மனம் ஒரு குரங்கல்ல…

positive psychology 1

சில வருடங்கள் முன்பு  Journal of American Medical Association என்கிற மருத்துவ உலகின் முதன்மை ஏடு, ஒரு ஆராய்ச்சியை வெளியுட்டது.  அது நம்மில் பலருக்கு ஆத்மார்த்தமாக புரிந்த ஒன்றாக இருக்கலாம். அதாவது, மனம் ஒன்றிய பிரார்த்தனைக்கு நோயாளிகளை குணமாக்கும் சக்தி உண்டு என்பது. அந்த ஆராய்ச்சியில்  இதய சிகிச்சை  ஆஸ்பத்திரி ஒன்றில் சுமார் ஆயிரம் புதிய நோயாளிகளில் 484 பேர் “பிரார்த்தனை” குழுவிலும், 529 பேர் வழக்கமான சிகிச்சை குழுவிலும் சேர்க்கப்பட்டனர். இவர்கள் அனைவருக்கும் சிகிச்சை அளிக்கும் மருத்துவ  குழுவுக்கும் நோயாளிகளுக்கும் இது பற்றிய விவரம் ஒன்றும் தெரிவிக்கபடவில்லை; விவரம் தெரிந்திருப்பது ஆராய்ச்சியின் போக்கில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால்.
முதல் குழுவின் நோயாளிகளின் பெயர்கள் ஒரு பிரார்த்தனை குழுவிடம் கொடுக்கப்பட்டு அவர்களுக்காக தினமும் மனமாற பிரார்த்தனை செய்யப்பட்டது. இன்னொரு குழுவிற்கு இது கிடையாது. ஆனால் சிகிச்சை முறை இரு குழுவிற்கும் ஒரே மாதிரிதான். பிரார்த்தனை செய்யப்பட்ட குழுவில் இருந்த நோயாளிகள் வேகமாக குணமானார்கள். இந்தஆராய்ச்சியைப் பற்றி விளக்கிய ஆராய்ச்சியாளர்கள்,  “கடவுள் இருக்கிறார் என்றோ அல்லது அவர் நம் குரலுக்கு செவி சாய்க்கிறார் என்றோ இந்த ஆராய்ச்சி நிரூபிக்க முனையவில்லை.” என்று  குறிப்பிட்டார்கள். “பொதுவாக  மருத்துவ சிகிச்சையுடன் கூட,  பிரார்த்தனையும் எவ்வாறு உடல் நலத்தில் உதவி செய்கிறது என்பதை ஆராயதான் இந்த ஆராய்ச்சி. எங்களுக்கு கிடைத்த இந்த ஆராய்ச்சி முடிவுகளுக்கு  எங்களுக்கு காரணம் எதுவும் தெரியவில்லை. எங்களுக்கு தெரிந்ததெல்லாம் பிரார்த்தனை செய்யப்ட்ட குழு வேகமாக உடல் முன்னேற்றத்தை காண்பித்தது.” என்று  விவரித்தார்கள் இந்த ஆராய்ச்சியாளர்கள்.
எண்ணங்களுக்கு மகத்தான சக்தி  உண்டு என்பது  இன்று  பலவிதங்களில் பலரது அனுபவத்திலும்   விஞ்ஞான பூர்வமாகவும் நிதர்சனமாக தெரியும் ஒன்று.  பிரார்த்தனை என்பது ஒரு கோணத்தில் பார்த்தால் எண்ணங்களின் வலிமை. நம் எண்ணங்களை ஒரு சேர குவித்து ஒரே இலக்கில் செலுத்தும்போது நாம் விழையும் பலன் உருவாகிறது. உள் மனதின் எண்ண அலைகள் புற  உலகில் செயல்களை  சாத்தியமாக்குகின்றன.
ஆழ்ந்து நோக்கினால் இதெல்லாம் அவரவர் மனோபாவத்தைப் பொறுத்தது என்று புரியவரும். நமது மனம் என்பது ஒரு ஆழ்கடல். அதில் பொதிந்திருக்கும் ஆசைகள்,உத்வேகங்கள், நம்பிக்கை போன்றவைக்கு மிக சக்தி உண்டு. சிறு வயதில், வீட்டில்பெரியவர்கள்  அடிக்கடி, “ நல்லதையே நினை; உன்னைச்சுற்றி இருக்கும் காற்றில் தேவதைகள்  சுற்றிக்கொண்டிருக்கிறார்கள். நீ நினைப்பதையெல்லாம்  அவர்கள் அவ்வப்போது  “ததாஸ்து” – அப்படியே  ஆகட்டும் – என்று  ஆசீர்வதித்து  செல்வர்.  அதனால்  நல்லதையே நினை,”  என்று  சொல்லுவார்கள். அன்று அவர்கள் அறிவுரையைக்  கேள்வி கேட்டதில்லை. ஆனால் பிற்காலத்தில் எண்ணங்களின்  சக்தியையைப் பற்றி  விவரம் புரிந்தபோது, அந்த அறிவுரையின்  அர்த்தமும் புரிந்தது.
உலகில் எத்தனையோ பேர் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறுவதற்காக எத்தனையோ சாகசங்களை செய்யவதும்  இது போன்ற  என்ணங்களின்  வலிமையால்தான்.  ஆழ்கடலில் குதிப்பது, நெருப்பை விழுங்குவது, பாம்பு தேள்களை உடலில் விடுவது, அதள பாதாளத்தில் பாய்வது, அந்தரத்தில் தொங்குவது….. இப்படி எழுதிக்கொண்டே போகலாம்.
இவர்களை இப்படி செய்யத்தூண்டும்  எண்ண அலைகள்தாம் பிரார்த்தனைகளிலும் பிரதிபலிக்கின்றன. இவைகளை சரி அல்லது தவறு என்று தராசில் பார்ப்பதைவிட எண்ண அலைகளின் சக்தியை புரிந்து கொள்ளும் கோணத்தில் பார்த்தால் தெளிவாகும்.
நாம் நம் எண்ணங்களாகிறோம் என்பார்கள். அதாவது நம் எண்ண அலைகள் எப்படி, அந்த அளவு அழுத்தமாக உருவாகிறதோ அதன்படியே நம் குணாதிசியங்களும் அமைகின்றன; நம் வாழ்க்கையில் செயல்பாடுகளும் இந்த  அலைவரிசையிலேயே நிகழ்கின்றன. “திணை விதைத்தவன் திணை அறுப்பான்” என்பதன் அடிப்படையும் இதுதான்.
விழுந்துவிடுமோ என்று பயந்து கொண்டேயிருந்தால் நிஜமாக விழுந்து விடுவோம்.  அதனால்தான்  ஆக்க பூர்வமான எண்ணங்களை வளர்க்க வேண்டும் என்பது  அவசியமாகிறது.
நாம் உற்சாகமாக உணர்வதற்கோ அல்லது  ஏதோ ஒன்று கைகூடவேண்டும் என்று நினைப்பதற்கோ  முதல் படி, அந்த எண்ணத்தை  மனதில் பீடம் போட்டு வீற்றிருக்க  முனைவதுதான்.
சான்பிரான்ஸிஸ்கோ வில் அருமையான  வேலை, குழந்தைகள்  என்று அமைதியாக  சென்று கொண்டிருந்த  கெவின், லடீஃபா  தம்பதிக்கு  திடீரென்று  பேரிடி. கெவின்  தொண்டையில்  சிறிய வலியாக ஆரம்பித்தது உண்மையில் கான்சர்  என்று தெரிய வந்தது. அதோடல்லாமல், மிகவும் குறைந்த அளவே  பிழைக்கும் வாய்ப்புஇருக்கும் ஒரு அரிய வகை என்றும்  தெரிய வந்தது. மனது ஒடிந்த நிலையில் ஃபேஸ் புக்கில் ஒரே  ஒரு வரியில் தங்கள் மனக் கவலையைப் பகிர்ந்துகொண்டார்  லடீஃபா.  அடுத்த நிமிடமே அவருக்கு பல திசைகளிலிருந்தும்  ஆதரவுகள்  வந்து குவிய ஆரம்பித்தன.  “டாக்டர்கள்  என் கணவருக்கு  முடிவு நெருங்குகிறது என்று  கூறினார்கள். ஆனால் என்னைச்  சுற்றி இருந்த என் சமூக வட்டம்  கெவினைப் பிழைக்க வைத்துவிட்டுதான்  மறுவேலை என்பது போல்  பக்க பலமாக  சுழன்றனர். பலர் எனக்கு  அறிமுகம் இல்லாதவர்கள்; சிலரை  சில சமயத்தில்  உதாசீனப்படுத்தியிருப்பேன்; சிலரை எனக்குப்பிடிக்காமல்இருந்திருக்கலாம்.  ஆனால்  இன்று எந்தவித  மனக்கசப்பும் இல்லாமல்  என்னைச் சுற்றியிருந்தவர்கள்  எனக்காக  பணம் திரட்டினர்.  எனக்கு  எல்லாவிதத்திலும் உதவியாக நிற்க  தயாராக  இருந்தனர். ஒரு சமூகமே  ஒட்டு மொத்தமாக என் பின்னால்  நின்றபோது  நான் நெகிழ்ந்து  போனேன்.  ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் கெவினுக்கு  உதவிசெய்யவும் பிரார்த்தனை  செய்யவும் ஆரம்பித்தார்கள்.  ஐ. சி. யூவில் வேலை செய்துகொண்டிருந்த நர்சுகளும்  டாக்டர்களும் இந்த அன்பு வட்டத்தின்  அங்கம். கெவினுக்கு  எலும்பு  மஞ்சை  – Bone Marrow – மாற்று கிடைக்காமல் , செய்வதறியாமல் திணறியபோது, சட்டென்று ஒரு அன்புள்ளம் கொண்ட  பெண்  மூலமாக  கிடைத்தது. இன்று  என் அன்புக் கணவர்  கான்சரிலிருந்து பூரணமாக குணமடைந்துள்ளார்.  அவர் பிழைக்க  காரணம்  எங்களைச்  சுற்றி  இருந்த  நட்பும் சமூக வட்டமே  என்றால்  அது  மிகையில்லை.” என்று  லடீஃபா   சொல்கிறார்.
ஒருமித்த  எண்ண  அலைகளின்  சக்திக்கு  இந்த தம்பதியினரின்  அனுபவம்  ஒரு  உதாரணம். தனி மனிதர்  வாழ்க்கையாக  இருக்கட்டும், அல்லது  ஒரு  பெரிய சமூகத்தின்  மாற்றங்களாக இருக்கட்டும், ஒரு குறிக்கோளை நோக்கி நம்பிக்கையுடன்  உறுதியான  எண்ணங்களுடன்  செயல்படும்போது  அங்கே  வெற்றி  நிச்சயம்.
எண்ணம் கைகூடுவதற்கு  மற்றொரு  வழி  நாம் நினைக்கும்  சூழ்னிலையை அல்லது  குறிக்கோளை  அடைந்துவிட்ட  நிலையை  மனதில்  கற்பனை  செய்ய வேண்டும். மனக்கண்ணில் அந்தசூழ்நிலையை  அனுபவிக்க வேண்டும்.  எண்ணம் மனதில் வலுக்க வலுக்க  நிதர்சனமாக  அந்த நிகழ்வு  நிஜமாகும். டாக்டர்  ப்ரூஸ்  லிப்டன்  என்கிற உயிரியல் வல்லுனர்  நம்  நம்பிக்கையும் எண்ணங்களும்  நமது  உடலில் மரபணுவிலேயே  மாற்றங்கள்  ஏற்படுத்தும் அளவு  சக்தி வாய்ந்தவை என்று கூறுகிறார். நம் நம்பிக்கைக்கும்  யதார்த்தத்துக்கும் ஒரு இணைப்பு ஏற்படுத்துவது  நம் மூளையின்  செயல்பாடு.  அதனால்  நாம் எதை நம்புகிறோமோ – நேர்மறையோ அல்லது  எதிர்மறையோ – அந்த எண்ணங்களை  யதார்த்தமாக  செயல்படுத்திக் காட்டுகிறது  நம் மூளை  என்பது இவரது  ஆராய்ச்சி.
ப்ளசீபோ தாக்கம் (Placebo effect) என்ற முறையில் ஒரு சிகிச்சை மருத்துவ உலகில் உண்டு. இந்த முறையில் ஒரு நோய்க்கு அல்லது நோயின் அறிகுறிக்கு ஏற்றவாறு “மருந்துகள்” அளிக்கப்படுகிறது. இந்த மருந்துகள் உண்மையில் மருந்துகள் அல்ல. பொதுவாக மருத்துவ ஆராய்ச்சிகளின்போது ஒரு குழுவினருக்கு ஆராய்ச்சி செய்யப்படும் புதிய மருந்துகளும் , மற்றொரு குழுவினருக்கு இந்த ப்ளேஸ்போ என்கிற பொய் மருந்துகளும் அளிக்கப்படும். இது மாத்திரையாகவோ அல்லது ஊசி மருந்தாகவோ இருக்கலாம்.  ஆனால் ப்ளேஸ்போ கொடுக்கப்பட்டதாக நோய்வாய்ப் பட்டவருக்கோ அல்லது ஆராய்ச்சியில் உட்படுத்பட்டவருக்கோ தெரியாது. சில சமயம் ப்ளேஸ்போ கொடுத்த குழுவினர் மருந்து சாப்பிட்டதாக நினைத்து பின் விளைவுகளையோ அல்லது நோய் குணமானதாகவோ சொல்லுவார்களாம். மனச்சோர்வு, அதிக வலி, தூக்கமின்மை போன்ற வியாதிகளுக்கு இந்த ப்ளேஸ்போ மருந்துகள் கொடுத்து ஆராய்ச்சி செய்வதுண்டு.
இந்த ப்ளேஸ்போ மருந்து தாக்கத்தின் அடிப்படை, மனதுக்கும் உடம்புக்கும் உள்ள தொடர்பை ஆதாரமாக வைத்து அமைந்துள்ளது. ஒரு மனிதன் தன்னுள் வைத்திருக்கும் எதிர்பார்ப்புகளையும் நம்பிக்கையையும் பொருத்து இந்த ப்ளேஸ்போவின் தாக்கம் டிருக்கும். ஒரு மாத்திரை தன்னுள் ஒரு மாற்றத்தை விளைவிக்கும் என்று ஒருவர் நம்பும்போது அவர் உடலில் உள்ள ரசாயனங்கள் அந்த மாற்றத்தை உண்மையிலேயே தோற்றுவிக்கும் என்று சொல்லப்படுகிறது. ஒரு ப்ளேஸ்போ ஆராய்ச்சியில் கொடுக்கப்பட்ட மருந்து உந்துசக்தியை உண்டு பண்ணும் என்று சொல்லி கொடுக்கப்பட்டது. பின்னர் அந்த நபர்களின் உடல் நிலையை கவனித்தபோது உண்மையிலேயே அவர்கள் நாடித் துடிப்பும் ரத்த அழுத்தமும் ஏறியிருந்தது தெரிய வந்தது. பொதுவாக நமக்கு ஒரு மருந்தின் தாக்கம் குறித்து எவ்வளவு ஆழமாக நம்பிக்கை இருக்கிறதோ அத்தனை அளவு நிஜத்திலும் தாக்கம் இருக்கும் என்று ஆராய்ச்சி சொல்கிறது. மூன்றில் இரு பங்கு குணமடைதல் இப்படி ப்ளேஸ்போ தாக்கம் முலம் ஏற்படுகிறது என்று கூறப்படுகிறது.
மனம், சிந்தனையின் தாக்கம் என்றுவரும்போது ஒரு சுவாரசியமான விஷயம் என்னவென்றால், மனம் என்பது எந்தவிதமான சிந்தனையை நாம் அனுமதிக்கிறோமோ அந்த தடத்திலேதான் சிந்தனை பயணிக்கும். அதனால் சிந்தனையின் ஆரம்பத்தின் கடிவாளம் நம் கையில்தான் இருக்கிறது. ஆழமான, தொடர்ந்த சிந்தனைக்கு நம் உடலில், வாழ்க்கையில் மட்டுமல்ல நம்மைச் சுற்றியிருப்பவர்களிடமும், வெளியுலக நடப்புகளிலும் மாற்றமும் தாக்கமும் ஏற்படுத்தும் வலிமை உண்டு. குறிப்பாக கூட்டு சிந்தனைக்கு அதிக வலிமை உண்டு.
இத்தனை சக்தியிருக்கும் நம் சிந்தனையை சரியான முறையில் செலுத்துவதும் நம் முன்னே இருக்கும் பெரிய சவால்தான். நம்முள்ளே உதிக்கும் ஒவ்வொரு சிந்தனையையும், அதன்போக்கையும் உன்னிப்பாக கவனித்து, ஆக்கப்பூர்வமாகவும், நேர்மறையான விளைவுகளை நோக்கியும் செலுத்துவது அவசியம். மனதுக்குள்ளே ஒவ்வொரு சிந்தனையும் வர வர, தேவை, தேவையில்லாதது, நேர்மறை எதிர்மறை என்று நாம் கழித்தும் கூட்டியும் ஒரு ஒழுங்கு செய்துகொண்டிருந்தோமானால் நம் எண்ணங்கள் நாளடைவில் ஒரு சீரான பாதையில் செல்வதை கவனிக்கலாம். தினம் வீட்டை சுத்தம் செய்வதுபோல், நம் மனதின் எண்ண ஓட்டங்களையும், தேவையில்லாத எண்ணங்கள் வர வர குப்பைபோல் அகற்றிக்கொண்டேயிருக்க வேண்டும்.
புறத்தில் சுத்தம் செய்வதுபோல் மூட்டை மூட்டையாக மனதில் தோன்றும் எண்ணக்குவியலையும் அன்றன்றே குப்பைத்தொட்டியைக் காலி செய்வதுபோல் காலிசெய்துவிட்டு ஒவ்வொரு நாளயும் – ஒவ்வொரு கணத்தையும் புதிதாக வரவேற்கும் மனப்பான்மையை மட்டும் வளர்த்துக்கொள்ள முடியுமானால் வாழ்க்கையில் என்றுமே ஒரு புதிய காற்று வீசுமே…! “எல்லாம் தெரியும்” என்ற மனப்பான்மையைக் கழற்றிவிட்டு, ” அட, என்ன அற்புதம்..!” என்று உள்ளுக்குள் ஒரு வியப்பும் பிரமிப்பும் இருந்துகொண்டே இருக்கும்போது வாழ்க்கை ஒரு தென்றலாக இருக்கும்.
சில சமயம் மனதில் அழுத்தம் அல்லது சோர்வு இருக்கும்போது, காரணம் எதுவாக இருந்தாலும் அதைம் சற்று மனதிலிருந்து அகற்றி வைத்துவிட்டு வேறு பிடித்த சிந்தனைகளை வலுக்கட்டாயமாக மனதில் ஏற்றிப்பாருங்கள். முதலில் முரண்டு பிடித்தாலும் பின்னர் மனது அந்த பிடித்த சிந்தனைகளில் லயித்துவிடும். சற்று இடைவெளி விட்டு மீண்டும் மனதைக் கவ்விய அந்தப் பிரச்சனையை அணுகும்போது மனம் இப்போது புத்துணர்வுடன் இருப்பதால் புதிய தீர்வுகள் அல்லது அமைதி புலப்படும்.
மனம் ஒரு குரங்கல்ல;  நல்லவிதமாக செலுத்தினால் நல்ல விளைவுகள் தானே வரும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.