ஆயன்வந்து அப்பூச்சிகாட்டுகிறான்….!

குழந்தையின் வளர்ச்சிப் பருவங்களைப்பாட பெரியாழ்வார் ஒரு வரைமுறையும் வைத்துக்கொள்ளவில்லை. புதியதாகக் குழந்தை கிருஷ்ணன் கற்றுக்கொண்டு (மானிடக் குழந்தைகள் போல) செய்யும் செயல்களனைத்துமே  அவரால் பாடிக்களிக்கப்பட்டன. வருணித்துக் கொண்டாடப்பட்டன. இனி நாம் காணப்போகும் குழந்தையின் பலவிதமான செயல்களும் உலகத்துத் தாய்மார்கள் அனைவருமே தாமும் தமது குழந்தைகளிடம் அனுபவித்து மகிழும் நிகழ்வுகளேயாகும். கிருஷ்ணன் என்பதால் மிகையாக்கி ஒன்றுமே கூறப்படவில்லை.
அப்பூச்சிகாட்டுதல் என்பதும் இவ்வகையில் ஒன்று! அதென்ன அப்பூச்சிகாட்டுதல்?
சிறிது வளர்ந்து தளர்நடை பயிலும் குழந்தை, பலவிதமான பொருட்களையும், மானிடர்களையும், நாய், பூனை, அணில் , பறவைகள் போலும் பிராணிகளையும் வியந்து நோக்குகிறான். இவையனைத்தும் அவனுக்குத் தாயால் பரிச்சயம் செய்து வைக்கப்பட்டவையாகும். அவற்றோடான நட்பும், தொடர்பும் அவனுக்கான சிறிய விந்தை உலகமாக விரிந்து வளர ஆரம்பிக்கின்றது. இந்நிலையில் குழந்தையின் உணர்வுகளும் அவன் மனவளர்ச்சிக்கேற்ப வளர்ந்து வருகின்றன. கேட்டபொருள் கிட்டாதபோது அழுகையும், ஆத்திரமும் தோன்றுகிறது. அவனை யாராவது கொஞ்சும்போது மகிழ்ந்து சிரிக்கிறான். எதிர்பாராது எதனையாவது கண்டு பயப்படும் உணர்வும் உண்டாகிறது.
மேலும் அவனுடன் விளையாடும் வயதில் பெரிய குழந்தைகள் இன்னும் பலவிதமான உணர்ச்சிகளையும் அவனுக்கு அறிமுகம் செய்துவைக்கின்றனர்! பயமறியாத இளங்கன்றாக வளர்பவன் இப்போது பயம் என்ன என அறிந்துகொள்கிறான். அறிந்ததனைத் தானும் மற்றவர்களிடம் காட்டி விளையாடுகிறான். தளர்நடை பயிலும் குழந்தைக்குத் தாய்தான் எப்போதும் இணைபிரியாத தோழமை. மற்றசிறார்கள் சிறிது விளையாடிவிட்டு தம் வயதொத்தவர்களுடன் ஓடிச்சென்றுவிடுவார்கள். ஆகவே தாயிடம் சென்று அவளைப் பயமுறுத்துவதுபோலச் சின்னச்சின்ன விளையாட்டுகளை விளையாடித் தானும் மகிழ்ந்து அவளையும் மகிழ்விக்கிறான் சிறுகுட்டன்! இதைத்தான் அப்பூச்சிகாட்டுதல் என வருணிக்கிறார் பெரியாழ்வார் எனும் தாய்!
ஸ்ரீகாஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரியார் அவர்கள் இதனை பாலசேட்டைகள் என விளக்குகிறார்.  சிறு குழந்தைகள் தமது முகத்தையும் கண்களையும் தலைமயிரினால் மறைத்துப் ‘பயம் காட்டி’ விளையாடுவார்கள். அல்லது தமது கண்ணிமைகளை மடித்துக் கொண்டு மற்றொருவிதமாகப் பயம்காட்டுவார்கள். இதையெல்லாம் கண்டு பெரியவர்களும் அன்னைதந்தையரும் தாம் பயப்படுவதுபோல நடித்துக் குழந்தைகளை மகிழ்விப்பர். இதுவே ‘பூச்சிகாட்டி விளையாடல்’ எனக் குறிக்கப்படும்.
‘கொதிக்கும் நீரைக்கொண்ட காளிந்திமடுவில் கடம்பமரத்தின் மீதிருந்து குதித்து, காளியன் எனும் பாம்பின் படத்தின்மீது ஏறித் தன் காற்சிலம்புகள் ஒலிக்குமாறு குதித்து நடனமாடினான் இந்தக் கிருஷ்ணன். அதனைக் கண்டு பயந்த ஆயர்கள் மனம் மகிழும்வண்ணம் புல்லாங்குழலை ஊதினான். இவ்வாறெல்லாம் செய்த கண்ணன் இப்போது வந்து நமக்கு அப்பூச்சி காட்டுகிறான் பார்!’ எனப் பெண்கள் கூறிக் கொள்வதாக இப்பாசுரம் அமைகிறது.
பாடலின் நயத்தினை ரசித்துமகிழ, பெரியாழ்வார் போற்றும் வியத்தகு செயல்களான காளியநடனத்தையும், ‘தன்குட்டன் இத்தகைய பேராளன், தெய்வக்குழந்தை’ என அறியாத எளியமனத்தினளான அன்னை கொண்டாடும் அப்பூச்சிகாட்டும் நிகழ்வையும் ஒன்றோடொன்று தொடர்பற்றதாக்கிப் பிரித்துப்படித்துப் பொருள்கொள்ளவேண்டும். தொடர்புபடுத்தி வினாக்களை எழுப்பினால் குழப்பம்தான் எஞ்சும்!!
காயும் நீர்ப்புக்குக் கடம்பேறி காளியன்
        தீய பணத்திற் சிலம்பு ஆர்க்கப் பாய்ந்தோடி
        வேயின் குழலூதி வித்தகனாய் நின்ற
        ஆயன் வந்து அப்பூச்சி காட்டு கின்றான்
                அம்மனே! அப்பூச்சி காட்டு கின்றான்.
(பெரியாழ்வார் திருமொழி- இரண்டாம் பத்து-3)

godh-bharai-

“எப்படிப்பட்ட குழந்தை இவன் கண்டாயோ பெண்ணே! இருட்டில் காராக்கிருகத்தில் பிறந்தவன்; ஆய்ப்பாடிக்குச்சென்று ஆயர்களின் குழப்பத்தைப்போக்கி, கொடிய அந்தக் கம்சனைப் பூமியில் தள்ளிப் புரட்டிக் கொன்றவன். போதாக்குறைக்கு நாங்கள் யமுனையில் நீராடும்போது மரத்தினடியில் வைத்திருந்த எங்கள் அழகான பட்டுச்சேலைகளையெல்லாம் திருடிக்கொண்டவன். அவன் வந்து இப்போது அப்பூச்சி காட்டும் அழகைப்பாரடி,” என்கிறாளாம் இன்னொருத்தி.
இருட்டில் பிறந்துபோய் ஏழை வல்ஆயர்
        மருட்டைத் தவிர்ப்பித்து வன்கஞ்சன் மாளப்
        புரட்டி அந்நாள் எங்கள் பூம்பட்டுக் கொண்ட
        அரட்டன் வந்து அப்பூச்சி காட்டு கிறான்
                அம்மனே! அப்பூச்சி காட்டு கின்றான்.
(பெரியாழ்வார் திருமொழி- இரண்டாம் பத்து-4)
ஒரு கோபிகையின் வீட்டில் வெண்ணெய் திருட நுழைகிறான் கண்ணன். அவள் அவனை மிரட்டுகிறாள். இவன் சும்மா இருந்தானா? கண்ணிமைகளை மடித்து அவளைப் பயமுறுத்திப் பார்க்கிறான். கோபிகைக்குச் சிரிப்புத்தான் வருகிறது. “பாரடி அம்மா! அன்று காளைகளைக் கட்டும் வண்டியில் வந்த சகடாசுரனைக் காலால் உதைத்து அழித்த இந்தப்பிள்ளை, எத்தனைமுறை எல்லார்வீட்டிலும் நெய்திருடி உண்டு நந்தன்மனைவி யசோதையிடம் தயிர்கடையும் கயிற்றால் அடிவாங்கித் துள்ளித்துடித்திருக்கிறான். இப்போது பார்! கொஞ்சம்கூடப் பயமில்லாமல் என்வீட்டில் நெய்திருடவந்து எனக்கே அப்பூச்சி காட்டுவதைப்பாரடி,” என்று தோளில் முகவாய்க்கட்டையை இடித்துக் கொண்டு அதிசயிக்கிறாள் அவள்.
சேப்பூண்ட சாடு சிதறித் திருடி நெய்க்கு
        ஆப்பூண்டு நந்தன் மனைவிகடை தாம்பால்
        சோப்பூண்டு துள்ளித் துடிக்க துடிக்க அன்று
        ஆப்பூண்டான் அப்பூச்சி காட்டு கின்றான்
                அம்மனே! அப்பூச்சி காட்டு கின்றான்.
(பெரியாழ்வார் திருமொழி- இரண்டாம் பத்து-6)
ஆயர்பாடியின் பெரும் அதிசயம் கிருஷ்ணன். ஆய்ச்சியர்களின் உயிர்மூச்சு அந்தக்குட்டன். யசோதைக்கு இளஞ்சிங்கம் அவன்.
நான்குபெண்கள் கூடுமிடமெல்லாம் அவனைப்பற்றிய பேச்சுத்தான்! ஒருத்தி கூறுகிறாள்: “இந்தக் கிருஷ்ணனை யசோதை தனது வளர்ப்புப்பிள்ளையாக தத்து எடுத்துக் கொண்டாளோ? அல்லது தானேதான் பெற்றெடுத்தாளோ தெரியவில்லை!” அரசல்புரசலாக அவர்கள் அறிந்தசெய்திகளுக்குக் கண்ணும் காதும் வைத்து வம்பளக்கிறார்கள் அவர்கள்! “எப்படியானால் என்ன? அவன் அடிக்கும் கூத்துக்களையெல்லாம் பொறுத்துக்கொண்டு போகிறாளே! அவனிடம் அவளுக்கு அத்தனை ஆசை! அவன் மட்டும் என்னவாம்? சிங்கக்குட்டிபோல, கருத்த சுருண்ட தலைமயிருடன் இருக்கிறான். அவன் வந்து அப்பூச்சிகாட்டும் அழகை நீ பார்த்திருக்கிறாயோ?” என அந்தக் காட்சியை மனக்கண்ணில் கண்டு திளைக்கிறாள் இன்னொருத்தி!
தத்துக் கொண்டாள் கொலோ? தானே பெற்றாள் கொலோ?
        சித்தம் அனையாள் அசோதை இளஞ்சிங்கம்
        கொத்தார் கருங்குழல் கோபாலக் கோளரி
        அத்தன் வந்து அப்பூச்சி காட்டு கின்றான்
                அம்மனே! அப்பூச்சி காட்டு கின்றான்.
(பெரியாழ்வார் திருமொழி- இரண்டாம் பத்து-8)
அடுத்ததொரு அருமையான குழந்தைப்பருவ நிகழ்வு தாய்ப்பாலருந்த அழைத்தல்- தாய்ப்பாலூட்டல்- அருந்துவித்தல்.
தாய்ப்பால் அருந்துவிப்பதனைப்பற்றி மனோத்தத்துவ ஆராய்ச்சியாளர்கள், குழந்தை உளவியல் வல்லுனர்கள் எல்லாரும் புத்தகங்களாக எழுதிக் குவித்துள்ளார்கள். மிக எளிமையாகக் கூற வேண்டுமென்றால் தாய்ப்பாலானது குழந்தைக்கு எளிதில் செரிக்கக் கூடியது. அவனுக்குத் தேவையான ஊட்டச்சத்தினைத் தரவல்லது. எப்போதும், அதாவது அவன் கையிலும் மடியிலும் தவழும் நிலையிலுள்ள குழந்தையாக இருக்கும் சமயங்களில் கிடைக்கக்கூடியது.
பின்வரும் ஒரு ஆங்கிலச் சொற்றொடர் தாய், தாய்ப்பால் ஆகியவற்றின் தொடர்பை மனித நாகரிகத்தின் வளர்ச்சி, மனிதகுலத்தின் மேம்பாடு இவற்றுடன் சம்பந்தப்படுத்தி மிகச்சுருக்கமாகக்கூறி பெரிதாக விளங்கவைக்கிறது.
Ma….   
At whose breast humanity is nourished…
In whose lap civilizations are cradled…
அன்னை- அவள் மார்பில் மனிதகுலம் தழைக்கிறது;
அவள் மடியில் நாகரிகங்கள் தொட்டிலாட்டப்படுகின்றன.
எத்தனை பொருள்நிறைந்த சொற்கள்! ஒரு ஆராய்ச்சி நூலையே எழுதி விடலாம்!
Leonardo_da_Vinci_attributed_-_Madonna_Littaதாய்ப்பால் என்பது குழந்தையின் உடலுக்கு, வளர்ச்சிக்கு எவ்வளவுக்கெவ்வளவு இன்றியமையாததாகின்றதோ அதுபோன்றதே தாய் தன் குழந்தைக்குப்பாலூட்டும் செயலும் குழந்தைக்கும் தாய்க்குமான உளரீதியிலான ஒரு தொடர்பை உண்டுபண்ணி ஆயுள்பரியந்தம் அதனைப்பிணைக்கிறது. ஃப்ராய்ட் (Freud) போல மனோதத்துவநோக்கில் ஆராயாமல், ஓரிரு வாக்கியங்களில் கூறவேண்டுமானால் பிறந்த பச்சிளம்குழந்தைக்கு அது பாதுகாப்பு உணர்வைத்தருகிறது. தாயின் கருப்பையில் இருந்தகாலத்தில் அவளுடைய இதயத்துடிப்பைக் கேட்டும் உணர்ந்தும் வளர்ந்த சிசு உலகிற்கு வந்தபின்னும், பாலருந்தும் போதினில், அன்னையில் உடல்நெருக்கத்தில் அவள் இதயத்துடிப்பை தனக்கான பாதுகாப்பாக உணருகின்றது. அன்பு, பாசம் எனும் உணர்வுகளைப் பூரணமாக உணரமுடியாத சின்னஞ்சிறுமகவு, அன்னையின் கைகளின் ஸ்பரிசத்தையும், உடலின் கதகதப்பையும் உணரும்போது அது தன்னைக்காப்பதற்கே, அமைதிப்படுத்துவதற்கே எனும் உணர்வினை மட்டும் எவ்வாறோ பெற்றுவிடுகின்றதே! அது எப்படி? சிந்திக்கவேண்டிய ஒருகருத்து.
இனி கிருஷ்ணனிடம் செல்லலாமா? இதோ யசோதை அவன் இன்னும் பாலுண்ண வரவில்லையெனக் கவலைப்படுகின்றாள். “குழந்தாய்! நீ இரவிலும் பாலுண்ணவில்லை! உச்சிப்போதாயிற்று; இன்னும் எழுந்து முலையுண்ண வரவில்லை. உன் வயிறு பசியால் ஒட்டிக்கிடக்கின்றதே! உனக்குக் கொடுக்கவேண்டும் எனும் ஆவலினால் என்முலைகளிலிருந்து பால்பெருகுகின்றதே! வா, வந்து பாலுண்ணாய்!” எனத் தன் குட்டனைக் கூப்பிடுகிறாள்.
அரவ ணையாய்! ஆயர் ஏறே!
                அம்மம் உண்ணத் துயிலெழாயே!
        இரவும் உண்ணாது உறங்கி நீபோய்,
                இன்றும் உச்சி கொண்ட தாலோ
        வரவும் காணேன் வயிறு அசைந்தாய்
                வனமுலைகள் சோர்ந்து பாயத்
        திருவு டையவாய் மடுத்துத்
                திளைத்து உதைத்துப் பருகிடாயே.
(பெரியாழ்வார் திருமொழி- இரண்டாம் பத்து)
“நீ எனக்குக் குழந்தையாக வந்து பிறந்தபின்பு , நெய், காய்ச்சினபால், தோய்த்த தயிர், வாசமிகுந்த வெண்ணெய் முதலியனவற்றை நான் கண்ணாலும் காணவில்லை! நீயே அவற்றை எல்லாம் உன் விருப்பப்படி எடுத்து உண்டுவிடுகின்றாய்! இதற்காக நான் உன்னை ஏதும் செய்ய மாட்டேன். சினம் கொள்ளாதே! முத்துப்போன்ற முறுவலுடன் வந்து என் முலைப்பாலையும் அருந்துக,” எனக் குழந்தையைக் கூப்பிடுகிறாள். ‘அவன் உண்ண வேண்டும்; நன்கு உறங்கவேண்டும்,’ எனக் குழந்தை ஒன்றின் நலனிலேயே கண்ணாக உள்ளதால் யசோதைக்கு வேறு எதுவுமே பெரிதாகத் தெரியவில்லை! அவற்றைப்பற்றி அவள் கவலைகொள்வதாகவும் தெரியவில்லை!
வைத்த நெய்யும் காய்ந்த பாலும்
                வடிதயிரும் நறுவெண்ணெயும்
        இத்தனையும் பெற்றறியேன்
                எம்பிரான் நீபிறந்த பின்னை
        எத்தனையும் செய்யப் பெற்றாய்
                ஏதும் செய்யேன் கதம்படாதே
        முத்தனைய முறுவல் செய்து
                மூக்கு உறிஞ்சி முலையுண்ணாயே!
(பெரியாழ்வார் திருமொழி- இரண்டாம் பத்து)
“ஊரிலுள்ள பிள்ளைகளுடன் சென்று விளையாடி அவர்களை அடித்துக் குத்தி விடுகிறாய் கிருஷ்ணா! அக்குழந்தைகள் தம் தாய்மார்களிடம் அழுதபடியே செல்கின்றனர். அந்தத் தாய்மார்களும் தம் மக்களின் துயர் பொறுக்க இயலாமல் என்னிடம் வந்து உன்னைப்பற்றிக் கோள்சொல்லிச் சண்டையிடுகின்றனர். அதுவே ஒரு வழக்கமாகி விட்டதுபார்! உன் தந்தை இவை ஒன்றினையும் காதில் போட்டுக்கொள்வதேயில்லை! நீயோ செய்தசெயல்களுக்காக வருத்தப்படுவதுமில்லை. உன் குறும்புகளை என்னாலும் அடக்க முடிவதில்லை!” இவ்வாறு சலித்துக் கொண்டே
“சரி சரி, நீ பாலுண்ணவா,” என்று ஒன்றுமே நடவாததுபோல அவனை அழைக்கிறாள் யசோதை.
“நீ இவ்வாறெல்லாம் செய்ததனால் நான் உன்னைப்பட்டினி கிடத்தமாட்டேன்,” எனக் கூறாமல்கூறி, குழந்தையின் பசியை ஆற்றுவது தாயின் தலையாய கடமை என்பதனை விளங்கவைக்கும் தாயன்பு இது!
தந்தம் மக்கள் அழுது சென்றால்
                தாய்மார் ஆவார் தரிக்க இல்லார்
        வந்து நின்மேல் பூசல் செய்ய
                வாழ வல்ல வாசுதேவா!
        உந்தையார் உன்திறத்தார் அல்லர்
                உன்னைநான் ஒன்றும் உரப்ப மாட்டேன்
        நந்த கோபன் அணிசிறுவா
                நான்சுரந்த முலைஉணாயே!
(பெரியாழ்வார் திருமொழி- இரண்டாம் பத்து)
இந்தக் கண்ணன் சொல்லாமல் பட்டிமேயும் கன்று; ஊர்சுற்றித் திரிவதே இவன்வேலை! தாய்க்கோ இவனுடைய பாதுகாப்பினைப்பற்றியே எப்போதும் அச்சம். தீயபுத்திக் கம்சன் ஊரிலுள்ள சிறுகுழந்தைகளையெல்லாம் கொல்ல ஆணையிட்டிருக்கிறான். இந்தக் குழந்தையோ ஒன்றுமே அறியாதவனாக காட்டிலும் மேட்டிலும் சுற்றியலைகிறான். அவன் தனியே செல்லும்போது கம்சனின் மாயவலைப்பட்டு பிடிபட்டால், இவள் உயிர்தரியாள். “தாயாரின் சொல்லைக் கேட்டு நடப்பது நல்ல குழந்தைகளுக்கு அழகல்லவா?. நீ விளையாட வெளியே போக வேண்டாம் கிருஷ்ணா. வந்து முலையுண்டு மகிழ்ந்திருப்பாயாக,” என அழைக்கிறாள் யசோதை.
தன் அணைப்பு அவனுக்குப் பாதுகாப்பு எனக்கருதும் தாயுள்ளம் எத்தனைநாள் அவனைத் தன் சிறகினுள் பொத்திப்பொத்தி வைத்துக்கொள்ள முடியும் என எண்ணுகிறது? குஞ்சுக்குச் சிறகுமுளைத்தால் பறக்கத் துடிக்காதோ? மனித உள்ளம் மட்டுமே இவ்வாறு தன் அருகிலேயே தன் குழந்தை என்றென்றும் பாதுகாப்புடன் (அவனுக்குத் தானும், தனக்கு அவனுமாக) இருக்கவேண்டும் என விழைகின்றது. ஆண்டவனின் படைப்பின் விசித்திரம் இது!
தீயபுந்திக் கஞ்சன் உன்மேல்
                சினம்உடையன் சோர்வு பார்த்து
        மாயந் தன்னால் வலைப்படுக்கில்
                வாழகில்லேன் வாசுதேவா!
        தாயார் வாய்ச்சொல் தருமம் கண்டாய்
                சாற்றிச் சொன்னேன் போக வேண்டா;
        ஆயர் பாடிக்கு அணிவிளக்கே!
                அமர்ந்து வந்து என்முலை உண்ணாயே!
(பெரியாழ்வார் திருமொழி- இரண்டாம் பத்து)
கிருஷ்ணன் கார்முகில் வண்ணன்; கண்டாரைச் சுண்டியிழுக்கும் குறுகுறு அழகு வடிவம்; மழலைமொழி. உள்ளத்தைக் கொள்ளைகொள்ளும் மாயப்புன்னகை. பார்த்துக்கொண்டிருக்கும் யசோதைக்குப் பெருமிதம் தாங்கவில்லை. ” ஆகா! இப்படிப்பட்ட குழந்தையைப் பெற்றவள் என்ன தவம் செய்தாள் என ஊர் உலகம் எல்லாம் பேசிக்கொள்கிறார்களடா என் கண்ணே!  பா சருந்த வாடா,” எனப் பூரிக்கிறாள்.
இங்கு தாயாகத் தன்னை உருவகித்துக் கொள்ளும் பெரியாழ்வார் தன் குட்டன் கிருஷ்ணன் அமர்ந்துள்ள ஸ்ரீவில்லிப்புத்தூரின் பெருமையைப் போற்றும் சொற்களும் இப்பாசுரத்தில் இடம்பெறுகின்றன. “மின்னலைப்போன்ற இடைகொண்ட பெண்களின் விரிந்தகுழலின்கண் மலர்களைமொய்க்கும் வண்டுகள் நுழைந்து  இன்னிசையை எழுப்புகின்றன. அத்தகைய வில்லிப்புத்தூரில் அமர்ந்த கிருஷ்ணா,” என அவனை ஆசையாகப் போற்றுகிறார்.
மின்னனைய நுண்ணிடையார்
                விரிகுழல் மேல்நுழைந்த வண்டு
        இன்னிசைக்கும் வில்லிபுத்தூர்
                இனிது அமர்ந்தாய்! உன்னைக் கண்டார்
        என்ன நோன்பு நோற்றாள் கொலோ!
                இவனைப் பெற்ற வயிறு உடையாள்
        என்னும் வார்த்தை எய்துவித்த
                இருடீ கேசா முலையுண்ணாயே!
(பெரியாழ்வார் திருமொழி- இரண்டாம் பத்து)
குழந்தையைப் பாலுண்ண அழைப்பதில் இவ்வாறு பல நுட்பமான கருத்துக்கள் பொதிந்துள்ளன. ஆகவே குழந்தையின் வளர்ச்சியில் இது இன்னும் ஒரு படிக்கல். தாய்க்கு மட்டுமே உரிய ஒரு இனிய அனுபவம். பெரியாழ்வார் பாடல்களைப் பயில்வோருக்கு இனிய தமிழும் பக்தியும் பாசமும் கலந்த கதம்ப மலர்மாலை.

(கிருஷ்ணலீலைகள் வளரும்)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.