ஐன்ஸ்டீனும் எடிங்டனும்

einstein_eddington
சொல்வனத்தில், ‘ஒளி வளைவு அறிதல்’ என்ற அரவிந்தன் நீலகண்டனின் கட்டுரை ஐன்ஸ்டீனின் பொது ஒப்புமை கொள்கை பற்றிய கட்டுரையை வாசித்தேன். சில ஆண்டுகளுக்கு முன் பார்த்த பி.பி.சி. –யின் ’ஐன்ஸ்டீனும் எடிங்டனும்’ என்ற விவரணப்படம் நினைவிற்கு வந்தது. பொதுவாக, ஒப்புமைக் கொள்கையைப் பற்றி யாராவது விளக்கத் தொடங்கினால், அங்கிருந்து விலகப் பார்க்கும் கூட்டமே அதிகம். அன்றாட விஷயங்களில் அதிக தாக்கம் இல்லாத ஒரு கோட்பாடு என்பதாலோ என்னவோ, பலரும் ஓட்டம் பிடிக்கிறார்கள்.
விவரணப்படம் என்றவுடன், உடனே ‘சென்னையில் வெள்ளம்’ என்று ஒற்றை ஷெனாயுடன் எதையாவது தயவு செய்து கற்பனை பண்ண வேண்டாம். அருமையாக எடுக்கப்பட்ட விஞ்ஞானம் சார்ந்தத் திரைப்படம் இது. எத்தனையோ புத்தகங்கள் படித்து, புரிந்து கொள்ளத் தவறிவிட்ட இந்தக் கொள்கையை அழகாக விளக்கும் அருமையான திடைப்படம். முக்கியமாக, ஐன்ஸ்டீனும் எடிங்டனும் எப்படி இந்த வேலையைச் செய்தார்கள் என்பதன் பின்னணி மிக அழகாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது.
 

 
முழுத் திரைப்படத்தையும் விஞ்ஞானத்தில் ஆர்வமுள்ளவர்கள் அவசியம் பார்க்க வேண்டும். ஃபேஸ்புக்கில் லைக் போட்டு, டிவிட்டரில் குறுஞ்செய்தி அனுப்பும் இன்றைய இளைஞர்கள், இந்தத் திரைப்படத்தின் 56;54 முதல் 58;11 வரையாவது அவசியம் பார்க்க வேண்டும். என் பார்வையில் நூறு பெளதிக வகுப்புகளுக்கு சமம். இந்த 77 நொடிகள்! ஐன்ஸ்டீனைப் பற்றி ஆறு சுயசரிதப் புத்தகங்கள் படித்த என்போன்றவர்களை உட்கார்ந்து இப்படிக் கட்டுரை எழுத வைத்தக் காட்சி அது. இக்காட்சியைப் பிறகு அலசுவோம்.
முதலில் இந்த விஞ்ஞான நிகழ்வுகள் 1915 முதல் 1919 –க்குள் நிகழ்ந்தவை. ஐன்ஸ்டீன் ஜெர்மனியைச் சேர்ந்த பெளதிக கோட்பாட்டு விஞ்ஞானி. எடிங்டன் இங்கிலாந்தைச் சேர்ந்த வானியல் நிபுணர். முதலாம் உலகப் போர் நிகழ்ந்த சமயத்தில் எதிரி நாட்டு விஞ்ஞானிகள் இவர்கள். யூரோப் முழுவதும் ஜெர்மனி என்ற நாட்டை வெறுத்த ஒரு காலகட்டம் இது.
இன்றைப் போல இணையமும் பல வகை தொடர்பியல் சாதனங்களும் இல்லாத காலத்தில், பகை கொண்ட நாடுகளுக்கு இடையே மிகவும் நம்பகமான ஒரே தொடர்பு, தபால் மட்டுமே. அதுவும் ஜெர்மனியில் ஏராளமான தணிக்கை செய்யப்பட்ட ஒரு தொடர்பு முறை. அத்துடன், இங்கிலாந்தில், ஜெர்மனிய  விஞ்ஞான பத்திரிக்கைகளுக்கு தடையும் இருந்தது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், எடிங்டனும் ஐன்ஸ்டீனும் எப்படி இதை நிகழ்த்தினார்கள்? மிக அழகாக இந்தப் படம் இந்த நிகழ்வுகளைச் சித்தரிக்கிறது.
முதலில், இதை நாம் புரிந்து கொள்ள, ஒரு உதாரணத்தை எடுத்துக் கொள்வோம். 1960 –களில், பாகிஸ்தானிய விஞ்ஞானி ஒருவர் ராமன் விளைவு சரியில்லை என்று சொன்னதை இந்திய விஞ்ஞானி ஒருவர் பாகிஸ்தானிய விஞ்ஞானி சொல்வது சரிதான் என்று ஒரு கருத்தை முன் வைத்தால் என்ன நிகழ்ந்திருக்கும்? எடிங்டன் ஏறக்குறைய அதைத்தான் செய்தார். அவர் இருந்ததோ கேம்பிரிஜ் நகரம் – நியூட்டன் வசித்து உலகிற்கு புவியீர்ப்பு கொள்கையை முன் வைத்த இடம். இவர் வேலை செய்ததோ இங்கிலாந்தின் அரசாங்க வானிலை ஆய்வுக் கூடத்தில். வளரும் ஜெர்மனிய அராஜகத்தை எதிர்த்து பலரும் குரல் எழுப்புகையில், இங்கிலாந்தின் மிக மதிக்கப்பட்ட வானிலை ஆய்வாளர், தங்களுடைய நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானச் சிற்பியின் கோட்பாட்டை உடைத்த ஒரு பகை நாட்டு விஞ்ஞானியின் கோட்பாட்டை நிரூபிப்பதற்காக ஆதரவு தேடுகிறார்.
முக்கிய காட்சிக்கு வருவோம். ஐன்ஸ்டீனின் கடிதம் கிடைத்தவுடன் எடிங்டன், தன் நண்பரை வீட்டிற்கு உணவருந்த அழைக்கிறார். வீட்டிற்கு உணவுக்காக வந்த நண்பரையும் தன் தங்கையையும் மேஜை துணியைப் பிடித்துக் கொள்ளச் சொல்கிறார். ரொட்டியைத் துணியின் நடுவிற்கு எறிகிறார். துணி வளைவதை வைத்து, எப்படி புவியீர்ப்பு சக்தி விண்வெளியை வளைக்கிறது என்று காட்டுகிறார். பிறகு ஒரு ஆப்பிளை அதனறுகே போட்டு, நேராகப் பயணம் செய்யத் துடிக்கும் ஆப்பிளின் பாதையை எப்படி இந்த வளைந்த விண்வெளி ரொட்டியைச் சுற்றிவரச் செய்கிறது என்று அழகாக விளக்குவார்.
மேகத்திய செவ்வியல் இசையில் ஆர்வமுள்ளவர்கள் இந்தப் படத்தில் அருமையான விருந்து படைத்துள்ளார் இசையமைப்பாளர், நிகலஸ் ஹூப்பர். ஐன்ஸ்டீன் சுமாராக வயலின் வாசிக்கும் கலைஞர் என்பதால், படம் முழுவதும், வாக்னர், ஷூபர்ட், மோஸார்ட் மற்றும் பீதோவன் இசையைத் தூவியுள்ளார்கள்,
இதைப் போன்ற விஞ்ஞான விவரணப் படங்கள் நிறைய வர வேண்டும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.