான் பேசினார்கள். தேநீர் விடுதியில் தான் பார்த்த்தை பர்வீஸ் அவரிடம் சொன்னார். கவனிக்கத் தக்க அளவு இடைவெளி கொடுத்து விட்டு, ஜூராபெக் அவருக்கு எச்சரிக்கை விடுத்தார்.
“இது உன் செய்தித்தாளுக்கு ஏற்ற செய்தியல்ல, நண்பா!”
இப்போது பர்வீஸ் நேர இடைவெளி கொடுக்க வேண்டியதாயிற்று. “உனக்கு அந்தப் பெண்ணின் பெயர் தெரியுமா?”
”என்ன மாதிரிக் கேள்வி இது?”
“சரி, அதைத்தான் சொல்லேன்.”
“காண்டிகோவ். முதல் பெயர், ஷெம்ஸியா. மட்த்தனமாக ஏதும் செய்யாதே, பர்வீஸ். நீ புத்தியோடு நடந்து கொள்வாய் என்று எனக்கு உறுதியளி.”
பர்வீஸ் உறுதியளித்தார். தன் அலுவலகத்துக்குத் திரும்பியதும் அவர் தாஜிகிஸ்தானில் திருமண சம்பிரதாயங்கள் பற்றி ஒரு கட்டுரையை எழுதினார். வரலாற்றுப் பார்வை. அந்த பல்கலை மாணவன் அறைக்குள் தலையை எட்டி, தபாலில் அனுப்ப ஏதும் இருக்கிறதா என்று கேட்டபோது, பர்வீஸ் அவனிடம் எரிந்து விழுந்தார்.
மில்லிஸெண்ட் பக்கமே போகாமல் ஏன் தன்னால் இருக்க முடியவில்லை என்பது அவருக்கே புரியவில்லை. தனது கட்டுப்பாடின்மை பற்றி, அதை அப்படித்தான் வருணிக்கலாம் என்றால், அவருக்கே மிக மனத் தடுமாற்றமாக இருந்த்து. ஆனாலும் அடுத்த நாள் காலை, அந்த லெவன் அலுவலகத்தில் அவர் கொடுக்கப்பட்ட டீயை ஏற்றுக் கொண்டு, அந்தப் பெண்ணால் குழப்பமடைபவராக அமர்ந்திருந்தார்.
“நீங்கள் நேற்று சொன்னது பற்றி நான் யோசித்தேன்,” அவள் அவரிடம் சொன்னாள். “நீங்கள் சரியாகத்தான் சொன்னீர்கள். வரும் நாட்களில் எங்கள் வேலையைக் குறித்து நான் கூடுதலாக எச்சரிக்கயோடு இருப்பேன்.”
“குழந்தையை இழந்த அந்தப் பெண் பற்றி?”
மில்லிஸெண்டின் கண்களில் நீர் மல்கியது. அதை அவள் பெறும் தகுதி பெற்று விட்டாளா? தாஜிகிஸ்தானின் கண்ணீரைச் சம்பாதிக்கும் தகுதியை அவள் என்றாவது பெற முடியுமா?
“நேற்று இரவு அவள் தன் கணவனுடைய வீட்டுக்குத் திரும்பிப் போக முடிவு செய்தாள்.”
பர்வீஸ் அந்தப் பெண்ணை நடைவழியில் பார்த்தார். மேலே இருந்த விளக்கு கரிந்து அணைந்து போயிருந்தது, அதனால் அவள் பழகிய பாதையைத் துழாவிக் கொண்டு வெளிக் கதவை நோக்கிப் போனாள். கதவுக் கைப்பிடியைத் தொட்ட போது மறுபக்கம் அந்தக் கொடிய மனிதன் நிற்பது அவளுக்குத் தெரிந்தது. அவனுடைய நெருக்கமான மூச்சுக் காற்றை அவள் உணர்ந்தாள்.
தான் சொல்வது இதோடு ஏதோ தொடர்பு உள்ளதைப் போல அவர் மில்லிஸெண்டிடம் சொன்னார்,”உள்நாட்டுப் போரின் போது, நாங்கள் முறை போட்டுக் கொண்டு ரொட்டிக்காக இரவெல்லாம் வரிசையில் நின்றோம். ஒரு ரொட்டிப் பத்தை, சில சமயம் இரண்டு. என் அப்பாவும், சகோதரிகளும், நானும். அந்தக் குளிர்காலத்தில் கரிப் புகையின் நெடி எனக்கு இன்னும் நினவிருக்கிறது. இரவில் அது இன்னும் அடர்த்தியாக இருக்கும்.”
மில்லிஸெண்டிடமிருந்து ஏதும் மறுவினை இல்லை, அதுதான் சரியும் கூட. அப்படி ஒரு அமைதியான அலுவலகம். ஒவ்வொருவரும் ஒரு கணினியில் ஆழ்ந்து ஈடுபட்டிருந்தனர். அந்த இடத்தில் ஒரு முனைப்பு புலப்பட்டது, அது அவருக்குப் பிடித்திருந்தது. அவருடைய புத்தி அலைப்புற்றது, சாதாரணமாக ஒரு போதும் அப்படி அது அலைப்புற்றதில்லை. டாஹ்மினா முந்தைய இரவு முவ்ஸானாவோடு பிணங்கிக் கொண்டு வந்து சேர்ந்திருந்தாள், அந்தப் பெண் குடும்பத்தின் சக்திக்கு எட்டக் கூடிய விலையில் இருந்த திருமண உடைகள் பற்றி ஒரு கருத்தும் சொல்ல மறுத்திருந்தாள் என்பதால் . அது என்ன பறவைச் சத்தம்? அது பர்வீஸின் தலைக்குள்தான் இருந்த்து. அவருடைய நினைவுகள் எல்லாம் முழுதும் உடலால் ஆனவை, புத்தியே இல்லாதவை. நடுங்கும் கால்களோடு அவை எங்கும் ஓடி ஒன்றோடொன்று மோதித் திரிந்து அவரைக் குழப்பத்தில் தள்ளின.
பொருத்தமான நேர இடைவெளிக்குப் பிறகு மில்லிஸெண்ட் பேசினாள், “அந்த ரொட்டிக்காக வரிசையில் நின்ற கதை. எனக்கு என்ன தோன்றுகிறதென்றால், நீங்கள் பேச விரும்பியது அது அல்ல.”
கையோடு பிடிபட்ட பள்ளி மாணவனாக ஆகி இருந்தார் அவர். அவர் மறுப்பைத் தெரிவித்துத் தலை அசைத்தார்.
“ஒரு நாள் நான் வேலை பார்க்கப் போய்க் கொண்டிருந்தேன். கெட்ட வருடங்களிலேயே மிக்க் கஷ்டமான வருடம் அது. சோமொனி நிழற்சாலையில், இன்று அந்தத் தேநீர் விடுதி இருக்குமிடத்திலிருந்து அதிக தூரமில்லை. அந்த நாட்களில் தெருக்களில் லைசென்ஸ் தகடு இல்லாது வண்டிகள் நிற்பது எங்களுக்குப் பழக்கமானதாகி விட்டிருந்தது. நாம் உள்ளே பார்க்க முடியாதபடி அவற்றின் கண்ணாடி ஜன்னல்கள் கருமையாக இருக்கும். ஒரு இளம் பெண் நடைபாதையில் நின்றிருந்தாள். அவளுடைய நிச்சலனமான முகம் எனக்கு நினைவிருக்கிறது. அவள் ஒரு நீல உடை அணிந்திருந்தாள், மிகவும் அடக்கமான உடை. அந்த வண்டிகளில் ஒரு கருப்புக் கார் நின்றது. இரண்டு ஆண்கள் அவளைப் பிடித்துக் கொண்டனர். அவளைக் காருக்குள் திணித்து, ஓட்டிச் சென்று விட்டனர்.”
“இதை எல்லாம் கேட்க நான் மிகவும் வருந்துகிறேன்.”
“இரண்டு நாட்கள் முன்பு, விடுதி முன் எதிர்ப்பைத் தெரிவித்த பெண் கைது செய்யப்பட்ட அன்று காலை, எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்த்து.”
“யாரிடமிருந்து?”
“அவளுடைய அப்பா என்று நான் நினைக்கிறேன். அவர் என்னிடம் அந்தப் பெண்ணை எங்கே காணலாம் என்று தெரிவித்தார். அவர் சொன்னார்,” நீங்கள் ஏதாவது செய்ய வேண்டும்.” இந்த மனிதர் நினைத்தார்… அப்படி நினைத்திருக்க வேண்டும், வேறு யாராலும் முடியாதென்றாலும், ஒரு பத்திரிகையாளர் தன் மகளைக் காப்பாற்ற முடியும் என்று. “
“அந்த அப்பா யார்?”
“அவர் என்னிடம் தன் பெயரைச் சொல்லவில்லை.”
தன் விருப்பத்தை மீறி பர்வீஸ் தன் தொலைபேசியைத் தன் பையிலிருந்து எடுத்தார். அதன் காட்சியில் முந்தைய அழைப்புகளின் பட்டியலைச் சுண்டித் தேடினார். ஷாம்ஸியா காண்டிகோவின் அப்பா என்று அவர் கருதியவரை அழைத்தார். அவரோடு தாஜிக் மொழியில் பேசினார், மில்லிஸெண்டிடம் இருந்து உரையாடலை மறைக்க என்றில்லை, அந்த மனிதருக்கு அதுதான் விருப்பமாக இருந்த்து என்பதால். இருபது நிமிடங்கள் கழித்து பார்விஸூம், அந்த அமெரிக்கப் பெண்ணும் ஒரு வாடகைக் காரில் இருந்தனர். அங்கு முகப்பிடத்தில் இருந்தவர் கண்பார்வை அற்றவர். விளிம்பில்லாத வெள்ளைக் குல்லாய் அணிந்திருந்தார், பழைய பாணியில் மதநம்பிக்கை கொண்டவர் போலத் தெரிந்தார், புறாக் கூண்டுகளில் வளர்ப்புப் புறாக்களைyஉம், காகிதக்கூம்புகளில் வாங்கப்படும் பாதாம் பருப்புகளையும், இளம்பெண்கள் கை கோர்த்து நடப்பதையும் நினைவு வைத்திருப்பவர் போலத் தெரிந்தார். அந்த முகப்புக் கூண்டுக்கு முன்னே ஒரு சிறுவன் கோலிக் குண்டுகள் இரண்டை வைத்து விளையாடிக் கொண்டிருந்தான், ஒன்று பெரியது, இன்னொன்று சின்னது. பஹதூர் காண்டிகோவின் பார்வையில்லாத கண்களை யாரும் மோசமாகப் பயன்படுத்திக் கொள்ளாமல் பார்த்துக் கொள்வது அவன் வேலையாக இருந்த்து.
“நாம் ரஷ்ய மொழியில் பேசலாமா?” பர்வீஸ் அவரிடம் கேட்டார். “என்னோடு வந்திருப்பவர் ஒரு அயல் நாட்டுப் பெண், அவருக்குத் தாஜிக் மொழி தெரியாது.”
பஹாதூர் தரையில் துப்பினார். “ரஷ்யா.” அவர் பூட்டியிருந்த ஒரு கதவைச் சுட்டினார். அந்தப் பையன் சத்தமில்லாமல் எழுந்திருந்து போய், அந்தக் கதவைத் தட்டினான். ஒரு மனித மொழி போலவும் ஒலிக்காத ஒரு ஆத்திரமான குரல் ஏதோ சொல்லிக் கத்தியது.
”என் மகன்,” பஹாதூர் சொன்னார், “கோமில். அவன் வாழ வேண்டிய இந்த நாட்டில் அவனைப் போன்ற இளைஞர்களுக்கு ஒரு வேலையும் இல்லை என்பதால் அவன் சென்ற வருடம் மாஸ்கோவுக்குப் போனான். ஒரு தங்க வியாபாரியிடம் அவன் வேலைக்குச் சேர்ந்தான். ஒவ்வொரு வாரமும் அந்த ஆள் கோமிலின் சம்பளத்தைப் பிடித்து வைத்துக் கொண்டான்.
‘அடுத்த வாரம், எப்போதுமே அடுத்த வாரம், உனக்குச் சம்பளம் கிடைக்கும், தாஜிக் பையா,” என்றானாம் அந்த ரஷ்யன். சாப்பிட மட்டும் போதுமானதை, அதைத்தான் அவன் கொடுத்தானாம். மூன்று மாதங்களுக்குப் பிறகு, இந்த தங்க வியாபாரி, குடியேற்ற நிர்வாகக் காவல் துறையினரை அழைத்து விட்டான். ஏதும் கொடுக்காமல் என் மகனை அவர்கள் நாட்டை விட்டு வெளியேற்றி விட்டனர். அவனுடைய புத்தியை, மனதை அது துன்புறுத்தி விட்டது; அவனுடைய உடல் முழுதையும் வருத்தி விட்டது.”
உணர்ச்சி செத்து இருந்த முகத்தோடு அந்தச் சிறுவன், தன் தலையின் ஒரு பக்கத்தைத் தட்டினான், தன் சகோதரனின் பிரச்சினையைச் சுட்டுமுகமாக. தன் கோலிக் குண்டுகளைப் பார்க்கத் திரும்பினான்.
“கோமிலுக்கு என்ன ஆயிற்று என்பது, அவனுடைய சகோதரி ஷாம்ஸியாவையும் பாதித்தது,” அந்தப் பார்வையிழந்தவர் சொன்னார்.
“அவள் கொதித்துப் போனாள். அதுதான் அவளை… அப்படிச் செய்ய வைத்திருக்கிறது.”
அது ஒரு நீண்ட உரையாடலாயிற்று. ஒரு தகப்பனின் பரிதவிப்பும், மனமுடைதலும் அதில் இருந்தன. அவர்கள் பேசியிருந்த மொத்த நேரமும், அந்தக் கடையில் கையறு நிலை என்ற ஒரு அழுக்கான வௌவால் அலைபாய்ந்து பறந்து, அவர்கள் ஒவ்வொருவரையும் கறைப்படுத்தியது. முவ்ஸானாவுக்கு கல்யாணத்துக்கு உடைகள் கிடைக்காது, யாரோ பார்வீஸின் காதில் ரகசியக் குரலில் சொன்னார்கள்.
”நான் என் மனதை மாற்றிக் கொண்டேன்.” மில்லிஸெண்ட் அந்த சில்லறைப் பொருட்கள் விற்ற கடையை விட்டு வெளியே வந்து, அந்த நகரத்தின் ஒளியான குளிர்ந்த காற்றில் நடந்தபோது சொன்னாள்.
“எதைப் பற்றி?”
”நீங்கள் ஷாம்ஸியா பற்றிய அந்தக் கட்டுரையை எழுதக் கூடாது என்று நினைக்கிறேன். உங்களுக்கு அது மிகவும் ஆபத்தைக் கொணரும். தவிர, அது எதையும் மாற்றாது.”
அவர்களுக்கு அது முடிவாகியது. அவர்கள் தத்தமது வேலையிடங்களுக்குத் தனியே பிரிந்து போவார்கள். பார்வீஸ் ஒரு வாடகைக் காரை மில்லிஸெண்டுக்கு என்று அழைத்தார். அது மிகவும் சீக்கிரமே வந்து விட்டது. அவர் ஏதோ ஒரு தகப்பன் போல நடக்க முடிய வேண்டும் என்று விரும்பினார், அல்லது ஒரு புத்திமான் போல. தன் மகளைத் தான் பார்க்கும் வித்த்தை மாற்றிக் கொள்ளும்படி தன்னை அவள் ஆக்கினாள் என்று அவளிடம் சொல்ல அவர் விரும்பினார். ஆனால் அது ஏதும் சொல்ல வரவில்லை. அவர்கள் கை குலுக்கினார்கள்
“குட்பை, மிஸ்டர் ராஜாபி.”
அவர் எதோ சாதாரணமானதைச் சொன்னார், மில்லிஸெண்ட் டாக்சியில் ஏறிக் கொண்டாள்.
தன் அலுவலகத்துக்குத் திரும்ப பார்வீஸ் மிகவே அதிக நேரம் எடுத்துக் கொண்டார். கடைசியாக வந்து, தன் கணினியைத் துவக்கினார். எழுத உதவும் மென்பொருளைத் தூண்டினார். அவர் எழுதினார், நவம்பர் 7 ஆம் தேதி, 22 வயதான ஷாம்ஸியா காண்டிகோவை, டுஷான்பே நகரில் ஸோமானி நிழற்சாலையில் தேநீர் விடுதியருகே காவல்துறை கைது செய்தது. எழுந்து நின்றார். தன் தொலைபேசியை அணைத்து வைத்தார். வெளி வாயிலுக்குப் போய் ஷேரை வீட்டுக்குப் போகச் சொன்னார். எழுதப்பட்ட மொத்த வரலாற்றிலுமே யாரும் அவரை சீக்கிரம் வீட்டுக்குப் போ என்று அனுப்பியதில்லை. அவர் இது ஏதோ வேடிக்கை விளையாட்டு என்று முதலில் நினைத்தார். ஆனால், விளையாட்டில்லை என்று தெரிந்த்தும், பார்வீஸுக்குத் தன்னிடம் ஏதோ சுணக்கம் என்று நினைத்து, விருப்பமில்லாமல் போனார்.
மற்ற அலுவலகங்களில் பெரும்பாலானவை காலியாக இருந்தன, இருந்த சிலவற்றிலும் யாரும் இல்லை. அது நல்லதாகப் பட்ட்து. பார்வீஸ் அந்த நீல நீரூற்றைப் பார்த்தார். அருகில் போய் அதை உற்று நோக்கிச் சோதனையிட்டார். ஷேரின் கருவிகளடங்கிய பெட்டியை ஒரு சேமிப்பு அறையில் துருவித் தேடிக் கண்டு பிடித்தார். அந்த நீரூற்றின் மையத்தில் இருந்த ஒரு பீடத்தைச் சுற்றி ஏழு குறுகிய குழாய்கள் இருந்தன, அவற்றினூடே நீர் பாய வேண்டும். ஒவ்வொன்றும் ஒரு சிறு வலைத் திரையால் மூடப்பட்டிருந்தது. அவற்றை ஒவ்வொன்றாக அவர் அந்தக் குழாய்களிலிருந்து அகற்றினார், குவிந்திருந்த அழுக்கையும், உலர்ந்த இலைகளையும் நோண்டி எடுத்து நீக்கினார். வலைத் திரைகளை மறுபடி பொருத்தினார். ஷேரின் கருவிப் பெட்டியை சேமிப்பு அறைக்குத் திருப்பினார்.
இப்போது ஒரு அவசரமும் இல்லை, என்னவெல்லாம் நடக்க வேண்டுமென்று இருந்த்தோ அதெல்லாம் ஏற்கனவே நடந்து விட்டது. அவர் முன் வாயில் கம்பிக் கதவைத் திறந்தார். தன்னைத் தாக்க யாராவது வருவதாயிருந்தால் அந்தக் கதவு சேதமாவது அவசியமில்லாதது. அவர் தயாரானபிறகு, அவர் தண்ணீர்க் குழாயைக் கண்டு பிடித்து, அந்தக் குழாயைத் திறந்து விட்டார். கடைசியில் நீரூற்றில் தண்ணீர் பாய்வதைப் பார்ப்பதில் ஒரு ஆழ்ந்த மகிழ்ச்சி பிறந்த்து. அந்த சந்தோஷமளிக்கும் நீர்ச் சிதறலையும், நீர் எழுவதும், சூரியஒளியில் வீழ்வதுமான காட்சியின் துல்லியத்தையும் கிரஹித்துக் கொண்டிருந்தார். அந்த நீரூற்றின் விளிம்பில் ஒரு பறவை வந்து அமரும் காட்சியைப் பார்க்கும் எதிர்பார்ப்போடு சிறிது நேரம் அங்கு தங்கியிருந்தார். இப்போதோ அப்போதோ அது நடக்கத்தான் போகிறது. தன் மனம் நிரம்புமளவு பார்த்து விட்டு, அவர் உள்ளே திரும்பிப் போனார், தன் மேஜை முன் அமர்ந்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.