ஈராக்கின் வடஎல்லையில் இருக்கும் மாகாணம் என ஈராக்கும் குர்திஸ்தானின் ஆவணங்களும் சொன்னாலும், தனிக்கொடி, தனி பார்லிமெண்ட், தனி பிரதமர், ஜனாதிபதி என தனி ராஜாங்கத்தை நடத்துகிறது குர்திஸ்தான் மாநிலம். அதன் தலைநகர் எர்பில். குர்திஸ்தானத்து மக்கள் குர்திகள் என்றழைக்கப்படுகின்றனர்.
சுலைமானியா மற்றும் எர்பில் – இவை குர்திஸ்தானின் இரு முக்கிய நகரங்கள். குர்திகளுக்குள் இருக்கும் பிளவின் எடுத்துக்காட்டும் இதுவே. ஒரு பிரிவினர் சுலைமானியா நகரில் இருப்போரே குர்திஸ்தானத்தை ஆளத்தகுதியடையவர் எனச் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். எர்பிலில் இருப்பவர்களோ இதுவே குர்திஸ்தானத்தின் தலைநகர் எனச் சொல்லிக்கொண்டிருக்கின்றனர். ஆனால் குர்திஸ்தான் என்பது தனிநாடாகப் பிரியவேண்டும் என்பதில் மட்டும் இருவருக்குமே ஒற்றுமை.
வலிமையான ஜனநாயகமே இதன் அடிப்படை. நம் நாட்டைப்போல சில ஊழல்கள் தேர்தலில் நடப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டாலும், தேர்தல்கள் முடிந்தவரை நேர்மையாகவே நடத்தப்படுகின்றன. சதாம்ஹுசைன் ஆட்சி அகற்றப்பட்ட நாளையே சுதந்திர நாளாகக் கருதுகின்றனர் குர்திகள். 1982ல் இருந்து சுதந்திரம் பெற்றதாகக் கருதுகின்றனர்.
எண்பதுகளில் சதாம்ஹுசைன் காலத்தில் தனிநாடு கேட்டு போராடியதற்காக ரசாயன குண்டுகள் எல்லாம் வீசப்பட்டன. பெரும் பாதிப்பையும் உயிரிழப்பையும் அடைந்தனர் குர்திகள். 2006 வரைகூட சதாம் ஹுசைன், இப்படிக் கொடூரமாக குர்திகளைக் கொன்றழித்ததற்காகக் குற்ற உணர்ச்சி கொள்ளத்தேவையில்லை எனப் பேசி இருக்கிறார்.
அமெரிக்கப் படைகள் சதாம் ஹுசைனைக் கைது செய்து நீதிமன்ற விசாரணை நடத்தியபோது, புரட்சிப் படையைச் சேர்ந்த பெண் நீதிமன்றத்தில் சொன்ன வாக்குமூலம் கீழே.
அந்தப் புரட்சிப்படைதான் பெஷ்மெர்கா என்ற குர்திஸ்தானின் இன்றைய ராணுவம்.
இலியாஸ் மிகைல் என்ற முன்னாள் போராளி சதாம் ஹுசைனின் போர்க்குற்றங்கள் குறித்த விசாரனையின்போது அளித்த சாட்சியத்தில் சொன்ன விஷயங்கள் :
1987ம் ஆண்டு ஜூன் மாதம் ஐந்தாம் தேதி மாலையில் 4 போர் விமானங்கள் காலிஸிவா என்ற நகரின் மீது குண்டு மழை பொழிந்தது
ஏதோ விநோதமான வாடை வீசியது,
குண்டு வீசப்பட்டபோது பதுங்குகுழியில் தனது நண்பர் உம் அலி மற்றும் பன்னிரண்டு நண்பர்களுடன் பதுங்கிக்கொண்டிருந்ததாக மிகைல் என்ற பெண் சொன்னார்.
பின்னர் தோழர் அபு இலியாசின் சத்தம் கேட்டது, “இங்கே டாக்டர் யாராச்சும் இருக்கீங்களா?’
அவர்கள் வாந்தி எடுத்தார்கள், கண் தெரியவில்லை. அவர்களால் எதையும் பார்க்க இயலவில்லை.
ஒட்டுமொத்த நகரமும் ரசாயன குண்டுகளால் தாக்கப்பட்டிருப்பதாக தனது நண்பர் நஷ்மே தன்னிடம் சொன்னதாக சாட்சிக்கூண்டில் அமர்ந்தபடி மிகைல் கூறினார்.
குர்திய போராளிகளை விஷவாயு இட்டு கொல்ல சதாமின் படைகளுக்கு ரசாயன குண்டுகளை சப்ளை செய்த வெளிநாட்டு கம்பெனிகளிடம் இருந்து மிகைல் பிற்பாடு இழப்பீடு கேட்டதாக அவர் சொன்னார்
இந்தக் காலகட்டத்தில் சதாமின் படைகளால் கொல்லப்பட்ட குர்திகளின் எண்ணிக்கை கிட்டத்தட்ட ஒரு லட்சத்தி ஐம்பதினாயிரம்.
அன்று ரகசியமாய் சுதந்திரத்திற்காகப் போராடிய படையே பெஷ்மெர்கா என்றழைக்கப்படும் குர்திஸ்தானின் ராணுவம்.
இன்றைய தேதியில் ஈராக்கில் இருக்கும் மிக வலிமையான, தைரியமான ராணுவப்பிரிவு பெஷ்மெர்கா ஒன்றே. பெண்களும் ராணுவத்தில் சேர்ந்து கடினமான பயிற்சிகளை மேற்கொண்டு களத்தில் ஆண்களுடன் சேர்ந்தே போரிடுகின்றனர். ஐஎஸ் கும்பல் மீது ஒரு குண்டுகூட சுடாமல் கிர்குக்கை மீட்டதும் பெஷ்மெர்கா படைகளே. பெஷ்மெர்கா படைகள் வருவதைக் கேள்விப்பட்டதும் ஐஎஸ் படைகள் இடத்தை காலி செய்துவிட்டு ஓடியதே பெஷ்மெர்காவின் வலிமையைச் சொல்லும்.
ஐஎஸ் பயங்கரவாதிகளின் நம்பிக்கையின்படி பெண்களால் கொல்லப்பட்டால் சுவர்க்கம் கிடைக்காது என்பதால், பெண்களும் உள்ள பெஷ்மெர்கா படைகளால் கொல்லப்படுவதைத் தவிர்ப்பதற்காக ஓடுகின்றனர்.
எர்பில் விமான நிலையம்
துபாயின் டனாட்டாவிடம் (Dnata) விமான நிலையத்தை (பாதுகாப்பு தவிர இதர அனைத்திற்கும்) ஒப்படைத்திருக்கிறார்கள். எனவே துபாயின் குட்டி விமான நிலையத்தைப் பார்த்ததுபோல இருக்கிறது எர்பில் விமான நிலையம். அதே சுத்தம், அதே குழப்பமற்ற அறிவிப்புப் பலகைகள், மிக சுத்தமான டாய்லட்டுகள் – இப்படி எல்லாமே தரமாக.
அதேபோல போலிஸ் இமிக்ரேஷனில் நட்புடன் பேசி முத்திரை குத்தி ‘வெல்கம் டு குர்திஸ்தான்’ என முகமன் சொல்லி அனுப்பி வைக்கின்றனர். இராக்கில் இந்த ஒரு விமான நிலையத்தில் மட்டுமே இந்தியர்களுக்கு ‘ஆன் அரைவல் விசா’ 15 நாட்களுக்குத் தருகிறார்கள். மேலும் 15 நாட்கள் நீட்டித்தும் கொள்ளலாம். ஆனால் இந்த விசாவை வைத்துக்கொண்டு மெயின்லேண்ட் ஈராக் எனப்படும் குர்திஸ்தான் மாகாணம் தவிர இதரப் பகுதிகளுக்குச் செல்ல இயலாது. திருப்பி குர்திஸ்தானுக்கே அனுப்பி வைத்துவிடுவார்கள். இது கிட்டத்தட்ட சீனா வழங்கும் காகித விசா போன்ற செயல். ஈராக்கிற்கு தன் வலிமையைக் காட்டவும் எரிச்சலூட்டவும் இம்முறையைக் கையாள்கிறது குர்திஸ்தான்.
ஈராக்கில் குர்திஸ்தானில்தான் முதன்முதலில் ஏ.டி.எம் எந்திரங்களையும் கடன் அட்டைகளை ஏற்றுக்கொள்ளும் கடைகளையும் பார்த்தேன். 2013 முதலே அங்கு சென்று வந்துகொண்டிருக்கிறேன். மெய்ன்லேண்ட் ஈராக்கிற்கும், குர்திஸ்தானத்திற்கும் வசதிகளில் பெரிய வித்தியாசம். பாக்தாத் விமான நிலையத்தில் ஏ.டி.எம் எந்திரம் 2014 இறுதியில்தான் செயல்பட ஆரம்பித்தது. பாஸ்ராவில் 2015 மத்தியில் ஏ.டி.எம் எந்திரம் வந்தது. இப்போதும் மொத்த பாஸ்ராவில் 10 ஏ.டி.எம் எந்திரங்கள் இருந்தாலே அதிகம்.
டாக்ஸி கிடைத்து ஹோட்டலுக்கு செல்லும் வழியில் ஒரு திருப்பமாக வாகன ஓட்டுனரே 70 அமெரிக்க டாலருக்கு அருமையான ஹோட்டல் இருக்கிறது, பிடித்திருந்தால் பாருங்கள் இல்லையெனில் எயின்காவா என்ற இடத்தில் முன்னரே நீங்கள் சொல்லி வைத்திருந்த ஹோட்டலுக்கே கொண்டு போய் இறக்கி விடுகிறேன் என்றார். அல் ஜவாஹிரி என்ற ஹோட்டல். 70 டாலருக்கு அருமை. இலவச காஃபி எப்போதும். காலையில் இலவச பிரேக்ஃபாஸ்ட். வைஃபை பட்டையைக் கிளப்புகிறது
இதே ஹோட்டல் பாஸ்ராவில் இருந்திருந்தால் 5 ஸ்டார் ஹோட்டல் என நாமகரணம் சூட்டி 250 டாலரும், 15 டாலர் வைஃபை வசதிக்கும் வாங்கி இருப்பார்கள். வைஃபை தொங்கும்.
எர்பில் நகரம் முழுதும் சுத்தமாய் இருக்கிறது. மீண்டும் துபாயுடன்தான் ஒப்பிட வேண்டியிருக்கிறது. சாலைகள் அனைத்தும் அடையாளங்களுடன், வேகத்தை கண்காணிக்கும் ரேடார்களுடன் இருக்கின்றன. வானுயர்ந்த கட்டடங்கள் ஒரே இடத்தில் குவியாமல் நகர் முழுக்கப் பரவி இருக்கின்றன. இந்தியர்களுக்கான மரியாதை இங்கும் இருக்கிறது.
நான் முதலில் சந்தித்தது இலங்கைத் தமிழர் ஒருவரை. எர்பில் விமான நிலையத்தில் கிளீனராக இருக்கிறார். இலங்கைப் பணம் 4 லட்சம் கொடுத்து 400 அமெரிக்க டாலர் மாதம் கிடைக்கும் வேலைக்கு வந்திருக்கிறார். மொபைல் போன் வாங்கினால் காசு செலவாகும் என இன்னும் நம்பர்கூட வாங்கவில்லையாம். எனக்கு டாக்ஸி கிடைக்கும்வரை என்னுடன் பேசிக்கொண்டிருந்தார். மட்டக்களப்பைச் சேர்ந்தவர். பெயர் தினேஷ்.
இந்தியா கேட் உணவகத்திற்கு உணவு அருந்தச் சென்றோம். ட்ரிப் அட்வைசர் டாட் காமில் ‘அந்த ஹோட்டலில் சுத்தம் என்றால் கிலோ என்ன விலை எனக் கேட்பார்கள்’ என கமெண்ட் போட்டிருந்தார்கள். ஆனால் இன்று நான் சென்றிருந்தபோது அருமையான சூழலில் நல்ல இடத்தில் நல்ல சுவையில் இந்திய உணவுகள் கிடைத்தன. என்னுடன் ஒரு குர்தி, ஒரு துருக்கியர் மற்றும் ஒரு பாக்தாதியும் வந்திருந்தனர். அவர்களும் எனக்காக இன்று இந்திய உணவு வகைகளையே சாப்பிட்டனர். நல்லா இருக்கு என்றுதான் சொன்னார்கள் மூவரும். ஆனால் குர்திக்கும் துருக்கியருக்கும் நம்மூரின் காரம் சுத்தமாய் வாயில் வைக்க முடியவில்லை. அந்த ஹோட்டலில் முழுக்க முழுக்க ஆந்திரா மக்கள். சர்வர் முதல் கிளீனர்கள் வரை. சாப்பிட வந்தவர்களில் நிறைய இந்திய முகங்களைப் பார்க்க முடிந்தது.
உண்டபின்னர் காரிலேயே மீண்டும் ஒரு நகர் உலா. பார்லிமெண்ட் கட்டடம், புதிதாய் உருவாகும் கேட்டட் கம்யூனிட்டிகள், பலமாடிக் கட்டடங்கள் எல்லாவற்றையும் காண்பித்தார்.
எர்பில் நகரம் முழுக்க வட்ட வடிவ சாலைகளால் இணைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு அடுக்கு சாலையும் கிளைச்சாலைகளால் இணைக்கப்பட்டுள்ளது. மீண்டும் மீண்டும் சொல்ல வேண்டியது, எர்பில் நகரின் சுத்தம்.
அதேபோல பிரம்மாண்டமான மால்கள் எங்கெங்கு காணினும். ராயல் மால், ஃபேமிலி மால் என எல்லாம் பெரிய வடிவில். உலகத்தின் அனைத்து முன்னணி பிராண்டுகளின் எல்லாப் பொருட்களும் கிடைக்கின்றன.
இந்த இரு மால்களைத்தான் உள்ளே சென்று பார்த்தேன். மத்தியக் கிழக்கின் மால்கள் போல இங்கும் முழுக்க முழுக்க இந்தியர்களே கிளீனர்கள், சர்வர்கள் எல்லாம். 100 பேர் கொண்ட டீம் ஆந்திராவின் கரீம் நகரில் இருந்தும், நிஜாமாபாத்திலிருந்தும் வந்திருக்கின்றனர். இவர்களுக்கும் 400 அமெரிக்க டாலர்கள்தான் சம்பளம். எவ்வளவு கொடுத்து வந்தீங்க எனக் கேட்டு அவரையும், அவர் பதிலைக் கேட்டு என்னையும் வருத்தம் கொள்ளவைக்க வேண்டாம் என அதைக் கேட்கவில்லை.
ராயல் மாலின் ஃபுட் கோர்ட்டில் இந்திய உணவு வகைகள் எல்லாம் கிடைக்கின்றன. நான் நெய் தோசை சாப்பிட்டேன். இராக்கில் இது கிடைப்பதே பெரிய விஷயம் என்பதால் சுவை பற்றிப் பேசப்போவதில்லை..
விலைவாசியைப் பொருத்தவரை கிட்டத்தட்ட பாக்தாத் மற்றும் பாஸ்ராவைப் போலத்தான். ஆனால், இங்கு எல்லாமே தரமாக.
பாஸ்ரா மற்றும் பாக்தாத்தைப் பொருத்தவரை டாக்ஸிக்கள் என்றாலே சீனா அல்லது ஈரானில் தயாரிக்கப்பட்ட டப்பா கார்கள்தான். இங்கு ஒரு சீன காரோ அல்லது ஈரானிய காரோ காணக் கிடைக்கவில்லை.
அதேபோல டீக்கடைமுதல் எந்த உணவகம் சென்றாலும் மிக சுத்தமாய் வைத்திருக்கின்றனர். யாரும் குப்பையைத் தெருவில் போடுவதில்லை. சாலைகள் பளிச்சென இருப்பதற்கு அதுவும் ஒரு முக்கிய காரணம்.
குர்திஸ்தான்… குர்திஸ்தான்… குர்திஸ்தான்… இதுதான் எங்கும் எதிலும் காணக்கிடைப்பது.
ஈராக்கை சுத்தமாக ஒதுக்கி வைத்துவிட்டால் நாளை படையெடுத்து குர்திஸ்தானை அழித்து விடுவார்கள் என்பதால் அரசு அலுவலகங்களில் ஈராக்கியக் கொடியும் உப்புக்குச் சப்பாணியாக உண்டு. ஆனால் எந்த அரசு அலுவலகத்தின் அறிவிப்புப் பலகைகளிலும் அரபி கிடையாது. எல்லாம் குர்தி எழுத்துக்கள். குர்திஸ்தானத்துக் கொடியை தூரத்திலிருந்து பார்த்தால் நம் நாட்டுக் கொடிபோலவே இருக்கிறது.
அமெரிக்கா ஈராக்கின்மீது படையெடுத்த பின்னர் சதாமின் கோபத்தின் வடிகாலாக குர்திஸ்தான் இருந்திருக்கிறது. ஒன்றுவிடாமல் எல்லாவற்றையும் அழித்திருக்கிறார். இப்போது நான் பார்க்கும் இந்த வளர்ச்சியை வெறும் பத்தாண்டுகளில் அடைந்திருக்கிறார்கள் என்பதை நினைத்தால் ஆச்சரியமும் மகிழ்ச்சியும் ஏற்படுகின்றன. ஈராக்கில் மீண்டும் மீண்டும் அழிக்கப்பட்ட இனம் குர்திகளே.
எர்பில் வந்ததுமே புத்துணர்ச்சியும் வந்து விடுகிறது. அதன் அழகான தெருக்கள், தடையற்ற மின்சாரம், சுவையான நீர், பயமில்லாச் சூழல் எல்லாம் அப்பாடா என்ற நிம்மதியைத் தருகிறது.
ஈராக்கின் காஷ்மீர் என ஏன் சொன்னேன் என்றால், குர்திஸ்தானின் மலை முகடுகளும் எர்பில் நகரமும் பனிப்பொழிவுடன் பார்க்கவே ரம்மியமாக இருக்கும். மலைவாழிடங்களின் தொழில்களான மாடுவளர்ப்பு, ஆடுவளர்ப்பு, கார்பெட்டுகள் செய்தல் என குளிர்காலத்தில் எர்பில் நகரமும் அதன் சுற்றுவட்டாரங்களும் அழகாகி விடுகின்றன. மேலும் குளிர்காலச் சுற்றுலா நடத்தும் அளவுக்கு சுற்றுலாத் துறையையும் வலிமையாக வைத்திருக்கின்றனர்.
டூரிஸ்ட்டுகள் வருவதற்கு முக்கியக் காரணம் தட்பவெப்பம். மேலும் ரம்மியமான இயற்கைச் சூழல். மெயின்லேண்ட் ஈராக்கில் தங்குவதற்குப் பயப்படும் ஐரோப்பியர்கள் மற்றும் அமெரிக்கர்கள் தங்குவதற்கு பாதுகாப்பான வசதியான இடமாக இருப்பதால் எர்பிலுக்கு எப்போதும் கூட்டம் உண்டு.
மேலும் காலா (Ghala) என்றழைக்கப்படும் உலகின் மிகப்பழமையான மனிதன் வாழிடமும் இங்கிருக்கிறது. கிட்டத்தட்ட 4,000 ஆண்டுகள் பழமையானது. இப்போது யுனெஸ்கோவும் குர்திஸ்தான் அரசாங்கமும் இணைந்து அதை சீர் செய்துகொண்டு இருக்கின்றனர்.
உலகின் முன்னணி மருத்துவமனைகள் எர்பிலில் கிளைகள் திறந்திருக்கின்றன. வேறு வார்த்தைகளில் சொல்வதானால் குர்திஸ்தானத்தில் கிடைப்பதெல்லாம் உலகத்தரம் வாய்ந்த பொருட்கள், சேவைகள்.
இரவு வாழ்க்கையும் எர்பில் நகரத்தில் பிரசித்தி வாய்ந்தது. மிக அழகான பார்களும் பப்புகளும் நைட் கிளப்புகளும் நிறைந்த ஊர். மிகச்சுதந்திரமாக மக்கள் எந்தவித பயமும் இன்றி எத்தனை மணியானாலும் சுற்றி வரும் ஊர்.
குர்திஸ்தானத்து பெண்களும் மிக அழகு. மேற்கத்திய நாகரிகத்தையே பெரிதும் விரும்பும், சுதந்திரமாக இயங்கும், அமெரிக்கர்களுடன் நெருக்கத்தில் இருக்கும் குர்திகளைக் கண்டாலே மெயின்லேண்ட் ஈராக்கில் இருக்கும் ஷியா, ஸுன்னி இருவருக்குமே பிடிப்பதில்லை. மேலும் குர்திஸ்தானில் யூதர்களும், இஸ்ரேலில் குர்திகளும் உண்டு என்பதும் அவர்களுக்கு எரிச்சல். இதை நேரடியாகச் சொல்லாமல் ‘அவர்கள் (குர்திகள்) எப்போதும் ஈராக்கின் துரோகிகள்’ என்பதே பெரும்பாலான ஈராக்கியர்களின் நம்பிக்கை. சதாம் ஹுசைன் காலத்தில் தொடர்ச்சியாகப் பரப்பப்பட்ட பொய் – ‘ஈரான் ஈராக் போரில் குர்திகள் ஈரானுக்குச் சாதகமாகச் செயல்பட்டு, அவர்களை துரோகிகள் எனக் குறிப்பிட்டிருக்கிறார்.’
ஒருகாலத்தில் மத்திய அரசாங்கத்தின் பார்வையில் துரோகிகளாகவும், ஐந்தாம் படையாகவும் குர்திகள் கருதப்பட்டதாலும், இன்றும் தனிநாடு கேட்டுப் போராடிக்கொண்டிருப்பதாலும், பனிப்பொழிவு இருக்கும் அழகிய மலைகளையும் பள்ளத்தாக்குகளையும் கொண்டிருப்பதாலும் குர்திஸ்தானம் ஈராக்கின் காஷ்மீரேதான்.
thnks you jeykumar; pudhiya seithigal tamilnadu media ‘th-ar-th news;