இதுவரை…
மேகக்கணிமை என்றால் என்னவென்று சொல்லாமலே டபாய்த்துவிட்டு, கணினிகளின் கற்காலம் முதல் சில ஆண்டுகள் முன்புவரை புழங்கிவந்த பலவகையான கணிமை முறைகளை ஹெலிகாப்டர்மூலம் பார்வையிட்டோம். அதன்வழியே, மேகக்கணிமையின் சிலபல பண்புகளை/தேவைகளை அடிக்கோடிட்டோம்.
இனி…
கணிமையின் பயனர்கள் யாவர்? உதாரணத்துக்கு:
- இந்தக் கட்டுரையை ஒரு கணினியில் எழுதிக்கொண்டிருந்த நான்
- இதை ஒரு ப்ரவுசரில் படித்துக்கொண்டிருக்கும் நீங்கள்
- இந்தக் கட்டுரையைப் பிரசுரித்திருக்கும் நமது சொல்வனம் அன்பர்கள்
- இந்தக் கட்டுரை இணையம் என்னும் மாபெரும் வலையமைப்பில் எங்கோ ஓரிடத்தில் உள்ள சொல்வனம் வலைதள சர்வரில் சேமித்து வைக்கப்பட்டிருக்கிறது. அதை மேற்பார்வையிட்டுப் பராமரிக்க ஒரு மென்பொருள் இருக்கிறது. அம்மென்பொருளை இயக்கும் ஊழியர்
- இந்த இணைய இணைப்பை ஒரு தொலைதொடர்பு நிறுவனம் உங்களுக்கு வழங்கியிருக்கிறது. உங்கள் இணைப்பிற்கான மாதக் கட்டணத்தை நிர்ணயிக்க ஒரு மென்பொருள் உள்ளது. அதில் உங்கள் கட்டணத்தை இஷ்டத்துக்கு ஏற்றிவைத்திருக்கும் மகானுபாவர்
1 மற்றும் 2ஆம் பயனருக்கும் 4 மற்றும் 5ஆம் பயனருக்கும் இடையே உள்ள வித்தியாசம் உங்களுக்கு உடனே புலப்பட்டுவிடும் என்று நினைக்கிறேன். 1, 2ஆம் பயனர்கள் நுகர்வோர்கள். அவர்களது கணிமைத் தேவை 4,5ஆம் பயனர்களின் கணிமைத் தேவையைக் காட்டிலும் மிகவும் வித்தியாசமானது. 4,5ஆம் பயனர்கள் நிறுவன ஊழியர்களும் நிர்வாகிகளும் – வணிகப்பயனர்கள். இங்கு அவர்களது கணிமைத் தேவைகள் அவர்களது பணி மற்றும் நிறுவனத்துடன் தொடர்புடையது. நிறுவனத்தின் எல்லைக்குள்ளேயே இயங்க வேண்டிய கட்டாயம்கூட இருக்கலாம். (3ஆம் பயனரை எப்படி வகைப்படுத்துவீர்கள்? அவர்களது கணிமைத் தேவை என்ன?)
இங்கே சுவாரசியமான விஷயம் என்னவென்றால், இந்த ஐந்து விதமான பயனர்களும் அவர்களது கணிமைத்தேவையை மேகக்கணிமை மூலம் தீர்த்துக் கொள்ளலாம்!
எனது கட்டுரையை நான் கூகுள் ஆவணத்தில் (Google docs) எழுதலாம். இரண்டு பத்திகளை என் கணினியில் எழுதிவிட்டு, ஒரு விமானத்தைப் பிடித்து சென்னைக்கு வந்து, அடுத்த இரண்டு பத்திகளை என் அப்பாவின் கணினியில் எழுதலாம். நீங்கள் உங்கள் பிரவுசரை மூடி வைத்துவிட்டு உங்கள் மனைவியின் ஸ்மார்ட்போனில் இதே பக்கத்தை எடுத்துப் படிக்கலாம். சொல்வனத்தின் ஆசிரியர் இந்த வேர்ட்பிரஸ் தள மேலாண்மையை எங்கிருந்து வேண்டுமானாலும் செய்யலாம்.
இந்தத் தளத்தை அமேசான் நிறுவனத்தின் க்ளவுட் சர்வர்களிலிருந்து வழங்குவதாக வைத்துக் கொள்வோம். அமேசானின் மேகக்கணிமைத் தொழில்நுட்பத்தின் மூலம் நீங்கள் நினைத்த வேளையில் உங்களுக்கென்று ஒரு சர்வரை முளைக்கச்செய்யலாம். அது வர்ஜீனியாவிலோ, சா போலோவிலோ, ஃப்ராங்க்ஃபர்ட்டிலோ அல்லது டோக்யோவிலோ இருக்கலாம். சொல்வனத்தின் ஆசிரியர் அதை எங்கிருந்து வேண்டுமானாலும் இயக்க முடிவதோடு, அமேசான் நிறுவனத்தின் ஊழியரும் அதை எங்கிருந்து வேண்டுமானாலும் பராமரிக்கலாம்.
நான் மேலே சொன்னது எதுவுமே ’ஒரு பேச்சுக்கு’ அல்ல. இவையெல்லாம் இன்று நடைமுறையில் உள்ள, நான் உட்பட பலரும் தினந்தோறும் பயன்படுத்தி வருகின்ற தொழில்நுட்பங்கள். மேகக்கணிமையே இவற்றையெல்லாம் சாத்தியமாக்குகிறது.
சரி. இதுவரை கணிமை முறைகளையும் கணிமையின் பயனர்களையும் பார்த்தோம். இனி, நேரே கோதாவில் இறங்குவோம்.
மேகக்கணிமையின் அடிப்படைத் தொழில்நுட்பங்கள்
மெய்நிகராக்கம்
வள்ளலார் பாட்டெல்லாம் இல்லை. இது கணிமை தொடர்பான விஷயம்தான். நீங்கள் ஒரு சர்வரில் உங்கள் வலைச்செயலியை ஓட்டிக்கொண்டிருக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். நான் சர்வர் என்று சொல்லும்போது உங்கள் மனதில் தோன்றும் பிம்பம் என்ன? உங்களுக்கெனப் பிரத்யேகமாகக் கொலுவீற்றிருக்கும் ஒரு சக்திவாய்ந்த கணினிதானே? உங்கள் சர்வரை நீங்கள் இயக்கும்போது இப்படி ஒரு பிம்பத்தைத்தான் அக்கணினி அளிக்கிறது. ஆனால் உண்மையில் இந்த ஒரே கணினி பலருக்கும் “பிரத்யேக” சர்வராக வீற்றிருக்கும். இது எப்படிச் சாத்தியமாகிறது? ஒரே கணினியில் பல இயங்குதளங்களை மெய்நிகராக இத்தொழில்நுட்பத்தின் மூலம் இயக்கமுடிகிறது. எனவே, இக்கணினியின் அனைத்து வளங்களும் முழுமையாகப் பயன்படுத்தப்படுகிறது. ஒரே ஒரு இயங்குதளமும் வலைச்செயலியும் மட்டும் இருந்தால் இக்கணினியின் வளங்கள் பலவும் வாளாவிருக்கத்தான் வேண்டும்.
ஒரு புதிய பயனருக்கு வலைச்செயலி வேண்டும் என்றால் இன்னொரு சர்வரைத் தேடி ஓட வேண்டியதில்லை. உடனடியாக ஒரு மெய்நிகர் இயங்குதளத்தை இதே கணினியில் அமைத்து, சில நிமிடங்களில் இப்புதிய வலைச்செயலியைப் புழங்க விட்டுவிடலாம் (தேவையான வளங்கள் இருக்கும் பட்சத்தில்). இந்த ஒரே கணினியைக் கூறுபோட்டுப் பல பயனர்களுக்கு மெய்நிகர் சர்வர்களாக வழங்கமுடிவதே இத்தொழில்நுட்பத்தின் சிறப்பு. இவற்றைக் கணினித்துணுக்குகள் என்று அழைப்போமா?
திடீரென்று உங்கள் வலைச்செயலிக்கு எக்கச்சக்கமான பயனர்கள் வந்துவிட்டார்கள் என்று வைத்துக்கொள்வோம். இப்போது இந்த ஒரு கணினித்துணுக்கு மட்டும் உங்களுக்குப் போதவில்லை. இந்நிலையில், இதே கணினியிலோ இல்லை இன்னொன்றிலோ உங்களுக்கு ஒரு புதிய துணுக்கை அளிக்க முடியும். சரி, இத்துணுக்கில் இப்போது எல்லா மென்பொருட்களையும் உங்கள் வலைச்செயலியையும் மறுபடி நிறுவவேண்டுமே! அதற்கு எக்கச்சக்க நேரம் பிடிக்குமல்லவா? அதுதான் இல்லை. உங்கள் முதற்துணுக்கைப் புகைப்படம் எடுப்பதுபோல் முழுமையாகப் படம்பிடித்து அதை அப்படியே உங்கள் புதிய துணுக்கில் பொருத்திவிட முடியும்!
சேவைசார் கட்டமைப்பு
நான் சர்வர் என்று சொல்லும்போது உங்கள் மனதில் தோன்றும் பிம்பம் என்ன? மறுபடியும் மொதல்லேருந்தா என்று பதறாதீர்கள்! இப்போது இக்கேள்வியின் நோக்கம் சற்று மாறுபட்டது. ஒரே ஒரு வலைச்செயலி மென்பொருள் உங்கள் சர்வரில் ஓடுகிறது என்றுதான் பொதுவாக நினைக்கத் தோன்றும். ஆனால் உண்மையோ வேறு.
உங்கள் வலைப்பக்கங்களை வழங்க ஒரு மென்பொருள், அப்பக்கங்களில் உள்ள தரவுகளை வழங்க ஒரு தரவுத்தள மென்பொருள் என்ற அடிப்படைப் பிரிவு ஒருபக்கம். இன்னொரு பக்கம் பார்த்தால் பல சமயங்களில், குறிப்பாகப் பெருநிறுவனங்களில், பலவகைத் தரவுகள் நிறுவனத்தின் பல்வேறு துறைகளிலிருந்து வரவேண்டும். இத்தரவுகளை பராமரிக்கும், வழங்கும் பொறுப்பு அத்துறையையே சாரும். அப்படி இருக்க, அத்தரவுகளை உங்கள் வலைச்செயலி பெறுவது எப்படி? சில சமயங்களில் சில தரவுகள் வேறொரு நிறுவனத்திடலிருந்து வரவேண்டி இருக்கும். உதாரணம்: ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டரிலிருந்து வரும் தரவுகள். இவற்றைப் பெறுவது எப்படி?
இதற்கெல்லாம் துணைசெய்யும் தொழில்நுட்பம் வலைச்சேவைகள் என்று பொதுவாக அழைக்கப்படுகிறது. இவ்வாறு பல்வேறு தனித்தனி சேவைகள் ஒன்றுசேர்ந்து செயல்படுவதையே சேவைசார் கட்டமைப்பு என்று அழைக்கின்றனர். மேகக்கணிமையில் சேவைசார் கட்டமைப்பு ஒரு அடிப்படை அங்கம்.
பயனீட்டுக் கணிமை
நிக்கோலஸ் கார் என்ற அமெரிக்க எழுத்தாளர் கணிமையின் பயன்பாட்டை மின்சக்தியின் பயன்பாட்டுடன் ஒப்பிட்டு எழுதிய புத்தகம் மிகவும் பிரபலம். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மின் உற்பத்தியாளர்கள் தாம் உருவாக்கிய மின்சக்தியைத் தனித்தனியே பயனர்களுக்கு விற்றுக்கொண்டிருந்தனர். ஆனால் விரைவில் ஒரு பொதுவான மின்தொகுப்பு உருவாகி, மின்சக்தி ஒரு அடிப்படைப் பயன்பாடு ஆனது. மின் அளவிகளின் மூலம் நீங்கள் பயன்படுத்திய சக்தியை அளவிட்டு அதற்கு மட்டுமே நீங்கள் பணம் செலுத்தும் நிலை உருவானது. அதேபோல், கணிமையும் ஒரு தரநிலைப்படுத்தப்பட்ட அடிப்படைப் பயன்பாடாகி, உங்கள் பயன்பாட்டளவின்படி நீங்கள் கட்டணம் செலுத்தும் நிலை வரும் என்பதே காரின் நிலைப்பாடு. இன்று, மேகக்கணிமை அந்நிலையை நோக்கி வெகுவேகமாகச் சென்றுகொண்டிருக்கிறது.
இதுவரை மேகக்கணிமையின் சில அடிப்படைத் தொழில்நுட்பங்களைப் பார்த்தோம். அடுத்த பகுதியில் மேகக்கணிமையின் அனைத்து அடிப்படைப் பண்புகளையும் ஒரு சுற்று பார்த்துவிடலாம். மேற்சொன்ன தொழில்நுட்பங்கள் பற்றிய புரிதல் இருந்தால் அப்பண்புகளை உள்வாங்கிக்கொள்வது எளிதாக இருக்கும்.
கடந்த இரு கட்டுரைகளிலும் பயன்படுத்தப்பட்ட சில கலைச்சொற்களுக்கான ஆங்கில இணைகளைக் கீழே தருகிறேன். ஆங்கிலக் கட்டுரைகளைப் படிக்கும்போது இது உங்களுக்கு உதவக்கூடும்.
கலைச்சொற்கள்
- கணிமை: Computing
- வன்பொருள்: Hardware
- மென்பொருள்: Software
- வலையமைப்பு/வலைப்பின்னல்: Network
- தரவு: Data
- தரவுத்தளம்: Database
- தரவுமையம்: Data Center
- மேசைக்கணினி: Desktop Computer / Personal Computer
- உலாவி: Browser
- இயங்குதளம்: Operating System
- செயலி: Application
- வலைதளம்: Web Site
- வலைச்செயலி: Web Application
- வலைச்சேவை: Web Service
- தொகுதிச் செயலாக்கம்: Batch Processing
- பயனர் முனையம்: User Terminal
- ஊமை முனையம்: Dumb Terminal
- ஊடாடும் பயனர்: Interative User
- நுகர்வோர்: Consumer
- வணிகப்பயனர்: Business User
- மின்வணிகக் கட்டமைப்பு: E-Commerce Infrastructure
- தள மேலாண்மை: Website Management
- மெய்நிகராக்கம்: Virtualization
- மெய்நிகர் இயங்குதளம்: Virtual Operating System
- கணினித் துணுக்கு: Computing Instance / Droplet
- சேவைசார் கட்டமைப்பு: Service-Oriented Architecture
- பயனீட்டுக் கணிமை: Utility Computing
- மின்தொகுப்பு: Electric Grid
- தரநிலைப்படுத்தப்பட்ட: Standardized