உறவுக்கு ஒரு பாலம்

elderly
சில வருடங்களுக்கு முன் ஒரு சுவாரசியமான ஆராய்ச்சி  வெளிவந்தது. இன்னும் ஐம்பது வருடங்களில் இந்தியாவில் குழந்தைகள், சிறுவர்கள் எண்ணிக்கைக் குறைந்துபோய், வயதானவர்கள் எண்ணிக்கை எக்கச்சக்கமாக கூடிவிடும் என்று ஒரு கணிப்பு சொல்கிறது. இதற்கு விரிவான ஆராய்ச்சியெல்லாம் தேவையில்லை. நம் ஊர்களில்  ஒரு கல்யாணம் போன்ற விசேஷங்களுக்குப்  போனாலே புரிந்துவிடும்.  இது போன்ற  விசேஷங்களில் பொதுவாக கூச்சலும் கும்மாளமுமாய்  குறுக்கும் நெடுக்கும் ஓடும்  சிறுவர்களை காண்பதே அரிதாகிவிட்டது. பண்டிகை அல்லது விசேஷங்களில் சம்பிரதாயமாக சிறுவர்கள் பங்களித்து அனுசரிக்கப்படும்  சடங்குகளுக்கும் சிறுவர்களை வலைபோட்டு தேடிப் பிடிக்க வேண்டியுள்ளது என்று சொல்கிறார்கள். கூடப்பிறந்தவர்கள் எண்ணிக்கை ச் சுருங்கி தனிக் குழந்தையாக வளரும்இன்றைய  சிறுவர்கள் பெரியவர்களாகும்போதுஅவர்கள் பங்குபெறும் விசேஷங்களில்  அவர்கள் வயதையொத்த உறவினர் – அத்தை மகன், மாமன் மகள் – என்று சிரித்து கும்மாளம் போடும் இளைஞர்கள்  பெரும்பாலும் இருப்பதேயில்லை. பெரும்பாலும்  சிறு குடும்பம் போதும் என்று ஒரு குழந்தையுடன்   நின்று விடும் குடும்பங்கள் இன்றைய யதார்த்தம். தவிர, மனிதனின் சராசரி ஆயுள் நீடிப்பதால் வயதானவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கிறது.
அந்த ஆராய்ச்சியின்படி, 2051ல் 14 வயதுக்குட்பட்டவர்கள் 19 சதவிகிதமே இருப்பார்களாம். இன்றைக்கு இவர்கள் 38 சதவிகிதமாக இருக்கிறார்கள். 15லிருந்து 64 வயதுக்குட்பட்டவர்கள் எண்ணிக்கை 58லிருந்து 66  சதவிகிதமாக உயரும். 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் எண்ணிக்கை இன்று 75 மில்லியன். இதுவே 2051ல் 243 மில்லியனாக உயரும்!
இதில் குறிப்பிடத்தகுந்த ஒரு விஷயம், ஆண், பெண் சதவிகிதம் 2051ல் சரி சமமாக இருக்குமாம். இன்றைக்கு 108 ஆண்களுக்கு 100 பெண்கள் என்கிற விகிதத்தில் இந்த எண்ணிக்கை இருக்கிறது. பெண் குழந்தைகளை பல குடும்பங்கள் ஒதுக்குவதால் இந்த குறை. ஆனால் வரும் வருடங்களில் இந்த விகிதம் சரிசமமாக  இருக்கும் என்பது பெண் குழந்தைகள் பற்றி மக்களின் மாறிவரும் மனோபாவத்தின் அடையாளம்.
இந்தியாவில் மட்டும் அல்ல. ஆசியா முழுவதுமே இப்படி வயதானவர்கள் உலகமாக இருக்குமாம். வருடத்திற்கு 3 சதவிகிதம் ரீதியில் இவர்கள் எண்ணிக்கை வளரும் என்கிறது வேறு ஒரு அமெரிக்க கணிப்பு.
வயதானவர்கள் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க அவர்களின் உடல் மற்றும் மன நலன் கவனிக்க வேண்டிய விஷயமாகிறது. என் உறவினர் ஒருவர் – நல்ல பதவியிலிருந்து ஓய்வு பெற்றவர்; இரண்டு மகன்களும் அவரவர் குடும்பத்தினருடன் அமெரிக்காவில். அவரது மனைவியும் நன்கு படித்தவர். சமூக சேவை மற்றும் பலவித வேலைகளில் சுறுசுறுப்பாக இருப்பவர்.  கணவருக்கு 80 வயதுக்கு மேல் என்றால் இவருக்கு 75 வயது.
அமெரிக்கா, இந்தியா என்று மாற்றி மாற்றி இத்தனை வருடங்கள் காலம் கழித்த பின்னர் இப்போது அத்தனைதூரம் விமான பயணம் செய்ய முடியவில்லை என்று இங்கேயே இருந்துவிடுகிறார்கள். அதோடு அல்ல. அவர்களுக்கு தேவையான மருத்துவ பராமரிப்பு செலவும் ஒரு காரணம். அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் மருத்துவ செலவு எக்கச்சக்கம். அதைத் தவிர்க்க இன்சூரன்ஸ் செய்யலாம் என்றால் இவர்களைப் போன்ற மிக வயதானவர்களுக்கு கட்டண தொகை மிக அதிகம். இது அனாவசியம் என்று இவர்களுக்குத் தோன்றிவிட்டது. இந்தியாவில் இப்படிபட்ட கவலைகள் இல்லை என்று கருதி இங்கேயே இருக்க முடிவு செய்துவிட்டனர்.
உறவினரின் மனைவி ஒரு முறை குறிப்பிட்டார். ” அமெரிக்காவில் எங்களுக்கு ஒன்றும் குறைவில்லைதான். நல்ல வசதி. சௌகரியம் எல்லாம் சரிதான். ஆனால் ஒரு விஷயம். இந்த காலத்தில் இளைய தலைமுறையினர் வயதானவர்களை fossil(பாறையாக உறைந்த உயிரினம்) மாதிரி கருதுகிறார்கள். ஏதோ அருங்காட்சியகத்தில்(Museum) சொகுசாக உட்கார்ந்திருக்கும் உணர்வுதான் வருகிறது. எனக்கோ கலகலவென்றுஎல்லோருடனும் பேசிப் பழக்கம். என்னால் அப்படி “உறைந்த பாறை”போல் இருக்க முடியாது….” என்று கூறினார். ஆனால், இந்தப் பிரச்சனை அமெரிக்கா என்றில்லை. அமெரிக்காவோ, இங்கிலாந்தோ, அல்லது இந்தியாவோ, எங்கு இருந்தாலும், வயதானவர்களுக்கும் இளைய தலைமுறைக்கும் இருக்கும் பிரச்சனைதான்.  பல வருடங்கள் சுறுசுறுப்பாகஇருந்துவிட்டு ஓய்வுப்பெற்று வீட்டில் இருக்கும் பெரியவர்களுக்கு அடுத்த தலைமுறையினர் – இன்று, காலில் சக்கரம் கட்டிக்கொண்டு சுழலும் இன்றைய தலிமுறையினர் தங்களிடம் நின்று  நாலு வார்த்தைப் பேசமாட்டார்களா என்று ஒரு ஏக்கம்சூழ்ந்து கொள்ளும். தாங்களும்இப்படித்தானே அன்று நேரம் இல்லாமல் ஓடிக்கொண்டிருந்தோம்  என்பது இவர்களுக்கு மறந்து போயிருக்கும்.
பல வருடங்கள், பலவித அனுபவங்களைக் கடந்து வந்து இருக்கும் இவர்களின் அனுபவங்கள் இன்னும் இளமை அல்லது நடுவயதில் இருப்பவர்களுக்கு பொக்கிஷமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் நம்மில்எத்தனைபேர் இதை உணர்ந்திருக்கிறோம்? இன்றைக்கு வலிமையான அல்லது அதிகாரம் புரியும் வயதில் இருப்பவர்களுக்குத் தாங்கள் செய்வதுதான் சரியென்று தோன்றும். வயதானவர்கள் தொண தொணவென்று நம் உயிரை எடுப்பதாக தோன்றும். பேசிப் பிரச்சனை செய்ய வேண்டாம்; பேசாமல் நம் வேலையைப் பார்த்துக்கொண்டு போகலாம் என்றால் மேலே சொன்னதுபோல் அவர்களுக்கு “உறைந்த பாறையாக” ஒதுக்கப்பட்ட உணர்வு வந்துவிடுகிறது.
அதே போல் அவர்களுக்கு இன்னொரு விதத்திலும் தாக்கம் இருக்கும். பல வித அனுபவங்களைக் கடந்து வந்தபின் சட்டென்று எல்லாவற்றிலுமே சுவாரசியம் குறைந்து போனாற்போல் இருக்கும். ஒரு நாளுக்கு கடவுள்  ஏன் 24 மணி நேரம்தான் வைத்தார்…. இன்னும் இரண்டு மணி நேரம் இருந்திருந்தால் இன்னும் கொஞ்சம் வேலைகளை  செய்ய முடியுமே  என்று  அங்கலாய்த்துக்கொண்டு கடிகாரச் சுற்றின் பின்னால் ஓடிக்கொண்டிருந்தவர்களுக்கு  ஓய்வுப் பெற்றப்பின்,  நாள் நீண்டு இருப்பது போல் இருக்கும். டைரியில், அல்லது நாட்க்குறிப்பில் செய்ய வேண்டிய வேலைகள் என்று தினமும் தயாரிக்கும் அட்டவணையில் வரிசை கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து, நாளடைவில் செய்ய வேண்டிய வேலைகள் லிஸ்ட் காலியாக இருக்கும். இந்த சமயத்தில்தான் மனம் பழசை அசைபோடவும், நினைவிலிருப்பதை யாருடனாவது பகிர்ந்து கொள்ளவும் விழையும். இதை ஓரளவு புரிந்து கொண்டு இளைஞர்கள் சற்று நேரம் பெரியவர்கள் பேசுவதைக் காதுகொடுத்து கேட்டாலே போதும். பெரியவர்களும், தாங்கள் அந்த வயதில் எப்படி இருந்தோம் என்று நினைவுப்படுத்திக்கொண்டு, இளைஞர்களின் நேரமின்மையைப் புரிந்து கொண்டு சற்று பொறுமையாக இருந்தால் அது மன முதிர்ச்சியின் அடையாளம்.  இரண்டுவித நிலைகளையும் சமாளிக்க ஒரே வழி, நேரம் கிடைக்கும்போது மனம் விட்டுப் பேசுவதுதான்.
ஆனால் ஒவ்வொரு தனி மனிதனும் ஒவ்வொரு தனித்தனி கிரகத்தில் இருப்பது போன்ற உணர்வைத்தரும் அளவு இன்று தனி மனித உரிமைகள் நிலை நாட்டப்ப்டுகின்றன. இந்த சூழ்நிலையில் குடும்பங்களில் கலந்து உரையாடும் சந்தர்ப்பமே எழுவதில்லை.
இதே போன்ற இன்னொரு வயதான நண்பர் தன் அமெரிக்க பேரனைத் தன்னுடன் சில காலம் வைத்திருக்க ஆசைப்பட்டு இந்தியாவுக்கு கூட்டி வந்தார். தன் தாத்தா பாட்டியுடன் அந்த சிறுவன் சந்தோஷமாகதான் இருந்தான். ஒரு நாள் ஏதோ கோபத்தில் அவனைத் தாத்தா திட்டிவிட்டார். அவ்வளவுதான். விடு விடுவென்று உள்ளே சென்ற அந்தச் சிறுவன் தன் சூட்கேஸைத் தள்ளிக்கொண்டு வந்தான். ( அதைத் தூக்க கூட அவனுக்கு உயரமோ பலமோ கிடையாது!) ” நான் என் வீட்டுக்குப் போகிறேன்….” என்று கூறி வாசல் கதவில் சாய்ந்து நின்று கொண்டான்!
சகிப்புத்தன்மை எப்படி போகிறது பாருங்கள்?
இளையவர்கள் பெரியவர்களிடம் கலந்துரையாடி அவர்களை சகஜமாக இருக்க உதவ வேண்டும் என்பதுபோல் பெரியவர்களும் வயதானதில் வாழ்க்கையே வெறுத்து போய் இருக்க வேண்டியதில்லை.
குழந்தைகளின் வாழ்க்கை ரம்மியமானதாக இருப்பதுபோல் தோன்ற ஒரு முக்கிய காரணம், வாழ்க்கையின் பலவித ரகசியங்கள், மற்றும் பரிமாணங்களை அவர்கள் தினம் புதிது புதிதாக கண்டுபிடித்த வண்ணம் உள்ளனர். ஒரு நீரூற்றிலிருந்து தண்ணீர் பீய்ச்சி அடிப்பது அவர்களுக்கு ஒரு விந்தை. எத்தனை மணி நேரம் வேண்டுமானாலும் அதிசயமாக கண் கொட்டாமல் பார்ப்பார்கள். வயதாக வயதாக நாம் நமக்கு எல்லாமே புரிந்துவிட்டது, விவேகம் வந்து விட்டது என்று கருதுகிறோம். நமது சின்ன சின்ன ஆசைகள், ஆச்சரியங்கள் தேடல்கள் எல்லாம் நமது “வளர்ந்த” மனோபாவத்திலும், வேலை செய்யும் காலத்தில் போட்டி போட்டுக்கொண்டு ஓடுவதிலும் கரைந்து போகின்றன.
ஓய்வு பெற்றவுடன் பலர் அத்துடன் வாழ்க்கையின் எல்லைக்கு வந்துவிட்டதாக கருதுகிறார்கள். இன்னொரு பக்கம் தாம் யாருக்கும் பிரயோஜனமில்லை என்ற உணர்வு.
இந்த மனோபாவங்களை மூட்டைக் கட்டி வைத்துவிட்டு ஓய்வு வாழ்க்கையைப் புதிய கண்ணோட்டத்தில் பார்க்கலாமே? எதற்கெடுத்தாலும் தனக்கு வயதாகிவிட்டது என்று குறையாக புலம்பிக்கொண்டிராமல், வயதாகிவிட்டதால் வரும் உடல், மனக் கோளாறுகளை வயதானதின் அடையாளம் என்று ஒரு புரிந்துணர்வுடன் ஏற்றுக்கொண்டு வாழ்க்கைப் பயனத்தைத் தொடரும்போது அங்கே மனத்தளர்வு இருக்காது. அதேபோல், பெரியவர்கள் இளைஞர்களிடமும், சிறியவர்கள் பெரியவர்களிடமும் எதிர்பார்க்கும் எதிர்பார்ப்புகளிடையே இருக்கும் இடைவெளி, பெரும்பாலான மனக் குமுறல்களுக்கு காரணமாகின்றன.
ஓய்வு காலம் என்பது வாழ்க்கைத் தனக்கு வாழக் கொடுத்திருக்கும் மற்றொரு பக்கம் என்று உணருவது பெரியவர்கள் தங்களை மேம்படுத்திக்கொள்ள உதவும்.
வேலை… வேலை என்று இத்தனை நாளும் சுற்றிக் கொண்டிருந்ததில் நமது சிறு வயது ஆசைகள் பல(ஓவியம், இசை,விளையாட்டு, அல்லது வேறு எதுவோ ஒன்று… ) மறைந்தே போயிருக்கலாம். வளர வளர நம் ஆச்சரிய உணர்வுகள், ஆர்வங்கள், காணாமல் போகின்றன. ஒரு இயந்திர கதியில் பொறுப்புகளைச் செய்து கொண்டிருந்திருப்போம். ஓய்வு காலம் இவற்றை தட்டி எழுப்ப உதவும்.
ஒரு நாளிதழ் கட்டுரையில் மூத்த குடிமகன் ஒருவர் எழுதியிருந்தார்; அவருடைய மனைவி காலமான பின்னர், தன் வாழ்க்கையை எப்படி சமாளிக்கிறார் என்று. மனைவி இருந்தவரை வென்னீர் வைக்ககூட மனைவியை எதிர்பார்த்துக் கொண்டிருந்தவர், பின்னர் எப்படி சமையல் கற்றுக்கொண்டு, தன் வேலைகளைப் பார்த்துக்கொண்டு சுவாரசியமாக நாட்களை வைத்துக்கொண்டார் என்பது படிக்க நெகிழ்ச்சியாக இருந்தது. எல்லாவற்றுக்கும் அடிப்படை காரணம் நமது மனோபாவம்தான். இங்கே கொஞ்சம் அங்கே கொஞ்சம் என்று நம்மைநாமே சீர் படுத்திக்கொண்டும், பிறரின் சிறுதவறுகளை மறந்தும் மன்னித்தும், வாழ்க்கைப் பயணத்தில் தேவைப்படும்போது எதிர் நீச்சல் போட்டுக்கொண்டும் செல்லும் போது சிக்கல் இல்லாமல் அமைதியாக இருக்கும். மறப்பது, மன்னிப்பதும்ஒரு கலை. அந்தக் கலையைத்தொடர்ந்து கைப்பிடித்தோமானால், உறவுகளுக்கிடையே ஒரு பாலம் உறுதியாகஇருக்கும்.

One Reply to “உறவுக்கு ஒரு பாலம்”

  1. ரொம்பச்சரி. நமக்கான ஒரு ஓய்வு நேரப்பொழுது போக்கு ஒன்னு இருக்கணும்.
    இப்ப இந்த நவீனகாலத்தில் மனுஷங்களுக்கு ஆயுசு கொஞ்சம் கூடுதலாவே இருக்கு. சரீரத்தை நல்ல முறையில் உடற்பயிற்சி எல்லாம் செஞ்சும், சத்தான உணவுகளைச் சாப்பிட்டும் ஆரோக்கியமா இருப்பதால் எமன் பயந்துக்கிட்டுத் தூரப்போய் நிக்கறான்.
    65 வயசுலே வேலையில் இருந்து ஓய்வு. அப்புறம் ஏகப்பட்ட நேரம் கையில். ஒரு எழுபத்தியஞ்சு, எண்பதுவரை சொந்த வீட்டில் சின்னசின்ன வேலைகளுடன் காலத்தைப் போக்கிட்டு, அதுக்குப்பிறகு முதியோர் இல்லத்துக்கு இடமாற்றம்.
    அங்கே………… வெயிட்டிங் ஃபார் கடவுள் 🙁

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.