யாப்பில் தோய்ந்த மொழியாக்கம்

Srimadh_Bhagavat_Gita_Tamil_Slogam_Raa_Padmanaban_Mahabharatham

 

ரா. பத்மநாபன் அவர்களின் பகவத் கீதை பற்றிய ஓர் அறிமுகம்

முதலில் இந்த பகவத் கீதை மொழியாக்க நூலினை எனக்குத் தந்த திரு நாஞ்சில் நாடன் அவர்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும். நான் ஓரளவிற்கு பகவத்கீதையைத் தமிழில் தந்த ஒரு சில நூல்களைப் படித்துள்ளேன். அவற்றில் பெரும்பாலானவை உரைநடையில் மொழியாக்கம் செய்யப்பட்டவை. அவற்றின் முக்கிய நோக்கம் கீதையின் பொருளை நாம் உய்த்துணர வேண்டும் என்பதே. சிலவற்றில் அதற்காக சில குட்டிக்கதைகளும் இருந்தன. கீதையில் உள்ள ஸ்லோகங்களின் விரிவுரை சிலவற்றில் மிக விளக்கமாகவே இருந்தது. இலக்கணமின்றி இசைப்பாடல்களின் வழி ஒரு சில மொழிபெயர்ப்புகளும் படித்திருக்கிறேன்.
திரு ரா.பத்மநாபனின் மொழியாக்கம் முழுக்க முழுக்க ஸ்லோகங்களின் பொருளை அவற்றின் சுவை குன்றாமல் யாப்பில் அமைந்த செய்யுள்களின் வழியில் கட்டமைக்கப்பட்டுள்ளது. அறுசீர் மற்றும் எண்சீர் விருத்தங்களையே அவர் பயன்படுத்தி உள்ளார். கீதையில் உள்ள பெயர்களையும், ஆன்மிகம் மற்றும் தத்துவக் கருத்துகளையும் யாப்பில் அடக்கிச் சொல்வது எளிதான செயலன்று. சரியான யாப்புப் பயிற்சியும், நிறைந்த சொல்வளமும் வாய்க்கப் பெற்றவர்க்கே இது கைகூடும். இவை இரண்டிலும் துறைபோகிய திரு ரா. பத்மநாபன் வெற்றி பெற்றதோடு, நமக்கும் அரிய ஒரு பெரிய இலக்கியக் கருவூலமே தந்துள்ளார் என்று துணிந்து கூறலாம்.
நாஞ்சில் நாடனிடம் கம்பனைப் பற்றி விரிவாகப் பேசிக் கொண்டிருக்கும் போதெல்லாம் அவர் ரா. பத்மநாபன் பற்றிக் குறிப்பிடாமல் இருந்ததில்லை. மும்பையில் இருந்தபோது ரா.ப. அவர்களிடம் மூன்றரை ஆண்டுகள் நாஞ்சில் கம்பராமாயணத்தை எழுத்தெண்ணிப் பாடம் கேட்டவர். இன்றக்கும் நாஞ்சிலின் எழுத்தில் அவ்வப்போது கம்பனின் வரிகள் மின்னுகின்றன என்றால் அதற்கு ரா.ப. அவர்களே காரணம். தமிழ் நாட்டின் முக்கியமான கம்பன் மேடைகளில் நாஞ்சில் மேடை ஏறி இருப்பதற்கும் அவரே காரணம்.
“எனதிந்த 67 ஆண்டு வாழ்க்கையில் பல நதிகளில் நீரள்ளிப் பருகியிருக்கிறேன். நீரள்ளிப் பருகும் நிலையில் நதிகள் சுத்தமாகவும், பெருக்கெடுத்தும், உயிர்த் தமிழ் வளர்ப்பதாயும் இருந்தன. அவற்றுள் பெருநதி   ரா. பத்மநாபன் அவர்கள்” என்று நாஞ்சில் நாடன் எழுதுவதிலிருந்தே ரா.ப. அவர்களின் முக்கியத்துவத்தை நாம் உணரலாம்.
எல்லாவற்றிற்கும் சேர்த்து குருவிற்கு ஒரு சீடன் செய்யும் நன்றியாக இந்நூலைக் கொண்டு வருவதற்கு முக்கியமான காரண கர்த்தாவாக நாஞ்சில் இருந்திருக்கிறார் என்பது போற்றற்குரியது.
கற்கண்டுக் கட்டியை எங்கு கிள்ளினாலும் தித்தித்திருக்கும்தான். அதுபோல இந்நூலில் நான் படிக்கும்போது உள்ளம் பறிகொடுத்து ஆழ்ந்த ஒரு சில இடங்களை அறிமுகப்படுத்துகிறேன்.
கீதையில் முதலில் தியான ஸ்லோகங்கள் என்று 14 உள்ளன. அவற்றில் முதல் ஸ்லோகம் எந்தச் சடங்கு செய்தாலும் எல்லாரும் சொல்லும் “ஸூக்லாம்—பரதரம் விஷ்ணும் ஸஸிவர்ணம்” என்று தொடங்குவதாகும். இதன் பொருள் பலபேர்க்கும் தெரியாது. எந்த ஸ்லோகம் அல்லது மந்திரத்தைத்தான் நாம் பொருள் தெரிந்து, புரிந்து சொல்கிறோம். தெரியாவிடினும் புரிந்து கொள்ளவாவது முயல்கிறோமா என்றால் இல்லையே! சடங்கைச் சரிவரச் செய்வதற்காகச் சொல்கிறார்கள், நாமும் திருப்பிச் சொல்கிறோம். அவ்வளவுதான். விரைவாய் ஓடும் பொருள் வயப்பட்ட உலகில் இதுவே பெரிய செயல்தான்.
இந்த ஸ்லோகத்தை அருமையாகத் தந்துள்ளார். பாருங்கள் இதோ:

    ”வெண்ணாடை தரித்தோன்; விஷ்ணு;
                  வெண்மதிவண் ணன்;நாற் புயத்தன்;
            தண்நகை,மு கனைச்சிந் திப்பீர்!
                  சகலஇடர் களும்நீங் கிடற்கே”

மிக எளிய சொற்களில் தெளிவாகப் பொருள் விளங்கும் வண்ணம் இதை அவர் அமைத்திருக்கிறார்.
9-ஆம் ஸ்லோகம் கீதையை ஒரு பாலாக உவமை காட்டுகிறது. “கீதாம்ருதம்” என்று சொல்லப்படுகிறது. அந்தப் பாலைக் கறக்கும் பசுக்களாக வேதங்கள் காட்டப்படுகின்றன. அந்த அமுதப் பாலைக் கறப்பவன்தான் கிருஷ்ணன்; கிருஷ்ணன் சொல்லும் அந்தக் கீதையைச் செவிமடுக்கும் அருச்சுனன்தான் அந்தப் பசுவின் கன்று; கன்று குடித்த பிறகும் மிகுந்த பாலைக் குடிப்பவர்கள் பேரறிஞர்கள். எண்சீர் விருத்தத்தில் அமைந்த மொழிபெயர்ப்புச் செய்யுள் இதோ:

”மறைமுடிகள் எலாம்பசுவாம்; பாலைக் கறப்போன்
                  மாண்கிருஷ்ணன்; பார்த்தன்சீர்க் கன்று; குடிப்போர்,
            நிறைமிகுந்த பேரறிஞர்; கீதை என்னும்
                  அமுதமோ நிகரற்ற பாலாம்; மாதோ”

இப்பாடலில் உள்ள ”மாதோ’ என்பது அசைச்சொல்லாகும். அதற்குப் பொருள் கிடையாது. செய்யுளில் இலக்கண அமைதிக்காக இடப்படுவது இது. வடமொழி ஸ்லோகத்தில் உள்ள ‘மஹத்’ என்பதை ரா.ப. இப்படி மொழியாக்கம் செய்துள்ளார்.
கண்ணனிடம் அருச்சுனன் “ மனிதன் ஏன் பாவம் செய்கிறான்? என்று கேட்கிறான். அதற்குக் கண்ணன் அவனுக்கு அறிவு உள்ளது. ஆனால் அது ஆசையால் மறைக்கப்பட்டு விடுகிறது. இதைச் சொல்லும்போது கண்ணன் சில உவமைகளும் கூறுகிறான். அதாவது ”நெருப்பானது புகையால் மறைக்கப்படுவதுபோல கண்ணாடியானது அழுக்கால் மறைக்கப்படுவது போல, கருப்பமானது கருப்பையால் மறைக்கப்படுவது போல அறிவானது ஆசையால் மறைக்கப்படுகிறது” என்கிறான்.

     ”புகையால்,தீ  அழுக்கால் ஆடி,
                  கருப்பையால் கருப்பம் போல
            புகுமாசை யாலே ஞானம்
                  மறைத்தலுறும், புகழார் பார்த்தா”
[3-ஆம் அத்தியாயம்—39]

 
கீதையின் முக்கியமான ஸ்லோகம் அனைவர்க்கும் தெரிந்ததாகும். இது பலரால் எடுத்தாளப்பட்டது.

”பரித்ராணாய ஸாதூ நாம்
      விநாஸாய சதுஷ்க்ருதாம்!
      தர்மஸம்ஸ்தாபநார்தாய
      ஸம்பவாமி யுகே யுகே”      
[நான்காம் அத்தியாயம்—9]

இதன் தமிழாக்கம் எளிமையாக இருக்கிறது.

     ”நல்லோரைக் காத்தி டற்கும்’
                  தீயோரை நசித்தி டற்கும்
            நல்லறத்தை நிலைநாட் டற்கும்
                  நானுதிப்பேன் ஒவ்வோர் யுகமும்”

இன்றைக்கு யோகம் பயில்வது என்பது பரவலாகக் காணப்படுகிறது. நம் உடலுக்கு வரும் பல நோய்களுக்கு அதுவே மருந்து என்றும் சொல்கிறார்கள். அது மனத்தை ஒழுங்காய் ஒரே புள்ளியில் குவிப்பதோடு உடலுக்கும் பயிற்சி அளிக்கிறது. கீதையில் அருச்சுனனிடம் கண்ணன் யோகம் செய்வது எப்படி என்றும் கூறுகின்றான்.

உடல்,தலையை, கழுத்தைச் சமமாய்
                  ஓரசைவும் இன்றி, நிறுத்தி
            திடமாய்த்தன் மூக்கின் நுனியை
                  உறநோக்கி, திசைபார்க் காதே    
[ஆறாவது அத்தியாயம்-13]

ஆண்டாள் நாச்சியார் “தூயோமாய் வந்து நாம்” என்று பாடுவோர். இங்கு குறிப்பிடப்படுவது உடல் தூய்மையன்று. உள்ளத் தூய்மையாகும். உள்ளம் தூய்மையாயிருந்து நாம் எதை அவனுக்குச் சமர்ப்பித்தாலும் கண்ணன் அதை ஏற்றுக்கொள்வான். வராக அவதாரத்தில் பூமிப்பிராட்டியைத் தன் பருத்த கோரைப் பற்களுக்கிடையில் தூக்கிக்கொண்டு வரும்போது உள்ளன்போடு, ”சாதாரண ஒரு திருத்துழாய் இலையை எனக்கு அளித்தாலும் நான் ஏற்றுக் கொள்வேன்”  என்றார் பெருமாள். கீதையிலும் தூய உள்ளத்துடன் நிலைத்த பக்தியுடன் அளிக்கும் எதையும் ஏற்பேன் என்கிறார் கண்ணன்.

”இலை,பூ,நீர்  கனியோ  அன்பால்
                  இடுவானின், தூய  உள்ள
            நிலைபக்தி  யுடனாய்  இட்ட
அதைநேயா!  புசிக்கின்றேன்,யான்”
[ஒன்பதாம்அத்தியாயம்-26]

வைணவ சமயத்தின் அடிப்படைக் கொள்கையே இறைவனை அடைவதற்கு இன, சாதி, பால் வேற்றுமைகள் இல்லை என்பதேயாகும். ஆனால் எனக்கொன்றும் இல்லை என்று பற்றறுத்து அவனே எல்லாம் என்று அவனைச் சரண்புக வேண்டும் அதுவே முக்கியமானது. அதைத்தான் இப்பாடலில் கண்ணன் கூறுகிறார்.

”பெண்டிரொடு, வைசியர், தாழ்ந்த
                  பிறவியரும், கூட என்னை
            அண்டிச்ச ரணுற்று, மேலாம்
                  அருங்கதியை அடைவார் திடமே”
[ஒன்பதாம் அத்தியாயம்—32]

இறைவனுக்கு நிகராக ஏப்பொருளையும் உவமை கூற இயலாது. ஏனெனில் அவன் ஒப்புவமை இல்லாதவன். அதனால்தான் அவனை ‘ஒப்பிலியப்பன்’ என்கிறோம். ஆனால் நாம் அதனை உப்பிலியப்பன் என்றாக்கி அவனுக்கு உப்பில்லாதவற்றை ஒரு திவ்யதேசத்தில் நிவேதனமாக அளிக்கிறோம். பாவம் அவன்! பிற பொருள்களின் உயர்வுகள் எல்லாம் தன் முன்னால் அற்றுப் போகும்படியான பெருமை கொண்டவன் அவன். அதனால்தான் நம்மாழ்வார்,
“உயர்வற உயர்நலம் உடையவன் அவனவன்”
என்கிறார். கீதையில் தம்மைப்பற்றிச் சொல்லும்போதும் கண்ணன், தன் தெய்வத் திறமையை விளக்கும் ஆற்றல் எதற்கும் இல்லை. ஏனெனில் எம் சிறப்பிற்கு எல்லையே இல்லை என்கிறார். மேலும் எந்தெந்தப் பொருள்களில் உயர்வு, அழகு, வாய்மை, திறமை, வலிமை, பெருமை ஆகியன உள்ளதோ அவை எல்லாம் என்னிடமிருந்து தோன்றியவை; அதனால் அவற்றை என் பிறவியென்று உணரவேண்டும் என்கிறார். இதோ பாடல்கள்: [பத்தாம் அத்தியாயம்—40. 41]

  ”எனதுதெய்வத் திறலை விளக்கும்
                  சிறப்பிற்கெல் லைஇலை; இங்கே
            எனதுசீர், அவற்றின் விரிவும்
                  இயம்பலுற்ற குறிப்பாய் இங்ஙன்.”

 

            எந்தெந்தப் பொருட்கள் மேன்மை,
                  எழில்,உண்மை, திறல்,சீர் உடைய
            அந்தந்தப், பொருள்,என் தேசின்
                  அமிசத்தில் உதித்த; அறிக”

கீதையின் 11-ஆம் அத்தியாயம் முக்கியமான ஒன்று; அதில்தான் கண்ணன் அருச்சுனனுக்கு தன் பேருருவான விஸ்வரூபத்தைக் காட்டுகிறான். அதனால்தான் இந்த அத்தியாயத்திற்கே ”விஸ்வரூப தரிசன யோகம்” என்று பெயர்.
அருச்சுனன், கண்ணனிடம் ”‘பிரபு, உனது பெரிய உருவை காணக் கூடிய பெருமை எனக்கு உள்ளதென்று கருதினால், தாங்கள் அரிய நலம் உள்ள தோற்றம் இறுதி இல்லாத அந்த வடிவத்தை எனக்குக் காட்டி அருள்க” என்று வேண்டுகிறான்.

    ”பிரபு!அது வென்னால் காணும்
                  பெற்றிஎனக் கருதின், உன்றன்
            அருநலமார் ஈறில் வடிவை
                  யோகேச! காட்டி அருள்க” [ 4 ]

“பார்த்தனே! என் உண்மையான தெய்வ உருவைப் பலவகையான, பல வண்ணமுள்ள, பலவடிவமுள்ள, பெருமை சீர் பெற்றதை, நூறாகவும், இன்னும் ஆயிரமாகவும் திகழும்படி நீ காண்பாயாக” என்று கண்ணன் அருச்சுனனிடம் கூறித் தன் பேருருவைக் காட்டும் பாடல்கள் இவை:

”பார்த்தா!என் தெய்வ இயலார்
                  பலவகை, பல்வண, பல்வடிவார்
            சீர்உருவை, நூறாய் இன்னும்
                  ஆயிரமாய் திகழப் பாராய்!      [ 5 ]

 

”பலமுகங்கள், கண்கள் படைத்த;
பலவியப்பார் காட்சி நிறைந்த;
பலதெய்வ அணிகள் பூண்ட;
பலதெய்வப் படைகள் ஏற்ற”      [ 11 ]

 

  தெய்வமாலை ஆடை பூண்ட;
                  தெய்வமணிச் சாந்தம் அணிந்த;
            மொய்த்தபல விந்தை நிறைந்த
                  அளவில்லா; எங்கும் முகமாம்”    [ 12 ]

கிருஷ்ணனின் பேருருவைக் கண்டவுடன் அருச்சுனன் பெருமானைப் பலவாறாய்ப் போற்றித் துதிக்கிறான். சுமார் 16 பாடல்கள் அருச்சுனனின் துதிகளாக வருகின்றன. அவற்றைத் திருக்கோயில்களில் தமிழ் அருச்சனைக்குப் பயன் படுத்திக் கொள்ளலாம். அந்த அளவுக்கு அவை இறைவனின் பெருமைகளைப் போற்றுகின்றன. சான்றுக்கு ஒரு பாடல்:

    ஆதிநடு முடிவுமிலோய்! வரம்பில் திறலோய்!
                  எண்கடந்த அரும்புயத்தோய்! திங்கட் கதிரார்
            சோதிவிழி யோய்!ஒளித்தீ வாயோய்! தன்னின்
                  சுடரொளியால் உலகைஎரி உனைக்காண் கின்றேன்

இந்தப் பேருருவைப் பார்த்தவுடன் நாம் இந்தப் பெருமானின் பெருமை தெரியாமல் என்னென்னவெல்லாம் பேசியிருக்கிறோம் என்றெண்ணிய பார்த்தன் கண்ணனிடம் பேசுகிறான்.  எளிமையான பாடல்கள் இதோ;

  ”உன்இந்தப் பெருமைதமை அறியாமே, என்னால்
                  ஓர்கவனம் இன்றியோ, அன்புரிமை யாலோ,
            என்நண்பன் எனநினைத்தோ, யான்”அடே!கிருஷ்ணா!
                  ஏ!யாதவா! நண்பா! எனத் துடுக்கால் சொன்ன.    [ 41]

 

     இன்னும்நம் கேளி,படுக் கை,உண்கைதம் வேளை
                  தனியிலோ, குழுவிலோ, விளையாடாய் எதிலும்
            என்னாலே இகழ்வுற்றாய், அவற்றிற்கா, எல்லை
                  இல்சீரோய்! எனைமன்னித் தருள்!வேண்டி நின்றேன்.”      [42]

பன்னிரண்டாவது அத்தியாயம் பக்தியைப் பற்றிச் சொல்கிறது. இந்த அத்தியாயத்தின் பெயரே பக்தியோகம் என்பதுதான். உண்மையான பக்திக்கு இலக்கணமாக்க் கண்ணன் கூறுவது எல்லாவற்றையும் விட வேண்டும் என்பதுதான். ஏனெனில் உண்மையான பக்தன் தன்னை முழுமையாக பகவானிடத்தில் ஒப்படைத்துவிடுகிறான். அவனுக்கு என்று எந்தத் தனிப்பட்ட எண்ணங்கள் ஏதுமில்லை. அவன் மனத்தில் மகிழ்ச்சி, துயரம், இன்பம், துன்பம், நல்லன, தீயன, பொருள்களின் மீது ஆசை எதுவுமே இல்லை. முழுக்க முழுக்க அவன் பற்றற்றவனாகி விடுகிறான். அவன் மிக உயர்ந்தவனாகி பெருமானுக்கு இனியவனாகி விடுகிறான். பகவானே இதை இராமாவதாரத்தில் காட்டுவான்.
முதல் நாள் இராமனிடம் ”நாளை உனக்கு முடி சூட்டி விழா” என்று கூறப்படுகிறது. ஆனால் மறுநாளோ ”நீ போய்த் தாழிரும் சடைகள் தாங்கி, பூழி வெங்கானம் நண்ணிப் புண்ணியத் துறைகள் ஆடி, ஏழிரண்டாடில் வா” வென்று கூறப்படுகிறது. முதல் நாள் ”முடி நீ சூடப் போகிறாய்” என்று சொன்ன போதும் அவன் மகிழ்ச்சி அடையவில்லை.  மறுநாள் ”முடி இல்லை, நீ காடேகு” என்று சொன்னபோதும் அவன் துயரம் கொள்ளவில்லை. அவன் முகம் எக்காலத்தும் மாறாத ”சித்திரத்தில் அலர்ந்த செந்தாமரை முகத்தை ஒத்திருந்தது” என்று கம்பன் கூறுவான். அப்படிப்பட்டவனே பக்தன் என்று இந்தப் பாடல் கூறுகிறது.

   ”எவன்,மகிழ்ச்சி, வெறுப்பு, துயரம்
                  இலான்,ஆசை, நல்ல தீய
            எவற்றையுமே விட்டோன், பக்தன்
                  அவன்எனக்கு மிகவும் இனியன்”            [ 17 ]

நம் உள்ளே இருக்கும் ஆன்மாதான் மிகவும் முக்கியமானது. அதற்கு அழிவு செய்யாமல் காத்து வர வேண்டும். அது தன் இயல்பான குணத்தில்தான் ஆரம்பத்தில் இருக்கிறது. நாம்தான் அதை அதைத் தன் வழியில் நல்ல செல்ல விடாமல் அதை அழிக்கும்வகையில் செயல்படுத்துகிறோம்.. எப்படியெனில் ஆன்மாவை அழிக்க நம் உள்ளே மூண்று புகுந்தால் போதும்; அவையே ஆசை, கோபம், பொறாமை ஆகியனவாம். எனவே இவை மூன்றையும் நாம் நம்மிடம் சேராமல் காக்க வேண்டும். அவற்றைப் புறம் தள்ள வேண்டும் என்று பகவான் அருச்சுனனுக்கு உபதேசிக்கிறான்.

   ”ஆன்மஅழி வுசெய்இந் நரக
            வாயில்,ஆ சை,சினம் லோபம்        
       என்றமூன்று டைத்தாம்; எனவே
            இம்மூன்றை யும்தள் ளவேண்டும்”   
[பதினாறாவது அத்தியாயம்]—21]

திருப்பாவையின் இறுதிப் பகுதிப் பாசுரங்கள் எல்லாமே நாம் எல்லாவற்றையும் விட்டு விட்டு அவனுக்கே சரண் புக வேண்டும் என்றுதான் பேசுகின்றன.

  ”என்றென்றும் உன் சேவகமே ஏற்றிப் பறைகொள்வான்
      இன்றுயாம் வந்தோம்”

என்றும்
   ”உன்னை அருத்தித்து வந்தோம்”   என்றும்
 

  ”எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உந்தன்னோடு
      உற்றோமே நாமாவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம்
      மற்றை நம் காமங்கள் மாற்று”

என்றும்தான் ஆண்டாள் நாச்சியார் அருளிச் செய்கின்றார்.
இதையே தான் கீதையிலும் கண்ணன் அருச்சுனனிடம் உபதேசம் செய்கின்றார். அதன் இறுதிப் பகுதியில். “அருச்சுனா! நான் உனக்கு நன்மையானவையே உரைக்கின்றேன். நீ முழுக்க என்னிடம் உன் மனத்தைச் செலுத்து; எனக்கு அன்பனாகி என்னையே மனத்தில் வணங்குவாய்; தருமம் முதலான எல்லாப் பற்றுகளையும் விட்டுவிட்டு என் ஒருவனிடமே சரணடைக; நான் மன மயக்கம் பாவம் முதலான எல்லாவற்றிலிருந்தும் உன்னை விடுவிப்பேன்” என்கிறார்.

”என்பால்நீ மனம்வை; என்சீர்
                  அன்பனாய் என்னைப் பூசி;
            என்னைவணங்கி யென்னை அடை;என்
                  இன்பா!மெய் உறுதி உரைத்தேன்.  
[18-ஆம் அத்தியாயம்—66]

 

     தருமமுற்றும் பற்ற ற,விட்டு,
சரணடைக ஒருவன் என்னையே!
மருள்பாவம் அனைத்தி னின்றும்
      உனைவிடுப்பேன்; வருந்தேன்! பார்த்தா”

இதற்குப்பிறகு அருச்சுனன் மதி மயக்கம் களைகிறான். மனத்தில் இருந்த ஐயங்கள் எல்லாம் நீங்கித் தெளிவு பெறுகிறான். கண்ணனிடம்,

      பொதிஅய்யம் நீங்கி நிலைத்தேன்;
                  புகன்றஉன் சொற்படியே செய்வேன்”

என்று போர்புரிய ஆயத்தமாகிறான். கீதை இவ்வாறு முற்றுப்பெறுகிறது.
பாவேந்தர் பாரதிதாசன் தம் மணிமேகலை வெண்பாவில் செய்திருப்பது போல இலக்கண அமைதிக்காக சில பாடல்களில் சொல் உடைப்புகள் நிகழ்ந்திருக்கின்றன. யாப்பமைப்பில் இது தவிர்க்க முடியாததாகும். மற்றபடி அச்சுப்பிழை இன்றி நூல் அமைந்திருப்பது குறிப்பிட வேண்டிய ஒன்றாகும். நீண்ட நாள் பாதுகாக்க வேண்டிய நூலாகையால் நல்ல தாளமைப்பில், நல்ல கட்டுமானத்துடன் கொண்டு வந்ததற்குப் பாராட்டுகள்.
 

தொடர்புள்ள முந்தைய பதிவு: ‘திரு. நாஞ்சில் நாடன் வாழ்த்தரங்கி’ல் ஓர் உரை – (18-07-2015 அன்று கோவையில் ‘மாலதி பதிப்பகத்தார்’ திரு. ரா. பத்மநாபன் எழுதிய ‘ஸ்ரீமத் பகவத் கீதை’ (மூலம் – தமிழாக்கம்) நூல் அறிமுகத்தையும், திரு நாஞ்சில் நாடன் அவர்களின் 40 ஆண்டு எழுத்துப் பணிக்குப் பாராட்டு விழாவையும் ஒரு சேர நிகழ்த்தினார்கள். அதில் திரு. வ. ஸ்ரீநிவாசன் பேசியது.

Raa_Padmanabhan_Pathmanaban_RaBa_Iraapa_Padhmanaban_Ganga

நூல்: ஸ்ரீமத் பகவத் கீதை — மொழியாக்கம்
ஆசிரியர்: ரா. பத்மநாபன்
வெளியீடு: மாலதி பதிப்பகம், 10/352, பெருமாள் கோவில் வீதி, ஒலம்பஸ், இராமநாதபுரம், கோயம்புத்தூர்—641 045
பக்: 248;
தொடர்புக்கு; 094881 85920

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.