எண்ணங்கள், சிந்தனைகள் கட்டுரையை முன்வைத்து…

சென்ற இதழில் வெளியான எண்ணங்கள், சிந்தனைகள்“கட்டுரை இங்குள்ளது. அந்தக் கட்டுரையை முன்வைத்து…

Cat_Moon_Television_Antenna

கட்டுரையில் இருப்பவை மறுமொழிகள்
–     “மனித மனம் ஒரு பெரும் காடு. அங்கில்லாத ஒன்று மனிதர்கள் அறியும்வகையில் வேறு எங்கும் இல்லை.” அப்படி என்றால் நம் கண் முன் காணப்படும் ஸ்தூல உலகத்துப் பொருட்கள் என்ன? அவை மனதில்தான் உள்ளனவா?
–     “மனிதனின் அடிப்படை இயங்கு விசை எண்ணங்கள்.” அப்படியானால் புவியீர்ப்பு மற்றும் இதர பௌதீக விசைகள், தட்பவெப்பம், ஒளி, ஒலி மற்றும் பஞ்ச பூதங்களின் இடம் இதில் என்ன? எண்ணங்களால் உந்தப்படாத இயக்கங்கள் இல்லையா? மனம் அமைதியாய் அதாவது எண்ணங்கள் அற்று இருக்கையில் இயக்கம் நிகழ்வது இல்லையா?
–     “பெரும்பாலான மனிதர்களால் எப்போதுமே அறிந்திருக்க முடியாத எண்ணங்கள் ஆழ்மனதில் (UnConsious) இருந்து கொண்டு, உடலின் இயக்கங்களான சுவாசித்தல், இதயம் துடித்தல் போன்ற இயக்கங்கள் முதல் உடலின் ‘செல்’கள் மறுஉருவாக்கம்வரையான செயல்களை இயக்குகின்றன. மிகமுக்கியமாக விழிப்புநிலையில் நிகழும் எண்ணங்களுக்கு தோற்றுவாயகாவும் அமைகின்றன.” இதற்கு அறிவியல் சான்று இருக்கிறதா? இவ்வியக்கங்களுக்குக் காரணம் எண்ணங்கள் என்று எப்படிச் சொல்ல முடியும்? வேறு எந்த ஒரு சக்தியையும் எண்ணம் என்று சொன்னால் அது குழப்பத்தை விளைவிக்காதா?
–     “மனதின் இருப்பிடமும் இயங்குதளமும் மூளைதான்.” இந்த வாக்கியம் கட்டுரையின் முதல் இரண்டு வாக்கியங்களோடு இசைவாக உள்ளதா? அதாவது “மனித மனம் ஒரு பெரும் காடு. அங்கில்லாத ஒன்று மனிதர்கள் அறியும்வகையில் வேறு எங்கும் இல்லை.” என்பதோடு. அதாவது இயங்குதளம் மூளை என்றால் அது மனதுக்கு உள்ளே இருப்பதா, வெளியே இருப்பதா? உள்ளே இருப்பது என்றால் மூளை எப்படி மனதின் இருப்பிடம் ஆகும்?
–     “மூளையை கணினியின் ப்ராஸஸருடன் ஒப்பிட்டால், மனதை சாஃப்ட்வேர் எனப்படும் மென்பொருளுடன் ஒப்பிடலாம்.” அப்போது மூளை வேறு, மனம் வேறு. மூளை மனதில் இருக்கும் விஷயம் இல்லை என்றாகிறதல்லவா? அப்புறம் எப்படி மனித மனம் ஒரு பெரும் காடு. அங்கில்லாத ஒன்று மனிதர்கள் அறியும்வகையில் வேறு எங்கும் இல்லை?
–     “கணினியின் மென்பொருள் உருவாக்கப்பட்டு ப்ராஸஸரினுள் செலுத்தப்பட வேண்டும். ஆனால் மனதை, அதன் ப்ராஸஸரான மூளையே உருவாக்கி தன்னுள் சேமித்து வைத்து, தான் உயிர்ப்புடன் இருக்கும்வரை தன்னால் உருவாக்கப்பட்ட மென்பொருளால் இயங்குகிறது. அதாவது தன் உருவாக்கத்தையும், இருப்பையும், அழிப்பையும் தன்னால் உருவாக்கப்பட்ட மென்பொருளாகிய மனதின் துணைக்கொண்டு நிகழ்த்துகிறது.” மூளை மனம் என்னும் மென்பொருளை உருவாக்குகிறது. ஆனால் தன் உருவாக்கத்தையும், இருப்பையும், அழிப்பையும் தன்னால் உருவாக்கப்பட்ட மென்பொருளாகிய மனதின் துணைகொண்டு நிகழ்த்துகிறது. இரண்டும் எப்படி சாத்தியம்?
–     “மனதின் ஆதிக்கத்திலிருந்து விடுபட முடிந்த மனிதன், மனதின் மேல் ஆதிக்கத்தை நிகழ்த்த முடிந்த மனிதன், தன் உருவாக்கத்தையும் இருப்பையும் அழிப்பையும் தானே முடிவு செய்யும் பெரும் தகுதியை அடைந்து விடுகிறான்.” இப்போது ஒரு மூன்றாவது ஃபேக்டர் வந்து விட்டது. மனிதன்.
மூளை, மனம், மனிதன். மூன்றும் வெவ்வேறா? அப்போது மனிதன் என்பது யார் அல்லது என்ன? மனதிற்கு அப்பாற்பட்டிருந்தால்தானே மனதின் ஆதிக்கத்திலிருந்து விடுபட முடியும் அல்லது மனதின் மேல் ஆதிக்கத்தை நிகழ்த்த முடியும்? அப்போது அவன் மனதிலிருந்து வேறு. மூளையிலிருந்தும் வேறு. ஆனால் மனித மனம் ஒரு பெரும் காடு. அங்கில்லாத ஒன்று மனிதர்கள் அறியும்வகையில் வேறு எங்கும் இல்லை.  இது எப்படி?
மூளை, மனம், மனிதன் என்பதற்கான வரையறைகள் என்ன?
 
–     “மற்றவர்கள் அனைவரும் அனிச்சையாக நிகழும் மனதால் உருவாக்கப்பட்டு, அதன் இச்சைக்கேற்ப இருந்து, அழிகிறார்கள் – எத்தகைய சுயக் கட்டுப்பாடுகளும் இல்லாமல்! இங்கு ‘தான்’ அல்லது ‘சுயம்’ என்று குறிப்பிடப்படுவது, முற்றிலும் வேறு தளத்தைச் சார்ந்த கருத்துருவாக்கம்.” அனிச்சையாக நிகழும் மனம், சுயக்கட்டுப்பாடு, தான், சுயம் இதெல்லாம் என்ன? விளக்க முடியுமா?
–     “அதாவது நுண்ணறிவு என்பது, மூளையால் உருவாக்கப்பட்ட மனம், தன்னிலிருந்தும் மூளை பெறும் புது அனுபங்களிலிருந்தும் தன்னைத்தானே மறுஉருவாக்கம் செய்து தளிர்த்து, உதிர்ந்து, வளர்ந்து சென்று கொண்டிருப்பது. Intelligence ஸை கட்டுரை நுண்ணறிவு என்கிறது. மேலும் அது பற்றி மூன்று விளக்கங்கள் கட்டுரையில் உள்ளன.
முதல் விளக்கம் இது. இந்தக் கூற்றின்படி நுண்ணறிவு என்பது மனம்; அதுவும் தளிர்த்து, உதிர்ந்து, வளர்ந்து சென்று கொண்டிருப்பது.
–     “ஏனெனில் நுண்ணறிவு என்பது, இதுவரை அடைந்திருக்கும் அனுபங்களை முற்றிலும் துறந்து, ஒரு நிகழ்வுக்கு அப்போதிருக்கும் சுற்றுச்சூழலை உணர்ந்து அதற்கேற்ப வினையாற்றும் இயல்பு. அதாவது நுண்ணறிவு என்பது இயல்பு;அதுவும் இதுவரை அடைந்திருக்கும் அனுபங்களை முற்றிலும் துறந்து வினையாற்றுவது.
மேற்கூறிய இரண்டு கூற்றும் ஒன்றா? ஆம் என்றால் எப்படி?
     “சமூகம் அளித்த அறிவை முற்றிலும் துறந்து, சூழ்நிலைக்கேற்ப வினையாற்றும் தகுதியை அடையும்போது ஒரு மனிதன் நுண்ணறிவை அடைகிறான். இது மூன்றாவது விளக்கம். இங்கு மனமோ, இயல்போ அல்ல. மேலும் அதை மனிதன் அடைகிறான். இங்கு மேலும் ஒரு உப கேள்வி இருக்கிறது. சமூகம் அளித்த அறிவை மட்டும் துறந்தால் போதுமா?தானாய் தன் அனுபவங்களிலிருந்து / கற்பனைகளிலிருந்து பெற்ற அறிவு மாசற்றதா? திரிபற்றதா?அதைத் துறக்க வேண்டாமா?
–     “எண்ணங்கள் அழியும்போது அந்த மனிதனும் இல்லாமல் ஆகிறான்.” அப்படியா? நனவையும், நினைவையும் பற்றி ஆசிரியர் என்ன நினைக்கிறார்? நினைவு(எண்ணங்களும், சிந்தனைகளும்)அழிந்த நனவை மனிதர்கள் அனுபவித்ததே இல்லையா?
–     “உதாரணமாக மூச்சு விடுவதற்குத் தேவையான எண்ணங்கள் ஆழ்மனதில் நிகழ்கின்றன. இதற்கான அறிவியல் சான்று என்ன? மூச்சுவிடுவதற்கான ஆதர உந்து சக்தி எண்ணமா, வேறெதாவதா?
–     “எண்ணங்களிலிருந்து ஒரு மனிதன் விடுபடும்போது அவற்றின் இருப்பு தேவையற்றதாகிறது.” கட்டுரையின் கூற்றுபடி மூச்சுவிடுவது கூட எண்ணங்களால். அப்போது எண்ணங்களிலிருந்து விடுபடும்போது மனிதன் மூச்சை நிறுத்திவிட மாட்டானா?
–     “எண்ணங்களை திசைப்படுத்துவது, அவ்வாறுச் செய்ய வேண்டும் என மனிதனுக்குள் நிகழும் ஒரு விழைவு மட்டும்தான்.  இந்த விழைவை மனிதன் அவனாகவே அடையவேண்டும். வேறு எவரும் இதை விதைக்க முடியாது. மனிதனுக்குள் இயல்பாகவே நிகழும் தேடுதல்கள், அவனின் இயல்பிற்கேற்ற தூண்டுதல்களை புற உலகிலிருந்து பெறும்போது சிந்தனைக்கான விழைவு தோன்றலாம். அது முற்றிலும் தன்னிச்சையானது.” கட்டுரை குறிப்பிடும் இந்த விழைவு எண்ணங்களுக்கும் மனதிற்கும் அப்பாற்பட்டதா அல்லது எண்ணத்தின் விளைவா? அப்பாற்பட்டது என்றால் எண்ணங்களுக்கு அப்பாற்பட்ட இயக்கம் உள்ளதா? மேலும் கட்டுரையின் ஓரிடத்தில் மனதின் விழைவுகள் யாவற்றையும் எண்ணங்கள் என்று கூறலாம் என்றும் வருகிறது.
–     “சிந்தனைகள்தான் மனிதனை மனிதனாக வாழ வைப்பவை.” அப்படியா? மனிதனாக வாழ மனித உருவம் இருந்தால் போதாதா? இல்லை மனிதத் தன்மை என்று ஒன்று வேண்டும் என்றால் அது சிந்தனையால் உருவாவதா? வேறு காரணங்கள் உள்ளனவா? அனிச்சைச் செயல்கள், உணர்வுகள் intuition, insight, instinct போன்றவற்றின் இடம் என்ன? தற்காக்கும், தப்பிப்பிழைக்கும் உணர்வின் மற்றும் அனைத்து உயிர்களிலும் உள்ள பாதுகாப்பு நாடும் இடைவிடா முனைப்பின் இடம் என்ன?
–     சிந்தனைக்கு மிக அவசியமான தேவைகள் “உண்மைக்கு மிக நெருக்கமான நினைவுகளும், தூய புலனுணர்வுகளும். இவை இரண்டும் அமைந்து விட்டால் அங்கு அதிநுண்ணுணர்வு தன்னை வெளிப்படுத்த எந்தத் தடைகளும் இல்லை.” இந்த அதிநுண்ணுணர்வு என்பது என்ன? அதற்கும் நுண்ணுணர்வுக்கும் ஆன சம்பந்தம் என்ன?
உண்மைக்கு மிக நெருக்கமான நினைவுகள் என்றால் என்ன? Approximate is always approximate and can never be actual. உண்மைக்கு மிக நெருக்கமான நினைவுகள் எப்போதும் உண்மையாகமாட்டா. 0.01 மி.மீ. வித்தியாசத்தால் உயிர் இழந்த அல்லது பிழைத்த கதைகள் அனந்தம்.
–     “நினைவுகள் என்றாலே அவை உண்மை இல்லை.”
–     “ஆக, ‘உண்மைக்கு நெருக்கமான நினைவுகள்’ என்பதை அறுதியிட்டு வரையறுக்க முடியாது.”
இதில் ஏதாவது தெளிவு இருக்கிறதா?
உண்மை நினவுகளைச் சாராதது. வாழ்க்கையை உண்மை என்று எடுத்துக் கொண்டால் நினைவுகள் என்னும் தோராயத்துக்கு எங்கெங்கு இடம் எங்கெங்கு இடம் இல்லை?
–     “இன்னும் குறிப்பிட்டுச் சொன்னால், மனிதனின் அகங்காரம் அந்த நினைவிலிருந்து எவ்வளவு விலகியிருக்கிறதோ அந்த அளவுக்கு அது உண்மைக்கு நெருக்கமானதாக இருக்கும்.” இது வேறு கட்டுரையை வேறு திசையில் திருப்பி விடுகிறது. அகங்காரம், சிந்தனை இரண்டும் ஒன்றை விட்டு ஒன்று சாராமல் இருக்கக் கூடுமா?
–     “ஆக ஒருவர் உண்மையில் சிந்திக்க வேண்டுமானால், தன் நினைவுகளை மிகத்தீவிரமாக மறுபரிசீலனைக்கு உட்படுத்தியப்பின்னரே, சிந்தனையின் எல்லையையாவது தொட முடியும்.” இது எப்படி சாத்தியம். அந்த மறு பரிசீலனை என்பது பழையனவால் அளவிடுவது. அங்கு இருக்கும் பழைய சிந்தனைகளை பழைய பரிசீலனைகளுக்கு உட்படுத்தி இப்போது என்னும் புதிய கணத்தை என்ன செய்ய சாத்தியம்? இது ஒருவகை ஆதர்ச, நடக்க முடியாத ஆலோசனை அல்லவா? மறுபரிசீலனை செய்பவர் யார்? அவரது தகுதி என்ன? அவர் உண்மைக்கு எத்தனை நெருக்கமானவர்? திரிபற்றவரா? அவரும் நினைவும் வேறா? அவர்தான் நினைவு என்கையில் அவரும் மாசு பட்ட பொய்தானே? அவர் நினைவு இல்லை என்றால் அவர் யார்?
–     “எண்ணங்களும் சிந்தனைகளும் தான் செயலின் ஊற்றுக்கண்.” எண்ணங்கள் தொடா செயல்களை மனிதர்கள் அனுபவித்ததே இல்லையா? சற்று கவனித்துப் பாருங்கள். சின்னஞ்சிறு குழந்தைகளைக் கவனித்துப் பாருங்கள். இசையிலும், நடனத்திலும், விளையாட்டிலும் மூழ்கி நினைவழிந்து தனைமறந்தவர்களைப் பார்த்தது இல்லையா? கனவுகள் அற்ற ஆழ் உறக்கம் என்பது என்ன?
–     “அது வற்றாத ஊற்று. வற்றும்போது அந்த மனிதனின் இருப்பு அழிந்து விடுகிறது.” அப்படியா?
–     “பெரும்பாலான மனிதர்கள், அவர்களை மனிதர்களாக பிறப்பித்ததன் மூலம் இயற்கை அவர்களுக்கு அளித்திருக்கும் பெரும் பொறுப்பை உணர்ந்ததாகத் தெரியவில்லை.” அது என்ன பொறுப்பு? பிற ஜீவன்களிலிருந்து அவன் எப்படி சாதாரணமாகவோ விசேஷமாகவோ மாறு படுகிறான்? அவன் பங்கு என்ன? இல்லை அவனே முழு அதிகாரியா? பிறவும் உண்டென்றால் அவற்றின் பங்கு என்ன/ அதை அவை உணர்ந்துள்ளனவா? அதை மனிதன் தெரிந்து கொள்ள முடியுமா? அவற்றின் இருப்பையே கணக்கில் கொள்ளாத இந்த கூற்று பொறுப்பானதா? மனிதன் என்கிற ஒற்றை ஜீவராசியின் அகங்காரத்தின் உச்சமா இந்த நினைப்பு? அப்படி இல்லையென்றால் மனிதனுக்கு பிற உயிர்கள், ஜடங்கள் பற்றி என்ன தெரியும்? அவனுக்கு அவனைப் பற்றியே என்ன தெரியும்? அப்படியே தெரிந்தது எல்லாம் சிந்தனை மூலம் எனில் சிதறுண்ட, மூளியான, பின்னமான, அச்சத்திலும், சுய அபிமானத்திலும் மூழ்கிய மனித சிந்தனை தொடக் கூடிய விஷயங்களா இவை?
–     “அவ்வாறு அறியாமல் அவர்களை இருக்கச் செய்வதும் இயற்கையின் மற்றொரு விளையாட்டாக இருக்கக் கூடும்.” அப்படி என்கையில் சிந்தனையைப் பற்றி ஏன் இவ்வளவு மெனக்கெட வேண்டும்? சிந்தனை அல்லது ஃப்ரீ வில் உண்டா? உண்டென்றால் இயற்கையின் விளையாட்டுகளின் இடம் என்ன? சிந்தனையின் இடம் என்ன?
–     “இயற்கை அளித்த வரமான சிந்தனையின்” அப்படியா? சிந்தனையா வரம்? அப்போது அறிவை (Intelligence), அன்பை, அழகை, நற்றன்மையை எல்லாம் வரம் என்று கருதவில்லையா?
–     “மனிதர்கள் இயற்கையால் வாழ்த்தப்பட்டவர்கள்!”
–     “இயற்கை வரத்துடன் சேர்த்து சாபத்தையும் அளித்துள்ளதோ?”
எது சரி?
–     “ஆனால் எந்த எண்ணங்கள் செயல்வடிவம் பெற வேண்டும் என்பதை அந்த எண்ணங்களிலிருந்து விடுபட்ட ஒரு இயக்கத்தால் சாத்தியப்படுத்தலாம். எண்ணங்களால் மாசு படாத, ஆனால் அதே மனதில் விளையும் சிந்தனையின் ஒரு திரியை அந்த விடுபட்ட இயக்கம் எனலாம். எண்ணங்களிலிருந்து விடுபட விரும்புபவர் விழிப்புடன் தன்னுள் வளர விட வேண்டிய அந்த சிந்தனையின் அல்லது உள்ளுணர்வின் திரி, பல்வேறு பெயர்களில் மதங்களும் தத்துவ மரபுகளும் கூறும் மனிதனின் உள்ளார்ந்த இருப்பாக இருக்கக் கூடும்.” எண்ணங்களிலிருந்து விடுபட்ட இயக்கம் என்றால் என்ன? எண்ணங்களிலிருந்து விடுபட்டபிறகு சிந்தனைக்கு அங்கே என்ன இடம்? அதன் ஒரு திரிதான் அந்த விடுபட்ட இயக்கம் என்கையில் விடுபட்ட இயக்கத்தின் வேர் சிந்தனையில்தானே இருக்கிறது? அங்கு சிந்தனை அல்லது உள்ளுணர்வு என்றும் வருகிறது. சிந்தனையா. உள்ளுணர்வா? இரண்டும் எப்படி ஒன்று?
–     “சுய சிந்தனையின் மூலம் விழிப்புணர்வின் மூலம் நம் கருத்துருவாக்கங்களை அடைய வேண்டும்.” சிந்தனை, விழிப்புணர்வு என்கையில் எதைச் சொல்கிறீர்கள்? அப்புறம் கருத்துருவாக்கம் வேறு. அழிவை எதிர்கொள்ள இவையா தேவை?

 
மேலும் சில கேள்விகள் :

  • இந்தக் கட்டுரையில் வெற்றி என்று குறிப்பிடுவது எவற்றை? லௌகீக வெற்றிகளையா? ஆன்மிகத்தில் வெற்றி உள்ளதா?
  • “கிட்டத்தட்ட ஒன்று போல் தோன்றும், ஆனால் முற்றிலும் வேறான அடிப்படை இயங்குவிசையால் உருவாக்கப்பட்டு மனதில் நிலை நிறுத்தப்படுபவை எண்ணங்களும் சிந்தனைகளும். மனிதனின் அடிப்படை இயங்கு விசை எண்ணங்கள்.” என்கிறது கட்டுரை. அப்போது எப்படி இரண்டு அடிப்படை இயங்கு விசைகள்?

இன்னமும் பல கேள்விகள் உள்ளன.
Intelligence என்பதைப் புரிந்து கொள்ளும் திறன் என்று கொள்கையில் அது எண்ணங்களுக்கும், சிந்தனைக்கும் அப்பாற்பட்டதாக இருக்கிறது.
இக்கட்டுரையில் எண்ணம், சிந்தனை, அறிவு (Intelligence), தகவல் அறிவு (Knowledge), நுண்ணறிவு, நுண்ணுணர்வு, அதி நுண்ணுணர்வு ஆகியன பற்றி ஒரு தெளிவான பார்வை  எனக்குக் கிட்டவில்லை. வார்த்தைகள் வெவ்வேறு விஷயங்களை மாற்றி மாற்றி சுட்டுகிற மாதிரி இருக்கிறது. வாஸனா, கர்மா பற்றி இக்கட்டுரை பேசவில்லை என்ற பிறகு எல்லாம் மனதில் இருக்கின்றன என்கிற முதல் கூற்றின் அறிவியல் அடிப்படை சொல்லப்படவில்லை. இயற்கையின் விளையாட்டு, அகங்காரம் பற்றிய கூற்று ஆகியவை கட்டுரை எந்த தளத்தில் இயங்குகிறது என்பதைக் கேள்விக் குறியாக்குகிறது. நியூரான்கள் பற்றியும், உயிர் சக்தி பற்றியும் அதன் விரயம் மற்றும் அதிகரிப்பு பற்றியும் உள்ள செய்திகள் அனுமானங்களா நிரூபிக்கப்பட்ட அறிவியல் நிஜங்களா?
இக்கட்டுரை ஆன்மீகம், உளவியல், அறிவியல், உடற்கூற்றியல், நரம்பியல் ஆகிய எதன் அடிப்படையில் இருக்கிறது அல்லது இவற்றின் எந்த முரண்களை நிறுவுகிறது அல்லது இசைவைப் பற்றி கூறுகிறது என்பதும் புலனாகவில்லை. இவற்றை மீறி சமுதாயவியலிலும் கால் வைப்பதால் கட்டுரையின் கவனக் குவிப்பு எதன் மேல் என்பதும் தெளிவாக இல்லை.
 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.