ரயிலுக்கு வெளியே

outside train

ஊருக்கு வந்து திரும்பும் போதெல்லாம் இரவு ஒன்பது அல்லது பத்து மணி ரயிலிலேயே சென்னைக்குச் செல்வது வழக்கம். இந்த முறை முயற்சித்துப் பார்ப்போமே என்று இரவு ஒரு மணி ரயிலில் சென்னைக்குத் திரும்ப முடிவு செய்தேன். இரவுலகம் என்றுமே எனக்குப் பிடித்தது. வீட்டிலிருந்து வழக்கமாகக் கிளம்புவது போல் ஏழு மணிக்கே கிளம்பி நண்பர்களுடன் சிறிது ஊர் சுற்றினேன். எப்போதும் கூடும் டீ கடையில் அமர்ந்து சில மணி நேர அரட்டைக்குப் பிறகு ரயில் நிலையத்துக்குப் பஸ் ஏறினேன். இரவு 11:30 மணிக்கு திருப்பூர் ரயில் நிலையத்தில் வந்திறங்கினேன்.
ரயில் நிலையத்தில் கூட்டமில்லை. எனது ரயிலின் பிளாட்பாரம் எதுவென்று தெரியவில்லை. நேரமிருந்தது, அதனால் முதல் பிளாட்பாரத்திலேயே அமர்ந்து புத்தகத்தை விரித்தேன். ஆங்கிலப் புத்தகம் என்பதால் அவ்வளவு சீக்கிரம் நகராது. கொசு தொல்லை வேறு. இருட்டான இடத்தில் சென்று அமர்ந்து கொண்டேன். பிளாட்பாரத்தில் யாரோ தொலைவில் இழுத்துப் போர்த்திக் கொண்டு பெரிய பெட்டிகளுக்கிடையே படுத்திருந்தார். நாய் ஒன்று நாக்கை தொங்க விட்டுக்கொண்டு ஓடியது. அதன் நாநீர் பிளாட்பாரத்தில் விழுந்து விளக்கின் ஒளி அதில் மின்னியது.
எனது செல்போன் அதிர்ந்தது. திவ்யா தான் என்று தெரியும்.
“ஹீரோ எங்க இருக்கான்” என்று அனுப்பியிருந்தாள்.
“திருப்பூர் ஸ்டேஷன்” என்று அனுப்பினேன்.
“அரை மணி நேரத்தில் அழைக்கிறேன்.” சில முத்தங்களோடு அனுப்பியிருந்தாள்.
நான் இருந்த பிளாட்பாரத்தில் ஏதோ ஒரு ரயில் வந்தது. புத்தகத்தை மூடி வைத்துவிட்டு நகரும் ரயிலையே பார்த்துக் கொண்டிருந்தேன். எங்கிருந்தோ வரும் ரயிலையும் அதில் வரும் பயணிகளையும் பார்ப்பது ஒருவகை அமைதியை தூண்டும். கண்கள் இளம் பெண்களையே எப்போதும் தேடும். யாரென்றே தெரியாத முகங்கள் சற்று நேரம் நம் முன் வந்து காட்சிப் பொருட்களாக நின்று விடைப்பெற்றுச் செல்லும். நிற்கும் நேரத்தில் அவ்வப்போது நான் பார்க்க என்னைப் பார்க்கும் பெண்கள். ஒரு சில நிமிட கிளர்ச்சி. எவ்வளவு தான் அனுபவித்தாலும் இந்தச் சிறு கிளர்ச்சியைக் கடந்து செல்ல முடியவில்லை. வழக்கம்போல் பார்வைகள் என்னைத் தொட்டு தொட்டுச் சென்றது. ரயில் நிலையத்தின் அறிவிப்புகள் சிறிது நேரம் இடைவிடாது ஒலித்தது. ரயில் மெல்ல நகர சங்கிலியால் இழுப்பட்ட துண்டுகள் போல் வெளியே நின்றிருந்த பயணிகள் ஓடி தொற்றி கொண்டார்கள்.
ரயில் சென்றவுடன் தண்டவாளத்தைச் சென்று பார்த்தேன். மீதமான சாப்பாடு பொட்டலங்கள், காய்ந்த பூச்சரங்கள், பிளாஸ்டிக் பாட்டில்கள் போன்றவற்றின் நடுவே தண்டவாளம் சிறிது தூரம் நீண்டு சென்று அழகாக வளைந்து இருளை துளைத்தது. தண்டவாளங்களின் இடுக்குகளிலிருந்து எலிகள் வெளிவந்து எதையோ தேடிக்கொண்டிருந்தன. புத்தகத்துக்குத் திரும்பச் செல்ல மனமில்லை.
பையைத் தோளில் போட்டுக் கொண்டு வெளியே சென்றேன். ரயில் நிலையத்தின் நுழைவில் இருந்த விளக்குகளின் ஒளி கண்ணைக் கூசியது. ஆனால் அங்கு யாருமே இல்லை. நிலையத்திற்கு வெளியே சின்ன கம்பி வேலியின் கீழே ஒரு கிழவன் அமர்ந்திருந்தான். தூரத்தில் படுத்திருந்த மெலிதான செம்பட்டை நிற நாயை அழைத்துக் கொண்டிருந்தான். அது இவனைத் தலையைத் தூக்கி, காதுகள் மெலிதாக அசைய பார்த்துக் கொண்டிருந்தது. உதடுகளை முத்தமிடுவது போல் குவித்துக் காற்றை உள்ளிழுத்து ஒலி எழுப்பிக் கொண்டிருந்தான். சில நிமிடங்களுக்குப் பிறகு நாய் எழுந்து மிகுந்த தயக்கத்துடன் அவனிடம் வந்தது.
மடித்துவிடப்பட்ட முழுக்கைச் சட்டையும் லுங்கியும் அணிந்திருந்தான். நாய் அருகில் வந்தவுடன் அதன் தலையைப் பிடிக்கக் கையைத் தூக்கினான். அது பயந்து பின்னே நகர்ந்தது. மீண்டும் அந்த ஒலி எழுப்பி அதைப் பக்கத்தில் அழைத்துத் தலையைப் பிடித்துத் தடவி கொடுத்தான். நாய் தலையைக் குனிந்தவாறு, கண்களை வெறித்துகொண்டு அவன் தடவல்களை வாங்கிக் கொண்டது. ஓடுவதற்குத் தயாராக இருப்பது போல் தெரிந்தது. தலையிலிருந்து வால்வரை தடவிகொடுத்து நாயை அவன் கால்களோடு சேர்த்து அணைத்துக் கொண்டான்.
நான் அங்கு நின்று பார்த்து கொண்டிருப்பதே அவனுக்குத் தெரியவில்லை. நாய் இப்போது கண்களை மூடிக்கொண்டு அவன் தடவலை சுகமாக ஏற்றுக்கொண்டது. பக்கத்திலிருந்து ஒரு சதுரமான காகித பொட்டலத்தை எடுத்தான். அதன் கயிறுகளைப் பிரித்து உள்ளிருந்து இனிப்பு ரொட்டிகளை நாய்க்குப் போடலானான். இடையில் ஒன்றிரண்டு அவனும் தின்றான். அவன் பொட்டலத்தில் ரொட்டிகள் சற்று அதிகமாகவே இருந்தது. இருவது இருபத்தைந்து ரொட்டிகள் இருந்திருக்கும். ரொட்டிகள் கீழே விழ விழ நாய் லப் லப் என்று விழுங்கியது. சிறிது நேரம் கழித்து ரொட்டி துண்டுகளைத் தன் கைகளாலேயே நாய்க்கு ஊட்டத் தொடங்கினான். அவன் கையில் வைக்க வைக்க நாய் வேக வேகமாகச் சாப்பிட்டு அவன் கையை நக்கியது. காற்று அவர்களைக் கடந்து என்மேல் மோதிசென்றது. நிரம்பிய மது வாடை.
சிகரெட்டைப் பற்ற வைத்தேன். இந்த வேடிக்கையைப் பார்த்துக் கொண்டே புகைத்தேன். இவன் பைத்தியகாரனா என்று தோன்றியது. மீதி பொட்டலத்தை எடுத்து நாயின் முன் வைத்துவிட்டான். நாய் நாலைந்து வாய்கள் தின்றுவிட்டு இவனிடம் திரும்பி இவனை நக்க தொடங்கியது. இவன் நாயின் முகத்தோடு முகம் பதித்தான். நாய்த் திமிறிக்கொண்டு ஓடியது, இரண்டு மூன்று முறை ஓடி ஓடி அவனிடம் திரும்பி வந்தது. நான் சற்று உறக்க சிரித்துவிட்டேன். அவன் என்னைக் கண்டுகொள்ளவேயில்லை. நாய் செல்ல குரலில் ஏதோ கத்திக்கொண்டே இருந்தது. வாலின் ஆட்டத்தில் கழுத்துவரை உடல் ஆடியது. அவன் தோள்களின் மேல் கால்களைத் தூக்கிவைத்தது. அவன் நாயின் கழுத்தோடு முகம் புதைத்துக் கொண்டான். ஒரு விம்மல் எழுந்தது. நாயா? அவனா? நாய் அவன் தோளில் இருந்த வலது காலை தூக்கி அவன் தலையில் ஆசிர்வதிப்பதை போன்று திரும்பத் திரும்ப வைத்தது.
வெளியே நடந்து சென்று டீ கடையில் ஒரு டீயும் தேங்காய் பன்னும் சாப்பிட்டேன். ரயில் நிலையங்களுக்குள் இருக்கும் பதார்த்தங்கள் எனக்குப் பிடிப்பதில்லை. இன்னொரு சிகரெட்டைப் பற்ற வைத்து இழுத்தேன். திரும்ப ரயில் நிலையத்துக்குள் செல்லும் போது அந்தக் கிழவன் அங்கு இல்லை. நாய் தான் மற்ற இரு நாய்களுடன் விளையாடிகொண்டிருந்தது. பிளாட்பாரத்திற்குச் சென்றேன். எதிர்த்த பிளாட்பாரத்தில் கொஞ்சம் கூட்டமிருந்தது.
உட்கார்ந்து படிக்கத் தொடங்கினேன். திவ்யாவிடமிருந்து அழைப்பு வரவேண்டிய நேரம். அவளை நினைத்தவுடன் அவளின் வாசம் வருடிச் செல்வதாகத் தோன்றியது. 12:00 மணிக்கு அடுத்த ரயிலின் வருகைக்கான அறிவிப்பு ஒலித்தது. ஆனால் வருவது எனக்கான ரயில் அல்ல.
எதிர் பிளாட்பார்மில் ரயில் வந்து நின்று சில நிமிடங்களுக்குப் பின் கிளம்பியது. ஏதோ தவறு என்று சுட்டுவது போன்ற குறியை பின்னே சுமந்துகொண்டு சென்றது. இரு இளைஞர்கள் அதீதமாகச் சிரித்துக் கொண்டு ரயில் நிலையத்துக்குள் நழைந்தார்கள். பிளாட்பாரத்தின் இறுதிக்கு சென்று பாலத்தின் மீது ஏறி மறுபக்கம் சென்றார்கள். பாலத்தின் நடுவே செல்லும் போது ஒருவன் இன்னொருவனின் தோளை பற்றி இழுத்தான். பாலத்தின ஓரத்தில் நின்று கொண்டு கீழே எதையோ காட்டிக்கொண்டிருந்தான். வேகமாக நடந்து கீழே சென்றார்கள். மறு பிளாட்பாரத்தில் நின்றிருந்த காவல் துறை ஊழியரிடம் எதையோ சொல்லி கொண்டிருந்தனர். அவர் தண்டவாளத்தைப் பார்த்தார். நானும் எதிர்பிளாட்பாரத்தில் பார்த்தேன். முதலில் ஒன்றும் தெரியவில்லை. பிறகு இருகால்கள் மட்டும் தெரிந்தது.
பையைத் தூக்கிக்கொண்டு எதிர்பிளாட்பாரத்திற்குச் சென்று அந்த இடத்தை நோக்கி நடந்தேன். அதே முழுக்கைச் சட்டை, லுங்கி. பிளாட்பாரத்திலிருந்த டீ கடையின் வெளிச்சத்தில் அருகில் சென்றதும் நன்றாகவே தெரிந்தது. அதே கிழவன் தான். குட்டையான உடல். பின் மண்டைத் தலைமயிர் சீராக சீவப்பட்டிருந்தது. கையில் உலோக பட்டை கொண்ட கடிகாரம். தலை மட்டும் தண்டவாளத்துக்குள் விழுந்திருந்தது. முகம் கீழே பார்த்தவாறு பக்கவாடாக விழுந்திருந்தமையால் சரியாகத் தெரியவில்லை. ரயில் சென்று சில நிமிடங்களே ஆகியிருந்தது. ஒருவேளை உயிர் இருக்குமோ? தலையில் மட்டுமாவது? துடித்தமைக்கான எந்தச் சலனமும் தெரியவில்லை. உடல் குப்புறகிடக்க உள்ளங்கைகள் வானை பார்த்து ஆசீர்வதிப்பது போல் உடலுடன் சேர்ந்து கிடந்தது.
பிளாட்பாரத்தின் விளிம்புக்கு வந்து பார்த்தார்கள் பயணிகள். பிறகு அருகில் வந்து சிலர் பார்த்தார்கள். மிகச் சிலர் செல்போனில் படம் எடுத்துகொண்டனர். டீ கடை ரேடியோவில் பழைய பாட்டு ஓடிகொண்டிருந்தது. அதை லேசாக முனகியவாறு டீ கடைக்காரர் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். போலிஸ் காரர்கள் மூன்று பேர் வந்தனர். அதில் ஒருவர் பெண். நல்ல உயரம், அகலமான உடல் கொண்டவள். அப்போது தான் உணர்ந்தேன் ரயில் நிலையத்தில் பெண்களே இல்லை என்று. ஆண் காவலர் இருவரும் கீழே இறங்கி சற்று நேரம் பேசிகொண்டிருந்தனர். பின் அவர்களின் பிரத்யேக தொலைபேசியில் யாருக்கோ தகவல் சொன்னார்கள்.
கிழவன் ரயில் வந்து நின்றவுடன் தான் வந்து படுத்திருக்கவேண்டும். தண்டவாளத்தின் இடதுபுறம் பிளாட்பாரம். அவன் வந்து படுத்துகொண்டதோ வலது பக்க தண்டவாளத்தில். அப்போது நிச்சயம் எதிர்பிளாட்பாரத்தில் அமர்ந்திருந்த என் முன்னே தான் நடந்து வந்து படுத்திருப்பான். நான் புத்தகம் படித்துகொண்டிருந்திருப்பேன் அல்லது ரயிலுக்குள் பார்த்துக்கொண்டிருந்திருப்பேன். இவனை பார்த்திருந்தால் என்ன செய்திருப்பேன்?
திவ்யாவிடமிருந்து எனக்கு அழைப்பு வந்தது.
“ஓய், என்ன பன்னறே” என்றேன்.
“இப்பதான் ரூமுக்கு வந்தேன். எல்லாரும் ரொம்ப நேரம் பேசிட்டிருந்தோம்.” என்றாள்.
“என்ன வாங்கின”
“ரெண்டு டாப்ஸ் வாங்கினேன்”
“வாராவாரம் ரெண்டு டிரெஸ் வாங்கலனா ஒனக்குத் தூக்கம் வராது.” என்று சொல்லி கொண்டே அவளிடம் பார்த்ததைச் சொல்வதா என்று நினைத்தேன். அதை உடனே யாரிடமாவது சொல்லவேண்டும் என்று மனம் துடித்தது.
“ஏய், இங்க ஒரு..” என்று சொல்லி நிறுத்திக்கொண்டேன்.
“என்ன அங்க?”
“ஒன்னுமில்ல, எங்க சாப்டீங்க டின்னர்” என்று கேட்டேன். “பேச்ச மாத்தாத, அங்க என்ன” என்றாள். “இங்க ஒராளு சூசைட் பண்ணிக்கிட்டான்.”
“சூசைடா! அங்க என்ன பன்னற நீ, தள்ளி போ” என்றாள்.
“சீக்கரமே டிரெயின் புடிச்சு வரவேண்டியது தானே.. இல்லனா பஸ்ல வரவேண்டியது தான. நைட் ஒரு மணிக்கு யாராவது இப்படிச் சுத்தீட்டுருப்பாங்களா. பைத்தியம். எப்பவுமே இப்டி தான் ஏதாவது செய்யவேண்டியது. சரியான லூசு” என்றாள். பேசி கொண்டே இருந்தாள். கோபித்தாள். பத்திரமாக இருக்கச் சொன்னாள். கடைசியில் கோபத்தில் போனை வைத்தாள். நான் ஒன்றுமே பேசவில்லை. போனை துண்டித்ததும் மீண்டும் அமைதி. இந்த அமைதி இதமாக இருந்தது.
மேலும் சில போலிஸ்காரர்கள் வந்தனர். தனியாகக் கையில் பிடித்துகொள்ளும் பெரிய பிளாஷ் லைட்டை ஏற்றி கையில் தூக்கி பிடித்துக்கொண்டார்கள். கீழே இறங்கி உடலை சில கோணங்களில் போட்டோ எடுத்தார்கள். இந்த முறை அந்தப் பெண் போலிஸும் கீழே இறங்கி கொண்டாள். தலையையும் கழுத்திருந்த பகுதியையும் பல கோணங்களில் மிக மிக அருகில் புகைப்படம் எடுத்தனர்.
அந்த டீ கடையில் ஒருவர் “ஒரு லைட் டீ” என்றார். திரும்பி பார்த்தேன். கடை முன் தட்டில் மெது வடைகள் இருந்தது. எனக்கு மிகவும் பிடித்தது. அடுத்த ரயிலுக்காகச் சூடாகப் போட்டு எடுத்து வைத்திருந்தார்கள். அந்தப் பெண் போலிஸ் சடலத்தின் தலையை அருகில் சென்று பார்த்தால். “அவளோ ரத்தம் வரலல, அந்த ஹைவே ஆக்ஸிடன்டு தான்.. யப்பா” என்றாள். தண்டவாள பட்டைகளின் விளிம்புகளில் மட்டும் ரத்த தேய்ப்புகள். தலைக்குக் கீழே சில துளிகள்.
அடுத்த ரயில் வரப்போவதாக வந்து சொன்னார் ரயில் நிலைய ஊழியர். மீதி புகைப்படங்களை வேகமாக எடுத்துக்கொண்டார்கள். ஒரு இளம் காண்ஸ்டபில் அந்த உடலின் கால்களைப் பற்றித் தண்டவாளத்தின் அருகிலிருந்து சிறிது பின்னே இழுத்தார். தலைக்கும் உடலுக்கும் இப்போது மூன்றடி இடைவெளி. தலையிருந்த இடத்தில் சிவப்பாகச் சதைகளும் குழாய்களும். பம்பரத்தின் ஆணி போலக் கழுத்தெழும்பு சிவப்பாக நீட்டி கொண்டிருந்தது.
ரயிலின் விளக்கு வெளிச்சம் தூரத்தில் தெரிந்தது. கீழிருந்தவர்கள் மேலே ஏறினர். பெண் போலிஸுக்கு மட்டும் ஏற முடியவில்லை. அவள் இடுப்புக்குச் சற்று உயரமாய் இருந்தது பிளாட்பாரம். அவள் கையை மேலே தூக்கினாள். பிற போலிஸ் காரர்கள் தூக்கமுடியாது என்று அவளுக்கு விளையாட்டு காட்டினர். அவள் இரு கையையும் மேலே தூக்கி குழந்தை போல் எம்பி எம்பி “தூக்கு தூக்கு” என்றால். அவளது பெரிய உடலுக்கு அந்தக் காட்சி வேடிக்கையாக இருந்தது. ரயில் சற்று அருகில் வந்தவுடன் அவளைத் தூக்கிவிட்டார்கள்.
இரும்பு நாற்றத்துடன் ரயில் மெதுவாக வந்து நின்றது. ரயில் பாகங்கள் உள்ளே விலகி அமையும் ஓசையும், அழுத்தங்களை வெளியிடும் ஓசையும் கேட்டது. டீ வியாபாரிகள் ரயிலருகே சென்று விற்க தொடங்கினார்கள். வழக்கம் போல் என் கண்கள் பெண்களைத் தேடின. என் முன்னிருந்த ரயில் பெட்டியின் ஒரு பகுதியில் விளக்கெரிந்து கொண்டிருந்தது. இரண்டு மூன்று குடும்பங்கள் பேசி சிரித்துக் கொண்டிருந்தனர். பெண்கள் கட்டியிருந்த புடவைகளைப் பார்க்கும் போது எங்கோ கல்யாணத்திற்குச் சென்று திரும்புகிறார்கள் என்று தோன்றியது. குழந்தைகள் கூட முழித்திருந்தார்கள். அவர்களுக்குச் சற்று பின்னே ஒரு இளம் ஜோடி ஒரே படுக்கையில் எதிரெதிரே அமர்ந்திருந்தனர். அவன் ஏதோ வாங்க இறங்கி ஓடினான். அவள் தூக்க விழிகளுடன் ரயில் நிலையத்தைப் பார்த்து கொண்டிருந்தாள். அவள் அழகி. அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன். அவளுக்கும் அது தெரிந்திருக்கும். ஆனால் அவளுக்குத் தெரியுமா அவள் இருக்கையின் நேர் கீழே வெட்டப்பட்ட தலை உருண்டுகிடப்பது?
கொடூரங்கள் ஆழத்தில் உறைந்திருக்க அழகிய முகம் மட்டும் வெளியே தெரிகிறது. இந்தப் பெட்டியிலிருக்கும் எவருக்கும் அது தெரியபோவதில்லை. சிரிப்புகளும், ஆழ்ந்த உறக்கங்களும், கனவுகளும், எதிர்பார்ப்புகளும், காத்திருப்புகளும் இந்த முகங்களில் தெரிகிறது. ஈவிரக்கமின்றி வெட்டி செல்லும் கனத்த இரும்பு சக்கரங்களில் இருந்தும், பலிபீடமாய் ரத்தம் தோய்ந்து பளபளத்து சிரிக்கும் தண்டவாளங்களிலிருந்தும், உருண்டுகிடக்கும் தலையை யாருக்காகவோ ஏந்தி நிற்கும் கரடுமுரடான கற்களிலிருந்தும் பிரித்து இந்த ரயில் இவர்களை உள்ளங்கையின் கதகதப்போடு வைத்திருக்கிறது. கருவறைக்குள் இருக்கும் சிசு போல இவர்களைத் தன்னகத்தே திளைக்கவிட்டிருக்கிறது. ஊதி ஊதி டீ குடிக்கும் இந்தக் கிழவிக்கு எதுவும் தெரியபோவதில்லை. தொப்பையை மல்லாத்தி தூங்கும் இந்தச் சொட்டை மண்டைக்கு எதுவும் தெரியபோவதில்லை. ரயிலுக்குள் தங்களின் இடங்களைப் போட்டி போட்டுப் பிடித்துக்கொண்டு அடுத்த நிறுத்தம் எங்கே? எப்போது? என்று ஜன்னலின் வழியே அனைத்தையும் கண்டுகளிப்பவர்கள் இவர்கள். வயிற்றுக்கும் வாய்க்கும் தீனிகளை வாங்கி நிரப்பிக்கொண்டு காலுக்கடியில் என்றுமே பார்க்காமல் மேலே மேலே என்று கனவினை எம்பி எம்பி பிடிக்க ஏக்கபடுபவர்கள்.
ரயில் கிளம்பி சென்றது. அடுத்த ரயிலில் ஏறி நானும் சென்றேன். நான் போகும் வரை உடலை எடுக்கவில்லை. அடுத்த நாள் காலை சென்னையில் பேசின் பிரிட்ஜ் ஜங்ஷனில் தான் விழிப்பு வந்தது. சில மணி நேரத்தூக்கம் என்றாலும் ஆழமானது. அனைவரும் பெட்டிகளை எடுத்துக்கொண்டு இறங்குவதற்குத் தயாராக இருந்தார்கள். பெண்கள் முகங்களைக் கழுவி தலையைச் சீவி ஊதிய கண்ணங்களுடனும் சிவந்த விழிகளுடனும் அமர்ந்திருந்தார்கள். நான் ஸ்டேஷனில் இருந்து ஆட்டோ பிடித்து அவளது ஹாஸ்டலுக்குச் சென்றேன்.
நான் ஆட்டோவிலேயே அமர்ந்திருந்தேன். அவள் கீழிறங்கி வந்தாள். ஈர மயிர்கள் காதின் முன் சுருண்டிருந்தது. ஒப்பனையில்லா முகம். மார்பில் துப்பட்டா இல்லை. வந்ததும் கையில் சுளீர் என்று அடித்தாள். “அடுத்தத் தடவ ஒழுங்கா நேரமே வந்து சேரனும்” என்றாள். நான் சிரித்தேன். “அங்க என்ன ஆச்சு தெரியுமா” என்றேன். “அய்யோ வேணாம்” என்று காதை மூடிக்கொண்டாள். ஆம், எனக்கும் இவளுக்குச் சொல்ல வேண்டும் என்று தோன்றவில்லை. இவளின் மிருதுவான கண்ணங்களையும் அப்பழுக்கற்ற முகத்தையும் பார்க்கும் போது மல்லிகை பூ வாங்கி கொடுத்து கோவிலுக்கு அழைத்துச் செல்லவேண்டும் என்று தோன்றியது. “நான் இன்னைக்கு ஃபாக்டிரிக்கு போனும் வர லேட்டாகும். இன்னைக்குப் பாக்க முடியாது. ஓகேவா” என்றாள். நான் புன்னகைத்து அவள் கைகளைப் பிடித்து வருடினேன். தலையைச் சில நொடிகள் குணிந்திருந்துவிட்டு “நேரமாச்சுப் பை” என்று உள்ளே ஓடினாள்.
பயணம் செய்துவிட்டு வரும் நாட்கள் எல்லாம் உடல் சூடு ஏறி இருக்கும். கண்கள் எரியும். அலுவலகம் செல்லும் வழியில் இளநீர் கடையில் இரண்டு இளநீர்களைக் குடித்துவிட்டு சென்றேன். காலை மின்னஞ்சல்களைப் பார்த்துவிட்டு வழக்கம் போல் இணையத்தில் ஒரு உலா சென்றுவிட்டு வேலை செய்யலாம் என்று நினைத்தபோது எனக்குப் பின்னால் யாரோ நின்று தாளமிடும் ஒலி கேட்டது. மேசையிலிருந்து வாலட்டை எடுத்துக்கொண்டு “போலாம்” என்றேன் தீபக்கிடம். அலுவலகத்துக்கு அருகிருந்த டீ கடையில் டீ வாங்கிக் கொண்டு சென்னையின் கட்டட நெரிசலில் தப்பிப் பிழைத்துக் கைகள் பல வெட்டுப்பட்ட அந்த மரத்தின் கீழ் நின்று புகைத்தோம். தீபக்கிடம் சொல்லலாமா என்றெல்லாம் நான் யோசிக்கவில்லை. பார்த்ததை அப்படியே இவனிடம் சொல்லவேண்டும் போலிருந்தது. இதை இன்னும் வாழ்நாள் எல்லாம் செய்துகொண்டிருப்பேன் என்று தோன்றியது. வாழ்வின் சில தருணங்கள் இப்படித் தான் அமைகிறது.
கண்ணாடி அணிந்து நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு வாயின் விளிம்புகளில் சிகரெட்டை வைத்து அவனுக்கென்ற பாணியில் புகைத்துக் கொண்டிருந்தான்.
“மச்சி.. நேத்து திருப்பூர் ஸ்டேஷ்ன்ல ஒரு சூசைடு டா” என்றேன்.
“யாரு பொண்ணா பையனா.. “ என்றான். “ஒரு கிழவன்”.
“பேப்பர்ல படிச்சயா..” என்றான். “இல்ல, அப்போ நான் அங்க இருந்தேன்”
அவன் நிற்கும் நிலைச் சற்று மாறியது.
“நேத்து நைட்டு ஒரு மணி டிரெயினுல தான் நான் வந்தேன். 12:30 மணிக்குத் தண்டவாளத்துல ஒரு பாடி கெடக்கு”
அவன் முகத்தில் ஆர்வமும் ஆச்சரியமும் ஒன்று சேர அருவருப்பு அவன் கண்களில் தெரிந்தது.
“ரத்தமெ அதிகமா போகல மச்சி. பாடி ஆடல அசையல. தல மட்டும் டிராக்குக்குள்ள” எனும் போது அவன் கீழ்த்தாடையைப் பின்னிழுத்து ஒவ்வாமையை வெளிக்காட்டினான். நான் கண்ட ஒவ்வொரு சிறு சிறு விஷயங்களையும் அவனிடம் சொல்லவேண்டும் என்று தோன்றியது.
“தாடைலருந்து காது வரைக்கும் கிராஸா கட்டாயிருக்கு. டிராக்குல ஒரு ரெண்டடிக்கு சிவப்பா ரத்தம் தேஞ்சுருக்கு. கீழ கொஞ்சமா ரத்தம் சிதறியிருக்கு. அவ்ளோதான்…” அவன் சிகரெட்டை தூக்கி வீசிவிட்டான். அதற்கு மேல் அவன் டீயை குடிக்கவில்லை.
“அடுத்த டிரெயினு வருதுனு ஒரு போலிஸ்காரன் என்ன பன்னான் தெரியுமா? சங்கடமே படாம அந்தப் பாடி காலப் புடிச்சு பின்னால இழுத்தான். அப்பத்தான் பாத்தேன் அந்தக் கழுத்த. சதையிருக்குல்ல..” அவன் என் கையைப் பிடித்தான். “போதும்டா.. வீட்டுக்கு போயி சாப்ட, தூங்க வேண்டாமா? வா..” என்றான்.
எனக்குத் தெரியும் இவன் இவ்வளவு தான் தாங்குவான் என்று. அவனுக்குச் சொல்வதற்கென்று மனதில் வைத்திருந்த கடைசிக் காட்சி அப்படியே மனதிலிருந்தது. அது என் இருக்கைக்கு வந்து அமர்ந்தவுடன் மனதில் ஓட தொடங்கியது. அப்போது எனக்கே அதிர்ச்சியாகத் தான் இருந்தது.
இறந்தவனின் முகம் தெரியவில்லை. ஒரு போலிஸ் கீழேயிருந்த பிளாஸ்டிக் பையை எடுத்துக் கையில் மாட்டிக்கொண்டு அந்தத் தலையைத் தூக்கி முன்னே காட்டினார். சின்ன தலை தான். சூம்பிய மட்டையுரிக்காத தேங்காய் போல. வலப்பக்க மயிர் மட்டும் லேசாய்க் கலைந்திருந்நது. வாயருகில் ஆழமான ஒரு கீரல். ஒரு கண் மூடியிருக்க இன்னொன்று பாதி விழித்திருந்தது. வாய் லேசாகத் திறந்திருந்தது. நாக்கு அதில் உருளையாகக் குவிந்திருந்தது.
டீ கடை காரரிடம் ஆள் அடையாளம் தெரிகிறதா என்று கேட்டனர். அவர் டீ கிளாஸ் கழுவிக்கொண்டே மேலே எக்கி பார்த்தார். தெளிவாகத் தெரியவில்லை என்று அருகில் வந்து பார்த்துவிட்டு “தெரியும். இந்த ஆளு இங்கயே தான் சுத்திகிட்டு இருப்பான்” என்று சொல்லிவிட்டு திரும்பி சென்று டீ கிளாஸ் கழுவ ஆரம்பித்தார்.
அந்த முகத்தைக் காவலர்கள் சில புகைப்படம் எடுத்துக்கொண்டனர். பயணிகள் சிலர் கைகளைப் பின்னே கட்டிக்கொண்டு அருகில் வந்து பார்த்தனர். நானும் பார்த்துகொண்டிருந்தேன். கையில் மெதுவடையுடன்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.