அண்மையில் ஏர்டெல், ரிலையன்ஸ் போன்ற தொலைத் தொடர்பு நிறுவனங்கள் இலவசமாகச் சில இணையச் சேவையை வழங்கும் திட்டத்தைத் தொடங்கிப் பின்னர் மக்கள் எதிர்ப்பால் டிராயின் ஒப்புதலுக்குக் காத்திருக்கின்றனர். இலவசம் இங்கு என்றால் மக்கள் அவர்கள் கொடுக்கும் தளங்களைப் பயன்படுத்த எந்த டேட்டா கட்டணமும் செலுத்தத் தேவையில்லை. நிச்சயமாக இது தர்மத்திற்கு வழங்கும் இலவசமல்ல ஆனால் இலவச டோர் டெலிவரி போல வணிக நடவடிக்கை தான். ஆனால் இது நெட் நியூட்ராலிட்டி எனப்படும் இணையச் சமநிலையைப் பாதிப்பதாகப் பலர் கருதி இவற்றை எதிர்த்துக் களத்தில் இறங்கியும் போராடுகிறார்கள். இது தொழிற்நுட்பம் மற்றும் பொருளாதாரம் சார்ந்து என்பதால் முக்கியமானவர்கள் என்ன சொல்கிறார்களோ அதையே பின்பற்றி மக்கள் திசை மாறிவிடுகிறார்கள். அப்படியென்ன சமநிலை பறிப்பு என்றால் ஒவ்வொரு பயன்பாட்டிற்கும் வெவ்வேறு கட்டணம் என்றால் இது சம உரிமையல்ல என்கின்றனர். முக்கியமாக அச்சமூட்டுபவையாகச் சொல்வது இன்றைக்கு இலவசமாக வருபவை நாளை அதிகக் கட்டணத்தில் உயர்ந்துவிடும் என்பதாகும். அவ்வடிப்படையில் இலவசமும் சமநிலைக்குக் குந்தகம் விளைவிக்கும் அதனால் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மட்டும் பயனடையும் என்கின்றனர்.
எப்படி விவசாயத்திற்கு மின்சாரம் விலையில்லாமலும், குடியிருப்பிற்கு 500 யூனிட்டிற்கு மேல் ஒரு கட்டணமாகவும் மின்சாரவாரியம் விலைநிர்ணயம் செய்கிறதோ அதைப்போல ஓடிடி என்ற வருமானத்தைப் பாதிக்கும் சேவைகளுக்கு மட்டும் விலையேற்றலாம் என்று முடிவுசெய்துள்ளனர். ஆனால் அதனைத் தவறாகப் புரிந்துகொண்ட பலர் இதை ஏதோ கருத்துச் சுதந்திர பறிப்பாகக் கருதுகின்றனர். அதுயென்ன ஓடிடி என்றால் இணையவழி தொலைப்பேசி, காணொளிவுரையாடல், தொலைக்காட்சி நேரலை போன்ற தொலைத் தொடர்பு நிறுவனங்களில் சேவையை இணையம் வழியாக வழங்கும் சேவைகள். இச்சேவையால் வருவாய் இழப்பு ஏற்படுவதாக அந்நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. லாபத்தை அதிகரிக்க வேண்டும் என்று முடிவான பின்னர் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் விலையை ஏற்றவேண்டும் என்று முடிவு செய்தால் உடனே ஏற்றமுடியும் மாறாகப் பயன்பாட்டு அடிப்படையில் இணையப் பயனாளிகளிடம் விலையேற்றுவோம் என்று நினைப்பது ஒருவகையில் சரியான நடவடிக்கையாகும். விலையேற்றம் என்றாலே அது மக்களைப் பாதிக்கும் என்றாலும் இம்மாதிரி முயற்சி ஓரளவிற்கு அடித்தட்டுமக்களைப் பாதிக்காது. பணப் பரிவர்த்தனைக்கு வங்கி இணையத்தளங்களையும், கல்விக்காக செய்தித்தளங்களையும், விக்கிப்பீடியாவையும், அரசு அறிவிப்புகளை அறிய அரசுத் தளங்களையும் பயன்படுத்துபவர்களுக்கும், ஓடிடி சேவையில் வெளிநாட்டில் உள்ள உறவினருடன் அன்லிமிட்டில் பேசுபவர்களுக்கும் ஒன்றாக விலையேற்றமுடியுமா என்று எண்ணிப்பார்க்கவேண்டும். இப்படி இணையச் சமத்துவம் என்று போராடுவதால் பெரிதும் பலனடைவது மேல்தட்டுமக்களே.
இணையம் என்பதை அத்தியாவசியத் தேவையாகக் கருதும் இந்த மேல்தட்டு மக்கள் கட்டணமின்றி வழங்கப்படும் திட்டங்களையும் எதிர்ப்பதால் அன்றாடம் வேலைசெய்து பிழைக்கும் மனிதர்களுக்கு இணையம் என்பது எட்டாத கனியாகிவிடும். இணையச் சமத்துவம் என்பது மறைமுகமாக இணையத்தளங்களைத் தடுப்பதுதானே தவிர வெளிப்படையாகப் பயன்பாட்டு அடிப்படையில் விலையேற்றுவதல்ல. வெளிப்படைத் தன்மையின்மைதான் இணையச் சமத்துவத்தைப் பாதிக்கிறது என்ற மையப்புள்ளியைவிட்டு வேறுபட்ட கட்டணங்கள்தான் சமத்துவத்தைப் பாதிப்பதாகக் காட்டுவது யாருக்கு லாபம் என்பதை மக்கள் சிந்திக்கவேண்டும். சிறுவணிகர்களை விழுங்கிவரும் இணைய வர்த்தகத்தை ஆதரித்து வளர்த்தவர்கள் தான் இணைய நிறுவனங்கள் ஆனால் இன்று கட்டணமற்ற இணையசேவை என்று அவர்களைப் பாதிக்கும் போது மட்டும் சமத்துவம் பேசுவது வியாபார நோக்கமேயன்றி சமத்துவமில்லை. நடுநிலைமை என்பது பாதிக்கப்பட்டவர்களை ஆதரிப்பதல்ல நியாயத்தை ஆதரிப்பதாகும். எனவே கட்டண வேறுபாட்டில் பாதிக்கப்படுபவர்கள் விலையேற்றத்தை எதிர்த்துக் குரல் கொடுங்கள் அதை சமத்துவமாகக் காட்டிக்கொண்டு கட்டணமற்ற திட்டங்களை முடக்கிவிடாதீர்கள்.
நிற்க, பேஸ்புக் போன்ற நிறுவனங்கள் வழங்கும் இலவசத் திட்டங்களை ஏற்க வேண்டும் என்பதால் அது ஒவ்வொருவரின் விருப்பம். ஆனால் அத்தகைய திட்டங்கள் முழுமையாக வேண்டாம் என்பதே மிகவும் ஆபத்தானது. அதற்குத் தான் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் மக்களிடம் கருத்துக் கேட்டுள்ளது அதன் மூலம் முறையாகக் கட்டுப்பாடுகளுடன் இவ்வகை இலவசச் சேவையை மக்களுக்கு வழங்கலாம். ஏகாதிபத்தியம் உருவாகாமலும், போலி வியாபாரயுக்திகள் செய்யாமலும், தகவல் சுதந்திரத்தைப் பறிக்காமலும் இருப்பதை இக்கட்டுப்பாடுகள் உறுதி செய்யவேண்டும். இது நமது வரிப்பணத்தில் வழங்கப்படும் இலவசம் அல்லாத போது இலவசமே வேண்டாம் என்பதை இணையத்தில் அமர்ந்து கருத்துச் சொல்லும் நாம் கூறமுடியாது. உண்மையில் இணையத்தை அனுபவிக்காதவர்கள்தான் சொல்லவேண்டும். ஆகவே அதை வழங்கினால்தான் இத்திட்டம் வெற்றியா தோல்வியா என்பதைச் சந்தை தீர்மானிக்கும்.
எல்லாவற்றையும் விட இத்தகைய மாறுபட்ட விலைநிர்ணயம் மிகவும் அவசியமான ஒன்று ஏனெனில் புதியவர்கள் இலவசம் மூலம் சந்தைக்கு வருவதால் பல்வேறு போட்டியாளர்கள் கொண்ட தொலைத்தொடர்புச் சந்தையில் இத்தகைய விலை நிர்ணயம் அவர்கள் கையில் இருந்தால் விலையைக் குறைப்பார்களே அன்றி அதிகரிப்பதற்கு வாய்ப்புக் குறைவு. மேலும் எண் பெயர்ச்சி (நம்பர் போர்டபிலிட்டி) வசதி மக்கள் கையில் இருப்பதால் வாடிக்கையாளரும் பயனடைவார். மாறுபட்ட விலை நிர்ணயம் என்பது தொழில்ரீதியாகவும் மேம்பாட்டை அடையச் செய்யும், சமூகரீதியாகவும் பலனைக் கொடுக்கும். கல்வி, மருத்துவம் போன்ற அடிப்படை வசதிகொண்ட இணையத்தளங்கள், அரசு இணையத்தளங்கள் ஆகியவை விலையில்லாமல் கிடைக்கவேண்டும். அந்தத் தொலைநோக்கு இல்லாமல் இலவசத்தை எல்லாம் கண்களை மூடிக்கொண்டு எதிர்த்தால் பாதிக்கப்படுவது நாமும்தான். வெளிப்படையான நிர்வாகத்திற்கு இணையச் சமநிலை பயன்படவேண்டுமே தவிர இலவசங்களைத் தடுப்பதற்கல்ல என்பதைப் புரிந்து கொள்வோம்.