நாம் முன் பகுதியில், எப்படி கருவிகள் உருவாக்கப்படுகின்றன, மற்றும் மிகச் சிறிய உணர்விகளுடன் இணைக்கப்படுகின்றன என்று பார்த்தோம். ஆனால், நுகர்வோர் மற்றும் நிறுவனங்கள் பயனடைய, இந்த அமைப்பை மேலும் மென்பொருள் மூலம், அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும். உதாரணத்திற்கு, இக்கட்டுரையைப் படிக்கும் எத்தனை பேருக்கு, ஒரு உணர்வி, செயலியுடன் சேர்ந்து எடுக்கும் முடிவு, நுண்ணறிப்பேசியில், காட்டப்படும் படத்தின் திசைப்போக்கு (orientation) மாற்றம் என்பது பற்றியக் கவலை? நுகர்வோர் பார்ப்பதெல்லாம், ஒரு படத்தைக் காட்டும் பயன்பாட்டை மட்டும்தான். அத்துடன், நுகர்வோரின் எதிர்பார்ப்பு, எல்லா நிறுவன நுண்ணறிப்பேசிகளிலும், படத்தின் திசைப் போக்கு சுழற்சிக்கேற்ப மாறும் என்பதுதான். சாம்சுங்கில் ஒரு முறையும், ஆப்பிளில் இன்னொன்று என்றிருந்தால், குழப்பம்தான்.
இதையே சற்று மேலும் சிந்தித்தால், எதிர்கால கருவி இணைய பயன்பாட்டாளர் எதிர்பார்ப்பு எப்படி இருக்கும்?
- ஒரு கருவியை (உணர்வி+செயலி+ரேடியோ) பாதுகாப்பாக, எந்த ஒரு செயல்முறை மென்பொருளோடும் (Operating System) தொடர்பு கொள்ள வேண்டும். அதாவது, விண்டோஸ், ஆண்ட்ராய்டு, ஆப்பிள் என்று எதுவாக இருந்தாலும், கருவிக்கு எந்த வித்தியாசமும் இருக்கக் கூடாது
- கருவிகள் எப்படி இணைக்கப்பட்டிருந்தாலும், பயன்பாட்டாளர் எந்தச் சிக்கலுமின்றி, தன்னுடைய பயன்பாட்டை இயக்க முடிய வேண்டும். கருவிகள் BlueTooth4, Zigbee, 6LoWPAN என்று எந்த முறையால் இணைக்கப்பட்டாலும், பயன்பாட்டாளருக்கு எந்த வித்தியாசமும் தெரியக் கூடாது
- நுகர்வோர் பயன்படுத்தும் பயன்பாடுகள் எளிதாக தரவுகளை பரிமாற்றிக் கொள்ள இயல வேண்டும். நம்முடைய உதாரணத்தில், எப்படி, ‘சக்தியும்’, ‘நெல்லையும்’, சர்வ சாதரணமாக தரவுகளை பரிமாறிக் கொண்டனவோ, அதுபோல ஒரு அனுபவத்தைப் பயன்பாட்டாளர் பெற வேண்டும்
இப்படி எதிர்கால நிலை பற்றி எடுத்துரைப்பது கணினி தொழில்நுட்பத்தில் வழக்கம். நடைமுறையில், வணிக மோதல்கள் மற்றும் சந்தைப் பொருளாதாரம், இத்தகைய குறிக்கோள்களைத் தவிடு பொடியாக்குவதும் வழக்கம். ஆனால், இந்த விஷயத்தில், கருவிகளில் இணையப் பயன்பாடுகளை ஒரே நிறுவனம் செய்து முடிக்க இயலாதது, அனைவருக்கும் புரிகிறது. அத்துடன், இந்த மூன்று குறிக்கோள்களையும் அடைவது எளிதல்ல. பெரிய நிறுவனங்கள், தங்களது கைவரிசையை பயன்பாடுகளில் காட்டுவதே தனக்குச் சரிப்பட்டு வரும் என்பதைச் சரியாக கணிக்கத் தொடங்கிவிட்டன.
மேல்வாரியாகப் பார்த்தால், கருவி இணையக் கட்டமைப்பில் (IOT architecture) சில முக்கிய பெரிய பாகங்கள் உள்ளன:
- உணர்வி, செயலி மற்றும் தொடர்பியல் – இவை வன்பொருள் விஷயங்கள் (hardware)
- கருவிகள் உருவாக்கும் தரவுகளை பயனுள்ள முடிவாற்றல் விஷயமாக ஏதாவது ஒரு திரை வடிவத்தில் (கணினித் திரை, நுண்ணறிப்பேசித் திரை, வில்லைக் கணினித் திரை) காட்சியளிக்கும் பயன்பாடு – இது மென்பொருள் விஷயம் (software)
இந்த இரு நிலைகளுக்கு இடையில், பல்வேறு இடை நிலைகள் உள்ளன. பல வித்தியாசமான தொழில்நுட்பங்களை இணைப்பது அவ்வளவு எளிதல்ல. இதனால், பல்வேறு அணுகுமுறைகள், இந்தப் பிரச்னையைத் தீர்க்க முன்வைக்கப்பட்ட வண்ணம் உள்ளது. மிக எளிமையான ஒரு கருவி இணைய கட்டமைப்பு இங்கே காட்டப்பட்டுள்ளது. இந்த அமைப்பின் வசீகரம், இதன் எளிமைதான். இந்தக் கட்டமைப்பின், கீழ்தளத்தில், உணர்விகள் உள்ளன. அடுத்த தளத்தில், உணர்விகளை இணைக்கும் வலையமைப்பு முறைகள் உள்ளன. மூன்றாவது தளமாக, உணர்விகள் அனுப்பும் தரவுகளைச் சேகரிக்கப் பெரிய தரவுத் தேக்கிகள் உள்ளன. நான்காவது தளமாக, முடிவாற்றல் பொறிகள் (decision support tools) உள்ளன. ஐந்தாவது தளமாக, பயன்பாடுகள், முடிவாற்றல் பொறிகளின் பரிந்துரையை பயன்பாட்டாளர்களுக்கு கணினி அல்லது நுண்ணறிப்பேசி மூலம் காட்சியளிப்பிற்காக முன்வைக்கப்படுகிறது.
ஆனால், பல விஷயங்களை இந்த அணுகுமுறை, சரியாக விளக்காமல் விட்டு விட்டது எனலாம். உதாரணத்திற்கு, எல்லா கருவி இணைய அமைப்புகளிலும், முடிவுகள் ஒரு மிகப் பெரிய தரவு தேக்கி (big data store) அமைப்பைச் சார்ந்தே இருப்பதாக, இந்த அணுகுமுறை முன் வைக்கிறது. பல முக்கியக் கருவி சம்பந்த முடிவுகள், பெரிய தரவு தேக்கியை அடையும் முன்பே எடுக்க முடியும். உதாரணத்திற்கு, தானியங்கிக் கார், சுற்று வட்டாரத்தில் நடக்கும் நிகழ்வுகளைக் கொண்டு அந்தக் காரை இயக்க வேண்டும். முக்கியமான முடிவுகள் அரை நொடிக்குள் எடுக்கப்பட வேண்டியவை. இதற்காக, மிகப் பெரிய தரவு தேக்கியை நம்பியிருந்தால், பயனிகளின் பாதுகாப்பு கேள்விக்குறிதான். அதே போல, முடிவாற்றல் பொறிகள் (decision support tools) ஒரு பயன்பாட்டாளருக்குத் தேவையில்லை. அத்தகைய பொறிகள் பயன்பாட்டில், (application) மறைந்திருக்க வேண்டும். அத்துடன், உணர்விகள் கருவிகளாவதை இந்தக் கட்டமைப்பு சரியாகக் காட்டவில்லை.
மேலே உள்ள படம், இந்த தொழில்நுட்ப கட்டுமானத்தை ஏழு தளங்களாகப் பிரிக்கிறது. எல்லா பயன்பாடுகளிலும், ஏழு தளங்களும் இருக்கத் தேவையில்லை. முதல் இரண்டு தளங்களில் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. இதையே நாம் சென்ற இரு பகுதிகளில் பார்த்தோம். மூன்றாவது தளம், பல உடனடி தேவை பயன்பாடுகளுக்கு மிகவும் தோதான விஷயம். அதாவது, இந்த தளத்திலேயே, இருக்கும் தரவுகளை வைத்து பல முடிவுகளை எடுத்து, கருவிகளின் தரவுபடி, அவற்றை இயக்கவும் செய்யலாம். இதை edge computing என்கிறார்கள். இதைத்தான் தானியங்கிக் காரின் கணினி உடனே செய்கிறது. அதற்கு அடுத்தபடியாக, உள்ள மூன்று தளங்களில், கருவிகளிடமிருந்து உருவாகிய பல கோடி தரவுகளை வைத்து முடிவுகளை எடுக்கலாம். இதை, ஒரு நிறுவனத்தின் கணினி வழங்கி வயல் (central computing server farm) செய்யலாம்; அல்லது ஒரு மேகக் கணினி வழங்கி வயல் (cloud processing) செய்யலாம். கார்கள், வீடுகளில் பயன்படும் பெரும்பாலான கருவி இணைய விஷயங்களுக்கு மூன்று தளங்கள் போதுமானது. மிக முக்கியமான விஷயம், இந்த தளங்களின் தரவுப் பரிமாற்றம், பாதுகாப்பாக இருக்க வேண்டும்.
மேலே நாம் சொல்லிய கட்டமைப்பைப் பல அணுகுமூறைகள் கொண்டு செய்லபடுத்தலாம். கணினி மென்பொருள் துறையின் பல்லாண்டுப் பழக்கமான கோஷ்டி பூசலுக்கு இதைப் போன்ற விஷயம், அல்வா சமாச்சாரம். பல கோஷ்டிகள் உருவாகி தன்னுடைய அணுகுமுறைதான் சிறந்தது என்று பறை சாற்றி வருகிறார்கள். இவற்றில் முக்கியமான கோஷ்டிகள்:
- Google, Samsung Electronics, ARM Holdings, Freescale Semiconductor, Silicon Labs, போன்றோர் இணைந்து முன்வைக்கும் Thread என்ற அணுகுமுறை
- Atmel, Broadcom, Dell, Intel, Samsung இணைந்து முன்வைக்கும் OIC என்ற அணுகுமுறை
- Qualcomm, Cisco, Microsoft, LG, HTCஇணைந்து முன்வைக்கும் AllJoyn என்ற அணுகுமுறை
- Intel, Cisco, AT&T, GE, IBM இணைந்து முன்வைக்கும் IIC என்ற தொழில்துறை அணுகுமுறை
நம்மூர் அரசியல் கட்சிகள் தோற்றது என்று தோன்றலாம். குறைந்த பட்சம், அரசியல் கட்சிகள் ஒரு கூட்டணியுடன் உறவு வைத்துக் கொள்ளும். அவ்வப்பொழுது சந்தர்ப்பத்திற்காக மாறலாம். ஆனால், இங்கு பல கூட்டணிகளில் ஒரே கட்சிகள், எது வென்றாலும் ஆதாயம் நமக்கே என்று இயங்குவது, இந்தத் தொழிலின் மிகப் பெரிய குறை. தேர்தலைப் போல, இந்தக் கூட்டணிகளில் ஏதாவது ஒன்றோ அல்லது இரண்டோ அல்லது ஒரு புதிய கூட்டணியோ இன்னும் 5 ஆண்டுகளுக்குப் பின் வெல்லும் என்று எதிர்பார்க்கலாம். இன்றைய நிலையில், இது ஒரு குழப்பமான துறையின் ஒரு அங்கம் என்று சொல்லலாம். உணர்விகளின் ஊரவலத்தில், ஏராளமான வியாபார வாய்ப்புகள் இருப்பதால், உள்ள குழப்பம் இது. நாளடைவில், சில கூட்டணிகள் உடையும், தோல்வியடையும். தேர்தலைப் போல, எல்லாம் பயன்பாட்டாளர் கையில் உள்ளது.