மகரந்தம்


[stextbox id=”info” caption=”டூரிங் சோதனை”]

AI_Language_Humans_Recognition_Machines

எந்திரங்கள் பொதுவாக மனிதரின் பயன்பாட்டுக்கு ஏற்ப வடிவமைக்கப்படுகின்றன. தானியங்கி எந்திரங்கள் அப்படி மனித உடற்கூறுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட வேண்டிய அவசியமில்லை என்றாலும், அவற்றிற்கு ஏதும் பழுது பார்க்கும் நிலை ஏற்பட்டால் அவை மனிதரால் செய்யப்பட வழி வகுக்கும்படி அவை வடிவமைக்கப்பட வேண்டி இருக்கும். ஆனால் செயற்கை அறிவுடன், தாமே யோசிக்கும் எந்திரங்களைத் தயாரிப்பது மனிதரின் ஒரு லட்சியமாகக் கடந்த சில நூறாண்டுகளாக இருக்கிறது. ஒரு விதத்தில் மனிதர் இப்படி ஒரு எந்திரத்தை உருவாக்குவது தாமும் கடவுள்களைப் போல ஆவது என்ற கற்பனை கொண்டிருப்பதால் இப்படி ஒரு உந்துதல் இருக்கிறதா என்று நாம் யோசிக்கலாம். துவக்கத்தில் அப்படி ஒரு மர்மமான விருப்பம் உந்துதலாக இருந்திருக்கலாம், ஆனால் இன்று அது ஒரு தர்க்கப் புதிர் போலவோ, எத்தனையோ கணிதச் சிக்கல்கள் போலவோ, பொறியியல் சிக்கல்கள் போலவோ விடுவிக்கப்பட வேண்டிய ஒரு சவாலாக மாறி இருக்கிறது என்று கூட நாம் கருதலாம். இந்த எந்திரங்கள் மனித உடற்கூறு சார்ந்து இருக்கத் தேவையில்லை என்று ஒரு சாரார் கருதியிருக்கிறார்கள்.  அதே நேரம் சில தானியங்கி எந்திரங்கள் மனிதரின் உலகில் மனிதச் செயல்களுக்குத் துணையாக ஆக உருவாக்கப்படுபவை.

காட்டாக, பார்வையைக் கொண்டு இயங்கும் தானியங்கிகள் இருக்கின்றன. இந்தத் தானியங்கிகள் மனிதப் பார்வையையோ, அதன் பல சாதக பாதகங்களையோ பதிலி செய்யத் தேவை இல்லை என்றாலும், மனிதரின் பல செயல்களுக்கு உதவுவனவாக இவை வடிவமைக்கப்படுவதால், பெரிதும் மனிதப் பார்வையை ஒட்டிய செயல் தர்க்கம் கொண்டவையாகவே இருக்கின்றன. சமீபத்தில் இரண்டு அமெரிக்கப் பல்கலைகள் ஒரு கனடியப் பல்கலை ஆகியவற்றின் ஆய்வாளர்கள் இணைந்து தயாரித்த ஒரு எந்திரம் மனிதப் பார்வையை விட மேம்பட்ட செயல்திறன் கொண்டதாக இருக்கிறதாக ஒரு ஆய்வுக் கட்டுரை சொல்கிறதாம்.

பொதுவாக இத்தகைய எந்திரங்கள் மனிதக் கையெழுத்தின் பல அலைப்புகளை எளிதே புரிந்து கொள்ளவியலாதவையாக இதுகாறும் இருந்து வந்திருக்கின்றன. ஆனால் இந்த எந்திரம் அப்படி ஏராளமான வேறுபாடுகள் கொண்ட வடிவமைப்பையும் பார்த்து உடனடியாக எழுத்துகளை இனம் கண்டு கொண்டு விடுவதாக அமைக்கப்பட்டிருக்கிறது என்று ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.

வழக்கமான எந்திர அறிவுக்கு அடிப்படையாக இதுவரை இருந்தவை ஆழ் நரம்பு இணை வலைகள் என்று அறியப்பட்டவை. புது வகைச் செயல் முறையோ, பெய்ஸியன் செயல்திட்டக் கற்றல் என்ற முறையைப் பின்பற்றுகிறதாம்.

மேலும் ருசிகரமான தகவல்களுக்கு இந்தச் செய்திக்கான ஒரு சுட்டியைப் பின்பற்றிப் போனால் நாமும் எந்திரங்களை விடக் கூடுதலான வேகத்தில் சில விஷயங்களைக் கற்கலாம்.

http://www.nytimes.com/2015/12/11/science/an-advance-in-artificial-intelligence-rivals-human-vision-abilities.html
[/stextbox]


[stextbox id=”info” caption=”உடல் ஓவியம்”]

Faces_Society_Paint_Show_Tattoos_Ink_Arts_Body_Display_Museums

பச்சை குத்துவது என்பதை சடங்காகவும், மருத்துவக் காரணங்களுக்காகவும், ஓரளவு குடும்ப/ குல அடையாளத்தைத் தொடரும் வகையாகவும் இந்தியர்கள் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். அன்பைத் தெரிவிக்கவும், வேடிக்கையாகவும், கலையார்வத்தால் உந்தப்பட்டும் சிலராவது இதைச் செய்து பார்ப்பதும் உண்டு.

உலகெங்கும் பல இனக்குழுக்கள், குறிப்பாக பழங்குடி மக்கள் இதைப் பற்பல காரணங்களுக்காகப் பயன்படுத்தி வருகிறார்கள். குழு அடையாளமாக, குழுவுக்குள் சில பதவிகள், அல்லது திறமைகளுக்கான அடையாளங்களைச் சித்திரிக்க இவை பயன்பட்டிருக்கின்றன.

பொதுவாக ‘நாகரீகம்’ அடைந்த நாடுகள், மக்கள் குழுக்களிடையே இந்த வகை அடையாளப்படுத்துதல் நிரந்தரமாகத் தோலைத் தாக்கும் வகையானதாக இருந்தால் அத்தனை உவப்புடன் அணுகப்பட்டதில்லை. சில கடும்வாத மதப் பார்வைகள் இவற்றை எதிர்த்துக் கண்டித்ததாலும் இவை பாரம்பரியமாக இருந்த மக்கள் குழுக்களில் கூட நவீன யுகத் துவக்கத்தில் கை விடப்பட்டிருக்கின்றன.

கடும்வாத மதக்குழுக்களின் முதல் கட்ட நடவடிக்கையே ஒரு போர்த் தந்திர நடவடிக்கை. தம் மதங்களின்பால் சிறிது ஈர்ப்பு காட்டும் மனிதர்களை அவர்களது பழைய சமூகக் குழுவிலிருந்து எவ்வளவு தூரம் உடனடியாகப் பிரித்துத் தனிமைப்படுத்தி விட முடியுமோ அத்தனைக்கு நல்லது என்று அவசர காலப் போர்த்தந்திர நடவடிக்கை எடுப்பதில் செமிதிய மதக்குழுக்கள் நீண்ட காலப் பயிற்சி கொண்டவை. அப்படித் தனித்து விடப்பட்ட மனிதரை வேட்டையாடுவது சுலபம். பின் தாம் விரும்பிய வகைகளில் அவர்களைத்  தம் சமூகக் குழுவுக்குள் இணைப்பது  துரிதமாக, கறாராக அந்த வேரறுப்பைச் செய்வதாக இருக்கும். எனவே செமிதிய மதங்கள் பரவிய பல நாடுகளில் பச்சை குத்துதல் போன்ற மரபு வழி, பாரம்பரிய வழியில் மனிதர் தம்மை அடையாளப்படுத்துதல் மறைந்து போயிருக்கிறது. செகுலரியம் என்பது கிருஸ்தவத்தின் முகமூடி என்று நாம் அறிவோம். செகுலரியம், நவீனத்துவம் ஆகியன பரவிய நாடுகளில் பாரம்பரிய அடையாளப்படுத்துதல் நாகரீகமற்றது என்று மக்கள் அவற்றைத் துறப்பதை நாம் அறிவோம். இந்தியாவிலேயே இது இன்று ஆழமாகப் பதிந்து விட்ட ஒரு நவீன மூட நம்பிக்கை.

சமீபத்தில் மிக்க தொழில் மயமான நாடுகளிலோ நிலைமை ஒரு U வளைவில் பழமைக்குத் திரும்புகிறது. பழமையை அதன் அர்த்தங்களை உருவி விட்டு, வெறும் கலை வடிவாகப் பயன்படுத்துவது நவீனத்துவத்தின் தாக்கம். கணிசமான எண்ணிக்கையில் மக்கள், அந்தத் தாக்கத்தை, தனி மனித எதிர்ப்பாகவோ, விருப்ப வெளிப்பாடாகவோ மாற்றி வருகின்றனர். நிறைய மக்கள் முன்பு போல உடலில் தனி மனித விருப்பின் குறிப்புகளைக் காட்டுவதை எதிர்க்கும் நவீனத்துவ முறைமைகளை, அதன் வழியே உருவான எந்திரத்தனமான சமூக அமைப்பு விதிகளை ஏற்க மறுத்து வருகின்றனர்.

அவர்களில் ஒரு சாரார் பச்சைகுத்திக் கொண்டு தம்மை சராசரி மக்களிடம் இருந்து விலக்கிக் காட்டுவதை ஒரு அவசியமான எதிர்ப்பாகவோ, மாற்று வழிக்கான அடையாளமாகவோ பயன்படுத்துகின்றனர். பதின்ம வயதில் குடும்பத்தின் மூத்தவர்களின் அதிகாரத்துக்கு எதிராகவோ, பள்ளி/ ராணுவம் ஆகிய அமைப்புகளின் அடக்கு முறைகளுக்கு எதிராகவோ இந்த வகை அடையாளச் சின்னங்களைத் தம் உடலில் பதித்துக் கொள்வதைச் செய்வது இளைஞர்களிடையே பரவி இருந்த்து, இப்போது இந்த எதிர்ப்பு என்பது அத்தனை முக்கியமான விஷயமாக மேற்படி அமைப்புகளால் கருதப்படுவதில்லை என்பதால் பச்சை குத்துதல் என்பது வேறு பல ஆர்வங்களால் முன்செலுத்தப்படுகிறது.

அவற்றில் ஒன்று கலை வெளிப்பாடு என்பது. பல நாடுகளில் பல வகையான வடிவமைப்புகளை மனித உடற்கூறு என்ற சட்டகத்துக்குள்ளும், குறிப்பிட்ட மனிதரின் உடல்வாகு என்ற திட்டத்துக்குள்ளும் உருவாக்குவதை ஒரு கலை வெளிப்பாட்டுச் சவாலாக எடுத்துக் கொண்டு கலைஞர்கள் அபூர்வமான வடிவுகளை உருவாக்கி மனித உடல்களில் அவற்றை வரைந்து சாதிக்கிறார்கள்.

இந்தக் கலையின் ஒரு தனித்தன்மை அது அருங்காட்சியகங்களில் காட்சிப் பொருளாக வைக்கப்பட முடியாதது. அதனால் அருங்காட்சியகங்கள் இப்படி வரையப்பட்ட உடல்களின் ஒளிப்படங்கள், காணொளிப்படங்கள் போன்றனவற்றைக் காட்சிக்கு வைத்து அதோடு நிறுத்திக் கொள்ள வேண்டி வருகிறது.

அரும்பொருள் என்று ஒன்றுக்கு மதிப்பு வருவதே, அது கிட்டுவதற்கு அரியது என்பதால் அல்லவா? அதனால் இந்த பச்சை குத்துதலால் அடையப்படும் ஓவியங்களுக்கு இன்று அசாதாரணமான வரவேற்பு இருக்கிறது.

ஆனால் அரும் காட்சியகங்கள் மனிதத் தோலில் வரையப்படும் இந்த ஓவியங்களை, வடிவுகளை வேறெப்படிக் காட்சியில் வைக்க முடியும்? அந்தக் கேள்விக்கான பதிலை இந்தச் சுட்டியில் உள்ள கட்டுரையில் நீங்கள் படிக்க முடியும்.

http://www.theatlantic.com/entertainment/archive/2015/12/tattoos-high-art/416769/
[/stextbox]


[stextbox id=”info” caption=”பன்மைத்துவம் என்பது பம்மாத்தா?”]

EU_Refugee_Crisis_Germany_Poland_Multi_Culturalism

இது ஒரு குறுஞ்செய்திதான். ஃப்ரெஞ்சு, ஜெர்மன், அமெரிக்கச் சிந்தனையாளர்களின் மூளைச் சலவை செய்யும் புத்தகங்களைப் படித்து விட்டு நம் ஊர் ‘முற்போக்குகள்’ இந்தியாவில் பலபண்பாட்டியத்தை நாம் வளர்க்கத் தவறிவிட்டோம், இந்து ஃபாசிசம் நம் பண்பாட்டை அழிக்கவிருக்கிறது என்று ஓநாய்க் கண்ணீர் வடித்துப் பத்திரிகைகளில் பக்கம் பக்கமாகக் கட்டுரைகள் எழுதி காகிதத்தைக் கரியாக்கி வருவதைக் கண்டிருப்பீர்கள். யூரோப்பின் சகஜமான போர்த்தந்திரங்களில் ஒன்று தம்மால் எதெல்லாம் முடியாதோ அதையெல்லாம் வளர்ந்து வரும் நாடுகளின் மீது தள்ளி விட்டு விட்டு, அதையெல்லாம் செய்தால்தான் அந்த நாடுகளை நாகரீகமான நாடுகள் என்று ஏற்க முடியும் என்று சொல்லி விடுவதுதான். அதோடு உலகப் பிரச்சாரக் கருவிகளில் பெரும்பான்மை அவர்களிடம் இருப்பதால் தம் கருத்தை உலகெங்கும் உடனடியாக எடுத்துப் போய் அதையே விவிலிய நூலின் செய்தியாக, வேறு எதிர்க்கப்பட முடியாத இசங்களான மார்க்சியம், பெண்ணியம், பசுமையியம் என்ற கருத்தியல் மாயையாக,  தன்னார்வலக் குழுக்கள் என்கிற ’பயனுள்ள முட்டாள்க’ளின் கூட்டத்தின் மூலம் பரப்புவதில் யூரோப்பிய ஆளும் கூட்டங்கள் மிகத் திறமையுள்ளவை.

ஆனால் குளவிக் கூட்டைத் தடி கொண்டு தாக்கி மேற்காசியாவை உருக்குலைத்த யூரோப்பிய/ அமெரிக்க ஏகாதிபத்திய முயற்சிகளால் இன்று யூரோப் பெரும் அகதிகளின் கூட்டங்களை எதிர் கொள்ள வேண்டி இருக்கிறது. உடனடியாக என்ன ஆகும்? யூரோப்பின் நாகரீக முலாமுக்குள் ஒளிக்கப்பட்டிருந்த பழைய இனவெறி இன்று வெளிப்படையாகப் பல நாடுகளில் அரசியல் கோஷமாக பெரும் திரள் மக்களால் ஒலிக்கப்படுகிறது. திரள்கள் மட்டுமல்ல, தலைவர்களும் இந்த கோஷத்தில் இணைகிறார்கள். அமெரிக்காவில் குடியரசுக் கட்சியின் அதிபர் பதவிக்கான வேட்பாளர்களின் நாராசமான இனவெறிக் கூக்குரல்கள் இன்று பிரபலமாகி விட்ட போதில் அந்த நாட்டுப் பொது ஊடகங்கள் பெருமளவு மௌனம் சாதித்து விடுகின்றன அல்லது அந்த இனவெறிக் கருத்துகளை எதிர்ப்பதில்லை. சில பெருநிதிக் கிழார்களின் பிடியில் சிக்கிய ஊடக நிறுவனங்கள் சிறு கலவரங்களைக் கூட ஊதிப் பெருக்கி இனவெறிக்குத் தூபம் போடுகின்றன. அதே பத்திரிகைகள் இந்து சமுதாயம் இனவெறிச் சமுதாயம், ஃபாசிஸ்டு, இந்தியாவில் சகிப்புத்தன்மை தொலைந்து விட்டது என்று கூக்குரலிடுவது … ஒரு வினோதமான ஆபாசம். ஆனால் நம் முற்போக்குகளுக்கு இந்த ஆபாசம்தான் அன்றாட விருந்து, அள்ளி அள்ளி உண்ண வரிசையில் நிற்பார்கள்.

இந்தச் சூழலில் ஜெர்மனியின் அதிபரான ஆங்கெலா மெர்க்கெல் என்ன சொல்கிறார் என்று பார்த்தால் அது நமக்குச் சற்றும் வியப்பளிக்கக் கூடாது. ஆமாம், பலபண்பாட்டியம் என்பது ஒரு பம்மாத்து, அது ஒரு போதும் வேலை செய்யாது. அது ஒரு நீடித்த பொய்மை என்றே அறிவித்திருக்கிறார்.  அவரோ கிருஸ்தவர், ஜெர்மனியோ இன்னும் மக்களிடம் பழைய காலத்து கிருஸ்தவ சர்ச்சுகள் வசூலிக்கும் டித் என்ற நன்கொடையை அரசு மூலம் மக்களிடம் வசூலித்து சர்ச்சுகளுக்குக் கொடுக்கும் அளவு தீவிர கிருஸ்தவ நாடு. கிருஸ்தவ மெர்க்கெல் எதை வேண்டுமானாலும் சொல்லலாம். அதெல்லாம் தவறே கிடையாது. இதையே இந்தியப் பிரதமர் சொல்லி இருக்கட்டும், அவரை தீ வைத்துக் கொளுத்துங்கள் என்று பாகிஸ்தானிடம் போய் முறையிடுவார்கள் நம் ’முற்போக்குகள்’.  இயானெஸ்கோவிய நகைச்சுவை என்று கூட நாம் எடுத்துக் கொள்ள முடியாதபடிக்கு அதீத அபத்தம் இது.

ஆக மெர்க்கெல்லின் கருத்து பற்றி,  நம் ஊர் மேதாவிகள் என்ன சொல்வார்கள் என்று நினைக்கிறீர்கள்? மேற்குடைய உதவாக்கரைக் கருத்துகளை எடுத்து ஆபரணமாக அணிவதுதானே இந்த மேல் தாவிகளின் முதல் வேலை. அதனால் இன்னும் சில பத்தாண்டுகளாவது பல பண்பாட்டியமே விவிலியம், இந்து நாகரீகம் என்பது ஃபாசிசம் என்றேதான் இவர்கள் முழங்குவார்கள். அந்த இந்து நாகரீகம் என்பது இத்தனை காலம் பலபண்பாட்டியமாகத்தான் இருந்தது , அதை அழிக்க முயல்வதுதான் முற்போக்குகள் பல பத்தாண்டுகளாகச் செய்து வரும் அரிய செயல் என்பது இவர்களுக்குப் புரியாத ஆனால் எளிய விஷயம். தம் முகத்தை இவர்கள் கண்ணாடியில் பார்த்துக் கொள்வதே கிடையாது, அதன் குரூரம் இவர்களின் ’நுட்பமான’ உணர்வுகளால் தாங்கிக் கொள்ளப்பட முடியாததாலோ?

http://www.thedailybeast.com/cheats/2015/12/14/angela-merkel-multiculturalism-a-sham.html
[/stextbox]


[stextbox id=”info” caption=”பல்வண்ணக் காட்சிக் கருவி”]

Slade_House_Books_David_Mitchell_Fiction

அறிவியல் நவீனம் என்பது இன்று மேற்குலகைப் பொறுத்தாவது, மைய நீரோட்டத்தில் கலந்து விட்டிருக்கிற வகைத்தான எழுத்துதான். புனைவிலக்கியம் மட்டுமல்ல, அ-புனைவுகளும் நிறைய அறிவியல்/ பொறியியல்/ தொழில் நுட்பம் சார்ந்த கருத்துகளைப் பற்றி எழுதப்பட்டு பொது ஜன நுகர்வுக்குக் கிட்டும்படி வருகின்றன. திரைப்படங்கள், தொலைக் காட்சித் தொடர்கள், சிறுவருக்கான வரைபடப் புனைவுத் தொடர்கள்- புத்தகமாகவும், சினிமாவாகவும், தொலைக்காட்சித் தொடர்களாகவும்- அறிவியல் சார்ந்து உருவாக்கப்படுகின்றன.

அறிவியல் நவீனம் என்பதற்கு இப்போது இலக்கிய அந்தஸ்தும் கிட்டுகிறது என்பதற்கு டேவிட் மிட்ச்செல் என்பாரின் சில புத்தகங்கள் சாட்சி. ’க்ளௌட் அட்லஸ்’ என்ற நாவலை எழுதி உலகளாவிப் பெயர் பெற்ற மிட்ச்செல், அறிவியல் கதைகளோடு சிறிதளவு அதிபுனைவு வகைக் கதையையும் கலந்து எழுதுவதை ஒரு வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறார். ’த தௌஸண்ட் ஆடம்ன்ஸ் ஆஃப் ஜேகப் த ஜ்ஷ்ட்’ என்கிற நாவலும் சரி, க்ளௌட் அட்லஸ் என்ற நாவலும் சரி இப்படிக் கலவையாக எழுதப்பட்டவைதான். [ஆமாம், பிரக்கியாதி பெற்ற திரைப்பட இயக்குநர்களான இரு வாசோவ்ஸ்கிகள், க்ளௌட் அட்லஸ் நாவலை ஒரு படமாகத் தயாரித்து தோல்வி அடைந்தனர். அந்த நாவலைத் திரைப்படமாக்குவது கடினம், வாசோவ்ஸ்கிகளின் கற்பனையோ சிறிது விபரீதமாக ஓடுவது, அந்தக் கூட்டணி சோபிக்கவில்லை. பகுதிகளில் அந்தப் படம் நன்றாக இருந்த்து என்றாலும் ஏகப்பட்ட விஷயங்களை ஒரே நேரம் பரீட்சார்த்தமாகச் செய்தால் கலவை உருப்படியாக இராது. ]

மிட்ச்செல் எப்போதும் இப்படித்தான் ஏதாவது உத்தி வழி சோதனைகளைச் செய்வாரா என்றால் அதுவும் செய்வார், மரபு வழிக் கதை சொல்லலும் அவருக்குக் கை வரும். திரள் வாசகர்களையும் அவரால் படிப்பு மேஜையில் கட்டி வைக்க முடியும், இலக்கிய ஆர்வம் கொண்டாருக்கும் ஒரு அளவாவது தீனி கொடுக்க முடியும். சமீபத்தில் இரண்டு புத்தகங்களை வெளியிட்டார். அவற்றில் ஒன்றைப் பற்றியது இந்த்ச் சிறு குறிப்பு. அது ஒரு சுமார் அளவு கொண்ட நாவல். மிட்ச்செல்லின் புத்தகங்கள் பொதுவாக 500 பக்கங்களுக்கு மேற்பட்டனவாக இருக்கும். ஸ்லேட் ஹௌஸ் என்கிற இந்தப் புத்தகம் ஒப்பீட்டில் இலேசானது- 256 பக்கங்களே கொண்டதாம். இதன் தனிச் சிறப்பு என்னவென்றால் இது முதலில் மொத்தமும் ட்வீட்களால் சொல்லப்பட்ட சிறுகதையாகத் துவங்கியதாம். இந்தக் கதை துரிதமாக ஒரு 256 பக்க நாவலாக வளர்ந்து விட்டிருக்கிறது.

இந்த நாவலைப் பற்றிய இரு மதிப்புரைகளுக்கான சுட்டிகளை இங்கு கொடுக்கிறோம். ஒன்று மரபுப் பத்திரிகையான பிரிட்டிஷ் செய்தித்தாள் த கார்டியனில் வந்தது.

http://www.theguardian.com/books/2015/oct/29/slade-house-david-mitchell-review

இன்னொன்று இலக்கிய மதிப்புரைகளைப் பிரசுரித்துப் பெயர் பெற்று வரும் ஒரு வலைத்தளப் பத்திரிகை. இதன் அச்சு வடிவு காலாண்டுக்கு ஒரு முறை கிட்டவிருக்கிறது என்று நினைக்கிறோம்.

https://lareviewofbooks.org/review/game-of-tomes
[/stextbox]

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.