இந்த வருடத்து இலக்கியப் பரிசை பேலாருஸ் நாட்டின் எழுத்தாளர் ஸ்வெட்லானா அலெக்ஸியெவிச்சுக்குக் கொடுக்க நோபெல் கமிட்டி முடிவு செய்தபோது உலக இலக்கிய மஹா சக்திகளான நாடுகளில் அதிசயிப்பு எழுந்தது. ’ஸ்வெட்லானாவா, யாரது? பேலா- என்ன நாடு அது?” என்றே ஒரு கருத்தாளர் கேட்டாராம், கடைசியாக நோபெல் பரிசை ஒரு அமெரிக்க எழுத்தாளர் வென்றது 1993 இல் (அவர் டோனி மாரிஸன்) என்பதைச் சொல்லி வருந்தியபடி.
இங்கிலிஷ் பேசும் உலகில் ஸ்வெட்லானா அலெக்ஸியெவிச் பற்றி மிகவும் கொஞ்சமாகத்தான் தெரிந்திருக்கிறது என்பதும், சில சமயங்களில், நோபெல் பரிசுக்கான தேர்வுக் குழுவினர் தகுதியுள்ளவராக இருந்தாலும், கொஞ்சமும் அறியப்படாத எழுத்தாளர்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள் என்பதும் உண்மைகளே. ஆனால் ஸ்வெட்லானாவின் எழுத்து ஏற்கனவே அவருக்கு ரஷ்ய மொழி பேசும் மக்களிடையே நிறைய ஆதரவாளர்களைச் சம்பாதித்திருக்கிறது, மத்திய யூரோப்பில் நிறைய பரிசுகளையும் பெற்றிருக்கிறது. இந்த நிலப்பகுதி மக்கள், இங்கிலிஷ் பேசும் உலகத்தினரை விட மனித இருதலைக்கொள்ளி நிலைகளையும், ஒழுக்க நிலைபாடுகளில் குழப்பங்களையும் பற்றிய யோசனைகளை நிறையப் புரிந்து வைத்திருப்பவர்கள்.
நோபெல் தேர்வுக்குழுவினர் அலெக்ஸியெவிச்சிற்கு இந்த மரியாதை செய்ததற்குக் காரணம் அவர் ஒரு தனிப் புது எழுத்து வகையையே உருவாக்கி இருக்கிறார் என்பது, இந்த வகை எழுத்து பத்திரிகையாளரின் எழுத்து முறையில் சோவியத் மற்றும் சோவியத்திற்கு அப்பாற்பட்ட காலத்து ஆன்மாவின் வரலாற்றை நுணுகி நோக்குவது. தேர்வுக்குழு, இவரது எழுத்தைச் சிலாகித்துச் சொல்லும்போது, ‘இவருடைய பல தொனி எழுத்துகள், நம் காலத்தின் பேரவதிகளுக்கும், மனோதிடத்திற்கும் எழுப்பப்பட்ட சிறப்புச் சின்னங்கள்.” என்றது.
1948 இல் (இன்று) உக்ரைனிய நகரமான இவானோ-ஃப்ரான்கிவ்ஸ்கில் பிறந்த அலெக்ஸியெவிச் ஒரு பத்திரிகை நிருபராக சோவியத் யூனியனின் வீழ்ச்சிக் காலத்தில் பணியாற்றினார். புனைவிலக்கியம் படைக்க அவருக்கு விருப்பம் எழுந்தாலும், ஏன் கதைகளை இட்டுக் கட்ட வேண்டும் என்று கேள்வி கேட்கும்படி அவர் உந்தப்பட்டதற்குக் காரணம், அவர் பேட்டி கண்டவர்களின் நினைவுகள் அத்தனை விரிவாக, ஆழமாக இருந்ததுதான்.
நாற்பது வருடங்களாக முன்னாள் சோவியத் யூனியனின் நிலப்பகுதிகளில் ஆயிரக்கணக்கான பேட்டிகளை நடத்திய இவர், தன் புத்தகங்களில் இந்த பேட்டிகளை மிக நுட்பமாகப் பின்னி எழுதுகிறவர். ‘பெரும் சொர்க்க பூமியென்ற புனைவுலகிலிருந்து எழும் குரல்களை’ப் பதிவு செய்வதாகச் சொல்கிறார். இரண்டாம் உலகப் போரில் பங்கேற்ற பெண் போர் வீரர்கள், செர்னோபில் அணு உலைப் பேரிடரில் பலியானவர்கள், ஆஃப்கனிஸ்தானில் சோவியத் படைகளில் சிக்கிப் பலியானவர்கள், சோவியத் ரஷ்யாவின் வீழ்ச்சிக்குப் பிறகு தற்கொலை செய்து கொள்ள முயன்றவர்கள் போன்றாரின் கதைகளையே இவர் எழுதுகிறார்.
அலெக்ஸியெவிச்சின் கதைமாந்தர்கள் சில நேரம் நமக்கு பெரும் ஊக்கமளிப்பவர்களாக இருக்கிறார்கள், ஆனால் அனேகமாக, பெருநாயகர்களாகவோ, புளகிதம் கொடுப்பவர்களாகவோ இல்லாது போரின் கடும் எதார்த்தத்தை விடாப்பிடிவாதத்துடன் எதிர்கொள்கிறவர்களாக துன்ப நாடக மாந்தராகவே இருக்கிறார்கள். கம்யூனிசம் பற்றிய சொப்பனங்களோடு உலவுபவர்களாக இல்லாது அன்றாட வாழ்வின் பெருஞ்சலிப்புகளோடு பொருதுபவர்களாகத்தான் இருக்கிறார்கள். இவருடைய புத்தகங்கள் படிக்கக் கடினமானவை, துன்பமானவை ஆனால் படிக்கப்பட வேண்டியவை, அதற்கு முக்கியமான மூன்று காரணங்களாவது உண்டு.
முதலாக, நம்மைச் சிறைப்பிடிக்கும் அளவுக்குத் தீவிரம் கொண்டதாக இருப்பது. செயற்கைகளை முழுதும் உரித்துப் போட்டு விட்டு, அனேக நேரம் மிக்க சோகங்களைக் கொணர்ந்தாலும், இவரது எழுத்து வலுக்கட்டாயமாக வாசகரை இழுத்துப் போகும் நேரடித்தன்மை கொண்டதாக இருக்கிறது. இவருடைய எழுத்துடைய சக்தி இவர் சொல்கிற கதைகள் நிஜமானவை என்ற நம் உணர்தலால் பன்மடங்கு கூடுகிறது.
இவர் எழுதுவதில் சில நேரம் கிட்டுகிற மனித உள் விகசிப்புகளும், பதிவு செய்கிற கதைகளும் நம் மனதில் நெடுநாட்கள் தங்கி விடுகின்றன: எலியைக் கண்டால் வீறிடுகிற பெண்கள் தொலைதூரத்தில் இலக்குகளைக் குறிதவறாமல் சுடுகிற துப்பாக்கி நிபுணர்களாக இருக்கிறார்கள்; செர்நோபில் பேரிடரிலிருந்து தப்பும்போது, புதைப்பதற்காகத் தன் அப்பாவைக் கிடத்திய ஒரு வாயிற்கதவைத் தூக்கிக் கொண்டு ஒருவர் ஓடுகிறார்; அதில் அவருடைய பிள்ளைகளின் உயரங்கள் குறிக்கப்பட்டிருக்கின்றன, அவருடைய பெண் பின்னாளில் இறக்கிறாள்; 12 ஆவது மாடி ஜன்னலிலிருந்து குதித்துத் தற்கொலை செய்து கொள்ளும் ஒரு பல்கலை ஆய்வு மாணவர் மார்க்சியமும் மதமும் என்ற தலைப்பில் தான் எழுதிய ஆய்வுக் கட்டுரையில் ‘உளறல்!! பிதற்றல்கள்!! பொய்கள்!!” என்று சிவப்புப் பென்ஸிலால் கிறுக்கியிருக்கிறார் என்று இவை போகின்றன.
சோவியத் சாம்ராஜ்யத்தின் வீழ்ச்சிக் காலத்தூடே வாழ்வது என்ன ஒரு அனுபவம் என்பது குறித்த உள்விழிப்புணர்வாக இந்த எழுத்து அமைகிறது. அந்த சாம்ராஜ்யத்தின் வீழ்ச்சியோடு அதன் மக்கள் உலகைப் புரிந்து கொள்ளப் பயன்படுத்திய மொத்த ‘அறிவு ஜீவி மேல்கட்டுமானமும்’ மொத்தமாக அழிந்தது.
இரண்டாவதாக, அ-புனைவின் இலக்கிய மதிப்பை இவரது படைப்புகள் குறிப்பிட்டுக் காட்டுகின்றன (பத்திரிகையாளர்கள் இதைப் பாராட்டவே செய்வர்.) நியு யார்க்கர் பத்திரிகையில் எழுதும் ஃபிலிப் கௌரெவிச் வெகுநாட்களாகவே, புனைவுக்கும், அபுனைவுக்கும் இடையே உள்ள வேறுபாட்டை எதிர்த்து வாதிட்டு வந்திருக்கிறார். எல்லாம் எழுத்துதான் என்பது அவர் கட்சி. ஒன்றை எதிர்மறையால் வரையறுப்பது என்பது அபத்தம். நாம் பம்ப்ளிமாஸ் அல்லாத ஒரு பழத்தை காலை உணவாக உண்டோம் என்றா சொல்கிறோம்?
மேலும் அலெக்ஸியெவிச் சொல்கிறார்போல, அ-புனைவு கலையைத் தாண்டியும் உயரக் கூடும். “கலை மனித அனுபவங்களை முழுவதுமாகச் சொல்ல இயலாதது. மக்கள் பற்றிய எத்தனையோ விஷயங்களைக் கலை புரிந்து கொள்ளத் தவறி இருக்கிறது,” என்று எழுதுகிறார் இவர்.
மூன்றாவதாக, அலெக்ஸியெவிச்சை நாம் முக்கியமாகக் கருதுவதற்கு ஒரு காரணம், இவருடைய எழுத்தின் பிரும்மாணடமான அரசியல் ஒருங்கொலிப்பு, இத்தனைக்கும் அது அனேகமாக எந்தத் தீர்ப்பையும் வழங்க முயல்வதில்லை. பல சமூகங்களில் (சோவியத் யூனியன், வ்ளாடிமிர் புடினின் ரஷ்யா, அலெக்ஸாண்டர் லுகாஷெங்கோவின் பேலாருஸ் போன்ற பகுதிகளில்) ஒரே ஒரு உண்மைதான் பொதுவில் ஒத்துக் கொள்ளப்படும் நிலை நிலவுகிறது. மாற்று அல்லது எதிர்ப்புக் குரல்கள், வேறு எதார்த்தங்களைப் பேசும் குரல்கள் சதிகாரக் குரல்கள், நாசக்குரல்கள் என்று கழுத்து நெரிக்கப்படுகின்றன. சோவியத் யூனியனில் சில சமயம் சொல்லப்பட்டது இது, ’உண்மை ஒன்றுதான், பொய்கள் பல’. ஆனால் அலெக்ஸியெவிச்சின் புத்தகங்கள் வெளிப்படுத்துவதைப் பார்த்தால் இந்தக் கருத்துக்கு எதிர்க்கருத்துதான் அனேகமாக நடப்பான உண்மை. நம் காலத்தில் உண்மை என்பது பல லட்சம் துண்டுகளாக உடைக்கப்பட்டிருக்கிறது, இந்தத் துண்டுகளை ஒருங்கிணைக்க நாம் செய்யும் முயற்சிகளால்தான் எதார்த்தம் என்பதற்கு அருகிலாவது நாம் சென்று அடைய முடியும்.
லூகாஷெங்கோவின் பேலாரூஸ் நாட்டில் அலெக்ஸியெவிச் வெகுகாலமாக ஓரங்கட்டப்பட்டு இருந்தார், பல வருடங்களாக வெளிநாடுகளில் வாழும்படி நேர்ந்திருந்தது அவருக்கு. சமீபத்தில்தான் மின்ஸ்க் நகருக்குத் திரும்பி அங்கு வசிக்கிறார். அன்பைப் பற்றி அவர் எழுதி வரும் ஒரு புத்தகத்தை முடித்துக் கொண்டிருக்கிறார். அதன் தலைப்பு ‘அதிசய மானுக்கான நிரந்தர வேட்டை’. இவரது முந்தைய படைப்புகளை எல்லாம் விட நமக்குப் புத்துயிரூட்டுவதாக இது இருக்கும் என்று தோன்றுகிறது.
“மனிதர்கள் காதலிக்கும்போதோ, சாவுக்கு அருகில் இருக்கும்போதோ எப்போதுமே அழகாகப் பேசுகிறார்கள்,” என்கிறார் அவர்.
ஃபைனான்ஷியல் டைம்ஸின் டிசம்பர் 18ஆம் தேதி இதழில் பிரசுரமான கட்டுரை.
The history of a socialist utopia – FT.com: The importance of Svetlana Alexievich by John Thornhill
இங்கிலிஷ் மூலம்: ஜான் தார்ன்ஹில், ஃபைனான்ஷியல் டைம்ஸின் உதவி ஆசிரியர்.
தமிழாக்கம்: மைத்ரேயன்