ஒரு கணத் தோற்றம்

kanathotram

எத்தனை கட்டுப்படுத்தினாலும் மனம் இனம் புரியாத எதிர்பார்ப்பில் தவித்தது..அந்த சில நிமிட சந்திப்புக்காய் மனதின் ஓரத்தில் ஒரு விதமான எதிர்பார்ப்பும் ஏக்கமும் படர்ந்தாற் போல் உணர்ந்தது கண்டு எனக்கே கொஞ்சம் விசித்திரமாய் இருந்தது..
இன்றோடு இங்கு வந்து இரண்டு மாதமாகிறது.. இந்த நாட்களில் எண்ணிச் சில முறையே வீட்டிற்கு ரங்கு வந்திருக்கிறான்.ஆனால் வந்து சென்ற பிறகும் அவன் அன்பின், அக்கறையின் இருப்பு வீடெங்கும் நிறைந்திருக்கும். நானாக அவனை அழைப்பதில்லை. இன்று லேசான காய்ச்சலில் உடம்பும் மனமும் கொஞ்சம் பலவீனமானது போல இருந்ததால் அனிச்சையாக போன் செய்து சொன்ன போது, அவனும் மாலை வருவதாகச் சொல்லி விட்டான்..இப்போது உடம்பு கொஞ்சம் பரவாயில்லை என்றாலும் அவன் வரட்டுமே என்றுதான் இருந்தது. இதுதான், இந்த மனநிலைதான் ஆச்சரியமாக இருந்தது. பால்கனியிலிருந்து கீழே எட்டிப் பாரக்கையில் ரங்கு கேட்டினுள் நுழைவது தெரிந்ததும் ஓடிப் போய் கதவைத் திறந்து காத்திருந்தேன்..
உடம்பிற்கு இப்போ எப்படி இருக்குது அன்னு? உள்ளே வந்தவுடன் அக்கறையாகக் கேட்டது மிக ஆறுதலாக இருந்தது.
பரவாயில்லை, அப்போ , நான் நல்லாயிருந்தாப் பார்க்கவே வர மாட்டியா ரங்கு? அந்தக் கேள்வி எப்படி உதட்டிலிருந்து தப்பி விழுந்தது என்று புரியவில்லை..
அதெல்லாம் ஒண்ணுமில்ல.. உன்னோட தனிமையைக் கலைக்க வேண்டாம்னுதான் வரதில்லை,உனக்குத்தான் உன் வாழ்வில் யாரும் அதிகமாகத் தலையிட்டால் பிடிக்காதே அன்னு? எதையுமே திகட்ட விடாமல் அளவாக எடுத்துக்கணும்தானே எப்பவுமே சொல்வே?
அவனின் இந்த ஒற்றை வரி சட்டென்று என்னைப் பல வருடங்கள் பின்னோக்கிக் கடத்தியது..
ஒரு நாள் அந்தி நேரத்தில், பொங்கிப் புரண்டோடும் காவிரியின் படித்துறையில் அமர்ந்து அவனுடன் பேசியது நேற்றுப் போல் பசுமையாய் ஞாபகத்தில் வந்தது.
“இந்த பாசமும் , பந்தங்களும் , உறவுகளும் சுற்றிச் சூழ இருந்தாலும் நான் ஒரு நதி நீராய் ஓடிக் கொண்டிருக்கவேண்டும் என்பதே ஆசை.. .நிச்சலனமாக, யாருக்கும் காத்திராமல் கட்டுப்படாமல் ஓடிக் கொண்டிருப்பதே நதியின் இயல்பான சுபாவமாக இருக்கிறது..அத்தனையும் சுழற்றி எனதென்று மனதில் அடக்கிக் கொண்டு தேங்கிக் கிடப்பது கிணற்று நீரின் சுபாவமல்லவா? நதி வற்றினாலும் அதன் அடிவயிற்றில் வெண் மணலாய் பரவிக் கிடக்கிறது.. பளீரென்று மனதை அள்ளுகிறது .. நீரின் தடங்களும் கூழாங்கற்களின் குளிர்ச்சியும் ஒரு கணத்தில் நினைப்பில் மோதிச் செல்கிறது.
ஆனால், கிணறு வற்றும் போது சேறாய் கச கசத்துப் போகிறது..பின்னிப் பிணைந்த பாசிகளும் தானாய் சேர்ந்த குப்பைகளும் தேங்கித் தேங்கி கசடாகிறது… நான் நதியா கிணறா ,எனக்கே தெரியலை ..
உன் உலகத்தில் அன்பென்றால் அது பற்றிக் கொள்வது மட்டுமே..அதில் திளைத்து , ஊறி, மூழ்கடித்துக் கொள்தல் தான்..ஆனா, அதுவும் ஒரு நாள் திகட்டிப் போய் விடும் . நான் சொல்றது சரிதானே ரங்கு? ”
பழைய நினைவுகளின் ஓட்டத்தை பின்னாலிருந்து வந்த ரங்குவின் குரல் கலைத்தது..
அன்னு, ஒரு செய்தி தெரியுமா ? உன்னோட அபிமான எழுத்தாளர் மனைவி இறந்த சோகம் தாங்காம தற்கொலை பண்ணிட்டார்..பாவம், என்ன ஒரு அவலம் ?
ம்..அதை ஏன் அவலம் னு சொல்ற ரங்கு..அது ஒரு விடுபடுதல் தானே? நாமா விரும்பற வரைக்கும் வாழ்வதும், பொறுப்புகள் முடிஞ்சு, திருப்தி அடைஞ்சதும் யாருக்கும் சிரமம் கொடுக்காமல் விடுதலையாவதும் ஒரு விடுபடுதல் தானே?
சரி, சரி, அதைப் பத்தி எதும் பேச வேண்டாம் இப்ப.. உன்னைப் பத்திக் கேட்கிறேன்.. யாரோடயும் ஒட்டாம, உனக்கு விருப்பமான படிப்பைத் தேர்ந்தெடுத்துப் படிச்சு, பிடிச்ச இடத்தில் வேலை செஞ்சுட்டு , சம்பாரிக்கற பணத்துலயும் மத்தவங்களுக்கு உதவி செஞ்சுட்டு, இப்ப ஒரு மாதிரி திருப்தி கிடைச்சுருக்க்கா உனக்கு? இத்தனையும் செஞ்சுட்டு இருக்கியே, கல்யாணம் மட்டும் ஏன் பண்ணிக்கலை அன்னு?
கல்யாணம் ஏன் பண்ணிக்கலைன்னா, எனக்குத் தோணலை..அந்த எண்ணம் வரலை. தேநீர் போட வைத்த நீர் அடுப்பில் கொதிப்பதை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தேன்..
வயசுல வர்ற ஆசை, மயக்கம், காமம் எதுவுமே இல்லாம ஞானி மாதிரி வாழ்ந்தயா என்ன? என் நினைப்பை மனசுல வச்சுட்டு யாரையும் பார்க்கலைன்னு மட்டும் சொல்லாதே..நான் நம்ப மாட்டேன்..
என்ன சொல்வதென்று எனக்கும் புரியவில்லை..அவன் நினைப்பிலும் இல்லைதான் .. ஆனால் அடுத்தவர் எவரும் ஈர்க்கவில்லை..அதுதான் உண்மை.
அந்தக் காலகட்டத்தில் அமெரிக்காவில் தான் இருந்தேன்..ஆசையும் தாபமும் முகிழ்ந்த இரவுகள் உண்டு..அதைத் தூரத் தள்ள சிறிது நீரோ, மதுவோ அருந்தியும், பனி பொழியும் நீண்ட பாதைகளில் நடந்து களைத்து வந்தோ உறங்கியதும் உண்டு..ஆனால் ஏனோ ஆண்துணையை மனது நாடவில்லை.. அவன் மேல் கொண்ட காதலால் இல்லைதான். ஒரு வேளை நன்றியோ? திருமணமாகி ஒரு வருடத்தில் , என்னால் இந்த வாழ்க்கையில் நீடிக்க முடியாது,படிக்க ஆசை, சிறகடித்துப் பறக்க ஆசை என்று ஒரு கையில் ஸ்காலர்ஷிப்பும், மறுகையில் விவாகரத்து பத்திரமுமாக நின்ற போது அமைதியாக ஏற்றுக் கொண்டு கடந்து சென்றானே, அதற்குக் கைம்மாறா? புரியவில்லை..
ஏன் அமைதியாயிட்டே ? கையில் நிறைந்த தேநீர் கோப்பைகளை ஏந்திக் கொண்டு அமைதியாய் நின்ற என் முன்னால் சொடக்குப் போட்டான்..
தெரியலை ரங்கு..ஏனோ தோணலை..
எனக்குத் தெரியும்..ஊர் ஒரு வழியாப் போனால் வித்தியாசமாப் போறேன்னு கரடு முரடான பாதையில போறது உன்னோட வழக்கம்..இயற்கையா மனசுல வரும் இச்சையைக் கூட அடக்கி,இதோ பார் நான் உன்னை ஜெயிச்சுட்டேன்னு சொல்ற பழக்கம்.
காதலோ,கல்யாணமோ நடந்திருந்தா எங்களை மாதிரி இருந்திருப்பே… ஆனா எதிலும் சிக்காமல் வாழணும்னு தானே உன் எண்ணம்..வித்தியாசமான பிறவி, தனித்தவள் னு காட்டிக்கப் போய் தனிமரமா நிக்கறயே ?
ஏன் இப்படி மாத்தி மாத்தி வார்த்தைகளை கத்தி மாதிரி சொருகிட்டே இருக்கு ரங்கு..எத்தனைக்கெத்தனை பேசாம இருந்தயோ , அவ்வளவுக்கும் பேசறியே? உடம்பு சரியல்லாதவளைப் பார்க்க வந்த மாதிரியா நடந்துக்கறே?
அட, நீ கூட மனுஷங்க இப்படியெல்லாம் பேசணும்னு எதிர்பார்க்க ஆரம்பிச்சிட்டயே அன்னு?
அப்படியெல்லாம் இல்லை..இப்ப அதையெல்லாம் பேசி என்ன ஆகப் போகுது? நானும் ஓடி ஓடி நிதானிச்சு கொஞ்சநாள் ஓய்வெடுக்கலாம்னு இங்க வந்திருக்கேன்.அதுக்கு நம்ம நாட்டை, ஊரை செலக்ட் பண்ற அளவுக்கு எனக்கு மனசுல ஈரம் இருக்கு.நான் சுதந்திரமனவதான்..ஆனா, சுயநலவாதியோ, சந்நியாசியோ இல்லை
ம்ம்..அது தெரியுது..மாமாவும், மாமியும் போனப்ப வந்து கண்ணீர் விட்டியே! தனிமரம்னு , வாழாதவ அப்படீன்னு உன்னைக் கரிச்சுக் கொட்டறவங்களுக்கும் உதவி பண்ணிட்டுத்தான் இருக்கே..
அதெல்லாம் சரி, இப்ப ஏன் இங்க வந்திருக்கே? இனிமே இங்கயே தானா? இல்ல மறுபடியும் கால்ல சக்கரம் கட்டிட்டு ஓடப் போறியா ? இப்போ உனக்கும் ஐம்பது வயசு நெருங்கப் போகுது..ஞாபகம் இருக்கா அன்னு?
இதைக் கேட்டதும் மீண்டும் மனம் ஒரு குழப்பமான மௌனத்தில் ஆழ்ந்து விட்டது..மனசாட்சியே ரங்குவாக மாறி எதிரே நின்று கேட்பது மாதிரி இருந்தது.
இனிமேல் என்ன செய்யப் போகிறேன்? வாழ்வில் முதுமை கதவைத் தட்டும் இந்த நாட்களில் எதை எதிர்பார்த்து இங்கே வந்திருக்கிறேன்..இளமையெல்லாம் ஒரு கனவாய் போவதுதான் நிதர்சனமோ?
சொந்த அக்கா மகன், சின்ன வயதிலிருந்து குடும்பத்துடன் பழகியவன், படித்தவன்,நல்ல வேலை, எந்தக் கெட்ட பழக்கமும் இல்லாதவன் என்று அப்பா , ரொம்ப சந்தோசமாய் ரங்குவை எனக்கு மாப்பிள்ளையாகத் தேர்ந்தெடுத்தார்.எனக்கும் அது ஒரு மாதிரி பிடித்தமாகவும், வசதியாகவும் இருந்தது. இந்தச் சின்ன ஊரை விட்டு சிறகடிக்கலாம் என்று ஆசை கிளர்ந்தது. டெல்லியில் வேலை கிடைத்திருந்தாலும்,அப்பாவின் கட்டுப்பாடால் படித்த கல்லூரியிலேயே பகுதி நேர வேலை செய்து கொண்டிருந்தது கொஞ்சம் கூடத் திருப்தியாய் இல்லை. ஒரு பெரும் வேட்கை உள்ளே ஒளிந்து கொண்டிருந்தது போல இருந்தது..காரணம் அறிவா, மனமா என்று புரியவில்லை. ஆனாலும் இனம் புரியாத கேள்விக்கு விடையின்றித் தத்தளிப்பது போல ஒரு அழுத்தமான மனநிலை. வாசித்த எண்ணற்ற புத்தகங்களிலும் கூட மனம் சாந்தமாகாமல் தளும்பிக் கொண்டே இருந்தது.
அந்த மனநிலையில், ரங்குவின் புரிதலில், காலம் முழுவதும் அவன் அன்பில் , அது தரும் சுதந்திரத்தில் வாழ்ந்து விடலாம் என்றே தோன்றியது.
ஆனால் மனது எதையும் ஏற்றுக் கொள்ளவில்லை..ஒரே கோட்டில் ஓடியது மணவாழ்க்கை.அதுவும் கூட சலிப்பாக இருந்தது…அது என்ன இயல்பு என்றே புரியவில்லை..சுயம், சுதந்திரம், ஏதாவது செய், படிப்பு, பயணம், வாசிப்பு என்று மனதிற்குள் எந்நேரமும் ஒரு குரல் சங்கென முழங்கிக் கொண்டிருந்தது..
ரங்குவிற்கு புரிந்து போனது என் தவிப்பு..மேல படிக்கறயா, வேலைக்குப் போறியா , குழந்தை கூட இன்னும் கொஞ்ச வருஷம் கழிச்சு வச்சுக்கலாம் என்று என்னென்னவோ சமாதானமாய் கேட்டான்.ஆனால், ஒரு கட்டத்தில் எதுவுமே பிடிக்காமல்தான் போயிற்று . இதற்கு மேலும் அவனை இந்த சம்பிரதாயமாகிப் போன பந்தத்தில் வைத்திருப்பது நல்லதில்லை என்றே தோன்றியது.
மனித வளம், மனித உரிமை பற்றி எப்போதோ அமெரிக்காவின் ஒரு பல்கலைக் கழகத்திற்கு எழுதி அனுப்பியிருந்த என் ஆராய்ச்சிக் கட்டுரைகள் பெரிதும் சிலாகிக்கப் பட்டு அங்கிருந்து அட்மிஷன் வந்த போதுதான் உணர்ந்தேன். காலம் என் எண்ணங்களை இயக்குகிறது..என்னை நகர்த்துகிறது..நான் தேங்க முடியாது..ஓட வேண்டும்..என் ஓட்டத்தில் யாரையும் வலுக்கட்டாயமாக இழுத்துக்கொண்டு செல்ல எனக்கு உரிமையில்லை..
அமெரிக்காவுக்குக் கிளம்பிய அன்று, ஏர்போர்ட்டில் விடைதரும் போது, “இந்த டிக்கெட், விசா மாதிரி, உன்னோட விடுதலைக்கு நானும் கூட ஒரு காகிதம் மாதிரி தான் உபயோகப்பட்டேன், இல்லியா அன்னு ” என்று அவன் கேட்டது இன்றும் காதில் ஒலிக்கிறது.அந்த வார்த்தைகள் நெஞ்சில் ஆணியாய் இறங்கியது. கேட்டு விட்டு அவன் விடுதலையாகி விட்டான்.ஏனோ என்னுள் அதன் ரணம் ஆறாமல் இன்னும் வலி அழுத்துகிறது..
இருபத்தி ஐந்து வருடங்கள் ஓடி விட்டது. இன்று என் முன் ரங்கு திரும்பவும் அதே கேள்வியாகும் நிற்கிறான்.. என்ன செய்யப் போகிறேன்?
வயசு யாரைக் கேட்டு நிக்குது ரங்கு? இனிமேல் என்ன பண்ணப் போறேன்னு தெரில..ஆனா, கொஞ்ச நாள் அமைதியா இருக்கணும். வாசிக்கணும், ஊர் சுத்திப் பாக்கணும் ,இன்னும் என்ன தோணுதோ அதை செய்யணும்.. எனக்காக , நீ எந்தக் கஷ்டமும் பட வேண்டாம் ரங்கு.. நான் மேனேஜ் பண்ணிக்குவேன்..
அவனிடமிருந்து பதிலேதும் இல்லை..
அந்த மௌனம் என்னை ஏதோ செய்தது..அவன் என்ன சொல்லப் போகிறான் என்று கேட்க ஆவலாக இருந்தது.
உனக்குத் தெரியுமா அன்னு, நீ போனவுடன் மாமா, மாமி இடிஞ்சு போயிட்டாங்க.. எனக்கு ஏதோ பெரிய துரோகம் இழைச்சுட்ட மாதிரி ஒரு குற்ற உணர்வு உறுத்திட்டே இருந்தது அவங்களை..நானும் ரெண்டு வருஷம் அதிகம் யாரிடமும் பேசவில்லை..அதிகம் ஊருக்குப் போகவில்லை..அப்புறமா உன் அக்காதான் எனக்கு கல்யாணியைப் பேசி முடிச்சு வச்சாங்க..
அப்ப மாமாவும் மாமியும் ரொம்ப சந்தோஷப் பட்டாங்க.. ஏதோ ஒரு தப்புக்குப் பரிகாரம் பண்ணி விட்ட மாதிரி ஒரு நிம்மதி அப்புறந்தான் அவங்களுக்கு வந்தது.
தெரியுமே .. உன் கல்யாண விஷயத்தை நீ எனக்கு தெரிவிச்சப்ப நான் ஒண்ணுமே சொல்லலையே .
அந்த செய்தி வந்த போது எனக்குக் கொஞ்சம் நிம்மதியாகவே இருந்தது..கல்யாணி என் சித்தப்பா பெண. அமைதியான சுபாவம்.. ரொம்ப அடக்கம். எல்லா விதத்திலும் ரங்குவை சந்தோஷமாக வைத்துக்கொள்வாள் என்று நம்பிக்கையாக இருந்தது..
ஏன் ரங்கு, கல்யாணி நல்லாத் தானே இருக்கா? உங்களுக்கு ஒரு பிள்ளை , ஒரு பெண்ணுன்னு அம்சமா ரெண்டு குழந்தைங்க..நல்லாப் படிச்சு, நல்ல நிலையில் அருமையா இருக்காங்க. வேறெதுவும் பிரச்னையா ?
பிரச்னை இருக்கா, இல்லையான்னு தெரில.. ஆனாக் கல்யாணம் ஆன நாளிலிருந்து கல்யாணிக்கு ஒரு விதமான தாழ்வு மனப்பான்மை இருந்துட்டே இருந்தது.
பிரிஞ்சாலும் முறிஞ்சாலும் நீதான் என்னோட வாழ்க்கையில எப்பவுமே முதலிடத்துல இருக்கிறேன்னு அவளுக்கு ஒரு எண்ணம்..எந்த வேலையிலும் தன்னை உன்கூட மனதளவில் ஒப்பிட்டுப் பார்ப்பது அவளுக்கு தவிர்க்க முடியாமல் போனது.. தூக்கத்தில், விழிப்பில், எண்ணத்தில், செயலில்,காதலில், மோகத்தில், போகத்தில் இப்படி எல்லாத்திலயும் நீ அவளுக்கு முன்னால் அரூபமா இருந்த அன்னு..அவளோட அந்தக் கஷ்டத்தை என்னால தீர்க்கவே முடியல..
ஓ மை காட்..ஏன் இப்படி? எனக்குப் புரியலயே?
அது எனக்குப் புரிஞ்சுது.. எந்த இரண்டாம் மனைவிக்கும் அது இயல்பானதுதான்..நானும் அவளை எல்லா விதத்திலும் அவ மனம் கோணாமல்,சௌகர்யமாத்தான் பார்த்துட்டேன்..
வாழ்க்கை ஓடுச்சு.. குழந்தைகளும் பிறந்தாங்க..ஊருக்குப் போனாலும் அவளுக்கு உன் ஞாபகம் வந்துடும்..எப்பவோ சின்ன வயசுல விளையாடும் போது நான் சொன்ன ஒரு வார்த்தை..”அன்னு மட்டும் இல்லாட்டி கல்யாணிதான் என் செகண்ட் சாய்ஸ் ” னு.அதை அப்படியே ஞாபகம் வச்சுட்டு, நீங்க சொன்ன மாதிரியே ஆயிடுச்சு பார்த்தீங்களான்னு ஒரு தடவை சொன்னா..அந்த வார்த்தை எனக்குப் பெரிய விஷயமாப் படலை.ஆனா, அவளுக்கு அது அப்படியே மனசுல பதிஞ்சுருக்கு..
என் பொண்ணு நல்லாப் படிச்சா.. ஒரு தடவை மாமியை, அதான் உங்கம்மாவைப் பாக்கப் போனப்ப, பொண்ணு படிப்புல அன்னு மாதிரியே சுட்டி,இல்லடா ரங்கு ன்னு சொன்னப்ப அப்படியே சுருங்கிப் போயிட்டா..ஒண்ணு தெரியுமா அன்னு, நானும் செட்டிலாயி, நீயும் நல்லா முன்னேறி சம்பாரிக்க ஆரம்பிச்சதும் நீ போனது யாருக்கும் பெரிய விஷயமாப் படலை.. ஒரு மாதிரி பெருமையாத் தான் பார்த்தாங்க உன் வளர்ச்சியை.

oOo

அதுக்கப்புறம் நான் ஊருக்குக் கூட அதிகம் போகலை ..யாராவது ஏதாவது சொல்லி அவளை இன்னும் சுருங்க வச்சுடுவாங்களோன்னு பயம்தான்..
ஒண்ணு கேக்கறேன் ரங்கு..நீ கல்யாணியைக் காதலிக்கிறதானே ?
மனைவிய நல்லபடியா வச்சுக்கறது, அக்கறை காட்டுறது, அவளை சந்தோஷப் படுத்தறது, குழந்தைகளோட அம்மா ன்னு மரியாதை தர்றது இதையெல்லாம் தான் இங்க குடும்ப வாழ்வில் காதல்னு மொழி பெயர்க்கறாங்க.அப்படிப் பார்த்தா, ஆமாம்தான்..
அப்படீன்னா?
உனக்குத் தெரியாதா இல்ல தெரியாத மாதிரி நடிக்கிறயா ? என் வாழ்க்கைக்கான காதலை எப்பவோ நான் உணர்ந்து அனுபவிச்சு முடிச்சாச்சு..
இப்ப கல்யாணியோட திருப்தியான, நிம்மதியான வாழ்க்கை. என்னை அவ புரிஞ்சிட்டாளான்னு தெரில, ஆனா எந்தக் குறையுமில்லாம குடும்பம் நடக்குது.
அப்படியே தொண்டை அடைத்தது எனக்கு..என் முன் ரங்கு ஒரு ஞான போதி மாதிரி உயரமாக வளர்ந்து கொண்டே இருந்தான் . கல்யாணி ஒரு விளக்காக சுடர் விட்டுக் கொண்டிருந்தாள்..
எனக்குப் புரிந்தஉ போனது. இப்போதைய என் வரவு ரங்குவின், கல்யாணியின் மனதிலும் ,வாழ்விலும் சஞ்சலம் ஏற்படுத்தியுள்ளது.ஏதோ குழப்பம்..
புரியுது ரங்கு.. கல்யாணி கிட்ட சொல்லு.. என் மனசில எதுவுமே இல்லைன்னு..
நான் சொல்லிட்டா ஒண்ணுமே இல்லைன்னு நம்பிடுவாளா ? உனக்கு என் மேல் அந்த மாதிரி பிரியம் இல்லைன்னு அவ கிட்ட எத்தனையோ தடவை சொல்லியிருக்கேன். ஆனா, நீ எங்க இருந்தாலும், எப்படி இருந்தாலும் தனியா இருக்கயே..அதுதான் அவளோட கேள்விக்குறி.. அப்பப்ப சொல்லுவா, அன்னு முகத்துல ஒரு தேஜஸ் பாத்தீங்களா, மனசையும் உடம்பையும் அப்படியே களங்கப் படுத்தாமல் வைத்திருந்தால் தான் அந்த நிமிர்வும் ஒளியும் சாத்தியம்..னு.
நீயும் கல்யாணம் பண்ணி , குடும்பம், உன் வாழ்வு போயிருந்தேன்னா அவளுக்கு இந்த நெனப்பு மறைஞ்சிருக்குமோ என்னவோ? நீ எங்கிருந்து ஓட ஆரம்பிச்சயோ, ஒரு பெரிய வட்டமடிச்சு இப்பத் திரும்ப அங்கயே வந்திருக்கே ஆனா, நாங்க அதே இடத்தில் இருக்கிறோம்..தேங்கியிருந்தாலும், கசடுகள் எல்லாம் அமிழ்ந்து இப்பத் தெளிவா இருக்கோம்..இது நீடிக்கணும்.
அப்படியே உறைந்து போயிருந்தேன் நான்..எத்தனை சிக்கல்கள் இவன் வாழ்க்கையில்? அப்பவும் குறையில்லாமல், எந்தவிதமான சங்கடங்களுமில்லாமல் ஒரு வேள்வியின் ஜோதி தன்னுள் இடப்படும் அத்தனையும் உள்வாங்கி ,இன்னும் அணையாமல் மேல்நோக்கி எரிவது மாதிரி இருக்கிறான்..
சிதறிய மனதைத் திரட்டி மெல்லிய குரலில் அவனிடம் கேட்டேன்..இப்ப நான் என்ன பண்ணனும் ரங்கு?
எனக்குத் தெரியலயே அன்னு..எப்பவுமே அதை நீதானே முடிவு பண்ணுவே?
வேண்டுமென்றே குத்திக் காட் டுகிறானா? இல்லை, யதார்த்தமாகத்தான் சொல்கிறான்..அதுதான் அவன் இயல்பு..
கிளம்புவதற்கு எழுந்து கொண்டான்.
.
உடம்பைப் பாத்துக்க..புது இடம்..பழக நாளாகலாம். நான் வரேன்.ஏதாவதுன்னா ஃபோன் பண்ணு. சரியா?
ம்ம்..
.
இரவு கவிழ்ந்து கொண்டிருந்தது.பால்கனியில் வந்து நின்று கொண்டேன்…மெலிதான கடற்காற்று வீசியது..பழுத்த இலைகள் சில மரத்திலிருந்து தானே உதிர்ந்து கொண்டிருந்தன. வானத்தில் சில பறவைக் கூட்டங்கள் கூடடையத் திரும்பிக் கொண்டிருந்தன..தூரத்தில் தெரியும் கடல் இருளைக் குடித்து நிறம் மாறி கருமையாகக் காட்சியளித்தது..
ஏதோ ஒரு மாற்றம் மீண்டும் நிகழ்வது மாதிரி இருந்தது..இப்பவும் என்னைக் காலம் நகர்த்துவதாக உணர்ந்தேன்..
எனக்கு விடுதலை தந்து, சிறகுகளை மீட்டுக் கொள்ள உதவியவன் ரங்கு. இன்று என் முறை..என் இருப்பு அவனுக்கோ, கல்யாணிக்கோ எந்த விதத்திலும் பாதிப்பைத் தரக் கூடாது.இந்த வயதில் இருவருக்கும் எந்த மன உளைச்சலும் இருக்கக் கூடாது..
என்ன செய்ய வேண்டும் என்று அந்த ஓர் கணத்தில் புரிந்து விட்டது..
அவனை நான் விடுவிக்க வேண்டும்.அதுதான் நான் செய்யும் கைம்மாறு.
உடனே கணிணி முன்னால் போய் அமர்ந்தேன்.
“பணி விடுப்பை நீக்கிக் கொள்கிறேன்..ஆதலால் தயவு செய்து என்னை பூனா அல்லது சிலிகுரி கிளையில் பணியில் அமர்த்துமாறு கேட்டுக் கொள்கிறேன் ..”
கம்பெனிக்கு மெயில் அனுப்பி முடித்ததும் இதயத்தில் ஒரு மெல்லிய வேதனை பரவியது…அதே சமயம் இனம் புரியாத ஒரு புதிய சிலிர்ப்பும் உள்ளூர ஏற்பட்டது. ஒரு நதி தனக்காக மட்டும் ஓடுவதில்லை. பிறரின் மகிழ்ச்சிக்காக ஓடுவதும் அதன் இயல்புகளில் ஒன்று என்பதை இன்று புதிதாக அறிந்து கொண்டதில் புதிய மகிழ்ச்சி பிறந்தது.
என் முன் தனிமையில் தோய்ந்து நீண்டு கிடக்கிறது இந்த இரவு..இன்றும், இனிமேல் வரப் போகும் இது போன்ற கனமான இரவுகளைக் கடக்க இனிமேல் ஒரு நீண்ட நடைப் பயிற்சியோ, நீரோ, கோப்பை மதுவோ தேவையில்லை..
ஓடும் நதியின் ஆழத்தில் கிடந்து மின்னும் கூழாங்கல்லின் குளிர்ச்சியாய் ரங்குவின் நினைவுகள் நிறைந்து பரவியிருந்தன மனமெங்கும்..
அதுவே போதும் இனி..

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.